20100629

மர்லின் மன்றோ: திரும்பி வராத நதி

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலால் எனக்கு ஒரு நன்மை ஏற்பட்டுள்ளது. காருக்குள் காத்திருக்கும் நேரங்களில் பிடித்தமான இசையைக் கேட்பதுதான் அது. பத்துக்கும் மேலான பண்பலை வரிசை ரேடியோ ஒலிபரப்புகளில் ஏதாவது ஒன்றில் எந்த நேரத்திலும் நிச்சயம் ஒரு நல்ல பாடலையாவது கேட்க முடியும். அதில் ஒரே இடையூறு, சுவாரஸ்யமூட்டுவதாக நினைத்துக் கொண்டு கண்டபடி உளறும் ரேடியோ ஜாக்கிகளின் கொஞ்சல்கள். அத்தொல்லை அதிகரிக்கும்போது ரேடியோவிலிருந்து இசைவட்டுகளுக்கு மாறுவேன். பல்வேறு மொழிகளின் பாடல்கள் பதிவுசெய்த இசைவட்டை தானியங்கி முறையில் ஓட விட்டு, ஒரு பழைய இந்திபாடல், 60களின் ஆங்கில பாப் இசை பாடல், சமீபத்திய தமிழ் திரைப்படப்பாடல், புபேன் ஹசாரிகாவின் அஸ்ஸாமிய நாட்டுப்புற பாட்டு என மாறிமாறி கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அது போன்றதொரு சாலைபிதுங்கி நிற்கும் நெரிசல் நாள்¢ல், சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான 'அழகிய தமிழ்மகன் படத்திலிருந்து ஒரு பாடலை பண்பலை வரிசையொன்றில் கேட்க நேர்ந்தது. புத்தம் புது பாடல், துள்ளலான இசை. ஆனால் அந்த பாடல் வரிகள் என்னைக் குழப்பமூட்டியது. 'நீ மர்லின் மன்றோ க்ளோனிங்கா?, ஜெனிபர் லோபசின் ஸ்கேனிங்கா?'... மர்லின் மன்றோவின் க்ளோனிங் போன்ற ஒரு பெண் எப்படி சம்பந்தமேயில்லாத ஜெனிபர் லோபசின் ஸ்கேனிங் போலவும் இருப்பாள்? எதற்காக இந்த ஒப்பீடு என்று யோசிக்கத் துவங்கினேன். அதற்குள் பாடல் முடிந்து அறிவிப்பாளினி உளறத் துவங்கியிருந்தாள். ரேடியோவை அணைத்துவிட்டு இசைதட்டை சுழல விட்டதும் 'ஸான்டா பேபி' [Santa baby, just slip a sable under the tree] என்ற பாடல் ஒலித்தது. அந்த தற்செயலை என்னால் நம்பவே முடியவில்லை. அது மர்லின் மன்றோ பாடிய பாடல்.

மர்லின் இறந்து போய் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் அவள் பல்லாயிரம் மக்களின் நினைவில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறாள். அவளது பாதிப்பு உலகம் முழுவதும் நீக்கமற்று நிரம்பியிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் மேற்சொன்ன தமிழ்ப்பாடல். துலங்கும் அழகும், வெகுளித்தனமான முகமும், வாளிப்பான உடலும், கிறங்கச் செய்யும் பார்வையும் கொண்டிருந்த மர்லின் மன்றோ இருபதாம் நு¡ற்றாண்டின் நிகரற்ற கவர்ச்சிப்பாவையாகவும், பாலின்ப பிம்பமாகவுமே அறியப்பட்டாள். புகைப்படங்கள், திரைப்பட்ங்கள்,விளம்பரங்கள், கிசுகிசுப்புகள் போன்றவை வழியாக அவளது உடல் காமக்குறியீடாக முன்னிறுத்தப்பட்டது.

உலகமெங்குமுள்ள ஆண்களின் காமக்கனவுகளுக்கு து¡ண்டுகோலாகயிருந்தது அவளது உருவம். இந்நாள் வரை உலகம் மர்லின் மன்றோவை அழகுப் பதுமையாகவும், வெறும் கவர்ச்சிக் கன்னியாகவும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி மர்லின் உலகின் எக்காலத்தையும் சிரந்த அழகிகளில் ஒருத்தியே. அவளது வனப்பில் எத்தனையோ முக்கிய கலைஞர்கள் மயங்கியிருக்கிறார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒவியரான ஆன்டி வோரல் (Andy Warhol) மர்லின் மீதான தனது அபிமானத்தை எண்ணற்ற ஒவியங்களாக தீட்டியிருக்கிறார். அவளது கச்சிதமும் கவர்ச்சியுமான உடற்கட்டும் உடையும் நடையும் இன்று வரை எத்தனையோ நடிகைகளுக்கு ஆதர்சமாக உள்ளது. ஆனால் அழகு, இளமை, கவர்ச்சி என்ற புறத்தோற்றங்களுக்கு அப்பால் மர்லின் மன்றோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பாடக்கூடிய ஒரு சிறந்த பாடகியாகவும் இருந்தாள். உலக சினிமாவில் இவளைப் போன்று உணர்ச்சிகள் கொந்தளிக்கும் பாடும் திறன் கொண்ட வேறு நடிகைகளை காண்பது அரிது.

