20111211

புதிய இசைமுறை

(ஏன் இந்த கொலைவெறி? என்கிற பெயரில் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த கட்டுரை)

காடுமலைகளின் அடிவாரத்தில் அமைதியில் ஆண்டுகிடக்கும் அமராவதி ராணுவப்பள்ளியின் ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி ‘இசையும் வாழ்வும்என்ற தலைப்பில் பேசினேன். கலந்துரையாடலில் மாணவர்கள் கேட்ட கேள்விகள் ‘இப்போது உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல் எது? இசையமைப்பாளர் யார்? சினிமாவில் இசையமைப்பாளராக வருவதற்கு என்ன செய்யவேண்டும்? போன்றவை. ஆசிரியர்களோ ‘ஏன் அந்தக்காலத்தின் அருமையான பாடல்களை இந்தத் தலைமுறையினருக்கு பிடிக்கவில்லை?, ‘ஏன் இன்றைய பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்பதில்லை? இன்றைய பாடல்களில் ஏன் தமிழ் உச்சரிப்பு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே போனார்கள்.

அடுத்தநாள் அப்பகுதியிலுள்ள தூவானம் எனும் நீர்வீழ்ச்சி பாயும் அடர்ந்த வனத்திற்குள் ஒருநாள் நீண்ட நடைப் பயணம் போனேன். உடன் வந்தவர் அப்பள்ளியின் நூலக காப்பாளரான ஸ்டீஃபன் எனும் இயற்கை ஆர்வலர். காட்டுப் பாறைகளின்மேல் மூச்சுவாங்கி ஏறிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் ‘எனக்கு எந்த இசை நாட்டமும் கிடையாது. இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும்விட நான் விரும்புவது யதார்த்த இசை நிகழ்ச்சிகள்தான். அதில் இசையைப்பற்றி நடுவர்கள் சொல்லும் கருத்துக்கள் பிரமாதமாகயிருக்கும்? எனக்கு ஒருகணம் மூச்சே நின்று போனது.

வெகுஜன இசையைப்பற்றி வெகுஜனமத்தியில் இன்று நிலவும் பார்வைகளின் சாமானிய நிலவரம்தான் இது. ஒரு பக்கம் இன்றைய பாடல்களிலும்கூட கவித்துவமான வரிகளையும் இக்காலத்தின் பாடகர்களிலும் வெங்கலக் குரலோன்களையும், கொஞ்சும் கிளியான பெண்களையும் எதிர்பார்க்கும் பழைய தலைமுறை. மறுபக்கம் நிற்கும் புதிய தலைமுறையினருக்கோ இசையில் ‘கொலைவெறிதான் பிடிக்கும்!. 3 என்கிற வரப்போகும் ஒரு திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடி, அவரும் அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், கமலஹாஸனின் மகள் ஸ்ருதியும் சேர்ந்து தோன்றும் ஒய் திஸ் கொலவெறி டீஎன்கிற பாடலின் காணொளி வடிவம்த்தை வெறும் பத்தே நாட்களில் 42 லட்சம் பேர் பார்த்தனர்! இப்போதும் இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!

காணொளி இணைய தளமான யூ டியூப் வழியாக இன்று இணையத்தில் தேடும் தமிழ் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியிருக்கும் கொலைவெறியில் இடம்பெறும் ஒரேயொரு தமிழ் வார்த்தை கொலவெறி மட்டும் தான். பிற அனைத்து வார்த்தைகளுமே வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்பட்ட ஒருவகையான உள்ளூர் கொச்சை வழக்கு ஆங்கிலம்! அதுதான் இப்பாடலின் இவ்வளவு பெரிய வெற்றிக்கான காரணமுமே. எந்தவொரு இசைத் தேர்ச்சியுமில்லாத, மிகச்சாதாரணமான தனது குரலில் அப்பாட்டுக்குத் தேவையான உணர்ச்சிகளை பாடி வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். போதும். நமது இளம்தலைமுறையினருக்கு சிலநாட்கள் கொண்டாட ஒரு சூப்பர் பாடல் கிடைத்து விட்டது.

