2008 ஃபெப்ருவரி 21 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் மலையாள திரையிசையைப்பற்றி வழங்கிய உரையின் தமிழாக்கம்.
கேரள- தமிழ்நாட்டு எல்லையில் நான் பிறந்து வளர்ந்த கட்டப்பன என்ற ஊர் உள்ளது. மலையாளத்துக்கு அப்பால் நான் அறிந்த அடுத்த மொழியும் தமிழ்தான். எங்களது ஊரில் தமிழ்ப்பாடல்களும் மலையாளப்பாடல்களும் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருக்கும். சமயங்களில் இரு மொழிப்பாடல்களும் சேர்ந்து ஒலித்து ஒரு மூன்றாவது மொழியாக மாறி விசித்திரமான அனுபவத்தை அளிப்பதுமுண்டு. கடந்தகால ஏக்கங்களும் மெல்லிய துயரங்களும் கொண்டவையாக மலையாளப்பாடல்கள் இருக்கையில், இளமையின் துள்ளலும் நாட்டுப்புற இசையின் வேகமும் கொண்டவையாக இருந்தன தமிழ்ப்பாடல்கள். எதையும் கொண்டாட்டமாக ஆக்கும் தாளத்தால் ஆன அந்தத் தமிழ் பாடல்கள் இளமையில் எங்களுக்கு தேவையாக இருந்தன.
மகிழ்ச்சிகளைக்கூட மெல்லிய சோகம் இழையோடப் பாடுவது மலையாளப்பாட்டின் இயல்பு. ஆனால் துயரம் உள்ளடங்கிய பீலு என்ற ராகத்தில்கூட 'என்னடி ராக்கம்மா' என்ற குத்துப்பாட்டை உருவாக்கும் மனநிலையே தமிழின் சிறப்பு. பிற்பாடு பலவகையான இசைமுறைமைகளுக்கு அறிமுகமாகி எண்ணற்ற, விதவிதமான பாடல்களைக் கேட்ட பிறகும்கூட இந்த இரு இசைப்பண்பாடுகளின் செல்வாக்கு என்னிடம் இருந்தபடியேதான் இருக்கிறது.
மகிழ்ச்சிகளைக்கூட மெல்லிய சோகம் இழையோடப் பாடுவது மலையாளப்பாட்டின் இயல்பு. ஆனால் துயரம் உள்ளடங்கிய பீலு என்ற ராகத்தில்கூட 'என்னடி ராக்கம்மா' என்ற குத்துப்பாட்டை உருவாக்கும் மனநிலையே தமிழின் சிறப்பு. பிற்பாடு பலவகையான இசைமுறைமைகளுக்கு அறிமுகமாகி எண்ணற்ற, விதவிதமான பாடல்களைக் கேட்ட பிறகும்கூட இந்த இரு இசைப்பண்பாடுகளின் செல்வாக்கு என்னிடம் இருந்தபடியேதான் இருக்கிறது.
கேரள திரையிசை ரசிகர்களிடம் கேரள மண்ணின் தனித்தன்மையை தன்னுள் கொண்ட மறக்கமுடியாத பத்து பாடல்களை தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் ஐந்துபாடல்களாவது பிறமொழியினரான தட்சிணாமூர்த்தி, சலில் சௌதுரி, பிரதர் லட்சுமணன், ஆர்.கெ.சேகர், எம். பி. ஸ்ரீனிவாஸன், ஷ்யாம், வித்யாசாகர் போன்றவர்கள் அமைத்தவையாக இருக்கும். மலையாளியான எம்.எஸ்.விஸ்வநாதனை தமிழ்த்திரையிசையில் இருந்து பிரிக்க முடியாது. இசையானது எல்லைகளை கடந்ததாகவும் தனக்குரிய தனி உலகம் கொண்டதாகவும் உள்ளது என்பதற்கு நம் திரையிசையே ஆதாரமாகும்.
