20090921

லோஹி ஏட்டன்


(மறைந்த மலையாள திரக்கதை ஆசிரியர் லோஹித தாஸைப் பற்றி ஜெயமோகன் எழுதிய 'லோஹி' என்ற நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)

பல வருடங்களுக்கு முன்பு, சென்னையின் ஒரு புழுக்கமான பிற்பகல் நேரத்தில் நான் மிகவும் மதிக்கின்ற திரை எழுத்தாளர் லோஹித தாஸை முதல் முதலில் சந்திப்பதற்காக ஓர் ஓட்டல் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். கேசவேட்டன் என்கிற அவருடைய நெருங்கிய நண்பர் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தார். கதவு திறப்பதற்காக நாங்கள் காத்திருக்கையில் நான் கிளர்ச்சியுற்றும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தேன். மலையாளத் திரை எழுத்தின் மிகப்பெரிய நட்சத்திரமான லோஹித தாஸை நான் சந்திக்கப் போகிறேன்!
------------
"உள்ளே வாருங்கள்"! உள்ளார்ந்த அன்போடு தான் அவர் எங்களை வரவேற்றார் எனப்பட்டது. ஒரு நட்சத்திர திரைக்கதாசிரியர் என்ற தோரணை அவரிடம் கொஞ்சமும் தெரியவில்லை! அற்புதமான கலைநுட்பம், வர்த்தக ரீதியான பெரும் வெற்றிகள், படைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றை எல்லாம், மலையாளத்திரையுலகம் இதுவரை கண்டிராத வகையில் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகத்தான எழுத்தாளர் சிறு புன்னகையுடன் அங்கே நின்றிருந்தார்!

கேசவேட்டன் என்னை அவரிடம் அறிமுகம் செய்துவைக்க, அவர் என் கைகளை அழுத்தமாகப் பற்றிக் குலுக்கினார். என் தோளின்மீது இயல்பாக அவர் கையைப் போட்டு சேர்த்துக்கொள்ள, நான் இலகுவாகினேன். அவர் உடனடியாக தனது மென்மையான அடிக்குரலில் என்னுடன் பேசத் தொடங்கினார். அவரது கதைகளின் பல்வேறு சம்பவங்களும் கதாபாத்திரங்களும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில் பல என்னை ஆழமான துயரத்துக்கு உள்ளாக்கியிருக்கின்றன, அழச் செய்திருக்கின்றன. ஏனென்றால் அவற்றில் நான் என்னையே கண்டிருக்கிறேன்! அதீதமான உணர்ச்சி மேலேட்டில் நெடுநேரத்திற்கு என்னால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை.

குறுகிய காலத்தில் லோஹியேட்டன் எனது குடும்ப நண்பராகவும் நலம் விரும்பியாகவும் ஆகினார். எனக்கொரு மகள் வந்தபோது முதலில் என் வீட்டிற்கு வந்து என்னை பாராட்டியவர் அவர். என் மகளை அவர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவளின் வருகை என்னை முற்றிலுமாக மாற்றியமைத்தது என்று அவர் சொன்னார். தனது பல நெருங்கிய நன்பர்க¨ளை எனக்கு அரிமுகம் செய்தார். ஜெயமோகனுக்கும் எனக்குமான நட்பு லோஹியேட்டன் வழியாகத் தான் உருவானது.

எத்தனையோ சந்திப்புகள், உரையாடல்கள். சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எத்தனையோ பகலிரவுகள் முடிவில்லாமல் நாங்கள் விவாதித்திருக்கிறோம்.
------------
ஒருமுறை காஞ்சிபுரத்திற்கருகே பண்ணை வீடு ஒன்றில் நாங்கள் இருவரும் சில நாட்கள் தங்கியிருந்தோம். எங்களை அழைத்திருந்த நண்பர் தங்கபாண்டியனின் விருந்தோம்பலில் சம்பிரமமான உணவுகளுக்கும், அளவேயற்ற மதுவரத்துகளுக்கும் இடையே திரப்படங்களையும் இசையையும் இலக்கியத்தையும் மனித உறவுகளையும், எல்லாம் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். லோஹியேட்டன் அதிகம் குடிப்பவரல்ல. ஆனால் அதிகமாக புகைப்பார். திருப்தியாக சாப்பிடுவார். ஆட்டுக்கறி பிரியர். அவருக்குப் மிகவும் பிடித்தமானது கேரளா ஆட்டுக்கறி வறுவல். அந்தப் பண்ணையின் சமையலறையிலிருந்து வகைவகையான ஆட்டிறைச்சி, மீன், கோழி, பிரியாணி வகைகள் வெள்ளமாகப் பெருகிவர, அவற்றை அவர் ஆர்வத்தோடு காலி செய்துகொண்டிருந்தார்.

