20110910

பாட்டுக்கு ஒரு நடிகன் : ஷம்மி கபூர்

காலங்கள் கடந்தோடிக்கொண்டேயிருக்கின்றன. முடிவற்ற மின்சாரக் கம்பிகள் போல். எல்லையற்ற தண்டவாளங்கள் போல். ஒருபோதும் வர வாய்ப்பில்லாத எதிர்காலம் மட்டும் எப்போதுமே வண்ணமயமாகத் தெரிகிறது. என்ன வண்ணம் என்றே தெரிவதன்முன் நிகழ்காலம் ஓடி விடுகிறது. நொடிநேரத்தில் எல்லாமே கடந்தகாலமாகி கறுப்பு வெள்ளையாகிறது. ஒரு மாபெரும் சலனப்படம்போல் அது நம்மை விடாமல் பிந்தொடர்கிறது. கடந்தகால ஏக்கங்களும் நினைவுகளும் தேய்வழக்குகள் என்கிறார்கள். வாழ்க்கை என்பதே ஒவ்வொரு கணமும் தேய்ந்து அழிந்துகொண்டிருக்கும் ஒரு தேய்வழக்கு. அங்கு உண்மையில் கடந்தகாலத்தின் கறுப்பு வெள்ளைப் படம் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படத்தின் ஒரு காட்சித்துμக்கில் எனது பதினாறு வயதின் ஒரு இரவு எட்டு மணி. எங்கள் ஊரிலுள்ள ஒரு பணக்கார வீட்டின் ஜன்னல் வழியாக நான் ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கிறேன்; அங்கிருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் வரப்போகும் சித்ரஹார் நிகழ்ச்சியின் ஹிந்திப் பாடல்களை. ஆனால் அது அவ்வீட்டில் புதிதாய் வயதுக்கு வந்திருக்கும் இளம்பெண்ணைச் சைகைகளால் வசப்படுத்தும் முயற்சி என்று சொல்லி என்னைக் கேவலப்படுத்தி துரத்துகிறார்கள்.

பாடல்கள் பார்ப்பதற்கானவை என்கிற கலாச்சாரத்தைக் கிராமப்புறங்களுக்கும் கொண்டு வந்தவை கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிப் பெட்டிகள். அவை இருக்கும் வீடுகளுக்கு மேல் வெண்உலோக வண்ணத்தில் பெரிய மீனின் எலும்புக் கூடு போன்ற ஒன்று காணக் கிடைக்கும். அந்த வீடுகளின் ஜன்னலோரம் போய் நின்று பாடல்களைப் பார்க்கலாம், அங்கு வயதுப் பெண்கள் இல்லை என்றால்! வானலைவாங்கி என்ற அந்தப் புதுவகை மரத்தின் மீது காகங்களும் கிளிகளும் வந்து அமரும்போது தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகள் ஒரு தண்ணீரலை போல் அசைந்தாடும். தனது விலைமதிப்பில்லாப் பொருள் காட்டும் மாயக்காட்சிகளைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் அதன் உடையோன் சொக்காய் போட்டு மறைக்காத தனது தொப்பையும் தொந்தியுமாக வெளியே வந்து எரிச்சலுடன் தலையைத் தூக்கி அந்த மீன்முள் மரக்கிளிகளை வசைபாடித் துரத்துவார்.

கிளிகள் பறந்துவிட்டாலும் பலசமயம் படம் அலையலையாகத்தான் தெரியும். நீ வந்து வாயிநோக்கி நின்றபோதே நெனச்சேன்என்று என்னையும் வசைந்து அவர் மேலே ஏறி அதைத் திருகித் திருப்பி சரி செய்வார். படம் சரியாக வருகிறதா இல்லையா என்று அவருக்கு நேரலை வர்ணனை சொல்வது என்னுடைய பொறுப்பு. அவர் கீழே வந்து பார்க்கும்போது மலையாள நிகழ்ச்சி முடிந்து ரங்கோலி போன்ற ஏதாவது ஹிந்தி திரையிசைப் பாடல் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு கடும் சினத்துடன் அவன்டெ அம்மேடெ ஒரு ஹிந்திப்பாட்டுஎன்று சொல்லித் தொலைக்காட்சியை அணைத்து ஜன்னல் கதவைப் பளார் என்று சாத்திவிடுவார். ஆனால் ஒரு தீவிர இசை ரசிகனை அவ்வளவு எளிதில் அவமானப்படுத்திவிட முடியுமா என்ன?

