20111110

ஜெக்ஜித் சிங் : பாடிமுடித்த கஸல்களின் துயரக்கடல்

கடந்த ஜூன் மாதத்தின் ஒரு சனிக்கிழமை சாயங்காலம். இருள் விழத்தொடங்கியிருந்தது. மனச்சோர்வுடன் பெங்களூரின் மல்லேசுவரம் பகுதியில் இலக்கில்லாமல் திரிந்துகொண்டிருந்தேன். எதாவது ஒரு மதுபான விடுதியில் ஏறி குடிக்கலாமா என்று ஒருகணம் யோசித்தேன். ஆனால் சனிக்கிழமை இரவில் பெங்களூரின் மதுபானத்தலங்களில் நிற்கக்கூட இடம் கிடைக்காது. ஒருவேளை இடம் கிடைத்தாலும் அங்கு ஓங்கி ஒலித்து காதைக் கிழிக்கும் டெக்னோ இசையும் குடிகாரர்களின் கூச்சல் இரைச்சல்களும் சேர்ந்து நம் மன அழுத்தத்தை மேலும் பலமடங்கு மோசமாக்கிவிடும் என்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் மரங்கள் மூடிய நிழற்சாலைகளில் வெறுமெனே நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மரத்தின் நெஞ்சில் ஆணியடித்து பதித்த ஒரு விளம்பர அட்டை கண்ணில் பட்டது. ஜெக்ஜித் சிங்கின் தனித்துவமான இசையையும் அவரது குளிர்காற்றைப் போன்ற குரலையும் கேட்க வாருங்கள். ஜூன் 18, 7.30 மணிக்கு, சௌடய்யா அரங்கில். நிகழ்ச்சி தொடங்க இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கிறது! இருந்தும் அரங்கம் வெகுதூரமில்லை என்பதால் வேறு எதுவும் யோசிக்காமல் ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்பினேன்.

ஒரு பிரம்மாண்டமான வயலினின் உருவத்தில் கட்டப்பட்ட சௌடய்யா அரங்கிRற்குள் நிகழ்ச்சி தொடங்கி விட்டிருந்தது. ஆயிரத்திற்க்கும் மேல் இருக்கைகள் உள்ள அந்த அரங்கு நிரம்பிய கூட்டம். ஓரிரண்டு இருக்கைகளுக்கான நுழைவுச் சீட்டுகள் மட்டும் மீதமிருந்தது. onஒன்றை வாங்கி வேகமாக உள்ளே நுழைந்தேன். கடைசி வரிசையின் கடைகோடி மூலையிலிருந்த இருக்கையை இருட்டில் தேடிக்கொண்டிருக்கும்போது இறைவனே.. முடியுமென்றால் வாழ்க்கையெனும் இந்த கொடிய பாலைவனத்தை சமுத்திரமாக மாற்றவும்.. இல்லையென்றால் எப்போதுமே சமுத்திரமாகயிருக்கும் எனது கண்களை பாறைகளாக்கவும்.. (ஏ குதா ரே கெ ஸெஹ்ரா கோ..) என்ற, இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு தானே எழுதி இசையமைத்த அந்த அற்புதமான கஸலை ஜெக்ஜித் சிங் நெஞ்சைத்தொடும் உணர்ச்சிப்பெருக்குடன் பாடிக்கொண்டிருந்தார்.

எழுபது வயதிலும் அவரது குரலின் இனிமையும் ஆழமும் குறைந்ததாகவே தெரியவில்லை. அந்த பாடும்முறையோ எழுபதுகளின் மத்தியிலிருந்து உலகுக்குப் பரிச்சயமான அதே ஜெக்ஜித் சிங் முத்திரை பாணி! ஒரு காலத்தில் ஜெக்ஜித் சிங் கஸல்களின் தீவிர ரசிகனாக இருந்து, பின்னர் புதிதாக வரும் அவரது பாடல்களின் புதுமையற்ற தன்மையில் விரக்தியடைந்து அவற்றை வாங்குவதும் கேட்பதும் நிறுத்திவிட்டவன் நான். ஆனால் அன்றிரவு அவர் தொடர்ந்து பாடிய பதினைந்துக்கும் மேற்பட்ட அவரது எக்காலத்திற்குமுரிய கஸல்களை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு பதினோரு மணிக்குமேல் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து புறப்படும்போது எனது மனச்சோர்வின் காரணங்களையே நான் மறந்துவிட்டிருந்தேன்! இது எனது அனுபவம் மட்டுமல்ல.

