20100624

எடித் பியாஃப் : அழிவற்ற குரல்

சில வருடங்களாக நான் இசை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறேன். இந்தக் கட்டுரைகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பு உண்மையிலேயே சொற்களில் அடங்காதது. பதினேழு முதல் எழுபது வயதுவரை உள்ள வாசகர்கள் இதை வாசித்துப் பாராட்டுகிறார்கள். டி.ஆர்.மகாலிங்கத்தின் மகள் சாவித்ரி, மதன் மோகனின் மகன் சஞ்சீவ் கோஹ்லி, சலில் சௌதுரியின் மனைவி சபிதா சௌதுரி உட்பட பலர் அந்தந்த கட்டுரைகளை படித்து பாராட்டியது என்னை எளிமையுணர்ச்சியும் பெருமிதமும் கொள்ளச்செய்த தருணங்கள்.

பாராட்டுகளும் விமரிசனங்களுமாக எப்போதுமே நண்பர்கள் கூப்பிடுகிறார்கள். தமிழ் திரைப்பட பாடலாசிரியர் நன்பர் நா.முத்துக்குமார் கூப்பிடத்தவறுவதில்லை. அவர் சமீபத்தில் ராய் ஆர்பிசன் மற்றும் டி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரைப்பற்றியான என் கட்டுரைகளை வாசித்தபின் கூப்பிட்டு சொன்ன கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவனவாக இருந்தன. நான் எப்போதுமே பாடல்களை குரலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து மதிப்பிடுகிறேன், பாடல் வரிகளை பொருட்படுத்துவதேயில்லை என்று அவர் சொன்னார்.
--------------------------------
சினிமா இசையைப்பற்றி சென்னை பல்கலையில் ஒரு ஆய்வுரை நிகழ்த்தும்போது ஒரு முதுகலை மாணவர் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். அவரது சொற்களில் நான் இசையின் உடலை மட்டுமே பொருட்படுத்துகிறேன். அதன் ஆன்மாவை மறந்துவிடுகிறேன். அதாவது அதன் அர்த்தத்தை, பாடல் வரிகளை! என்னுடைய கருத்தில் வரிகள் பாடல்களுக்கு மிக மிக முக்கியமானவைதான், ஆனால் அவற்றுக்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
--------------------------------
பாடல் வரிகளுக்கு மொழி என்னும் வரையறை உண்டு. இசைக்கு அந்த வரையறை இல்லை. இசை எந்த மொழிக்கும் எளிதாக தன்னை தகவமைத்துக்கொள்கிறது. இசை ஒரு சர்வதேச மொழி. ஒரு மானுடம்தழுவிய கலை. இசை என்பது மனிதகுலத்துடன் தோன்றிய புராதனமான கலை. பாடல் அதற்கெல்லாம் வெகுவாக பிறகு, மொழிகள் உதயமாகி வளர்ந்த பிற்பாடு உருவான ஒன்றுதான். அதனால் நாம் பேசும் மொழியுடன் இசையையும் கலையையும் நம்முடைய நுண்ணுணர்வையும் பிணைத்துப்பார்ப்பது என்பது மிக அபத்தமான ஒன்று.

எந்த ஒரு இசை வடிவத்துக்கும் அதன் இசையமைப்பு மிக முக்கியமான அம்சமாகும். ஆனால் வரிகளைப்பற்றி அம்மாதிரி சொல்ல முடியாது. குரலால் பாடப்படும் இசையில் கூட குரலின் இயல்பின் அளவுக்குக் வரிகள் முக்கியமானவை அல்ல. அபத்தமான அல்லது எந்த அர்த்தமும் இலாத வரிகள் கூட சிறந்த இசையில் சிறப்பான குரலில் மிகச்சிறந்த பாடல்களாக வெளிப்பட்டுவிடமுடியும். இதற்க்கு சிறந்த உதாரணம் அடீமஸ் [Adiemus].

அடீமஸ் என்பது தர்கால உலக இசையில் உள்ள ஒரு அற்புதமான அனுபவம். ஒரு புது வழி. அதை ஒரு சமகால குரல் இசைக்குழு அல்லது ஒரு இசைப் போக்கு என்று சொல்லலாம். பிரிட்டிஷ் இசையமைப்பாளர் கார்ல் ஜென்கின்ஸ் [Karl Jenkins] அவர்களால் இசையமைத்து வெளியிடப்படும் இசைத்தொகுதிகளின் பொதுப்பெயர் அது. செவ்வியல் இசை மற்றும் நவீன உலக இசையின் பிரச்சாரகரான கார்ல் ஜென்கின்ஸ் அடீமஸ் திட்டத்தை 1995ல் தான் தொடங்கினார். இன்று அது சமகால உலக இசையின் ஒரு மிகப்பிரபலமான வடிவமாகவும் அத்துடன் பெரும் வெற்றிபெற்ற ஒரு பரிசோதனை முயற்சியாகவும் உள்ளது.

ஐரோப்பிய செவ்வியல் இசை, காஸ்பெல் [Gospel] இசை, பல்வேறு ஆப்ரிக்க இசைகள் போன்ற உலக இசை மரபுகளை பழங்குடி இசைக்குரிய தாள லயத்துடன் கலந்து உருவாக்கப்பட்ட அற்புதமான இசை அடீமஸ். அதன் அடிநாதமான உணர்வென்பது, மேர்கத்திய மரபிசையோடு ஆப்ரிக்க, கீழ்திசை இசைக்கோலங்களைக் கலர்ந்து நவீன உலக இசைக்கு ஊக்கமூட்டுவதும் எழுச்சியூட்டுவதுமாகும். இந்த அடீமஸ் இசையின் அடிப்படையான கருதுகோள்களில் ஒன்று அதற்கு பாடல்வரிகள் இல்லை என்பதே!

