20110416

திரும்பிவராத மின்மினிகள்

கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமானது.

திரை இசைத்துறையில் பெரும்புகழடைந்த பலரையும் நான் முதலில் சந்தித்த இடம் அந்த கோதண்டபாணி ஒலிப்பதிவுக்கூடம்தான். பிரபல பின்னணிப் பாடகி மின்மினி அவர்களில் ஒருவர். ஒரே ஒரு பாடலின் வாயிலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு இணையான தேசியப் புகழை பெற்ற அந்த பாடகிக்கு பின்னர் என்னவாயிற்று என்றோ, அவர் எங்கே போனார் என்றோ யோசிப்பவர்கள் இன்று யாருமில்லை. புகழின் இடமும் மதிப்பும் அவ்வளவுதான்.

இன்று உலகத் திரை இசையின் பேராளுமைகளில் ஒருவராக கருதப்படும் ஏ. ஆர் ரஹ்மானின் முதல் திரைப்பாடலான ரோஜா படத்தின் ’சின்னச் சின்ன ஆசை’ பாடிய பாடகி மின்மினி தான் என்று தெரியாதவர்கள் யாருமே இருக்காது. அதேபோல அப்பாடலின் பெரும்புகழ் பெற்ற தெலுங்கு, இந்தி வடிவங்களும் பாடியது அவரே என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பாடலின் மலையாள வடிவத்தை சித்ரா பாடினார். அது நன்றாக வரவில்லை, பிரபலமாகவும் இல்லை! ரோஜாவின் இசைத்தொகைகளை வெளியிட்டது நான் பணியாற்றிவந்த இசை நிறுவனம்தான்.

பாப் மார்லியால் பிரபலமாக்கப்பட்ட ரேகே இசையை அடியொற்றி அமைக்கப்பட்ட ’சின்னச் சின்ன ஆசை’ பாடல், அதன் கேட்டவுடன் கவரும் எளிய மெட்டுக்காகவும் நுட்பமான இசைக்கோர்வைக்காகவும் இந்திய இசையில் அதுவரைக்கும் நாம் கேட்டிராத, தெள்ளத்தெளிவான ஒலியமைப்புக்காகவும் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அது மட்டுமல்லாமல் அதைப் பாடிய பாடகியின் கொஞ்சும் குரலுக்காகவும் அவரது உயிர்த்துடிப்புள்ள பாடும்முறைக்காகவும் தான் அப்பாடல் கடந்த இருபதாண்டுகளாக பேரளவில் ரசிக்கப்பட்டு வருகிறது.

அப்பாடலை ஒருமுறையாவது கேட்காத இந்தியர்கள் யாருமே இருக்க வாய்பில்லை. ஏ. ஆர் .ரஹ்மான் உலகப்புகழடைந்தபோது அவரது முதல் மற்றும் முக்கியமான பாடல் என்கிற முறையில் ’சின்னச் சின்ன ஆசை’யும் உலகப்புகழடைந்தது. இன்று அமெரிக்கர்களும் சீனர்களும்கூட தங்களது தவறான தமிழ் உச்சரிப்புடன் உற்சாகமாக பாடிவரும் பாடலாக அது மாறிவிட்யிருக்கிறது. அதைப் பாடியதற்காக தமிழக அரசின் விருது, சிங்கப்பூர் அரசின் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது போன்ற எண்னற்ற விருதுகள் வந்து குவிந்தன மின்மினிக்கு!

’சின்னச் சின்ன ஆசை’க்கு கிடைத்த பெரும் கவனம் காரணமாக அது தான் மின்மினியின் முதல் பாடல் என்று பலர் கருதினார்கள். ஆனால் ரோஜா வெளிவருவதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்னாலேயே திரைப்படங்களில் பாடி வந்திருக்கிறார் மின்மினி. 1988ல் வெளிவந்த ‘ஸ்வாகதம்’ என்ற மலையாளப் படத்துக்காக பாடியது தான் அவரது முதல் திரைப்பாடல். ஆனால் அவரது பெயர் அப்போது மின்மினி அல்ல. மினி. அவரை தமிழில் அறிமுகப்படுத்தியது பலர் நினைப்பதுபோல் ஏ. ஆர் .ரஹ்மான் அல்ல, இளையராஜாதான். மினி என்ற பெயரை ’மின்மினி’ என்று மாற்றியதும் அவரே. 1992 ன் துவக்கத்தில் வெளியான மீரா படத்தில் இடம்பெற்றது மின்மினியின் முதல் தமிழ்ப்பாடல்.