இசை ரசனையில் நாங்களிருவரும் பெரிதும் மாறுபட்டோம். அவர் இசையமைப்பாளர் தேவராஜனை வெகுவாக ரசிப்பார். நான் அவரை சிறந்த இசையமைப்பாளராக எப்போதுமே கருதியதில்லை. மலையாள திரை இசையில் என் விருப்பத்திற்குரிய பாபுராஜுக்கோ, சலில் சௌதரிக்கோ லோஹியேட்டனிடம் இடமில்லை. அதற்க்கான அவரது காரணங்கள் ஜெயமோகனின் 'லோஹி' புத்த்கத்தில் நீங்கள் கண்டடையலாம்.
------------
இது குறித்து எங்களிடையே பெரும் விவாதங்கள் ஏற்பட்டதுண்டு. எனது அதிரடி விமரிசனங்களால் கோபமான மனநிலைக்கு அவர் நகர்கிறார் என்று தெரியும்போது அவரது படங்களுக்கு பேச்சை மாற்றிவிடுவேன். இது அவருடைய கோபத்தை சரிசெய்து சந்தோஷப்படுத்திவிடுமென்பது எனக்குத் தெரியும். லோஹியேட்டனுக்கு அவருடைய படைப்புகள், பாத்திரங்கள், காட்சிகள் பற்றி நுட்பமாக பகுப்பாய்வு செய்வது மிகவும் பிடிக்கும்.

அவர் முதன்முறையாக எழுதிய திரைக்கதைக்கான பெயரே சுவாரஸ்யமானது. 'எழுதாப்புரறங்ஙள்'- எழுத்துக்களுக்காக காத்திருக்கும் வெற்றுத்தாட்கள்! பின்னர் மலையாள சினிமாவின் எண்ணற்ற வெற்றுத்தாட்களை தன் அர்புதமான கதைகளால் நிரப்பியவர் அவர்.
------------
முதலில் வெளியான அவரது படம் தனியாவர்த்தனம். இப்படத்தைப் பற்றி கமல்ஹாஸன் சமீபத்தில் பேசும்போது, அதனை இன்றும்கூட தமிழில் படமாக்க தான் விரும்புவதாக கூறியிருந்தார். இந்தத் திரைப்படம்தான் அவரை மலையாள திரையுலகின் மிகப் பிரபலமான திரைக்கதையாசிரியராக ஸ்தாபித்தது. லோஹியேட்டனின் படங்கள் மலையாளத்தில் கலைப்படங்களுக்கும் வர்த்தகப் படங்களுக்கு இடையேயுள்ள தடுப்புகளை மிக எளிதாக அழித்துவிட்டன.

லோஹியேட்டனின் பெரும்பாலான பாத்திரங்கள் கேரளாவின் கிராம வாழ்க்கையிலிருந்து வருபவை. அவை ஒவ்வொருநாளும் அந்த கிராமத்து சந்துகளில் நாம் சந்திகிக்கின்ற மனிதர்கள்தாம். ஒரு தையல்க்காரன், ஒரு டீக்கடைக்காரன், ஓய்வு பெற்ற ராணுவத்தினன், மின்வாரிய லைன்மேன், கைரேகை பார்ப்பவன், ஒரு முதிர்கன்னி, கிராமத்து விபச்சாரப்பெண், வேலையற்ற இளைஞர்கள், இரக்கமேயில்லாத வட்டிக்காரர்கள்... அவரது பாத்திரங்களும் கதைகளும் சாதாரண வாழ்விலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை.

