20111118

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன் -(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்

(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)

தமிழில் : ஷாஜி

கேள்வி : சினிமாவுக்கு ம்யூசிக் தேவையா? சினிமாவில் ம்யூசிக் டைரக்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது?

எம் பி எஸ் : ம்யூசிக் டைரக்டர் என்கிற சொல்லாடலே தவறு. இந்திய சினிமாவில் அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும். ம்யூசிக் கம்போஸர் என்றுதான் சொல்லவேண்டும். இசையமைப்பாளரை இசை இயக்குநர் என்று சொல்லல் ஆகாது. சினிமாவில் வேறு வேறு முறைகளில் ஓரளவு இசை தேவை என்றே சொல்லுவேன். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வி. திரைப்படத்தின் கதை, அதன் பண்பாட்டுப் பின்புலம் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் அதன் இசை அமைய வேண்டும். நான் இசையமைத்த மலையாளப் படங்களான யவனிகா, உள்க்கடல் போன்றவற்றுக்கு இசை இன்றியமையாதது.

ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் போன்ற படத்திற்கு இசையே தேவையில்லை. இந்தியாவின் ஏழை எளிய மக்கள் திரைப்படங்களை நாடுவது பாடல்கள், நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளுக்காகத் தான் என்று சத்யஜித் ரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அது ஒரளவுக்கு உண்மையும் தானே? ஆனால் திரைப்படத்துக்கு இசை தேவையா என்று கேட்டால் அது அந்த படத்தை பொறுத்தது என்றே சொல்வேன்.

கேள்வி : அறுபது எழுபதுகளின் திரை இசைக்கும் இன்றைய திரை இசைக்கும் இருக்கிற வேற்றுமைகளைப்பற்றி சொல்லுங்கள்.

எம் பி எஸ் : மலையாளத் திரையிசையில் பாபுராஜ், ராகவன், தட்சிணாமூர்த்தி, தேவராஜன் போன்றவர்களின் இசையும் யேசுதாஸின் குரலும் வயலார், பி பாஸ்கரன், ஓ என் வி குருப் போன்றவர்களின் பாடல் வரிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பொற்காலம் இருந்தது. அவர்களின் அசாத்தியமான திறமைகள் ஒன்றிணைந்தபோது அப்பாடல்கள் தரத்திலும் வெகுஜெனப் புகழிலும் பரவலாக வெற்றியடைந்தது.

நான் அதிகமாக இன்றைய படங்களைப் பார்ப்பதுமில்லை பாடல்களை கேட்பதுமில்லை. இன்று பெரும்பாலும் இயக்குநர்கள் சொல்வதற்கேற்ப எதாவது ஒன்றை உருவாக்கி வழங்குவாத மாறிவிட்டது இசையமைப்பாளர்களின் வேலை. இருந்தும் திறமைவாய்ந்த இசையமைப்பாளர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கேள்வி : படத்தின் இசை உருவாக்கத்தில் இயக்குநரின் பங்கு தேவயற்றது என்கிறீர்களா?

எம் பி எஸ் : நான் அப்படி சொல்ல வரவில்லை. இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது தான். தனது படத்தில் பாடல்கள் வேண்டுமா வேண்டாமா, அப்படத்தின் இசை எந்த மனநிலையில், உள உணர்வில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் இயக்குநர் தான். ஆனால் அவரது தேவையை, கருத்தை புரிந்துக்கொண்டு இசை அமைப்பது என்பது இசையமைப்பாளரின் வேலை. அதிலும் இயக்குநர் பங்காற்ற வேண்டும் என்றால் அப்படத்தின் இசையை அவரே அமைக்கலாமே! அதற்கு ஒரு இசையமைப்பாளன் தேவை இல்லையே. என்னிடம் இசை கேட்டு வந்த அனைத்து இயக்குநர்களுடனும் எனக்கு சுமுகமான உறவுதான் இருந்திருக்கிறது. அவர்கள் அனைவருமே எனது இசையையும் எனது அலைவரிசையயும் புரிந்துகொண்டவர்கள்.

கேள்வி : இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிரீர்களா?

