20081102

இளையராஜா: ஒரு வரலாற்று நிகழ்வு

இரண்டாயிரத்து நான்கு செப்டெம்பரின் ஓர் பிற்பகலில் நான் பாடகரும் ஒலிப்பொறியியலாளருமான நண்பர் தினேஷுடன், சென்னையிலுள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தின் விருந்தினர் அறையில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்திப்பதற்காக காத்திருந்தேன். எண்பதுகளில் தினேஷ் இளையராஜாவுடன் பல படங்களில் ஒலித்தடப் பாடகராகவும் இசைக்கோப்பு உதவியாளராகவும் பணியாற்றியிருந்தார். தன் வழிபாட்டுக்குரிய இசையமைப்பாளரை அவர் பதினைந்துவருடம் கழித்துச் சந்திக்கவிருக்கிறார். நினைவுகளில் மூழ்கியவரைப்போல காணப்பட்டார். இளையராஜா இசை அமைத்த பலநூறு பாடல்களின் பேரலை எனக்குள்ளும் அடித்துக் கொண்டிருந்தது.

அவர் வந்தபின்னர்தான் தமிழ் திரைப் பாடல்கள் கேரளத்தில் எப்போதுமே இல்லாத அளவுக்குப் புகழ்பெற்றன.
அந்த பாடல்களை நெஞ்சில் ஏற்றிக் கொண்டு அலைந்த இளமைக்கால நாட்களில் என் நினைவுகள் திரிந்தன......

இளையராஜா பிறந்த பண்ணைபுரம், என்னுடைய சொந்த ஊரான நெடும்கண்டத்தில் இருந்து வெகுதூரத்தில் இல்லை. இடுக்கி தேனி மலைகளுக்கு இப்பால் இருக்கிறது பண்ணைப்புரம். ஒரு பள்ளிகூடம் கூட இல்லாத அந்த ஊரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ராசையா வறுமை காரணமாக எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திக்கொள்ள நேர்ந்ததும், அவர் பிறந்து வளர்ந்த சூழல் நாட்டுப்புற இசையால் நிரம்பியிருந்ததால் அதுவே அவரது உண்மையான கல்வியாக மாறியதும் நான் கேட்டு அறிந்திருந்தேன். பதிநான்காவது வயதில் கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த தன் அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து இளையராஜா கேரளத்திலும் பல சிற்றூர்களுக்குச் சென்று இசைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். இளையராஜா சகோதரர்கள் பல்வேறு இசைநிகழ்ச்சிகளுக்காக எங்கள் பகுதிகளுக்கு வருவதுண்டு என்பதையும், அப்போதைய அவர்கள் வாழ்க்கையின் போராட்டங்களையும், பிறகு அவர்கள் சென்னைக்குச் சென்று திரையிசையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியதையும் பற்றியெல்லாம் நிறைய கதைகளை நான் சிறுவயது முதலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

இருபத்தைந்து வயதில் அவர் சென்னைக்கு வந்ததையும் தன் இசைப்பயிற்சி போதுமானதல்ல என்று உணர்ந்தபின் தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்ந்து மேலை இசையும் இசையமைப்பு நுட்பங்களும் பயின்றதையும் மேலைநாட்டுச் செவ்வியல் இசையமைப்பாளர்களான பாக், பீத்தோவன், மொசார்த் ஆகியோரின் வலிமையனா பாதிப்பு அவரிடம் ஏற்பட்டதையும் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியிலிருந்து மேலைநாட்டுச் செவ்வியல் கித்தார் இசையில் தங்கப்பதக்கத்துடன் பயிற்சியை நிறைவு செய்ததையும் பற்றியெல்லாம், இருபது வருடங்களுக்கு முன் நான் மலையாளத்தில்
விரிவாக எழுதியுமிருக்கிறேன்*.

