20111211

தமிழும் நானும்


தமிழை நான் இன்னொரு மொழியாக எப்போதுமே உணர்ந்ததில்லை. எனது நினைவுகள் தொடங்கும் காலத்திலிருந்தே ஏதோ ஒரு வகையில் தமிழ் எனது வாழ்க்கையில் இருந்துகொண்டேயிருக்கிறது. மூணார், பூப்பாறை, நெடும்கண்டம், குமளி, ஏலப்பாறா போன்ற ஆண்டில் ஏழுமாதமும் மழைவிழுந்துகொண்டிருந்த எங்களது குளிர்ந் ஊர்களிலெல்லாம் இரண்டாவது மொழியாக தமிழ் எப்போதுமே இருந்திருக்கிறது. அங்குள்ள ஏலக்காய் காடுகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் மலையாளத்தை விட அதிகமாக தமிழ்தான் எப்போதுமே கேட்கமுடிந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஏலத்தோட்டங்களின் பெரும் முதலாளிகளிலிருந்து ஏழ்மை மிகுந்த விவசாய தினக்கூலிகள் வரை தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட எண்ணற்றவர்களால் அந்த ஊர்கள் எப்போதுமே நிரம்பியிருந்தன. அங்குள்ள சராசரி மலையாளிகள் தமிழர்களை கொஞ்சம் ஏளனமாக, ஆனால் அவர்கள் காதில் விழாதபடி பாண்டிகள் என்றோ பாண்டிக்காரன்மார் என்றோ குறிப்பிட்டு வந்தனர். ஆனால் மலையாளிகளைப்பற்றி தமிழர்கள் அதைவிட ஏளனமாக மலையாளத்தான்மார் என்று குறிப்பிட்டு வந்தது அவர்களுக்குத் தெரியவில்லை!

அப்போது அங்குள்ள தமிழர்கள் பெரும்பாலும் மலையாளம் பேசக் கற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லாதவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் தமிழிலேயே பேசுவார்கள். ஏன் என்றால் அங்கு அனைவருக்குமே தமிழ் புரியும். பழையகாலத்து மலையாளிகள் தூய மலையாளத்திலும், தமிழர்கள் தூயத் தமிழிலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் புரிந்துகொள்வதில் இருவருக்கும் எந்த சிரமும் இருக்காது. அடிப்படையில் இவ்விரண்டுமொழிகளும் ஒன்று தானே! செந்தமிழ்ச் சொற்களுடன் சமஸ்கிருதமும் கலந்து உருவான மலையாளம் அதன் இன்றைய வடிவத்துக்கு வந்து ஐநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை!

சிறுவயதில் ஒரளவுக்காவது தமிழ் பேசத் தெரியாமல் இருப்பது ஒருவகையான அவமானமாகத்தான் நான் எண்ணினேன். ஒருவர் மலையாளத்திலும் அடுத்தவர் தமிழிலுமாக ஒருவருக்கொருவர் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. இன்னுமொரு வேடிக்கையாக தமிழ் என நினைத்துக்கொண்டு பல மலையாளிகள் ஒருவகையான மாற்றுத் தொனியில் மலையாளமே தமிழர்களிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு நானும் நண்பர்களும் சிரித்து விழுந்தோம். இக்காரணங்களினால் எனது தலைமுறையினர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் மலையாளவாடை இருந்தபோதிலும் நன்றாகத் தமிழ்பேசப் பழகினார்கள். எங்கேயாவது ஒரு தமிழன் கிடைத்தால்போதும் “எனிக்கு தமிள் நல்லா தெரியும். உங்ஙளுக்கு தெரியுமா? உங்ஙள் பேற் என்ன?என்று நாங்கள் ஆரம்பித்து விடுவோம்.