அதற்குள்ளேயே மலையாள, தமிழ் பாடல்களைவிட ஹிந்திப்பாடல்களை விரும்பத்தொடங்கியிருந்த நான் தொலைக் காடிசிப்பெட்டி இருக்கும் தூரத்து வீடுகளுக்கோ கடைகளுக்கோ சென்று ரங்கோலியையும் சித்ரஹாரையும் தவறாமல் பார்க்க ஆரம்பித்திருந்தேன். அக்காட்சிகளில் வரும் நடிகர்கள் யார் யார் என்று சொல்லித்தந்த ஒரே காரணத்திற்காக என்னைவிட பதினெட்டு வயது அதிகம் இருந்த எம்சன் ஆன்ட்ரூஸ் என்பவர் எனக்கு நண்பரானார். பெயர் மட்டும் தான் பெரிது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு தினக் கூலித் தொழிலாளி அவர். ஆனால் எனக்கு அப்போது அவர்தான் அறிவாளி. ஸ்க்ரீன், ஃபிலிம்பேர், சினி ப்ளிட்ஸ், ஸ்டார் டஸ்ட் போன்ற ஹிந்தி சினிமா சார்ந்த ஆங்கில இதழ்களின் பழைய பிரதிகளை எங்கெல்லாமிருந்தோ தேடிப்பிடித்து படிப்பார். எனக்கும் படிக்கக் கொடுப்பார்.

ஹிந்தித் திரையின் நட்சத்திரங்களையெல்லாம் அந்தப் பாடல்கள் வழியாகவும் இதழ்கள் வழியாகவும்தான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவர்களில் எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்காத ஒரு நடிகர் ஷம்மி கபூர். முதல் பிரச்சினை அவரது உருவம். மலையாளத் திரை நாயகன் பிரேம் நஸீரின் துல்லியமான வட்ட முகத்தை ஆணழகின் அடையாளமாகக் கருதிவந்த எனக்கு ஷம்மி கபூரின் தர்பூசணிக்காய் போன்ற நீள்முகமும் சரியாகச் சீவாமல் அலங்கோலமாய்க் கிடக்கும் முடியும் பிடிக்கவே இல்லை. முகத்தின் ஒருபகுதி உப்பிப்போனதென்றால் மறுபகுதி துருத்தி நிற்பது. கீழ் உதடின் ஒரு பகுதி வீங்கிப் போனதென்ற பல் மேல் உதடின் நடுப்பக்கம் உள்ளடங்கியது. இதழ்களின் அட்டைப் படங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த அவரது வெள்ளைக்காரர்கள் போன்ற தோல் சிகப்பும் மரகதக் கண்களும் ஏதோ பரவாயில்லை எனப்பட்டது.

பாடல் காட்சிகளில் அவர் கொடுக்கும் அதீதமான உடல் அசைவுகளையும் அவர் கையாளும் நடனமுறைகளையும் பார்க்கும்போது எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் வேடிக்கையாகவும் இருந்தது. மலைகளில் இருந்து குதித்து, மரங்களில் தாவி, தண்ணீரில் மூழ்கி, தரையில் புரண்டு, தலையை விசித்திரமாக ஆட்டி, கைகளை வினோதமாகத் தூக்கி அவர் நிகழ்த்தும் வித்தைகள் ஒரு ஆட்டக்குரங்கின் ஆட்டத்தைப் போல்தான் அப்போது எனக்குப் பட்டது. ஆனால் அவர் நடிக்கும் ஒவ்வொரு பாடலிலும் இருந்த, கேட்டவுடன் மனதைக் கவரும் வல்லமையையும் அந்த மெட்டுக்கள் மனதிற்குள் நீங்காமல் நின்றதையும் என்னால் மறுக்க முடியவில்லை.

எனது ஹைதராபாத் நாட்களில் அங்கு கிடைத்த முழுநேர ஹிந்தித் தொலைக்காட்சிகளில் அவரது பாடல்களையும் படங்களையும் பிற நடிகர்களின் பாடல்களையும் படங்களையும் விரிவாகப் பார்த்தபோதுதான் ஷம்மி கபூரைப் போன்ற ஒரு திரைக்கலைஞன் இந்தியாவில் தோன்றியதே இல்லை என்பதை நான் உணர்ந்தேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்று சொல்ல இயலாது. அவரது படங்கள் முற்றிலுமாக கேளிக்கைப் படங்களே. ஆனால் அவற்றில் பலதையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஹைதராபாதில் நான் தங்கியிருந்த ஃபெரோஸ் குடா எனும் இடத்தில் விமானப்படையினரின் திறந்தவெளித் திரை அரங்கு ஒன்று இருந்தது. அங்கு அவரது படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. தீஸ்ரி மன்ஸில் படத்தை மட்டுமே பத்து முறையாவது நான் பார்த்திருப்பேன், அதில் வரும் ஒன்றை விட ஒன்று சிறந்த பாடல்களுக்காக, அப்பாடல் காட்சிகளுக்காக.

வண்ணப்படங்களில் பிறநடிகர்கள் யாருமே பயன்படுத்துவதற்கு தைரியப்படாத மிகையான வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள ஆடைகள், பாதணிகள், தலைக்கு ஒருவகையிலும் பொருந்தாத அபத்தமான தொப்பிகள் போன்றவை அணிவதில் ஷம்மி கபூர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவரது ரசிகர்களுக்கு அவை அபத்தங்களாக ஒருபோதும் தென்படவுமில்லை. ஏன் என்றால் அதுதான் ஷம்மி கபூர் தனக்காக வடிவமைத்த திரை பிம்பம். கலகமும் கிளர்ச்சியும்தான் அந்த பிம்பத்தின் அடிப்படைகள்!

