20100318

ஜான் லென்னான் Part 2

ஜான் லென்னானை துரத்திய கேள்விகள் எதுவாக இருதாலும் அவர் உலகத்தின் மிகமிகக் கொண்டாடப்பட்ட ராக் அன்ட் ரோல் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர். உலக அமைதிக்காக மிகவும் பாடுபட்டவரும்கூட. அவரும் அவரது பீட்டில்ஸ் இசைக்குழுவினரும் உலகின் பிரபல இசையின் முகத்தையே மாற்றியமைத்தார்கள். பீட்டில்ஸ் ஒரு இசைக்குழுவாக சேர்ந்தியங்கியது பத்து வருடங்களுக்கு மட்டுமே, ஆனால் இன்றும் அவரது இசை உலக அளவில் மிகப் பிரபலமாக இருந்துகொண்டிருக்கிரது.

இசையை ஓர் அந்தரங்க ரசனைப்பொருள் என்ற நிலையில் இருந்து ஒரு சமூகசீர்திருத்த ஊடகம் என்ற கருத்தை நோக்கி மாற்றியமைத்தது பீட்டில்ஸ் இசைக்குழுதான். காதல்பாடல்களைப் பாடும் அழகான பதின்பருவத்தினரின் குழுவாகவே தான் அவர்கள் தொடங்கினார்கள். ஆனால் மெல்ல மெல்ல அரசியலும் சமூகக் கருத்துக்களும் கொந்தளிக்கும் உலக இசையாக அதை அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். சர்வதேச அளவில் அவர்கள் உருவாக்கிய பித்து பீட்டில் மேனியா (Beatlemania) என்று அழைக்கப்பட்டது. அறுபதுகளில் உலகம் முழுக்க பரவியிருந்த மனக்குழப்பத்தையும் பதற்றத்தையும் முற்றிலுமாக பிரதிபலித்த இசைக்குழு தான் பீட்டில்ஸ். வெறும் 16 வயதான ஜான் லென்னானால் தான் அந்தக்குழு தொடங்கப்பட்டது.

1940 அக்டோபரில் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் ஜான் லென்னான் பிறந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிய விமானங்கள் தாழ்வாகபறந்து குண்டு வீசிக்கொண்டிருந்தபோது தான் அவர் பிறந்தார். வணிகக் கப்பல் ஒன்றில் பரிசாரரகராக இருந்த ஆல்ப்ரட்டுக்கும் மனைவி ஜூலியாவுக்கும் பிறந்தவர் அவர். ஆல்ப்ரட் பெரும்பாலும் ஊரில் இருப்பதில்லை. மனைவிக்குப் பணம் மட்டும் அனுப்புவார். ஆனால் வேலையை இழந்ததும் பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். இரண்டு வருடம் கழிந்து அவர் திரும்பி வந்தபோது இன்னொருவரின் குழந்தையை கருவுற்றிருந்த ஜூலியா அவரை ஏற்க மறுத்துவிட்டாள். இத்த¨னைக்கும் அவளும் அவள் மகன் ஜான் லென்னானும் அப்போது நிர்க்கதியாக இருந்தார்கள்.

சிறுவனான லென்னான் ஜூலியாவின் குழந்தையில்லாத அக்கா மிமியால் வளர்க்கப்பட்டார். ஆனால் தன் மகனுடன் நியூசிலாந்துக்கு ரகசியமாக குடியேறும் நோக்கத்துடன் ஆல்ஃப்ரட் அவனைக் கடத்திச் சென்றார். விஷயமறிந்து ஜூலியா தேடிவந்து பிடித்துக்கொண்டார். கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் ஆல்ப்ரட் அம்மாவா அப்பாவா என்று முடிவெடுக்கும் பொறுப்பை ஐந்துவயது லென்னானுக்கே கொடுத்துவிட்டார். லென்னான் சந்தேகத்துக்கே இடமில்லாமல் தன் அப்பாவை தேர்ந்தெடுத்தார். ஆனால் அம்மா அழுதபடிச் செல்வதைக்கண்டு அவன் அம்மாவைப்பின் தொடர்ந்து ஓடினான். கடைசியில் வேறு வழி இல்லாமல் ஆல்ப்ரட் தன் மகனை விட்டுவிட்டுசென்றார்.