தமிழ் பாடல்கள், தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொடர்ந்து கேட்டு, தமிழ் திரைப்படங்களை பார்த்து எனது தமிழ் பேச்சு வளர்ந்து வந்தது. ஆனால் தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள், கடைகளின் பெயர் பலகைகள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் திருக்குறள் வாசகங்கள் போன்றவற்றை படிக்கமுடியாமல்போவது எனக்கு வருத்தமளித்தது. எப்படியாவது அவற்றைப் படித்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தினால் சிரமப்பட்டு ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ராணி, தேவி, முத்தம், முத்தாரம், கற்கண்டு, குங்குமச் சிமிழ், பொம்மை, பேசும் படம் போன்ற தமிழ் இதழ்கள் மட்டும்தான் அவ்வூர்களில் அப்போது கிடைத்து வந்தன. அவற்றை வாங்கி கண்பார்வை மங்கிப்போன ஒரு கிழவன் படிப்பதுபோல் ஒவ்வொரு எழுத்தாக படிக்க ஆரம்பித்தேன். ஒரளவுக்கு தமிழ் படிக்க முடிந்ததும் எனக்கு தமிழ் படிக்கத்தெரியும் என பிற மலையாளத்தான்களுக்கு எடுத்துரைக்க தமிழ் இதழ்களை கையில் தூக்கிப்பிடித்து திரிய ஆரம்பித்தேன். அதை பார்த்து யாராவது ஒரு தமிழன் என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தவுடன் பூரித்துப்போய் விடுவேன்!

தமிழ் படிக்கத்தெரிந்ததன் வழியாக பதின்பருவத்தில் இன்னொரு நன்மையும் எனக்கு ஏற்பட்டது. நான் படித்த கிருத்தவ உயர்நிலைப் பள்ளி தமிழ் பகுதிகளிலிருந்து தொலைவில் இருந்தது. அங்கு தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாருமே இருந்ததாக நினைவில்லை. கிடைக்க அரிதான புதுசக்தி எனும் மலையாள காமக்கதை இதழை நண்பர்கள் எப்படியாவது ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அதை படித்து இன்புறுவதற்காக நாங்கள் திருடர்களைப்போல் பள்ளத்தாக்குகளில் பதுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. ஒருமுறை மதிய உணவுக்கு பின் வகுப்பறையில் கூட்டமாக அமர்ந்து அதை படித்துக் ரசித்துக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரான பாதிரியார் மின்னல் வேகத்தில் உள்ளே வந்து அனைவரையும் பெரம்பால் அடித்துத் துவைத்து அந்த விஞ்ஞான இதழையும் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டுபோனார். அவரது திடீர் சோதனையில் பல வகுப்பறைகளிலிருந்தும் அத்தகைய புத்தகங்கள் பிடிபட்டன என்று செய்தி வந்தது. அதையெல்லாம் பாதிரியார் என்ன செய்வார் என்று நான் கேட்டதற்கு நன்பன் ஒருவன் “அவர் கவனமாகப் படித்து அதன் தீமைகளை உணர்ந்தபின் மடாலயத்தில் இருக்கும் கன்னிகா ஸ்திரீகளும் அத்தீமைகளை உணரும்படி அவர்களிடம் கொடுப்பார்என்று விவகாரமாக சொன்னான்!

ஆனால் எனது தமிழ் புலமையினால் எனக்கு மட்டும் விரைவில் அந்த வாசிப்பின் இன்பத்துக்கான வழி திறந்தது. மிக அழகான, ஆனால் களங்கமற்ற தோற்றம்கொண்ட பெண்களின் வரைபடங்களை முகஅட்டைகளாகக் கொண்ட, சாதாரண புத்தகங்களின் தோற்றமுடைய தமிழ் பாலியல் கதை புத்தகங்கள் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைத்தன. நான் அதை வாங்கி வீட்டுக்கே கொண்டுபோகலாம். எங்கேயும் திறந்து வைத்துப் படிக்கலாம். பையன் தமிழில் ஏதோ கவனமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னுமொரு மொழி தெரிந்து வைத்திருப்பதனால் அவனுக்கு எதாவது நன்மை ஏற்படுமானால் ஏற்பட்டுத் தொலையட்டும். யாருமே இடையூறு செய்யவில்லை. Sex என்கிற ஆங்கில வார்த்தையை தமிழில் ‘செக்ஸ்என்று படிப்பதே உற்சாகமளித்தது. மலையாளத்தில் அது ‘ஸெக்ஸ்என்று பலமற்றுத்தான் இருக்கும்! மலையாளத்தில் ‘ச்சந்திஎன்கிற அசிங்கமான ஒலிகொண்ட வார்த்தையில் அழைக்கப்படும் உறுப்பின் பெயரை தமிழில் புட்டங்கள்என்று படிப்பதே பேரானந்தமாகயிருந்தது! அவ்வயதில் ஒரளவுக்கு வேகமாக தமிழைப் படிக்க எனக்கு உதவியது அந்த மலிவுவிலை பாலியல் கதைப் புத்தகங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