சமவெளிகளில் தங்குதடையில்லாமல் அமைதியாக வழிந்தோடும் ஒரு ஆற்றினைப்போன்ற ஜெக்ஜித் சிங்ஙின் குரலும் பாடும்முறையும் வலியுற்ற மனங்களை எந்தநேரத்திலும் ஆசுவாசப்படுத்தக் கூடியவை. ஜெக்ஜித் சிங் பாடும்போது நம்மால் அதை கவனிக்காமல் இருக்க முடியாது. ஆனால் கவனத்தை ஈர்ப்பதற்காக பொய்யாக அவர் எதையுமே செய்ய மாட்டார். தனக்கு பிடித்ததை, தனக்கு தெரிந்ததை தன்னை மறந்து பாடிக்கொண்டிருப்பார். இப்போது நான் மிகக்கடினமான ஒரு சங்கதியை அடிக்கப்போறேன், கேளுங்கடா நீயெல்லாம்போன்ற இசை ஆணவம் அவரது இசையில் இருக்கவே இருக்காது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரசீகத்தில் உருவாகி அறுநூறு ஆண்டுகளுக்குமுன் நம் மண்ணுக்கு வந்துசேர்ந்த கஸல் என்கிற அசாத்தியமான இசை வடிவத்தினுள் அத்தகைய இசை ஆணவத்திற்கு ஒருபோதும் இடமிருந்ததில்லை.

க்ஹஸல்என்று உச்சரிக்கவேண்டிய அந்த வார்த்தையைக்கூட நாம் கெஜல், கஜல், கசல் என்றெல்லாம் தவராகத்தான் புரிந்து வைத்திருக்கிறோம். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் எளிதாக்கப்பட்ட ஒரு வடிவம் என்று சாதாரணமாக கஸலைச் சொல்லலாம் என்றாலும் வேறு எந்த இசைவடிவத்திலுமில்லாத தீவிரமான உணர்ச்சிவெளிப்பாட்டுப் பாங்குகள் கஸலினுள் புதைந்துள்ளது. ஆனால் அந்த உணர்ச்சிகள் அதில் ஓங்கி ஒலிக்காமல் மென்மையாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அந்த மென்மைதான் கஸலின் அடிநாதம்.

ஒரு தபலா, ஒரு சாரங்கி என மிகக்குறைவான கருவிகளை மென்மையாக இசைக்கும் கலைஞர்கள். நடுவில் அமர்ந்து பாடும் பாடகன். அவர்கள் அனைவருமே இசையின் கனவுலகங்களில் தொலைந்து போயிருக்கிறார்கள். மனித வாழ்வின் இனம்புரியாத வேதனைகளை, தவிர்க்கமுடியாத சோகங்களை, பெண்ணை, அவளது அழகை ஆராதிப்பதை, காதலை, பிரிவை, விரகத்தை, தத்துவத்தை, வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களை, வலிகளுக்கிடையிலும் கொண்டாட்டத்தை நாடும் மனித மனத்தை, மதுவை எல்லாம் அப்பாடல்கள் பாடுகின்றன.

கஸல்களை சிறப்பாகப் பாடுவதென்பது எளிதல்ல. தன்னை இசைக்கு முழுமையாக அர்ப்பணித்தல், ராக பாவங்களைப் பற்றியும் பாடல் வரிகளைப் பற்றியுமான ஆழ்ந்த புரிதல் போன்றவை ஒரு கஸல்ப் பாடகனுக்கு இன்றியமையாதவை. கடினமான சங்கதிகளைப் பாடி கேட்பவர்களை அதிரவைப்பதல்ல கஸலின் நோக்கம். மெட்டின் ஆத்மாவை புரிந்து, அதை உணர்ந்து பாடும் பாடகர் தானே கஸலாக மாறுகிறார். அவர் தனக்காக மட்டுமே பாடுகிறார். இசையில் மூழ்கி ரசித்து அவர் பாடும்போது கேட்பவர்களுக்கும் அது தங்களது அனுபவமாக மாறிவிடுகிறது. உலகில் சிறந்த கஸல்ப் பாடகர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதன் காரணமும் இதுதான். மெஹ்தி ஹஸன், குலாம் அலி, பேகம் அக்தர், அபிதா பர்வீண், ஃபரீதா கானும், நூர்ஜஹான், மலிகா புக்ராஜ், தாஹிரா சயித், முன்னி பேகம், ஹரிஹரன்.. இந்த பட்டியலை பெரிதாக நீட்ட முடியாது.

இந்தியப் பிரிவினையின்போது நமது முக்கியமான கஸல் பாடகர்கள் ஏறத்தாழ அனைவருமே பாகிஸ்தானுக்கு போய்விட்டனர். அவர்களுக்கு ஈடாக கஸலின் இந்தியப் பெருமையை இங்கு நிலைநாட்டியவர் ஜெக்ஜித் சிங். மெஹ்தி ஹஸனையும் குலாம் அலியையும் போல் கஸலுக்காகவே உருவான அரிதான குரல், உண்மை மிகுந்த மனோதர்மங்கள், உணர்ச்சிகளை மையமாகக்கொண்ட பாடும்முறை போன்றவை ஜெக்ஜித் சிங்கின் பேராற்றல்களாக இருந்தது. பிற இசை வடிவங்களை அவர் கையாளும்பொழுது அவையும் கஸல்களாக உருமாறித்தான் ஒலிக்கும்!