ஜூலியாவால் தன் முரட்டு மகனை சமாளிக்க முடியவில்லை. தொடக்கப்பள்ளி முதலே ஜான் பிறரை துன்புறுத்தி வம்புகள் செய்து பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்படுபவனாக இருந்தார். ஆகவே அவன் மீண்டும் தன் பெரியம்மா மிமியுடன் சென்று வாழ ஆரம்பித்தார். அம்மா அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வதுடன் சரி. இசையறிவுகொண்ட ஜூலியா சிறுவயதிலெயே பாஞ்சோ வாசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுத்தார். எல்விஸ் பிரெஸ்லி போன்ற பாடகர்களின் அமெரிக்க இசைத்தொகுதிகளை வாங்கி கேட்கச்செய்வாள். இசையறிவும் ரசனையும் கொண்டவராக அவர் வளர்ந்தார். ஆனால் பள்ளிப்படிப்பில் எப்போதுமே கடைசியாக இருந்தார்.
மிகவும் மன்றாடிக்கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்மா லென்னானுக்கு அவரது முதல் கித்தாரை வாங்கியளித்தார். கித்தாரை பிடித்தபடி லென்னான் ஒருநாள் அவர் பெரும்புகழ்பெறப்போவதாக அறிவித்தார். அது ஒரு பையனின் வீம்புப்பேச்சு என்றுதான் அம்மா நினைத்தார். ''கித்தார் நல்ல விஷயம்தான் ஜான், ஆனால் அது உனக்கு வாழ்க்கைக்கு உதவாது'' என்று அவள் அவனிடம் சொல்வதுண்டு.

ஒருநாள் அவள் லென்னானைப் பார்த்துவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு கார் மோதி இறந்தாள். ஜான் பிற்பாடு சொன்னார் ''நான் என் அம்மாவை இரண்டுமுறை இழந்தேன்'' எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது தாயிருந்தும் நான் அனாதையானேன். எனக்கு பதினாறு வயதானபோது நான் மெல்லமெல்ல அவளுடன் நெருங்கி ஓர் உரையாடலை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்த காலத்தில் அவள் இறந்தாள். என் மனத்தில் எப்போதும் நீடிக்கும் ஒரு மன அழுத்தம் அது...''

அக்காலத்தில் ஸ்கிஃப்ள் [Skiffle] பிரிட்டனில் பிரபலமான இசைவடிவமாக இருந்தது. ஸ்கிஃப்ள் குழுக்கள் வீட்டுச்சாமான்களை கொஞ்சம் மேம்படுத்தி இசைக்கருவிகளாகப் பயன்படுத்தினார்கள். சட்டிகள், சருவங்கள், கரண்டிகள் போன்றவை இசைக்கருவிகளாக பயன்படுத்தப்பட்டன. கித்தாரும் பாஞ்சோவும் துணைசேர்க்கப்பட்டன. ஜான் இந்த வித்தியாசமான ஆனால் படைப்பூக்கம் கொண்ட இசைவடிவத்தால் கவரப்பட்டு அதில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு வயது 16.

அந்தகாலகட்டத்தில் 15 வயதான பால் மெக்கார்ட்டினியை லென்னான் சந்தித்தார். பால் இசைப்பித்தர். ஏராளமான வாத்தியங்களை வாசிக்கக்கூடியவர். அவரும் கான்சரால் தன் தாயை இழந்திருந்தார். அவர்கள் ராக் அண்ட் ரோல், அமெரிக்கன் ப்ளூஸ் போன்றவற்றின் மேல் தங்களுக்கிருந்த பொதுவான ரசனையை பரிமாறிக்கொண்டார்கள். அவர்களுக்கிடையே ஆழமான இணைப்பு உருவாகியது. சேர்ந்து இசையில் செயலாற்ற ஆரம்பித்த அவர்கள் தி குவாரி மென் என்ற இசைக்குழுவை ஆரம்பித்தார்கள். ஆனால் மெக்கார்ட்டினியின் அப்பா லென்னானை கடுமையாக வெறுத்தார். 'அவனுடன் சேர்ந்தால் நீ சிக்கலில் மாட்டிக்கொள்வாய்' என்று தன் மகனை எச்ச்சரித்தார்.

ஜாந் லென்னான் தன் பதின்பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது இவ்வாறு சொன்னார். ''நான் மிகவும் வெட்க்கபடக்கூடியவனாகவும் என்னைப்பற்றிய சந்தேகங்கள் கொண்டவனாகவும் இருந்தேன், என்னில் ஏதோ ஒரு தப்பு இருந்தது. நான் பிறர் பார்க்காத விஷயங்களை பார்ப்பவனாக இருந்தேன். நான் பெரும்பாலும் மனச்சிக்கல் கொண்ட, உள்ளுணர்வு கொண்ட அல்லது கவித்துவமான மனநிலையிலேயே இருந்தேன். நான் மனப்பிரமைகள் வழியாகவே எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். அப்படிபப்ட்ட குழந்தையாக இருப்பது பயமூட்டக்கூடியது. ஏனென்றால் மனதைப் பகிர்ந்துகொள்ள எவருமே இருக்கமாட்டார்கள். எனக்கிருந்த தொடர்புகள் ஆஸ்கார் வைல்ட் அல்லது டைலன் தாமஸ் அல்லது வின்செண்ட் வான்காக் தான். அவர்கள் எல்லாருமே மனப்பிரமைகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருமே தாங்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தங்களை வெளிப்படுத்திக்கொண்டமையால் சமூகத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். நான் தமிமையை மட்டுமே உணர்ந்துகொண்டிருந்தேன்''