விரைவிலேயே அப்புத்தகங்களை கைவிட்டு நான் மலையாள, ஆங்கில இலக்கிய வாசிப்புக்குத் தாவினேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் வெகுஜென இதழ்களை வாங்கி படித்துவந்தேன். தமிழ் மொழியுடனான தொடர்பு விடக்கூடாது என்பதற்காக. அன்றிலிருந்து இந்த மூன்று மொழிகளிலும் நான் வாசித்து வருகிறேன். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்ததன் சில பகுதிகளை வார இதழ்களில் படித்து வியந்துபோனேன். அதை முழுமையாக தமிழில் நேரடியாக படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஜே ஜே சில குறிப்புகள் தான் நான் தமிழில் வாசித்த முதல் புத்தகம். அத்துடன் ராமசாமியின் ரசிகனாக மாறிய நான் பின்னர் அவரது ஒரு புளிய மரத்தின் கதையும் தமிழிலேயே படித்தேன்.

ஏதேதோ காலங்களில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, உருது போன்ற மொழிகளை பயன்படுத்தவும், குஜராத்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளை புரிந்துகொள்ளவும் நான் சுயமாக கற்றுக் கொண்டேன். அவற்றின் இலக்கியங்களை படிக்கவோ அவற்றில் எழுதவோ முடியவில்லையென்றாலும் அம்மொழிகள் சார்ந்த கலாச்சாரங்கள், அவ்வூர்களின் இசை போன்றவற்றைப் பற்றியெல்லாம் தொடர்ந்த தேடலுடன்தான் இன்றும் இருக்கிறேன். மொழிகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தேடல் என்றைக்குமே எனக்குள் இயல்பாகவே இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

தமிழில் பலகாலத்துக்குப்பின்தான் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் என என் தமிழ் வாசிப்பு கொஞ்சம் விரிவடைந்தது. முறையாக தமிழைப் பயிலவில்லை என்ற காரணத்தினால் தமிழில் வாசிக்க எனக்கு எப்போதுமே எந்த சிரமும் ஏற்பட்டதில்லை. சுவாரசியமாக எழுதப்பட்ட எதையுமே படிக்க என்னால் முடிகிறது. ஆனால் இன்றும் தமிழை வேகமாகப் படிக்க என்னால் முடிவதில்லை. ஒரு பக்கத்தை படிப்பதற்கு உங்களுக்குத் தேவையான நேரத்தை விட இரண்டு மடங்கு நேரம் எனக்குத் தேவை! ஆதலால் இன்றும் தமிழின் பழம்பெரும் படைப்புகள் பலவற்றை படிக்காதவனாகத்தான் நான் இருக்கிறேன். இருந்தும் எனது குறைவான தமிழ் வாசிப்பை வைத்துக்கொண்டே தமிழ் இலக்கியம் மலையாள இலக்கியத்தை விட ஐம்பதாண்டுகளாவது முன்னேதான் என்று எந்தவொரு சந்தேகமுமின்றி சொல்வேன்.

