20170720

கம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புன்னப்ரா, வயலார் பகுதிகளில்  தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தினக்கூலி ஒருவேளை உணவிற்கு கூட பற்றாமலிருந்தது. எதிர்த்து நின்று போராடுவதற்கோ  தட்டிக் கேட்பதற்கோ எந்த சக்தியும் இல்லாமலிருந்த அம்மக்களைத் தமது உணவிற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவோம் என்ற மனநிலைக்கு எழுப்பி ஒரு போராட்டத்தைத் துவங்கிவைத்தது அப்போது அங்கு துளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு. வெகுவிரைவில் ஒரு பெரும் அலையாக அப்போராட்டம் மாறியது. கேரளத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்று இன்று வரைக்கும் ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கப் புள்ளி இதுதான்.  1946ல் நிகழ்ந்த புன்னப்ரா - வயலார் மக்கள் எழுச்சி.

பிரட்டீஷாரின் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த திருவிதாம்கூர் அரசரின் திவான் சி பி ராமசாமி ஐயர் போலீசாரையும் ராணுவத்தையும் பயன்படுத்தி அம்மக்களுக்கு எதிராக போர் தொடுத்தார்.  உயர்ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ராணுவம் அம்மக்களை ஒடுக்கப் புறப்பட்டபோது அது ஓர் ஆயுதப் போராட்டமாக உருமாறியது. காய்ந்த தென்னை மட்டைகளை சீவி கூர்மை செய்து வேல்கம்புகளையும் ஈட்டிகளையும் உருவாக்கி அவற்றை ஆயுதமாகக்கொண்டு தொழிலாளிகள் ராணுவத்தை எதிர்த்தனர்.  ஆயிரக்கணக்கான  தொழிலாளிகள் கொல்லப்பட்டார்கள்.   போரில் திருவிதாங்கூர்  அரசு வென்றுவிட்டது. மக்களைப் பொறுத்தவரையில் அது தோற்றுப்போன ஒரு போராட்டம். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கேரளத்தில் கால் ஊன்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அது அமைத்துக் கொடுத்தது. ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க ஆரம்பித்தனர்.
  
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 9 ஆண்டுகள் கழித்துதான் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கேரள மாநிலம் உருவானது. ஆனால் 1950களின் ஆரம்பத்திலேயே அங்கு முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கொள்கைகளை வலியுறுத்துகிற நாடகங்களை நடத்தி கட்சியை பிரபலப்படுத்துவதற்காக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  ’நிங்ஙள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி’ (நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்) போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்களும் அவற்றின் மிகவும் பிரபலமடைந்த பாடல்களும் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கை கேரள மக்களிடம் பரவியது. உழைக்கும் வர்க்கத்தினர், சாதி மத அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள், முதலாளிகளால் பெருவாரியாக சுரண்டப்பட்டவர்கள் என எல்லோருடைய ஆதரவும் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்து அக்கட்சி பெரிய அளவில் வளரத்துவங்கியது.

உயர்சாதி நாயர்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், நம்பூதிரிகள் போன்றவர்களின் கையில்தாம் கேரளத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பும் அப்போது இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த வறுமையான குடும்பங்கள் அந்நிலங்களின் ஓரத்தில் குடிசை போட்டு அந்த நிலக்கிழார்களுக்காக விவசாய வேலைகளைச் செய்துவந்தனர். இது கிட்டத்தட்ட அடிமை சமூகம் போல் வழிவழியாகத் தொடர்ந்த்து.  அக்குடும்பங்களின் வாரிசுகளுமே நிலக்கிழார்களுக்கு அடிமை வேலை செய்யும் சூழல் நிலவியது.   அக்குடும்பங்களின் பெண்கள் அடிமைப்பெண்களாக பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்கள். அந்த ஏழைகளுக்கு கல்வியும் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. நமது ஆட்சி வரும்போது இந்த அவலச் சூழலிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்தது.

1957ல் நடந்த கேரள அரசின் முதல் பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தோடு 60 தொகுதிகளில் வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக முறையில் ஆட்சிக்குவந்த உலகின் முதன்முதல் அரசுகளில் ஒன்று அது.  உயர்குடிகள்,  பெரும் பணக்காரர்கள், உயர் சாதியினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் இதனை மிகவும் அஞ்சினர். அது நிலக்கிழார்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் பதட்டத்தை உண்டாக்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய தினக்கூலிகளுக்கு அவர்கள் உழைத்துவந்த நிலத்தின் ஒரு பகுதியை பதிவுசெய்து கொடுக்கும் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் அரசு நிறவேற்றியது.

அன்றுவரை கல்வி என்கின்ற ஒன்றை நினைத்தும் பார்க்காமல் தனக்குப் பின் தனது கூலிவேலைகளை செய்ய குழந்தைகளைத் தயார்படுத்தி வந்த சமூகங்களுக்கும் எளிதில்  ல்வி கிடைக்கும் வகையில் புது கல்விச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் நிலக்கிழார்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் கல்வி வியாபாரிகளுக்கும் பீதியை உண்டாக்கியது. நம் நிலம் அனைத்தையும் விரைவில் குடியானவர்களுக்கு எழுதி வைக்க நேரும் என்று அவர்கள் கூடிக்கூடி பேசிக்கொண்டனர். கத்தோலிக் தேவலாயத்தின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான கல்வி அமைப்புகள் இருந்தன. கல்வி இனிமேல் நமது அதிகாரத்தின் கீழ் இருக்காது என்று அவர்கள் கலங்கினார்கள். அனைவரும் சேர்ந்துகொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இந்த போராட்டம் ‘விமோச்சன சமரம்’ என்று அழைக்கப்பட்டது.

பொது இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு சார்பில் அவற்றைக் கலைக்க முனைகையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவிற்குப் போனது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஏழை கர்ப்பிணிப் பெண் ஒருத்தி கொல்லப்பட அது பெரிய தலைப்பாகப் பேசப்பட்டது. நடப்பு விஷயங்களை அறிந்துகொள்ள இருந்த ஒரே ஊடகமான செய்தித்தாள்கள் உயர்குடியினரின் உடமையில்தான் இருந்தன. அவர்கள் இந்தச் செய்தியை ஊதிப் பெரிதாக்கி அரசுக்கு எதிராகப் பயன்படுத்தினர். கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட சம்பவத்தால் குழந்தைகள் முதல் பெண்கள்பெரியவர்கள் வரை கொதித்தெழுந்தனர். அந்தப் பெண்ணைக் கொன்றது கம்யூனிஸ்ட்காரர்கள் தாம் என்ற பேச்சு பொதுமக்களிடையே பரவலானது.

அங்கமாலி எனும் ஊரில் இருந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழுபேர் இறந்து போனார்கள். இந்த இரு சம்பவங்களும் கம்யூனிஸ்ட்காரர்கள் கொலைகாரர்கள் என்ற பேச்சை பரவலாக்கியது. பொருளாதார சக்தி, ஊடக சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி இறுதியில் கம்யூனிஸ்ட் அரசை வீழவைத்தனர். மத்திய அரசின் உதவியோடு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் அமைப்பு  கேரளத்தில் மிகவும் வலுவான அரசியல் கட்சியாக மாறுவதற்கு  இச்சம்பவங்களும் உதவின.

கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) ஆரம்பித்த நாடகப் புரட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது என்று முன் சொன்னேன். அவர்களின் நாடகங்கள், பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமானது. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் கூட அப்பாடல்களை பாடித்திரிந்தனர்.  1950களின் மத்தியில் முதன்மையான வெகுஜன ஊடகமாக சினிமா பரவலாகியபோது அதில் பங்குபெற்ற பெரும்பாலான கலைஞர்கள் இந்நாடகங்களிருந்து புறப்பட்ட கம்யூனிஸ்டுகளாகவே இருந்தனர். KPACயின் நாடக ஆசிரியராகயிருந்த தோப்பில் பாஸி சினிமாத் திரைக்கதையாசிரியர் ஆனார். பாடலாசிரியரான பி.பாஸ்கரன் இயக்குநரானார். கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான வயலார் ராம வர்மா உயர்சாதியில் பிறந்தாலும் கொள்கைகளின் ஈர்ப்பால் கம்யூனிஸ்டானவர். ராம வர்மா என்ற தனது பெயரையே துறந்து புன்னப்ரா- வயலார் போராட்டத்தினால் பிரபலமடைந்த வயலார் எனும் தனது ஊரின் பெயரையே தன் பெயராக வைத்துக்கொண்டார். 

மலையாள சினிமாவில் கம்யூனிஸ்ட் அறிகுறிகளை முதலில் வெளிப்படுத்தின படம் 1954ல் வந்த  நீலக்குயில். பி.பாஸ்கரனும் பின்னர் செம்மீன் படத்தை இயக்கிய ராமு காரியாத்தும் சேர்ந்து இயக்கிய படம் அது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை ஒரு  உயர்சாதி நாயர் காதலித்து கர்ப்பமாக்கி, சாதிக்கும் சமூகத்திற்கும் பயந்து அப்பெண்ணை கைவிடுகிறான். அந்தப் பெண்ணோ குழந்தையை பெற்றதோடு கிட்டத்தட்ட தற்கொலை என்று சொல்லக்கூடிய நிலையில்  இறந்துபோகிறாள். உயர்சாதி நாயர் சொந்தசாதிப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து வாழத்துவங்குகிறான். ஆனால் இறுதியில் அவர்கள் அந்த குழந்தையை சொந்தக் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறார்கள். காலதாமதம் ஆனாலும் சாதி வேறுபாட்டை அவர்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. இத்தகைய புரட்சிகரமான சமூகக் கருத்துக்களை யோசிக்கக் கூட முடியாத அந்த காலகட்டத்தில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்தது நீலக்குயில். கேரளத்தின் கம்யூனிஸ்ட் சிந்தனைத் துவக்கத்தில் நீலக்குயில் ஒரு முக்கியமான திரைப்படம்.

