
புகழ்பெற்ற கிறிஸ்தவ போதகர் டேவிட் க்ளௌட் 'ஃப்ரெடி மெர்குரியின் சோக வாழ்க்கை' என்ற கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார். ''உலகம் அழியும் காலகட்டத்தின் மனநிலையானது குயீன் ராக் இசைக்குழ்வின் பாடகரான ஃப்ரெடி மெர்குரியின் இறப்பை சார்ந்த நிகழ்ச்சிகளில் தெளிவாகத்தெரிகிறது. ஃப்ரெடி மெர்குரி ஒரு ஓரினச்சேர்க்கையாளார். அவர் பரலோக ராஜ்யத்தை இழிவுசெய்தது, பைபிளின் சட்டங்களுக்கு எதிராக கலகம் செய்தது. அவர்களின் பாடல்கள் சுதந்திர ஓரினச்சேர்க்கை இயக்கத்தினரின் கொள்கைப்பாடல்கள் போலிருந்தன. அவரது பெரும்பாலான பாடல்கள் தீயவை, அசிங்கமானவை”.
”ஆபாசமான உடலசைவுகள் மூலம் அவர் தன்னுடைய இசைநிகழ்ச்சிகளில் ரசிகர்களை பித்தெடுக்க வைத்தார். அவர்களின் இசைப்பயணங்களில் பாம்பாட்டிகள், அலிகள், நிர்வாண ஆட்டக்காரர்கள் ஆபாச நடனக்காரர்கள் ஆகியோர் நிறைந்திருந்தனர். ஃப்ரெடி மெர்குரி இறைமறுப்பும் பாவமும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களும் பொருள்முதல்வாதமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு உலகம் முழுக்க ஓரினச்சேர்க்கை துணைவர்கள் இருந்தார்கள். 1991ல் ஃப்ரெடி மெர்குரி எய்ட்ஸ் நோயால் இறந்தார். அவருக்கு கடவுளிடமிருந்து உரிய கூலி கிடைத்தது''. போதகர் சொல்லி முடிக்கிறார்.
பாதிரியார் கென்னத் ஜான்ஸ்டன் இதைப்பற்றி சொன்னார், ''நாற்பது லட்சம் பவுன் மதிப்புள்ள தன் மாளிகையில் ஃப்ரெடி மெர்குரி இறந்தபோது ஒன்றரைக்கோடி பவுன் பெறுமானமுள்ள சொத்துக்களை தன் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் விட்டுசென்றார். தன் கல்லறைக்கு அப்பால் அவர் எதையும் கொண்டுசெல்லவில்லை. அவருக்கு அழகிய குரல் இருந்தது, அந்த வரத்தை அவர் சாத்தானுக்குச் சேவை செய்யவே பயன்படுத்தினார். எவ்வளவு பரிதாபம்!. இன்று ஃப்ரெடி மெர்குரி எங்கே? போதையும் ஒழுக்கக்கேடும் சாத்தானிய இசையும் நிறைந்த வாழ்க்கை நியாயத்தீர்ப்புக்கு பின்னர் இப்படித்தான் முடியும். அவரது செல்வம் புகழ் எதுவுமே கடவுளின் கோபத்திலிருந்து அவரைக் காப்பாற்றாது. ஃப்ரெடி மெர்குரி ஏசுவுக்குப்பதிலாக ஜராதுஷ்டிரமதம் என்ற பொய்யான மதத்தை பின்பற்றினார். அவர் தன் இறுதிச்சடங்குகள் மாதக்கணக்காக ஏற்பாடுசெய்தார், ஆனால் உண்மையான கடவுளைச் சந்திக்க தன் ஆத்மாவை சித்தம்செய்வதற்கு மறந்துவிட்டார். வெள்ளை மஸ்லின் ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த ஜராதுஷ்டிர மத புரோகிதர்கள் அம்மதப்பாடல்களைப் பாடியபடி அவர்களின் கடவுளான அகுரா மஸ்தாவை துதித்து இறந்துபோன ஆத்மாவின் மீட்புக்காக வேண்டிக் கொண்டார்கள். ஆனால் ஃப்ரெடி மெர்குரி சொற்கத்தில் இல்லை! அவர் நரகத்திலேயே இருக்கிறார்!. ஏன்? அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதனாலா? அல்ல அல்ல! ஃப்ரெடி மெர்குரி உண்மையான தேவனாகிய ஏசுகிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக்கொள்ளாததனால்!''