அமெரிக்க சினிமாவில் மர்லின் எப்போதுமே கவர்ச்சியின் அடையாளமாகத்தான் முன்னிறுத்தபட்டாள். மிகக் குறைவான உடையில் அவள் திரையில் தோன்றிய போதும் கூட அது எவரையும் அருவருப்படைய செய்யவில்லை. காரணம் அவளது ஒயிலான உடல்வாகும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தெரிந்த அவளது குழந்தமை கொண்ட முகபாவமுமே. ஒரு பாடகியாக அவளிடமிருந்த தனித்துவம் பொதுபுத்தியில் பதிவாகியிருந்த மர்லினின் சித்திரத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. ஆனால் தேர்ந்த பாடகியாக அவள் ஒரு போதும் அங்கீகரிக்கபடவேயில்லை. அதற்கு காரணம் அவள் மீதிருந்த கவர்ச்சி படிமமே.

இந்நாள் வரை நான் மர்லின் மன்றோவின் பெயரை, சிறந்த பாடும் நடிகைகள் பட்டியல் எதிலும் பார்த்ததேயில்லை. அத்தகைய பல பட்டியல்களில் பார்பரா ஸ்ட்ரைஸன்ட் (Barbara Streisand), ஜூடி கார்லன்ட் (Judy Garland) போன்ற நல்ல பாடகிகளின் பெயர்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. எனக்கு பார்பரா ஸ்ட்ரைஸன்டின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். ஆனாலும் இவர்களில் எவரும் பிரதானமாக நடிகைகள் இல்லை, பாடகிகள் தான். மர்லின் மன்றோ நடிகைகளில் ஒரு உயர் நட்ச்த்திரம். ஆனால் ஒரு பாடகியாக அவள் பாடியது நாற்பதுக்கும் குறைவான பாடல்கள்தான். ஆனால் முதல்படமான 'லேடீஸ் ஆஃப் த கோர்ஸ்' இல் [Ladies of the Chorus] அவளுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கான காரணமே பாடத்தெரியும் என்பது தான். அது சிறந்த படமில்லை என்றபோதும் 'ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அப்பா தேவை' [Every Baby Needs a Daddy], 'நான் உன்னை காதலிப்பது எவருக்கும் தெரியும்' [Anyone Can See I Love You] போன்ற மூன்று மறக்கமுடியாத மர்லின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

1950களின் புகழ்பெற்ற அமெரிக்க பாடகிகளான பில்லி ஹாலிடே, நீனா சிமோன், ஜூடி கார்லன்ட் என யாவருமே சிறந்த குரல்வளமும், வெகுதனித்துவமான பாடும் முறையும் கொண்டிருந்தார்கள். பில்லியின் குரல் துயரம்படிந்து தழல் போல அசைவுறக்கூடியது. நீனா எனக்கு பிடித்த பாடகிகளில் ஒருத்தி. ஆண்தன்மை கொண்ட அடித்தொண்டையில் பாடும் குரல் அவளுடையது. ஜூடியோ எப்போதும் உச்ச ஸ்தாயியில் சஞ்சரிக்க கூடியவள். மர்லின் மன்றோவும் இவர்களிடமிருந்து மாறுபட்டவள் அல்ல. அவளது குரல் மிக இனிமையானதாகவும், உணர்ச்சி பாங்கோடு தனித்துவமானதாகவுமிருந்தது. ஆனாலும் அவளது பாடும் திறன் உரிய முறையில் கண்டுகொள்ளப்படவேயில்லை.அவள் உடல் மீது கொண்டிருந்த ஈடுபாட்டை, யாரும் அவளது குரல்மீது காட்டவில்லை.

திரையில் அவள் தோன்றும் கவர்ச்சிபடிமத்திற்கு துணை செய்வது போன்றே அவளது பெரும்பான்மையான பாடல்களும் அமைந்திருந்தன. சரசமாடும் காட்சிகளுக்கான பாடல்கள் என்ற போதும் அதை மர்லின் ரசித்து பாடியுள்ள விதம் இந்நாள் வரை வேறு எந்த திரைப்பாடகியாலும் பாட முடிந்ததேயில்லை என்றே சொல்வேன். Teach me Tiger என்ற பாடலை ஒரு முறை கேட்டுபாருங்கள். நீங்களே அதை உணர்வீர்கள். என்வரையில் மர்லின் மன்றோவின் பாடலை கேட்பது ஒரு நெகிழ்வூட்டும் அனுபவம். அவள் பாடும் முறை அகவுணர்ச்சியை து¡ண்டக்கூடியது. ஒரு சாதாரணப் பாடலை ஒரு நல்ல பாடகி தன் உணர்ச்சிப்பூர்வமான பாடும்முறையால் எந்த அளவு உயரத்திற்குகொண்டு செல்ல இயலும் என்பதற்கான அடையாளம் அது.