ஆனால் சென்னையில் பல வருடங்களாகவே வாழ்ந்து இசைத்துறையில் பணியாற்றியபோதிலும்கூட என்னால் இளையராஜாவை பார்த்துப்பழக முடிந்ததில்லை. விளம்பர இசை தொடர்பாக அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குக் கூட சென்றிருக்கிறேன். அங்கு இளையராஜா வெள்ளை உடை அணிந்து கம்பீரமாக அமர்ந்து எதையாவது படித்துக் கொண்டோ இசைக்குறிப்புகளைச் சரிபார்த்துக் கொண்டோ இருப்பதை பார்த்திருக்கிறேன்........

கதவு திறந்தது, நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டோம். வெண்ணிற நுரைமெத்தை இருக்கையில் இளையராஜா அமர்ந்திருந்தார். எங்களை அமரச்சொன்னார். தினேஷ் அமர மறுத்தார். இளையராஜா தினேஷை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று தோன்றியது. தினேஷையும் அமரும்படிச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார். தினேஷ் மெல்ல ''சார், உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை போல'' என்றார். கூர்ந்து கவனித்தபின் இளையராஜா புன்னகைசெய்து மலையாளத்தில் ''ஆ தினேஷ்! என்ன ஆளே மாறிவிட்டாய், தாடியும் அதுவுமாக? அடையாளமே தெரியவில்லை! நீண்டகாலம் ஆகிறதே!" என்றார். தினேஷுக்கு அதுபோதும், அவரது கண்கள் ஈரமாயின.

சலில் சௌதுரி நினைவு அமைப்பின் செயலாளராகத்தான் நான் அப்போது இளையராஜாவைப்பார்க்க சென்றிருந்தேன். சலில் சௌதுரியின் எண்பதாவது பிறந்தநாளில் நடத்தவிருந்த இசைநிகழ்ச்சியை தொடங்கிவைப்பதற்கு இளையராஜாவை முறைப்படி அழைத்தோம். ''நான் சலில்தாவின் மிகப்பெரிய ரசிகன். அவரை என் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணுகிறேன்'' என்றுதான் அழைத்ததுமே இளையராஜா சொன்னார். சலில்தாவுக்கும் இளையராஜாவின் இசைமேல் மதிப்பு இருந்ததாக சலில்தாவின் குடும்பத்தினர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். சலில்தாவின் குழந்தைகள் இளையராஜாவை 'இளை அங்கிள்' என்றே அழைத்துவந்தார்கள். இளையராஜா நிகழ்ச்சியில் பங்கெடுக்க சம்மதித்தார்.

நவம்பர் பத்தொன்பதாம்தேதி நடந்த நிகழ்ச்சியில் சரியான நேரத்துக்கு இளையராஜா வந்தபோது அதிக கூட்டம் இல்லை. சலில்தா போன்ற ஒரு மேதையின் நினைவுக்கு இத்தனை குறைவானபேர் வந்திருக்கிறார்களே என ஆதங்கப்பட்ட இளையராஜா அன்று சலில்தாவைப்பற்றிய தன் நினைவுகளைப்பகிர்ந்துகொண்டார். 'சுஹானா சஃபர்' போன்ற சலில்தாவின் பாடல்களை பாடி அவற்றின் இசைநுட்பங்களை விவரித்தார். எம் எஸ் விஸ்வனாதன், ஜி கெ வெங்கடேஷ் போன்றவரின் பாடல்களைப்பற்றியும் அவர் அந்த மேடையில் பேசினார்.