இந்திய சினிமாவின் எக்காலத்துக்குமுரிய கலகக்கார நாயகன்தான் ஷம்மி கபூர். சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளுக்கு பின்னரும் இந்தியாவில் நிலவிய முன்னேற்றமின்மை கொண்டுவந்த சமூகப்பிரச்சினைகளுக்கும் அதையொட்டிய இளைஞர்களின் கோபத்துக்கும் அக்காலத்து பதின்பருவத்தினரின் அடக்கப்பட்ட காதல் ஏக்கங்களுக்கும் ஒரு வடிகாலாக அமைந்தது ஷம்மி கபூரின் கலகக்காரனும் கிளர்ச்சிக்காரனுமான திரைநாயகனின் பிம்பம். யாஹூ. . டாலி ஹோ. . ஸூக்கூ..ஸூக்கூ. . என்றெல்லாமான விசித்திர வார்த்தைகளில் கோஷமிட்டுக்கொண்டு திரையில் அவர் வெளிப்படுத்திய பித்தும் சுறுசுறுப்பும் இளைஞர்களை உன்மத்தர்களாக்கியது. அவரது பாத்திரங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப காதலிகளை வெல்பவர்கள். அவரது படங்கள் எப்போதுமே சந்தோஷமாக முடிபவை. ஒரு பதின்பருவத்தினனுக்கு ஆனந்தமடைய வேறு என்ன வேண்டும்?

வேறு எந்த நடிகனிடமும் காணக்கிடைக்காத அளவுகளை மீறும் சுறுசுறுப்பு தான் ஷம்மியின் தனித்தன்மை. இளமையின் துள்ளல், தன்னையே ஒரு மாபெரும் காட்சிப்பொருளாக்குதல் போன்றவற்றின் வழியாகத்தான் தனக்கேயுரிய தனித்துவமான இடத்தை ஷம்மி கபூர் இந்தியத்திரையில் உருவாக்கினார். அவரைப்போல் சுறுசுறுப்பாகவும் உயிர்த் துடிப்புடனும் காட்சிகளின் ஒவ்வொரு சட்டவடிவத்திலும் தோன்ற யாராலேயும் முடியாது என்று அவரது அதி தீவிர ரசிகர்களும் இன்றைய உச்சநட்சத்திரங்களுமான ஆமீர் கான், சல்மான் கான், ரண்பீர் கபூர் போன்றவர்கள் ஒரே குரலில் சொல்கிறார்கள்.

ஷம்மி கபூரைப் பார்க்க அம்சமாக இல்லை என்று சொன்னதற்கு ஹைதராபாதிலிருந்த எனது வடநாட்டுத் தோழி ஒருத்தி என்னைப் போட்டு அடிக்காத குறைதான்! அவரைத் திரையில் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதே சுவை மிகுந்த அனுபவம் என்றாள் அவள். ஒருமுறை அவளை பிரேம் நஸீரின் புகைப்படத்தைக் காண்பித்தபோது அது ஒரு வகையான பெண்ணழகு என்று என் அழகுணர்வையே அவள் எளனம் செய்தாள்! ஹிந்தித்திரை ரசிகர்களில் பலருக்கும் ஷம்மி கபூர் ஒரு ஆணழகரே என்ற கருத்துதான் இருக்கிறது. இன்றும் ஷம்மி கபூரை ஒரு அழகனாக ஏற்றுக்கொள்ள என்னால் முடிவதில்லை என்றபோதிலும் ஏறத்தாழ 120 படங்களில் நடித்த அவரது அனைத்துப் படங்களிலுமே அருமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பதையும் அவரது பாடல் காட்சிகள் அசாத்தியமான படைப்பூக்கமும் அழகும் ஒருங்கே இணைந்து, தேய்வழக்குகளைத் தவிர்த்தவை என்பதையும் மறுக்க இயலாது.