ஆட்சி கலைக்கப்பட்டாலும் கட்சி வளர்கிறது. கேரளத்தில் நக்சலைட் இயக்கங்கள் வந்திறங்குகின்றன. கொள்கைக்காக கொலை செய்தாலும் தவறில்லை எனும் நக்சலைட் நோக்கில் பெரும்பணக்காரர்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி  சி.பி.ஐ, சி.பி.எம் என இரண்டாகப் பிரிகிறது. இவையெல்லாமே கேரளத்தின் மிகமுக்கியமான அரசியல் நிகழ்வுகளாக மாறுகின்றன. இதே காலகட்டத்தில் பெரும்பாலான மலையாளிகள் விரும்புகிற ஊடகமாக சினிமா மாறுகிறது. மக்கள் அதிகமாக விரும்புகிற ஊடகம் என்பதால்  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சினிமாவை ஒரு கொள்கை பரப்புச் சாதனமாக பயன்படுத்த ஆரம்பிக்கிறது.

முதன்முறையாக ஒரு கம்யூனிஸ்ட் கதாநாயகனை முன்னிறுத்திய படம் கே வின்சென்ட் இயக்கிய ‘துலாபாரம்’. முதலில் KPACக்காக தோப்பில் பாஸி எழுதிய நாடகம் அது. துலாபாரம் மலையாளத்தில் பெரும்வெற்றி பெறுகிறது. ஒரு கம்யூனிஸ்டாக கதாநாயகன் எடுக்கிற முடிவுகளால் அவரது மனைவியின் வாழ்க்கை மீளமுடியாத துயரத்திற்கு போய்விடுகிறதுதான் கதை. கட்சிக்கான போராட்டத்தில்தான் அவர் கொல்லப்படுகிறார். தன் குடும்பத்திற்காக அல்ல இந்த சமூகத்திற்காக வாழவேண்டும் என்பதுதான் முன்வைக்கப்படும் கருத்து. பெரும் வெற்றியையும் பல விருதுகளையும் அடைந்த படமாக இன்றுவரைக்கும் துலாபாரம் நினைவுகூரப்படுகிறது.

துலாபாரம் போன்ற படங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி சினிமாவை வணிகமாக மட்டும் பார்க்கக்கூடிய முதலாளிகள் கவனிக்கத்துவங்கினர்.  கம்யூனிஸ்ட் கருத்துகள் உள்ள படங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்து பெரும் வசூலை ஈட்டுவதை கண்டுகொண்ட வணிக சினிமா நிறுவனங்கள் ’கம்யூனிஸ்ட் வணிகப் படங்களை’ எடுக்க ஆரம்பித்தன. கட்சித் தொண்டர்கள் பத்து சதவீதம்  பேர் பார்த்தால் கூட போட்ட பணம் கிடைத்துவிடுமே என்ற எண்ணத்தில் பல கம்யூனிஸ்ட் படங்கள் எடுக்கப்பட்டன. புன்ன்பரா-வயலார் மக்கள் எழுச்சியை மையமாக வைத்தே புன்ன்பரா-வயலார் என்ற படம் எடுக்கப்படுகிறது! செக்ஸ் போன்ற வணிக சமாச்சாரங்கள் எல்லாம் கலந்து எடுக்கப்பட்ட மசாலாப் படமாகத்தான் அது இருந்தது. 1952ல் வெளிவந்த KPACயின் நாடகம்  ’நிங்ஙள் என்னை என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ ஐ 1970ல் சினிமாவாக எடுத்தது  கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிரான சினிமா முதலாளி ஒருவர்தான்! 

மூலதனம் என்ற படம் வந்தது. நீலக்குயில் படத்தை எடுத்த பி பாஸ்கரந்தான் இந்தப் படத்தையும் எடுத்தார். இது முற்றிலும் கம்யூனிஸ்ட் சிந்தனைகளைக் கதைக்களமாக கொண்ட படம். சேதுமாதவனின் இயக்கத்தில் 1971ல் வெளியான ’அனுபவங்கள் பாளிச்சகள்’ திரைப்படம் கம்யூனிஸ்ட் கதைக்கருவுடன்  கலை ரீதியாகவும் மிக முக்கியமான படம்.  இப்படம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கொள்கைக்கும் இடையே நடக்கும் மானுடப் போராட்டத்தை மிகத் தீர்க்கமாகப் பேசியது. அதன் பிறகு ’விமோச்சன சமரம்’, ’நீலக்கண்ணுகள்’ போன்ற படங்கள் வந்தன. ஆனால் ’அனுபவங்கள் பாளிச்சகள்’ படத்தோடு ஒப்பிடுகையில் இப்படங்கள் தரக்குறைவானவையாகவே அமைந்தன.

பி.ஏ.பக்கர் இயக்கிய கபனி நதி சுவந்நப்போள்’ முழுக்க முழுக்க நக்சலைட் கொள்கைகள் சம்பந்தமான படம். கபனி நதி என்பது கேரளாவின் வயநாடு பகுதியில் ஓடக்கூடிய நதி. அப்பகுதியில் சில நிலக்கிழார்களை நக்சலைட்டுகள் கொலை செய்தனர். அந்நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அன்றுதான் இந்தியாவில் ஊரடக்கு சட்டத்தை இந்திரா காந்தி அமல்படுத்தினார். அரசியல் கருத்துக்களுள்ளவர்களால் அசையவே முடியாத அந்த சூழ்நிலையில் அங்கும் இங்கும் மறைந்து மறைந்து மறைமுகமாகத்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்தார்கள். அதில் கதாநாயகனாக நடித்தவர் பிற்பாடு பல கலைப்படங்களை இயக்கிய, மலையாளத்தின் இடதுசாரி இயக்குனர்களில் முக்கியமானவரான டி.வி.சந்திரன். வணிக நோக்கங்கள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட ’கபனி நதி சுவந்நப்போள்’ பரவலாக பேசப்பட்டது.

1980களில் கம்யூனிஸ படங்கள் என்ற போர்வைக்குள் பல மோசமான வணிகப்படங்கள்  வெளிவந்தன. கதாநாயகன் கம்யூனிஸ்டாக இருப்பான். படம் படுமோசமாக இருக்கும். சண்டை, உடை குறைப்பு, ஆடல் பாடல் என மசாலா படத்திற்குண்டான அனைத்தும் விஷயங்களும் இருக்கும். மசாலா இயக்குனர்கள் பலர் இத்தகைய ’கம்யூனிஸ்ட்’ சினிமாக்களை எடுத்தனர். ஸ்போடனம், கொடுமுடிகள், ரக்த ஸாக்‌ஷி போன்றவை உதாரணங்கள். அச்சமயத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த ’முகாமுகம்’ திரைப்படம் மட்டுமேதான் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் படமாக இருந்தது. ஆனால் அப்படம் அவரது மற்ற படங்களைப் போல பேசப்படவோ விருதுகளை வெல்லவோ இல்லை. இருந்தும் கம்யூனிஸ சினிமாவில் முக்கியமான படம் ’முகாமுகம்’.

மலையாள சினிமாவில் அஞ்சரைக்குள்ள வண்டி, சத்ரத்தில் ஒரு ராத்ரி என்பவை போன்ற செக்ஸ் படங்கள் எடுக்கிற இயக்குநர்கள்கூட ’கம்யூனிஸ்ட்’ கொள்கைப் படங்களை எடுத்தார்கள் என்பதுதான் வேடிக்கை. 1986ல் வந்த சகாவு போன்ற படங்கள் உதாரணம்.  கிட்டத்தட்ட செக்ஸ் படமேதான் ஆனால் பெயர் மட்டும் சகாவு (தோழர்)! மலையாளத்தின் கம்யூனிஸ்ட் சினிமா இப்படியெல்லாம் பயணப்பட்டது. மாற்றுவின் சட்டங்ஙளே என்று ஒரு படம். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மலையாள வடிவம். வணிக வெற்றியை மட்டுமே குறியாக வைத்து கம்யூனிஸ்ட் கொள்கை போன்ற பாவனைகள் வைத்து பல படங்கள் வெளிவந்தன.

லெனின் ராஜேந்திரன் என்ற இயக்குனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர். கம்யூனிஸ்ட் கொள்கைகளை முன்னிறுத்திய மீனமாசத்திலெ சூர்யன் என்ற படத்தை அவர் எடுத்தார். வணிக வெற்றியும் பெற்று கலைப்படமாகவும் இன்று வரை அறியப்படும் பஞ்சாக்னி’ எனும் படம் வந்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய படம். ஒரு பெண் நக்சலைட்டின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கதை. மோகன்லால் கதாநாயகனாவும் கீதா கதாநாயகியாகவும் நடித்தனர். அதுவரை வந்த கம்யூனிஸ்ட் படங்களிலெல்லாம் கதாநாயகன்தான் கம்யூனிஸ்ட். அவன்தான் புரட்சியாளன். ஆனால் அஜிதா என்ற கேரளத்து நக்சலைட் போராளிப் பெண்ணின் சாயலில் அமைக்கப்பட்டிருந்த கதாநாயகிதான் இந்தப்படத்தில் புரட்சியாளர்.