மர்லின் மன்றோ பாடிய 'புல்வெளிக்குள்' [Down in the Meadow] மற்றும் 'நான் காதலைக்கடந்ந்துள்ளேன்' [I'm Through with Love] போன்ற பாடல்களை உதாரணங்களாகச் சொல்லலாம். 'ஓர் இனிய காதல்' [A Fine Romance] என்ற என்றைக்குமான சிறந்த பாடலை அவள் பாடிய விதம் இதுவரை பாடப்பட்டய அப்பாடலின் வடிவங்களில் மிகவும் தனித்துவமானது. தீராத துயரத்தை வெளிப்படுத்தும் 'திரும்பி வராத நதி' [River of No Return] மர்லினின் மிகச்சிறந்த் பாடல்களில் ஒன்றாகும். தன் மீது படிந்திருந்த கவர்ச்சிபடிமத்தை தன் பாடல்களின் வழியாக எளிதாக தாண்டிச் செல்ல மர்லினால் முடிந்திருக்கிறது. தன்னியல்பாக அவளிடமிருந்த ஈடுபாடும் தனித்திறனும் அவள் பாடல்களுக்கு நேர்த்தியான கலைத்தன்மையை உருவாக்கின. குறுகிய குரலளவு கொண்டிருந்த போதிலும் மர்லினால் தன் பாடல்களில் இதயப்பூர்வமான லயிப்பை உருவாக்க முடிந்திருக்கிறது. இன்றுள்ள பிரபல பாடகிகளான காய்லி மினோக் (Kylie Minogue), மடோனா, ப்ரிட்னி ஸ்பியேர்ஸ், கிறிஸ்டினா அக்விலேரா (Christina Aguilera) போன்றவர்களின் பாடும் முறையும் நடை உடை பாவனைகளும் மர்லினின் ஜாடை கொண்டேயிருக்கிறது.

மர்லின் மன்றோ அமெரிக்காவின் பிரபலமான கறுப்பின பாடகியான எல்லா பிட்ஸ்ஜெரால்டின் (Ella Fitzgerald) 'ப்ளூஸ்' [Blues]இசைப்பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். அந்த பாதிப்பை அவள் பாடும் முறையில் நேரடியாக காணமுடிகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ப்ளூஸ் இசை வடிவமே மர்லின் மன்றோவிற்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கிறது. ப்ளூஸ் இசை ஆற்றாமையையும், அடங்கிய துக்கத்தையும், காதலின் தீராதவலியையும், மனிதவாழ்வின் அர்த்தமற்ற புதிர்தன்மையையும் பகிர்ந்து கொள்வதாகும். பகட்டும் புகழும் தன்னை சுற்றியிருந்த போதும், மர்லின் தீராத மனத்துயரோடுதானிருந்தாள். தன் வாழ்வு குறித்து அவள் குறிப்பிடும் போது "சந்தோஷம் என்பதை என் வாழ்வில் நான் அறிந்திருக்கவேயில்லை. ஒரு சிறுமியாக நான் வளர்க்கபட்ட விதம் வேதனையானது. சாதாரண அமெரிக்க குடும்பம் ஒன்றில் வளர்க்கபடும் சிறுமிக்கு கிடைக்கும் எவ்விதமான மகிழ்ச்சியும் எனக்கு கிடைக்கவேயில்லை" என்றாள்.

உண்மை தான், அநாதைகளின் சந்தோஷத்தைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்? யாருமில்லாமல் வளர்ந்து யாருமில்லாமல் சாகும்படியாக கைவிடப்பட்டவர்கள் தானே அவர்கள். மர்லின் மன்றோவும் அது போன்ற அநாதைகளில் ஒருத்தி தான். வறுமையும் பசியும் பீடித்த சிறுமியாக வளர்ந்து, வாலிபம் தந்த உடற்கவர்ச்சியால் பின்னாளில் அமெரிக்க சினிமாவின் தாரகையாக மின்னினாள். எந்த திரைக்கதையாசிரியனாலும் கற்பனை செய்ய முடியாத உண்மைக் கதைதான் அவளது வாழ்க்கை.

நார்மா ஜீன் மார்டின்சென் (Norma Jeanne Mortenson) என்ற உண்மை பெயர் கொண்ட மர்லின் மன்றோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையொன்றில் 1926 ஆண்டு ஜூன் 1 ம் தேதி பிறந்தாள். அவளுடைய அம்மா க்ளாடிஸ் மன்றோ பேக்கர் (Gladys Monroe Baker). அவளது பிறப்பு சான்றிதழில் அப்பா என்று எட்வர்ட் மார்டின்சன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவளது ஞானஸ்நான சடங்கில் அவள் ஜாஸ்பர் பேக்கரின் மகள் என்று குறிப்பிடப்படுகிறாள். மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்களில் சிலர் அவளது உண்மையான அப்பா ஸ்டான்லி ஜிஃபோர்டு (Stanley Gifford) என்று குறிப்பிடுகிறார்கள். காரணம் க்ளாடிஸ் கிஃபோர்டுடன் ஹாலிவுட்டின் ஆர்கேஓ ஸ்டுடியோவில் பகுதி நேர ஊழியராக நெகடிவ் கட்டர் வேலை செய்து வந்திருக்கிறார். அந்த நாட்களில் இருவருக்குள்ளும் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம் க்ளாடிஸ்க்கு வேறு சிலரோடும் தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அவரது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பதை துல்லியமாக அவரால் சொல்லவே முடியவில்லை.

க்ளாடிஸ் ஒரு பக்கம் தீவிரமான மதநம்பிக்கை கொண்டிருந்தார். அதே நேரம் ஹாலிவுட் சினிமாவின் மீதும் அவருக்கு அதீத விருப்பம் இருந்தது. தனக்கு பிடித்தமான நடிகையான நார்மா தால்மேஜ் [Norma Talmadge] நினைவாகவே தன் மகளுக்கு நார்மா என்று பெயரிட்டார். முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கர் வழியாக அவருக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவால் ஜாஸ்பர் தன்னுடைய குழந்தைகளை அவளிடமிருந்து பிரித்து கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு எட்வர்ட் மார்டின்சன் உடன் சேர்ந்து வாழ துவங்கினார். ஆனால் அந்த கசப்பான மணவாழ்வும் சில மாதங்களிலேயே முடிந்து போனது. நார்மாவிற்கு மூன்று மாதங்கள் நடந்து கொண்டிருந்த போது எட்வர்ட் ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