சரி! பாடல்கள் என்பது இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் சேர்ந்து உருவாக்கும் படைப்புகள்தானே? பாடல் காட்சிகளை இயக்குநரும் நடன இயக்குநரும் சேர்ந்தே உருவாக்குகிறார்கள். இதில் நடிகனுக்கு என்ன வேலை? ஒன்றை இசையா வசையா என்றுகூட அடையாளம் காணத்தெரியாத, குளியலறைகளில் கூட பாடிப் பழக்கமில்லாத நம் நடிகர்கள் தங்களது படங்களில் வலிந்து பாடி, அக்காட்சிகளில் தூங்கித் தூங்கி நடிக்கும் அவலத்தை நாம் தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! இங்குதான் பிறநடிகர்களுக்கும் ஷம்மி கபூருக்குமான தூரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஷம்மி கபூர் அளவுக்கு அசாத்தியமான இசை உணர்வுகொண்ட ஒரு உச்ச நட்சத்திர நடிகனை இந்தியா பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த பாடகர். சின்ன வயதில் ஹிந்துஸ்தானி இசையை முறையாகப் பயின்றவர். இந்திய இசை வடிவங்களான கயால், கஸல், தாத்ரா, தும்ரி, பஹாடி துன், பஜன், கவாலி போன்றவற்றில் ஆர்வமும் தேர்ச்சியும் இருந்தவர். அத்துடன் மேற்கத்திய செவ்வியல் செவ்வியல் இசை, ஜாஸ் இசை, அமேரிக பாப் இசை, ராக் அண்ட் ரோல் இசை போன்றவற்றையெல்லாம் இடைவிடாமல் கேட்டும் ஆராய்ந்தும் வந்தவர். பாட மிகக் கடினமான கஸல்களையும் கவாலிகளையும் அவர் பாடுவதைக் கேட்டு, தான் வாய்பிளந்து நின்றுபோனதாகப் பிரபல பாடகர் அபிஜித் சொல்லியிருக்கிறார். எல்லா வகையான பாடல்களையும் எளிதில் பாடும் வல்லமை படைத்த அரிய பாடகர் ஷம்மி கபூர் என்று லதா மங்கேஷ்கரே சொல்லியிருக்கிறார்.

தனது திரை வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் தனது ஓரிரு பாடல்களை அவரே பாடியுமிருக்கிறார். ஆனால் தன்னை விட சிறந்த பாடகர்கள்தான் தனக்காகப் பாடவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். வித்தியாசமான ஒரு நடிகனாக உருமாற தனது முன்மாதிரியாக அவர் தேர்ந்தெடுத்ததும் எந்த ஒரு நடிகனையுமல்ல. ஒரு பாடகனைத்தான். ராக் அண்ட் ரோல் இசையின் உலக அரசர் எல்விஸ் ப்ரிஸ்லியை. எல்விஸின் மேடைத்தோற்றத்தின் இந்திய வடிவமாக மாறத்தான் ஷம்மி கபூர் எப்போதுமே முயன்றார்.

தனது படங்களின் இசை மற்றும் வரிகளின் உருவாக்கத்தில் ஷம்மி கபூர் முழுமையாகப் பங்குபெற்றிருக்கிறார். மெட்டுக்களையும் வரிகளையும் அவரே தேர்ந்தெடுப்பார். அவரது நிரந்தரக் குரலாக மாறிய மொஹம்மத் ரஃபி கூட ஷம்மி கபூரின் ஆலோசனைகளைக் கணக்கில் கொண்டுதான் அவரது பாடல்களைப் பாடினார். ஷம்மி கபூருக்காக ஒரு தனிப்பட்ட பாடும்முறையையே ரஃபி வளர்த்தெடுத்தார். ஆதலால்தான் மொஹம்மத் ரஃபியின் ஷம்மி கபூர் பாடல்கள் ஒரு தனி கலைப்பிரிவாகவே இந்தியத் திரை இசையில் கருதப்படுகிறது. அவற்றில் வேகமாகவும் மெதுவாகவும் நகரும் நடனப்பாடல்கள், மனதை உருக்கும் மெல்லிசை கொண்ட காதல் பாடல்கள், சோகப்பாடல்கள் போன்றவை எல்லாமே இருக்கிறது.

பாடல் பதிவின்போதே அக்காட்சியில் வரவேண்டிய தனது நடிப்பையும் நடனத்தையும் ஷம்மி கபூர் மனதில் திட்டமிடுவார். இசையிலும் பாடும்முறையிலும் அதற்கான சாத்தியங்களைப் பொருத்துவார். இதற்கெல்லாம் சம்மதித்து ஒத்துழைக்கக் கூடிய இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள்தான் அவரது படங்களில் பணியாற்ற முடியும். ஆனால் ஆச்சரியமாக அக்காலத்தின் மிகமுக்கியமான இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும்தான் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள்!

சங்கர் ஜெய்கிஷன் இரட்டையர் தான் ஷம்மி கபூரின் ஆஸ்தான இசையமைப்பாளர்கள். அதிலும் ஜெய்கிஷண் அவரது உயிர்த் தோழர். இருந்தும் ஓ.பி. நய்யார், எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், சலீல் சௌதரி, சர்தார் மல்லிக், ரோஷன், குலாம் மொஹம்மத், மதன்மோகன், கய்யாம், ரவி, லட்சுமிகாந்த் ப்யாரேலால், கல்யாண்ஜி ஆனந்த்ஜி, பப்பி லஹரி போன்ற இசையமைப்பாளர்களெல்லாம் ஷம்மி கபூருடன் பணியாற்றியிருக்கிறார்கள். உஷா கன்னா என்கிற பெண் இசையமைப்பாளரை தில் தேக்கே தேக்கோ வழியாக அறிமுகப்படுத்தியுமிருக்கிறார். ஏறத்தாழ ஷம்மியின் பெரும் புகழ்பெற்ற பாடல்கள் அனைத்துமே பாடியவர் மொஹ்ம்மத் ரஃபி. அவர் இறந்தபோது யுஎன் குரல் போய்விட்டது. இனிமேல் என் படங்களில் பாடல்கள் எதற்குஎன்று அழுதவர் ஷம்மி கபூர். மன்னா டே, தலத் மெஹ்மூத், முகேஷ், மஹேந்திர கபூர் போன்றவர்களும் ஷம்மிக்காக அவ்வப்போது பாடியிருக்கிறார்கள். கிஷோர் குமார் கூட தனது கடைசிக்காலத்தில் அவருக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