திரை இசையில் பலவகையான பாடல்களை பாடிய மின்மினி கர்னாடக ராகங்களில் அமைந்த சில பாடல்களையும் சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் அவர் இசை கற்றதேயில்லை! சாஸ்திரீய இசையை விடுங்கள், ச ரி க ம எனத்தொடங்கும் ஸ்வரங்களையே அவர் ஒருபோதும் கற்றுக்கொண்டதில்லை! ஸ்வரஸ்தானங்கள் எதுவுமே தெரியாமல்தான் ராகங்களில் அமைந்த பாடல்களை எந்த பிழையுமின்றி சிறப்பாகப் பாடியிருக்கிறார். மலையாளத்தில் வந்த பல பாடல்களுடன் தமிழில், இளையராஜாவின் இசையில் தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற ‘மணமகளே மணமகளே’ (ராகம்: சுத்த சாவேரி), ’மாசறு பொண்ணே வருக’ (ராகம்: மாயாமாளவகௌள) போன்றவை உதாரணங்கள். இன்றும் எந்தவொரு செவ்விசை கிருதியையோ கீர்த்தனையையோ பாட மின்மினிக்குத் தெரியாது. ஒரு ராகத்தைக்கூட அடையாளம் காணவும் அவரால் முடியாது!

பிரபலமடையும் முன்பு ஒருமுறை எஸ். ஜானகிக்காக ஒரு பக்திப்பாடலின் ஒலித்தட்த்தில் (Track) பாடுவதற்க்காக மலையாள இசையமைப்பாளர் வித்யாதரன் மின்மினியை அழைத்தார். மெட்டைச் சொல்லித்தரும் முன் கர்னாடக இசை தெரியுமா என்று கேட்டார். ’இல்லை’ என்று சொன்னதும் கோபமடைந்த அவர் செவ்வியல் இசை முறையாகத் தெரிந்த பாடகி வேண்டும் என்று சொன்னதன் பின்பும் எதுவுமே தெரியாத ஒருத்தியை அழைத்து வந்தமைக்காக தன் உதவியாளனை திட்டிவிட்டு, மின்மினியிடம் உடனடியாக வெளியேறுமாறு சொன்னார். ஆனால் அங்கிருந்த இசைக் கலைஞர்கள் மின்மினியின் திறமையை ஏர்கனவே தெரிந்து வைத்திருந்தவர்கள். அவர்கள் வித்யாதரனிடம் எடுத்து சொல்லி கடைசியில் ஒரு ஒத்திகைக்கு அவரை சம்மதிக்க வைத்தார்கள். மின்மினி பாடிக்கேட்டபோது அவருக்கு கர்னாடக இசை தெரியாது என்பது பொய் என்று சொன்னார் அந்த இசையமைப்பாளர்.

இப்படியாக தன் பெயரில் ஒளிந்திருக்கும் அந்த மின்மினிப் பூச்சியைப் போல் அற்புதமாக ஒளிர்ந்து, விரைவாக நம் கவனத்தைக் கவர்ந்து, பின்னர் வந்ததைவிட வேகமாக காணாமல்போன மின்மினியின் கலையும் வாழ்வும் ஒரு புனைகதையப் போல் விசித்திரமானது. கேரளாவில் கொச்சிக்கு பக்கத்தில் ஆலுவா பகுதியில் உள்ள கீழ்மாடு எனும் கிராமத்தில்தான் மினி என்றழைக்கப்பட்ட ரோசிலியின் பிறந்த வீடு இருந்தது. தனது ஐந்தாவது வயது முதலேயே அபூர்வமான பாடும்திறனை வெளிப்படுத்தி மாநில அளவிலான பல பரிசுகள், மேடைநிகழ்ச்சிகள், பக்திப்பாடல்களின் ஒலிநாடாக்கள் போன்றவற்றின் வழியாக புகழடைந்த மினியின் வீட்டில் ரேடியோ, மின்சாரம்,ஒலிநாடாக்கருவி, தொலைபேசி போன்ற எதுவுமே இருந்ததில்லை!

