20111110

ஷ்ரேயா கோஷால் : இந்தியாவின் வானம்பாடி

மாயாபொனொ பிஹாரிணி அமி னோய்

ஷொபொனொ ஷொஞ்சாரிணி அமி னோய்

ஷொந்தார் மேகொமாலா அமி னோய்....


மாயாவனங்களில் விகரிப்பவள் அல்ல நான்

கனவுலகங்களில் பயணிப்பவள் அல்ல நான்

அந்திமேகங்களில் வசிப்பவளும் அல்ல நான்

இசை மட்டுமே நிரம்பி வழியும் ஒரு ஜீவன் நான்

இது ஒரு வங்கமொழிப் பாடல். கடந்த பத்தாண்டுகளில் நான் கேட்டவற்றில் மிக அற்புதமான ஒரு பாடல் என்றே சொல்லுவேன். முதன்முறை கேட்கும்பொழுதே அதன் இசையும் வரிகளும் அதைப் பாடியிருக்கும் அலாதியான விதமும் நம்மை ஏதோ ஒரு கனவுலக மாயாவனத்திற்குள் கொண்டுசென்று விடுகிறது! சமகாலத்தின் முக்கிய வங்க இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜொய் சர்கார் தான் அதன் இசையமைப்பாளர். அப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான வார்த்தைப் பிரயோகங்கள் தாகூரின் ரபீந்திர சங்கீதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றிய ஒரே ஒரு உலகக் கவிஞன் தாகூர் தான் என்பதைப்போல் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் தோன்றிய மிகச்சிறந்த திரைப் பாடகி ஷ்ரேயா கோஷால். அவர் தான் அப்பாடலைப் பாடியிருக்கிறார். பெங்காளிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்த மற்றுமொரு விலைமதியாப் பரிசு இந்த அதிசயப் பாடகி.

இந்தியத் திரை இசையில் சலில் சௌதரி, எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், அனில் பிஸ்வாஸ், பப்பி லாஹிரி, இன்றைய ப்ரீதம் சக்ரவர்த்தி என பல முன்னணி இசையமைப்பாளர்கள் பெங்காளிலிருந்து வந்தவர்கள் தான். பெங்காளிலிருந்து புறப்பட்ட பாடகர்களான பங்கஜ் மல்லிக், ஹேமந்த் குமார், கிஷோர் குமார், மன்னா டே, கீதா தத் போன்ற அனைவருமே இந்தியாமுழுவதும் அறியப்பட்டவர்கள். ஆனால் அது ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் வழியாக மட்டும்தான். பெங்காலியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு பிறமொழிகளில் சுலபமாக பாடுவதென்பது பலசமயம் ஒரு சவாலாகத்தான் இருந்திருக்கிறது. மன்னா டே, பங்கஜ் மல்லிக், கீதா தத் போன்றவர்களுக்கெல்லாம் ஹிந்தியில் பாடும்போதுகூட பெங்காலி சாயலுள்ள மொழி உச்சரிப்பு இருந்திருக்கின்றன. ஆனால் ஷ்ரேயா கோஷால் பெங்காலியில் பாடும்போதும் பேசும்போதும் மட்டும்தான் ஒரு பெங்காலி!