எம் பி எஸ் : மலையாளத்தில் எனது தொடக்கமே பி பாஸ்கரனின் வரிகளுக்கு இசையமைத்து தான். ஸ்வர்க ராஜ்ஜியம் என்கிற படம் வழியாக. தொடர்ந்து வயலார் மற்றும் ஓ என் வீயின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தேன். அவர்களுடன் எனக்கு எப்போதுமே நேரடித்தொடர்பு இருந்தது. பாடல்வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது தான் மலையாளத்தின் சிறப்பு. வரிகளின் பொருளை புரிந்துகொண்டுதான் இசையமைக்க வேண்டும்.

சிறந்த கவிதைகளாக வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியரும் அதைப் புரிந்துகொண்டு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளரும் இணையும்போது சிறந்த பாடல்கள் பிறக்கின்றன. தமிழிலும் தெலுங்கிலும் இதே முறைதான் நான் கடைப்பிடித்தேன். சிறந்த பாடல்களை உருவாக்க சிறந்த கவிதை வரிகள் வேண்டும். ஒருமுறை வயாலார் என் விருப்பத்திற்கேற்ப எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கட்டும் என்கிற எண்ணத்துடன் ஒரு பாடலின் முதல் வரியை இரண்டு விதமாக எழுதி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் அவ்விரண்டுமே ஒன்றுக்கடுத்து ஒன்று என்று தவறாக புரிந்துகொண்டு இசையமைத்து விட்டேன். பாடல் வெகுசிறப்பாக வந்தது! அது தான் சிறந்த வரிகளின் வல்லமை.

கேள்வி : மின் இசைக்கருவிகள் இசைக்கு நல்லதா கெட்டதா?

எம் பி எஸ் : மின் இசைக்கருவிகள் வர ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது. யூணிவோக்ஸ், க்ளாவயலின் போன்றவை இருபதாண்டுகளாக இருக்கிறது. அவற்றின் தாக்கத்தால் ஷெஹ்னாய், க்ளாரினெட், ஃப்ளூட் போன்ற மரபான இசைக்கருவிகளுக்கு நம் திரையிசையில் வேலை கொஞ்சம் காலம் இல்லாமலாகிவிட்டது. தொடர்ந்து காம்போ ஆர்கன், ஸிந்தஸைசர்கள், அவற்றின் பற்பல இணைப்புகள் போன்றவை வந்தது. ஸ்ட்ரிங்ஸ் என்கிற ஸிந்தஸைசர் வந்தபோது இனிமேல் வயலின், ஸிதார் போன்ற கருவிகளுக்கு வேலையே இருக்காது என்று சொன்னார்கள். ஏன் என்றால் அதில் ஒரே சமையம் நூற்றுக்கணக்கானW வயலின்களின் ஒலியையோ ஸிதார்களின் ஒலியையோ கொண்டுவர முடியும். ஆனால் நம் திரையிசையில் இன்றைக்கும் வயலின், சிதார் போன்ற கருவிகள் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரிங்ஸ் ஸிந்தஸைசரோ இன்று காணக்கிடைப்பதேயில்லை!

மின் இசைக்கருவிகளை செம்மையாக இசைக்கத் தெரிந்தவர்கள் இங்கு மிகக்குறைவே. சில சத்தங்கள் எழுப்புவதற்காகத்தான் இங்கு அவை பயன்படுகிறது. ஆனால் அவற்றை சிறப்பாக வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர்கள் இடம்பொருள் பார்த்து அவற்றை பயன்படுத்துமானால் அது நன்றாக அமையலாம். செலவும் குறைக்கலாம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதைத்தருணத்திற்கு வெகுநேரம் யோசித்து இரண்டு தன்புரா ஒரு கடம் என சில மரபான கருவிகளை பயன்படுத்தி ஒரு இசையை உருவாக்கினேன். அந்தபடம் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அவ்விசை எந்த மின் இசைக்கருவியில் உருவானது என்று அடூரிடம் கேட்டாராம்!

கேள்வி : நமது பழைய நாடக இசையின் கூறுகள் நமது சினிமா இசையில் இன்றளவும் காணக்கிடைக்கிறதா?