இந்தியத் திரைப்படங்களில் இருந்து பிரித்துப்பார்க்க முடியாதவகையில் பாடல்கள் எப்போதும் உள்ளன. மௌனப்படக் காலகட்டத்தில்கூட படங்கள் ஓடும் திரைக்கு முன்னால் இசைக்குழுவினர் அமர்ந்து அக்காட்சிகளுக்கு ஏற்ப பாடல்களைப் பாடிவந்தார்கள். "நீங்கள் இதுவரை எதையும் கேட்கவில்லை" என்ற அறைகூவலுடன் 1927ல் உலக சினிமா பேச ஆரம்பித்து நான்கே வருடங்களில் இந்திய சினிமாவிலும் ஒலி வந்தது. முதல்பேசும்படமான 'ஆலம் ஆரா'வில் உரையாடல்களுடன் ஏழு பாடல்களும் இருந்தன. அதில் W.M.கான் பாடி நடித்த 'தே தே குதா கோ நாம் பர்' என்ற பாடல் முதல் இந்தியத் திரைப்பாடலாக ஆகியது.
தொடர்ந்து வெளிவந்த 'காளிதாஸ்' என்ற படத்தில் பேச்சு தமிழில் இருந்தாலும் பாடல்கள் தெலுங்கில் இருந்தன. மகாகவி காளிதாசனின் கதையைச் சொன்ன அப்படத்தில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டதும், கூடவே காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல்கள் இருந்ததும் இன்று விசித்திரமாகத் தோன்றக்கூடும். அடுத்த வருடம் வெளிவந்த 'இந்திரசபை' என்ற படத்தில் 71 பாடல்கள் இருந்தன. உரையாடல்கள் எல்லாமே பாடல்களே. ஒருவேளை உலக அளவில் அதிகமாகப் பாடல்கள் கொண்ட படமாகவே இது இருக்கக் கூடும். அதன்பின் வந்த 'ஸ்ரீகிருஷ்ணலீலா' என்ற படத்தில் 62 பாடல்கள் இருந்தன. மேடையில் புகழ்பெற்ற இசைநாடகங்களை அப்படியே படமாக்குவதன் விளைவாக இத்தகைய படங்கள் வந்தன.
திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் நல்ல குரல்வளமும் செவ்விசைப்பயிற்சியும் தான் திரைநடிப்புக்கான தகுதிகளாக கருதபப்ட்டன. ஆகவே 'பாகவதர்'களே திரையில் அதிகமும் தோன்றினர். அவர்களில் முகவசீகரமும் கொண்டவரான எம்.கெ.தியாகராஜபாகவதர் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட முதல் திரைநட்சத்திரம் என்று சொல்லலாம். அவரது 'பவளக்கொடி' என்ற படத்தில் 50 பாடல்கள் இருந்தன. அதில் இடம்பெற்ற 'கண்ணா கரிய முகில் வண்ணா' என்ற பாடல் அன்று மிகப்பிரபலமாக இருந்தது, இன்றும் கூட ஒலிக்கிறது.
இவ்வாறாக அன்றைய சினிமா என்பது பாடல்களை திரையில் காண்பதாகவே இருந்தது. இந்நிலையைக் கண்டு மனம் நொந்த J.B.H வாடியா என்பவர் எடுத்த 'நௌஜவான்' என்ற இந்திப் படத்தில் பாடல்களே இருக்கவில்லை. ஆனால் இம்முயற்சிகள் பயன் தரவில்லை. தமிழ் சினிமா உலகமானது எம்.கெ.தியாகராஜ பாகவதரின் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து' கிடந்தது! அவரது 'வதனமே ச்ந்திர பிம்பமோ', பி.யு.சின்னப்பா பாகவதரின் 'காதல் கனிரசமே', 'அன்பில் விளைந்த அமுதமே' முதலிய புகழ்பெற்ற பாடல்கள் மக்களை மயக்கி வைத்திருந்தது. இப்பாடல்கள் அன்றைய கேரளத்திலும் மிகப்புகழ்பெற்று எங்கும் ஒலித்தன.
பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த செங்கோட்டையில் பிறந்த எஸ்.ஜி.கிட்டப்பா நாடகப் பாடல்கள் வழியாக பெரும்புகழ் பெற்று சினிமா பாட ஆரம்பிக்கும் முன்னரே தன் 29 ஆவது வயதில் மறைந்தவர். அவரது 'எல்லோரையும்போலே என்னை எண்ணலாகுமோடி போடி', 'காயாத கானகத்தே' போன்ற பாடல்கள் கேரளத்திலும் இசைரசிகர்களை பித்து பிடிக்க வைத்தன. அவரது பாடல்களைக் கேட்க கேரள இசைரசிகர்களும் பாடகர்களும் வித்வான்களும் எல்லைதாண்டி தமிழகம் வந்தார்கள்.
நடிப்பவர்களுக்கு பாடகர்கள் பின்னணி பாடும் முறையானது முன்னரே தொடங்கிவிட்டிருந்தது. 'தூப் ச்சாவோம்' என்ற இந்திப் படத்தில் ஆர்.ஸி.பொராலின் இசையமைப்பில் பாருல் கோஷ் குழுவினர் பாடிய 'மே குஷ் ஹோனா சாஹூம்' என்ற பாடலே இந்தியாவின் முதல் சினிமா பின்னணிப் பாடலாகும்.
இன்று 'வித்யஸ்தனாம் ஒரு பார்பராம் பாலன்' [படம் கத பறாயும்போள்] என்ற பாடலில் வந்து நிற்கும் மலையாள சினிமா 1929ல் 'பாலன்' என்ற படம் வழியாகவே தான் பேச ஆரம்பித்தது. அன்று பிரபலமாக இருந்த தமிழ் சினிமாக்களின் பாணியில் அமைந்த இப்படத்தில் தமிழ் மெட்டுக்களின் அமைக்கப்பட்ட 23 பாடல்கள் இருந்தன. அடுத்த மலையாளப்படமான 'ஞானாம்பிக'யில் தமிழரான ஜெயராமைய்யர் இசையமைத்த பல பாடல்கள் இருந்தன. இதில் செபாஸ்டியன் குஞ்ஞு குஞ்ஞு பாகவதர் பாடிய 'கதையிது கேள்க்கான்' என்ற பாடலே மலையாளத்தின் முதல் 'ஹிட்' பாடல் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து முதல் மலையாள புராணப்படமான 'பிரஹலாதன்' வெளிவந்தது. அதில் 25 பாடல்கள் இருந்தன.
தமிழில் 400 பாடல்களுக்கு மேல் எழுதிய பாபநாசம் சிவன் இப்படத்தில் பாடி நடித்தார்.
தொடர்ந்து ஆறுவருடம் மலையாளத்தில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இக்காலகட்டத்தில்தான் தமிழில் தியாகராஜ பாகவதர் நடித்த 'சிவகவி', 'ஹரிதாஸ்', பி.யு.சின்னப்பாவின் 'ஆரியமாலா', 'ஹரிசந்திரா' முதலிய படங்கள் வெளிவந்தன. கிட்டப்பாவின் பாணியை பின்தொடர்ந்த டி.ஆர்.மகாலிங்கம் நடித்துப் பாடிய 'ஸ்ரீவள்ளி', 'நாம் இருவர்' போன்ற படங்களும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. இப்படங்களும் இவற்றில் இருந்த பாடல்களும் கேரளத்தையும் முழுமையாக ஆக்ரமித்திருந்தன என்று சொல்லலாம்.
ஐந்துவருடம் கழித்து மலையாளத்தில் வெளிவந்த 'நிர்மலா' என்ற படம் தேக்க நிலையை உடைத்தது. தமிழ் பாடல்களின் ஆதிக்கத்திலிருந்து மீள்வதற்கான முயற்சி இதில் இருந்தது. பின்னணிப்பாடகர்கள் பாடும் முறை மலையாளத்தில் இப்படம் வழியாக அறிமுகமாகியது. தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்று பாடிநடிக்கும் பிரபல நடிகர்கள் இல்லாததே மலையாளத்தின் குறை என்று கண்டுகொண்டதன் விளைவு இது.