அஸ்ஸாமியில் பாடும்போது ஷ்ரேயா ஒரு அஸஸாமியப்பாடகி, மலையாளத்தில் அவர் மலையாளப்பாடகி. தமிழர்களுக்கோ முற்றிலுமாக அவர் ஒரு தமிழ்ப் பாடகி. எந்த ஒரு மொழியிலும் சொல்லிக்கொடுப்பதை நுட்பமாகப் புரிந்துகொண்டு கச்சிதமான உச்சரிப்புடன் பாடும் வல்லமை படைத்த இத்தகைய ஒரு பாடகி இந்தியாவிலேயே இது முதன்முறை தான். ஏன் என்றால் இந்தியாவின் வானம்பாடி என்றழைக்கப்படும் மராத்தியரான லதா மங்கேஷ்கர் தமிழிலும் மலையாளத்திலுமெல்லாம் ஓரிரு பாடல்களை பாடியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அங்கு அவருக்கு பல உச்சரிப்பு பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. இவ்வாறாக லதா மங்கேஷ்கரைக் கூட எளிதாக தாண்டிச்செல்ல ஷ்ரேயா கோஷாலால் முடிந்திருக்கிறது. ஆனால் மொழி உச்சரிப்பின் இந்த தனிச் சிறப்பு ஷ்ரேயா கோஷால் என்ற பாடகியின் அசாத்தியமான பல வல்லமைகளில் ஒன்று மட்டுமே! இசையின் எந்தவொரு தளத்தில் நின்று யோசித்தாலும் மிக அரிதான ஒரு பாடகிதான் ஷ்ரேயா கோஷால் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இசையில் பூரண சுருதித் தன்மை (Perfect Pitch) அல்லது தூய சுருதித்தன்மை (Absolute Pitch) என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு பிறவியிலேயே இயற்கையாகக் கிடைக்கும் ஒரு அதிசய வல்லமை அது. எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் கனக்கச்சிதமான சுருதியுடன் பாடவும் இசைக்கவும் பூரண சுருதி உள்ளவர்களால் முடியும். பின்னணியில் தவறான சுருதி ஒலிக்கும் தருணங்களில்கூட தங்களது சுருதி சற்றும் விலகாமல் கடைப்பிடிக்கவும் அவர்களால் முடியும்! மிகக்குறைவான இசைக்கலைஞர்கள் தான் இந்த பூரண சுருதியுடன் பிறந்திருக்கிறார்கள்.

உலக இசை பிரபலங்களில் மேற்கத்திய செவ்வியல் இசைமேதைகளான மொஸார்த், பீதோவான், ஷோப்பாங், ஹான்டெல், இதிகாசப் பாடகர்களான நாட் கிங் கோல், ஃப்ராங்க் ஸினாட்ரா, ஸ்டீவி வண்டர், மைக்கேல் ஜாக்ஸன், ஜாஸ் மற்றும் ப்ளூஸ் இசைப் பாடகி எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட், சமகால பாப் பாடகி ஸெலின் டியோன், பாடகியும் நடிகையுமான ஜூலி ஆன்ட்ரூஸ் (சௌண்ட் ஆஃப் ம்யூஸிக்), கிதார் அதிசயம் ஜிமி ஹென்ட்ரிக்ஸ், இசையமைப்பாளரும் கருவியிசை அதிசயமுமான யானி போன்ற மிகக் குறைவானவர்கள் தான் பூரண சுருதியுடன் இருந்திருக்கிறார்கள். ஷ்ரேயா கோஷால் அத்தகைய ஒரு பூரண சுருதிப் பாடகி! எப்போதும் எங்கேயும் சுருதிசுத்தமாகத் தான் ஷ்ரேயா பாடுகிறார். பாடல் பதிவுகள், மேடை நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் ஒருபோதும் அவருக்கு சுருதி நடுங்குவதோ விலகுவதோ இல்லை!

புகழ்பெற்ற பல பாடகிகளின் பேசும் குரலும் பாடும் குரலும் இரண்டாகத்தான் இருக்கிறது. ஆனால் ஷ்ரேயாவின் பேசும் குரலுக்கும் பாடும் குரலுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. ஐந்து வயது குழந்தைகளிலிருந்து எண்பதுவயது முதியவர்கள் வரை எல்லா வயதினரையும் ஒரேபோல் ரசிக்க வைக்கும் ஷ்ரேயாவின் அந்த குரல் மிக இனிமையான மெல்லிய குரல். இவ்வுலகின் மிக அழகான பெண்ணினுடையது என்று ஆண்கள் கற்பனை செய்யக்கூடிய ஒரு குரல் அது. அது அவர்களது கனவில் எப்போதுமிருக்கும் ஒரு ஆசை நாயகியின் குரல். ஆனால் அதில் இயல்பாகவே காமத்தின், கவர்ச்சியின் சாயல்கள் இல்லை. ஒருவகையான நெருக்கமும் நளினமும் தான் அக்குரலின் வசீகரம்.