அடீமஸ் பாடல்கள் அனைத்துமே பிரம்மாண்டமான கருவியிசைப்பின்னணியில் ஒலிக்கும் குரல் ஆலாபனைகள் தான். கார்ல் ஜென்கின்ஸ் அவரே கண்டுபிடித்த அர்த்தமில்லாத வெற்று சொற்களைத்தான் அடீமஸ் பாடகர்கள் பாடுவார்கள். உதாரணமாக

கா ரீ கா னீ மா கா ரீகா னீ மா கா ரீ மா ரா மா ரீ மா கா ரா

அல்லது

அ ரீ அ டி அ முஸ் லா டே, அ ரீ அ டி அ முஸ் டா

அ ரீ அ நா டஸ் லா டெ ஆ டோ ஆ

நமக்கு தெரியாத எல்லா மொழிகளும் நம் காதுகளுக்கு இப்படித்தான் ஒலிக்கின்றன இல்லையா? அஸ்ஸாமிய மொழிப்பாடலைக் கேட்டால் தமிழ் காதுக்கு அது எப்படி இருக்கும்? அடீமஸின் 'மொழி' அதன் ரசிகனை அந்த இசை, குரல் ஆகியவற்றில் இருந்து வார்த்தைகளால் கவனத்தை விலக்காமல் கேட்கச்செய்கிறது.

கார்ல் ஜென்கின்ஸ் சொல்கிறார் ''அடீமஸ் இசையில் உள்ள வரிகள் ஒலிநேர்த்தியை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்படுகின்றன. அதன் 'வார்த்தை'கள் ஒலியழகுக்கான கருவிகளாகவே எண்ணப்படுகின்றன. பாடல் வரிகளின் கவனக்கலைப்பை தவிர்ப்பதன்மூலம் நாங்கள் காலாதீதமான உலகப்பொதுவான ஓர் மானுட சத்தத்தை உருவாக்குகிறோம். அடீமஸ் என்பது ஒரு லத்தீன் வார்த்தை. 'நாம் நெருங்குவோம்' என்று அதற்குப்பொருள். மொழிகளின் எல்லைகளைத்தாண்டி மனிதர்களை நெருங்க வைப்பதே இதன் மையக்கருத்து''. 2003ல் வெளிவந்த The Essential Adiemus என்ற தொகுப்பை நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்று நான் வலிமையாகவே சிபாரிசுசெய்கிறேன்.

அடீமஸ் இசையின் மற்றுமொரு சிறப்பு அதில் குரல் என்பது ஓர் இசைகக்ருவியைப்போலவே பணியாற்றுகிறது என்பது தான். உலகில் ஆயிரக்கணக்கான இசைக்கருவிகள் இருக்கும்போது மனிதக்குரலை ஏன் அப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். பதில் எளிமையானது. மனிதக்குரலில் உள்ள உணர்வெழுச்சியையும் உருக்கத்தையும் எந்த இசைக் கருவியும் அளித்துவிட முடியாது. ஏனென்றால் அது நம் சக மனிதனின் குரல். இசை எழுப்பக்கூடிய மனிதக்குரல்தான் உலகின் ஆகப்பழைமையானதும் மிக வலிமையானதுமான இசைக்கருவி.

அத்தகைய வலிமையான, ஆத்மா நிறைந்த மானுடக்குரலுக்கு சொந்தக்காரி ஃபிரான்ஸ் நாடுப் பாடகி எடித் பியாஃப் (Edith Piaf). இசையமைப்பை விட, வரிகளை விட பாடும் குரல் மிகமுக்கியமானதாக ஆகும் நிலைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்று எடித் பியாஃபை சொல்லலாம். ஃப்ரான்ஸின் முன்னணி இசையமைபபளர்களும் பாடலாசிரியர்களும் அந்த குரலுக்காக காத்திருந்தார்கள். எடித் பியாஃப் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு ஃபிரெஞ்ச் பாடலாசிரியனின் ஆகச்சிறந்த கனவு என்பது எடித் பியாஃப் தன்னுடைய பாடலை அவரது ஆத்மா ததும்பும் குரலில் பாடவேண்டும் என்பதாகவே இருந்தது. எடித் பியாஃப் ஃபிரான்ஸின் கலாச்சாரச் சின்னமாகவும் அவர் வாழ்ந்த பாரீஸ் நகரின் இசையின் மனித உருவாகவ்ம் கருதப்பட்டார்.

எடித் பியாஃப் என்ற பேருக்கு சின்ன சிட்டுக்குருவி என்று பொருள். அவர் சிறிய உருவம் கொண்டவர். நான்கு அடி எட்டு அங்குலம் மட்டுமே. ஆனால் இன்றும் ஃப்ரான்ஸில் அவரது பாதி உயரத்தை எந்த பாப் பாடகரும் அடையவில்லை. ஃபிரான்ஸ் உருவாக்கிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் விட பெரும் புகழ்பெற்ற எடித் பியாஃபின் பெயர், பால்வழியில் இருக்கும் ஒரு கோளுக்கு வரை இன்று போடப்பட்டிருக்கிறது! 3772 PIAF.

1915ல் பிறந்து 1963ல் மறைந்த எடித் பியாஃபின் வாழ்க்கையும் இசையும் பற்றி 2007ல் La Vie en Rose (சிவப்பில் வாழ்க்கை) என்ற ஃபிரென்சு திரைப்படம் வெளியானபோது உலகம் முழுக்க மீண்டும் பேசபப்ட்டன. ஒலிவியர் டகான் [Olivier Dahan] இயக்கிய அந்த படத்தில் எடித் பியாஃப் ஆக நடித்த மேரியன் கொட்டில்லார்ட் [Marion Cotillard] சிறந்த நடிகைககன ஆஸ்கார் விருதை பெற்றார். 'சிவப்பில் வாழ்க்கை' என்பது 1946ல் வெளியான எடித் பியாஃபின் மிகப்பிரபலமான ஒரு பாடலின் தலைப்பு.