ஹரிஹரன் போன்றவர்கள் கஸலை தங்களது பல தொழில்களில் ஒன்றாக ஒதுக்கி திரையிசை, பாப் இசை, சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் நடிப்பு, யதார்த்த இசை நிகழ்ச்சிகள், ஆரவாரமான மேடைத்தோற்றம் போன்றவற்றின் பின்னால் சென்றபோது ஜெக்ஜித் சிங் கஸலுக்காகவே வாழ்ந்தார். இந்தியாவில் கஸல் கேட்பவர்களின் எண்ணிக்கையை பலமடங்கு உயர்த்தியதில் ஜெக்ஜித் சிங் ஆற்றிய பங்கு இந்திய இசை வரலாற்றின் ஒரு பகுதியாகவே உள்ளது. எண்ணற்ற இசை விரும்பிகள் தங்களது வாழ்வின் வலிகளுக்கு நிவாரணமாக அவரது கஸல்களை நாடினார்கள். தனது சொந்த வாழ்க்கையின் எண்ணற்ற துயரங்களில் இருந்து உருவாக்கியெடுத்த இசையால்தான் ஜெக்ஜித் சிங் மற்றவர்களின் துயர்களைத் துடைத்தார்.

ஜெக்ஜித் சிங் பிறந்து வளர்ந்தது ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்குmமூலையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஸ்ரீகங்கா நகரில்தான் என்றாலும் அடிப்படையில் அவர் ஒரு பஞ்சாபி சர்தார். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் மாமேதை படே குலாம் அலி கானும் இந்திய திரை இசையின் ஆகச்சிறந்த பாடகர் மொஹம்மத் ரஃபியும் பஞ்சாபிகள் தான். திரை இசை மேதைகளான மதன்மோகன், ரோஷன், ஜெய்தேவ், கய்யாம், ஓ பி நய்யார், திரைப் பாடகர்களான கே எல் சைகாள், சுரையா, ஷம்ஷாத் பேகம், மஹேந்திர கபூர், கஸல் பாடகர்களான குலாம் அலி, நூர்ஜெஹான், அனூப் ஜலோட்டா, கவாலி இசையின் இதிகாசம் நுஸ்ரத் ஃபதே அலி கான், தபலா வித்தகர்களான உஸ்தாத் அல்லா ரக்கா, மகன் சக்கீர் ஹுசைன் போன்ற அனைவருமே அடிப்படையில் பஞ்சாபிகளாவார்கள். இந்திய இசைக்கு பஞ்சாப் அளித்த ஏராளமான இந்த கொடுப்பினைகளில் மிக முக்கியமான ஒன்று என்று ஜெக்ஜித் சிங்கை சொல்லலாம்.

சீக்கிய மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அமர் சிங் தீமான் என்கிற கீழ்த்தட்டு அரசு ஊழியரின் 11 குழந்தைகளின் மூன்றாவதாகப் 1941ல் பிறந்த ஜெக்மோகன் சிங் தீமான் என்கிற தலப்பா கட்டிய சர்தார் தான் பின்னர் அழகாக அலைபாயும் சிகைச் சுருள்களுடன் மேடைகளில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்த ஜெக்ஜித் சிங் என்ற கஸல் உச்சநட்சத்திரம். இரண்டு அறைகள் மட்டும்கொண்ட, மின்சாரமோ தண்ணீர் வசதியோ இல்லாத ஒரு இலவச அரசு குடிசையில்தான் ஜெக்ஜித் சிங் தனது ஏழ்மை மிகுந்த பால்யத்தை கழித்தான். தெருவின் பிறகுழந்தைகளைப்போல் ஒரு பட்டம் வாங்கி பறக்க விட்டு விளையாடுவது கூட அவனுக்கு அங்கு ஒரு பேராசையாகத்தான் இருந்தது. தெருவில் அலையும் மாடுகளுக்கு புல்லை ஊட்டியும் தெருக்களில் சத்தமாக பாட்டைப் பாடியும் திரிந்தான் அவன். அவனுக்கு ஏழுவயதானபோது அக்குடும்பம் அவர்களது அப்பாவின் சொந்த ஊரான பஞ்சாபின் ஜலந்தருக்கு இடம் பெயர்ந்தது.