தன் வாழ்நாள் முழுவதுமே மர்லின் மன்றோ ஒரு தந்தையின் பரிவிற்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். அப்பாவின் அன்பிற்கான அவளது தேடுதல் தான் பல்வேறு ஆண்களுடனான அவளது உறவிற்கு ஆதார காரணமாக அமைந்திருக்கிறது. மர்லினின் உண்மையான அப்பா என கருதப்படும் ஸ்டான்லி ஜிஃபோர்டு பிரபல ஹாலிவுட் நடிகரான கிளார்க் கேபிளின் ஜாடையில் இருந்த காரணத்தால் பல நேரங்களில் கிளார்க் கேபிளையே தன்னுடைய அப்பா என்று மர்லின் கனவுகாணத்துவங்கினாள். பின்னாளில் தன் பதின்வயதில் ஒருமுறை அவள் ஜிஃபோர்டுடன் போனில் பேசுவதற்கு முயன்றாள். பயந்து தயங்கி, அச்சத்துடன் "அப்பா... நான் க்ளாடிஸின் மகள் நார்மா பேசறேன்....என தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். உடனே ஜிஃபோர்டு கோபத்துடன் 'எந்த க்ளாடிஸ்' என்று கேட்டபடி போனை துண்டித்து விட்டார். தன் வாழ்நாள் முழுவதும் தகப்பனின் புறக்கணிப்பிற்கு உள்ளான ஆறாத வடுவோடு வாழ்ந்த அவள் தன் குழந்தைப்பருவம் முழுவதையும் அடர்ந்த இருட்டிலேயே கழிக்க நேர்ந்தது.

வறுமையில் வாடிய க்ளாடிஸ் தன்னுடைய மகள் பிறந்த பனிரெண்டே நாட்களில் அவளை ஆல்பெரட் மற்றும் இடா போலண்டர் தம்பதியிடம் ஒப்படைத்துவிட்டாள். அவர்களும் தீவிரமான மதப்பற்றாளர்கள் என்பதால் தன் மகளை அவர்கள் முறையாக வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கை க்ளாடிஸ்க்கு இருந்தது. வளர்ப்பு பெற்றோர்களால் வலிந்து திணிக்கபட்ட மத ஈடுபாடு நார்மாவிற்கு வெறுப்புணர்வையே தோற்றுவித்தது. தேவாலயத்தை பயமுறுத்தும் கூடமாகவே அவள் உணர்ந்தாள். இர்விங் வாலஸ் [Irving Wallace] எழுதிய பிரபலங்களின் அந்தரங்க பாலியல் வாழ்க்கை [intimate sex life of famous people] எனும் நூலில் மர்லின் மன்றோவிற்கு தன் பதின்வயதில்தொடர்ச்சியாக ஒரு கனவு வந்தது என்றும் அக்கனவில் அவள் தேவாலயத்தில் தன்னுடைய ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்பதாகவும், அதை பிரார்த்தனைக்கு வந்தவர்கள் அத்தனை பேரும் உற்சாகத்துடன் வேடிக்கை பார்த்தாகவும் கூறப்பட்டுள்ளது.

சிறுவயதில் நார்மா தன்னுடைய அம்மாவை வார விடுமுறை நாளில் அரைமணி நேரம் மட்டுமே சந்தித்து வந்தாள். சில வருடங்களின் பின்னால் ஒரு நாள் க்ளாடிஸ், தான் ஒரு வீடு வாங்கியிருப்பதாக சொல்லி மகளைத் தன்னோடு அழைத்து கொண்டாள். அந்த வீட்டில் தாயோடு சில மாதங்கள் தங்கி கொண்டிருந்த போதும் மர்லினால் தன்னுடைய சொந்த அம்மாவோடு ஒட்டுறவாக இருக்க முடியவில்லை. ஒரு நாள் க்ளாடிஸ் நினைத்தாற் போல பாடவும் ஆடவும் கூச்சலிடவும் துவங்கினாள். நார்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் பயத்தோடு ஒடுங்கிபோயிருந்தாள். இரண்டு நாட்களுக்குபின் அண்டைவீட்டார்கள் நிலைமையை அறிந்து க்ளாடிஸை மனநல காப்பகம் ஒன்றில் சிகிச்சை செய்ய அனுமதித்தனர். மனச்சிதைவிற்கு உள்ளான க்ளாடிஸ் நீண்ட நாட்கள் காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலையில் நார்மா யாருமற்ற அநாதையானாள். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அநாதைகள் காப்பகத்தில் நார்மா சேர்க்கப்பட்டாள். அங்கிருந்து ஒவ்வொரு வளர்ப்பு வீடாக மாறியலைந்தாள்.

ஐந்து வயது முதலே பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நார்மாவிற்கு பால்யகாலம் முழுவதும் வேதனையும் அலைக்கழிப்பும் கண்ணீருமே துணையாக இருந்தது. அவளின் வளர்ப்பு பெற்றோர்களில் சிலரே அவளோடு பாலியல் உறவு கொள்ள முயற்சித்தனர். எட்டு வயதில் கிம்மல் என்ற வயதானவர் அவளோடு வன்புணர்ச்சியில் ஈடுபட முயன்றதை அவரது மனைவியிடம் நார்மா தெரிவித்த போது கிம்மல் மிகவும் நல்லவர் என்றும் அவள் பொய்யாக குற்றசாட்டுகள் சொல்கிறாள் என்றும் மறுக்கபபட்டது. "அந்த வயதில் என்னை சுற்றிய உலகம் முழுவதுமே இருண்டு கிடந்தது. வெளியேறும் வழியில்லாமல் பயந்துபோயிருந்தேன்" என்று பின்னாளில் மர்லின் மன்றோ அந்த நாட்களை பற்றி குறிப்பிடுகிறாள்.