'பாரீஸ் வானத்தின் கீழே' [Sous le ciel de Paris-1954], 'என்னுடைய படைவீரன்' [Mon Legionnaire-1936], 'நீயே எவ்விடத்திலும்' [Tu es partout -1943], 'படையணியின் கொடி;' [Le Fanion de la Legion-1936], 'காதலின் கீதம்' [Hymne thu l'amour-1949], 'பழைய காதலர்களின் ஓர் நாள்' [Les Amants d'un jour -1956], 'கூட்டம்' [La Foule -1957], 'ஃபின்லாந்தின் பனி' [Les neiges de Finlande -1958], 'இல்லை, நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை' [Non, je ne regrette rien-1960] போன்ற அவரது பிரபலமான பாடல்கள் ஃபிரெஞ்சு மனத்தில் என்றென்றும் நீடிக்கும் ஆழமான பாதிப்பு உடையவை.

இசைக்கு மொழி தடையல்ல என்பதற்கான மற்றும் ஓர் ஆதாரமாக தன் ஃபிரெஞ்ச் பாடல்கள் வழியாகவே எடித் பியாஃப் அமெரிக்க ரசிகர்களின் மனத்தையும் கவர்ந்தார். கிட்டத்தட்ட பத்து ஃபிரெஞ்ச் இசைப்படங்களில் நடித்தார். ஏராளமான ஃபிரெஞ்ச் இசை நாடகங்களில் தோன்றினார். அவை கலைப்பெறுமதியிலும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றவை. அவரது வாழ்க்கையைப்பற்றி பல ஆவணப்படங்களும் திரைபப்டங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 1958ல் வெளிவந்த அவரது சுய சரிதையான 'அதிருஷ்ட சக்கரம்' (The Wheel Of Fortune) பத்துலட்சம் பிரதிகள் வரை விற்று சாதனை புரிந்தது. அவர் இறந்து 46 ஆண்டுகள் தாண்டியும் அவரது வாழ்க்கை வரலாறுகள் ஆர்வத்துடன் வாங்கப்படுகின்றன, படிக்கப்படுகின்றன.

எடித் பியாஃப் 1915 டிசம்பர் 19 அன்று பாரீஸில் பிறந்தார். அவர் பிறக்கும்போது அவரது அம்மா அன்னெட்டா ஜியோவன்னாவுக்கு பதினேழு வயதுகூட ஆகியிருக்கவில்லை. அவள் ஒரு தெருப்பாடகி. அவ்வப்போது விபச்சாரத் தொழிலும் செய்துவந்தார். குழந்தையின் அப்பா லூயி கேஸான் [Louis Gassion] எங்கோ அலைந்துகொண்டிருந்த ஒரு தெருக்கழைக்கூத்தாடி. குழந்தையை பெற அஸ்பத்திரிக்குப் போக அன்னெட்டாவிடம் பணம் இருக்கவில்லை. ஆகவே பாரீஸ் நகர் தெருவில், டிசம்பர் பனியின் கடும்குளிரில் ஒரு விளக்குக் கம்பத்தின் கீழே, இரு போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்க்க அவள் அக்குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

அன்னெட்டா ஒரு மது அடிமை. வாழ்க்கை முழுக்க இலக்கில்லாமல் அலையும் வழக்கம் கொண்டவள். சர்க்கஸ்காரர்களுடன் பயணம் செய்வாள். திருவிழாக்களில் அலைந்து திரிவாள். மதுபான்க்கடைகளில் தன் வாடிக்கையாளர்களை பிடிப்பாள். அவள் அந்த குழந்தையை மது அடிமைகளாக இருந்த தன் பெற்றோரிடமே விட்டு விட்டாள். இரண்டு வருடங்கள் கழித்து குழந்தையின் தந்தையைக் கண்டுபிடித்த போது, அந்த நோயுற்ற அழுக்கான பிஞ்சு உருவத்தை அந்த கழைக்கூத்தாடிமுன் வீசி விட்டு போய்விட்டாள். குழ்ந்தையை வளர்ப்பதற்கான பணமோ நேரமோ அதன் அப்பாவிடம் இருக்கவில்லை. நார்மண்டி என்ற ஊரில் ஒரு விபச்சார விடுதி நடத்தி வந்த தன் அம்மாவிடம் குழந்தையைக் கொண்டுசென்று விட்டார். அந்த விபச்சார விடுதியில் இருந்த பெண்கள்தான் சிறுவயதில் எடித்தை வளர்த்தார்கள்.

மூன்று வயதில் ஏதோ கடுமையான கண்நோவினால் முற்றிலும் பார்வையை இழந்த எடித் தன் ஏழு வயதுவரை குருடாகவே இருந்தாள். சிறுமியான எடித்தை டிடீன் என்று பேருள்ள ஒரு விபச்சாரப்பெண் தன் மகள் போலவே பார்த்துக்கொண்டாள். அங்கிருந்த விபச்சாரப்பெண்கள் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து ஏராளமான பணத்தைச் சிகிட்சைக்கு செலவழித்து எடித்தின் பார்வையை மீட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் அவளை புனித தெரஸாவின் மடாலயத்துக்கு ஒரு புனிதப் பயணம் கூட்டிச்சென்றதாகவும் அங்கே அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது அவள் அற்புதகரமாக குணமா¡னதாகவும் ஒரு கதை இருக்கிறது. விபச்சார விடுதியில் எல்லா பெண்களுக்கும் அவளை மிகவும் பிடித்திருந்தது. எல்லாருக்கும் அவள் செல்லமாக இருந்தாள். பின்னாளில் அந்த விபச்சார விடுதி வாழ்க்கைதான் தன் வாழ்க்கையின் பொன்னான பகுதி என்று எடித் பியாஃப் பின்னர் சொல்லியிருக்கிறார்!