அந்த ஏழைக்குடும்பத்தில் 1970ல் நாலு பெண்குழந்தைகளில் கடைசியாக பிறந்தவள் மினி. நாலுபேருக்குமே பாடும் ஆற்றல் இருந்தது. அப்பா ஜோசப் ஒரு அலுமினியம் கம்பெனியில் பகுதிநேர ஊழியராக இருந்தார் ஆனால் வேலைக்கு போவது குறைவு. இசை ரசிகர். மதுப்பழக்கமும் இருந்தது. அம்மாவின் பெயர் தெரேசா. அசாதாரணமான பாடும் ஆற்றலைப் படைத்திருந்தவர். சின்ன வயதிலிருந்தே அங்கும் இங்கும் தான்கேட்ட இந்தி தமிழ் மலையாளத் திரைப் பாடல்களை மனப்பாடம் பண்ணி தன் குழந்தைகளுக்கு சொல்லித்தந்தார்.

தேவாலய நிகழ்ச்சிகளில் பாடத்தொடங்கிய மினி விரைவில் கொச்சியின் மிகப் பிரபலமான கலாபவன், ஸி .ஏ .ஸி போன்ற இசைக்குழுக்களின் மேடைப்பாடகியாக மாறினாள். அவள் பாடிய பல பல ஒலிநாடாக்கள் பிரபலமடைய, திரைத்துறைக்கு வெளியிலேயே புகழ்பெற்ற ஒரு பாடகியாக எண்பதுகளில் அங்கு மாறினாள் மினி. நிகழ்ச்சிகளுக்கும் பாடல் பதிவுகளுக்குமாக வீட்டின் பக்கத்திலுள்ள ஊராட்சி அலுவலகத்தின் தொலைபேசியில்தான் அவளுக்கு அழைப்புகள் வரும்! கிடைக்கும் ஊதியம் மிகக் குறைவாக இருந்தும் ராப்பகலாக பாடிக்கொண்டேயிருந்தாள் அவள்.

ஆஷா போன்ஸ்லே, எஸ். ஜானகி போன்றவர்களை ஆதர்சமாகக் கொண்டு அவர்களின் பாடும்முறையை பின்பற்றிவந்த மினிக்கு திரிச்சூரில் அப்போது வாழ்ந்து வந்த ஃபிலிப் பிரான்ஸிஸ் என்ற அசாத்தியமான இசைக்கலைஞன் கஸல்களின் உலகத்தை அறிமுகப்படுத்தினார். அவர் வாங்கித்தந்த கஸல் ஒலிநாடக்களிலிருந்து ஒலித்த மெஹ்தி ஹஸன், குலாம் அலி, ஜக்ஜித் சிங் போன்றவர்களின் கஸல்கள் அவளது பாடும்முறையை செழுமைப் படுத்தியது. கேரளத்திலும் இந்தியா முழுவதும் வெளிநாடுகளிலுமெல்லாம் இடைவிடாத இசைநிகழ்சிகளுக்காக நடத்தப்பட்ட பயணங்களாலும் தொடர்ந்துவந்த பாடல் பதிவுகளுளாலும் அவளது பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது. கேரளத்தின் புகழ்பெற்ற திருப்பூணித்துற ஆர். எல். வி இசைக் கல்லூரியில் செவ்வியல் இசை படிப்புக்கு அனுமதி கிடைத்தும்கூட அவளால் அங்கு சேர முடியவில்லை.

பதினெட்டாவது வயதில் தனது முதல் திரைப்பாடலைப்பாடினார். இக்காலகட்டத்தில் யேசுதாஸ், ஜெயசந்திரன், எஸ் பி பாலசுப்ரமணியம் போன்றவர்களுடனெல்லாம் மேடை நிகழ்ச்சிகளில் பாடினார். 1990 அக்டோபரில் ஒருநாள் புதிதாக நல்ல பாடகிகள் யாருமே வருவதில்லை என்று இளையராஜா பாடகர் ஜெயசந்திரனிடம் ஆதங்கம் தெரிவிக்க, அவருக்கு மின்மினியை அழுத்தமாகப் பரிந்துரை செய்தார் ஜெயசந்திரன். உடனடியாக அழைத்து வருமாறு சொன்னார் இளையராஜா. ஜெயசந்திரன் மினியின் அப்போதைய இசைக்குழுவான ஸி .ஏ. ஸியின் அலுவலகத்தில் இதைத் தெரிவித்தார். ஆனால் தங்களின் முக்கியப் பாடகியை இழக்க மறுத்த அவர்கள் இத்தகவலை மினியிடம் சொல்லவே இல்லை!