லென்னன் தொடர்ந்தார் ''நான் விரும்பபப்டவும் அங்கீகரிக்கப்படவும் ஆசைப்பட்டேன். ஆனால் அதற்க்காக நான் எது அல்லவவோ அதுவாக ஆக விரும்பவில்லை. என்னுடைய இந்த மனநிலை காரணமாக என் தோழர்களின் வீட்டில் உள்ள அனைவருமே அவர்களிடம் 'அவனை விட்டு விலகியிருங்கள்' என்று சொன்னார்கள். அந்தபெற்றோர்கள் புரிந்துகொண்டிருதார்கள், நான் அவர்களுடைய பிள்ளைகளை பாதிப்பேன் என்று. அது உண்மைதான். நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களை தொந்தரவுசெய்ய என்னால் முடிந்ததை எல்லாம் நான் செய்வேன். எனக்கு அப்படி ஒரு குடும்பம் இல்லை என்ற பொறாமையால்கூட நான் அப்படிச்செய்திருக்கலாம். பால் மெக்கார்ட்டினியின் பெற்றோர்கள் என்னைக்கண்டு அரண்டு போயிருந்தார்கள். காரணம் பெற்றோரின் இரும்புப்பிடியில் இல்லாமல் கட்டற்றவனாக நான் இருந்தேன். ஒருவகையில் பெற்றோர் இல்லாமல் இருந்தது எனக்குக் கிடைத்த நல்வாய்ப்புதான். நான் பெற்றோர் இல்லாமலிருப்பதை எண்ணி நிறையவே அழுதிருக்கிறேன் ஆனாலும் சிறுவயதிலேயே ஒரு விழிப்புனர்ச்சியை அது எனக்கு அளித்தது,''

மெக்கார்ட்டினி அந்த இசைக்குழுவுக்கு அவரது நண்பர் ஜார்ஜ் ஹாரிசனைக் கொண்டுவந்தர். அவருக்கு அப்போது 14 வயதுகூட ஆகவில்லை. கித்தார் வாசிப்பவராக இருந்த ஹாரிசனும் இசைமேல் அபாரமான பித்து கொண்டிருந்தார். அவரக்ள் கிளப்புகளிலும் இரவு நடனங்களிலும் வாசித்தார்கள். ஆடை அவிழ்ப்பு நடனத்திலும் அவர்கள் பின்னணி இசையை வாசித்திருக்கிறார்கள். கொஞ்சநாளில் அவர்களுக்கு லிவர்பூல் நகரின் பிரபலமான காரவென் கிளப்பில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

கிளப்பில் அவர்களின் இசையைக் கேட்ட ஆல்லன் வில்லியம்ஸ் என்பவர் அவர்களுடைய நிர்வாக மேலாளராக வலிய வந்து சேர்ந்துகொண்டார். அவர் விரைவிலேயே அவர்களை ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஒரு இசைச்சுற்றுலாவுக்கு கூட்டிச்சென்றார். சின்னப்பையனின் ஜெர்மனி செல்லும் திட்டத்தைக் கேட்டு மிமி பயந்துபோய் தடுத்தாள். படிப்பை தொடரும்படி வற்புறுத்தினாள். ஆனால் ஜான் லென்னான் ஜெர்மனிக்குச் சென்று அங்கே இந்த்ரா கிளப்பில் இசைநிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். நகரில் அவர்களின் குழு புகழ்பெற்றது. மேலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இளமையின் உற்சாகத்தில் அவர்கள் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒத்துக்கொண்டார்கள். அது இந்த்ரா கிளப் உரிமையாளருக்குக் கடுப்பேற்றியது.

அவர்கள் ஒரு சினிமாகொட்டகையில் தங்கியிருந்தார்கள். ஒருமுறை லென்னான் இல்லாமலிருந்தபோது மெக்கார்ட்டினி ஏதோ ஒரு பதின்பருவ பாலியல் ஏமாற்ற மனநிலை காரணமாக ஒரு ஆணுறையை சுவரில் ஆணியடித்து மாட்டி அதற்கு தீவைத்தார். தீ கொட்டகையில் கொஞ்சம் பரவியது. அவர்கள் கொட்டகைக்கு தீவைக்க முயல்வதாக இந்த்ரா கிளப்பின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். ஜார்ஜ் ஹாரிசனுக்கு 14 வயது ஆகவில்லையாதலால் குழந்தை உழைப்புக்கு அவரை ஆளாக்குவதாகவும் புகார் செய்தார்கள். ஜெர்மனியை விட்டு கிளம்பும்படி அவர் அவர்களிடம் சொன்னார்.