இதற்க்கிடையில் பல்வேறு பள்ளிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்ப கல்வியை முடித்தாள் மர்லின். 1942ல் நார்மாவின் அப்போதைய வளர்ப்பு பெற்றோர் இடம் மாறி செல்ல இருந்த காரணத்தால் அவர்கள் வீட்டின் அருகாமையில் வசித்து வந்த ஜிம் டோஹெர்டியை அவளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். நார்மாவிற்கு வேறு வழியில்லை. திரும்பவும் தன்னால் அநாதைகள் காப்பகத்திற்கு செல்ல முடியாது என்ற காரணத்தால் மட்டும் அவள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு பதினாறு வயதே நடந்து கொண்டிருந்தது. 1942 ஆண்டு ஜூன் 19ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற்றது.

ஜிம் டோஹெர்டி வணிகக்கப்பல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். தனித்து வீட்டிலிருந்த வெறுமையை போக்கிக் கொள்ள நார்மா உள்ளுரில் இருந்த விமானவியல் பட்டறை ஒன்றில் தரநிர்வாகப்பிரிவில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கே 1944ல் அவளுக்கு டேவிட் கொனோவர் [David Conover] என்ற புகைப்பட கலைஞரின் அறிமுகம் கிடைத்தது. டேவிட் நார்மாவின் அழகில் மயங்கி அவளை பெண்கள் வார இதழ் ஒன்றிற்கான மாடலாக புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு மணி நேரத்திற்கு ஐந்து டாலர் வீதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். புகைப்படம் எடுப்பதற்காக இருவரும் ஒன்றாக சுற்றுப்பயணம் செய்தனர். இந்த புகைப்படங்கள் வழியாக அவள் மீது பத்திரிக்கை உலகின் பார்வை விழுந்தது. ஒரே வருடத்தில் அவள் அமெரிக்காவின் 33 முக்கிய இதழ்களில் அட்டைபட அழகியாக வெளியாகினாள்.

அவள் தன்னுடைய ஒவ்வொரு புகைப்படத்தையும் கவனமாக ஆராய்ந்து தன்னுடைய குறைகளை அறிந்து சரி செய்து கொள்கின்றவளாகயிருந்தாள். அவளால் தன் உடலை எப்படி அழகாக வெளிப்படுத்துவது என்று தெரிந்திருந்தது என்று அவளோடு பணியாற்றிய புகைப்படக் கலைஞர்கள் பலரும் தெரிவிக்கிறார்கள். தான் எவ்விதமாக காட்சியளிக்க வேண்டும் என்று ஆண்கள் ஆசைப்படுகிறார்கள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. நார்மா பிரபலமாக துவங்கினாள், ஆனால் அவளது தனிப்பட்ட வாழ்க்கை தனிமையும் துயரமும் நிரம்பியதாகவே இருந்தது. அவளால் அந்த வெறுமையை தாங்க முடியவேயில்லை. ஆகவே மணவிலக்கு கோரி அவள் நீதிமன்றம் சென்றாள். அப்பாவியான தன் மனைவியை பத்திரிக்கைகளும் புகைப்பட கலைஞர்களும் சேர்ந்து, சூதும் வாதும் கொண்டவளாக மாற்றியிருப்பதாக அவளது கணவன் கண்டனம் தெரிவித்தான். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பிறகே நார்மாவிற்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு துளிர்க்கத் துவங்கியது.

அவளது இருபதாவது வயதில் 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற ஸ்கிரின் டெஸ்டில் அவள் தேர்வு செய்யப்பட்டு வாரம் 75 டாலர் ஊதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள். அந்த ஒப்பந்தத்தின் படியே அவளது பெயர் மாற்றி வைக்கபட வேண்டியதாகியது. மர்லின் என்ற பெயரை தயாரிப்பு நிர்வாகி சிபாரிசு செய்தார். அத்தோடு தன்னுடைய தாயின் பெயரில் ஒருபகுதியான மன்றோவை இணைத்து மர்லின் மன்றோ என பெயர் சூட்டிக் கொண்டாள் நார்மா ஜீன். புகழ்பெற்ற நடிகையாக வேண்டும் என்று மர்லின் கனவுகாண துவங்கினாள். மற்ற பெண்களை போல வெறுமனே காத்துகிடக்காமல் தன் கனவை நனவாக்குவதற்கான வழிகளை அவள் தேர்வு செய்ய துவங்கினாள். அந்த நாட்களில் அவளுக்கு நடிப்பு பயிற்சி அளித்தவர் அவளை போன்ற முசுடுகளால் ஒரு போதும் சிறந்த நடிகையாக முடியாது என்றே நம்பினார்.