அவளுக்கு பத்து வயதானபோது எடித்தின் அப்பா திரும்பி வந்தார். தெருவில் வித்தை காட்டி பிச்சை எடுக்க அவருக்கு துணை தேவைபப்ட்டது. எடித்தின் பாட்டியும் மற்ற பெண்களும் அவளைக் கொடுக்க மறுத்தாலும் அவர் வலுக்காட்டாயமாக அவளை தூக்கிச்சென்றார். அவளுக்காக அந்த விபச்சார விடுதியே கதறி அழுதது. டிடீன் மயங்கி விழுந்தாள். தன் தாயைப்போல இருந்த டிடீனை பிரிந்தபோது எடித் கதறி அழுதாள். பின்னர் பல வருடங்கள் எடித் தன் தந்தையுடன் தெருவில் வாழ்ந்தாள். வித்தை முடிந்தபின்னர் தொப்பியை ஏந்தி பிச்சை எடுத்தாள். நாற்றமடிக்கும் விடுதியறைகளில் தூங்கினாள்.

இத்தகைய நிகழ்ச்சிகளின் நட்வே ஒருமுறை எடித் தன் தொப்பியை பிச்சைக்காக நீட்டிக்கொண்டிருந்தபோது பார்வையாளர்களில் இருந்த ஒருவன் அவளிடம் ஏதாவது நிகழ்ச்சி ஒன்றை நடத்தும்படிச் சொன்னான். அவளுக்கு கழைக்கூத்து ஏதும் தெரியாது, ஆனால் ஏதாவது ஒன்றைச் செய்து காட்டும்படி அவள் அப்பா கட்டாயப்படுத்தினார். மிகுந்த தயக்கத்துக்குபின்னர் அவள் அவளுக்குத் தெரிந்திருத ஒரே பாடலை பாடிக்காட்டினாள். அது La Marseillaise என்று அழைக்கப்படும் ஃபிரான்ஸ் நாட்டின் தேசியகீதம்! 'தந்தையர் நாட்டின் குழந்தைகளே' என்று துவங்கும் அந்த வரிகளை அவள் மிகுந்த உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பாடினாள். அந்த உணர்ச்சிகள் அவளுக்குள் நிறைந்திருந்த துயரமும் தனிமையும் ஏமாற்றமும் தான். கூட்டத்திடமிருந்து பண உதவிகள் கொட்டின. எடித் பியாஃப் நடத்திய முதல் இசை நிகழ்ச்சியே மிக வெற்றிகரமானதாக இருந்தது!

அப்பாவின் தெருவித்தைகளை விட தன்னுடைய பாட்டுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிந்ததும் எடித் ஒரு தெருப்பாடகியாக மாறினாள். தனக்குத்தெரியமாலேயே அவள் தன் தாயின் பாதங்களைப் பின்பற்றிவிட்டாள் என்று சொல்லலாம். 15 வயதில் அப்பாவை உதறிவிட்டு ஒரு தோழியுடன் பாரீஸில் தெருவுகளில் பாடி பிச்சையெடுத்து வாழ ஆரம்பித்தாள். தோற்றத்தில் பரிதாபமாக இருந்தாலும் அவள் குரல் தெருவில் சீக்கிரத்திலேயே புகழ்பெற்றது. கவனமில்லாமல் கடந்துசெல்லும் ஒருவரைக்கூட அவளுடைய அழகான உணர்ச்சிமிக்க குரல் கவர்ந்திழுத்தது.

பதினாறு வயதில் எடித் ஒரு பதினேழு வயது தெருப் பையனிடம் காதல்கொண்டு குழந்தையும் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு மார்சேல் [Marcelle] என்று பெயர் வைத்தாள். கையில் பணமில்லாமல் ஓர் அழுக்கான இடுங்கிய அறையில் கைக்குழந்தையுடன் வாழ்வது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் அப்போதுகூட எடித் ஒரு நல்ல அம்மாவாக இருக்க முயன்றாள். இரண்டு வயதாவதற்குள் தன் குழந்தை ஊட்டச்சத்துக்குறைவால் இறந்தபோது எடித் மனம் இடிந்துபோனாள். ஆனால் தெருவாழ்க்கையின் சவால்களினால் சீக்கிரமே அதிலிருந்து மீண்டு தெருக்களில் மறுபடியும் பாட ஆரம்பித்தாள்.

இக்காலகட்டத்தில் ஆல்பர்ட் என்ற குரூரமான பெண்தரகனிடம் எடித் சிக்கிக்கொண்டாள். ஆல்பர்ட் அவனது கட்டுப்பாட்டில் இருந்த விபச்சாரிகளை கொடுமைசெய்கிறான் என்று அவளுக்குத்தெரிந்திருந்தும்கூட அவள் அவனுக்கு அடிப்பட நேர்ந்தது. எடித் நாடியது தன் தெருவாழ்க்கையில் ஓர் ஆணின் பாதுகாப்பை. ஆனால் அவன் அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அந்தப்பணத்தையும் முழுக்கவே தானே எடுத்துக்கொண்டான்.

சிறியதும் அழகற்றதுமாக இருந்த எடித்தின் உடம்பு வாடிக்கையாளர்களால் அதிகமாக விரும்பப்படவில்லை. தெருவில் பாடுவதன் மூலம் தன்னால் விபச்சாரத்தை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதையும் அந்தப்பணத்தை அவனே வைத்துக்கொள்ளலாம் என்பதையும் ஆல்பர்ட்டுக்குப் புரியவைத்து விபச்சாரத் தொழிலிலிருந்து அவள் ஒரு வழியாக தப்பித்தாள். ஆல்பர்ட் ஒரு விபச்சார பெண்ணைக்கொன்று போலீஸால் துரத்தபப்ட்டபோது எடித் அவன் பிடியில் இருந்தும் தப்பினாள்.