முதல் ஞானபீடப்பரிசை பெற்ற கேரளப்பெருங்கவிஞர் ஜி.சங்கரக்குறுப்பு பாடல்களை எழுதினார். பி.எஸ்.திவாகர், இ.கெ.வாரியர் ஆகியோரின் இசையில் டி.கெ.கோவிந்தராவ், சரோஜினி ஆகியோர் பாடினர். இவர்களே கேரளத்தின் முதல் பின்னணிப்பாடகர்கள். இப்படத்தில் 'கேரளமே லோக நந்தனம்' என்ற பாடலைப்பாடிய பாலக்காட்டைச் சேர்ந்த 'பொறாயத்து லீலா' என்ற பி.லீலா அதற்கு முன்னரே தமிழில் பலபாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகியாக மாறியிருந்தார். பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலுமாக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். மலையாளத்திலிருந்து பிறமொழிகளில் பாடி வெற்றிபெற்ற முதல் பாடகி பி.லீலாதான்.
அடுத்தவருடம் தமிழ்நாட்டிலிருந்து பி.ஏ.சிதம்பரநாத் என்ற இசையமைப்பாளர் 'வெள்ளிநட்சத்திரம்' படம் வழியாக மலையாளத்திற்கு அறிமுகமானார். மறக்க முடியாத சில பாடல்களை கேரளத்திற்கு அளித்த சிதம்பரநாத் சென்ற வருடம் சென்னையில் காலமானார். அவரிடம் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. மலையாளத் திரையிசையின் கடந்த காலங்களைப்பற்றியும் தனது இசை வாழ்க்கையின் அனுபவங்களைப்பற்றியும் ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருப்பார்.
கேரளத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான தட்சிணாமூர்த்தி 'நல்ல தங்க' என்ற படம் வழியாக கேரளத்தின் முக்கியமான இசையமைப்பாளராக அறிமுகமானார். முன்பே சில தமிழ்ப் படங்களில் பாடிநடித்த வைக்கம் மணி என்பவரும் பாடகர் ஜேசுதாஸின் தந்தையான அகஸ்டின் ஜோசபும் இப்படத்தில் பாடி நடித்தனர்.
இந்தக்காலகட்டத்தில் இந்தி மற்றும் தமிழ் பாடல்களின் மெட்டுகளை அப்படியே மலையாளப்பாடல்களுக்கு அமைப்பதையே பொதுவாக இசையமைப்பாளர்கள் செய்துவந்தார்கள். பெரும்பாலும் தமிழ்மெட்டுகள் மலையாளவரிகளுடன் இருந்தன. பாடியவர்களும் தமிழ் உச்சரிப்புடனேயே பாடினர். புகழ்பெற்ற மலையாளப்படமான 'ஜீவிதநௌகா'வின் இசையமைப்பு தட்சிணாமூர்த்தி. ஆனால் பாடல்கள் அனைத்துமே இந்தி மெட்டுக்களில் அமைந்த¨வை. மந்திரிகுமாரி தமிழ்ப்படத்தில் 'வாராய் நீ வாராய்' என்ற பாடலைப்பாடிய திருச்சி லோகநாதன் 'ஜீவித நௌகா'வில் தமிழ் உச்சரிப்புடன் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட மெட்டுமாற்ற பாடல்கள் வழியாக ஞானமணி, எஸ்.என்.சாமி, டி.ஆர்.பாப்பா, பிரதர் லட்சுமணன் ஆகியோர் மலையாளத்தில் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள்.
மலையாளத்தில் அதிகமான பாடல்கள் கொண்ட படம் டி.ஆர்.பாப்பா இசையமைத்த 'தேவசுந்தரி'. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற முதல் இசையமைப்பாளர் பிரதர் லட்சுமணன்தான். இருபதுக்கு மேல் படங்களுக்கு இசையமைத்தவர் இவர். இவரது 'அஞ்சன ஸ்ரீதரா', 'ஆத்ம வித்யாலயமே', 'ஈஸ்வர சிந்தயிதொந்நே', 'சங்கீதமே ஜீவிதம்' போன்ற பல பாடல்கள் கேரளப்பண்பாட்டின் பிரிக்கமுடியாத பகுதிகளாக மாறின.