யாராலையும் எளிதாக முணுமுணுக்க முடியும் ஒரு மெட்டு... தங்களே பாடுவதுபோல் ஒலிக்கும் ஒரு மிகச்சாதாரணமான குரல்... திருப்பித் திருப்பிப் பாடக்கூடிய ஒரு கொக்கி வரி(Hook Line)... அதுவும் தமிழாகவெல்லாம் இருக்கவேண்டியதில்லை... ஜும்பலக்கா, மூக்கு நக்கா, படவலங்ஙா என எதாவது ஒரு வெற்றுரை... உற்சாகமான ஒரு தாளக்கட்டு... இவ்வளவுபோதும். சிலநாட்களுக்குLZள் மை தீர்ந்துபோன இந்தக்காலப் பேனாவை தூக்கிப் போடுவதுபோல் அதை வீசிவிட்டுப் போவார்கள். அதனால் என்ன? இக்காலத்துக்குத் தேவையான இத்தகைய யூஸ் அண்டு த்ரோ இசையை உருவாக்க தேர்ந்த பாடலாசிரியர்களோ, இசையமைப்பாளர்களோ பாடகர்களோ தேவையே இல்லை. ஒரு கணினியும் ஒரு ஒலிவாங்கியும் இருந்தால் யார்வேண்டுமானாலும் இன்றைக்கு ஒரு பாடலை எளிதாக உருவாக்கி விடலாம்.

சரி, அதை பிரபலப்படுத்துவது எப்படி? யூ டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்கள் இருக்கும் வரைக்கும் கவலையே இல்லை. அங்கு பார்க்கக் கிடைக்கும் விசித்திரமான எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளத் துடித்துக் கொண்டேயிருக்கும் இளைஞர்களின் பெரும் பட்டாளம் 24 மணிநேரமும் கணினியின் முன் தூங்காமல் விழித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எந்தவொரு கேவலமான சமாச்சரத்தையும் உலகப்புகழுக்கு கொண்டுசெல்ல முடியும். பாடலின் புகழுக்குத் தகுந்த பணமும் விளம்பரங்கள் வழியாக கிடைக்கக்கூடும்.

2009ல் வந்த வில்பர் சர்க்குணராஜ் என்பவரின் இத்தகைய சில பாடல் காணொளிகளை இணையத்தில் 20 லட்சம்பேர் வரைக்கும் பார்த்தார்கள். உலகில் இப்போது மிகப்பிரபலமாகயிருக்கும் தமிழ் பாடல் என்ற பரிந்துரையோடு அதன் சுட்டிகள் எனக்குக்கூட அனுப்பப்பட்டன. தனது பெயரை அவர் வில்.....ல்ல்ல்ல்பர் சர்க்குணராஜ்.....என்று பாடும் அந்த ஆலாபனை ஒன்றேபோதும் அவரது இசைத்தரத்துக்கு சான்றாக! அதைவிட மிகமோசமான பாடல்களுடன் மலையாளத்தில் சந்தோஷ் பண்டிட் என்கிற ஒருவர் சமீபத்தில் அவதரித்தார். அவரது காணொளிக்காட்சிகளை இணையத்தில் 25 லட்சம் பேருக்குமேல் பார்த்தார்கள். அதைத்தொடர்ந்து அப்படல்களை வைத்து அவர் ஒரு திரைப்படத்தையும் எடுத்து இயக்கி நடித்து இசையமைத்து பாடி ஆடியபோது அப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இன்றைய மலையாள இணைய இளைஞர்களின் ஆதர்சமாக அவர் திகழ்கிறார்!

எதனால் இதெல்லாம் புகழடைகிறது? முதலில் சிறந்தது என்று நாம் நினைக்கக் கூடிய பெரும்பாலான விஷயங்கள் இந்த இணைய தலைமுறையினருக்கு அலுப்பையும், சலிப்பையும் அசுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. சில்லென்று பூத்த சிறுநெரிஞ்சி காட்டினிலேஎன்றெல்லாம் மெதுவாக நகரும் ஆலாபனைகள் அவர்களை அலுப்பின் அடியாழத்துக்கே கொண்டுபோகிறது. விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் விஷயங்கள் மட்டும்தான் அவர்களைக் கவரக்கூடியவை, அவர்களுக்கு சுவாரசியமளிக்கக் கூடியவை. இந்த விசித்தரமும் வித்தியாசமும் பாடல்களில் எப்படி கொண்டுவரமுடியும்?

வரிகளும் இசையும் முன்சொன்ன மாதிரி கொலைவெறியாக இருந்தால் பாதிவேலை முடிந்தது. பாடகனின் குரல் ஆண்குரலாக அல்லாமல் என்னமோ ஏதோ மாதிரி இருக்கவேண்டும். ஆணின் குரல் பெண்மை மிக்கதாக இருப்பதுபோல் பாடகியின் குரல் ஆண்மை மிக்கதாகவும் ஒருவகையான போக்கிரித்தனத்துடனும் இருக்கவேண்டும். பெண்ணுக்கு போக்கிரித்தனம்தான் அழகு என்பது இன்றைய ஒரு சூத்திர வாக்கியமாகவே மாறிவிட்டது எனப்படுகிறது.