கடும்குளிர்காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு மாலையில் எடித் ஓர் இருண்ட தெருமூலையில் பாடிக்கொண்டிருந்தாள். அப்போது லே கெர்னி [Le Gerny] என்ற பெயருள்ள ஒரு காபரே (Cabaret) மற்றும் கஃபேயின் (Cafe) உரிமையாளரான லூயி லெப்லீ [Louis Leplee] அவ்வழியாக நடந்துசென்றார். அவளுடைய குரலின் வசீகரத்தைக் கவனித்த லூயி லெப்லீ அப்போதே அவளுக்கு தன் கஃபேயில் பாடுவதற்கான வாய்ப்பை வழங்கினார். அவளுக்கு பியாஃப் அதாவது சின்ன சிட்டுக்குருவி என்ற பெயரை அவர்தான் வழங்கினார். அவளுடைய சிறிய தோற்றத்துக்கு அந்த பெயர் மிகப்பொருத்தமானதாக இருந்ததாம். முதல் நிகழ்ச்சியின்போது எடித் மிகமிக பதற்றமாக இருந்தாள்.

தோற்றப் பொலிவுக்காக லெப்லீ வழங்கிய கறுப்பு சட்டைக்குள் அவள் பயந்து நடுங்கிக்கொண்டே இருந்தாள். எடித் பியாஃப் பாடிய உணர்ச்சிகரமான காதல் கதைப்பாடல்கள் (Ballads) சீக்கிரத்திலேயே பாரீஸில் பெரிய பேச்சாக மாறின. உள்ளத்தைப் பிழியும் குரல் கொண்ட அந்த நாடோடிப்பெண்ணைப்பற்றி இசை ரசிகர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த இரவு விடுதியின் பாடகியாக எடித் பியாஃப் மாறினார். அந்த கறுப்பு சட்டை அவரது நிரந்தர மேடை உடையாகவும் மாறியது. நடிகரான மாரீஸ் ஷெவாலியேர் [Maurice Chevalier], கவிஞர் ஜாக் போர்கேட் [Jacques Borgeat] போன்ற பிரபலமான மனிதர்கள் அங்கு அவளுக்கு நண்பர்களாக ஆனார்கள். ரேமண்ட் ஆஸோ [Raymond Asso] என்ற இசையறிவு மிக்க பெரும் பணக்காரரும் அவளுடைய நண்பராக ஆனார். திருமணமாகிய அவருக்கு எடித் பியாஃப் மேல் பாலியல் ஈர்ப்பும் இருந்தது என்றாலும் எடித் பியாஃப் அதை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை.

லூயிஸ் லெப்லீ எடித் பியாஃப்பை ஒலிப்பதிவுக்கூடத்துக்குக் கொண்டுசென்று 'மணிகளை இசைக்கும் குழந்தைகள்' (Les Mப்mes de la cloche) என்ற அவருடைய முதல் பாடலை ஒலிப்பதிவுசெய்தார். அவருடைய இசை வாழ்க்கை சட்டென்று விரிய ஆரம்பித்த தருணம்! ஆனால் அதே வாரத்தில் லூயிஸ் லெப்லீ அவரது இல்லத்தில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். சந்தேகம் எடித் பியாஃப் மீதும் விழுந்தது. அவருடைய இறந்தகாலம் அவரை போலீஸாரின் கண்ணில் மோசமாக காட்டியது. வேறு வழியில்லாமல் எடித் பியாஃப் முதலில் அவரால் நிராகரிக்கபப்ட்ட ரேமண்ட் ஆஸோவை தஞ்சம் புகுந்தார். ஆஸோ தன்னுடைய பணத்தை பயன்படுத்தி எடித் பியாஃபை மீட்டெடுத்தார். அவர்களின் காதல் ஆரம்பித்தது.

ஆஸோ எடித் பியாஃப் மீது உக்கிரமான காதல் கொண்டிருந்தார். அவள் தன் இசைவாழ்க்கையை உருவாக்கிக்கொள்வதற்கு தன் உழைப்பையும் செல்வத்தையும் அர்ப்பணித்தார். ஜாஜ் பெர்னாட் ஷாவின் 'பிக்மேலியன்' நாடகத்தில் வருவது போலவே ஒரு தெருப்பெண் என்ற நிலையில் இருந்து ஒரு நாகரீக வனிதையாக அவளை அவர் வடிவமைத்தார். பெண் பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான மார்கரேட் மோனோத் [Marguerite Monnot] உடன் இணைந்து ஆஸோ தான் எடித் பியாஃபின் ஆரம்பகால வெற்றிப்பாடல்களை இசைத்தட்டாக கொண்டுவந்தார். அப்பாடல்கள் வழியாக எடித் பியாஃப் புகழிலும் செல்வத்திலும் மேலேறி நட்சத்திரமாக ஆனார். ஆஸோ எடித் பியாஃபின் நிர்வாகியாகவும் செயல்பட்டார்.

ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை. ஆஸோ மிகவும் கண்டிப்பான செல்வாக்கு செலுத்தும் தன்மை கொண்ட மனிதர். ஆகவே எடித் பியாஃப் அவரை உதறிவிட்டு தன்னை பாரீஸின் உயர்குடி வாழ்க்கைக்குள் கொண்டு செல்லும் வல்லமை கொண்டிருந்த பால் மாரீஸ் [Paul Meurisse] என்ற பாடக நடிகனை காதலனாக ஏற்றுக்கொண்டார். அவரே எடித் பியாஃபுக்கு நல்ல ஃப்ரெஞ்சில் பேசவும் உயர்குடி மரியாதைகளுடன் புழங்கவும் சொல்லிக்கொடுத்தவர். இக்காலத்தில் எடித் பியாஃப் அவளுடைய தெருவாழ்க்கையின் அடையாலங்களை முழுமையாகவே துடைத்தழித்துக்கொண்டார். பாரீஸின் உயர்குடிகள் மத்தியில் மிகமிக விரும்ப்படக்கூடியவராக ஆனார்.