'கலையைப்பற்றி' என்ற நூலில் தல்ஸ்தோய் எழுதினார் ''கலை உணர்வுகளின் முழுமையை கையாள்கிறது. மிகவலுவான உணர்வுகள் முதல் மிக மென்மையான உணர்வுகள் வரை, மிக முக்கியமான உணர்வுகள் முதல் மிக எளிய உணர்வுகள் வரை, பேரழகு கொண்ட உணர்வுகள் முதல் அசிங்கமான உணர்வுகள் வரை. மக்கள் அவ்வுணர்வுகளால் பாதிக்கப்படும்வரை அவை கலைக்குரிய பேச்சுப் பொருட்களே. கலைஞன் கொண்ட அதே உணர்வை ரசிகர்களும் அடைகையில் அதை நாம் கலை என்கிறோம். கலைஞனின் பணி என்பது ஓர் உணர்வை அடைவதும் அதை கோடுகள், வண்ணங்கள், ஒலிகள், அசைவுகள், வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவதும் அதன் மூலம் நாமும் அவன் கொண்ட அதே மன எழுச்சியை அடையச்செய்வதும் ஆகும்".
இச்சொற்கள் ஃப்ரெடி மெர்குரியை அடையாளப்படுத்துவதற்கு முற்றிலும் பொருத்தமானவையாகும். அவர் தன் இசையின் மாயத்தாலும் தன் கலையாளுமையாலும் பெருங்கூட்டங்களின் நெஞ்சத்துடன் உரையாடும் திறன்கொண்டிருந்தார். ஜெர்மனியில் 1986ல் பிரிட்டிஷ் தேசிய கீதத்தைப் பாடி தன் முன் கூடியிருந்த 70000 ஜெர்மானியர்களின் கூட்டத்தையும் அதைப் பாடவைத்து தாளமிடச்செய்தார். 'லைவ் எய்ட்' இசைநிகழ்ச்சிக்காக அவர் இருபதுநிமிடம் பாடியபோது இருபது லட்சம்பேரை தொலைக்காட்சி முன் கட்டிப்போட்டார்.
வெம்ப்லி திறந்தவெளி கலையரங்கில் எழுபதாயிரம் பேர் அவருடன் சேர்ந்து பாடினர். ஃப்ரெடி மெர்குரி தன் கலைத்திறனை முழுக்க மேடையில் எப்போதுமே காட்டுபவர். உண்மையான கலை அதை உருவாக்கியவனையே கடந்துசென்று வளரக்கூடிய ஒன்று என்பதை 1985ல் ரியோ டி ஜெனிரோ வில் மூன்றேகால் லட்சம்பேர் திரண்டு 'நான் விடுபட்டு எழ விரும்புகிறேன்!' (ஐ வாண்ட் டு பிரேக் ஃப்ரீ!) என்ற அவரது பாடலை மீண்டும் மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது அவர் உணர்ந்திருப்பார். அவர்களுக்கு அது ஒரு சுதந்திரப் பிரகடன கீதம் போலிருந்தது! ஃப்ரெடி மெர்குரி உருவாக்கிய வேகம் மிக்க பாடல்களான 'வீ வில் வீ வில் ராக் யூ', 'வீ ஆர் த சாம்பியன்ஸ்', 'அனதர் ஒண் பைட்ஸ் த டஸ்ட்' போன்றவை உலகமெங்கும் அழியாத ராக் இசை பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.
அடிப்படையில் ஒரு இந்தியரான ஃப்ரெடி மெர்குரி எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து வழிநடத்திய ஆர்ப்பாட்டமான 'குயீன்' இசைக்குழு பதினெட்டு இசைத்தொகுப்புகளை வெளியிட்டது. அவை உலகமெங்கும் எட்டுகோடி பிரதிகள் விற்றன. குயீன் குழு வெகுஜன ரசனைக்கிளறும் ஏராளமான பாடல்களை இறக்கி சூழலை ஆட்கொண்டது. வெகுஜன இசைவரலாற்றின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவர் ஃப்ரெடி மெர்குரி. அற்புதமான சாத்தியங்கள் கொண்ட அபூர்வமான குரல் கொண்டவர். மிக சிரமமான பாடல்களை மிகுந்த ஆற்றலுடன் பாடியிருக்கிறார் என்றாலும் தனக்கு எவ்விதமான குரல்பயிற்சியும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார். நாடகீயத்திறனுடன் மேடையில் உக்கிரமாக வெளிப்படும் ஆற்றல் கொண்ட ஃப்ரெடி மெர்குரி ராக் இசையில் எப்போதும் உடனடியாக அடையாளம்காணப்படும் பல முக்கியமான பாடல்களை எழுதி இசையமைத்தவர். பொஹீமியன் ராப்சடி, டூ மச் லவ் வில்ல் கில் யூ, நோ ஒண் பட் யூ, லவ் மை லைஃப் போன்ற அவரது பெரும்பாலான பாடல்கள் உலகளாவிய பெரும் வெற்றிகள்....