மம்முட்டி, மோகன்லாலின் ஆரம்ப காலத்திலும் பல கம்யூனிஸ்ட் படங்கள் வெளிவந்தன. இருவரும் ஒன்றாக நடித்து, ஐ.வி. சசியின் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த அடிமகள் உடமகள் என்ற படம் உதாரணம். வணிகப்படம் என்றாலும்  ஒரு தொழிற்சாலையில் நடைபெறுகிற வேலைநிறுத்தப் போராட்டத்தை கதைக்களமாக வைத்து பெரிய வணிக சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்ற திரைப்படம் கூட. மம்முட்டியும் மோகன்லாலும் சூப்பர் ஸ்டார்களாக மாறிய பின்னரும் அவர்கள் கம்யூனிஸ்ட் சினிமாக்களில் நடித்தனர். 1990ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து ’லால் சலாம்’ என்ற படம் வெளியானது. இரண்டு இளவயது நண்பர்கள், இருவருமே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் பணம் சம்பாதிப்பதற்காக வேறு வழியில் செல்கிறார். அதனால் உண்டாகிற பிரச்சினைகள். அந்தப்படமும் வெற்றி பெற்றது.

’ஓர்மகள் உண்டயிரக்கணம்’ எனும் படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். கட்சிக்காக எந்தளவு தியாகம் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பாத்திரம்.  1959ல் நடந்த ’விமோச்சன சமர’த்தை கதைக்களமாக வைத்து 1995ல் டி வி சந்திரன் இந்த படத்தை இயக்கினார்.  விமோச்சன சமரம் எப்படிப்பட சூட்சிகளால் வெற்றி பெற்றது, கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் எப்படி தோற்றுப் போனார்கள் என்பதுதான் கதை. நல்ல படமாக இருந்தாலும் அது பரவலாகக் கவனிக்கப்பட்டு பேசப்படவில்லை. மலையாள கம்யூனிஸ்ட் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இந்தப்படத்தைத் தயக்கமின்றிச் சொல்வேன். லால் சலாம் எடுத்த வேணு நாகவள்ளி மீண்டும் மோகன்லாலை வைத்து ’ரக்த காக்‌ஷிகள் சிந்தாபாத்’ என்ற படத்தை எடுத்தார். கம்யூனிஸத்தை எவ்வளவு வணிகமாக காட்டமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தைச் சொல்லமுடியும். 

கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசின் முதலமைச்சராக இருந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட். அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு ஏழை நெசவாளி. கட்சி ஊழியன். நினைவுகளற்ற முதுமையில் தள்ளாடும் அவருக்கு நம்பூதிரிப்பாட் இறந்துபோனார் என்று தொலைக்காட்சி செய்தி கேட்டவுடன் தனது பழைய காலகட்ட கட்சி வாழ்க்கையின் நினைவுகள் வருகின்றன. 2001ல் பிரியநந்தன் இயக்கத்தில் வெளியான நெய்த்துக்காரன் படம் அது. முரளி கதாநாயகனாக நடித்திருப்பார். சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும் அப்படம்வழியாக அவர் வென்றார். கேரளாவின் அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லப்படும் ஏ.கே.கோபாலனின் வாழ்க்கை வரலாற்றை வைத்துக்கொண்டு 2007ல் ஏ கே ஜி எனும் படத்தை எடுத்தார் ஷாஜி என் கருண். எடுத்தார். அவ்வளவுதான்!

மதுபால் என்ற இயக்குனரின் முதல் படமான ’தலப்பாவு’வில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். 2008–ல் வெளியான இப்படத்தின் மையப் பாத்திரம் ஒரு நக்சலைட். பல பதிற்றாண்டுகளுக்கு முன்பு வயநாடு பகுதியில் வர்கீஸ் என்ற நக்சலைட்டை ஒரு போலீஸ்காரர் ஏமாற்றி சுட்டுக்கொன்றார். ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவரவில்லை. வர்கீஸை காணவில்லை என்று மட்டும் சொல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் ”நான்தான் வர்கீஸை ஏமாற்றி சுட்டுக் கொன்றேன், இந்த இடத்தில் தான் சுட்டேன்” என்று பொதுவெளியில் பகிரங்கமாகச் சொன்னார்.  அந்தக் காலத்தில் கேரளத்தில் பரவலாகப் பேசப்பட்ட நிகழ்வு இது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ’தலப்பாவு’. 2013ல் வெளியான லெஃப்ட் ரைட் லெஃப்ட் எனும் படம் மறைந்த மகா நடிகர் கோபியின் மகனான முரளி கோபி எழுதி அருண்குமார் அரவிந்த் இயக்கினார். கலைரீதியாக தரமான இப்படம் கேரளத்தில் கட்சி கம்யூனிஸம் சந்த்தித்த மாபெரும் வீழ்ச்சிகளை சுட்டிக்காட்டியது. தீவிர கட்சி கம்யூனிஸ்டுகள் இப்படத்தை முற்றிலுமாக புறக்கணித்தார்கள் என்பதையும் சொல்லியாகவேண்டும்.
  
’வசந்தத்தின்டெ கனல் வழிகள்’ என்ற படம் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியானது. பி.கிருஷ்ணப்பிள்ளா என்ற கம்யூனிஸ்ட் தலைவர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து, கொள்கைக்காக வாழ்ந்தவர். இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவராக மதிக்கப்படுகிறவர். மிகவும் ஏழ்மையிலேயே வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாறு என்றுதான் இப்படம் வெளியானது. ஆனால் இதுவும் மோசமான கம்யூனிஸ்ட் சினிமாக்களின் வரிசையில் சேரக்கூடியதே. பி.கிருஷ்ணப்பிள்ளா போன்ற ஒரு தலைவரின் வாழ்க்கையை இவ்வளவு மோசமாக எடுத்திருக்கக்கூடாதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்பொழுது தோன்றியது. கம்யூனிஸம் சம்பந்தமான படங்கள் கடந்த பத்தாண்டுகளில் மலையாளத்தில் மிகக் குறைவாகவே வந்தன. ஆனால் இந்த ஆண்டில் இதுவரைக்கும் மூன்று படங்கள் வந்திருக்கின்றன. ஒரு மெக்சிக்கன் அபாரத, சகாவு, காம்ரேட் இன் அமேரிக்க (சி.ஐ.ஏ). இவற்றைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.

இதுவரை மலையாள சினிமா உலகில் கம்யூனிஸம் சம்பந்தமாக வெளிவந்த திரைப்படங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இதுதான். இதில் ஒருசில படங்களைத் தவிர உண்மையிலேயே கம்யூனிஸ சிந்தனைகளின்மேல் பற்றுக்கொண்டடு எடுக்கப்பட்ட படங்கள் குறைவு. பெரும்பாலான படங்கள் கம்யூனிஸத்தை கடவுச் சீட்டுகளாக மாற்றும் வணிக நோக்கில் எடுக்கப்பட்டவை.

எந்தவொரு கொள்கையாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அதன் நடைமுறை செயல்திறனும் நடைமுறை வெற்றியும்தான் முக்கியமானவை. பதினேழு வயதிலிருந்தே ஆழமான கம்யூனிஸ்ட் ஆதரவாளனாகயிருந்தவன் நான். ஆனால் அந்த நம்பிக்கை இன்று எனக்கு இல்லை. ஏனெனில் கேரளாவிலும் பெங்காலிலும் திரிபுராவிலும் இதுவரைக்கும் இயங்கிய கம்யூனிஸ்ட் ஆட்சிகளை நான் உற்றுப் பார்த்திருக்கிறேன். தமக்கு கிடைத்த அதிகாரத்தை இந்திய கம்யூனிஸ்டுகள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.

’இடதுசாரிகள் வரும், அனைத்தும் சரியாகும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சொல்லும்படியாக எதையுமே சரிசெய்யவில்லை என்றே நினைக்கிறேன். இடதும் வலதும் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஐந்தாடுகளிலும் கேரள மாநிலத்தை பங்கு போடுகிறார்கள். இடதின் திட்டங்களை வலது இல்லாமல் செய்கிறது. வலதின் திட்டங்களை இடது ஒத்திப்போடுகிறது. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் தாழ்த்தப்பட்டுகிறவர்களுக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்ற அலாதியான மானுடக் கனவில் உருவாக்கப்பட்ட மகத்தான சிந்தனை கம்யூனிஸம். குடியானவன் அடிமையல்ல, அவனுக்கும் சொந்தமாகக் காணி நிலமாவது கிடைக்க வேண்டும், அவனது குழந்தைகளும் சீரான கல்வி பெறவேண்டும் என மிகத் தீர்க்கமாக  மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு அது. ஆனால் அறுபதாண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளைப்போல் எல்லாம் பகல் கனவுகளாகவே நீடிக்கின்றன.