இதேசமயத்தில் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயம் தயாரான 'ஜெனோவா' என்ற படம் வழியாக பாலக்காட்டில் எலப்புள்ளி என்ற ஊரில் பிறந்து கண்ணூரில் வளர்ந்த மலையாளியான மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிலவருடங்களிலேயே அவர் தமிழ் திரையிசையின் போக்கையே மாற்றியமைத்து மெல்லிசை மன்னராக ஆனார். தமிழிலும் பிற இந்திய மொழிகளிலுமாக 1750 படங்களுக்கு இசையமைத்த விஸ்வநாதன் மலையாளத்தில் மட்டும் 60 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவற்றில் கேரளம் என்றும் மறக்காத பல பாடல்கள் உண்டு. தமிழ் திரையிசைக்கு கேரளத்தின் முக்கியமான கொடை என எம்.எஸ்.வி யைச் சொல்லலாம்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு வந்து ஏராளமான இனிய பாடல்களை அமைத்து கேரளம் மறக்க முடியாதவராக ஆனவர் எம். பி. ஸ்ரீனிவாசன். 54 மலையாளப்படங்களுக்கு அவர் இசையமைத்தார். ஐந்துமுறை கேரள அரசின் விருதைப் பெற்றார். ஜேசுதாஸை பாடகராக அறிமுகம் செய்தது அவரே. அடூர் கோபாலகிருஷ்ணனின் உலகப்புகழ்பெற்ற 'கொடியேற்றம்', 'சுயம்வரம்' முதலிய படங்களுக்கு அவரே இசையமைப்பாளர். மறக்கமுடியாத பல மலையாலப்பாடல்களுக்கு அவர் இசையமைத்தார்.
தட்சிணாமூர்த்தியின் மாணவராக கேரளத் திரைக்கு வந்த ஆ.கெ.சேகர் கேரளத்தின் என்றும் இனிய பல இன்னிசைமெட்டுகளை அமைத்தவர். இசைக்கோர்ப்பாளராக பலரிடம் அவர் பணியாற்றியிருக்கிறார். அவரது மகன் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமும் மலையாளத்தில் தான் வெளிவந்தது.
சலில் சௌதுரியின் உதவியாளராக மலையாள திரையுலகுக்கு வந்து 250 படங்களுக்குமேல் இசையமைத்த ஷ்யாம் கேரளத்தில் தேவராஜனுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த பாடல்களை ஷ்யாம் அமைத்திருக்கிறார். தமிழிலும் 'மழைதருமோ என் மேகம்' போன்ற இனிமையான பாடல்களை ஷ்யாம் தந்திருக்கிறார்.
தமிழின் முக்கியமான இசையமைப்பாளர் கெ.வி.மகாதேவன் மலையாளத்தில் 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 'காயலும் கயறும்' படத்தில் இடம்பெற்ற 'சர ராந்தல் திரி தாணு' போன்ற பாடல்கள் மலையாளிகளின் மனத்தில் இடம்பெற்றவை. மகாதேவனின் பெரும்பாலான பாடல்களுக்கு இசைகோர்ப்பாளராகப் பணியாற்றிய புகழேந்தி ஒரு மலையாளி.
சங்கர் கணேஷ், எஸ்.டி.சேகர், ரங்கநாதன் போன்ற தமிழர்களும் மலையாளத்தில் பல வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
சங்கீதராஜன் என்ற எஸ்.பி.வெங்கடேஷ் ஏராளமான ஹிட் பாடல்களை அமைத்திருக்கிறார். கங்கை அமரனும் மலையாளத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
1978ல் வந்த 'வியாமோகம்' என்ற படம் முதல் சமீபத்தில் வெளிவந்த 'வினோதயாத்ரா' வரை அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். கேரளப்பண்பாட்டை நெருங்கி அறிந்த இளையராஜாவின் பெரும்பாலான மலையாளப் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. கேரள நாட்டுப்புற இசையை நுணுக்கமாக தன் திரைப்பாடல்களில் கொண்டுவர இளையராஜாவால் முடிந்தது. தமிழைவிடவும் நுட்பமான பல இன்னிசை மெட்டுக்களை இளையராஜா மலையாளத்தில் அமைத்திருக்கிறார். கண்ணூர் ராஜன் இசையமைத்த 'பாற' என்ற மலையாளப் படத்திற்காக இளையராஜா பாடிய 'அருவிகள் ஓளம் துள்ளும்' அவர் பாடிய பாடல்களிலேயே மிக்ச்சிறந்த பாடல் என்று சொல்லலாம்.