பாடல்களை கேட்க ஒரு ரேடியோ கூட வீட்டில் இல்லாமல் இருந்தபோதிலும் தனது மகன் அழகாக பாடுவதை அடையாளம் கண்ட அமர் சிங் கண் பார்வையில்லாத சகன்லால் சர்மா என்கிற இசை ஆசிரியரிடம் அவனை சேர்த்துவிட்டார். ஆனால் அவன் உயர்ந்த ஒரு அரசு அதிகாரியாக வரவேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். பின்னர் உஸ்தாத் ஜமால் கான் ஜெக்ஜித்தின் இசைக் குருவானார். ரேடியோ உள்ள வீடுகளுக்குச் சென்று அப்துல் கரிம் கான், அமீர் கான், படே குலாம் அலி கான், தலத் மெஹ்மூத் போன்றவர்களின் பாடல்களை தொடர்ந்து கேட்டு ஒரு இசைப்பைத்தியமாகவே அவன் மாறிவிட்டிருந்தான். 9 வயதில் முதன்முதலாக ஒரு மேடையில் பாடினான். அது அனைவருக்கும் பிடித்துப்போனது. கூட்டத்திலிருந்து பலர் முன்வந்து அவன் கையில் 5 காசிலிருந்து 2 ரூபா நோட்டு வரைக்கும் கொடுத்தனர். நடுங்கும் கைகளால் அந்த பணத்தை வாங்கிய அவனது அப்பா தன் மகனை கண்ணீரோடு கட்டித்தழுவினார்.

பதினைந்து ஆண்டுகள் முறையாக செவ்வியல் இசை பயின்றார் ஜெக்ஜித். இருந்தும் ஒரு செவ்வியல் இசைப்பாடகராக வருவதற்கு அவர் விரும்பவேயில்லை. திரையிசையில் தனது ஆதர்சங்களாகயிருந்த தலத் மெஹ்மூத், ஹேமந்த் குமார், லதா மங்கேஷ்கர் போன்றவர்களைப்போல் மெல்லிசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்பாடகராக மாறத்தான் அவர் ஆசைப்பட்டார். பள்ளிப்படிப்பில் பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும் சிறப்பாக பாடுவதால் பள்ளிகளிலும் கல்லூரியிலும் அவருக்கு முன்னுரிமை கிடைத்தது. கல்லூரிக் காலம் முதல் இசைவகுப்புகளை நிறுத்தி விட்டு மனோதர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சுயமாக இரவுபகல் இசைப்பயிற்சி செய்ய ஆரம்பித்தார். அனைத்திந்திய வானொலியின் இசைத்தேர்வுகளில் பலமுறை தோல்வியடைந்து பின்னர் ஜலந்தர் வானொலி நிலையத்திலிருந்து அவரது பாடல்கள் ஒலிபரப்பாக ஆரம்பித்தது.

விரைவில் ஒரு வானொலி நட்சத்திரத்தின் அந்தஸ்து கிடைத்தது அவருக்கு. ஒரு முறை கல்லூரியில் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு அங்கு இருள் நிரம்பியது. மின்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது. அவர் பாட்டை நிறுத்தவில்லை. கூட்டத்தில் யாருமே அசையவுமில்லை! ஒரு மணிநேரம் இருட்டில் அமர்ந்துகொண்டே அவர்கள் ஜெக்ஜித்தின் பாட்டைக் கேட்டு கைதட்டி ஆர்ப்பரித்தனர்! இதெல்லாம் அளித்த தன்னம்பிக்கையை மட்டும் முதலீடாக வைத்துக்கொண்டு சினிமாவில் வாய்பு தேடி தனது இருபதாவது வயதில் மும்பை வந்து இறங்கினார் ஜெக்ஜித் சிங்.

அக்காலத்தின் பிரபலமான பல ஹிந்தித் திரையிசையமைப்பாளர்களின் வீடுகளை தேடிப்பிடித்து கதவைத்தட்டினார். பலர் முன்னும் பாடல்களை பாடிக்காட்டினார். எங்கும் எந்த சலனமும் இல்லை! ஷங்கர்-ஜெய்கிஷன் இரட்டையரின் ஜெய்கிஷன் மட்டும் அவரது குரல்வளத்தை பாராட்டினார் ஆனால் அவரும் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. கையிலிருந்த சொற்பமான பணம் சில நாட்களிலேயே முடிந்து விட்டது. ஒரு சலவைக் கடையில் துவைக்கக் கொடுத்த துணிகளை திரும்பி வாங்கக் கூட அவர் கையில் பணமில்லை. மனம் தளர்ந்து போன ஜெக்ஜித் பயணச்சீட்டில்லாமல் ரயிலேறி, கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அதன் கழிவறையில் ஒளிந்துகொண்டு ஜலந்தர் திரும்பினார்!