தீவானா ஹுவா பாதல், ஹெ துனியா உஸீ கீ , கிஸீ ன கிஸீ ஸே (கஷ்மீர் கி கலி), தில் கே ஜரோக்கோன் மே, மே காவூன் தும் ஸோ ஜாவோ, சக்கே பே சக்கா, ஆஜ் கல் தேரே மேரே ப்யார் கே (பிரம்மசாரி), ஆஜா ஆஜா மே ஹூன் ப்யார் தெரா, ஓ ஹஸீனா ஜுல்ஃபோன் வாலீ, தும் னெ முஜே தேக்கா, தீவானா முஜ் ஸா நஹி, ஓ மேரே ஸோனா ரே (தீஸரீ மன்ஸில்), இஸ் ரங்க் பதல்தீ துனியா மே, தும் னே கிஸீ கி ஜான் கோ, ஜானே வாலோன் ஜரா ஹோஷியார் (ராஜ்குமார்), பார் பார் தேக்கோ (சைனா டௌண்), எஹ்ஸான் தெரா ஹோகா முஜ் பர், யாஹூ, ஸூக்கூ ஸூக்கூ (ஜங்க்லீ) , ஜவனியா யெ மஸ்த் பின் பியே, சுப்னே வாலே ஸாம்னே ஆ, ஸர் பர் டோபி லால், தும் ஸா நஹி தேக்கா (தும் ஸா நஹி தேக்கா) , தில் தேகே தேக்கோ (தில் தேகே தேக்கோ), ஏ குல்பதன், குலீ பலக் மே, ஆவாஸ் தே கர் (ப்ரொஃபெசர்), ஜூம்தா மோஸம் மஸ்த் மஹீனா (உஜாலா), லால் சடீ மைதான் கடீ, தும் ஸே அச்சா கோன் ஹே, மேரி மொஹப்பத் ஜவான் ரஹேகீ, பத் தமீஸ் கஹோ (ஜான்வர்), ஸவேரே வாலீ காடீ ஸே (லாட் ஸாஹேப்) , அகேலே அகேலே கஹான் ஜா ரஹே ஹோ, ஆஸ்மான் ஸே ஆயா ஃபரிஷ்தா, ராத் கே ஹம்ஸஃபர், ஆன் ஈவ்னிங் இன் பாரீஸ் (ஆன் ஈவ்னிங் இன் பாரீஸ்) , கிஸ். . கிஸ் கோ ப்யார், ஜனம் ஜனம் கா ஸாத் ஹே (தும் ஸே அச்சா கோன் ஹே) போன்ற எண்ணற்ற ஷம்மி கபூர் பாடல்கள் என்றென்றும் பசுமையானவை, நவீனமானவை.

பாடல் காட்சிகளில் ஸாக்ஸஃபோன், பியானோ, டிரம், பேக் பைப் போன்ற இசைக்கருவிகள் இசைப்பதாக நடிக்கும்போது அந்த ஸ்வரங்களை இசைக்கும் விதம் சரியாகக் கற்றுக்கொண்டு அதைக் கச்சிதமாக நடிப்பார். பாடல் படமாக்கப்படும்போது தனது அசைவுகளைத் தானே இயக்குவார். அவருக்கு நடன இயக்குனர் தேவையே இல்லை. குழு நடனங்களில் அவரது அசைவுகள் ஒருபோதும் அந்தக் குழுவின் அசைவுகளாக இருக்காது. கதாநாயகியுடன் ஆடும்போதும் ஷம்மியின் அசைவுகள் வேறுமாதிரிதான் இருக்கும். தாளக்கட்டுக்கு உட்பட்டு கச்சிதமாக கதாநாயகியும் குழுவும் ஆடும்போது ஷம்மி மட்டும் தனது உடல்மொழியில் கவனம்கொள்வார். கால்களை விட தலை, கண்கள், உதடு, உடலின் மேற்பகுதி, கைகள் போன்றவற்றின் அசைவுகள்தான் தன் நடனத்திற்கு அவர் அதிகமாகப் பயன்படுத்துவார்.