சென்னையில், தன் போராட்ட நாட்களில் பல்வேறு இசைக்குழுக்களில் கித்தார் கலைஞனாக பணியாற்றிய இளையராஜா பின்னர்
திரையிசையில் கித்தார் கலைஞனாகவும் காம்போ ஆர்கன் வாசிப்பவராகவும் நுழைந்தபோது சலில் சௌதுரியிடம் பணியார்றியிருக்கிறார். எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.கெ.வெங்கடேஷின் இசை உதவியாளராக மாறிய இளையராஜா அவரது நூற்றுக்கணக்கான கன்னடப்பாடல்களின் இசையமைப்பில் பங்கெடுத்திருக்கிறார். இக்காலகட்டத்தில் தான் இளையராஜா திரை இசைமைப்பின் நுட்பங்களையும் நடைமுறைச்சிக்கல்களையும் விரிவாகவே கற்றுக் கொண்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் பொற்காலம் முடிந்து தமிழ் திரையிசையில் நிலவிய சோர்வை விலக்கி தமிழ் நாட்டார் இசையின் ஜீவனை திரையிசைக்குள் கொண்டுவந்து இளையராஜாவின் 'அன்னக்கிளி' 1976ல் வெளியாயிற்று. அதில் அத்தனை பாடலும் பெருவெற்றிபெற்று இளையராஜாவின் பெயர் தமிழகமெங்கும் அறியப்படலாயிற்று. தமிழ் திரை இசையில் ஒரு புதியபாதை திறக்கப்பட்டது. தொடர்ந்து பதினைந்து வருடத்துக்கு மேல் இளையராஜா தமிழ் திரையிசையின் ஒரே முகமாக விளங்கினார். தமிழர்களின் இரு தலைமுறையினர் அவரது பாடல்களை மட்டுமே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையின் சிறப்பம்சமென்ன என்று கேட்டால் சாதாரண ரசிகர்கள் அவற்றின் எளிமையையும் நாட்டார் இசை சார்ந்த தன்மையையும் சுட்டிக்காட்டுவார்கள். இசைநுட்பம் அறிந்தவர்கள் அவற்றின் இசைப்பின்னணியின் அமைப்பில் உள்ள அபாரமான நுட்பங்களையும் அவற்றில் தெளிந்தும் தெளியாமலும் ஒலிக்கும் இசைமெட்டுகளின் நம்ப முடியாத கற்பனைத்தாவல்களையும் சுட்டிக்காட்டுவார்கள். இவ்விரண்டு அம்சங்களும் முரண்பாடே இல்லாமல் ஒன்றுசேரக்கூடிய ஒரு புள்ளி இளையராஜாவின் பாடல்களில் உள்ளது. அதுதான் அவரது தனி இடம். எளிமையான நாட்டுப்புற மெட்டுகளுக்கு பின்னணியாக பலவகையிலும் சுழன்றும் துள்ளியும் ஓடும் சிக்கலான ஆனால் காதுக்கு இனிமையான இசை இடையீடுகள் உருவாக்கும் ஒரு அதிசய உலகம் அது.

இளையராஜா தன் இசையின் வலிமையினால் மற்றுமே காலூன்றிய ஒரு இசையமைபபளர். அவரது ஆரம்பகாலத்தில் பல வருடங்கள் அவருக்கு பெரிய நிறுவனக்கள் எடுக்கும் படங்களோ பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களோ அமையவில்லை. அதிசயம் அழைக்கிறது [1976], பாலூட்டி வளர்த்த கிளி [1976], உறவாடும் நெஞ்சம் [1976], கவிக்குயில் [1977], ஓடிவிளையாடு தாத்தா [1977], சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு [1977], துணையிருப்பாள் மீனாட்சி [1977] முதல் மலையாளப்படமான வியாமோகம் [1977] போன்றவை, இன்று அவற்றின் பாடல்களினால் மட்டும் நினைவு கூறப்படும் சாதாரணமான படங்கள்.