நன்றி : படச்சுருள் சினிமா மாத இதழ்
ஓவியம்: ரவி பேலெட்

shaajichennai@gmail.com

20160911

டி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது?தொள்ளாயிரத்தித் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் இசைப்பதிவு மேலாளராக பணியாற்றிவந்த மேக்னா சவுண்ட் நிறுவனம் கர்நாடக இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியது. பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய யாருமே அப்போது எங்கள் நிறுவனத்தில் இருந்ததில்லை. அக்காலம் ஏ வி எம், சங்கீதா போன்ற இசை நிறுவனங்கள்தாம் கர்நாடக இசையை பரவலாக வெளியிட்டு வந்தனர். ஆனால் இசை விற்பனையில் உலகத்தரமான வழிமுறைகளை நாங்கள்தாம் கடைப்பிடித்துவந்தோம். உலகளாவிய இசை விற்பனை நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் துணை அமைப்பு எங்களது நிறுவனம். எங்களுக்கிருந்த கனக்கச்சிதமான வியாபார உத்திகளால் தமது இசை, ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் என்று எண்ணிய பல கர்நாடக இசைஞர்கள் எங்களுடன் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர் டி எம் கிருஷ்ணா.

அப்போது டி எம் கிருஷ்ணாவுக்கு 17-18 வயது இருக்கும். துடிப்பான இளைஞன். மிகவும் முதிர்ச்சியுள்ள ஆழ்ந்த குரல். அவரது முகத்தைப் பாராமல் அவ்விசையைக் கூர்ந்து கேட்டால் மிகுந்த முதிர்ச்சியும் நிதானமும் அக்குரலில் தெரியும். பாடும்முறையில் அப்படியே செம்மங்குடி பாணியின் நகலெடுப்பு இருக்கும். கிருஷ்ணா சமகால கர்நாடக இசையின் ஒரு முக்கியப் பாடகராக வலம்வருவார் என்று நாங்கள் நம்பினோம். அவரது பல தொகுதிகளை வெளியிட்டோம். அக்காலம் எங்கள் நிருவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்த கர்நாடக இசைப்பாடகி சங்கீதா சிவக்குமாரை டி எம் கிருஷ்ணா பிற்பாடு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் எங்கள் நிறுவனத்தை விட்டு விலகிச் சென்றனர். எங்கள் நிறுவனமும் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து பெரும் பணத்தை ஈட்டித்தராத கர்நாடக இசையிலிருந்து சற்றே விலகி வெகுஜென இசையின் பக்கம் சென்று விட்டது.

இந்த இருபதாண்டுகளில் எத்தனையோ இசைத்தொகுதிகளை வெளியிட்டும் உலகம் முழுவதும் சென்று எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தியும் சமகால கர்நாடக இசையின் மிக முக்கியமான ஓர் ஆண்குரலாக டி எம் கிருஷ்ணா தன்னை நிலைநாட்டினார். அவருக்கென்றே தனித்துவமான ரசிகர்கூட்டம் உருவானது. ஆனால் வெகுமக்களுக்கு அவரது பெயர் தெரியவந்தது இப்பொழுதுதான்! அதாவது கடந்த இரண்டு மாதங்களில்! அதன் காரணம் ஆசியாவின் நொபேல் பரிசு என்று அழைக்கப்படும் மக்சேசே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி எழுந்த விவாதங்கள்… வாக்குவாதங்கள்… சர்ச்சைகள்.. சண்டைகள்… 

இவ்விவாதங்களில் சிலர் முன்வைத்த ஒரு கருத்து டி எம் கிருஷ்ணா இந்த விருதிற்கு தகுதியானமுறையில் ஒரு சிறந்த பாடகர் அல்ல என்பதுதான். நண்பர் ஜெயமோகன் ஒருபடி மேலே சென்று சமகாலப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம் அமரும் இருக்கையில் அமரும் தகுதிகூட டி எம் கிருஷ்ணாவிற்கு இல்லை என்று ஏதோ ஒரு வேகத்தில் எழுதினார்! நான் கர்நாடக இசையின் பெரும் ஆர்வலன் அல்ல. ஆனால் எந்த இசையை முன்நிறுத்தவேண்டும், எந்த இசையைப் பதிவு செய்யவேண்டும், யார் அதற்கு தகுதியான இசைஞன் என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பில், இசைத் தொழிலுக்குள்ளே இருபதாண்டுகள் பணியாற்றியவன் நான். அனைத்திற்கும் மேலாக கேட்கும் இசையை மிகுந்த அவதானிப்புடன் கேட்பவன். எண்ணற்ற கர்நாடக இசைத்தட்டுகளை சேகரித்துவைத்து இன்றுவரைக்கும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருப்பவன். எனது இசை அனுபவத்தின், ரசனையின் அடிப்படையில் ஒரு தரமான பாடகர் என்றே டி எம் கிருஷ்ணாவை சொல்வேன்.

சஞ்சய் சுப்ரமணியமும் சிறந்த பாடகர். இவ்விரண்டுபேருமே கர்நாடக இசைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். சமகாலத்தில் கர்நாடக இசையை நிலைநிறுத்துவதற்கு பெரும் பங்கினை ஆற்றுபவர்கள். ஆனால் மறைந்த செம்மங்குடி, மதுரை மணி, கே வி நாராயண சுவாமி, அரியக்குடி போன்ற கர்நாடக இசையின் எக்காலத்திற்குமுரிய மாமேதைகளுடன் இவ்விரண்டு பேரையும் எந்தவகையிலுமே ஒப்பிட முடியாது என்றே நினைக்கிறேன். அதேநேரத்தில் குரல் வளம், பாடும்போது இசையின் செவ்வியல் தன்மையை முற்றிலுமாக கடைப்பிடித்தல், முன்னோடிகளின் பாணியை பின்பற்றுதல் போன்றவை டி எம் கிருஷ்ணாவின் தனிச்சிறப்புகள் என்றே சொல்லலாம். இவையனைத்தும் ஒருபக்கம் இருக்கட்டும். வேடிக்கை என்னவென்றால் டி எம் கிருஷ்ணாவிற்கு மக்சேசே விருது வழங்கப்பட்டது அவரது இசைச் சாதனைக்காகவோ இசைத் திறனுக்காகவோ அல்ல என்பது தான்.

’மேலெழுந்துவரும் தலைமை’ (Emergent Leadership) என்கின்ற பிரிவில்தான் கிருஷ்ணாவிற்கு மக்சேசே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன்முதலாக இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர் என்று எம் எஸ் சுப்புலட்சுமியை சொல்வார்கள். 1976இல். ஆனால் அவருக்குமே சமூக சேவைப் பிரிவில்தான் இவ்விருது வழங்கப்பட்டது! இசைக்காக இந்தியாவிலிருந்து இவ்விருதினைப் பெற்றவர் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கர் மட்டுமே. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு அடுத்து இவ்விருதை இதுவரைக்கும் பெற்றுக்கொண்ட தமிழர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் (1971 - சமூகத் தலைமை), டி என் சேஷன் (1996 - அரசுப் பணி), ஜோக்கின் அற்புதம் (2000 - அமைதி மற்றும் சர்வதேச ஒற்றுமை), சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவி மருத்துவர் வி சாந்தா (2005 – சமூக சேவை), குழந்தை ஃபிரான்சிஸ் (2012 – எந்த பிரிவு என்று கூறப்படவில்லை!) என்பவர்கள்தாம். இதில் ஜோக்கின் அற்புதம், குழந்தை ஃபிரான்சிஸ் ஆகியவர்கள் யார் என்றே இங்கே பலருக்கும் தெரியாது!
   
சமகால சமூகத்தில் நாணயமும் நேர்மையுமுள்ள ஆட்சிமுறை, எதற்குமே அஞ்சாமல் மக்களுக்கு சேவை செய்தல், மக்களாட்சிக்குள்ளே கடைப்பிடிக்கும் இலட்சியவாத நடைமுறைகள்… இவற்றுக்காகத்தான் மக்சேசே விருது வழங்கப்படுகிறது என்று அவ்விருதின் கொள்கைக் கோட்பாட்டில் எழுதியிருக்கிறது. ”ஜாதி மத பாகுபாடுகளால் பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தில், கர்நாடக இசையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த இசையை அம்மக்களிடம் கொண்டு சென்று புரட்சிகரமான ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக டி எம் கிருஷ்ணாவிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என்று விருதின் தகுதியுரையில் நாம் வாசிக்கலாம்.

இதன் அடிப்படையில் டி எம் கிருஷ்ணாவின் செயல்பாடுகள் என்னென்ன என்று பார்க்கும்பொழுது கீழ்காணும் விடயங்கள் நமது கவனத்திற்கு வருகின்றன. கர்நாடக இசையில் காலம்காலமாக மேலோங்கும் பார்ப்பணிய ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் சென்னை சங்கீத சபாக்களில் நடக்கும் மார்கழி இசை உற்சவத்தை அவர் புறக்கணித்தார். அவற்றில் பாட மறுத்தார். சென்னையின் கடலோரப் பகுதியிலுள்ள உரூர் ஆல்கோட் குப்பம் எனும் மீனவச் சேரியில் இசை மற்றும் நடன விழாக்களை ஏற்பாடு செய்தார். அவ்விழாக்களில் கர்நாடக இசையுடன் பறை இசையும் பிற இசைகளும் இசைக்கப்பட்டன. பரத நாட்டியத்துடன் பலவகை நாட்டியங்களும் அரங்கேற்றப்பட்டன. கானா இசையின் தாளத்தில் டி எம் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் நண்பர்களும் இசைகேட்க வந்த மக்களுடன் இணைந்து கொண்டாட்ட நடனம் ஆடினர். 

