20090112

ஏ.ஆர்.ரஹ்மான் - கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர்

உலக அரங்கில் இந்திய இசைக்கு மாபெரும் கெளரவத்தை பெற்றுத் தந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். 2009 ஜனவரி 11ஆம் தேதியன்று கலிபோர்னியாவிலுள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் உயர்த்திப் பிடித்த போது உலக அரங்கில் இந்திய திரை இசை முதல் முறையாக உயர்ந்து நின்றது. இந்திய திரை இசை ரசிகர்களுக்காக ரஹ்மான் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார்.

66 ஆண்டுகளாக வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மான். 1944ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் உலகின் சிறந்த சினிமா, தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் விருது மிகவும் மதிக்கப்படுபவை. பிரிட்டிஷ் இயக்குனர் டானி போய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்ததற்காக ரஹ்மான் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

ரஹ்மானின் பரந்துபட்ட இசைத் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்று நான் கருதுகிறேன். 1992ல் இசையமைத்த ரோஜா முதல் இன்று வரை தொடரும் இடைவிடாத இசைத் திறமையின் வெளிப்பாட்டிற்கு கிடைத்த பரிசு இது. மென்மையான காதல் மெல்லிசை மெட்டுக்கள், சாஸ்திரீய பாணி பாடல்கள், கஜல் அடிப்படையிலான பாடல்கள், தாளம் போட வைக்கும் டெக்னோ பாடல்கள், இன்றைய ஹிப் ஹாப் பாடல்கள் போன்றவைகள் எல்லாம் வழியாக இந்திய திரை இசையில் ஒரு புதிய பரிமாணத்தையை அவர் உருவாக்கினார். புதிது புதிதாக பல்வேறு இசைக் கருவிகளையும் ஓசைகளையும் பயன்படுத்திய ரஹ்மான் கடந்த 18 வருடங்களில் இந்திய வெகுஜன இசையில் பல உச்சங்களை தொட்டிருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------
இன்றைய நிலையில் உலக அளவில் கோலோச்சும் ஒரே இந்திய இசையமைப்பாளர் ரஹ்மான் மட்டுமே. இதற்கு முன்பு பாம்பே ட்ரீம்ஸ போன்றவைக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம்தான் மேற்கத்திய இசை விமர்சகர்களின் மனதிற்குப் பிடித்தவராக ரஹ்மான் மாறியிருக்கிறார். லாஸ் ஏஸ்சலீஸில் கிரிடிக்ஸ் சாய்ஸின் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் கடந்த வாரம் ரஹ்மான் வென்றிருக்கிறார்.

ஹாலிவுட் பிரஸ் அசோசியேஷனால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுகள் ஆஸ்கார் விருதை வெல்வதற்கான முந்தைய நிலை என்று சொல்லப்படுவதுண்டு. ஆஸ்கார் விருது வருகிற பிப்ரவரியில் அறிவிக்கப்பட இருக்கிறது. திரைப்பட இசைக்காக ஆஸ்கார் விருது வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் ரஹ்மான்.

கோல்டன் குளோப் விருதை வென்றதற்காக அவருக்கு நம் பாராட்டுக்கள், ஆஸ்கார் விருதை வெல்வதற்கு நம் வாழ்த்துக்கள். நீங்கள் இந்திய திரை இசை ரசிகர்கள் அனைவருக்கும் பெருமையை தேடித் தந்திருக்கிறீர்கள்...