அவரது காதல் பாடல்களில் அவர் யாஹூ. . . என்ற அதி உச்சஸ்தாயி முழக்கத்துடன் பனிமலையில் இருந்து குதித்து வருவார். குளியலறை உடையில் சிறு விமானத்திலிருந்து தொங்கி காதலியிடம் காதல் வெளிப்படுத்துவார். பியானோவைக் கால்களால் வாசிப்பார். வழக்கத்துக்கு மாறான எதை வேண்டுமானாலும் செய்வார். சண்டைக் காட்சிகளில் நடிகர்கள் காயமடைவதையும் சிலர் இறந்தே போவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் காதல்பாடல் காட்சிப்பதிவின்போது எண்ணற்ற ஆபத்துகளைச் சந்தித்த உலகத்தின் ஒரே நடிகர் ஷம்மி கபூராகத்தான் இருக்கமுடியும்! யுபடப்பிடிப்புகளுக்கிடையில் நொறுங்கப்படாத ஒரு எலும்போ காயப்படாத ஒரு உறுப்போ என் உடலில் இல்லை. இரண்டுகால்களிலும் நொறுங்கிப்போன எலும்புகளை வைத்துக்கொண்டு பலமுறை நான் நடனமாடியிருக்கிறேன். ஆனால் கடும் வலிகளைத் தாங்கவும் திரையில் அதை மறைக்கவும் என்னால் முடிந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். ஷம்மி கபூரின் வெற்றியும் புகழும் உச்சநட்சத்திர அந்தஸ்துமெல்லாம் கடும் வலிகளினூடாக ரத்தம் சிந்தி அவர் அடைந்தவை.

ஐந்து தலைமுறைகளாக இந்தியத் திரையில் ஆதிக்கம் செலுத்திவரும் கபூர் குடும்ப அமைப்பின் பிதாமகரான ப்ரித்விராஜ் கபூரின் இரண்டாவது மகனாக 1931ல் பம்பாயில் பிறந்தவர் ஷம்மி கபூர் எனும் ஷம்ஷேர் கபூர். ராஜ் கபூர் அவரது அண்ணன். சசி கபூர் தம்பி. படிப்பில் பெரிதாய் நாட்டமில்லாமலிருந்த ஷம்மி பதினொன்றாம் வகுப்போடு அதை நிறுத்திவிட்டு அப்பா ப்ரித்விராஜ் கபூர் வைத்திருந்த ப்ரித்வி தியேட்டர்ஸ் எனும் நடமாடும் நாடகக் கம்பெனியில் நடிகரானார். அதற்குள் ஒரு திரை நட்சத்திரமாக மாறியிருந்த அண்ணன் ராஜ் கபூரின் பாதையைப் பின்பற்றி 1952ல் திரையுலகில் ஒரு கதாநாயகனாக நுழைந்தார். படம் ஜீவன் ஜோதி. ராஜ் கபூர் பாணியிலான குடும்பக் கதைப்படம். இசை எஸ்.டி. பர்மன். படம் பெரும் தோல்வி.

தொடர்ந்துவந்த ஆறு ஆண்டுகளில் சுரையா, மதுபாலா, நூதன், ஷ்யாமா, நளினி ஜெய்வந்த், கீதா பாலி போன்ற அக்காலத்து முன்னணி நடிகைகளைக் கதாநாயகிகளாக வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்தார் ஷம்மி. குடும்பம், சமூகம், அரசியல், புராணம், மரபு, அராபியம் போன்ற பல வகையறா கதைகளையும் செய்து பார்த்தார். இசை அமைப்பாளர்களை மாற்றிமாற்றிப் போட்டுப் பார்த்தார். ஆனால் எந்தப் படமுமே ஓடவில்லை. ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த் போன்றவர்களின் ஆட்சிக்காலம் அது. மற்றுமொரு ராஜ் கபூர் ஆக ஷம்மி கபூர் வீணாக முயற்சிக்கிறார் என்கிற கெட்ட பெயர் மட்டும்தான் மிஞ்சியது. சர்தார் மல்லிக்கின் இசையமைப்பில் வந்த தோக்கர் (1953 ), சலில் சௌதரியின் இசையில் வந்த டாங்கேவாலி (1955) போன்றவை அவற்றின் பாடல்களுக்காக பேசப்பட்டதென்பதும் பெரும்பாலான படங்கள் மிக்குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை என்பதும் தான் இக்காலகட்டத்தில் அவருக்கிருந்த சிறு ஆசுவாசம்.