இவையனைத்துமே முற்றிலும் தவறானவை என்றும் இத்தகைய செயல்பாடுகளால் எந்தவொரு புரட்சியோ சமூக மாற்றமோ நிகழப்போவதில்லை என்றும், இந்த செயல்கள் கவனத்தை ஈர்த்து விருதுகளை அடையும் ஒருவகை சூட்சி என்றும் ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ கர்நாடக இசை வரலாற்றில் முதன்முறையாக ஜாதிமத, உயர்வு தாழ்வு வேலிகளுக்கு வெளியே அவ்விசையை கொண்டுசெல்லவேண்டும் என்று வலியுறுத்தி, அதை செயல்படுத்திக் காட்டின முதல் இசைக் கலைஞன் கிருஷ்ணாதான் என்கிறார்கள். அவ்வகையில் இவ்விருதிற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்றே அவர்கள் வாதிடுகிறார்கள்.

கர்நாடக இசை அடிப்படையில் ஒரு பக்தி இசை. எண்ணற்ற கடவுளர்களைப்பற்றியான பக்திப்பாடல்களின் தொகுப்பு அது. பக்திதான் அந்த இசையில் மேலோங்கும் பாவம் அல்லது உணர்வு. ’சிருங்கார பாவம் அதாவது காமம் கலர்ந்த காதல் உணர்வை முதன்மையாகக் கொண்ட பல பாடல்கள், தான வருணங்கள், ஜாவளிகள் போன்றவை இருக்கிறதே’ என்று கர்நாடக இசை தெரிந்தவர்கள் சொல்லக் கூடும். ஆனால் அந்த சிருங்காரமுமே ஆண் பெண் கடவுளர்களுக்கிடையே நடப்பதே ஒழிய மனித சிருங்காரம் அல்ல. உதாரணமாக அன்னமாச்சார்யா இயற்றிய ’பலுகு தேனெலா தல்லி பவளிஞ்செனு’ எனும் ஆபேரி ராகப் பாடலில் சொல்லப்படுவது ஸ்ரீ வெங்கடேசனுக்கும் அவரது காதலியான அலர்மேல் மங்காவிற்கும் இடையேயான சிருங்கார லீலைகள் தாம். கிருஷ்ண பகவான் அவரது காதலிகளுடன் செய்யும் லீலைகளைப் பற்றியெல்லாம் எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன. அடிப்படையில் இவையனைத்துமே பக்தியின் விதவிதமான வெளிப்பாட்டுக்களே. இந்த பக்தியை வெளியே எடுத்தால் பின்னர் கர்நாடக இசையே இல்லை. ஒரு நாத்திகர் என்று தன்னை முன்நிறுத்தும் டி எம் கிருஷ்ணா பாடுவதும் இதே பக்திப் பாடல்களைத்தாம்!  

கர்நாடக இசைப்பாடல்களின் பெரும்பகுதி தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் இருப்பதனால் அவற்றைப் பாடுவது தவிர்த்து கர்நாடக இசை தமிழ் மொழியில் பாடப்படவேண்டும் என்ற கொள்கையுடன் 1930 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிசை இயக்கத்தின் மீது கடுமையான வெறுப்பை வைத்திருந்தவர் சென்னை மியூசிக் அகாடமியை உருவாக்கியவர்களில் பிரதானியான டி டி கிருஷ்ணமாச்சாரி எனும் டி டி கே. அவரது நெருங்கிய மருமகன் முறை உறவினர் டி எம் கிருஷ்ணா. இளவயதில் கிருஷ்ணாவையே பலர் கிருஷ்ணமாச்சாரி என்றுதான் அழைத்து வந்தனர்! கிருஷ்ணாவின் குருவான செம்மங்குடியும் அவரை அவ்வண்ணமே அழைத்தார். செம்மங்குடியுமே தமிழிசையை நிராகரித்தவர்.

“இது தான் நல்ல இசை.. நீ இதைப் பாடு என்று பாமரர்கள் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. இசையில் ஜனநாயகம் என்பது ஒரு பெரும் தீமை. நாங்கள் எங்களது இசைஞானத்திற்கு எந்தச் செவ்வியல் கிருதிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறோமோ.. அவற்றைப் பாடாமல் இருப்பது பாவச் செயல்” என்று ஒரு காலகட்டத்தில் தெள்ளத்தெளிவாக கூறிய செம்மங்குடியிடமிருந்து கர்நாடக இசையின் நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்த டி எம் கிருஷ்ணா இன்று கர்நாடக இசையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்காக மக்சேசே விருதைப் பெற்றிருக்கிறார்! இதை ஓர் ஆச்சரியமாகத்தான் நான் கருதுகிறேன். ஆனால் ஒரு செவ்வியல் இசை வடிவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதன் தேவை என்ன என்பதில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன.

செவ்வியல் இசையை ஒருபோதும் வெகுஜென இசையாக மாற்ற முடியாது. அது தேவையுமில்லை. ஏனெனில் வெகுஜென இசை எனும் பரவலான இசை பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. பழங்குடி இசையில் தொடங்கி, நாட்டுப்புற இசையாகி, ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான இசையாகி, வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு நாடுகளில் பலமுறைகளில் உருவாகி, பிறகு அவை ஒவ்வொன்றும் ஒன்று கலந்து, எடுத்தும் கொடுத்தும் உருவானது வெகுஜென இசை. அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இதே வெகுஜென இசையிலிருந்தே உருவானது செவ்வியல் இசை. கர்நாடக இசை ஓம் காரத்திலிருந்து பிறந்தது என்றோ அல்லது அது சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்தது என்றோ நம்ப விரும்பினால் நீங்கள் அதையே நம்பலாம்.

வெகுஜென இசையின் பரந்துபட்ட பாணிகளில் சிலவற்றை ஒரே திசையில் பயணிக்க வைத்து அதை மேலும் மேலும் அளவைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உள்ளாக்கி கடவுள் வழிபாட்டிற்காகவும் பக்தியைப் பரப்புவதற்காகவும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது கர்நாடக இசை. பயிர்ச்சிபெற்ற தனிமனிதர்களின் ரசனைக்காகவே அது  உருவானது. ஈடுபாட்டுடன் பயிர்ச்சியெடுத்து அதைத் தேடி வருபவர்களால் ரசிக்கக் கூடிய இசை இது. ஆனால் வெகுஜென இசையோ செவ்வியல் இசை உருவானபின் அதிலிருந்தும்கூட பலவற்றை உள்வாங்கி மேலும் மேலும் வளர்ந்து பரந்துகொண்டேயிருந்தது. அது இப்போதும் தொடற்கிறது. யாருமே வெகுஜென இசையைத் தேடிப் போக வேண்டியதில்லை. நாதச் செவிடர்களல்லாத (Tone Deaf) அனைவரிடமும் அது தானாகவே வந்து சேர்கிறது.

1930-50 காலகட்டத்தில் நமது திரைப்பாடல்களின் வாயிலாக கர்நாடக இசையின் எளிமைபடுத்தப்பட்ட வடிவங்கள் கூடுதலான மக்களை சென்றடைந்தது. அவ்விசையில் நாட்டம் இருந்தவர்களைதாம் அது பெருவாரியாக ஈரத்தது என்றாலும் கர்நாடக இசையை வெகுமக்களுக்குக் கொண்டுசெல்வதற்காக நடந்த மிகப்பெரிய புரட்சி இது ஒன்று மட்டுமே. ஆனால் அப்புரட்சியின் விளைவுமே அரைநூற்றாண்டுகாலம் கூட நீடித்திருக்கவில்லை. இன்று திரைப்பாடல்களிலிருந்து கர்நாடக இசை முற்றிலுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கர்நாடக இசையின் இருத்தலை மீட்டெடுக்கும் விதமாக டி எம் கிருஷ்ணாவின் மீனவக் குப்பத்து இசை நிகழ்ச்சிகள் அமைந்தால் அது நல்ல விஷயம். ஆனால் அது சாத்தியப்படுமா?

டி எம் கிருஷ்ணா மக்சேசே விருதினை கையில் வாங்கிவிட்டார். அதுபற்றியான சர்ச்சைகளும் விவாதங்களும் அடங்கி விட்டன. இசைவழியாக ஜாதி மத வேறுபாடுகளில் இங்கே எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏன் என்றால் ’நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்பது அடக்கியாளுதலை விரும்பும் மனிதனின் அதிகார வேட்கை. அது ஓர் ஆழ்மனநிலை. சிலபல காரணங்களினால் நாம் வெளியே காட்டாமல் மறைத்துவைத்திருப்பது. அவ்வப்போது வெளியே எடுப்பது. நமக்குள்ளே மேலோங்கிக்கொண்டேயிருப்பது. இந்த அவல மனநிலை மாறாமல் இங்கே ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே மறையப்போவதில்லை. இசையின் மென்மைக்கு இதில் எங்கே இடமிருக்கிறது?

20160831

புத்தகத்தின் இறுதிப் பக்கங்கள்...