நாலாண்டுகள் கழித்து மறுபடியும் மும்பைக்கு புறப்பட்டார். உடைந்து சிதிலமான ஒரு பழைய வீட்டின் அறையில் நாங்குபேருடன் தங்கினார். அங்கு மூட்டைப்பூச்சிகள் நடமாடும் துருப்பிடித்த இரும்பு கட்டிலில் படுத்து தூங்கும்போது எலிகள் அவரது கால்களை கடித்து மென்றது. சின்னச்சின்ன கல்யாணக் கச்சேரிகள், பணக்கார வீட்டு நிகழ்சிகள் போன்றவற்றில் ஒரு வாடகை ஹார்மோணியத்தின் உதவியுடன் பாடிவந்தார். தன்னை சினிமாத்துறையில் யாராவது கவனித்து வாய்ப்பு வழங்குவார் என்கிற நம்பிக்கையோடு பல சினிமாக்காரர்களின் வீட்டுச் சடங்குகளில் இலவசமாக பாடினார். ஆனால் யாருமே அவரை கவனிக்கவில்லை. ஒருவேளை கவனித்திருந்தால்கூட அவரது குரலில் நிரம்பியிருந்த ஆழ்ந்த இசைத்தன்மையும் வலியும் மரங்களை சுற்றி ஓடிக்காதலிக்கும் கதாநாயகர்களுக்கு பொருந்தியிருக்காது தான். அவர் ஒரு பின்னணிப் பாடகராகாமல் போனதும் ஒருவிதத்தில் நல்லது தான். கஸலுக்கேயுறிய அவரது இசையமைப்புத் திறனும் மொழித்திறனும் செவ்வியல் ராகங்களின்மேலான பிடிப்பும் மெட்டுக்கள் சார்ந்த புரிதலும் திரைத்துறையில் வீணாகத்தான் போயிருக்கும்.

கடைசியில் எச் எம் வி நிறுவனத்திற்காக இரண்டு கஸல்கள் பாடிப்பதிவு செய்ய ஒப்பந்தமானது. அந்த இசைத்தட்டின் அட்டைப்படத்திற்காகத்தான் அவர் தனது சீக்கிய தலப்பாக்கட்டையும் நீண்ட முடியையும் கைவிட்டார். அதையே அவர் தனது நிரந்தரமான தோற்றமாக மாற்றினார். ஒரு சர்தார்ஜியின் தோற்றத்தை தனது இசையுலக அடையாளமாக்க அவர் விரும்பவில்லை. ஆனால் தன் மகன் தமது மத அடையாளங்களை கைவிட்டதை அவரது அப்பாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கஸல்தான் இனிமேல் தனது வாழ்க்கை என்று அவர் முடிவெடுத்தார். இந்தியாவில் கஸல் என்கிற இசைவகையே இல்லாமல் போய்கொண்டிருந்த காலகட்டம் அது. திரையிசையில் அவ்வப்போது வரும் கஸல்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு பாணியை அவர் வளர்த்தெடுத்தார். கஸலில் மரபாக பயன்படுத்தும் இசைக்கருவிகளில் சாரங்கி போன்றவற்றை தவிர்த்து சந்தூர், கிதார், வயலின், மின்னிசைக் கருவிகள் போன்றவற்றை உள்ளே கொண்டுவந்தார். உருதுவின் கடினமான கவிதைகளை விட்டுவிலகி பாமரர்களுக்கும் புரியும் எளிமையான வரிகளை தேர்ந்தெடுத்தார். ஆனால் இது எதுவுமே உடனடியாக அவருக்கு வெற்றியை தரவில்லை.

விளம்பரங்களுக்கு இசையமைத்தும் பாடியும்தான் இக்காலகட்டத்தில் அவர் தனது வாழ்க்கையை நகர்த்தினார். அத்தகைய ஒரு இசைப்பதிவின்போது அவர் சித்ரா தத்தா என்கிற பெங்காளிப் பாடகியை சந்தித்தார். எந்நேரமும் அழப்போகும் பாவனையுடனிருக்கும் சித்ராவின் அழகான முகமும் ஆழ்ந்த வலியை வெளிப்படுத்துவதுபோன்ற நீலக்கண்களும் ஒரு குழந்தையின் தூய்மைகொண்ட அவரது குரலும் முதல் சந்திப்பிலேயே ஜெக்ஜித்தை கவர்ந்தது. சித்ராவுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டிருந்தது. ஆனால் தனது 8 வயதான மகளுடன் துயரம் மிக்க ஒரு வாழ்க்கையைத்தான் அவர் அங்கு வாழ்ந்து வந்தார். ஜெக்ஜித்துக்கும் சித்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. எல்லா வசதிகளும் இருந்தும் வலிகள் மட்டும் மிஞ்சிய அந்த திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற சித்ராவை கையில் வெறும் 30 ரூபா மட்டுமே வைத்துக்கொண்டு திருமணம் செய்தார் ஜெக்ஜித். களங்கமற்ற சிரிப்பும் பேரன்பும்கொண்ட சித்ராவின் மகள் மோனிகா ஜெக்ஜித்திற்கும் அன்பு மகளானாள்.