சிலமாதங்களுக்குப்பின் இதை தெரிந்தபோது மினியால் நம்பவே முடியவில்லை. கடைசியில் 1991 ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் இளையராஜாவின் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் மினி நுழையும்போது அங்கு நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளூக்கும் இசைக்கலைஞர்களுக்கும் நடுவில் நின்று அவரது ஆதர்சப் பாடகி ஆஷா போன்ஸ்லே பாடிக்கொண்டிருந்தார். ’பனிவிழும் மாலையில் பழமுதிர்ச் சோலையில்’.. மீரா படத்தின் பாடல். அது கனவா நிஜமா என்று தெரியாமல் வாய் பிளந்து நின்றுபோன மினியிடம் ஒரு பாடலை பாடிக்காட்டும்படி சொன்னார் இளையராஜா. ஒருமணிநேரத்துக்குள் மினி மின்மினியாக மாறினார்! ஆஷா போன்ஸ்லே நின்ற அதே இடத்தில் நின்று கொண்டு அதே படத்துக்காக பாடினார்.. ‘லவ் என்னா ல்வ்வு..’

சராசரி மெட்டில் ‘லவ் என்னா ல்வ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு’ என்று தொடங்கி, ‘காதலர் வீட்டுக்கு ரேஷன் கார்டுகள் கொடுப்போம்’, ’அதன் தேசிய கீதம் இளையராஜாவை பாடச்சொல்வோம்’ போன்ற விசித்திரமான வரிகளுடன் இருந்தாலும் வயலின், ட்ரம்பெட் போன்ற வாத்தியங்களாலான அப்பாடலின் பின்னணி இசைக்கோர்வை மிக சுவாரசியமானது. மனோவுடன் இணைந்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெளிவான குரலில் அப்பாடலை பாடியிருந்தார் மின்மினி.

தொடர்ந்து சில இனிமையான பாடல்களை மின்மினிக்கு வழங்கினார் இளையராஜா. உதாரணமாக ’ஒரு மாலை சந்திரன் மலரைத் தேடுது மலை அடிவாரத்திலே’ என்ற பாடல். இது உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் எனும் படத்தில் வந்தது. எஸ். பி. பி யுடன் சேர்ந்து அற்புதமான உணர்ச்சி வெளிப்பாடுடன் இந்த பாடலை பாடியிருந்தார் மின்மினி. ’குளிர் வீசும் மாசியிலே.... ஒரு தேகம் வெந்தது மோகத்தீயினிலே.... ‘ போன்ற வரிகளை அவர் பாடியிருக்கும் விதத்தை கவனித்து கேட்டால் இது தெரியும்.

இளையராஜாவின் இசையில் இதேபோல் பல பாடல்களை மிக சிறப்பாக பாடியிருக்கிறார் மின்மினி. அரண்மனைக் கிளி படத்தில் மலேசியா வாசுதேவன் மற்றும் அருள்மொழியுடன் சேர்ந்து பாடிய ‘ராத்திரியில் பாடும் பாட்டு’ தேன் போன்றதொரு இளையராஜா பாடல். இப்பாடலின் மெல்லிய உணர்வுகளை மலேசியா வாசுதேவனுக்கு ஈடுகொடுத்து பாடி வெளிப்படுத்தினார் மின்மினி. இதே படத்தில் இடம்பெற்ற ‘அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு’ என்ற பாடலின் சரணத்தில் வரும் சிக்கலான தாளக்கட்டுக்கு மேல் பாடப்பட்ட ‘குக்கூ குக்கூ பாட்டு சொக்கி சொக்கி போச்சு’ போன்ற வரிகளிலும் மின்மினியின் தனித்திறனை நாம் காணலாம். மாப்பிள்ளை வந்தாச்சு படத்தின் ‘முத்தாலம்மா முத்தாலம்மா’ பாடலை சேர்ந்து பாடும் மனோவை விட பலமடங்கு சிறப்பாக பாடியிருப்பார்.