‘’டேய்…. ஒழுங்கு மரியாதையா புத்தகங்களத் திருப்பிக் கொடுத்துரு. ஒனக்கான கடைசி எச்சரிக்கை இது. ஒங்கப்பாட்ட சொல்லிட்டு லைப்ரரி ரூல்படி ஒம்மேல கடுமையான நடவடிக்கை எடுத்துருவேன்’’ என்னை எங்கே பார்த்தாலும் இப்படிச் சொல்லிப் பயமுறுத்துவார் மானிச் சேட்டன். அவரது கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து சுற்றிக் கொண்டிருந்தேன். இருந்தும் சிலசமயம் அவர் முன்னால் வசமாகச் சிக்கி விடுவேன். எண்ணற்ற ’கடைசி’ எச்சரிக்கைகள் கடந்த பின்னரும் அந்தப் புத்தகங்களை என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. எப்படி முடியும்? அந்த விமலா ஒருத்திதானே இதற்கெல்லாம் காரணம்! அவளுக்கென்ன? நடவடிக்கை வரப்போவது என்மேல்தானே!

செண்பகப் பாறை பொது மக்கள் நூலகத்தின் பொறுப்பாளரும் நூலகரும்தான் மானிச் சேட்டன். அன்பான மனிதர். யாரிடமும் கோபப்படாதவர். ஆனால் அவரையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது வெறும் பதினைந்து வயதிலிருந்த எனது சில செயல்பாடுகள்! அப்பாவின் பெயரில் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்துகொண்டிருந்த எனது வாசிப்பு ஆர்வத்தைப் பார்த்து என்னையும் நூலக உறுப்பினராக்கியவர் மானிச் சேட்டன். ஒரு தடவை ஒரு புத்தகம்தான் கிடைக்கும். ஆனால் எனது ஆர்வத் தொல்லை தாங்க முடியாமல் சிலபோது இரண்டு மூன்று புத்தகங்களை எடுக்க அனுமதிப்பார். புத்தகங்களும் வாசிப்பும் மட்டுமே வாழ்வின் ஒரே கனவாக இருந்த காலம் அது.

விக்டோர் யூகோ (Victor Hugo), அலெஹான்ட்ரே டூமா (Alexandre Dumas) போன்ற பிரஞ்சு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து உலக இலக்கியங்களில் ஆர்வமுடையவனாக நான் மாறியிருந்தேன். ஒருநாள் நார்வே நாட்டு எழுத்தாளர் க்னூட் ஹாம்ஸுன் (Knut Hamsun) எழுதிய ’விசப்பு’ (பசி) என்ற நாவலையும் மலையாள எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்த எஸ் கே பொட்டெக்காட் எழுதிய விஷ கன்யக என்ற நாவலையும் எடுத்தேன். ‘ன்யூட் ஹாம்ஸன்’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்தாளரை அதன்முன் கேள்விப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மிகுந்த ஆர்வத்துடன் ’பசி’யைப் படித்தேன். உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைப் போராட்டத்தின் உருகவைக்கும் கதை அது.  

…… ”தெளிந்த இந்த பகலில் எதாவது சாப்பிடக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கொஞ்சம் எதாவது போதுமே… என்று வெளியே வந்த என்னை அழகான அந்த பகல் பொழுதின் துல்லியம் குதூகலப்படுத்தியது. கிழிந்த பையுடன் கசாப்பு கடையின் முன்னால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். இரவு உணவுக்கு ஒரு இறைச்சித் துண்டைத் தருமாறு அவள் கடைக்காரனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடந்து சென்றபோது அவள் தலை தூக்கி என்னைப் பார்த்தாள். அவளது கீழ் ஈற்றிலிருந்த ஒரே ஒரு பல் சீழ் மஞ்சள் நிறத்தில் விரல்போல் துருத்தி நின்றது. ஒரு பச்சை இறைச்சித்துண்டின் கனவு அவளது கண்களை ரத்தச் சிவப்பாக்கியது. எனது பசி மரத்துப் போய்விட்டது. நான் வாந்தியெடுக்கத் துவங்கினேன்” …..

இரண்டு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்துமுடித்து திருப்பிக் கொடுக்க நூலகம் சென்றுகொண்டிருந்தேன். காமாட்சி வயல் கடந்து பாட்டுபாறை வாய்க்காலை தாண்டும்போது விமலாவின் வீட்டின் முன்றிலை எட்டிப் பார்த்தேன். அவள் தென்படவில்லை. பிற்பகல் மூன்றுமணி கடந்த நேரம். வயல்புறங்களுக்கும் தோட்டங்களுக்கும் மேல் மினுமினுக்கும் சூரிய ஒளியைத் தவிர யாருமேயற்ற இடங்கள். வேகமாக நடந்தால் நாலு மணிக்குள்ளே நூலகத்தை அடையலாம். இதழ்களைப் படித்து, புத்தகங்களைத் தேடி எடுத்து இருளும் முன் வீடு திரும்பலாம்.

மெலிதான மேடுபள்ளங்களில் சாய்ந்துகிடக்கும் காரிக்கொம்பு பாறையைக் கடக்கும்போது சூ… சூ…. என ஒரு சத்தம் காதில் விழுந்தது. திரும்பி பார்த்தேன். மூச்சிரைக்க ஓடி வருகிறாள் விமலா. அவளுக்கு பதினான்கு வயதிருக்கும். அழகி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கோதுமை நிறத்தில் துடிப்புடன் வளரும் பதின்பருவப் பெண்மையின் வனப்பும் வசீகரமும் அவளுக்கிருந்தது. விமலாவும் நானும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு உயிர்கள். ஒருவர்மேல் ஒருவருக்குக் காதல் எதுவும் இருக்கவில்லை. நட்பும் இருக்கவில்லை. ஆனால் மோகம் இருந்தது. தூய்மையான பதின் பருவக் காமம்! யாருமற்ற கிராம வழிகளில் எங்கேயாவது அவ்வப்போது நாங்கள் சந்தித்தோம். எதாவது ஒன்றை பேசினோம். அவள் பேசுவது எதுவுமே எனக்குப் புரியாது. நான் பேசுவது அவளுக்கும்.

ஓடி வந்து நின்ற விமலாவின் மூக்கு நுனியில் வியர்வைத் துளிகளாக சூரியன் மின்னியது. பாறைகளுக்கு மேல் பலகாலமாக மனிதர்கள் நடந்து வெளிர் பழுப்பு நிறத்தில் உருவான நடைபாதையில் நாங்கள் சேர்ந்து நடந்தோம். எனது கையிலிருந்து புத்தகங்களைப் பறித்து புரட்டிப் பார்த்தாள். “இதென்ன? எப்பப் பார்த்தாலும் நீ புத்தகம் படிச்சிட்டே இருக்கியே! இதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிறே? அப்டி என்ன இருக்கு இதுல? நீ வர்றதப் பாத்து வீட்டுக்குப் பின்னாடி நின்னிட்டிருந்தேன். அம்மாவோட கண்ணுலப் படாமக் கிளம்பறதுக்குக் கொஞ்சம் நேரமாச்சு” அவள் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள். யாராவது எங்களைப் பார்க்கிறார்களா என்று நான் நாலாபக்கமும் பார்த்தேன். பாறை இடுக்கில் நுரைந்து ஓடும் வாய்க்கால் நீரின் ஓசையும் பின்நேரப் பறவைகளின் ஒலிகளும் மட்டுமே அங்கு இருந்தன.

வாய்க்காலின் கரையில் பெரிய கரும்பச்சை இலைகளுடன் அடர்ந்து நின்ற மேட்டுக் காப்பி மரம் ஓர் இலைக் குடிலாக எனக்குத் தோன்றியது. வளர்ந்திறங்கிய கிளைகள் மண்ணைத் தொட்டு நிற்கின்றன. அதன் கீழே நுழைந்தால் யார் கண்ணுக்குமே தெரியாது. நாம் அங்கே புகுந்திடலாமா என்று அச்சத்துடன் விமலாவைக் கேட்டேன். ”ச்சீ.. போ” என்று சொன்னவள் உடனே ‘காப்பிக் கீழே வச்சு நீ என்னை என்ன பண்ணப்போறே?’ என்றாள். அதோடு எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்த நான் அவளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் கொடுத்தேன். ‘ச்சீ போடா’ என்று என்னைத் தள்ளிவிட்டாள். ’சரி போறேன்’ என்று ஓடி வாய்க்காலைத் தாவிக் கடந்து திரும்பிப் பார்த்தேன். அதோ விமலாவும் ஓடி வருகிறாள்! வெளிச்சம் குறைவான காப்பி மரத்தடியில் தவழ்ந்து புகுந்தேன். கண நேரத்தில் விமலாவும் வந்து உள்ளே புகுந்தாள்.

கையிலிருந்த புத்தகங்களை ஒரு கல்லின்மேல் வைத்து அவசர அவசரமாக நான் விமலாவைக் கட்டியணைத்து என்னென்னமோ செய்ய முயன்றேன். ‘ச்சீ... உனக்கு வெட்கமே இல்லையா?’ என்றெல்லாம் கேட்டு அவள் ஒரே நேரத்தில் எதிர்ப்பையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினாள்! இத்தகைய நேரங்களில் ஆணும் பெண்ணும் என்னென்ன செய்வார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதில் எதைச் செய்யலாம் என்று யோசித்தபடி நான் சில வீண்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று மரத்தின் பின்னருகில் தாமஸூட்டி வைத்தியரின் தோட்டப் பகுதியிலிருந்து ஓர் ஆணின் உரத்த இருமலொலி கேட்டது. எனது பாதி உயிர் ஆவியாகப் பறந்தது. இருமலொலி நெருங்கி வருகிறது! வேறு எதுவுமே யோசிக்காமல் நான் தவழ்ந்து வெளியேறித் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன்.

அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. மரத்தின் கீழிருந்து நான் இறங்கி ஓடுவதை யாராவது பார்த்திருப்பார்களா? அந்த இருமல்காரர் யார்? அவர் என்னையும் விமலாவையும் பார்த்திருப்பாரா? விமலாவுக்கு என்ன ஆயிருக்கும்? அவள் பிடிபட்டிருப்பாளா? ‘உன்னோட இருந்தவன் யாருடீ?’ என்ற கேள்விக்கு அவள் என் பெயரைச் சொல்லியிருப்பாளா? ஒரு வேளை அவள் சொல்லவில்லை என்றாலும் புத்தகங்களின்மேல் நூலகத்தின் முத்திரை இருக்கிறதே! நான்தான் என்று எளிதில கண்டுபிடிப்பார்கள். நூலகப் புத்தகங்களைக் காட்டில் எறிந்து விட்டு தங்கம்மாவின் மகளுடன் காப்பி மரத்திற்குக் கீழே உல்லாசத்திற்கு ஒதுங்கிய வெட்கம் கெட்ட நாய்!

இல்லை… எதுவுமே நடந்திருக்காது. விமலா என்னை விடத் தைரியமானவள். அவள் தப்பித்திருப்பாள்.. காலையில் சென்று புத்தகங்களை எடுத்துவிடலாம் என்று உள்ளுக்குள்ளே எனக்கே ஆறுதல் சொல்லிக்கொண்டு தூங்க முயலும்போது திடீரென்று மழை விழத்தொடங்கியது. இரவு முழுவதும் ஓயாமல் பெய்த அந்தக் கனமழையில் எனது புத்தகக் காகிதங்கள் உதிர்ந்து கரைந்து ஒழுகிப்போவதை நினைத்து நான் நடுங்கினேன்.

விமலா சில சிறு குழந்தைகளுடன் சில்லி விளையாடிக் கொண்டிருந்தாள். முன்தினம் என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாருமே அவளைப் பார்க்கவில்லை என்று சொன்னாள். நான் ஓடிப்போன உடனே வேறு திசையில் வேகமாக ஓடி அவளும் வீடு வந்து சேர்ந்தாளாம். புத்தகங்களைப் பற்றி கேட்டபோது ‘எனக்கென்ன தெரியும்?’ என்றாள். பயந்து நடுங்கி தெறித்து  ஓடியபோது நானே மறந்துவிட்ட அந்த புத்தகங்களை அவள் எப்படி நினைவு கூர்ந்திருப்பாள்! காப்பி மரத்தின் கீழ் கருகிப்போன இலைகள் நனைந்து மக்கி ஈரத்தில் பதுபதுத்துக் கிடந்தன. அங்கு புத்தகங்களின் தடையமே இல்லை! அந்த புத்தகங்கள் எங்கே போயின என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது!

”புத்தகமென்பது வலுவற்ற ஓர் உயிரினம். அதைக் காலப்பழக்கத்தின் பிடியிலிருந்தும், வானிலையின் பிடிலிருந்தும் கொறித்துத் தின்னும் பூச்சிகளின் வாயிலிருந்தும், கவனமற்ற மனிதனின் எண்ணைப் பிசுக்கு படிந்த கைகளிலிருந்தும், அவனது மறதிகளிலிருந்தும் காப்பாற்றுகிறவர் நூலகர்” என்று உம்பேர்தோ எகோ (Umberto Eco) சொல்லியிருப்பது மானிச் சேட்டனைப் பற்றியேதான் என்று நான் பிற்பாடு பலமுறை யோசித்ததுண்டு. இறுதியில் பொறுமை இழந்த அவர் நூலகத்திலிருந்து என்னை வெளியேற்றினார். அப்பாவிடமிருந்து புத்தகங்களின் விலையை வசூலித்தார். அப்பா வழக்கம்போல் என்னை வெளுத்து வாங்கினார். வயதுக் கோளாறினால் நடந்த அந்தத் தவறு புத்தகங்களுடனான எனது தொடர்பை சிலகாலத்திற்கு அறுத்துவிட்டது.

புத்தகம் படிப்பவர்கள் நூலகங்களை மட்டுமே நம்பி வாழ்ந்த காலம் அது. புத்தகங்களை விலைக்கு வாங்கும் பழக்கம் யாருக்குமே இருக்கவில்லை. எனது நண்பர் ஸ்ரீநிவாசன் கரண்ட் பதிப்பகத்தின் ’வீட்டில் ஒரு நூலகம்’ திட்டத்தில் சேர்ந்து தவணை முறையில் பணம் செலுத்திப் புத்தகங்களை தபால் வழியாக வாங்கியதுதான் நான் அறிந்த முதல் இலக்கியப் புத்தகம் வாங்குதல். அப்புத்தகங்களை இரவல் வாங்கி நானும் படித்தேன். வீட்டையும் ஊரையும் விட்டு ஏதேதோ திசைகளில் பயணித்து ஒழுகிய எனது வாழ்க்கையில் போகுமிடமெல்லாம் எனக்குத் துணையாக இருந்தவை நூலகங்களும் புத்தகங்களும் மட்டுமே.

புத்தகங்கள் இடையறாமல் மனிதனை, வாழ்க்கையை, இயற்கையைப் பேசுவதோடு மற்ற புத்தகங்களையும் பேசுகின்றன. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு வழி வகுக்கிறது. ஒரு புத்தகமென்பது அதிலிருக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல. அவ்வார்த்தைகளுக்கு அப்பால் சென்று வாசகன் தனதுக்குள் இருக்கும் கற்பனை வளத்தைத் தொட்டு அறியும் பயண வழி அது. எழுத்தாளனுடன் அவன் நிகழ்த்தும் மௌனமான உரையாடல். காலங்கள் கடந்தோடினாலும் நினைவில் மிதந்துகொண்டேயிருக்கும் புத்தகங்களின் வாசனை. ஒருபோதும் மறக்கமுடியாத ஓர் அனுபவம் ஒரு நல்ல புத்தகம்.

புத்தகங்களை விலைகொடுத்து வாங்க ஆரம்பித்தபோது எனக்கு ஒன்று வெளிச்சமானது. நூலகங்களிலிருந்து எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் நாம் கட்டாயம் படித்துவிடுவோம். விலைகொடுத்து வாங்கும் புத்தகங்கள் நம்மிடமே இருக்கின்றவை என்பதால் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே என்ற எண்ணம் தானாக வந்துவிடும். உடனடியாகப் படிக்கப்படாமல் அப்புத்தகங்கள் தள்ளி வைக்கப்படும். சிலசமயம் ஒருபோதும் படிக்கப்படாமல் அடுக்கத் தட்டுகளிலேயே அவை அமர்ந்திருக்கும். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் வரிக்கு வரி நாம் படித்திருக்க வேண்டுமா? படிக்காத புத்தகங்களைச் சேர்த்துவைப்பதால் என்ன பயன்?

தமிழ்த் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் புத்தகங்களின் தீராக்காதலன். புத்தகம் வாங்க வழியில்லாத காலத்தில் புத்தகங்களுடன் நெருக்கமாக இருப்பதற்கும் படிப்பதற்கும் ஒரு புத்தகக் கடையில் விற்பனையாளனாக வேலை பார்த்தவர். ஓயாமல் படிப்பவர். இருபதாயிரத்திற்கும் மேல் புத்தகங்களை இதுவரைக்கும் வாங்கியிருக்கிறார்! வாசிப்பில் நாட்டமுள்ள நண்பர்களுக்கு எந்தவொரு புத்தகத்தையும் அன்பளிப்பாக எந்த நேரமும் கொடுக்கத் தயங்காதவர். நூற்றுக்கும் மேலான புத்தகங்களை எனக்கு மட்டுமே தந்திருக்கிறார்! பதினெட்டாயிரம் புத்தகங்களை இப்போதும் வைத்திருக்கிறார்!

தனது புத்தகங்களை அரங்கப் பொருட்களாக மட்டுமே அவர் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டையெல்லாம் பலமுறை சந்தித்தவர் மிஷ்கின். தனது பதினெட்டாயிரம் புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா? சிந்தனையாளர் சேலம் ஆர் குப்புசாமி 65000 புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறவர். அந்த 65000 புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறாரா? கடந்த 28 ஆண்டுகளில் ஒவ்வொன்றாகச் சேகரித்த ஐயாயிரத்திற்கும் மேலான ஆங்கில, தமிழ், மலையாளப் புத்தகங்கள் என்னிடம் இருக்கின்றன. நான் அந்த புத்தகங்கங்களையெல்லாம் படித்திருக்கிறேனா? 

ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்குவதே அது தனக்குத் தேவையானது அல்லது அது  உயர்வானது என்கின்ற எண்ணத்துடன்தான். புத்தகங்களை நேசிப்பவர்களும் தொடர்ந்து படிக்கும் பழக்கம் கொண்டவர்களும் மட்டும்தான் இடைவிடாமல் புத்தகங்களை வாங்குவார்கள். ஆனால் தங்களிடமிருக்கும் அனைத்து புத்தகங்களையும் அவர்கள் படித்திருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வாங்கிப் பலகாலமாகிய ஒரு புத்தகத்தை படிக்கலாமென எடுக்கும்போது அந்த புத்தகம் ஏற்கனவே நன்கு பரிச்சயமானதாகத் தோன்றும் அனுபவம் எனக்குப் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எப்போதாவது அதை புரட்டிப் பார்த்து மறந்திருக்கலாம். படித்த சில புத்தகங்களில் அதைப்பற்றியான குறிப்புகள் வந்திருக்கலாம். படித்த ஏதோ ஒரு நண்பர் அதைப்பற்றிச் சொல்லியிருக்கலாம்.