அக்காலகட்டத்தின் பிரபல நடிகைகளில் ஒருவரான கீதா பாலியைக் காதலித்தார் ஷம்மி. ஏழ்மை மிகுந்த குடும்பத்திலிருந்து பல கஷ்டங்களினூடாக திரை நடிகையான கீதா பாலி ஏற்கனவே தனது அப்பாவுடனும் அண்ணனுடனும் நடித்தவர் என்பதனால் வரக்கூடிய குடும்ப எதிர்ப்புக்கு பயந்து கீதாவை திருட்டு திருமணம் செய்துகொண்டார். அப்போது கீதா பாலி ஒரு உச்ச நட்சத்திரம். ஷம்மி ஒரு தோல்வி நாயகன். முதல் குழந்தை பிறந்த பின் கீதா பாலி நடிப்பை முற்றிலுமாக விட்டுவிட்டு ஷம்மியின் நடிப்புத் தொழிலை வடிவமைக்க ஆரம்பித்தார். பாடல்களின் தேர்வில் மிகுந்த கவனம், நடனத்திலும் நடிப்பிலும் எல்விஸ் ப்ரிஸ்லியின் அசைவுகளை நகலெடுப்பு, ஒரு தனிப்பட்ட நாயக பிம்பத்தைக் கட்டமைத்தல், பிரபல நடிகைகளை முற்றிலுமாகத் தவிர்த்து, பேரழகிகளான அறிமுக நடிகைகளைக் கதாநாயகிகள் ஆக்குதல் போன்றவற்றை இக்காலகட்டத்தில் தான் அவர் ஆரம்பித்தார். அது பலனளித்தது. 1957ல் வந்த தும் ஸா நஹி தேக்கா ஒரு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

அங்கிருந்து ஷம்மியின் திரைவாழ்க்கை வெற்றிகளிலிருந்து வெற்றிகளுக்குக் குதித்தது. உஜாலா, சிங்கப்பூர், ப்ரீத் நா ஜானே ரீத்... 1961ல் அவரது முதல் வண்ணப் படமான ஜங்க்லீ வெளியானது. அதனூடாக யாஹூ..என்கிற முழக்கத்துடன் தனக்காக தானே உருவாக்கியெடுத்த அதிஉச்ச நட்சத்திரத்தின் சிம்மாசனத்தில் தானாகவே ஏறி அமர்ந்தார் ஷம்மி கபூர். அதே ஆண்டில் அவருக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. சைனா டௌண், ராத் கே ராஹீ, தில் தேரா தீவானா, ப்யார் கியா தோ டர்னா க்யா, கஷ்மீர் கி கலி, ப்ளஃப் மாஸ்டர், ஜான்வர், ராஜ்குமார். . . வெற்றிகள் தொடர்கதையாகி விட்டன. சைரா பானு, ஷர்மிளா தாகூர், அமீதா, ஆஷா பரேக் போன்ற பிற்கால உச்சநட்சத்திர நாயகிகள் ஷம்மியின் இந்தப் படங்கள் வழியாக அறிமுகமானவர்கள். 1965ல் தீஸரீ மன்ஸிலின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று கீதா பாலி வைசூரி வந்து இறந்துபோனார்.

தன் அன்பு மனைவியின் இழப்பைத் தாங்க முடியாமல் பல மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வராமலேயே கழித்தார் ஷம்மி. கடைசியில் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு பாதியில் நின்றுபோன தீஸரீ மன்ஸிலை மட்டும் முடித்து திரை உலகை விட்டு விலகலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் அப்படம் அவரது திரை வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பத் தமீஸ், ஆன் ஈவ்னிங் இன் பாரீஸ், தும் ஸெ அச்சா கோன் ஹே, ஜவான் மொஹபத், பக்லா கஹின் கா, அந்தாஸ், பிரம்மச்சாரி...எல்லாமே வெற்றிகள். 1968ன் சிறந்த நடிகனுக்கான ஃபிலிம்பேர் விருது பிரம்மச்சாரிக்காக அவருக்குக் கிடைத்தது. இக்காலத்தில் பாவ்நகர் ராஜவம்சத்தைச் சேர்ந்த நீலா தேவியை அவர் திருமணம் செய்துகொண்டார். ஷம்மி கபூர் மற்றும் கீதா பாலியின் தீவிர ரசிகையாக இருந்த நீலா தேவி அவர்களது குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து வளர்த்தார். அதற்காக உயிரியல் ரீதியான குழந்தைகள் தனக்கு வேண்டாமென்றே முடிவெடுத்தார்.

படப்பிடிப்புகளில் ஏர்ப்பட்ட விபத்துக்களுக்கான மருந்து மாத்திரைகள், வலி நிவாரணிகள், வலி நிவாரணிகள், குடிப்பழக்கம் போண்றவற்றினால் ஷம்மியின் உடம்பில் அளவுக்கு அதிகமாக எடையேற ஆரம்பித்தது. எதைச் செய்தும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கதாநாயக வேடங்களில் நடிக்க இனிமேல் அவரால் முடியாது என்கிற நிலைமை வந்தது. அன்றிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார். முன்பு தன் காதலிகளாக நடித்த நடிகைகளின் அப்பாவாகவும் தன்னை விட அதிகமான வயதுள்ள நடிகர்களின் அண்ணனாkaகவெல்லாம் நடித்தார். 1982ன் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார். 1995ல் அவரது வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார். கடைசி வரை அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். ஜீ தொலைக்காட்சியில் ஓராண்டுக்குமேல் வந்து பெரும் வெற்றி பெற்ற சட்டான் என்கிற தொடரில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார். இரண்டு தோல்வியடைந்த படங்களை இயக்கினார். ஒரு தோல்வியடைந்த சினிமா இதழையும் சிலகாலம் நடத்தினார்.