இத்தகைய மெல்லிய பெண்குரல்களுக்கு வழக்கமாக இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை உச்சஸ்தாயிகளில் பாடும்போது வரக்கூடிய கீரிச்சிடும் தன்மை தான். கீழ்ஸ்தாயிகளில் இத்தகைய குரல்கள் பலசமயம் தெளிவில்லாமல் ஒரு மங்கலான முழக்கமாக கேட்க நேரும். ஆனால் ஷ்ரேயாவின் குரல் உச்சஸ்தாயிகளிலும் கீழ்ஸ்தாயிகளிலும் ஒரே போல் பிரகாசிக்கிறது. கீரிச்சிடும் தன்மையோ பிசிறுகளோ தெளிவின்மையோ அக்குரலில் ஒருபோதும் தென்படுவதில்லை. பாடலின் முழு இனிமையும் அதன் அனைத்து உணர்ச்சிகளையும் எளிதாக வெளிக்கொணரக் கூடிய ஒரு அழகுக் குரல் அது.

ஷ்ரேயாவிடம் காணக்கிடைக்கும் இன்னுமொரு அதிசயம் அவரது பாடும்முறையின் நிலைப்புத் தன்மை (Consistency). சாதாரணமாக ஒரு பாடகரின் பாடும் தரத்தை பாடும்நேரத்தில் இருக்கும் அவரது உடல்நிலையும் மனநிலையும் தீர்மானிக்கக் கூடும். ஆனால் தனது பதினாங்காவது வயதிலிருந்து இன்றுவரைக்கும் ஷ்ரேயா கோஷால் பாடி நான் கேட்ட எந்தவொரு பாடலிலுமே அவரது பாடலின் தரம் குறைந்துபோனதாகத் தெரியவில்லை! ஒரு குழந்தைப் பாடகியாக தொலைகாட்சிகளில் தோன்றிவந்த காலத்திலிருந்தே இசையில் தனக்குள்ள அசாத்தியமான திறமையையும் தரத்தையும் வெளிப்படுத்தி அதை தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறார் ஷ்ரேயா கோஷால். அது ஒவ்வொரு நாளும் மெருகேறிக்கொண்டே போகிறது! இந்திய மெல்லிசைப் பாடல்களை பாடுவதில் அவரது குரலும் பாடும்முறையும் ஈடு இணையற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

தனக்கு கிடைக்கும் பாடல்கள் செவ்வியல் இசை அடிப்படையிலானதாகட்டும், கஸல் பாணியிலானதாகட்டும், மேற்கத்திய இசை அமைப்பு கொண்டதாகட்டும், நாட்டுப்புற இசை பாணியிலானதாகட்டும், எதுவுமே ஷ்ரேயாவுக்கு ஒரு சிரமமாகவே தெரியவில்லை. மெட்டை சொல்லிக்கொடுத்தவுடன் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அபாரமான திறன் அவருக்கு இருக்கிறது. வெகு சீக்கிரமாக ஒரு பாடலின் இசையையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் இத்தகைய திறன் என்பதும் மிக அரிதானது. மெட்டை உள்வாங்குவதுடன் மொழியின் சிக்கல்களையும் புரிந்து கொள்வார். எந்தமொழிப்பாடலாக இருந்தாலும் அதை ஹிந்தியில்தான் எழுதி எடுப்பார். உச்சரிப்பின் சிடுக்குகளைப் புரிந்துகொள்ள அவ்வரிகளின்மேல் ஆங்காங்கு தானே வளர்த்தெடுத்த சில குறியீடுகளை எழுதிவைப்பார். பாடல் வரிகளின் அர்த்தத்தையும் அப்பாடல் இடம்பெறும் கதைத்தருணத்தையும் கேட்டறிவார். எவ்வளவு சிக்கலான மெட்டாகயிருந்தாலும் அரைமணிநேரத்துக்குள் பாடல்பதிவுக்கு ஆயத்தமாகி விடுவார் ஷ்ரேயா. அசாத்தியமான மூச்சு கட்டுப்பாட்டுத்திறன் இருக்கும் ஷ்ரேயாவுக்கு சிக்கலான பாடல்கள் பாடுவதில் எந்த சிரமமுமில்லை! அவரது பாடும்முறை என்பது தங்குதடையில்லாமல் சீராக பிரவாகித்து ஓடும் ஒரு ஆற்றினைப் போன்றது என்று சொல்லலாம்.