சின்ன மாப்பிள்ளை படத்தின் ’கண்மணிக்குள் சின்னச் சின்ன மின்மினிகள் மின்ன மின்ன’ என்று தனது பெயரையும் வரிகளில் கொண்ட, முற்றிலுமாக மேற்கத்திய இசைப் பாணியில் அமைந்த பாடலை தெளிவான குரலில் சிறப்பாக பாடிய மின்மினிதான் எங்க தம்பி படத்தில் வந்த ‘மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி’ எண்ற கீரவாணி ராகத்தில் அமைந்த பாடலையும் அற்புதமாக பாடினார். ஏழை ஜாதி படத்தின் ‘அன்பே அன்பே வா’ என்ற உச்சஸ்தாயிப் பாடலில் காதலின் ஏக்க உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்திய அவர் ஐ லவ் இந்தியா படத்தில் ’குறுக்கு பாதையிலே மறிச்சி வழியில் நின்னு’ என்ற நாட்டுப்புற இசைப்பாணியிலான துள்ளல் பாடலின் காம உணர்வுகளையும் வெகுசிறப்பாக பாடினார்! ’ஒன்ன பார்க்கிறப்போ உள்ளார ஒண்ணு வருதய்யா, நீயும் பரிசம் போட்டு ஒரசி பாற்க்க வருவியா’ என்ற வரிகளை கேட்டுப் பாருங்கள்!

சின்ன தேவன் படத்தில் மலேசியா வாசுதேவனுடன் பாடிய ’குத்தாலக் காத்துக்கு மத்தாளம் ஏதுக்கு’ என்ற பாடலின் முதல் சரணத்தின் கடைசியில் வரும் ’இனி தாங்காதம்மா மானே’ என்ற வரியின் ’மானே’ என்ற வார்த்தையில் மலேசியா வாசுதேவன் அசாத்தியமாக ஒரு சங்கதியை பாடியிருப்பார். அடுத்த சரணத்தின் கடைசியில் ’அது போல யோகம் ஏது’ என்ற வரியில் ‘ஏது’ என்ற வார்த்தையில் அதே சங்கதியை மலேசியா வசுதேவனுக்கு இணையாக பாடியிருப்பார் மின்மினி! இதே படத்தின் ’கொத்துமணி முத்துமணி’ மின்மினியின் குரலின் சாத்தியங்களும் மெல்லிய காம உணர்வுகொண்ட பாடல்களைப் பாடுவதில் அவருக்கிருக்கும் தனித்திறமையும் சிறப்பாக வெளிப்படும் பாடல். திருமதி பளனிசாமி படத்தில் வரும் ‘ குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே உக்காந்து பேசலாமா’ பாடலும் மின்மினி மலேசியா வாசுதேவன் இணையின் மற்றுமொரு அழகான பாடல்.

ஏ ஆர் ர்ஹ்மானின் இசையில் பத்துக்கும் குறைவான பாடல்களை மட்டும் தான் மின்மினி பாடியிருக்கிறார். சின்னச் சின்ன ஆசையை தொடர்ந்து ‘சித்திரை நிலவு சேலையில் வந்தது’ (வண்டிச்சோலை சின்னராசு) ஜெயசந்திரனுடன் பாடினார். அடைந்த குரலில் வெளிப்படும் காம உணர்வுதான் இந்தப் பாடலின் அடிநாதம். புதிய மன்னர்கள் படத்தில் வந்த ’எடுடா அந்த சூரிய மேளம்’ என்ற உணர்ச்சிகரமான பாடலில் தனக்கு கிடைத்த ஓரிரண்டு வரிகளை துடிப்புடன் பாடியிருப்பார் மின்மினி. எஸ். பி .பி மற்றும் குழுவினருடன் சேர்ந்து அவர் பாடிய இந்த பாடல் ரஹ்மானின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. (இந்த பாடலின் கடைசியில் விசேஷமான சுருதிபேதம் (Pitch Shift) ஒன்று வரும். ஆனால் அது யாராலும் கவனிக்கப்படவில்லை. பம்பாய் படத்தின் ‘ஹம்மா ஹம்மா’ பாடலின் மத்தியில் அவர் மிக வெளிப்படையாக சுருதிபேதம் போட்டபோது தான் அதை அனைவரும் கவனித்தார்கள்.