எடித் பியாஃப் சீக்கிரத்திலேயே பாரீஸின் மிக வெற்றிகரமான கேளிக்கையாளராக ஆனார். பெரும்புகழ்பெற்ற ஃபிரெஞ்ச் நாடக ஆசிரியரும் திரைப்பட இயக்குநருமான ஜீன் கோக்டே [Jean Cocteau] யின் நெருக்கமான நண்பராக ஆனார். அவர் எடித் பியாஃபுக்காகவே ஒரு நாடகத்தை எழுதினார். அது அவளது நடிப்பு திறமைகளையும் மேடையில் கொண்டு வரும் நோக்கம் கொண்டதாக இருந்தது. அந்த நாடகம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து எடித் பியாஃப் பிரபல ஃபிரெஞ்சு நடிகர் லூயி பரால்ட் [Louis Barrault] டுக்கு இணயாக திரைப்படத்திலும் தோன்றினார். மாரீஸின் உறவை உதறிவிட்டு பாடலாசிரியரான ஹென்றி கொண்டெட் [Henri Contet] என்பவரை துணையாக ஏற்றுக்கொண்டார் எடித் பியாஃப். பிற்காலத்தில் எடித் பியாஃப் பாடிய கணிசமான பாடல்களை எழுதியவர் அவரே.

இப்படி எத்தனையோ ஆண்கள் எடித் பியாஃபின் வாழ்க்கையில் வந்து போனார்கள்! பலநூறு காதலர்கள்! மூன்று கணவர்கள்!தான் மணந்துகொண்ட அல்லது சேர்ந்து வாழ்ந்த எந்த ஆணுக்கும் விசுவாசமாக எடித் பியாஃப் இருக்கவில்லை. சிறுமியாக விபச்சார விடுதியில் வாழ்ந்ததும் சிறு வயதிலேயே விபச்சாரத்தில் ஈடுபட்டதும் தன்னுடைய பாலியல் உறவுகளைப்பற்றிய சிந்தனையை வடிவமைத்தது என்று அவர் சொல்லியிருக்கிறார்.
--------------------------------
தன் சுயசரிதையில் எடித் பியாஃப் சொல்கிறார் ''என்னுடைய வளர்ப்புமுறை காரணமாக எனக்கு மனித உறவுகளில் எந்தவகையான உணர்ச்சிகர ஈடுபாடும் இல்லாமல் ஆகியது. ஒரு பையன் ஒரு பெண்ணை அழைத்தால் அந்தப்பெண் மறுக்கவே கூடாது என்றுதான் நான் நினைத்தேன்''. அவருக்கு பதினைந்து வயதாகும் முன்னரே ஏராளமான ஆண்களுடன் உடலுறவிருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். காதல் உணர்ச்சி மிக்க ஒரு இளம்பெண்ணைப்போல தான் எதிர்கொள்ளும் எல்லா ஆண்களுடனும் உறவுகொள்ளும் வழக்கம் அவருக்கு இருந்தது.

இரண்டாம் உலகப்போர் எடித் பியாஃப்பின் வாழ்க்கையில் மிகவும் விவாதகரமான ஒரு காலகட்டம். பாரீஸைக் கைப்பற்றிய ஜெர்மானிய நாஜிகளுடன் இணைந்துசெயல்பட்ட எடித் பியாஃப் அவரக்ளுக்காக பாடினார். ஆனால் போருக்குப்ப்பின்னர் தெரியவந்தது, அவர் நாஜிகளிடம் கைதிகளாக இருந்த ஏராளமான ஃபிரெஞ்ச் ராணுவ வீரர்கள் தப்புவதற்கு உதவினார் என்பது.

போரின் காலக்ட்டத்தில் எடித் பியாஃபின் தாயும் தந்தையும் அவர் வாழ்க்கைக்கு திரும்பி வந்தார்கள். தன் தந்தை வந்ததில் எடித் பியாஃப் மகிழ்ச்சிதான் அடைந்தார். இறப்பதுவரை அவரை ஆதரித்தார். ஆனால் எடித் பியாஃப் அடிக்கடி போலீஸ் நிலையங்களுக்குச் சென்று தன் தாயை மீட்டுவரவேண்டியிருந்தது. எடித் பியாஃப் உயர்தர உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் சாப்பிடும்போது தன் அம்மா வந்து பிச்சை கேட்டு கையேந்தியதாகவும் கோபத்தில் கொடுக்க முடியாதென மறுத்ததாகவும் எடித் பியாஃப் பதிவுசெய்திருக்கிறார். ''என்னுடைய பரிதாபமான அம்மா, நான் அவளை சரியாக்க எவ்வளவோ முயன்றேன். ஆனால் அவள் தப்பிச்சென்று தன் பழைய வாழ்க்கையையே தொடர்ந்தாள்'' என்றார் எடித் பியாஃப். கொஞ்ச நாளிலேயே அவர் அம்மா ஒரு மலிவான விடுதியறையில் மிதமிஞ்சி போதை மருந்து உட்கொண்டு மரணமடைந்தாள்.

போருக்குப்பின்னால் எடித் பியாஃப் உலகளாவிய முறையில் அறியப்படலானார். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் தென்னமேரிக்க நாடுகளுக்கும் பயணம்செய்தார். ஆரம்பத்தில் அமெரிக்கவில் அவருக்கு குறைவான வெற்றியே கிடைத்தது. அழுவாச்சிப் பாடல்களைப்பாடுபவர் என்று அவரை அவர்கள் முத்திரை குத்தினார்கள். ஆனால் நியூயார்க்கரின் இசை விமரிசகர்கள் அவரைப்பற்றி சிறப்பான விமரிசனக்கட்டுரைகள் எழுதியதும் அவர் அங்கும் பெரும்புகழ்பெற்றார்.