முழுமையாகப் படித்த புத்தகங்களைப் பற்றியே நம்மிடம் இருப்பது தோராயமான சில நினைவுகூறல்கள்தாம். முழுப்புத்தகத்தையும் நம்மால் ஒருபோதும் நினைவுகூற முடியாது. அனைத்தையும் நினவில் வைக்குமளவில் நினைவாற்றல் இருக்கும் ஒருசிலருக்கு ஒருவேளை அது சாத்தியப்படலாம். அவர்கள் கணினிகளைப் போன்றவர்கள். ஆனால் அது ஒரு தனித்திறனாகவோ சாதனையாகவோ நான் கருதவில்லை. பாகுபாடில்லாமல், பகுத்தறியாமல் படித்த அனைத்தையும் நினைவில் சேமித்து வைப்பதனால் யாருக்கு என்ன பயன்?

படித்தவை படிக்காதவை என்பதைக் கடந்து புத்தகங்கள் என்னிடமிருக்கும்போது நான் தனியனல்ல என்பதை உணர்கிறேன். என்றைக்காவது படிக்க முடியும் என்கின்ற கனவுடன் ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குகிறேன். வாழ்க்கையில் வாசிப்பு மட்டுமே இருக்கும் ஒரு காலம் கனவில் எப்போதும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஒருபோதும் அது நடக்காது என்று அறிவேன் என்றபோதிலும்! என்னிடமிருக்கும் புத்தகங்களில் பலதையும் படிக்காமலேயே நான் இறந்து போகலாம். இருந்தும் கையில் பணமிருந்தால் நான் புத்தகங்களை மேலும் வாங்குவேன். என்னிடம் இருக்கவேண்டும் என நினைக்கும் புத்தகங்களை யார் தந்தாலும் வாங்குவேன்.

எனது வீட்டின் நூலகத்தை பார்த்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மாமா ”எங்களது பழைய வீட்டைவிடப் பெரிய வீட்டில்தான் நான் இப்போது இருக்கிறேன். ஆனால் வீடுமாறி வரும்போது, பத்து பைசாவுக்கு உதவாத இதையெல்லாம் வைக்கப் புதுவீட்டில் இடமில்லை என்று சொல்லி, நூற்றுக்கணக்கான எனது புத்தகங்களையும் நாற்பதாண்டுகாலம் நான் எழுதிய நாள் குறிப்புகளையும் தூக்கிப் போட்டார்கள். பழைய அட்டை விலைக்கு கூட அதை வாங்க யாருமே முன்வரவில்லை” என்று வேதனையுடன் சொன்னார். அதைக் கேட்டபோது இனம் புரியாத ஒரு துயரத்தில் நானும் தடுமாறிப் போனேன். எனது வாழ்நாளின் மறுவிலையாக நான் வாங்கிய புத்தகங்கள் இடத்தை அடைக்கும் பழங்காலக் குப்பைகளாக ஒருநாள் வெளியே தூக்கி எறியப்படுமா? அதை நினைத்து அன்றிரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை! ஆனால் காலத்தின் ஓட்டத்தை குறுக்கிட யாரால் முடியும்?


உலக அளவில் பார்த்தால் காகிதத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களின் காலம் ஏறத்தாழ முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். மின் புத்தகங்களின் (eBook) காலம் ஆரம்பமாகி இப்போது சில ஆண்டுகளாகிவிட்டன. எனது வீட்டின் வரவேர்ப்பறையின் பெரும்பகுதியாக இருக்கும் புத்தக நிலையடுக்கில் இருப்பதை விட நூறு மடங்கு அதிகம் புத்தகங்களை இன்று ஒரு சின்னஞிறிய கைக் கணினியில் அடக்கலாம். சட்டைப்பையில் போட்டு எங்கேயும் கொண்டு செல்லலாம். 5000 காகிதப் புத்தகங்களை சேகரிக்க எனக்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த ஒராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேலான மின் புத்தகங்களைச் சேர்த்திருக்கிறேன்! அச்சிட்ட வடிவத்தில் என்னிடம் இல்லாதவை அவை. அப்புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றன என்கின்ற உடைமை உணர்வுக்காகத்தான் அவற்றை நான் சேர்க்கிறேன் என்றாலும் ஒரு புத்தகம் கையில் இருக்கிறது என்ற உணர்வை மின் புத்தகத்தால் ஒருபோதும் தரமுடியாது.

கின்டில் (Kindle), நூக் (Nook), கோபோ (Kobo), ஐ பேட் (iPad) போன்ற கைக்கணினிகளில் மின் புத்தகத்தைப் படிக்கலாம். கின்டிலில் புத்தகம் படிக்கும் பெரும்பாலானோர்கள் அச்சிட்ட புத்தகங்களுக்கு வைத்திருக்கும் பெயர் ’பழங்காலத்து காகித அட்டை’ (Old Fashioned Paperback) என்றுதான்! ஆனால் வேடிக்கையைப் பாருங்கள்! உயர் ரக கின்டில் கருவியின் பெயரோ ‘காகித வெண்மை’ (Paper White)!

மின் புத்தகங்களைப் பல மணிநேரம் தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருந்தால் கண் வீங்கிவிடும், அவை கண் பார்வையை வேகமாக மங்கலாக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. வெளி வெய்யிலில் அவற்றைப் படிக்க முடியாது, இரவல் வாங்கிப் படிக்க முடியாது, பழைய புத்தகங்களை விற்கும் கடைகளிலிருந்து அரிதான ஒரு பழைய மின் புத்தகத்தை கண்டடைந்து சந்தோஷப்பட முடியாது, சுவாரசியமான ஒரு பக்கத்தைப் படித்துகொண்டிருக்கும்போது திடீரென்று மின்கலத்தில் மின்சாரம் தீர்ந்து விடலாம், அபிமான எழுத்தாளரின் கையொப்பம் மின் புத்தகத்தின்மேல் வாங்க முடியாது, புத்தகக் கடைகளின், நூலகங்களின் காகித வாசனையை உணரமுடியாது… என மின் புத்தகங்களுக்கு எதிராக எவ்வளவு நான் யோசித்தாலும் வரப்போகும் ஆண்டுகளினூடாக காகிதப் புத்தகங்களின் இடம் இல்லாமலாகிவிடும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் புத்தகங்களை வாங்குவதிலிருந்து இது எதுவுமே இப்போதும் என்னை தடைவதில்லை. தற்போது சார்லஸ் ப்யுகோவ்ஸ்கியின் ’ஹேம் ஆன் றை’, ஸில்வியா ப்ளாத்தின் ’பெல் ஜார்’ ஆகிய புத்தகங்களுக்கு ஆமசோனில் அனுப்பாணைக் கொடுத்து அவை வருவதற்குக் காத்திருக்கிறேன்! சமீபத்தில் ஒருநாள் தில்லி விமான நிலையத்தின் மூலையிலுள்ள ஒடிஸி புத்தகக் கடையிலிருந்து றஸ்கின் பாண்ட் எழுதிய ’பல வண்ணங்களிலான அறை’ எனும் குழந்தை இலக்கியப் புத்தகத்தை வாங்கினேன். மிக அழகாய் வடிவமைக்கப்பட்ட அற்புதமான புத்தகம். விமானத்தில் ஏறின உடன் படிக்கத்துவங்கினேன்.

எனது பக்கத்து இருக்கையில் வந்து அமர்ந்தவர் தனது மின்புத்தகக் கருவியை வெளியே எடுத்து அதன் குரல்வாங்கியைக் காதில் வைத்தார். பாட்டு கேட்டுக்கொண்டே படிக்கப் போகிறாரோ என்று யோசித்து அக்கருவியின் திரையை பார்த்தேன். புத்தகம் ஒன்று ’ஓடி’க்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் கண்மூடி அமர்ந்திருக்கிறார்! ஒரு பெண்குரல் மென்மையாக அவரது காதில் புத்தகத்தைப் படித்துக் கொடுக்கிறது! புத்தகங்களை இனிமேல் நாம் சிரமப்பட்டு படிக்க வேண்டியதுமில்லை! இளம் பெண்களின் இனிமைக்குரல்கள் நமது காதுகளில் தேன் பாய்வதுபோல் புத்தகங்களை படித்துத் தரும்!

ஒரு கணம் நான் விமலாவை நினைத்தேன். ஒரு புத்தகத்தைக் கூட படிக்காத விமலா! பல காதல்களையும் பிரிவுகளையும் திருமணங்களையும் மணமுறிவுகளையும் பிரசவங்களையும் தாங்கி இளமையிலேயே கிழவியாகிப்போன விமலா இறந்துபோய் இப்போது பல ஆண்டுகள் ஆகின்றன. மழைநீரில் கரைந்து காணாமல்போன அந்த புத்தகங்களைப்போல் விமலாவும் இல்லாமலாகிவிட்டாள்.