ஸான்ஸிபார் என்ற ஆஃப்ரிக்க தீவு இந்தியப்பெருங்கடலில் தான்ஸானிய எல்லையிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. அழகிய மணற்பரப்பு கொண்ட கடற்கரைகளுக்கும் பவளப்பாறைகளுக்கும் புகழ்பெற்றது அது. கிழக்கு ஆஃப்ரிக்காவில் இன்றும் இருக்கும் தொன்மையான ஒரே நகரமான 'ஸ்டோன் டவுன்' அங்குதான் உள்ளது. அங்கே 1946 செப்டெம்பர் ஆறாம்தேதி ஒரு இந்திய பார்ஸி பெற்றோருக்குப் மகனாக ஃபாரூக் பல்ஸாரா பிறந்தார். அப்போது ஸான்ஸிபார் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. பிரிட்டிஷ் அரசின்கீழ் ஒரு கீழ்நிலை கணக்கராக இருந்த பல்ஸாராவின் தந்தை அலுவலக கட்டாயங்கள் நிமித்தம்தான் பம்பாயிலிருந்து அந்தத் தீவில் குடியேறினார். பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும்கூட அக்குடும்பம் இசையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. பல்ஸாரா சிறுவயதில் கேட்டு வளர்ந்ததெல்லாம் லதா மங்கேஷ்கர் போன்றவர்களின் இந்தி திரையிசைதான்.
சற்று பொருளாதார பலம் கொண்டிருந்த குடும்ப நண்பர்களின் உதவியுடன் பல்ஸாரா பம்பாய்க்கு கல்விக்காக அனுப்பபட்டார். தனது எட்டாவது வயதில் தன்னந்தனியாக கப்பலில் இரண்டுமாதம் பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்த அவர் பூனா அருகே பஞ்சகனியில் இருந்த பிரிட்டிஷ் கல்வி நிறுவனமான செயின்ட் பீட்டர்ஸ் தங்கும்பள்ளியில் சேர்க்கபப்ட்டார். துருத்திய பல்வரிசை கொண்ட அழகற்ற சிறுவனான அவருக்கு தாழ்வுணார்ச்சியும் தனிமைப்பாங்கும் அதிகமாக இருந்தது. ஆகவே அவரது கல்விநாட்கள் துயரம் மிக்கவை. இருந்தும் ஓவியம், இசை ஆகியவற்றில் அவர் அசாதாரணமான ஆர்வம் காட்டிவந்தார். தலைமை ஆசிரியரின் சிபாரிசுக்கு ஏற்ப அவருக்கு பியானோ இசை சொல்லிக்கொடுக்கப்பட்டது. பன்னிரண்டு வயதில் அவர் பள்ளியின் இசைக்குழுவில் பியானோ கலைஞனாக ஆனார்.
இந்த காலகட்டத்தில்தான் அவர் தன் பெயரை ஃப்ரெடி என்று மாற்றிக் கொண்டார், அவரது பெற்றோரும் சொந்தக்காரர்களும்கூட அப்பெயராலேயே அவரை அழைக்க ஆரம்பித்தனர். 1962ல் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தபோது படிப்பை நிறுத்திய ஃப்ரெடி மீண்டும் ஸான்ஸிபாருக்குப் பயணமானார். 1964ல் தான்ஸானிய விடுதலைக்குப் பின் நிகழ்ந்த ராணுவப்புரட்சியினாலும் அரசியல் கொந்தளிப்பினாலும் ஸான்ஸிபாரை விட்டு அக்குடும்பம் இங்கிலாந்துக்குக் குடியேறியது. சிலவருடங்கள் அந்த அறியாத நிலப்பகுதியில் அவர்கள் அகதிகளைப்போல இடம்பெயர்ந்தபடி இருந்தனர். உறவினர் வீடுகளில் அடைக்கலமாக தங்கியிருந்தனர். கடைசியில் மிடில்செக்ஸ் பகுதியில் ஒரு சிறுவீட்டில் நிரந்தரமாகத் தங்கினர்.
பூனா ஹாஸ்டலிலும் பம்பாயில் உறவினர்களுடனும் தங்கி தன் இளமைப்பருவத்தை முழுக்க இந்தியாவில் கழித்திருந்த போதிலும் ஃப்ரெடி மெர்க்குரி தன்னுடைய இந்தியத் தொடர்பை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார். தன்னுடைய பாரம்பரியத்தைப் பற்றி பேட்டிகளிலும் உரையாடல்களிலும் அவர் சொல்வதில்லை. தன் பார்ஸி மதப்பின்னணியை அடிபப்டையாகக் கொண்டு தன்னை ஒரு 'பாரசீகன்' என்று அவர் சொல்வதுண்டு. அவரது பல நண்பர்கள் அவர் தன்னுடைய இந்திய வம்சாவளி அடையாளத்தைப்பற்றி வெட்கம் கொண்டிருந்தார் என்றும், இந்தியக் குடியேறிகளுக்கு எதிராக நீண்டகால இன ஒதுக்கலும் அடக்குமுறையும் ஓங்கிநின்ற ஆங்கில மண்ணில் தன் இன அடையாளம் காரணமாக தான் ஒதுக்கபப்டக்கூடும் என்ற ஐயம் கொண்டிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஃப்ரெடி மெர்குரியின் நண்பரும் சக இசைக்கலைஞருமான ரோஜர் டெய்லர், ஃப்ரெடி மெர்குரி தன் இந்திய அடையாளத்தை மறைத்தமைக்குக் காரணம் அந்த அடையாளம் ஒரு அதிநவீன ராக் இசைக்கலைஞர் என்ற படிமத்துடன் பொருந்துவதாக இல்லை என்பதே என்று சொல்லியிருக்கிறார்.