விரைவிலேயே அவர்கள் இங்கிலாந்துக்கு திருப்பியனுப்பப்பட்டார்கள். இங்கிலாந்தில் அவர்கள் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். ஹாம்பர்க்குக்கு மீண்டும் நான்கு முறை வந்தார்கள். இக்காலகட்டத்தில்தான் பீட்டில்ஸின் சிரப்பியல்புகள் பலவற்றை அவர்களின் குழு உருவாக்கிக்கொண்டது. மூன்றடுக்கு ஒத்திசைகள் [Three Part Harmony], நகைச்சுவைமிக்க அரங்கவெளிப்பாடுகள், அமெரிக்க ராக் அண்ட் ரோல் இசையின் பல சாயல்கள் போன்றவற்றை வளர்த்துக்கொண்டார்கள். இக்காலகட்டத்தில்தான் அவர்கள் பிற்காலத்தில் மகத்தான நால்வர் [Fabulous Four] என்று அறியப்பட்ட நால்வர்குழுவாக ஆனார்கள். லென்னான், மெக்கார்ட்டினி, ஹாரிசன், முழவு வாசிக்க வந்த ரிங்கோ ஸ்டார்.

1963ல் லென்னான் சிந்தியா போவெல்லை மணந்தார். அவர் லென்னானின் பள்ளித்தோழர். லென்னானால் அவர் கருவுற்றிருந்தார், லென்னானின் குடும்பத்தினரின் அங்கீகாரமோ வருகையோ இல்லாமல் அந்த திருமணம் நடைபெற்றது. பிறந்த குழந்தைக்கு தன் தாயின் நினைவாக ஜூலியன் என்று பெயரிட்டார். உள்ளூர் இசைகக்டை உரிமையாளரான ப்ரயன் எப்ஸ்டீன் அவரக்ளுடைய நிர்வாக மேலாளராக ஆனதுமே அவர் போட்ட முதல் நிபந்தனை அவர்கள் புகழ்பெறும் அவரை லென்னான் மணமானவர் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதுதான். இளம் ரசிகைகள் அவரை விரும்புவதை அது தடுக்கும் என நினைத்தார். ஆனால் பீட்டில்ஸ் புகழ்பெற்ற பின் அது தெரியவந்தபோது ரசிகைகளிடம் எந்த மாற்றமும் உருவாகவில்லை.

பல நிராகரிப்புகளுக்குப் பின்னர் இ.எம்.ஐ ரிகார்ட்ஸ் [EMI Records] நிறுவனத்துடன் ஓர் இசைப்பதிவு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டார்கள். 1963ன் தொடக்கத்தில் பீட்டில்ஸ் அவர்களின் முதல் தனித்தொகையான என்னைக்காதலி [Love Me Do] யை வெளியிட்டது. அது மிகவும் பிரபலமாகியது. அதைத்தொடர்ந்து 'தயவுசெய்து என்னை சந்தோஷப்படுத்து' [Please Please Me] வெளிவந்தது. இன்றும் இந்த பாடல்கள் உலக அளவில் பிரபலமாக உள்ளன. அவர்களின் ஆரம்பகால வெற்றி இசைத்தொகைகள் 'உன் கையைப்பற்ற விரும்புகிறேன்' [I Want to Hold Your Hand], 'அவள் உன்னை விரும்புகிறாள்' [She Loves You], 'அவள் அங்கே நிற்பதைக் கண்டேன்' [I Saw Her Standing There] போன்றவையும் பெரும்புகழ்பெற்றன. அத்துடன் பீட்டில்ஸ் இங்கிலாந்தில் அனைவரும் அறிந்த இசைக்குழுவாக ஆகியது. அவரது பெரும்பாலான பாடல்கள் ஜான் லென்னானால் ஒருமணி நேரத்திற்குள் எழுதி இசையமைக்கப்பட்டவை!

இருபது வயதுக்கு கீழ் இருந்த அந்த நான்கு அழகிய பையன்களும் பிரிட்டனின் பதின்பருவத்தினர் குறிப்பாக பெண்கள் நடுவே மிகப்பெரிய அலையை உருவாக்கினார்கள். 1964ல் அவர்கள் தங்கள் முதல் அமெரிக்கச்சுற்றுபயணத்தை தொடங்கினர். அவர்கள் அமெரிக்கா செல்ல கிளம்பியபோது ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விமானநிலையத்தில் கூடி கத்தி கூச்சலிட்டு கையசைத்து அவர்களுக்கு வழியனுப்புகை கொடுத்தார்கள். அமெரிக்கவில் நான் உன் கையப்பற்ற விரும்புகிறேன் இருபத்தைந்து லட்சம் பிரதிகள் விற்கப்பட்டிருந்தது. ஆனாலும் லென்னான் அங்கே கிடைக்கப்போகும் வரவேற்பை எண்ணி பதற்றத்துடன் இருந்தார். நியூயார்க் கென்னடி விமான நிலையத்தில் அவர்கள் மூவாயிரம்பேருக்குமேல் கொண்ட ரசிகர்களால் கூச்சலிட்டு கையசைத்து வரவேற்கப்பட்டார்கள். அத்துடன் அமெரிகக் இசை மீதான பிரிட்டிஷ் படையெடுப்பு ஆரம்பித்தது. அதுவரைக்கும் எந்த ஒரு பிரிட்டிஷ் குழுவும் அமெரிக்காவில் அந்த அளவுக்கு வெற்றி பெற்றதில்லை. லென்னான் வகுத்தளித்த பாதையில் பின்னர் ரோலிங் ஸ்டோன்ஸ், எல்ட்டன் ஜான், தி அனிமல்ஸ், பெடுலா கிளார்க் போன்ற பலர் அமெரிக்கா சென்று வெற்றிபெற்றார்கள்.