அவர் உருவாக்கிய யாஹூ என்கிற வார்த்தையைப் பேராகக் கொண்டதுதான் யாஹூ மின்னஞ்சல் இணையத்தளம்! இந்தியாவில் கணினியும் இணையமும் வர ஆரம்பித்த காலத்திலிருந்தே அவற்றில் மிகுந்த கவனம் செலுத்திய ஷம்மி கபூர் இந்திய இணைய பயனாளர்கள் சங்கத்தின் தலைவராக இருபதாண்டுகள் பணியாற்றினார். இணையத்தளங்களை வடிவமைப்பதும் இணையத்தில் தேடுவதும்தான் தனக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்குகள் என்று சொல்லியிருக்கிறார். புத்தகம் படிப்பதிலும் நாட்டமிருந்த அவர் ஒருமுறை அயன் ரான்டின் அட்லஸ் ஷ்ரக்ட் எனும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலைக் கீழே வைக்காமல் 42 மணிநேரம் தொடர்ந்து வாசித்து முடித்த சாகசக்காரரும் கூட!

இந்தியாவில் கிடைக்காத வெளிநாட்டு சொகுசு மற்றும் விளையாட்டு கார்களை விரும்பிய ஷம்மி கபூர் பலமணிநேரம் தொடர்ச்சியாக கார்களை ஓட்டுவதில் பிரியம் வைத்திருந்தவர். அதேசமயம் சைக்கிள் ரிக்ஷாக்களில் பயணிக்கவும் தயங்காதவர் அவர். எந்த ஒரு தோரணையும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையுடனும் நேர்மையுடனும் பழகியவர் ஷம்மி கபூர். ரசிகர்களை ஒரு தொல்லையாக ஒருபோதும் நினைக்காமல் அவர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் ஆனந்தம் கண்டவர். திரைக்கு வெளியே துளிகூட நடிக்காதவர். வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர்.

தனது மனைவியின்மேல் உயிரே வைத்திருந்தபோதிலும் எண்ணற்ற இந்திய, வெளிநாட்டுத் தோழிகளைக் கொண்டிருந்தவர் அவர். காதல், காமம், அன்பு, நட்பு என்பவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட மனித உணர்ச்சிகள் என்பதுதான் இவ்விஷயத்தில் அவரது கருத்தாக இருந்தது. மதுவை விரும்பியவர். ஸ்காட்லாந்து நாட்டு விஸ்கியை விரும்பிக் குடிப்பார். சுவையறிந்து குடிப்பதையும் திருப்தியாக சாப்பிடுவதையும் ஒரு கொண்டாட்டமாக்கியவர் ஷம்மி கபூர்.

2001ல் தனது எழுபதாவது வயதில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. முதலில் மாதம் இரு முறை பண்ணவேண்டியிருந்த டயாலிஸிஸ் கடைசியில் வாரம் மூன்று முறை என்றாகியபோதும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை அவர் விட்டுக்கொடுக்கவேயில்லை. கடந்த பல ஆண்டுகளாக வாரம் மூன்றுநாள் மருத்துவமனையில்தான் அவர் வாழ்ந்து வந்தார். அப்போதும் வாரத்தில் நான்கு நாள் வாழ்க்கையை அனுபவிக்க மீதமிருக்கிறதே என்றுதான் அவர் சொன்னார். இந்த மனப்பாங்கை தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் ஷம்மி கபூர். கார் பயணங்கள், இணையத்தளங்கள், யூ டியூபில் தனது சொந்த சேனல் என சுறுசுறுப்பாகவே வாழ்ந்து வந்தார். போன ஆகஸ்ட் 7ல் மிகமோசமான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷம்மி கபூர் ஏழு நாட்கள் போராடிய பின் ஆகஸ்ட் 14 அதிகாலையில் இறந்துபோனார். கீதா பாலியை அவர் திருட்டுத் திருமணம் செய்துகொண்ட கோவிலின் பக்கத்திலுள்ள பன்கங்கா மயானத்தில் இந்திய சுதந்திர தினத்தன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்த இந்திய ஜனாதிபதியும் பிரதமரும் தமிழக முதலமைச்சரும் தங்களை ஷம்மி கபூர் ரசிகர்கள் என்றே சொன்னார்கள். தனது தோல்விகளையும் வலிகளையும் கூட கொண்டாட்டமாக்கி எழுபத்தியொன்பது ஆண்டுகள் வண்ணமயமாக வாழ்ந்த ஷம்மி கபூர் கடைசியில் கடந்தகாலங்களின் கறுப்பு வெள்ளைப்படமாக மாறினார். எனது நினைவுகளின் ஜன்னல் வழியாக சிறுபுன்னகையுடன் அவர் அசைந்து பாடுகிறார்...

என்னை ஒருபோதும் மறக்க இயலாது உன்னால்

எனது பாடலைக் கேட்கும்போது

என்னுடன் பாடாமல் இருக்கவும் முடியாது உன்னால்...