இங்கிலாந்தில் ஃப்ரெடி மெர்குரி ஓவியம் மற்றும் கிராஃபிக் வரைபடவியலில் பயிற்சி பெற்று முதல் தரத்தில் வெற்றிபெற்றார். பின்னர் அத்திறனை அவர் குயீன் குழுவினரின் உடை அமைப்பு மற்றும் மேடை வடிவமைப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக் கொண்டார். பல சிறு உடலுழைப்புவேலைகள் செய்து தன் செலவினங்களைச் சமாளித்தார். ''கையில் காசில்லாமல் இருக்கும்போதுகூட அவர் ஒரு இசைநட்சத்திரம் மாதிரித்தான் தோற்றமளிப்பார்'' என்று ரோஜர் டெய்லர் நினைவுகூர்ந்தார். இக்காலகட்டத்தில்தான் ஃப்ரெடி மெர்குரி இசையில் ஆழமான ஈடுபாடு கொண்டவரானார். ஜிம்மி ஹென்டிரிக்ஸ், பீட்டில்ஸ், அரீத்தா ஃபிரங்க்ளின், லெட் ஸெப்பலின் ஆகியோரின் தீவிரமான ரசிகராக அவர் இருந்தார். வாழ வழியில்லாமல் ஃப்ரெடி மெர்க்குரி ஒரு சிறிய துணிக்கடையை தொடங்கினார். அப்போது ஒரு இசைக்குழு வெளியிட்ட விளம்பரத்தைக் கண்டு அதில் பாடகராக விண்ணப்பித்தார். ஆனால் அவர்கள் அவரை திறமையில்லாதவர் என நிராகரித்துவிட்டனர். 1970ல் தன் நண்பர்களுடன் இணைந்து குயீன் என்ற இசைக்குழுவை ஆரம்பித்தார். தன் பெயரை ஃப்ரெடி மெர்குரி என்றும் மாற்றிக்கொண்டார்.
அவர்களின் முதல் ஆல்பம் குயீன் என்ற பேரிலேயே வெளிவந்தது. 'கீப் யுவர்செல்ஃப் அலைவ்' என்ற பாடல் ஓரளவுக்கு வானொலியிலும் புகழ்பெற்றிருந்தது. ஆனால் விமரிசகர்களின் கருத்து ஆர்வமில்லாததாக இருந்தது. விமரிசக ரீதியாக இந்த மந்தநிலை ஃப்ரெடி மெர்குரியின் இறுதிக்காலம் வரை நீடித்தது! குயீன்-2 என்ற இரண்டாவது வெளியீடு இன்னும் சற்று கவனிக்கப்பட்டது. அதில் உள்ள தனிக்குரல் பாடலான 'ஸெவன் ஸீஸ் ஆஃப் ரைம்' இங்கிலாந்து இசை தரவரிசைப் பட்டியலில் முதல் பத்துக்குள் இடம் பெற்றது.
மூன்றாவது தொகுப்பு 'ஷீர் ஹார்ட் அட்டாக்' தான் அவரது முதல் பெரும் வெற்றி. அதிலுள்ள 'கில்லெர் குயீன்' என்னும் பாடல் பிரிட்டிஷ் விற்பனையில் இரண்டாமிடத்தில் இருந்ததோடு அமெரிக்காவிலும் ரசிகர்களைப்பெற்றது. அவர்களுடைய பெரும் புகழ்பெற்ற பாடலான 'பொஹீமியன் ராப்சடி' வெளிவந்தது. அத்துடன் குயீன் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியாளர்களாக புகழ்பெற்றார். அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். தொடர்பயணங்கள், இசைநிகழ்ச்சிகள், இசைப்பதிவுகள் என ஓய்வொழியாத பாய்ச்சல் ஆரம்பமாகி விட்டது.
ராக் இசை நட்சத்திரமான டேவிட் போவி சொன்னார், ''ராக் மேடைப்பாடகர்களிலேயே ஃப்ரெடி மெர்குரி பிறரைவிட பலமடங்கு முன்னே சென்றவர். ராக் நிகழ்ச்சிகளை அதன் எல்லைக்கே இட்டுச்சென்றார். அவரது நிகழ்ச்சி ஒன்றைக் காண்கையில் எண்ணிக் கொண்டேன், அவர் பெருங்கூட்டத்தை அப்படியே தன் உள்ளங்கையில் வைத்திருப்பதாக. ஒரு சாதாரண வழக்கத்தைக்கூட தனக்குச்சாதகமானதாக அவரால் மாற்றிக்கொள்ள முடியும். இசைநிகழ்ச்சிகளின்போது அவர் அதீத எல்லைகளைச் சென்று தொடுவதுண்டு. முரட்டுத் தோல் ஆடைகள் அணிந்து வரும்போதும் சரி, பெண்ணின் அரகுறை ஆடையணிந்து கையில் வில்லுடன் வரும்போதும் சரி.''