அப்போது மிகப் பிரபலமாக இருந்த அமெரிக்க தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியான தி எட் சல்லிவன் ஷோவில் பீட்டில்ஸ் பாடியதை அமெரிக்க மக்கலளில் பாதிப்பேர் பார்த்தார்கள் என்று சொல்லபடுகிறது. சில இசைவிமரிசகர்கள் 'பீட்டில்ஸ் குழு அட்லாண்டிக்கை தாண்டி ஒரு மெட்டை கூட கொண்டுவரவில்லை' என்று எழுதினாலும்கூட அமெரிக்காவில் பீட்டில்ஸ் பித்து ஆரம்பமாகிவிட்டது. வாஷிங்டன் கொலோஸியத்திலும் கார்னகி ஹாலிலும் சில பெருதிரள் இசைநிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மூன்றே வாரங்களில் மீண்டும் அவர்கள் எட் சல்லிவன் ஷோவில் தோன்றினார்கள். இசைத்தட்டு விற்பனைக்கான பில்போர்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் அவர்கள் இருந்தார்கள். அதைப்போல ஒன்று முன்பு நடந்ததில்லை. அதிலிருந்து இன்றுவரைக்கும் பீட்டில்ஸின் இசைத்தொகைகள் பிரம்மாண்டமான அளவில் விற்க்கப்பட்டுகொண்டேயிருக்கிறது.

பீட்டில்ஸ் அறுபதுகளில் இரண்டு திரைப்படங்களை உருவாக்கியது. 'ஒரு கடினமான நாளின் இரவு' [A Hard Day's Night -1964] மற்றும் 'உதவி செய்' [Help-1965]. இரண்டுமே கலைரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெருவெற்றிகளாக அமைந்தன. 'உதவி செய்' படத்தின் இசைக்கோர்ப்பும் பாடல்வரிகளும் மிகவும் முதிர்ச்சியுடன் இருந்தன. பாடல்கள் மேலும் தத்துவார்த்தமாக ஆயின. நாட்டாரிசையின் கூறுகள் பின்னணி இசையில் சேர்க்கப்பட்டிருந்தன.
அவர்களின் அடுத்த இசைத்தொகை 'ரப்பர் ஆத்மா' [Rubber Soul -1965] படைப்பூக்கத்தில் ஒரு சாதனை என்று கருதப்படுகிறது. அது மேலையிசையில் பழக்கமில்லாத இந்தியன் சித்தார் போன்ற கருவிகளை மிகவும் கற்பனையுடன் பயன்படுத்தியது. ஜார்ஜ் ஹாரிசன்இந்திய சிததார் மேதை ரவிசங்கரின் மாணவராக ஆகி சித்தார் கற்று அதை அந்த இசைத்தொகையில் பயன்படுத்திக்கொண்டார்.

பணம், புகழ், பெண்கள், போதை ஆகியவை ஜான் லென்னானையும் பீட்டில்ஸ் குழுவையும் பீடித்தன. அவர்கள் தங்கள் இசையையும் வாழ்க்கையையும் குறித்து மேலும்மேலும் அதிருப்தி கொள்ள ஆரம்பித்தனர். லெனனன் தங்கள் இசையை மேடையில் யாருமே கேட்கவில்லை, அரங்கில் இருந்து இடைவிடாமல் எழும் உற்சாகக்கூக்குரல்கள் இசையை அழுத்திவிடுகின்றன என்று குறை சொன்னார். அவர் 'முடியுமென்றால் உதவுங்கள், நான் சோர்ந்துவிட்டேன்' [Help me if you can, I am feeling down] போன்ற பாடல்களை எழுதிய காலகட்டம் இது. அவர் மாற்றத்துக்காகவும் உதவிக்காகவும் உள்ளூர கதறிக்கொண்டிருந்தார்.

அக்காலகட்டத்தில் ஈவினிங் ஸ்டேண்டேர்ட் நாளிதழுக்காக அளித்த பேட்டியில் லெனனன் சொன்னார் ''கிறித்தவம் அழியும். அது சுருங்கி மறையும். ராக் அண்ட் ரோலா கிறித்தவமா எது முதலில் போகும் என்று என்னால் சொல்லமுடியாது. ஏனென்றால் நாங்கள் இப்போது கிரிஸ்துவை விடவும் பிரபலமாக இருக்கிறோம்''. அப்போது பிரிட்டனில் எவரும் அதை பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் அமெரிக்க இளைஞர் இதழான டேட்புக் [Day Book] அதை மறுபிரசுரம்செய்தபோது பெரிய எதிர்ப்பலை கிளம்பியது.