குரல்வளம், கற்றுக்கொள்வதில் மிகுந்த வேகம் போன்ற உத்திகளை வெளிப்படுத்திய பிற பாடகர்களும் இந்தியாவில் இருந்திருக்கின்றனர், இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் அந்த நுணுக்கங்களையெல்லாம் விட ஒரு பாடகருக்கு மிக முக்கியமானது தனது பாடும்முறையில் இருக்கும் உணர்ச்சிவெளிப்பாட்டுத்திறன். உத்திகளை கச்சிதமாக கடைப்பிடிக்கும் பல பாடகர்களும் பாடலின் உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் தோல்வியடைந்து விடுகிறார்கள். ஆனால் ஷ்ரேயாவின் தனித்தன்மை என்பது குரல் மற்றும் பாடும்முறை உத்திகளை பூரணமாக கையாளும் நேரத்திலேயே பாடல்களின் உணர்ச்சிகளை நுட்பமாகவும் முழுமையாகவும் பாடிவெளிப்படுத்திடுவார் என்பது தான்.

பழையகாலப் பாடல்களை அளவற்று விரும்பும் என்போன்றவர்கள் அப்பாடல்களை ஒரு புதிய பாடகி அல்லது பாடகன் எப்படித்தான் பாடுகிறார் என்பதை எப்போதுமே கூர்ந்து கவனிக்கிறோம். அந்தகாலத்தின் அரிதான பல பாடல்களை ஆயிரம் முறை கேட்டாலும் கூட சிறப்பாகப் பாடுவதில் இந்த காலப் பாடகர்கள் பலசமயம் பெருந்தோல்வி அடைகிறார்கள். அதன் முக்கியமான காரணம் அந்த பாடல்களின் ஆத்மாவை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது தான். ஆனால் எனது பெரும் விருப்பத்திற்குறிய சலில் சௌதரி, மதன்மோகன் போன்றவர்களின் பல பாடல்களை அதன் அசலை விட ஒருபடி மேலே சென்று பாடும் ஒரே சமகாலப் பாடகி ஷ்ரேயா கோஷால் தான்.

சலில் சௌதரி இசையமைத்த பாடல்களை பாடுவதென்பது மிகக் கடினமானது. ஆனால் தனது பதினைந்தாவது வயதிலேயே ஸ்மரணியோ ஸுரோகார், ஷொப்னேர் பாக்கா போன்ற பெங்காளி இசைத் தொகுப்புகளுக்காக சலில் சௌதரியின் ஷுரேர் ஜர்னா, நி ச க ம ப னி, குன்குன் ஃபாகுன், லாகே தோல், ஆகாஷ் குஷும் போன்ற சிக்கலான அமைப்புகொண்ட பல பாடல்களை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வெகு சிறப்பாக பாடினார் ஷ்ரேயா. சமீபத்தில் சி. ராமாசந்திராவின் யே ஜிந்தகீ உஸீ கி ஹே (அனார்க்கலி -1953) பாடலை ஷ்ரேயா தொலைக்காட்சியில் பாடுவதைக் கேட்டு வியந்து போனேன். லதா மங்கேஷ்கர் பாடிய அப்பாடலின் அசலை விட சிறப்பாக ஷ்ரேயா கோஷால் பாடினார் எனப்பட்டது! ஆனால் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகையான ஷ்ரேயா வார்த்தைகளை முன்வைத்து பாடுவதில் லதா மங்கேஷ்கர் பாணியைத்தான் தான் கடைப்பிடிப்பதாக சொல்லியிருக்கிறார்.

சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கி, இஸ்மாயில் தர்பார் இசையமைத்த ஹிந்திப்படமான தேவ்தாஸில் ஒரே ஒரு பாடலைப்பாட 2002ல் முதன்முதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஷ்ரேயா கோஷால். ஆனால் கடைசியில் அப்படத்தில் அவர் பாடியது மொத்தம் 5 பாடல்கள்! பைரி பியா, ஸில்ஸிலா யே சாஹத் கா, டோலா ரே, மோரே பியா, சலக் சலக் போன்ற பாடல்கள் வழியாக தான் மிகவும் அசாதாரமான ஒரு பாடகி என்பதை உலகத்துக்கு திட்டவட்டமாக தெரிவித்தார் ஷ்ரேயா கோஷால். அதற்குபின் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியத் திரை இசையில் ஷ்ரேயா கோஷால் அடையாத உச்சங்களே இல்லை.

காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் மெல்லிசைப் பாடல்கள், காமச்சுவை ததும்பும் பாடல்கள், இரவு நடனப்பாடல்கள், சோகப்பாடல்கள் என எல்லாமே மிகச்சிறப்பாகப் பாடும் ஷ்ரேயாவின் புகழ்பெற்ற ஹிந்திப் பாடல்களை ஜாதூ ஹே நஷா ஹே, சலோ தும் கோ லேகர் சலேன் (ஜிஸ்ம்-2003), பஹாரா பஹாரா ஹுவா ஹே (ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்-2010), தேரீ ஓர் (ஸிங் ஈஸ் கிங் - 2008), யே இஷ்க் ஹாயே (ஜப் வீ மெட் - 2007), ஹோண்ட் ரஸீலே (வெல்கம் -2007), தேரே மஸ்த் மஸ்த் தோ நைன், தூ ஜோ பல் பர் மே (தபங்க் – 2010), ஷுக்ரான் அல்லா (குர்பான் - 2009), பியூ போலே (பரிணீதா- 2005) என அடுக்கிக்கொண்டே போகலாம். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசைப்பாணியிலான தானங்களையும் ஆலாபனைகளையும், பெங்காளியிலும் ஹிந்தியிலுமான வரிகளையும் கொண்ட அமீ ஜே தொமார் (பூல் புலய்யா - 2007) பெரும்புகழ்பெற்றதும் தரமானதுமான அவரது ஒரு பாடல். த்ரீ இடியட்ஸ் (2009) படத்தில் வந்த ஸூப் டூபி பம்பா போன்ற ஷ்ரேயாவின் நடனப் பாடல்களைக் கேட்கும்பொழுது நடனமாடுவதிலிருந்து நம் கால்களை கட்டுப்படுத்துவது கடினம்.

திரைப்பாடல்கள் மட்டுமல்லாமல் செவ்வியல் இசையின் ஆழம் கொண்ட பாடல்களையும் எளிதாக தன்னால் பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஷ்ரேயா. உதாரணமாக குர்ஜாரி தோடி ராகத்தில் அமைந்த ‘போரு பயே தோரி பாத் தகத் பியாஎனத்தொடங்கும் ஹிந்துஸ்தானி க்ருதியை மறைந்த இசை மேதை உஸ்தாத் படே குலாம் அலி கான் 1960ல் பாடி பதிவு செய்திருந்தார். அதை எடுத்து 2009ல் வெளிவந்த தனது தில்லி6 என்கிற படத்தில் பயன்படுத்தியிருந்தார் ஏ ஆர் ரஹ்மான். பழைய பதிவில் இருந்து எடுத்த உஸ்தாதின் குரலுடன் சேர்ந்து அப்பாடலை பாடியிருக்கிறார் ஷ்ரேயா. அதில்வரும் தானங்களையும் ஆலாபனைகளையும் பிரமாதமான முதிர்ச்சியுடன் பாடியிருக்கிறார். உஸ்தாத் படே குலாம் அலி கான் கூட அதைக் கேட்டால் ஷ்ரேயாவை பாராட்டுவார் என்றே நினைக்கிறேன்!

