20100813

கேணிக் கூட்டத்தில் என் உரையாடல் பற்றி தினமணி

பத்திரிகையாளர் ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இணைந்து நடத்திவரும் கேணி எனும் இலக்கிய அமைப்பின் சார்ப்பில் சென்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ், இந்திய, சர்வதேச இசை சார்ந்து எழுதிவரும் இசை விமர்சகர் ஷாஜி 'மொழியும் இசையும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது கருத்துக்களில் சிலது


"இசை என்றால் பாடல் என்று நம்மில் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பாடலுக்கு இசை தேவை. ஆனால் இசைக்கு பாடல் தேவையில்லை. பீத்தோவன், மொஸôர்ட் போன்ற கலைஞர்கள் பாடல் இல்லாத இசைக் கோலங்களைத்தான் உருவாக்கினார்கள். எனவே இசை தன்னளவிலேயே ஒரு முழுமையான கலை வடிவம்தான்.

ஒரு இசைக்கலைஞன் ஒரு இசைக் கோலத்தையோ அல்லது ஒரு பாடலுக்கான டியூனையோ உருவாக்கினாலும்கூட அந்த இசைக் கோலத்தை அல்லது டியூனை அவன் விரும்பியவாறு வெளிக்கொணர தேர்ந்த வாத்தியக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். யார் வாசித்தாலும் சிறப்பாக வரும் என்று அவன் எண்ணுவதில்லை. ஏ கிரேடு பி கிரேடு என்று இருக்கும் கலைஞர்களில் தேவையானவர்களை அவன் தேர்ந்தெடுக்கிறான்.

மற்றொரு விஷயம் எவ்வளவு காலத்தைச் செலவு செய்து ஓர் இசை உருவாக்கப்பட்டிருந்தாலும் சரி; எவ்வளவு தேர்ந்த முதல்தரமான இசைக் கலைஞர்கள் பணிபுரிந்திருந்தாலும் சரி; இசை ரசிகர்கள் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையெனில் அந்த இசை வடிவம் தோல்வியையே தழுவுகிறது.

அதே சமயத்தில் அதிக நேரமோ, உழைப்போ செலவிடாமல் சாதாரணமாக உருவாக்கப்பட்ட ஒரு இசை அல்லது பாடல் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பெரிய வெற்றியடைந்து காலம் கடந்து பேசப்படுவதாக அமைந்து விடுவதும் உண்டு.

உதாரணமாக 1962-ல் வெளிவந்த "அன்பத்' என்கிற இந்திப் படத்தில் மதன் மோகன் இசையில் உருவான "ஆப் கி நஸ்ரோனே' என்கிற பாடல் இன்றுவரை மிகச் சிறந்த பாடலாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல புகழ் பெற்ற இந்திப் பட இசையமைப்பாளர் நெüஷத் ஒருமுறை பேசும்போது "நான் இசையமைத்த அத்தனை பாடல்களையும் சேர்த்தாலும் அது இந்த ஒரு பாடலுக்கு நிகராகாது' என்று கூறினார். ஆனால் மதன்மோகன் அந்தப் பாடலுக்கான டியூனை உருவாக்க எந்தப் பிரத்யேக முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒருநாள் தன்னுடைய அலுவலக லிப்ட்டில் போய்க் கொண்டிருக்கும் மூன்று நிமிட நேரத்தில் அவருக்குத் தோன்றிய டியூன் அது. எனவே ஒரு இசைக்கலைஞன் உருவாக்குகிற படைப்பின் விளைவும் வெற்றியும் அது ரசிகனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.

ஒரு தேர்ந்த இசைக் கலைஞன் குறிப்பிட்ட ஒரு உணர்ச்சிக்கு, சூழ்நிலைக்கு, மனநிலைக்கு குறிப்பிட்ட ஒரு ட்யூன்தான் என்பதில் பிடிவாதமாக இருக்க மாட்டான்.