காதலன் படத்தின் பெரும்புகழ்பெற்ற ’’என்னவளே அடி என்னவளே’’ பாடலில் பெண்குரல் வடிவமான ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’’வை சுனந்தாவுடன் இணைந்து பாடினார் மின்மினி. கறுத்தம்மா படத்தின் துள்ளலான ‘பச்சைக்கிளி பாடும் ஊரு’’ மின்மினியின் அடைந்த குரலில் பாடும் திறனுக்காகவும் கோழிகளின் ’கொக்கரக்கோ’ சத்தத்தால் அமைந்த அதன் தாளக்கட்டுக்காகவும் புகழ் பெற்றது. திருடா திருடா படத்தில் வந்த ‘ராசாத்தீ என் உசிரு என்னதில்லெ’ பாடல்’ உலகத்தரமான பின்குரல் அமைப்புக்கு (Backing Vocals) மிகச்சிறந்த ஒரு உதாரணம். அதில் ஒலிக்கும் உணர்ச்சிகரமான பின்குரல் பகுதிகள் அனைத்துமே மின்மினியால் பாடப்பட்டது. புதியமுகம் படத்தில் வந்த ஸ்பானிய இசைப்பாணியிலான ‘சம்போ சம்போ’’ மற்றும் ஜெண்டில்மேன் படத்தில் வந்த காமச்சுவை கொண்ட ‘பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே’’ (ஒசிபிசா குழுவின் ’கிலேலே கிலேலே’ பாடலின் தழுவல்) பாடல்கள் தான் ரஹ்மானுக்காக மின்மினி பாடிய கடைசிப் பாடல்கள்.

பல மொழிகளில் பாடல்களை பாடியிருந்தாலும் மின்மினிக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது தமிழில் மட்டும் தான். தனது தாய்மொழியான மலையாளத்தில் அவருக்குக் கிடைத்தது மிக்க் குறைவான பாடல்களே. அவற்றிலும் மிகப் பிரபலமானவற்றில் சிலது இளையராஜாவின் இசையமைப்பில் வந்தது; பப்பயுடெ ஸ்வந்தம் அப்பூஸ் படத்தில் வந்த ’காக்கா பூச்சா’ பாடல் உதாரணம். இதே பாடல் அப்படத்தின் தமிழ் வடிவமான என் பூவே பொன் பூவே யிலும் மின்மினியின் குரலில் ‘காக்கா பூனை’ என்று வெளிவந்தது.

மோஹன் ஸிதாராவின் இசையில் வந்த ‘ஈ வழியே நிலா விளக்கும் ஏந்தி’ மின்மினியின் பாடும்முறையில் உள்ள உணர்ச்சி வெளிப்பாட்டுத் திறனை அரிதாக வெளிக்கொணரும் பாடல். ரவீந்திரனின் இசையமைப்பில் வெளிவந்த ’ஸௌபர்ணிகாம்ருத வீசிகள்’ (படம்- கிழக்கு உணரும் பக்‌ஷி), லோஹித தாஸின் குடும்பஸமேதம் படத்தில் ஜாண்ஸனின் இசை அமைப்பில் வந்த ’நீல ராவில் இந்நு நிண்டெ’ மற்றும் ‘ஊஞ்ஞாலுறங்ஙி’, ஜாண்ஸனின் இசையிலான ‘கண்னாடியாற்றில் அவள் கனக நிலாவு’(படம்- வாசாலம்), எஸ் பாலகிருஷ்ணனின் இசையில் வந்த ‘பாதிராவாய நேரம்’ (படம்- வியட்நாம் காலனி).. முடிந்தது மின்மினியின் சொல்லும்படியான மலையாளப்பாடல்கள்!