தமிழில் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ் தொடங்கி புதிதாக வரும் இசை அமைப்பாளர்கள் வரைக்கும் விருப்பப் பாடகியாக இருக்கிறார் ஷ்ரேயா கோஷால். புதியவர்கள், பழையவர்கள் என எந்த மாற்றமும் இல்லாமல் அனைவருக்காகவும் அசாத்தியமாகப் பாடவும் செய்கிறார் அவர். oஇளையராஜாவுக்காக ‘ஒன்னவிட இந்த உலகத்தில் (விருமாண்டி), எளங்காத்து வீசுதே (பிதாமகன்), எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி), காற்றில் வரும் கீதமே (ஒரு நாள் ஒரு கனவு), கொஞ்சம் கொஞ்சம் (மாயக்கண்ணாடி), குண்டுமல்லி (சொல்ல மறந்த கதை) போன்ற பாடல்களை அழகாக பாடியிருக்கும் ஷ்ரேயா ஏ ஆர் ரஹ்மானுக்காக முன்பே வா என் அன்பே வா (சில்லுன்னு ஒரு காதல்), னன்னா ரே னன்னா ரே (குரு), மன்னிப்பாயா (விண்ணைத் தாண்டி வருவாயா), காதல் அணுக்கள் (எந்திரன்), கள்வரே கள்வரே (ராவணன்) போன்ற பெரும்புகழ்பெற்ற பல பாடல்களைப் பாடியுள்ளார்.

வித்யாசாகருக்காக ஒரு நிலா ஒரு குளம் (இளைஞன்) என்கிற காதல் பாடலை இனிமையாகப் பாடும் ஷ்ரேயா ஹாரிஸ் ஜெயராஜுக்காக அண்டம்காக்கா கொண்டக்காரி போன்ற பாடல்களையும் பாடுகிறார். யுவன் ஷங்கர் ராஜாவுக்காக நினைத்து நினைத்து பார்த்தால் (7ஜி ரெயின்போ காலனி) போன்ற பாடல்களைப் பாடியுள்ள ஷ்ரேயா ஜீ வி பிரகாஷின் உருகுதே மருகுதே ( வெயில்), இம்மானின் நீயும் நானும் (மைனா) போன்றவற்றையும் பாடுகிறார். அதேசமயம் புதிதாக வந்த என் ஆர் ரஹ்நந்தனின் ஏடீ கள்ளச்சீ (தென்மேற்குப் பருவக்காற்று), லக்‌ஷ்மண் ராமலிங்காவின் என்னவோ செய்தாய் (ஏன் இப்படி மயக்கினாய்) போன்ற பாடல்களையும் அசாத்தியமான முறையில் பாடுகிறார். சமீபத்தில் நான் கேட்ட மிகச் சிறந்த ஒரு தமிழ்ப் பாடல் என்னவோ செய்தாய்.

ஒரு நேர்காணலில் ஷ்ரேயா சொன்னார் ஏ ஆர் ரஹ்மான், கன்னடத்தின் இன்றைய முன்னணி இசையமைப்பாளர் மனோ மூர்த்தி போன்றவர்கள் பாடலுக்கு ஒரு சட்டவடிவத்தை உருவாக்கி பாடகர்களுக்கு முன் வைக்கிறார்கள். அதில் பல வண்ணங்கள் நிரப்புவதற்கான சுதந்திரத்தை அவர்கள் பாடகர்களுக்கு வழங்குகிறார்கள். ஆனால் இளையராஜா அப்படி செய்வதில்லை. தனக்கு என்ன தேவை என்பதைப்பற்றி மிகுந்த தெளிவுடன் இருக்கிறார் அவர். அங்கு பாடகர்களின் பங்களிப்புகள் தேவையில்லை. ஒரு பாடலை சுருதி சுத்தமாக பாடினால் அதில் உணர்ச்சிகள் தானாக வந்துவிடும் என்பதுதான் இவ்விஷயத்தில் அவரது கருத்து.