அமெரிக்காவின் பைபிள் நிலம் என்று சொல்லபப்டும் தென்மாநிலங்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தன. பலத்த எதிர்ப்புகளும் பீட்டில்ஸ் இசைத்தொகைகளுக்கு தீயூட்டலும் நிகழ்ந்தன. வானொலிகள் பீட்டில்ஸ் பாடல்களை ஒலிபரப்புவது தடைசெய்யபப்ட்டது. இசைநிகழ்ச்சிகள் ரத்தாயின. கத்தோலிக்கத் திருச்சபை லென்னானின் கருத்துக்களைக் கண்டித்தது. அவர் தன் கருத்துக்களுக்காக மன்னிப்பு கோரவேண்டியிருந்தது, அவர் அதை பொத்தாம் பொதுவாக செய்தபோதிலும் கூட.

சென்ற வருடம் கத்தோலிக்க சபை ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது, ''கடுமையான கசப்புகளை உருவாக்கிய ஜான் லென்னானின் அந்த கூற்று, எல்விஸ் பிரெஸ்லி, ராக் அண்ட் ரோல் போன்ற வரலாற்று நிகழ்வுகளில் எதிர்பாராத பெரும் வெற்றியைச் சந்தித்த ஒரு உழைக்கும் வற்கத்து இளைஞனின் அர்த்தமில்லாத டம்பப்பேச்சாகவே இப்போது ஒலிக்கிறது. ஆனாலும் இன்றும் லெனனானின் பாடல்கள் காலத்தால் பழமைகொள்ள மறுத்து பல தலைமுறைகளைத் தாண்டி நிரந்தரமான அகத்தூண்டலை அளிக்கும் கலைபப்டைப்புகளாகவே உள்ளன என்ற உண்மை நீடிக்கிறது''.

2009 செப்டெம்பரில் கூகிள் இணையதளத்தில் கிரிஸ்து என்று தேடியவர்களை விட அதிகமானோர் ஜான் லென்னான் என்று தேடியிருக்கிறார்கள் என்பது ஒருவகையில் லென்னானின் தீர்க்கதரிசனத்தை நிரூபிக்கிறது!

1966ல் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடத்திய இசைநிகழ்ச்சியே பீட்டில்ஸ் நடத்திய கடைசி பொதுநிகழ்ச்சி. குழுவின் அதீதப்புகழ் காரணமாக பெருகும் மக்கள் வெள்ளம் பாதுகாப்புச்சிக்கல்களை உருவாக்கி பயணத்தை மிகவும் துன்பகரமானதாக ஆக்கியிருந்தது. ஆகவே ஜான் லென்னான் நேரடி நிகழ்ச்சிகளுக்காக மேற்கொண்டு பயணம்செய்யவேண்டாம் என்ற முடிவை எடுத்தார். அத்துடன் பீட்டில்ஸ் மேடைநிகழ்ச்சிகளை நடத்துவது இல்லாமலாயிற்று.

இசைபப்திவகத்திற்குள் ஒடுங்கிய பீட்டில்ஸ் மேலும் மேலும் தரமான இசைப்பாடல்களை அளித்தது. 'பென்னி லேன்' [Penny Lane], 'ஸ்டிராபெர்ரில் வயல்கள்' [Strawberry Fields] போன்ற மிக முக்கியமான பாடல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தது. 'சார்ஜெண்ட் பெப்பரின் தனிமையான இதயங்களின் இசைக்குழு' [Sgt. Pepper's Lonely Hearts Club Band] என்ற இசைத்தொகை கவித்துவத்திலும் இசைசாத்தியத்திலும் மிக முக்கியமான சாதனை. கிட்டத்தட்ட 700 மனிநேரம் ஒலிப்பதிவகத்தில் உழைத்து உருவாக்கப்பட்டது அது. அதில் உள்ள 'வானில் வைரங்களுடன் லூசி' [Lucy in the Sky with Diamonds], 'வாழ்விலே ஒருநாள்' [A Day in the Life] போன்ற பாடல்களில் பல இந்திய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

புகழின் போதையாலும் மன அழுத்தத்தாலும் சோர்ந்துபோயிருந்த காலகட்டத்தில் உதவிக்காக ஏங்கிய லென்னான் மகேஷ் யோகியைச் சந்தித்து சீடரானார். ஆனால் அந்த சாமியாரின் இந்திய ஆன்மீகம் அவருக்கு எதையும் அளிக்கவில்லை. ஆகவே அவர் மேலும் மனமுடைந்தவராக ஆனார். 'ஜெய்குருதேவா ஓம்' போன்ற வரிகளை தன் பாடல்களில் எழுதிய லென்னான் பிறகு மகேஷ் யோகியை'செக்ஸி சுவாமி' [பின்னர் 'செக்ஸி சாடீ'] என்று அழைத்து பாடல் எழுதினார்.