முறையான எந்த இசைப்பயிற்சியுமே இல்லாமலிருந்த சித்ராவுக்கு இசை ஆசிரியராகவும் மாறினார் ஜெக்ஜித். இரண்டுபேரும் சேர்ந்து ஜெக்ஜித் சிங்-சித்ரா சிங் என்கிற பெயரில் மேடைகளிலும் ஒலிப்பதிவுகளிலும் பாட ஆரம்பித்தனர். ஆனால் வெற்றிகள் அப்போதும் வெகு தொலைவில் தான் இருந்தது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதைப்பற்றி ஜெக்ஜித் ஒருமுறை இவ்வாறு சொன்னார். “நாங்கள் பாபு என்று செல்லப்பேரிட்டு அழைத்த விவேக் பிறக்கும்போது எங்கள் கையில் பணமே இருந்ததில்லை. வசதியான வாழ்க்கையிலிருந்து என்னுடன் வாழவந்த சித்ராவும் மோனிகாவும் நானும் ஒரு ஒற்றையறை வீட்டில்தான் அப்போது தங்கியிருந்தோம். ஆனால் அது எதுவுமே எங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை. பாபுவை கையில் வைத்துக்கொண்டு உலகின் மிக உயர்ந்த செல்வந்தரைப்போல் என்னை நான் உணர்ந்த நாட்கள் அவை. எங்கள் வீட்டிலும் மனதிலும் பாபு சந்தோஷத்தை நிரப்பிப் புன்னகைத்தான். பிறந்து 20 நாட்கள் மட்டுமான அவனை கையில் எடுத்துக்கொண்டே சித்ரா ஒலிப்பதிவு கூடங்களுக்கு விளம்பரப் பாடல்களைப் பாடப்போனார். தூங்கும் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டே பாடல்களைப் பாடினார். எங்காவது ஒரு கச்சேரி கிடைக்குமா என்று நான் அலைந்து கொண்டிருந்தேன்.

விரைவில் அந்த க‌ஷ்டங்கள் அனைத்துமே பழைய கதையாக மாறியது. 1975ல் வெளிவந்த அவர்களது மறக்கமுடியாதவை (The Unforgettables) என்கிற இசைத்தட்டும் ஒலிநாடாவும் ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது. அது ஜெக்ஜித் சிங்-சித்ரா சிங் தம்பதியினரை இந்தியா முழுவதும் சினிமாவுக்கு வெளியே மிகப்பிரபலமான பாடகர்களாக ஸ்தாபித்தது. மரபான கஸல்களிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒலியுடன் வெளிவந்த அப்பாடல்களில் பல மேற்கத்திய இசைக்கருவிகளை படைப்பூக்கத்துடன் பயன்படுத்தினார் ஜெக்ஜித். அது கஸலை அழிக்கும் முயற்சி என்று சில இசை விமர்சகர்கள் குறை கூறினார்கள். உண்மையில் அது இந்தியாவில் கஸலுக்கு புத்துயிர் அளித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. வார்த்தைகள் அழிவதில்லை’ (பாத் நிக்லேகீ), இருட்டில் ஒரு விளக்கையாவது அணைக்காமல் வையுங்கள் (ஏக் னா ஏக் ஷமா), துயரம் கொலைகாரனின் பார்வைபோல் (கம் படே ஆதே ஹே), நண்பர்களின் வேடத்தில் அழிக்க வந்தவர்கள் (தோஸ்த் பன் கே முஜ் கோ) போன்ற அப்பாடல்கள் இன்று வரைக்கும் உயிருடன் இருக்கிறது.

அதன்பின் ஜெக்ஜித் சிங்கின் இசை வாழ்க்கையில் வெற்றிகள் மட்டுமே நிகழ்ந்தது. பணமும் புகழும் வந்து குவிந்தது. உலகம் முழுவதும் பறந்து ஆண்டில் 400 கச்சேரிகள் வரைக்கும் நடத்தினார். கச்சேரிகள் இல்லாத நாட்களே இல்லையென்றாயிற்று. தில்லியின் ஸிரி ஃபோர்ட் அரங்கில் மட்டுமே அவர் 300க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்! முதலில் அவரை துரத்திய திரையுலகம் அவரது இசையை மையமாக வைத்துக்கொண்டு பல திரைப்படங்களையே எடுத்தது! முற்றிலும் கஸல் பாணியிலான பாடல்களை அவற்றில் இசையமைத்துப் பாடினார் ஜெக்ஜித்.