இன்றைக்கு இந்தியாவிலேயே மெல்லிசைப் பாடல்கள் பெரும்புகழ் அடையும் ஒரே மொழி கன்னடம் தான் என்று சொல்லும் ஷ்ரேயா கன்னடத்திnன் அனைத்து சமகால இசையமைப்பாளர்களுக்கும் மிகப் பிடித்தமான பாடகி. அங்கு நூற்றுக்கணக்கான வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். தெலுங்கில் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஷ்ரேயாவுக்கு அங்கு தரிமே வரமா தடிமே ஸ்வரமா (ஏ மாய சேஸாவே- 2010) போன்ற பெரும்புகழ் பாடல்கள் ஏராளம். மலையாளத்தில் ஏறத்தாழ இருபது பாடல்களை பாடியிருக்கும் ஷ்ரேயா சிறந்த பாடகிக்கான கேரள அரசின் விருதையும் வென்றிருக்கிறார்.

இன்றைக்கு எல்லாமே வியாபாரமாக மாறிவிட்டது என்றும் எந்த ஒரு அவசரமுமில்லாமல் கலைவெளிபாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இசைக்குழுவும் பாடகர்களும் ஒரேநேரத்தில் இணைந்து பாடல் பதிவுகளை நிகழ்த்திவந்த அந்த பொற்காலத்தின் பாடகியாக தான் இருந்திருக்கவேண்டும் என மனதார விரும்புவதாகவும் ஷ்ரேயா சொல்லியிருக்கிறார். திரைத்துறையில் இது கழுத்து அறுப்பு போட்டிகளின் காலம் என்றாலும் தனக்கு இங்கே போட்டியே இல்லை என்றும் சொல்லுகிறார் ஷ்ரேயா. தனது குரலும் பாடும்முறையும் மட்டும்தான் தனது அடையாளம் என்றும் இடைவிடாத பயிற்சி மட்டும் தான் இசையில் வளர ஒரே வழி என்றும் ஆழமாக நம்புகிறார். அழகான குரல் மட்டும்தான் இயற்கையின் வரதானம். மற்ற அனைத்துமே நமது புரிதல்களினாலும் கடும் உழைப்பினாலும் உருவாக்கப்படுபவை.

இன்று ஒரு நாளைக்கு ஒரு பாடலை மட்டுமே பாட விரும்பும் ஷ்ரேயா தான் பாடவேண்டிய பாடல்கள் தனக்கே வந்து சேரும் என்றும் அவசரத்துடன் இருப்பவர்கள் அப்பாடல்களை வேறு எந்த பாடகிக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்றும் வெளிப்படையாக சொல்லுமளவுக்கு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். தன்னை பாட அழைக்கும் ஒரு பாடலின் ஒலித்தடத்தை கேட்கும்பொழுது முதலில் பாடிய பாடகி அதை வெகு சிறப்பாக பாடியிருப்பதாக தனக்கு பட்டால் மீண்டும் அதைப்பாட தான் விரும்புவதில்லை என்றும் அத்தகைய பல பாடல்களை அப்படியே வெளியிடுமாறு தான் இசையமைப்பாளர்களிடம் சொல்லியிருப்பதாகவும், பலமுறை அவ்வாறு நடந்திருப்பதாகவும் கூறுகிறார் ஷ்ரேயா கோஷால்!