இப்படி இந்திய மனிதக்கடவுள்களால் ஏமாற்றபப்ட்டாலும் லென்னான் இந்தியாமேலும் இந்திய தத்துவமரபின் மீதும், இந்திய இசை மீதும் ஆழமான பற்றுடன் மிருந்தார். பீட்டில்ஸின் 'அகவெளிச்சம்' [The Inner Light] போன்ற பாடல்களில் நாம் சாரங்கி சித்தார் டோலக் போன்ற கருவிகளைக் கேட்க முடிகிறது. இந்திய இசைக்கலைஞர்களால் மும்பையில் பதிவுசெய்யப்பட்டது அப்பாடல். இந்திய தத்துவ அடியோட்டம் கொண்ட 'உடனடி கர்ம்மவினை' [Instant Karma] போன்ற பாடல்களை ஜான் லென்னன் எழுதியிருக்கிறார்.

உள்ளூர ஆழமான கருத்துவேறுபாடுகள் உருவாகிக்கொண்டிருந்த பீட்டில்ஸ் இசைக்குழு கடைசியில் உடைந்து சிதறியது. கடைசி பீட்டில்ஸ் இசைத்தொகை 1969ல் வெளிவந்த 'மடாலயச் சாலை' [Abbey Road]. பல மனவருத்தங்களுக்கிடையிலும் 'புரட்சி' [Revolution], 'ஹேய் ஜூட்' [Hey Jude] போன்ற பல நல்ல பாடல்களையும், நம்பிக்கையூட்டும் 'இதோ வருகிறது சூரியன்' [Here Comes the Sun], துயரமான 'சுழன்று செல்லும் நீண்ட சாலை' [The Long and Winding Road] போன்ற இசைப்பாடல்களையும் உருவாக்கினார்கள்.

லென்னான் பீட்டில்ஸ் குழுவில் இருந்து 1969 செப்டெம்பரில் பிரிந்தார். ஆனால் அந்த அறிவிப்பை முதலில் அவர் வெளியே சொல்லமாட்டார் என்றார். ஆகவே மெக்கார்ட்டினி 1970ல் பீட்டில்ஸ் உடைந்ததை அறிவித்தார். பின்னர் லென்னான் சொன்னார் ''பீட்டில்ஸை நான் உருவாக்கினேன், அதை நானே முடித்தும் வைத்தேன்''

அறுபதுகளில் ஜான் லென்னான் ஜப்பானிய பாடகியும் ஓவியருமான யோக்கோ ஓனோவை சந்தித்தார். லென்னான் ஏற்கனவே மணமாகி ஒரு குழந்தைக்கும் தந்தை என்று தெரிந்தே ஓனோ அவரை தன்னை மணம்புரியும்படி கேட்டுக்கொண்டார். இந்தியாவுக்கு ஒரு பயனத்துக்காக வந்தரவரது முதல் மனைவி சிந்தியா திரும்பிச்சென்றபோது யோக்கோ ஓனோ¡வுடன் லென்னான் குடும்பம் நடத்துவதைக் கண்டார். கடுமையான மனக்கஷ்டங்களுக்குப் பின் சிந்தியா மணவிலக்கு பெற்றார். லென்னான் ஓனோவுடன் 'தி பிளாஸ்டிக் ஓனோ' என்றபேரில் ஓர் இசைக்குழுவை ஆரம்பித்தார்.

லென்னானின் போர் எதிர்ப்பு பாடலான 'அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' [Give Peace a Chance] என்ற இசைத்தொகையை வெளியிட்டார். அதன்பின்னர் அவரது 'கற்பனை செய்து பாருங்கள்' [Imagine], 'உழைக்கும் வற்க வீரன்' [Working Class Hero] போன்றபாடல்கள் வெளிவந்தது. பின்னர் 'கற்பனை செய்து பாருங்கள்' உலகம் முழுக்க உள்ள போர் எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்துக்கும் உரிய பொதுப்பாடலாக ஆகியது.

லென்னான் போரை முற்றிலும் வெறுத்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போர் வெறிப்போக்கை அவர் நிராகரித்தார். ஆகவே பிரபலமான வியட்நாம் போர் எதிர்ப்பாளராக அவர் மாறினார். போருக்கு எதிராக அவர் தன் மனைவியுடன் 'படுக்கையில் இருக்கும்' போராட்டத்தை நடத்தினார். 'போர் செய்யாதீர், காதல்செய்வீர்' என்ற கோஷத்தை முன்வைத்து கிட்டத்தட்ட நிர்வாணமாக அவர்கள் இருவரும் உலகே காணும்படியாக படுக்கையில் இருந்தார்கள். 1971ல் 'போர் முடிந்துவிட்டது' என்ற இசைத்தொகையை அவர் வெளியிட்டார். அதையொட்டி ஒன்பது பெரு நகரங்களில், ஏழு முக்கியமான மொழிகளில் 'நீங்கள் விரும்பினால் போர் முடிந்துவிட்டது' என்ற விளம்பரப்பலகையை பெரும் பொருள் செலவில் அவர் நாட்டினார்.