கோயீ கேஸூ கோயீ ஆஞ்சல் (எக் பார் கஹோ), ஹோடோன் ஸே சூலோ தும் (ப்ரேம் கீத்), தும் கோ தேக்கா தோ யே கயால் ஆயா, யே பதா தே முஜே ஸிந்தகீ, யெ தேரா கர் யே மேரா கர், யூ ஸிந்தகீ கி ராஹ் மே (ஸாத் ஸாத்), தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ, ஜுகீ ஜுகீ ஸி நஸர் (அர்த்) நஷீலீ ராத் கோ (ஜுள்ஃப் கே ஸாயே), ஹோஷ் வாலோன் கோ க்யா பதா (ஸர்ஃபரோஷ்) போன்றவை அவரது பெரும்புகழ் பெற்ற திரைப்படக் கஸல்கள். அவரது அர்த் மற்றும் ஸாத் ஸாத்தின் பாடல்கள் சேர்த்து வெளியிட்ட ஒலிநாடாதான் எச் எம் வியின் மிக அதிகமாக விற்panaiyபனையான பிணைப்பு இசைத்தொகுப்பு.

கஸல் கவிதைகளின் இதிகாசக் கவிஞன் மிர்ஸா காலிபின் (1797-1869) வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தபோது அதற்கு இசையமைத்து மற்றுமொரு வரலாற்று சாதனை படைத்தார் ஜெக்ஜித் சிங். இந்தியாவில் முதன்முதலாக பலதடங்கள்கொண்ட டிஜிடல் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்த குறுந்தகடு ஜெகஜித் சிங்கினுடைய பியோன்ட் டைம் (Beyond Time).

1990 ஜூலையில் அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அவரது வாழ்க்கையின் மையமாக இருந்த பத்தொன்பதே வயதான அவரது அன்பு மகன் பாபு ஒரு சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார். அந்த துயரத்திலிருந்து சித்ரா சிங் ஒருபோதும் மீண்டெழவேயில்லை. ஒரு சுரத்தைக்கூட அதன் பின் அவர் பாடவில்லை. ஜெக்ஜித் சிங்கும் சித்ரா சிங்கும் இணைந்து பாடும் மேடை நிகழ்ச்சிகள் ஒரு மந்திரஜாலமாகத்தான் இருந்தது. அதை மீண்டும் கேட்கும் வாய்ப்பை ரசிகர்கள் இழந்தனர். சித்ரா சிங்குக்குப்பின் சொல்லும்படியான எந்த ஒரு பெண் கஸல்ப்பாடகியுமே இந்தியாவில் உருவானதில்லை.

தன் மகனின் மரணம் ஏற்ப்படுத்திய துயரம் தாங்கமுடியாமல் பலமாதங்கள் கண்ணீரில் கழித்த ஜெக்ஜித் சிங் மெல்ல மெல்ல இசைக்கு திரும்பினார். முதலில் வெறும் தன்புரா மட்டுமே மணிக்கணக்காக மீட்டிக்கொண்டிருந்தார். பின்னர் அத்துடன் பாட ஆரம்பித்தார். பிறகு மகன் விபத்தில் இறந்துபோன ஒரு தாய், ஒரு குழந்தையின் மண் பிரதிமையை வைத்துக்கொண்டு அழுது பாடுவதாக சித்தரிக்கப்படும் மிட்டி தா பாவா என்கிற பஞ்சாபி நாட்டுப்புறப் பாடலை ஈரமான கண்களோடு அவர் அவ்வப்போது மேடைகளில் பாடினார். என் மகனின் இறப்பில் நான் அழுத கண்ணீர்த் துளிகள்தான் மன் ஜீதே ஜக்ஜித் என்கிற தொகுப்பாக வெளிவந்ததுஎன்று அவர் சொல்லியிருக்கிறார்.

ஒரு வைராக்கியத்துடன் மீண்டும் இசையில் ஈடுபட ஆரம்பித்தார். 1990-2000 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 55 தொகுப்புகளை அவர் வெளியிட்டார்! 1994ல் எங்கள் இசைநிறுவனம் வெளியிட்ட அவரது ஃபேஸ் டு ஃபேஸ் என்கிற தொகுப்பின் பிரச்சாரத்துக்காக தென்னிந்தியா முழுவதும் நான் பயணம் செய்திருக்கிறேன். லதா மங்கேஷ்கருடன் ஸஜ்தா என்கிற ஒரு கஸல் தொகுதியை கொண்டுவந்தார். 2003ல் அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேய் எழுதிய கஸல்களை ஸம்வேதனா என்கிற பெயரில் இசையமைத்து வெளியிட்டார். தொகுப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளையும் நடத்திவந்தார். 2001ல் அவரது அம்மா இறந்துபோன நாளில் கூட கல்கத்தாவில் மேடையில் பாடினார்!

