20100921

ஷாஜியின் காதலி!

மற்ற கலைகளுக்கும் இசைக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. பிற கலைகள் நம் வாழும் உலகின் புற அடையாளங்களை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன. அவற்றை விவரிப்பதன் வழியாக உணர்வுகளை கடத்துகின்றன. வெறும் தத்துவத்தையோ, கோட்பாடையோ அல்லது சிந்தனையையோ மட்டுமே சொல்லும் இயல் படைப்புக்களும்கூட நம் வாழ்விலிருந்தே அவற்றை வளர்த்தெடுத்துள்ளன. ஆனால் இசைக்கு எந்த வித புற நிகழ்வும் சிந்தனையும் தேவையில்லை. அது புற வாழ்வை, அதன் நிகழ்வுகளை பிரதிபலிக்கத் தேவையில்லை. ஏனெனில் அது அறிவின் கலை அல்ல ஆன்மாவின் கலை. செரிமானமான உணவு நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் சென்று சேர்வதைப்போல நம் இருப்பின் சாராம்சமான நம் ஆன்மாவின் ஒவ்வொரு நுண்ணிழையையும் சென்றடைந்துவிடுகிறது இசை. நம் உணர்ச்சிகளை மட்டுமே உச்ச இலக்காய் கொண்டியங்கும் ஒரே கலையாக இசையை நான் காண்கிறேன்.

இசை ஒரு அறிவியலும் கூட. 12 எழுத்துக்களையும் அவற்றை வெளிப்படுத்தும் முறையைச் சொல்லும் குறியீடுகளையும் கொண்ட ஒரு மொழியாகவும் அதிலிருந்து வளர்தெடுக்கப்பட்ட இலக்கணங்களைக் கொன்ட ஒரு அறிவியலாகவும் இசை உள்ளது. ஆனால் ஒரு இசைப்படைப்பின் உச்ச இலக்கு அந்த அறிவியலுக்குள் நின்றுவிடவில்லை மாறாக ஆன்மாவை, உணர்ச்சிகளைச் சென்றடைவதுதான் அதன் உச்ச இலக்கு. உணர்ச்சிகளைத் தூண்ட விரும்பும் பிற படைப்புக்கள் அறிவு வழியாகவே இதைச் செய்கின்றன. ஆனால் இசை நேரடியாக உணர்ச்சிகளோடு உரையாடிவிடுகிறது. வேறெந்த கலைக்கும் இந்தப் பண்பு இல்லை என்றே சொல்வேன்.எழுத்தாளர், நண்பர் ஷாஜியின் இசைப்பார்வை உணர்ச்சி சார்ந்தது என்று கருதுகிறேன். இசை குறித்த அவரின் கட்டுரைகள் பலவும் இசை கேட்பதன் பல உணர்ச்சி நிலைகளை மட்டுமே சொல்லிச் செல்கின்றன. அவற்றையே அவரின் மிக முக்கியமான கட்டுரைகளாக நான் காண்கிறேன். இதையே அண்மையில் ஷாஜியின் ‘இசையின் தனிமை’ குறித்த உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டார்கள்.

உயிர்மையால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. திரைத் துறையினரும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய சில படைப்பாளிகளும் ஒரே மேடையில் ஒரு உரையாடைலை நிகழ்த்தியது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. தமிழின் மக்கட் கலைகளுக்கு இலக்கிய உலகம் மதிப்பு தருவதென்பது ஒரு பக்கம், அதே நேரம் தமிழ் எழுத்துலகின் சொற்களைக் கேட்கவும் பொது மேடையில் கலந்துரையாடவும் சினிமாத்துறையினர் விருப்பம் கொண்டிருப்பது முக்கியமானது. இவை இரண்டும் சமமாக இயங்குமானால் எத்தனை சிறப்பாக அமைந்துவிடும்?

உரையாடலில் முதலில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் சொல்லியதில் முக்கிய கருத்தாக நான் காண்பது ‘ஷாஜி சொல்கிற கோணத்தில் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவர் பரிந்துரைசெய்யும் படைப்புக்களைக் கேழுங்கள் மேலும் அவரின் சிந்தனைக் கோணங்களில் மீண்டும் இசையைக் கேட்டு உங்கள் கருத்தினைக் கண்டடையுங்கள்’ என்பதுவே. அவருக்கு அது சாத்தியமாயிருக்கிறது என்றும் அதுவரை அவர் முக்கியமானவர்களாய் கருதிய சில இசையமைப்பாளர்களைவிட முக்கியமானவர்களை அவரால் கண்டடைய முடிந்தது என்று குறிப்பிட்டார்.

ஜெயமோகனின் பேச்சு கோர்வையாக வரவில்லை என்றே சொல்வேன். அவர் பார்வையாளர்களின் முகபாவங்களுக்கேற்ப சில மாற்றங்களை செய்துகொண்டேயிருந்ததுபோலத் தோன்றியது. மிக முக்கியமான பரப்புக் கலைகளைக் குறித்து எழுதுவதைப் பற்றிய கோட்பாடுகளை அவர் முன்வைத்தார். அது கட்டுரையாக சிறப்பாக வந்திருக்கிறது. ஜெயமோகன் உரையிலும் இசைதந்த தனி அனுபவத்தை, உணர்ச்சிநிலையை அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். ‘கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்..(‘காற்றினிலே வரும்கீதம்’) எனும் பாடலை திரும்பத் திரும்பக் கேட்டு கொற்றவை நாவலை எழுதி முடித்ததாகச் சொன்னார். இதைவிட சிறப்பாக ஒரு இசைப்படைப்பு தரும் அனுபவத்தைக் கொண்டாட முடியாது. உணர்ச்சியூட்டும் கலையை உணர்ச்சிகொண்டே அளவிடவேண்டுமில்லையா?