குயீன் குழுவின் ஆல்பமான 'ஜாஸ்' வெளியிடப்பட்டதை ஒட்டி ஒரு மாபெரும் ராக் விருந்தை ஏற்பாடு செய்தனர். ஃப்ரெடி மெர்க்குரி அதன் எல்லா அம்சங்களையும் தன் மேற்பார்வையில் ஏற்பாடுசெய்தார். இந்த ஆர்ப்பாட்டம் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் தடைசெய்யப்பட்டவற்றுக்குமாக அர்ப்பணிக்கப்பட்டது. சரியான ஒரு 'பாவக் களியாட்ட' விருந்தாக இது அமைந்தது. சித்திரக்குள்ளர்கள், ஒருபாலினர், பாம்பாட்டிகள், நிர்வாண நடனக்காரர்கள் ஆகியோர் திரட்டப்பட்டனர். ஷாம்பேனும் பிற போதைப்பொருட்களும் அளவில்லாமல் அங்கு வழங்கப்பட்டன.
குயீன் குழு, 'பைசிக்கிள் ரேஸ்' (Bicycle race) மற்றும் 'ஃபாட் பாட்டம்ட் கேர்ள்ஸ்' (Fat bottomed girls) என்ற இரு இசைத்தொகுப்புகளை மிக மிக அதிர்ச்சியூட்டும் முறையில் வெளியிட்டது. விம்பிள்டன் விளையாட்டரங்கத்தில் அறுபத்தி ஐந்து நிர்வாணப் பெண்களை பங்கெடுக்க வைத்து ஒரு சைக்கிள் போட்டியை நடத்தியது. அதன் காட்சிப்பதிவுகள் அப்பாடலின் காட்சிப்படிமங்களாகவும் இசைத்தட்டின் அட்டைப்படமாகவும் பயன்படுத்தப்பட்டன. பல இசைக்கடைகள் அந்த அட்டையை காட்சிக்கு வைக்க மறுத்தபோது ஒரு நிர்வாணப்பெண் சைக்கிள் ஓட்டும் அந்த அட்டை பலமுறை மாற்றப்பட்டது. போட்டிக்காக 65 சைக்கிள்களை வாடகைக்கு எடுத்திருந்தனர். அவற்றை திருப்பி வாங்கிக்கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. பின்னர் நடைபெற்ற ஒரு இசைநிகழ்ச்சியில் குயீன் குழு குறைவாக உடையணிந்த பெண்களை மேடையில் சைக்கிள் விடச்செய்து அதே நிகழ்ச்சியை மீண்டும் அரங்கேற்றியது!
அர்ஜெண்டினாவிலும் ப்ரேஸிலிலும் திறந்தவெளி இசைநிகழ்ச்சிகள் நடத்தியது குயீன் குழு. அங்கு பொதுமேடைநிகழ்ச்சி நடத்திய புகழ்பெற்ற முதல் ராக் இசைக்குழு அவர்கள் தான். ஆப்ரிக்க பஞ்ச நிவாரணத்துக்காக 1985ல் நடத்தப்பட்ட 'லைவ் எய்ட்' மாபெரும் கூட்டு இசைநிகழ்ச்சியே இக்காலகட்டத்தில் ஃப்ரெடி செய்த பெரும் சாதனை. பாப் டிலன், பால் மக்கார்ட்டினி, மடோணா, லெட் ஸெப்பலின் ஆகியோர் பங்குபெற்ற அந்நிகழ்ச்சியில் மிகச்சிறந்த இசைத்தருணங்கள் ஃப்ரெடி மெர்குரி வழியாகவே வெளிப்பட்டன. அவரது மிகச்சிறந்த வெற்றிப்பாடல்களின் துணுக்குகள் அடங்கிய செறிவான பதினைந்துநிமிட நிகழ்ச்சியை உருவாக்கினார். அங்கு ஃப்ரெடி மெர்குரி நவீன ராக் இசையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டு சென்றார். அங்கு கூடியிருந்தவர்கள் குயீன் குழுவின் ரசிகர்கள் மட்டும் அல்ல. ஆனால் ஃப்ரெடி அனைவரையும் ஈர்த்துக்கொண்டார்.
குயீன் இசை ரசிகர் மன்றம் அதன் உச்சநிலையில் இருபதாயிரம் அதிகாரபூர்வ உறுப்பினர்களை கொண்டிருந்தது. அதுவே உலகின் மிகப்பெரிய ராக் இசை ரசிகர் குழு என்று கின்னஸில் பதிவுசெய்யபப்ட்டது. குயீன்1979 முதல் அமெரிக்க ராக் இசை குழுக்களில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஃப்ரெடி மெர்குரி தன் தோற்றத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டதும் தோல்விகள் தொடங்கின. அவர் தலைமயிரை குட்டையாக வெட்டிக்கொண்டு மீசையும் வைத்துக்கொண்டார்.