வங்காளத்தில் இந்திய மக்கள் நாடக சங்கம் என்கிற குழுவினருக்காக தாம் இசையமைத்து தந்த அதே மெட்டுகளை கிறிஸ்தவ பக்தி பாடல்களுக்குப் பயன்படுத்தி உள்ளார் இசையமைப்பாளர் சலீல் செüத்ரி. பின்னர் அதே டியூன்களை மலையாள திரைப்படத்தில் டூயட் பாடலுக்கும் பயன்படுத்தினார்.

பாடல்கள் என்பது திரைப்படத்தின் ஒரு பகுதியாகவே இருந்தாலும்கூட திரைப்படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். நல்ல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்டிருந்தால் ரசிகன் கோபப்படுவது தவிர்க்க முடியாதது. நான் சிறு வயது முதல் ரசித்துக் கேட்ட பல பாடல்களை டி.வி.யில் காட்சியாகப் பார்க்க நேர்ந்தபோது எனக்கு அத்தகைய கோபம் உண்டானது.

ஆனால் படத்தின் பின்னணி இசை என்பது கதையோடு ரசிகர்களை ஒன்ற வைக்க பயன்படுகிறது. அதுவும் இயக்குநரின் காட்சியமைப்பை மீறிவிடாமல் இருக்க வேண்டும். காட்சியை விடப் பின்னணி இசை தூக்கலாகத் தெரிந்தால் அந்த இடத்தில் இசையமைப்பாளன் தோல்வியடைகிறான். சில படங்களின் பின்னணி இசை தனியே ஒலி நாடாக்களாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கி கேட்டுப் பார்க்க வேண்டும். "காலா பத்தர்' என்கிற இந்திப் படத்துக்கு ராஜாஷ் ரோஷன் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். ஆனால் அப்படத்தின் பின்னணி இசையை சலீல் செüத்ரி அமைத்திருந்தார். அந்தப் பின்னணி இசை மட்டும் தனியே இசைத் தட்டாக வெளியிடப்பட்டது. முதன் முதலில் பின்னணி இசை தனியே வெளியிடப்பட்டது அந்தப் படத்துக்குத்தான்.

இசை என்பது ஒரு கிரியேடிவ் விஷயமாக இருந்தாலும் இரண்டு பேர் முன்று பேர் சேர்ந்து இசையமைப்பது என்பது சங்கர் ஜெய்கிஷன் முதல் சங்கர் கணேஷ் வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி சேர்ந்து இசையமைப்பவர்களில் ஒருவர் டியூனை உருவாக்குபவராகவும் மற்றொருவர் அரேஞ்மென்ட் செய்பவராகவும் இருப்பதுதான் வழக்கம்.

சமீபத்தில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் செம்மொழிப் பாடலை எம்.எஸ்.வி. இசையமைத்து, இளையராஜா அரேஞ்மென்ட் செய்து ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். அவருடைய கற்பனையை நான் ரசித்தேன்.

இசையால் நோய் குணமாகுமா என்று கேட்கிறார்கள். ஆகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு தோட்டத்தில் மொஸôர்ட்டின் இசையைத் தொடர்ந்து ஒலிபரப்பிய பகுதியில் இருந்த செடிகள் அதிக செழிப்பாக வளர்ந்திருந்ததாக நான் கேள்விப்பட்டேன். நம்புகிறேன்.

நமக்குத் தெரிந்த இசையை மட்டும் கேட்டுக் கொண்டிருக்காமல் இதுவரை கேட்காத பல இசைவடிவங்களை கேட்க முற்பட வேண்டும். கேட்க கேட்கத்தான் அந்த இசை நமக்குப் புரியும், பிடிக்கும். இனிப்பை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உப்பின் சுவையை உணராமல் போய்விடக்கூடும் என்பதாலேயே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

டயாபடீஸ் காரணமாக சர்க்கரையை விட்டுவிட்ட பலர் இப்போதுதான் டீயின் உண்மையான சுவை தெரிகிறது என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
டென்னிஸன் ஒரு கவிதையில் "சூரியன் மறைந்த பின்னும் நான் என் பயணத்தைத் தொடர விரும்புகிறேன்' என்று கூறுவான். அப்போதுதான் இருட்டில் உள்ள உலகத்தைக் காண முடியும். எனவே நீங்களும் தேடுங்கள்; கண்டடைவீர்கள்!"

ராஜ்கண்ணன்