இளையராஜாவைப்பொறுத்தவரை தன் முதல் படத்திலிருந்தே படங்களை நம்பி அவர் இல்லை, அவரை நம்பியே படங்கள் இருந்தன. 2004 வரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட்ட மொழிகளில் ஏறத்தாழ எண்ணூறுக்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துவிட்டிருந்தார். அவற்றில் பல படங்களின் வெற்றிக்கு முழுக்க முழுக்க அவரது இசை மட்டுமே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

பாடல்களின் பின்னணி இசையொழுங்கின் நுட்பங்களில் அவரது பிரமிக்க வைக்கும் படைப்பூக்கம் காணப்படுகிறது. தெம்மாங்கு மெட்டில் அமைந்த திரைப்பாடல்களுக்கு ஜாஸ் இசையின் பின்னணியை சற்றும் முரண்படாமல் அமைக்க அவரால் முடிந்தது. முழுக்க முழுக்க நாட்டுப்புறப்பாடலாகவே ஒலிக்கும் பாடலை அபூர்வமான கர்நாடக இசை ராகத்தில் அமைக்கவும் அவரால் முடிந்தது. ஒரு பிரபல கர்நாடக இசை ராகத்தை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தின் விரிவையும் அதற்க்குள் தன் கற்பனை வீச்சையும் வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பாடல்களை அதில் அமைத்தது, தீவிர கர்நாடக இசைமேடைகளில் கூட வழக்கமாக பாடப்படாத அபூர்வமான, சிக்கலான ராகங்களை எடுத்துக் கொண்டு அவற்றை சாதாரணர்கள் கூட ரசிக்கும்படியாக எளிய பாடல்களை அமைத்தது போன்ற எத்தனையோ சாதனைகள்!

நாட்டாரிசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களில் இளையராஜா அளித்த வகைமைகளும் வண்ணங்களும் எண்ணற்றவை. நகர்மயமாதலின் விளைவாக தமிழ்பண்பாடு மறந்துவிட்ட நாட்டாரிசையை மீட்டு மீண்டும் மையத்துக் கொண்டுவந்தவரே இளையராஜாதான். தொழில்களுடனும் தொழிலாளர்களுடனும் இணைந்துள்ள நாட்டுப்புற இசையின் வலிமை அதன் உணர்ச்சிகரமே. இளையராஜா நாட்டார் மெட்டுக்களை கர்நாடக இசைராகங்களுடன் இணைத்து விரிவாக்குவது, மேலைநாட்டு இசைப்பின்னணியைச் சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் அதை நவீனப்படுத்தினார். தூல்லியமான உச்சரிப்பும் கம்பீரமான பாடுமுறையும் கொண்ட பழையவகைப் பாடல்களுக்குப் பதிலாக இளையராஜா கதையின் உணர்ச்சியோடு இணைந்து கதைச்சூழலுடன் பிரிக்கமுடியாதபடி கலந்து ஒலிக்கும் பாடல்களை உருவாக்கினார். திரைப்பாடல் என்பது காதுக்கினிய ஒரு நுகர்பொருள் மட்டுமல்ல அது ஒரு பண்பாட்டின் இயல்பான வெளிப்பாடு என்று காட்டியவர் அவர்.

இளையராஜாவின் இன்னொரு சாதனையானது திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்பை மிகமிகப் படைப்பூக்கம் கொண்ட ஒரு
கலைவெளிப்பாடாக நிறுவியதாகும். பின்னணி இசையை காட்சியை சத்தமயமாக ஆக்குவதற்காகவும் காட்சியின் இடைவெளிகளை
நிரப்புவதற்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த சூழலில் இருந்து இளையராஜா மாறுபட்டார். படத்தின் மையத்தை இசையின் வழியாக பலவகையில் தீவிரமாக வெளிப்படுத்த பின்னணி இசையை அவர் பயன்படுத்தினார். ஒரு காட்சியின் இடைவெளிகளை நிரப்பி காட்சிக்கு தொடர்ச்சியை உருவாக்குவதுடன் இயக்குநர் கூறவருவதற்குமேலாகச் சென்று மேலும் ஒரு தளத்தை பின்னணி இசை மூலம் கூறினார். காட்சிகளின் உணர்ச்சிகரத்தையும் அழுத்தத்தையும் பின்னணி இசை மூலம் பலமடங்கு மேம்படுத்தினார்.