தமிழில் என்னால் எழுதமுடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை கூட செய்யவில்லை. பெரும்பாலும் ஆங்கிலத்திலும் மிகக்குறைவாக மலையாளத்திலும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் ஜெயமோகன்தான் முன்வந்து எனது ஒரு கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து உயிர்மையில் வெளியிட்டார். வெளிவரும்முன் அதை நான் படிக்கவில்லை. பின்னர் படித்தபோது அதில் ஹிந்தி, பெங்காலி போன்ற பிறமொழி வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டிருந்தது. அதைச் சொன்னபோது முரசு அஞ்சலை பதிவிறக்கம் செய்து அதில் தமிழ் தட்டச்சு செய்ய பயின்றுகொள்ளுங்கள் என்று சொன்னார் ஜெயமோகன். தமிழில் வெளியிடுவதற்காகவே தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தவர் ஜெயமோகன். அத்துடன் இசையைப் பற்றி தமிழில் தொடர்ந்து நான் எழுதவேண்டும் என்கிற உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரனின் கட்டாயப்படுத்தல்தான் என்னை தமிழில் ஒரு எழுத்தாளனாக்கியது. ஜெயமோகனுக்கடுத்து எஸ் ராமகிருஷ்ணன் எனது சில கட்டுரைகளை மொழி பெயர்த்தார். பின்னர் ஜீ குப்புசாமி, முபாரக், அமிதா, ஸ்ரீபதி பத்மனாபா ஆகியோரும் எனது கட்டுரைகளை மொழியாக்கம் செய்தனர். ஆனால் தமிழில் வந்த எனது முதல் கட்டுரை மட்டும்தான் மொழிபெயர்ப்பாளர் எழுதிய அதேவடிவத்தில் வெளிவந்தது.

தமிழில் தட்டச்சு செய்யும் மென்பொருள்களை புரிந்துகொண்டபின் மொழிபெயர்த்து வரும் கட்டுரைகளை நான் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே திருத்தியமைக்க, செம்மைப்படுத்த ஆரம்பித்தேன். சில வரிகளை, பந்திகளை அழித்து புதியவற்றை உள்சேர்க்கத் தொடங்கினேன். ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்ற தேர்ந்த மொழியாளுமைகளின் மொழியையும், பல உலக இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்த குப்புசாமியின் மொழியையும், முபாரக் போன்ற புத்தம்புதிய ஒரு எழுத்தாளனின் மொழியையுமெல்லாம் தொடர்ந்து அவதானிக்க நேர்ந்ததனும் அவற்றுக்குள் சில மாற்றியமைப்புகளை முயன்று பார்த்ததனும் வழியாகத்தான் தமிழில் நேரடியாக எழுதுவதற்கான ஓரளவு தைரியம் எனக்கு கிடைத்தது. இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் எழுதியுள்ளேன் ஆனால் இந்த அதிசய மொழியின் சூட்சுமங்கள் எதுவுமே எனக்கு இன்றும் சரியாகப் பிடிபடவில்லை.

தமிழுடன் எந்த தொடர்பும் இல்லாத இத்தாலிய மொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் பல்லாயிரம் மைல்கள் தாண்டி தமிழுக்கு வந்து இந்த மொழிக்கு மகத்தான வரலாற்றுத் தொண்டினைச் செய்த காண்ஸ்டன்டைன் பெஸ்சி என்கிற வீரமாமுனிவரையும் ஜார்ஜ் பாப்பையுமெல்லாம் நினைத்து பார்க்கும்போது, தமிழிலேயிருந்து பிறந்த மலையாளத்தை தாய்மொழியாகக்கொண்ட நான் தமிழில் எழுதுவதில் பெரிதாக சிறப்பு எதுவுமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தும் இடைவிடாமல் மழை விழுந்துகொண்டிருந்த எனது பால்யத்தின் மலைப்பாதைகளில் என்னுடன் நடந்து, இந்த அழகுமொழியில் என்னுடன் பேசிய அந்த ஒவ்வொரு எளிய மனிதர்களையும் நினைவுகூர்கிறேன். மனதால் அவர்களது பாதங்களைத் தொட்டுக்கொள்கிறேன்.