ஷ்ரேயா கோஷால் பலர் கண்களுக்கு ஒரு உலக அழகி! அதேசமயம் பலருக்கும் அவர் தங்களது பக்கத்து வீட்டின் அழகுப்பெண். உலகம் முழுவதும் மேடைகளில் ஆரவாரமாக வண்ண வெளிச்சத்தில் தோன்றும்பொழுது பலகோடி பெறுமானமுள்ள ஒரு அழகுப் பொருளாக அவர் காட்சியளிக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போது ஹிந்தித் தொலைக்காட்சிகளின் யதார்த்த இசை நிகழ்சிகளில் தொடர்ந்து தோன்றி வரும் ஷ்ரேயா விளம்பரப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். திரைப்படங்களில் அவர் நடிக்கும் காலமும் தூரமில்லை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர் தொலைக்காட்சிகளில் நடனமாடிப் பாடுவதையும் விளம்பரங்களில் நடிப்பதையும் அவரது இசையின் தீவிர ரசிகர்கள் யாருமே விரும்புவதில்லை என்பது தான் உண்மை.

இசையை விட்டால் ஷ்ரேயாவின் தீவிர விருப்பம் சமையலில்தான். விதவிதமான உணவு வகைகளை ரசித்து சமைக்கும் ஷ்ரேயா தனக்கு பிடித்த உணவுகளை திருப்தியாக சாப்பிடவும் விரும்புகிறவர். பெங்காளி மீன் குழம்பும் வறுவலும் சாதத்துடன் சாப்பிடுவது தான் அவருக்கு மிகப் பிடித்தமான உணவு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் புனைகதைப் புத்தகங்களை படிப்பதும் அவருக்கு மிகவும் பிடிக்கும். சினிமாவுக்கு வெளியில் வெளியாகும் தனியார் பாடல்களையும் செவ்வியல் இசையையும் பாடவிரும்பும் ஷ்ரேயா, இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், ஒருவேளை வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கு கிடைக்கும் மதிப்பும் சன்மானமும் மிகக் குறைவு என்றும் வருத்தப்படுகிறார்.

இந்த 27 வயதிற்குள் தன் பாடல்களுக்காக 4 தேசிய விருதுகளையும் எண்ணற்ற மாநில, ஃபிலிம்பேர் மற்றும் தனியார் விருதுகளையும் வென்றிருக்கும் ஷ்ரேயா கோஷால் படிப்பாளிகளும் விஞ்ஞானிகளும் நிறைந்த ஒரு பரம்பரையிலிருந்து இசையை தனது துறையாக தேர்ந்தெடுத்த முதல் பெண்மணி. பெங்காளிnன் ஒரு சிறு பட்டணத்தில் பிறந்து ராஜஸ்தானின் ஒரு சிற்றூரில் வளர்ந்து அங்கு ஆறு வயதுமுதல் இசை முறையாக பயின்றவர். பதிமூன்றாவது வயதில் மும்பைக்கு இடம் பெயர்ந்து அங்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும்போது திரை இசையமைப்பாளர் கல்யாண்ஜியால் அடையாளம் காணப்பட்டு, திரைப்பாடல்களைப் எப்படி பாடவேண்டுமென்பதை அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர். 2002ல் தனது 16வது வயதில் ஒரு திரைப்பாடகியாக அறிமுகமானவர்.

அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் சமகாலத்தின் மற்ற எந்த ஒரு பாடகியுமே எட்டாத உச்சபட்ச தரத்துடன் இடைவிடாமல் பாடிக்கொண்டேயிருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் எளிதாகப் பாடும் வல்லமைக்காக அவரை உண்மையான முதன்முதல் இந்தியப்பாடகி என்றே சொல்லலாம். வானம் தொடும் அவரது பாடும் தரத்திற்காக அவரை இந்தியாவின் வானம்பாடி என்றும் அழைக்கலாம். இசை மட்டுமே நிரம்பி வழியும் அவரது வாழ்க்கை இசையின் மாயாவனங்களில் விகரித்து கொண்டேயிருக்கட்டும். இசையின் கனவுலகங்களில் அவர் பயணித்து கொண்டேயிருக்கட்டும். ஒருபோதும் கீழிறங்காமல் என்றைக்குமே அவர் இசையின் வான்மேகங்களில் வசித்துகொண்டேயிருக்கட்டும்.