தமிழ் பாடகிகளான எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர் மலையாளத்தில் பல பாடல்களை பாடியிருக்கிறார்கள்.தமிழ்ப்பெண்ணான மாதுரி மலையாளத்தில் தேவராஜனின் ஆஸ்தானப் பாடகியாக பல வருடங்கள் விளங்கி ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். டி.எம்.சௌந்தர ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரும் மலையாளத்தில் ஓரு சில பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
கேரளம் தமிழ் இசையமைப்பாளர்களை பிரியத்துடன் வரவேற்றது. ஆனால் கேரளத்திலிருருந்து வந்த இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் தவிர எவருமே தமிழில் அழுத்தமான பங்களிப்பை ஆற்றவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களில் கேரளப் பண்பாட்டு அடையாளம் எதுவுமே இல்லை. மலையாள இசையமைப்பாளரான ரவீந்திரன் சில பாடல்கள் வழியாக தமிழில் சிலகாலம் கவனத்தைக் கவர்ந்தார். மலையாளமெட்டை தமிழில் அமைத்த 'ஏழிசை கீதமே' புகழ்பெற்றது. கேரளத்தின் பெரும்புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவராஜன் தமிழில் சில படங்களுக்கு இசையமைத்தார். 'அந்தரங்கம்' என்ற படத்தில் கமலஹாசனை 'ஞாயிறு ஒளிமழையில்' என்ற பாடல் வழியாக பாடகராக அறிமுகம் செய்தார் என்பதைத்தவிர அவரது சாதனை என்று தமிழில் ஏதுமில்லை.
ஆனால் மலையாளிகளான பாடகர்களும் பாடகிகளும் தமிழில் பெரும் வெற்றியைப்பெற்றிருக்கிறார்கள். பி.லீலாவுக்குப்பின்னர் ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், சித்ரா, சுஜாதா, உண்ணி மேனன், உண்ணிகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழில் தங்கள் இடத்தை அழுத்தமாக நிறுவியவர்கள். இப்போது விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் வரை அந்த வரிசை நீள்கிறது.
இசைக்கு பண்பாட்டு அடையாளம் என்பது இரண்டாம்பட்சமே என்பதையே மீண்டும் மீண்டும் இசைமேதைகள் நிறுவுகிறார்கள். இசை பொதுப்பண்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப் பண்பாடு கொண்டது. ஆகவேதான் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக்கு வெளியே இருந்து வருபவர்கள்கூட அங்குள்ள இசையில் சாதனைகளைச் செய்ய முடிகிறது. தமிழின் பங்களிப்பு என்பது மலையாளத்திரையிசையில் மிகச்சிறப்பான விளைவுகளை உருவாக்கியது.
ஒருகட்டத்தில் மலையாளத்தில் வெவ்வேறு தனித்தன்மைகளும் இசை மனநிலைகளும் கொண்ட 25 இசையமைப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருந்தார்கள். முற்றிலும் வடகேரள நாட்டுப்புற இசையில் ஊன்றிய கெ.ராகவனின் பாடல்கள் முதல் தமிழ்நாட்டுக்காரரான இளையராஜாவின் இசை வரை மலையாள திரையிசையானது பரவிக்கிடந்தது. இதனால் பலவகையான பாடல்களும் இசையமைப்புமுறைகளும் மலையாளத்தில் நிகழ்ந்தன. அத்துடன் இன்னிசைமெட்டுகள் மேல் மலையாளிக்கு இருந்த மோகம் காரணமாகவும் அங்கே ஏராளமான நல்ல பாடல்கள் உருவாயின.
நேர்மாறாக தமிழில் எப்போதும், ஒருகட்டத்தில் ஒர் இசையமைப்பாளரே முதன்மை கொண்டவராக இருந்தார். அவரது பாணியை ஒட்டியே அன்றிருந்த பிறரும் இசையமைத்தார்கள். ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என தமிழ்த்திரையிசையின் காலகட்டங்கள் பெரும் இசையமைப்பாளர்களினால் அடையாளப்படுத்தப்படுபவை. இவர்களின் சாதனைகள் என்னவாக இருந்தாலும் இந்த இயல்பின் விளைவாக தமிழ்திரையிசையில் பன்மைத்தன்மை மலையாளத்தை விட மிகக்குறைவாகவே காணக்கிடைக்கிறது.