பின்னணி இசைச்சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே தாளில் இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைபோல சொல்லிக் கொள்கிறார்கள். வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும். ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும். சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

இசையமைப்பின் அனைத்து தளங்களையும் முழுமையாக தன் கட்டுக்குள் வைத்திருந்த முழுமையான மையமாக இசையமைப்பாளர் மாறினார். இசை உருவாக்கம், இசைக்கோப்பு, இசை நிகழ்த்துதல், ஒலிப்பதிவு ஆகிய அனைத்திலும் இசையமைப்பாளரின் முழுமையான கட்டுப்பாடு இளையராஜாவால் கொண்டுவரப்பட்டது. அவர் காலையில் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்துவிடுவார் என்றும் வந்ததுமே ஒரு படத்தின் பாடல்களுக்குரிய இசையை அப்போதே அமைத்து விரிவான இசைக்குறிப்புகளாக எழுதிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் நாள்முழுக்க அதை ஒருங்கிணைப்பதும் நடத்துவதும் பதிவுசெய்வதும்தான் நடக்கும். ஒரே மாதத்தில் ஆறு படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவற்றில் எல்லா பாடல்களும் பெரும் வெற்றிகளாகியிருக்கின்றன. ஒரு வருடம் 56 படங்கள் வரை!

நாட்டாரிசையிலேயே வளர்ந்த இளையராஜா தன் இருபத்தைந்து வயதுவரை இசைப்பயிர்ச்சிக்கு வேறுவகையான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர். அதர்க்கு பின் தன்ராஜ் மாஸடரிடம் சிறிது காலம் மேலையிசை பயின்றார். லண்டன் டிரினிடி கல்லூரியின் தங்க பதக்கத்தை ஆறுமாதத்தில் அவர் பெற்றார் எனப்படுகிறது. சிலகாலம் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தென்னிந்திய மரபிசையையும் பயின்றார். ஆனால் கேள்வி இதுதான், சிலவருடங்களின் பயிற்சியிலேயே அவர் எப்படி இவ்விரு இசைமரபுகளையும் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு அவற்றில் உச்சகட்ட புதுமைகளைப் படைப்பவராக ஆனார்? அவரது திரையிசைப்பாடல்களில் உள்ள அழகும் நேர்த்தியும் வெகுஜன கலை என்ற எல்லைக்குள் நிற்பவை அல்ல என விமரிசகர்கள் நன்றாகவே அறிவார்கள்.

திரையிசைக்கு அப்பால் அவர் இசையமைத்த மேலையிசைத்தொகைகளும் அவருக்கு பெரும்புகழ் பெற்றுத்தந்தன. 1993ல் அவர் ஒரு மேலையிசை சிம்பனியை அமைத்தார். அதில் புகழ்பெற்ற ஜான் ஸ்காட் நடத்துகையில் லண்டனின் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா வாசித்தது. அந்த சிம்பனி ஒரு மாதகாலத்துக்குள் அமைக்கப்பட்டது. ஜான் ஸ்காட் சொன்னார் "இளையராஜாவின் இந்த புதிய சிம்பனியை நடத்தும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஐந்து சலனங்களில் சிம்பனிக்கான ஒத்திசைவுகள் ஓடும் ஒரு படைப்பு இது. ஒருமணிநேரம் இசைக்கப்படுவது. இது அவருடைய முதல் முயற்சி என்று தெரியவருகிறது. இது அவர் ஒரு இசையமைப்பு நிபுணர் என்றும் இன்னிசை மற்றும் உணர்ச்சிகளின் பெரும் செல்வத்தை நமக்கு அளிக்கும் வல்லமை கொண்டவர் என்றும் காட்டுகிறது''. அவரது இரு கருவியிசைத் தொகுப்புகள் How to name it? மற்றும் Nothing but wind இசையுலகில் நிலைத்து நிற்கும் தகுதி கொண்டவை.