அக்காலத்தில் அமெரிகாவில் மிகப்புகழ்பெற்றிருந்த எட் சல்லிவன் ஷோ (Ed Sullivan Show) எனும் தொலைக்காட்சி இசை நிகழ்சியில் எடித் பியாஃப் எட்டு முறை தோன்றினார். மரபிசைக்கு மட்டுமாக ஒதுக்கபப்ட்டிருந்த நியூயார்க்கின் கார்னெகி ஹாலிலும் (Carnegie Hall) பாரீஸின் சால்லெ ப்லெயில் [Salle Pleyel] கூடத்திலும் பாடிய முதல் பாப் இசை பாடகி எடித் பியாஃப் தான். பாரீஸின் புகழ்பெற்ற ஒலிம்பியா இசைக்கூடம் எடித் பியாஃபின் பல நிகழ்ச்சிகளை நடத்தியது. பின்னர் இந்தக் கூடத்தை திவாலாகாமல் தடுப்பதற்கும் எடித் பியாஃபின் இசை நிகழ்சி தான் உதவியது.

எடித் பியாஃப் நியூ யார்க்கில் இசைப்பயணம் செய்தபோது, அப்போதைய நடுத்தர எடைதூக்கும் பிரிவின் உலக குத்துச்சண்டை சாம்பியன் மார்செல் கேர்டான் [Marcel Cerdan] உடன் காதல் கொண்டார். கேர்டானுக்கு ஏற்கனவே மணமாகி குழந்தைகளும் இருந்தன. ஆனால் இதுவே எடித் பியாஃப்¢ன் வாழ்க்கையில் உண்மையான ஒரே காதலுறவாக இருந்தது. பின்னர் எடித் பியாஃப் அவரை மணம் புரிந்துகொண்டார். பல்வேறு உறவுகளின் கசப்புகளுக்குப் பின் உண்மையான காதலை அந்த உறவில் எடித் பியாஃப் கண்டுகொண்டார். ஆனால் துரதிருஷ்டம் எடித் பியாஃபின் வாழ்க்கையை தொடர்ந்து துரத்தியது. எடித் பியாஃபை பார்க்க வரும் வழியில் அஸோரஸ் தீவுக்குமேல் நடந்த கோரமான விமான விபத்தில் கேர்டான் மரணமடைந்தார். ஆழமான மனச்சோர்வடைந்த எடித் பியாஃப் நெடுங்காலம் அந்த இழப்பிலிருந்து மீளவில்லை.

எடித் பியாஃப் அவரே மூன்று கார் விபத்துகளில் உயிர் தப்பியிருக்கிறார். ஆனால் 1951ல் நடந்த ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கி அவரது ஒரு கையும் ஏராளமான விலா எலும்புகளும் உடைந்தன. மருத்துவர்கள் வலி நிவாரணியாக மார்ஃபினை பரிந்துரை செய்தார்கள். எடித் பியாஃப் சீக்கிரமே அதற்கு அடிமையாக ஆனார். தன் சுயசரிதையில் அவர் எழுதினார் "என் உடம்பில் போதை ஊசி போடப்பட்டு நான் மெல்லமெல்ல அந்த இதமான உணர்வை அடையும் கணத்தைத்தவிர வேறு எதுவுமே எனக்கு அப்போது எஞ்சவில்லை''. அதன்பின் மேடைக்குப் போவதற்கு முன்பாகவும் அவர் ஊசி வழியாக போதையை ஏற்றிக்கொள்ள ஆரம்பித்தார்.

சிறுவயதிலேயே எடித் பியாஃப் ஷாம்பேனுக்கு ரசிகை. உடல் வலியை மறக்க ஏராளமாக குடிக்கவும் ஆரம்பித்தார். பல முறை மேடையில் பாடல் வரிகளை மறந்து உளறி தள்ளாடி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தார். இக்காலகட்டத்தில் எடித் பியாஃப் மதுவிடுதிகளில் அலைந்து திரிந்து அறிமுகம் இல்லாத ஆண்களைப்பிடித்து தன் தனிமைக்கு துணையாகக் கொண்டுசெல்ல ஆரம்பித்தார். மீண்டும் அவரது அம்மாவின் வாழ்க்கையின் துயரம் மிக்க நீட்சி! எடித் நினைவுகூர்ந்தார் ''...அக்காலகட்டத்தில் எனக்குள் என்னை அழித்துக்கொள்ளவேண்டும் என்ற அடக்கமுடியாத வெறி இருந்தது. எதுவுமே என்னைத் தடுக்க முடியவில்லை. அது நாலைந்து மாதங்கள் நீடிக்கும். வீழ்ச்சியின் அதல பாதாளத்துக்கு நான் சென்றுவிட்டதாகவும் இனிமேல் மீள மாட்டேன் என்றும் எல்லாரும் நினைக்கும்போது நான் சரிவில் தொற்றி மெல்லமெல்ல ஏறி மேலே வர ஆரம்பிப்பேன்''.