சின்னச் சின்ன ஆசைக்கு பிறகு சாதாரண நாட்களில் 8 பாடல்கள் வரைக்கும் சில நாட்களில் 12 பாடல்கள் வரைக்கும் பாடி பதிவுசெய்யுமளவுக்கு விரைவாகவும் பரபரப்பாகவும் இயங்கும் பாடகியாக மாறினார் மின்மினி! இடைவிடாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பக்திப்பாடல் பதிவுகளிலும் பங்கேற்று கொண்டேயிருந்தார். 1993ன் கடைசியில் ஒருநாள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த, தமிழ் திரை உலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற ஒரு தமிழ் திரை நட்சத்திர இரவின் மேடைநிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மின்மினியின் குரல் வெளிவராமல் முற்றிலுமாக நின்றுபோனது. தொடர்ந்து பலமாதங்கள் அவரால் பேசவே முடியவில்லை.

ஏறத்தாழ எஸ். ஜானகியின் குரலின் தன்மைகள் உடையதுதான் மின்மினியின் குரலுமே. சின்னவயதிலிருந்தே தனக்கே தெரியாமல் தொடர்ந்து பாடுவதன் வழியாக கட்டமைக்கப்பட்டும் குரல் அது. இயல்பாக கிடைத்திருக்கும் குரலுக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி இத்தகைய குரல்களூக்கு இருக்காது எனப்படுகிறது. பல வருடங்கள் ஓய்வே இல்லாமல், இடைவிடாமல் பாடிவந்ததனால் குரல் தந்துக்களின்மேல் ஏற்பட்ட அளவுக்கதிகமான அழுத்தம் ஒருநாளில் ஒரேய டியாக வெளிவந்ததாகக்கூட இருக்கலாம். தொடர்ந்த சிகிட்சையின் காரணமாக மீண்டும் பேசவும் ஒரளவுக்கு பாடவும் முடிந்தது. ஆனால் மின்மினியின் குரலிலும் பாடும்முறையிலும் இருந்துவந்த பழைய அந்த சிறப்பு காணாமலாகி விட்டிருந்தது.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் ஜாய் என்கிற கீபார்ட் இசைக் கலைஞருடன் மின்மினியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பாடமுடியாமல் மன உளைச்சலின் ஆழங்களுக்கு சென்றுகொண்டிருந்த மின்மினியை அவர் மணம்புரிந்தார். மின்மினியை வரவழைத்து ஒவ்வொரு வார்த்தையாக, வரியாக பாடவைத்து பாடல்களை பதிவு செய்யவும்கூட முன்வந்தார்கள் அவரது பாட்டை விரும்பிய இசையமைப்பாளர்கள். ஆனால் சரியாக பாடமுடியாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பாடுவதிலிருந்து விலகிக்கொண்டார் மின்மினி. இருந்த அனைத்தையும் சிகிட்சைக்காக செலவிட்டார். வருடங்கள் கடந்தோடின. தன்னால் மீண்டும் பாடமுடியும் என்ற நம்பிக்கை திரும்பி வந்தபோது அவரைக் கூப்பிட யாருமே இருக்கவில்லை.

எல்லாவற்றையும் இழந்த மின்மினி சென்னையில் வாழ வழியில்லாமல் கேரளத்துக்கு திரும்பி இப்பொழுது பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று பதின்பருவத்தை எட்டிய இரு குழந்தைகளுடனும் தன் கணவருடனும் கொச்சியில் வாழ்ந்து ஒரு இசைப்பள்ளியை நடத்தி வருகிறார். தனது குரலின் சிக்கல்கள் முற்றிலுமாக மாறிவிட்டது என்றும் தன்னால் இப்பொழுது பழையபடி பாட முடியும் என்றும் அவர் சொல்லுகிறார். ஆனால் இன்றைக்கு அவரை பாடுவதற்க்கு அழைக்க யாருமே முன்வருவதில்லை.

மின்மினி

மிகச் சிறியது

இருள் கவியும் அந்தியில்

ஒரே ஒரு கணம்

எல்லா நட்சத்திரங்களையும்

அது வெல்கிறது

பின்னர்

என்றைக்குமாக

எரிந்து மறைகிறது


(தமிழில் நான் நேரடியாக எழுதிய விரிவான முதல்க் கட்டுரை)