ரசிகர்கள் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று ஐயப்பட்டனர். மேடை நோக்கி சவரத்தகடுகளை விட்டெறிந்தனர். எதிர்ப்பு உச்சமடைந்தது. காரணம் ஃப்ரெடி மெர்க்குரி பெரிய மார்பகங்கள் கொண்ட இல்லத்தரசி உடையணிந்து மீசையுடன் 'நான் விடுபட்டு எழ விரும்புகிறேன்’ என்ற அவரது பாடலின் காணொளியில் நடித்தார். எதிர்ப்புகளுக்கு ஃப்ரெடி "ஆமாம் நான் அதை வேண்டுமென்றேதான் செய்து பார்த்தேன். இனி ஜனங்கள் கொட்டாவி விடுவார்கள். அடக்கடவுளே, ஃப்ரெடி மெர்க்குரி இப்போது தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளார் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அதுதான் இப்போது மோஸ்தர்போல!'' என்று பதில் சொன்னார். அந்த பாடல் காட்சி இங்கிலாந்தில் வேடிக்கையாக பார்க்கப்பட்ட்து ஆனால் அமெரிக்காவில் அதை ஓர் அவமதிப்பாக எடுத்துக் கொண்டார்கள்.
பின்னர் ஃப்ரெடி மெர்குரி வெளிப்படையாக தன்னை ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லிக்கொண்டபோதும் கூட பலர் அவர் வேடிக்கைக்காக சொல்கிறார் என்றே எண்ணினார்கள். காரணம் அவர் மிகவும் ஆண்மையான தோற்றம் கொண்டவர். ஃப்ரெடி மெர்குரி எப்போதும் அழகான பெண்கள் சூழ வாழ்ந்தார் என்பதனாலும் அவர் சொன்னதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார்கள். காரணம் எழுபதுகளில் ஒருவர் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாகச் சொல்வது சாதாரண விஷயமில்லை!
இன்றைய பெரும்பாலான ஆய்வாளார்கள் காமத்தின் இயல்பு அத்தனிமனிதர்களின் தெரிவில் இல்லை என்று கருதுகிறார்கள். ஓரினக் காமம் என்பது ஒரு நோயாகக் கருதப்பட்டு மருத்துவச் சிகிழ்ச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட காலம் இருந்தது. இன்று பெரும்பாலான மனநல, உடல்நல மருத்துவர்கள் ஓரினக் காமத்தை மாற்ற முயல்வதில்லை. அது நோய் அல்ல, காமத்தின் ஓர் இயல்பு மட்டுமே. அதை போதைப்பழக்கம் போன்ற ஒன்று என்று எண்ணுவது தவறு. காமத்தின் இயல்பு என்பது சூழல், உணர்ச்சிகளின் இயல்பு ஆகியவற்றுடன் ஹார்மோன்கள் மற்றும் பிற உயிரியல் இயல்புகளினால் தீர்மானிக்கப்படும் ஒன்று என்றுதான் சொல்கிறார்கள்.
1985ல் குயீனுடன் அல்லாமல் ஃப்ரெடி மெர்குரியின் ஒரே முழுநீள தனிக்குரல் இசைத்தொகை 'மிஸ்டர் பேட் கை' (Mr. Bad Guy) வெளிவந்தது. இதை விமரிசகர்கள் ஃப்ரெடி மெர்குரியின் மிகச்சிறந்த இசைத்தொகுப்பு என்றும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை சிறப்பாக இருப்பதாகவும், ஃப்ரெடி மெர்குரி புதிய எல்லைகளை விரிவுபடுத்தி குறிப்பிடத்தக்க பணியாற்றியிருப்பதாகவும் சொன்னார்ர்கள். ஆனால் பிரிட்டனின் விற்பனைப்பட்டியலில் தொடர்ந்து இருந்தபோதிலும்கூட மிஸ்டர் பேட் கை ஒரு வணிக வெற்றியாகவில்லை.
1993ல் அவரது புகழ்பெற்ற பாடலான 'லிவிங் ஆண் மை ஓவ்ண்' (Living On My Own) அவர் மறு இசையமைப்பு செய்து வெளியிட்டார். அடுத்த இசைத்தொகுப்பான 'ஏ கைன்ட் ஆஃப் மேஜிக்' (A Kind of Magic) மேலும் குயீன் குழுவை பிரபலப்படுத்தியது. அந்த இசைத்தொகுப்பு ஸிந்தசைசர்களை (synthesizer) அதிகமாகப் பயன்படுத்தி உருவாக்கபப்ட்டிருந்தது. குயீன் இசைத்தொகுப்புகளில் ஸிந்தசைசர்கள் பயன்படுத்தப்படுவது எண்பதுகளின் இறுதிவரை மிகக் குறைவு.