அவரது பாடல்களின் இசையிலும் பின்னணி இசைக்கோர்வையிலும் எந்த ஒரு புதுமையுமே இல்லாமலாகிவிட்ட காலம் அது. பழைய சில பாடல்களை கேட்டால்போதும் அவரது புதிய பாடல்கள் அனைத்துமே கேட்டமாதிரிதான் என்றாகிவிட்டது. ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் இசையமைப்பும் இசைக்கோர்வையும் வேறு இசைக்கலைஞர்களுக்கு விட்டு, பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நான் அவரது புதிய பாடல்களை கேட்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். 2007ல் என் இதயத்துக்கு நெருக்கமானவை (Close to My Heart) என்கிற பெயரில், தன்னை பெருமளவில் பாதித்த பழைய பத்து ஹிந்தித் திரைப் பாடல்களின் பின்னணி இசையை மறுஆக்கம் செய்து பாடி வெளியிட்டார். அது ஒரு நல்ல விஷயமாக அமைந்தபோதிலும் அதன் தலைப்புப் பாடலாக இருந்த சலில் சௌதரியின் கஹீ தூர் ஜப் தின் டல் ஜாயே பாடலின் பின்னணி இசையை அவர் மாற்றியமைத்த விதம் சலில் சௌதரியின் இசையை அறிந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் இதையெல்லாம் வெகுதூரம் தாண்டிச்செல்வதுதான் கஸல் இசைக்காக அவர் ஆற்றிய வரலாற்றுக் கடமை என்பது. இந்தியாவில் கஸல் எறத்தாழ இல்லாமலான காலகட்டத்தில் அதற்கு உயிர்கொடுத்து அதை மறுபடியும் பிரபலப்படுத்தியவர் ஜெக்ஜித் சிங். அங்கு அவர் ஒரு தனிமனித இயக்கமாகவும் தனிமனிதத் தொழிலகமாகவும்தான் செயல்பட்டார். துரதிர்ஷ்டவசமாக நகலெடுக்க முடியாத அவரது பாடும்முறையை பின்பற்றி புதிய கஸல் பாடகர்கள் யாருமே உருவாகவில்லை. கஸலுக்கென்று தனித்துவம் வாய்ந்த, முக்கியமான பாடகர்கள் யாருமே அவரது காலகட்டத்தில் தோன்றவுமில்லை. கஸலை சிறப்பாகப் பாடக்கூடிய பாடகர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாருமே கஸலை தங்களது முக்கிய ஊடகமாக முன்நிறுத்துவதுமில்லை.

தனிமனித வாழ்வில் மிக வெளிப்படையாக வாழ்ந்தவர் ஜெக்ஜித் சிங். தனது கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால் கருணையும் மனிதநேயமும் மிகுந்தவராகத்தான் அவர் வாழ்ந்தார். பிறருக்கு தங்கு தடையில்லாமல் உதவிகளைச் செய்தார். புதிதாக வரும் பாடகர்களையும் இசைக் கலைஞர்களையும் ஊக்குவித்தார். எனது ஆரம்ப நாட்களில் நான் மிகுந்த கஷ்டத்தில் இருந்தபோது யாருமே எனக்கு உதவவில்லை. தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதால் எதுவுமே குறைந்துபோய்விடாது. உதவிகள் பெறுபவர்களுக்கு ஆறுதலையும் வழங்குபவர்களுக்கு அமைதியையும் அளிக்கக் கூடியவைஎன்று சொல்லி தனிமனிதர்களுக்கும் Child Relief and You (CRY), National Association of the Blind, Library at St. Mary’s, Bombay Hospital போன்ற அமைப்புகளுக்கும் தொடர்ந்து பெரும் ஒத்தாசைகள் செய்துவந்தார்.

2009ன் ஒரு கோடைக்காலப் பகலில் ஜெக்ஜித்தின் மகள் மோனிகா தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டாள். இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 23ல் மூளையில் ரத்தக்குழாய்கள் வெடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெக்ஜித் சிங் பதினேழு நாட்கள் உயிருக்குப் போராடி அக்டோபர் 10 அதிகாலையில் இறந்துபோனார். இந்திய கஸல்களின் பொற்காலம் முடிந்துவிட்டது. என்னை மறந்துவிடாதே (Forget Me Not) தொகுப்பில் ஜெக்ஜித் சிங் பாடுகிறார்... ‘உனது கண்ணீர் சமுத்திரத்தை விட ஆழமானது. கடலாக மாறிப்போன தனது கண்களுடன் சித்ரா சிங் மட்டும் தனிமையில் கைவிடப்பட்டு வாழ்கிறார். துயரத்தில் வாடும் எண்ணற்ற மனிதர்களுக்கு ஆறுதலளிக்கும் ஜெக்ஜித்தின் கஸல்கள் சித்ராவையும் ஆறுதல்படுத்துமா?

உன் உதடுகளால்

என்னைத் தொடுக

எனது பாடல்களை

இறவாமல் செய்க...