அவரும் மலையாள சினிமாவின் மிக அதிகமாக ஊதியம் பெறும் எழுத்தாளராக ஆனபின்பும் கூட அத்தகைய ஒரு சாதாரண வாழ்க்கையையே வாழ விரும்பினார். பல சொகுசுக்கார்களும் வீடுகளும் அவருக்காக காத்திருக்க, லோஹியேட்டனுக்கு சாதாரண மக்களோடு உள்ளூர் பஸ்களில் பயணம் செய்வதிலும், தெருவோர உணவுக்கடைகளில் சாப்பிடுவதிலும், சாதாரண விடுதிகளில் தங்குவதிலும்தான் விருப்பம் இருந்தது. அவரது கிராமத்தில் மற்ற கிராமவாசிகள் மத்தியில் அவர்களோடு ஒருவராக உட்கார்ந்திருப்பதையும், கிராமத்துத் திருவிழாக்களிலும் பூரங்களிலும் அலைந்து கொண்டிருப்பதையும், மிக எளிய மனிதர்களின் வீட்டு விசேஷங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வதையும் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம்.
------------
காருண்யம், கன்மதம், வீண்டும் சில வீட்டுக்காரியங்கள், அரயன்னங்ஙளுடெ வீடு, தூவல் கொட்டாரம், சல்லாபம், ஜோக்கர், சூத்ரதாரன், கஸ்தூரிமான், ஜாதகம், தசரதம், முத்ரா, ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம், அமரம், கமலதளம், கௌரவர், வெங்கலம், செங்கோல், வாத்ஸல்யம், பாதேயம், சாகரம் சாட்சி போன்ற படங்களெல்லாமே சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட அவரது கதைகள்தாம்.

அவர் இயக்கிய முதல் படம் பூதக் கண்ணாடி. இதற்காக தேசிய விருது பெற்றார். மாறுபட்ட பாத்திரப்படைப்புகளுக்காகவும் மீபொருள் உத்தியில் அமைக்கப்பட்ட அற்புதமான காட்சிகளுக்காகவும் மலையாள திரைப்படச் சரித்திரத்தில் இது ஒரு மிக முக்கியமான திரைப்படமாக நிலைத்திருக்கும்.
பரவலாக வாசித்தோ, திரைப்டங்களைப் பார்த்தோ லோஹியேட்டன் தன்னை எப்போதுமே புத்தாக்கம் செய்துகொண்டவரல்ல. ஒருமுறை குருதத் திரைப்படங்களின் முழுத்தொகுப்பை நான் அவரிடம் கொடுத்தது ஞாபகம் வருகிறது. மிகுந்த சந்தோஷத்தோடு அவற்றை அவர் வாங்கிக் கொண்டார். ஆனால் பல மாதங்கள் கழிந்தும் ஒரு படத்தைக் கூட அவர் பார்த்திருக்கவில்லை!
------------
அவரது கதைகளை தனது சொந்த வாழ்விலிருந்தும், அவருக்குத் தெரிந்தவர்களின் வாழ்விலிருந்துமே அவர் உருவாக்கி வந்தார். திரைக்கதை எழுதும் இயக்குநர்கள் என்று இன்று சொல்லிக் கொள்கிறவர்களில் பலரைப்போல படைப்பூக்கத்திற்காக டிவிடிக்களைத் தேடியலைந்தவரல்லர் அவர். அதற்கான அவசியம் அவருக்கு இருந்ததில்லை!

கம்ப்யூட்டர்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு லோஹியேட்டன் முற்றிலும் எதிரானவர்! மனித மூளையின் சாத்தியங்களை கம்ப்யூட்டர்கள் கொன்று விடுமென்று அவர் திடமாக நம்பினார். ஒருமுறை அவர் என்னிடம் வேடிக்கையாக, "உன்னிடம் ஏற்கனவே கொஞ்சூண்டு மூளைதான் இருக்கிறது. அதையும் இப்படி நாளெல்லாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து ஒழித்துவிடப் போகிறாய்" என்றார்.