எம் பி எஸ் : உலகத் திரை இசையின் அடிப்படை கூறுகளில் ஒன்று தான் ஓபெரா இசை என்பது. எல்லாவற்றையும் விட இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடக வடிவம் தானே ஓபெரா. அதேபோல் நமது நாடக இசையும் நம் சினிமா இசையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

கேள்வி : வெளிநாடுகளில் இசையை மட்டும் மையமாகக் கொண்ட மை ஃபெயர் லேடி, சௌண்ட் ஆஃப் ம்யூசிக் போன்ற ‘ம்யூசிக்கல் என்கிற திரைப்பட வகை மிகப் பிரபலமாக இருக்கிறது அல்லவா? அவ்வைகையறா படங்களுக்கு நம் நாட்டில் ஏன் இடமில்லை?

எம் பி எஸ் : தெரியவில்லை. அவ்வகை திரைப்படங்கள் இந்தியாவில் இனிமேல் பிரவியெடுக்கலாம். வராமலும் போகலாம்!

கேள்வி : பிறமொழிக்காரர்கள் மலையாளத்தில் இசையமைப்பது சரியா? ஒரு மொழியில் இசையமைப்பதற்கு அந்த மண்ணின் பண்பாட்டுப் பின்புலம் தேவையே இல்லையா?

எம் பி எஸ் : நான் ஒரு தமிழன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவன். ஆனால் இசைக்கும் கலைக்கும் மொழி ஏது? அதே நேரத்தில் பண்பாட்டுப் பின்புலம் தெரிந்து கொண்டுதான் ஒரு உண்மையான கலைஞன் பணியாற்றவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எந்த ஒரு விஷயத்தை கையாளும்பொழுதும் அதன் ஆழத்துக்குப்போய் அதை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பவன் நான். ஆரம்பத்தில் மலையாளத்தில் கால்ப்பாடுகள்* படத்திற்கு இசையமைப்பதற்காக பல மாதங்கள் நான் கேரள கிராமங்களில் அலைந்து திரிந்திருக்கிறேன். அங்குள்ள நாட்டுப்புற இசையை நன்றாகப் புரிந்து கொண்டேன். மலையாள மொழி கற்றுக்கொண்டேன்.

மலையாள இலக்கியங்களில் எனக்கு புலமை இல்லையென்றாலும் ஆழ்ந்த பரிச்சயம் உண்டு. அங்குள்ள இலக்கியவாதிகள், கேரளப் பண்பாட்டில் ஆழ்ந்த புரிதல்கொண்ட இயக்குநர்கள் போன்றவர்களுடன் எனக்கு எப்போதுமே தொடர்பிருந்திருக்கிறது. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் இசையமைக்கும்பொழுது அந்த மொழியையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்துமே. அதற்கு பாடுபடத்தயங்காத ஒரு இசையமைப்பாளர் எந்த மொழியிலும் சென்று இசை அமைக்கலாம்.

கேள்வி : உங்கள் இசையில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?

எம் பி எஸ் : நான் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும் பத்து தமிழ்ப் படங்களுக்கும் எட்டு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். ஸ்வர்க்க ராஜ்ஜியம், இனி ஒரு ஜன்மம் தரூ, கடல், அள்த்தாரா, புத்ரி, புதிய ஆகாசம் புதிய பூமி, வேனல், சில்லு, உள்க்கடல், யவனிகா, வளர்த்து மிருகங்கள், பரஸ்பரம் போன்ற படங்களின் பாடல்கள் எனது விருப்பத்துக்குறியவை. ஸ்வயம்வரம், யவனிகா, எலிப்பத்தாயம், முகாமுகம் போன்ற படங்களின் பின்னணி இசையும் திருப்தி அளித்தவை. முகாமுகத்தின் பின்னணி இசையில் கம்யூனிஸ்ட் இண்டெர்நாஷணல் இசையின் சுரபேதங்கள் மட்டும் தான் பயன்படுத்தினேன். பாதை தெரியுது பார் என்கிற எனது முதல் தமிழ் படத்தின் பாடல்களும் நிமஜ்ஜனம் என்கிற தெலுங்கு படத்தின் இசையும் எனக்கு பிடித்தமானவை.

* யேசுதாஸுக்கு அவரது முதல் திரைப்பாடல் வாய்ப்பை எம் பி எஸ் வழங்கியது இப்படத்தில் தான்.

(நன்றி. திரு. பி கெ ஸ்ரீநிவாஸன், ஃபிலிம் மாகசின்)