தமிழ்த் திரையிசை என்பது அடிப்படையில் கேளிக்கை மற்றும் கொண்டாட்ட நிலைகளையே அதிகமும் வெளிப்படுகிறது. மலையாள இசை துயரத்தையும் தனிமையையுமே அதிகம் தன்னியல்பாகக் கொண்டுள்ளது. இதற்கான பண்பாட்டு அடிப்படைகள் விரிவாக ஆராய வேண்டியவை. தமிழகத்தின் சூழலில் இருந்த வறுமை, போராட்டங்கள் போன்றவை கேரளச்சூழலில் குறைவு என்ற நிலையில் இந்த அம்சம் எப்படி ஏற்படுகிறது?
தமிழ்த்திரையிசையானது இங்குள்ள நாட்டுப்புற இசையுடன் அதிகமாக உறவு கொண்டுள்ளதும், தமிழ்திரை ரசிகர்கள் நாட்டுப்புற இசையைக் கேட்கும் மனநிலையை பொதுவாகக் கொண்டிருப்பதும் இதற்குக் காரணம் என்று ஊகிக்கலாம். நாட்டுப்புற இசையானது அதிகமும் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை சார்ந்தது தானே!
அதேபோல மலையாள இசையில் ஓங்கியிருக்கும் இழந்தவற்றுக்கான ஏக்கம் பிரிவுத்துயர் போன்றவற்றுக்கும் விரிவான பண்பாட்டுக் காரணங்கள் இருக்கலாம். சென்ற நூற்றாண்டு முதல் மலையாளி தொடர்ந்து ஊரைவிட்டுச்சென்று வேறு இடங்களில் வேரூன்ற முயன்றபடியே இருக்கிறான். அத்துடன் தாய்வழிச் சொத்துரிமை முறையில் இருந்து தந்தைவழிச் சொத்துரிமைக்கு மாறியது, கூட்டுக்குடும்பங்களின் சிதைவு போன்ற சமூகக் காரணங்களினால் பல்வேறு வகையான உறவுச்சிக்கல்கள் கேரளத்தில் உருவாகின. இந்தியாவிலேயே தற்கொலைகளும் மனநலப் பிரச்சினைகளும் அதிகமாக நிகழும் பகுதியாக கேரளம் இருப்பதற்கும் கேரள இசையின் நீங்காத அம்சமாக இருக்கும் சோகத்திற்கும் நெருக்கமான உறவு இருக்கலாம் எனப்படுகிறது.
அப்படிப்பார்க்கும்போது தமிழ்-மலையாள திரையிசைப்பரிமாற்றம் வியப்பளிக்கும் ஓர் அம்சத்தை நமக்குக் காட்டுகிறது. தமிழரான ஆர்.கெ.சேகர் கேரளத்துக்குச் சென்று அங்குள்ள பண்பாட்டு சோகத்தை தன் இசைமூலம் வளர்த்தெடுத்தார். மலையாளியான எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கிருந்த களியாட்டப் பண்பாட்டை வளர்த்தெடுத்தார். இசையின் பண்பாட்டு அடிப்படைகள் ஏற்கனவே ஒவ்வொரு மண்ணிலும் இருந்துகொண்டிருக்கின்றன. வெவ்வேறு இசை அமைப்பு முறைகள் அங்கே சென்று அவற்றை வளர்க்கிறது.
பண்பாட்டுக்கூறுகள் விதைகளைப்போன்றவை. அவை ஒரு மண்ணின் ஆழத்தில் உறங்குகின்றன. இசை வானத்து மழைபோல வந்து அவற்றை துயிலெழுப்பி வளரச்செய்கிறது. மொழி போன்ற பல்வேறு வேலிகளால் மண் எல்லைவகுத்துப் பிரிக்கப்படலாம் ஆனால் இசை வானத்தைப்போல பிரிவற்ற ஒரு மாபெரும் வெளி.