அவரது வலுவான பாத்திரங்களில் மலையாள சினிமாவின் பல அற்புதமான நடிகர்களையும் நடிகைகளையும் அவர் அறிமுகப்படுத்தியோ பட்டைதீட்டியோ விட்டிருக்கிறார். திலீப், மஞ்சு வாரியர், மீரா ஜாஸ்மின், கலாபவன் மணி போன்றோர் அவருடைய கண்டுபிடிப்புகள் என்றால், மோகன்லால், மம்மூட்டி, திலகன், நெடுமுடி வேணு போன்ற நடிகர்கள் அவருடைய பாத்திரங்களின் வாயிலாக தமது நடிப்பின் பலங்களையும் பரப்புகளையும் கண்டறிந்து கொண்டவர்கள்.
------------
திரையுலக உச்ச நட்சத்திரங்கள் தமது பாத்திரங்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற போக்கிற்கு எதிராக லோஹியேட்டன் எப்போதுமே நின்றும் பேசியும் வந்திருக்கிறார். அவர் தனது பாத்திரங்களை முதலில் உருவாக்கிவிட்டு பிறகு பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வந்தவர். இவ்விஷயத்தில் அவர் வெளிப்படையாக எதிர்த்துக் கொண்டது சில பெரிய நட்சத்திரங்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.
ஆனால் அவர்கள் அனைவருமே அவரது மரணத்திற்குப் பிறகு பெரிதும் கலங்கி நின்றிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஒரு வேளை அவர்களது வேகமாக மங்கிவரும் புகழை தூக்கி நிறுத்தக்கூடிய மேலும்சில பாத்திரங்களை லோஹித தாஸ் உருவாக்கியிருக்கக் கூடுமென்ற நினைப்பால் எழுந்த சோகமாகக்கூட அது இருக்கலாம்!

அவரது குடும்ப புராணம் என்ற படத்தில் ஒரு வயதான ஏழை டாக்ஸி டிரைவரின் குடும்பத்தைக் காட்டியிருப்பார். இவ்வளவு நாட்களாக வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து கஷ்டப்பட்ட அவருடைய மனைவியின் ஒரே ஆசை அவர்களுக்கென்று சின்னதாக ஒரு வீடு கட்டிக் கொள்வது. அவருடைய மகன்களும் மகள்களும் அந்த வயதான பெற்றோரை தனியாக அல்லாட விட்டுவிட்டு தத்தமது திசைகளில் சென்றுவிடுகின்றனர். கடைசியில் தங்களுக்கென்று சொந்தமாக வீடு கட்ட வாங்கிய இடத்திலேயே தன் அன்பு மனைவியின் உடலை அந்த முதியவர் தனியாக நின்று தகனம் செய்து கொண்டிருப்பதோடு படம் முடிகிறது!

54 வயதில் விட்டுப்போய்விட்ட லோஹியேட்டனின் தகனத்திற்கு அவரது கிராமத்து வீட்டின் முன்னால் ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்தனர். நடுங்கும் இதயத்தோடும் ஈரமான கண்களோடும் அவரது சிதைக்குமுன் நின்றிருந்தேன். லோஹியேட்டனுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருந்தது. எனக்குக் கிடையாது. ஏனென்றால் லோஹித தாஸைப் போன்ற ஒரு படைப்பாளி அவரது கதைகளிலிருந்தும், அவர் உருவாகிய என்றும் உயிருடன் இருக்கும் பாத்திரங்களிடமிருந்தும் எப்போதுமே விட்டுப்போகமாட்டார் என்பது எனக்குத் தெரியும்.

லோஹித தாஸ் என்ற மாபெரும் கலைஞனை, இனிய மனிதனை அருமையான வார்த்தைச் சித்திரங்களாக நம் முன் உயிருடன் நிலைநாட்டுகிறது ஜெயமோகனின் 'லோஹி'.

தமிழாக்கம்: ஜீக்கே.