லென்னானின் 'நியூயார்க் நகரில் ஒரு காலத்தில் [Some Time in New York City] பெண்ணுரிமை, இன உறவுகள் போன்றவற்றைக் குறித்த பாடல்கள் அடங்கியது. பிரிட்டன் வட அயர்லாந்து போராட்டத்தை அடக்கியது, லென்னான் அமெரிக்க பச்சை அட்டை வாங்குவதில் அடைந்த சிரமங்கள் ஆகியவற்றையும் அது பேசியது. லென்னான் இடதுசாரி இயக்கங்களுக்கு நெருக்கமாக இருந்தார் என்றும் உழைபபளார் புரட்சிகர கட்சி என்ற அமைப்புக்கு பெரும் நன்கொடைகளைக் கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அயர்லாந்து விடுதலை படைக்கும் லென்னான் நிதியுதவிசெய்தார் என்று சொல்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன் லென்னானை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முயன்றார். அவரது போர் எதிர்ப்பு போராட்டங்கள் தன்னுடையா தேர்தல் வெற்றிக்கு தடையாக அமையும் என்று அவர் நினைத்தார். லென்னான் லண்டனில் ஒருமுறை கஞ்சா வைத்திருந்ததற்காக கைதுசெய்யப்பட்டவர் என்று குற்றம்சாட்டி அவரை வெளியேற்ற முயற்சி எடுத்துக்கொண்டார். நான்குவருடங்கள்லென்னான் நீதிமன்றங்களில் செலவிட வேண்டியிருந்தது.

லென்னான் பேரணிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தோன்றி தன்னை மனிதாபிமானமில்லாமல் வெளியேற்ற முயல்வதைப்பற்றி முறையிட்டார். 1973ல் லென்னான் அமெரிக்காவைவிட்டு 60 நாட்களுக்குள் வெளியேறவேண்டும் என அமெரிக்க ஆர்சு உத்தரவிட்டது.
அதற்கு எதிர்வினையாக லென்னான், இதழாளார் சந்திப்பைக் கூட்டி தான் ஒரு கற்பனை நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அதன் பெயர் 'நுட்டோப்பியா'. அதற்கு எல்லைகள் இல்லை, ஆகவே கடவுச்சீட்டும் இல்லை.

வாட்டர்கேட் ஊழலுக்குப்பின்னர் நிக்ஸன் பதவி விலகியபோது லென்னான் மேலான வெளியேற்ற ஆணை ரத்துசெய்யப்பட்டது. லென்னான் அமெரிக்காவில் பச்சை அட்டை பெற்றார். ஜிம்மி கார்ட்டர் அமேரிக்க அதிபராக பதவி ஏற்றபோது அந்த விருந்துக்கு லென்னான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்¡ர்!

நெடுங்காலமாக அவரால் புறக்கணிக்கபப்ட்டிருந்த மூத்தமகன் ஜூலியனுடன் இக்காலகட்டத்தில் லென்னான் நெருக்கமாக ஆனார். இசையுலகில் இருந்து ஓய்வுபெற்று புதிதாகப்பிறந்த தன் மகன் ஸீனுடன் வாழ்க்கையைச் செலவிடப்போவதாக அறிவித்தார். ஆனால் சீக்கிரத்திலேயெ திரும்பி வந்தார். 'இரட்டைக் கற்பனை' [Double Fantasy] என்ற அவரது புதிய இசைத்தொகை வெளிவந்தது. மேலும் பல பல வருடங்களுக்கு நீளப்போகும் ஓர் இசைப்பயனத்தை தான் தொடங்கியிருப்பதாக அவர் அறிவித்தார். அப்போது லென்னானுக்கு நாற்பது வயது.

அந்த இசைத்தொகை வெளிவந்து சில நாட்கள் கழிந்து 1980 டிசம்பர் எட்டாம் தேதி லென்னான் அந்த இசைத்தொகையின் பிரதி ஒன்றில் தனது அதி தீவிர ரசிகனாகிய 25 வயதுள்ள டேவிட் சேப்மேன் என்பவருக்கு கையெழுத்திட்டுக் கொடுத்தார். அன்று இரவு 11 மணியளவில் அந்த தீவிர ரசிகன் லென்னானின் வீட்டு முகப்பிலேயே அவரை முதுகில் ஐந்துமுறை சுட்டு வீழ்த்தினார். லென்னான் எதர்க்கு கொல்லப்பட்டார் என்பது, வாழ்நாள் முழுதும் அவரை பீடித்த கேள்விகளுக்கு ஜான் லென்னானுக்கு பதில் கிடைத்ததா என்பது போலவே மர்மமாகத் தான் இன்றும் இருக்கிறது.

நான் கனவு மட்டும் காண்பவன் என்று நீங்கள் சொல்லலாம்
ஆனால் நான் ஒருவன் மட்டுமல்ல!
நீங்களும் ஒருநாள் என்னுடன் இணையக்கூடும்.
இந்த உலகமே ஒன்றாகக்கூடும்!

தமிழில் ஜெ