ஃப்ரெடி மெர்குரிக்கு பிடித்தமான இசைகக்ருவி பியானோ. அவருக்கு செவ்வியல் இசைவடிவங்களான ஆபெரா, பாலே போன்றவை மிகவும் பிடிக்கும். அவரது 'பார்ஸிலோனா' (Barcelona) என்ற தொகுப்பில் பாப் இசையையும் ஆபெரா இசையையும் திறம்பட கலந்தார். அதில் ஃப்ரெடி மெர்குரி ஆராதித்த ஸ்பானிஷ் ஆபெரா பாடகியான மோண்ட்செராட் காபேல் (Montserrat Caballe) பாடினார். காபேலைப்பொறுத்தவரை அது அவருடைய இசைவாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஃப்ரெடி மெர்குரி மைக்கேல் ஜாக்ஸனுடன் இணைந்தும் சில இசைத்தடங்களை பாடியிருக்கிறார், ஆனால் அவை முறைப்படி வெளியிடப்படவில்லை.
ஃப்ரெடி மெர்குரி கட்டற்ற பழக்கவழக்கங்கள் கொண்டவர். தனிவாழ்க்கையில் ஃப்ரெடி அவரது முரட்டுத்தனமான நடத்தைக்காகவும் நண்பர்களுக்கு அள்ளிவீசும் பெரும் பரிசுப்பொருட்களுக்காகவும் பேசப்பட்டவர். அவரது நாற்பத்தி ஒன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக எண்பது நண்பர்களுடன் இபிஸா என்ற தீவில் உள்ள உல்லாச விடுதிக்கு பயணமானார். அங்கே அவர்களுக்கு வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கபப்ட்டது. ஃப்ளெமெங்கோ நடனமாதர்கள் ஆடினர். இருபதடி நீள கேக்கை வெட்டினார். பாடல்பதிவு செய்தும் சுற்றுப்பயணம்செய்தும் கழித்த நாட்களை முழுக்க முடிவில்லாத நீண்ட விழாக்கொண்டாட்டமாகவே நட்த்தினார்.
ஃப்ரெடி மெர்குரி குயீன் குழுவின் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் தன் காதலியான மேரி ஆஸ்டினுடன் வாழ்ந்தார். ஆனால் எண்ணமற்ற தொடர்புகள் தனக்குண்டு என்று அவர் சொன்னார். ''எலிசபெத் டெய்லரைவிட எனக்கு காதலர்கள் அதிகம்'' என்றார். பின்னர் எய்ட்ஸ் அச்சம் படர்ந்தபோது ஃப்ரெடி மெர்குரியும் அச்சம் கொண்டார். ஒருமுறை அமெரிக்காவுக்கு அழைக்கபப்ட்டபோது நோய்த் தொற்று ஏற்படும் என்று எண்ணி அதை மறுத்தார்.
1991 பெப்ருவரியில் ஃப்ரெடி மெர்குரியின் இசைத்தொகுதியான 'இன்யுவென்டோ' (Innuendo) வை வெளியிட்டதை ஒட்டி குயீன் மேரி என்ற கப்பலில் தெற்கு கலிஃபோர்னியாவில் மீண்டும் ஒரு கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டாயிரம் இசையுலகினர் அதில் உபசரிக்கப்பட்டனர். ஆட்டுக்குட்டித்தொடைகள், பலவகை நண்டுகள், பலவகை இனிப்புகள், எண்ணற்ற மதுவகைகள் என உணவுப்பொருட்கள் குவிக்கபப்ட்ட நிகழ்ச்சி அது. மந்திரவாதிகள், கேலிக்குரல் விற்பன்னர்கள், நடிகர்கள் என கேளிக்கையாளார்கள் நிறைந்திருந்தனர். 'பொஹீமியன் ராப்சடி' பாடலின் இசைக்கு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதற்கு முதன்மை விருந்துபசரிப்பாளரான ஃப்ரெடி மெர்குரி எங்கே என்று அனைவரும் தேடினார்கள். ஃப்ரெடி மெர்குரி பற்றிய கேள்விகளுக்கு குயீன் உறுப்பினர்கள் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினர். உண்மையில் வாழ்க்கையை களிவெறியுடன் வாழ விரும்பிய அவர்களின் நண்பர் எய்ட்ஸ் நோயால் மெல்ல செத்துக்கொண்டிருந்தார்.
ஃப்ரெடி மெர்குரிக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது 1987லேயே கண்டறியப்பட்டது. அவ்வருடம் வந்த பேட்டி ஒன்றில் அவர், மருத்துவர்கள் நோய் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார். ஆனால் இதழ்கள் அதை தோண்டி துருவி செய்தி வெளியிட்டுவந்தன. ஃப்ரெடி மெர்குரி அவரது இறுதிநாட்களை நெருங்குவதாகப் பேசப்பட்டது.