அவள் நினைத்தது போல நடிகையாகும் கனவு எளிதாகயில்லை. முதலாண்டிற்குள்ளாக 20th செஞ்சுரி ஃபாக்ஸ் காரணமின்றியே ஒப்பந்தத்தை ரத்து செய்து அவளை விலக்கியது. பிழைக்க வழியின்றி மதுக்கூடங்களில் விரச நடனமாடி வாழும்படியாக நேர்ந்தது. நீலத்திரைப்படம் ஒன்றில் கூட அந்த நாட்களில் மர்லின் மன்றோ நடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இது நிரூபிக்கப்படவில்லை.அவளது தொடர்ந்த முயற்சியின் காரணமாக 1948 ஆண்டு கொலம்பியா பிக்சர்ஸ் அவளை வாரம் 75 டாலர் சம்பளத்தில் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்தது. ஹாலிவுட்டின் தயாரிப்பு நிர்வாகியான ஜோ ஷென்க் [Joe Schenck] என்ற முதியவரின் பார்வையை ஈர்த்த மர்லின் மன்றோ, அவர் வழியாக 'லேடீஸ் ஆஃப் த கோரஸ்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

கொலம்பியா பட நிறுவனத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய ஃப்ரெட் கேர்கர் [Fred Karger] படத்திற்கான பாடல்களை இசையமைப்பு செய்து பயிற்சி தந்த போது மர்லினுக்கும் அவருக்குமிடையில் காதல் உருவானது. மர்லின் படுமோசமான சூழலில் வாழ்வதை அறிந்த கேர்கர் அவளை தன்னுடைய பராமரிப்பின் கீழே வைத்து கொண்டு பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டான். அந்த உறவால் பலமுறை கர்ப்பச்சிதைவிற்கு ஆளானாள் மர்லின் மன்றோ. உடற்சோர்வும் வெறுமையும் அவளை தற்கொலைக்கு பலமுறை து¡ண்டியிருக்கின்றன.

அதன்பிறகும் முறையான படங்கள் கிடைக்காமல் தடுமாறிய மர்லினிற்க்கு ஆதரவு தர முன்வந்தார் ஜானி ஹைடு [Johnny Hyde].ஹாலிவுட்டின் தயாரிப்பு நிறுவனங்களுக்கான முதலீடுகள் ஏற்பாடு செய்யும் செல்வாக்கான ஜானி ஹைடு மர்லினின் தோற்றத்தையும் அவளது உடல் குறைபாடுகளையும் சரி செய்வதில் மிகுந்த கவனம் எடுத்தார். அவளது முகவாய் மற்றும் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றியமைத்ததில் ஹைடுக்கு மிக முக்கிய பங்கிருக்கிறது. அதற்கான முழுமையான மருத்துவசெலவை அவரே ஏற்றுக் கொண்டார். அத்தோடு புதிய பட வாய்ப்புகளையும் அவளுக்காக உருவாக்கி தரத் துவங்கினார். பாலிவுட்டில் ஸ்ரீதேவி செய்து கொண்டது போன்ற பிளாஸ்டிக் சிகிட்சைகள் மர்லின் மன்றோவை பின்பற்றியதே. நிஜ வாழ்வை போலவே, அவளது ஆரம்ப கால படங்களில், பணக்காரர்களின் ஆசைநாயகியாகவே மர்லின் நடித்த வேஷங்களும் அமைந்திருந்தன!

மர்லின் மன்றோவிற்கு பாலின்பத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. ஆண்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவள் கலவியில் அதீத நாட்டம் கொண்டவள் போல நடிக்கக் கூடியவளாகயிருந்தாள். இது போன்ற காமபாவனை நடிப்புககளுக்கு ஆஸ்கார் விருது வழங்கபப்டுவதாக இருந்தால் அது தனக்கே கிடைக்கும் என்று வேடிக்கையாக கூறிய மர்லின் பாலுறவை தன் வளர்ச்சிக்கான வழியாக பயன்படுத்திக் கொண்டாள். அழகான உடல்கொண்ட பெண்கள் மிகுந்த காம இச்சை கொண்டவர்கள் என்றே ஆண்களின் பொதுப்புத்தி வரையறுத்திருக்கிறது. கவர்ச்சியாக தோற்றமளித்த போதும் மர்லின் மன்றோவிற்கு பாலின்பத்தில் துளிகூட நாட்டமேயில்லை. 1940 களின் ஹாலிவுட் ஒரு பரத்தையர் விடுதி போலவே இருந்தது என்று ஒரு நேர்காணலில் மர்லின் தெரிவித்திருக்கிறார். 1950 ஆண்டு ஹைடு மாரடைப்பால் இறந்து போனார். அவரது மரணத்திற்கு காரணம் மர்லினோடு கொண்டிருந்த மிதமிஞ்சிய பாலுறவே என்று பலரும் வெளிப்படையாக அவது¡று பரப்பினார்கள். 1951 ஆண்டு அவளுக்கு ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் ஏழாண்டு காலத்திற்கு நீட்டிக்கபட்டது.

1951 ஆண்டு பிரபல நாடக ஆசிரியரான ஆர்தர் மில்லரை மர்லின் மன்றோ சந்தித்தாள். அப்போது மில்லருக்கு அறுபது வயதுக்கும் மேலே. அறிவுஜீவியான அவரை மர்லின் விரும்பி காதலிக்கத் துவங்கினாள். அவரும் அவளது வாளிப்பில் மயங்கி அவளோடு வாழத் துவங்கினார். மில்லரை தனது தந்தையின் பிம்பம் போலவே உணர்ந்த மர்லின் அவரை 'டாடி' என்றே அழைத்தாள். ஒரு ஆண்டிற்குள் அவளது ஒன்பது திரைப்படங்கள் வெளியாகி ஹாலிவுட்டின் ஒப்பற்ற தாரகையானாள் மர்லின் மன்றோ. ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கடிதங்கள், செல்லுமிடம் எல்லாம் பாராட்டு, புகழ்மழை என்று அவளது உலகம் தலைகீழாக மாறியது. 1952 ஆண்டு அவளது பழைய நிர்வாண புகைப்படங்கள் சில வெளியாகி அவள் மீதான சச்சரவை ஏற்படுத்தியது. ஆனால் தன்னுடைய வறுமையின் காரணமாகவே அன்று தான் அது போன்ற புகைப்படங்கள் எடுக்க சம்மதிக்க வேண்டியதாகியது என்று அவள் ஒளிவுமறைவற்று தெரிவித்தவுடன் குற்றசாட்டுகள் மறைந்து அவள் மீது பொதுமக்களுக்கு பரிவும் அன்பும் உண்டானது.

தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், தாமஸ் மன் மற்றும் சிக்மன்ட் ஃப்ராயிட் என்று தீவிரமான இலக்கிய பரிச்சயம் கொண்டிருந்த அறிவாளியாக இருந்த போதும் மர்லின் மன்றோ தன்னை ஒரு கவர்ச்சிபதுமையாகவே காட்டிக் கொண்டாள். அவளது புகழ்பெற்ற திரைப்படங்களான Niagara, Gentlemen Prefer Blondes, There's No Business Like Show Business போன்றவை வெளியாகி அவளை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இன்னொரு பக்கம் அவளது சொந்த வாழ்க்கையில் புதிய காதலர்கள் மாறிக் கொண்டேயிருந்தனர். ஜோ டி மாஜியோ [Joe Di Maggio] என்ற புகழ்பெற்ற அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரரை திருமணம் செய்து அவரோடு வாழத்துவங்கினாள் மர்லின். அவரையும் 'டாடி' என்று தான் மர்லின் அழைத்து வந்தாள். தன் மனைவி பெண்களிடம் பேசுவதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க மனநிலையில் இருந்த ஜோ டி மாஜியோவின் விருப்பத்திற்கு எதிராக 'தி செவன் இயர் இட்ச்' [The seven year itch] படத்திற்கான படப்பிடிபிற்காக நியூயார்க் சென்றார். அங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னால் காற்றில் அவளது ஆடைகள் பறந்து உள்ளாடை தெரிவது போன்ற காட்சி ஒன்றில் நடித்ததை ஜோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த காட்சி திரும்ப திரும்ப படமாக்கப்பட்ட விதமும், பொதுமக்கள் அவள் உடலை கண்களால் உரித்து தின்று கொண்டிருந்ததையும் கண்ட ஜோ அன்றிரவு அவளை அடித்து மிகவும் துன்புறுத்தியிருக்கிறான். அவனோடு சேர்ந்து வாழ விருப்பமற்று நீதிமன்றம் சென்றாள் மர்லின். ஒன்பது மாதங்களே அவர்களது திருமண வாழ்வு நடந்துள்ளது. ஆனால் மணவிலக்கிற்கு பிறகும் ஜோவோடு அவளுக்கான நட்பு தொடர்ந்து இருந்தபடியேதானிருந்தது.

பணமும் புகழும் நிரம்பிய போதும் மர்லினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தன்னை காண்பவர்கள் அத்தனை பேரும் காம கண்ணோட்டத்திலே பழகுவது அவளுக்கு அருவருப்பு ஊட்டியது. நியூயார்க்கிற்கு இடம்மாறிய மர்லின் அங்கே தன்னுடைய பெயரில் ஒரு படக்கம்பெனி துவங்கினாள். ஆர்தர் மில்லரோடு உள்ள உறவு வலுவடைய ஆரம்பித்தது. 1956 ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவர்களுக்குள்ளும் சில மாதங்களிலேயே மனவேற்றுமை வளர துவங்கியது. மில்லர் அவளோடு தன்னால் சேர்ந்து வாழ முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்தார். அவர் திரைக்கதை எழுதிய The Misfits என்ற படமும் Some Like it Hot, The Bus Stop, The Prince and the Show Girl போன்ற மற்ற படங்களும் வெளியாகி மிகப் பெரும் வெற்றிகளாக அமைந்தன.

ஏமாற்றமான மணவாழ்வும் தொடர்ந்த கருச்சிதைவுகளும் காரனமாக 1960 ல் மர்லின் மன்றோவிற்கு நரம்பு சீர்கேடு ஏற்பட்டது. அவளது வீழ்ச்சி துவங்கியது. அதிகமான மதுவோடு து¡க்கமாத்திரைகளை சாப்பிடவும் பழகிக் கொண்டாள். படப்பிடிப்பிற்கு மிக தாமதமாக வருவது, படத்தில் கவனம் செலுத்தாதது என்ற குறைபாடுகள் அதிகரிக்க துவங்கின. நான்கு வருட மணவாழ்க்கைக்கு பிறகு அவளும் மில்லரும் மணவிலக்கு பெற்றுப் பிரிந்தனர். துயரமான மனநிலையிலிருந்து மீண்டு வருவதற்காக ரால்ப் க்ரீன்ஸன் [Ralph Greenson] என்ற மனநல மருத்துவரிடம் சிகிட்சை எடுத்துக் கொள்ளத் துவங்கினாள் மர்லின் மன்றோ. பிரபல பாடகரும் ஹாலிவுட் நடிகருமான பிராங்க் சினாட்ராவோடு அவளது வெளிப்படையான உறவு குற்றசாட்டாக எழுந்தது. அந்த நாட்களில் அமெரிக்காவின் பணக்கார குடும்பங்களோடு விருந்தில் ஏற்பட்ட நெருக்கமும் நட்பும் அவளுக்கு புதிய சுற்றம் ஒன்றை உருவாக்கியது. 1962 ஆண்டு ஒரு விருந்தில் அமெரிக்க ஜனாதிபதியான ஜான் எப். கென்னடிக்கும் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மர்லின் மன்றோ அறிமுகம் செய்து வைக்கபட்டாள். கென்னடி சகோதர்களுக்கு அவள் மீது காமகண்ணோட்டம் உருவானது.