உடலநலக்குறைவினால் பலமுறை மேடையிலேயே தள்ளாடி விழுந்த போதிலும் எடித் பியாஃபால் இசை இல்லாமல் வாழ்வதைபப்ற்றி நினைக்கவே முடியவில்லை. மருத்துவர்களும் நண்பர்களும் ஆலோசனை சொன்னபோதிலும்கூட எடித் தன் இசை மேடைகளை கைவிட மறுத்தார்.
இக்காலகட்டத்தில் சார்ல்ஸ் டுமொண்த் [Charles Dumont] என்ற இளம் பாடலாசிரியர் ஒரு பாடலுடன் அவரை பார்க்க பலமுறை முயன்று நாட்கணக்காக காத்திருந்தார். கடைசியில் அந்தப்பாடலைக் கேட்டபோது எடித் பியாஃப் மனம் கொந்தளித்தார். அதுதான் 'இல்லை, நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை'' என்ற பாடல். எடித் பியாஃபின் சொந்த வாழ்க்கையின் அறிக்கை போலவே இருந்தது அந்தப்பாடல். அது அவரது ஆகச்சிறந்த, மிகப்பிரபலமான பாடலாக அமைந்தது.

1962ல் எடித் பியாஃபுக்கு நாற்பத்தேழு வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் எழுபது வயது கிழவியின் தோற்றம் வந்திருந்தது. நுரையீரல் புற்றுநோயால் கடுமையாக பீடிக்கபப்ட்டவாராக அவர் இருந்தார். கூடவே போதை மருந்துகளும் அளவற்ற மதுப்பழக்கமும். தளர்ந்துவிழுந்தபோதும் இன்னொரு முறை மணம்புரிந்துகொள்ள அவர் விரும்பினார். தியோ சபாரோ [Theo Saparo] என்ற கிரேக்க இளைஞனை அவர் மணந்துகொண்டார். அவன் அவரை விட இருபது வயதுக்கு இளையவன். தியோ உண்மையில் இசையுலகுக்குள் நுழைவதற்கான ஒரு ஏணியாகவே எடித் பியாஃபைக் கண்டான். எடித் பியாஃப்போ மோசமான உடல்நிலையில் இருந்தாலும் அவனை தயார் செய்து, அவன் மேடைகளில் தோன்றி தியோவை அறிமுகம் செய்தார்.

அவனுக்காக சில பாடல்களை எழுதி இசையமைக்கவும் செய்தார்.
1963ல் மரணப்படுக்கையில் இருந்துகொண்டு எடித் பியாஃப் அவரது கடைசிப்பாடலான 'பெர்லினில் இருந்து வந்தவன்' (L'homme de Berlin) பாடி பதிவு செய்தார். எடித் பியாஃப் மரணப்படுக்கையில் இருக்கும் செய்தி பாரீஸில் பரவியதும் ஆஸோ போன்ற பழைய நண்பர்கள் பலர் அவரை பார்க்க வந்தார்கள். அவரிடம் எடித் பியாஃப் புனித ரீத்தாவை நோக்கி பிரார்த்தனை செய்யும்படிக் கோரினார். புனித ரீத்தா 'முற்றிலும் தொலைந்துபோன விஷயங்களுக்கான' புனிதர். தன்னை அப்படிப்பட்ட ஒருவராகவே எடித் பியாஃப் எண்ணியிருந்தார். 1963 அக்டோபர் பத்தாம் தேதி எடித் பியாஃப் கேன்ஸ் நகரில் மரணமடைந்தார்.

உலகின் மிக அதிகமாக ஊதியம் பெற்ற பாடகிகளில் ஒருவராக இருந்தும் எடித் பியாஃப் பணக்காரியாக இறக்கவில்லை. உதவி கேட்டு வந்த அத்தனை பேருக்கும் அவர் அள்ளிக்கொடுத்தார். தேவைக்கும் தேவை இல்லாதபோதும் பணத்தை அள்ளி இறைத்தார். பிரரை தன் இசை மூலம் மகிழ்விப்பது மட்டும் தான் அவர் நன்றாக அறிந்திருந்தது. அதை மிக அற்புதமாக அவர் செய்தார். அந்த இசையைப்போலவே அவரது வாழ்க்கையும் மிகத் தீவிரமாகத்தான் இருந்தது.

பின்னர் ஃபிரான்ஸின் தேசிய அடையாளமாக கண்டுகொள்ளபப்ட்ட எடித் பியாஃப்புக்கு முறையான இறுதி பிரார்த்தனை செய்ய ரோமன் கத்தோலிக்க தேவாலயம் மறுத்துவிட்டது. எடித் பியாஃப் பாவம் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே மேற்கொண்டார் என்று அது சொன்னது. ஆனால் தெருவில் பிறந்த தங்கள் அன்பு பாடகிக்கு பாரீஸ் தெருவுகளில் குவிந்த பல லட்சம் ரசிகர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பாரீஸின் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்த ஒரே சந்தர்ப்பம் அதுதான். 'இல்லை, நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை' என்று தான் இன்றும் எடித் பியாஃப் பாடிக்கொண்டிருக்கிறார்.

இல்லை

நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை

நான் செய்த நன்மைகளுக்காகவும்

தீமைகளுக்காகவும்

எல்லாம் ஒன்றுதான்

நான் கவலைப்படவில்லை

எல்லாவற்றுக்கும் விலை கொடுக்கப்பட்டிருக்கிறது

மறக்கப்படுகின்றன

எல்லாமே அடித்துச் செல்லப்படுகின்றன

நான் முன்னால் சென்றுகொண்டே இருக்கிறேன்

என் நினைவுச்சின்னங்கள் எல்லாமே சுடரை தூண்டவே உதவுகின்றன

உவகைகளும் துயரங்களும்

அவற்றை நான் மீண்டும் விரும்பவேயில்லை

என் பழைய காதலர்கள்

அவர்களின் காமம்

அவர்களின் நடுக்கம்

எல்லாமே போய் விட்டது

தூசி போல அடித்துசெல்லபப்ட்டன எல்லாம்
இல்லை

நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை

காரணம்

என் வாழ்க்கை என் இன்பங்கள் இதோ புதிதாக ஊற்றெடுக்கின்றன

மீண்டும் உன்னில் தொடங்குகின்றன.


தமிழில்: ஜெயமோகன்