ஒருநாள் எஃப் எம் என்று அழைக்கப்படும் குற்றலை வானொலியொன்றில் ஒரு அறிவிப்பாளினி பேசுவதை கேட்க நேர்ந்தது. ஒரு அப்பாவி ஆண் தொலைபேசியில் தூயத் தமிழில் நான் குமரிக் கண்டத்திலிருந்து பேசுகிறேன்என்று சொன்னதற்கு அந்த அம்மா குமரிக்கு எதுக்கு காண்டம் (Condom)? இப்போது தான் ஐ பில் (I pill) இருக்கே என்று ஆணவம் மிக்க தொனியில் பதில் சொன்னார். Condom என்பது உடலுறவுக்கு முன் கருத்தடைக்கு பயன்படுத்தும் பொருள் என்றால் I pill உடலுறவுக்குப்பின் கருத்தடைக்கு உதவும் நவீன மாத்திரை! பாடல்கள் பாடும்போது பாடகிகளின் மனப்பாண்மையும் (Attitude) அந்த அறிவிப்பாளினியினுடையதுபோல் இருந்தால் நலம் போலும்!

பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு தமிழாக இருக்கக் கூடாது. வானத்தை வ்ஹானம் என்றும் மேகத்தை மேய்கம்என்றும் உச்சரிக்கவேண்டும். வாழ்கிறேன் வ்ஹால்கிறேன் என்று தான் ஒலிக்கவேண்டும். மேக் இட் மோர் ஆங்கிலிசைஸ்ட் என்று பாடகர்களிடம் இசையமைப்பாளர்கள் சொல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தமிழ் அறவே தெரியாத பாடகர்களை அழைத்து அவர்களை கண்டபடியான தமிழ் உச்சரிப்புடன் பாடவைத்தால் பாடலின் விசித்திரத் தன்மையை இன்னும் அதிகமாக்கலாம். குரல் பதிவுக்குப்பின் அதை வேவ்ஸ் அல்லது மெலோடைன் ஸ்டுடியோ போன்ற அதிநவீன மென்பொருள்களுக்குள் ஏற்றி அக்குரலையே முற்றிலுமாக மாற்றியும் விடலாம். மனிதக் குரலை மிருகக் குரலாக்கலாம், இயந்திர மனிதனின் குரலாக்கலாம், எப்படிவேண்டுமானாலும் விசித்திரமாக்கலாம்!

பதின்பருவத்தில் கேட்ட ஒரு பாடலை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையெல்லாம் இந்த தலைமுறையினருக்கு இல்லை. அவர்களது காதல்போன்ற விஷயங்களுக்கும் இசையின் தேவையேயில்லை. மெதுவாக நகரும் அந்த காலத்தின் மெல்லிசைப் பாடல்கள் அந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த தலைமுறையினருக்கு அவை ஒலித்தரமேயில்லாமல் எரிச்சலூட்டும்படியாக ஒலிக்கும் வெறும் அழுவாச்சிப் பாடல்களே. உலகமே விரல்நுனியில் இருக்கும், வேகத்தை மட்டும் நம்பியிருக்கும் இந்த காலத்துக்கு அவை ஒருபோதும் பொருந்திப்போகாது என்ற அவர்களது கருத்தை தவறு என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கு?

சென்னையின் சபாக்களில் அரங்கேறும் மார்கழி சங்கீத கச்சேரிகளுக்குள் ஒருமுறை எட்டிப்பாருங்கள். அங்கு மூத்து வெளுத்த தலைகள் மட்டும்தான் பெரும்பாலாகக் காணக்கிடைக்கும். அம்மா அப்பாக்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் சிறு வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுவரும் சில இளைஞர்களைத் தவிர புதிய தலைமுறையினர் யாரையும் பெரும்பாலும் அங்கு காணக்கிடைக்காது.

காடுமலைகளும் வனங்களும் நீர்வீழ்ச்சிகளுமெல்லாம் கணினியிலும் இணையத்திலும் காணும் நிழற்படங்களாக மட்டுமே மாறிவிட்ட ஒரு காலகட்டத்தில் இசையெனும் நுண்கலையை அதன் இயல்புகளுடனும் இனிமையுடனும் தக்கவைப்பது என்பது எப்படி சாத்தியப்படும்? மிகச்சிறந்த விஷயங்களுக்கான தேடலும் அவற்றைப் புரிந்துகொண்டு உள்வாங்கும் திறனும் கொண்டவர்கள் எந்தக் காலத்திலுமே குறைவாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்கிறபோதிலும், ஃப்ரெடி மெர்குரி தனது ‘ரேடியோ கா காபாடலில் பாடியதுபோல் காலங்கள் வழியாக எப்படியெல்லாம் மாறிவிட்டது இசைஎன்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.