சகோதரர்கள் இருவரோடும் ஒரே நேரத்தில் நெருக்கமாக இருந்தபோதும் மர்லினிற்க்கு விருப்பமாக இருந்தது ஜனாதிபதியான ஜான் கென்னடியே என்று கூறுகிறார்கள். அவர்கள் இருவரின் ரகசிய சந்திப்புகள் தொடர்ந்தன. ஜான் கென்னடி தொலைபேசியிலும் அவளோடு தொடர்ந்து உரையாட துவங்கினார். அவர்களது உறவை கண்டு பயந்த அரசியல் வட்டாரம் ஒரு வேளை கென்னடி தன்னுடைய மனைவியை மணவிலக்கு செய்துவிட்டு மர்லின் மன்றோவை மணந்து கொள்வார் என்றே நம்ப துவங்கினார்கள். அவளது மனநல மருத்துவர்கள் தொடர்ந்து அவளை சந்தித்து சிகிச்சை அளித்த போதும் அவளுக்குள் ஏற்பட்டிருந்த மனச்சோர்வு நீங்கவேயில்லை. கென்னடிகளோடு அவளுக்கிருந்த பாலியல் தொடர்பு அவளை பல சிக்கல்களில் மாட்டி வைத்தது. அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் அவளை கண்காணிக்க துவங்கின. நிழல்உலகத்தை சேர்ந்தவர்கள் அவளை பகடையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தார்கள். ஜான் எப்.கென்னடியின் பிறந்த நாள் விழாவில் மர்லின் பகிரங்கமாக கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடியது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

தேசத்தின் எதிர்காலம் கருதி கண்காணிக்கவும் அப்புறப்படுத்தவும் வேண்டியவர்களின் பட்டியலில் மர்லின் மன்றோவின் பெயரும் இடம்பெற்றது. மர்லின் மன்றோவோடு நெருக்கமாக இருந்த தருணங்களில் ஜனாதிபதி குடிபோதையில் நிறைய அரசாங்க ரகசியங்களை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும் அவை வெளியானால் தேசத்தின் நலனிற்கு ஆபத்தாக முடியும் என்றும் அரசியல்வட்டாரங்கள் எச்சரிக்கை செய்தன. ஆனால் அவர்கள் நினைத்தது போல மர்லின் மன்றோ கென்னடிகளின் பெயரை கெடுக்க எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

1962 ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மர்லின் மன்றோ தன்னுடைய வீட்டில் இறந்து கிடந்தாள். அவளது படுக்கையில் து¡க்கமாத்திரைகளும் வலியுணரா மருந்துகளும் கிடந்தன. மனச்சோர்வின் காரணமாக தேவைக்கு அதிகமான மருந்துகளை ஒரே வேளையில் எடுத்துக் கொண்டதால் மர்லின் மன்றோ இறந்து போயிருப்பதாக தெரிவிக்கபட்டது. அது தற்கொலை என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது அவளுக்கு வயது 36. அவள் உடலை வாங்க எவரும் முன்வரவில்லை. சவக்கிடங்கில் உறைந்து கிடந்த அவளது உடல் அப்போது யாருக்குமே தேவைப்படவில்லை! அவளது அம்மா அப்போதும் மனநலகாப்பகத்தில் தான் அடைபட்டிருந்தார்.

1962 ஆகஸ்ட் 8 தேதி அவளது உடல் லாஸ் ஏஞ்சலஸில், வெஸ்ட்வுட் பூங்காவில் உள்ள நீத்தார் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று அமெரிக்க தெருக்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேதனையோடு தங்களின் கனவுகன்னிக்கு விடைதந்தார்கள். "சிறுவயதில், நீ அழகாக இருக்கிறாய் என்று யாருமே எனக்கு சொன்னதில்லை. நீ ஒரு அழகான குழந்தை என்று அழகில்லாத சிறுமிகளிடம் கூட நாம் சொல்லவேண்டும். அந்த சொல்லில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும்". ஒரு முறை மர்லின் மன்றோ கண்ணீர் மல்க கூறினாள்.

போய் வா நார்மா ஜீன்

காற்றிலாடும் மெழுகுவர்த்தியைப் போலிருந்தது உன் வாழ்க்கை

உன் துயரமான தனிமை

வலி தான் நீ பெற்ற ஊதியம்

எல்லா கவர்ச்சிகளயும் மீறி

என்றும் நினைவில் நிற்கும் அழகாயிருப்பாய்

போய் வா நார்மா ஜீன்*

தமிழில்: எஸ் ராமகிருஷ்ணன்

* எல்ட்டன் ஜானின் Goodbye Norma Jeanne என்ற பாடலின் சில வரிகள்
உதவிய நூல்கள்
Marilyn Monroe Private and Undisclosed - Michelle Morgan- Published by Constable & Robinson, 2007. The Last Days of Marilyn Monroe - Donald H. Wolfe - Published by William Morrow and Company, 1998. In Marilyn Monroe: The Biography - Donald Spoto - Published by Cooper Square Press, 1993.