லண்டனைச்சேர்ந்த இசையமைப்பாளரான மைக்கேல் டவுன்செண்ட் சொன்னார் "இந்த மனிதர் மேல் கணிசமான மரியாதையுடன்தான் நான் சென்னைக்குச் சென்றேன். ஆனால் உள்ளூர ஒருவகையான அவநம்பிக்கையும் இருந்தது. அவரது பேரளவிலான படைப்புகளின் எண்ணிகை காரணமாக உருவாக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட சித்திரமே எனக்கு அளிக்கப்பட்டது என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் இசைக்கான தொடக்க சமிக்ஞை வரிசைகள் இல்லாமல், இசைத்தொகுப்பாளாரின் சேவை இல்லாமல், ஏன் ஒரு நிறுத்தக்கடிகாரம் கூட இல்லாமல் ஒரு படத்துக்கான இசைக்குறிப்பை ஒர் இசையமைபாளர் வெறும் மனக்கணக்காகவே எழுதி அமைக்க; அது அந்தக்காட்சியுடன் மிக கச்சிதமாக இணைவதைக் கண்டபோது என் பிரமிப்பும் வியப்பும் உச்சத்துக்குச் சென்றது. அது சண்டைக்காட்சி என்றால் அதன் பதற்றத்தை அதிகரிக்கவும் அது காதல்காட்சி என்றால் அதன் பரவசத்தை இன்னிசை மெட்டுகள் மூலம் விரிவாக்கவும் நடனக்காட்சிக்கு இயல்பான தாளக்கட்டுகள் மூலம் உற்சாகத்தை உருவாக்கவும் அவரால் முடிந்தது".

இன்றும் இளையராஜா தொடர்ந்து இசையமைத்துவருகிறார். மலையாளத்தில் அவரது இசையமைப்பில் படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று வருகின்றன. அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த 'சீனி கம்' இந்திப்படத்தில் அவர் தனது சில பழைய பாடல்களை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தியிருக்கிராற். 'ஸூனி ஸூனி' [மன்றம் வந்த தென்றலுக்கு], 'பாத்தேன் ஹவா' [குழலூதும் கண்ணனுக்கு], ஜானே தோ னா' [விழியிலே மணிவிழியிலே] போன்ற 'சீனி கம்' பாடல்கள் வெற்றி பெற்றது.

2005ல் சலில்தாவின் மகள் அந்தரா சௌதுரியுடன் சேர்ந்து இளையராஜாவை மீண்டும் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது. சலில் சௌதுரி நினைவு அமைப்பு கல்கத்தாவிலும் கேரளத்திலும் நடத்தவிருந்த நினைவுநிகழ்ச்சிகளுக்காக அவர் ஒரு வாழ்த்துச்செய்தியை ஒளிப்பதிவுசெய்தளிக்க சம்மதித்தார். அவர் இசையமைத்து வரவிருந்த திருவாசகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ச,ரி,க என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே பயன்படுத்தி அவர் அமைத்திருக்கும் ஒரு பாடலைப்பற்றியும் சொன்னார்.

வரலாறு எப்போதும் நம் கண்ணெதிரே தான் நிகழ்கிறது. ஆனால் அது காலத்தில் பின்னகர்ந்து பழையதாக ஆனபின்னரே நம்மால் அதைக் காணமுடிகிறது. தமிழகத்தின் சிறிய ஒரு கிராமத்தில் பிறந்து சொல்லும்படியான படிப்பறிவு எதுவும் இல்லாமல் வளர்ந்து வந்து, இசைரசிகர்களைக் கவர்ந்து, இசைவிமரிசகர்களையும் பாமரர்களையும் ரசிக்கச்செய்த இளையராஜா நம் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வரலாறு.

தமிழில் ஜெயமோகன்

மின்னாம் மினுன்கும் மயில் கண்ணியும் மலையாளப் பாடல்