தன் கடைசி வருடங்களை அவர் லண்டனில் தன் மாளிகையில் அடைபட்டு கழித்தார். மிகப்பழைய காலத்தைய மாளிகையான அந்த மூன்றுமாடி சிவப்புக்கல் கட்டிடம் அவர் வாங்கும்போது சிதிலமாகியிருந்தது. பெரும்பொருட்செலவில் அதை புதுப்பித்து அலங்கரித்து 'கனவு வீடு' என்று பெயரிட்டார். விலமதிப்புமிக்க கலைப்பொருட்களாலும் மரவேலைப்பாடுகளாலும் அதை நிறைத்தார்.
அந்த மாளிகையின் இருபத்தெட்டு அறைகளிலும் ஸ்டீரியோ கருவிகளின் வழியாக ஃப்ரெடி மெர்குரியின் பிரியத்திற்குரிய பாடகியான அரீத்தா ஃப்ராங்க்ளினின் குரல் எப்போதும் ஒலித்தது. நோய் முற்றிய நிலையில் தன்னுடைய ஏராளமான பாரசீக வளர்ப்புப்பூனைகளுடன் ஃப்ரெடி மெர்குரி நாட்களைக் கழித்தார். இசையை கடைசிக் கணம் வரை அவர் கைவிடவில்லை. படுக்கையில் இருக்கும்போதே பிற்பாடு வெளியிடப்பட்ட 'வழியனுப்பும் இசைத்தொகுதி' யில் இடம்பெற்ற பாடல்களை உருவாக்கினார்.
''பத்திரிகைத்துறையில் இருந்து வந்த விசாரிப்புகளுக்கு இணங்க நான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் ரத்தச் சோதனையில் எய்ட்ஸ் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை நான் இதுநாள்வரை ரகசியமாக வைத்திருந்தது என்னைச்சார்ந்தவர்களின் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்காகத்தான். ஆனால் உலகமெங்குமுள்ள என் நண்பர்களும் ரசிகர்களும் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. மருத்துவர்களுடனும் உலகமெங்கும் இந்த கொடிய நோய்க்கு எதிராக போராடுபவர்களுடனும் இணைந்து நாம் பணியாற்றுவோம். எனது அந்தரங்கம் எப்போதுமே எனக்கு முக்கியமாக இருந்துள்ளது. நான் பேட்டிகள் கொடுப்பதில்லை. இந்த கொள்கையே இனியும் தொடரும் என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.'' 1991 நவம்பர் 22ல் இந்த அறிவிப்பு வெளியானது. அறிக்கை வெளியிடப்பட்டு இருபத்து நான்கு மணிநேரத்தில் ஃப்ரெடி மெர்குரி இறந்தார். அப்போது அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது.
மரணம் நெருங்குவதென ஃப்ரெடி அறிந்திருந்தார். அதை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார். இறுதிக்காலங்களில் ஃப்ரெடி மெர்குரியுடன் இருந்த ஒரு நன்பர் சொன்னார் ''அவர் அன்பானவர், பெருந்தன்மை மிக்கவர். மேடையில் வெளிப்பட்ட அதிரடியான இயல்புகள் எதுவுமே இல்லாத பிரியமான மனிதர். அவரது பெருந்தன்மை நண்பர்கள் மற்றும் வேண்டியவர்களுக்கு மட்டும் சாதகமானதாக இருக்கவில்லை. யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் அதனால் பயனடைந்தார்கள். அவர் எளிய சாதாரண மனிதர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் நேசித்தார்.''
எய்ட்ஸால் இறந்தது ஃப்ரெடி மெர்குரியின் பெயருக்கு ஒரு களங்கமாக இன்றுவரை தொடர்ந்துவருகிறது. அவரது மொத்த கலைப்படைப்புகளுமே இதனால் தவறாக அடையாளப்படுத்தபப்டுகின்றன. ஒருபாலினக் காமமோ இருபாலினக்காமமோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தால் தேர்வுசெய்யபப்டுவதல்ல என்ற உயிரியல் உண்மையை பலர் வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஃப்ரெடி மெர்குரி ஓரினச்சேர்க்கையாளாராக இருந்தால் என்ன அல்லது இருபாலுறவினராக இருந்தால்தான் என்ன? அவரளவு வீச்சும் வேகமும் உள்ள இன்னொரு ராக் பாடகர் உலகில் உருவானதில்லை என்பதுதான் உண்மை.
அவரது மறைவுக்குப்பின் வெளியிடப்பட்ட 'நம் வாழ்க்கையின் நாட்கள்' என்கிற அவரது இறுதி இசைப்படத்தில் கறுப்புவெள்ளைக் காட்சியில் எந்தவிதமான செயர்க்கை வேடமும் இல்லாமல் நோயுற்று மெலிந்து விளறிய தோற்றத்தில் காட்சியளிக்கும் ஃப்ரெடி மெர்குரி மரணத்துடன் கைகோர்த்தவராக வெளிபப்டுகிறார். தலை நிமிர்ந்து எவ்வித வருத்தமும் இல்லாமல் கையசைத்து விடைபெற்றுச்செல்லும் அவரது உருவம் மங்கி மங்கி மறைகிறது.
தமிழில்: ஜெயமோகன்