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரை ரசிக்கும்படி அமைந்திருந்தது. அவரின் அனுபவக் கட்டுரை ஒன்றை வாசிப்பதன் அனுபவம் கிடைத்தது. அவரும் இசைபற்றிய தன் வாழ்வனுபங்களை சுவாரஸ்யமாக அடுக்கிச் சென்றார்.
இதுதான் பரப்பிசையை அளவிடுவதற்கான சிறந்த வழி. சோகம், காதல், மகிழ்ச்சி, கொண்டாட்டம், சாந்தம், பக்தி பரவசம், கோபம், காமம் என உணர்ச்சிகளைத் தூண்டாத மக்கள் இசைக்கு என்ன மதிப்பிருக்க முடியும்? இலக்கணங்களுக்கும் மரபுகளுக்கும் இயங்கும் கலைகள் ஒருவகையில் தங்கக் கூண்டுக்குள் வாழும் கிளிகள்தான். அதையும் ரசிக்கலாம்தான்.
மணிரத்தினம் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். மக்கள் கலைகளை உருவாக்குபவர்களுக்கு பல கோடி விமர்சகர்கள் (நுகர்வோர்கள்) இருப்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் அவர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் மத்தியில் ஷாஜிபோன்ற இணைப்பாளர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தரப்பினரையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைக்க இவர்களால் முடியும் என்றார். முன்னர் ஜெயமோகனும் பரப்புக் கலைகளைக் குறித்த தமிழ் எழுத்துக்கள் அதிகமில்லை என்பதை ஒட்டி மணி பேசினார்.

இறுதியில் ஷாஜி வந்தார். முந்தைய நாள் விடுதியறையில் காட்டிய அதே விளையாட்டுத்தனத்துடன் (போத்தல் நீங்கலாக) வந்து தன் தரப்பை மிகத் தெளிவாக முன்வைத்தார். அவர் புகழுக்காக எழுதிக் குவிக்கிறார் எனும் குற்றச்சாட்டை இரண்டாகப் பிரித்தார். முதலில் தான் எழுதிக் குவிப்பதில்லை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே தான் எழுதுவதைச் சுட்டிக்காட்டினார். இரண்டாவது ‘புகழுக்காக…’. ஒற்றை வரியில் ‘யாருக்கு வேண்டும் இந்த புகழ்’ என நிராகரித்தார். ‘இதோ மேடையில் ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடி புகழடைந்த வாசு அண்ணனை (மலேஷியா வாசுதேவன்) விடவா எனக்குப் புகழ் கிடைக்கப் போகிறது.. அவருக்கே இந்த நிலையென்றால் …’ என்று தன்னை உணர்ந்தவராகப் பேசினார். தொனி முழங்கியதில் அவை ஒருகணம் இறுகியது.

இன்று ஷாஜியை விமர்சிக்கும் பலருக்கும் ஷாஜியிடம் இருக்கும் ஒரே கருத்து வேறுபாடு அவருக்கு சூட்டப்பட்டிருக்கும் ‘இசை விமர்சகர்’ என்கிற பட்டமே. அந்தப் பட்டத்தை ஷாஜியே மறுதலித்தார். இசையை எப்படி விமர்சிப்பது? ‘தன் உயிர்க் காதலியை யாராவது விமர்சிப்பார்களா?’ என்றார். பளிச்சென்று ‘பொட்டில் அறைந்ததுபோல’ பேசி முடித்தார் ஷாஜி.
நானும் ஷாஜியின் கட்டுரைகளில் இசை நுட்பக் குறிப்புகள் மிகக் குறைவாக இருப்பதைக் குறையாகவே ஜெயமோகனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இசை மொழியில் அவர் எழுதுவதேயில்லை என்றே எனக்குத் தோன்றியது. ஆனால் ஷாஜியுடனான உரையாடல்களில் இது தளர்ந்தது. அவர் இசையை அறிவுகொண்டு அணுகவே இல்லை. ‘நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா’ என்பதுகூட தாஜ்மகால் கட்டிவைக்கவேண்டியவளை கூரைவீடுகளில் குடிவைத்திருக்கிறோமே எனும் தவிப்புதான். இசையெனும் உச்ச அனுபவத்தை சொல்லத் துடிக்கும் மனிதனாகத்தான் ஷாஜியை நான் காண்கிறேன்.

இசை உணர்ச்சிகளின் கலை எனும்போது அந்த உணர்ச்சிகளை எப்படிக் எழுத்தில் கடத்துவது? அது ஒரு கடினமான செயல். அது ஷாஜியால் முடிகிறது. அவரின் பிற இசைத் துறை தகவல்கள் அடங்கிய கட்டுரைகளை எழுதுவதற்கு தமிழில் பலராலும் முடியும் என்றே நம்புகிறேன் அவற்றினூடாகவும் அவர் மீண்டும் மீண்டும் தன் தீராக்காதலையே சொற்களில் கடத்த முயல்கிறார். ஆனால் இசைகேட்டலில் உணர்வனுபவத்தை அவரைப்போல் எழுதுவது கடினம். அதற்கு இசையை தீவிரமாகக் காதலிக்க வேண்டும், அதைப் பின் தொடர வேண்டும், தேடித் திரியவேண்டும், அணுவணுவாக அனுபவிக்க வேண்டும், புணர்ச்சியின்பம்போல மீண்டும் மீண்டும் ஒரே உச்ச சுகம் இசையால் அடைந்துகொண்டேயிருக்கவேண்டும்.

ஏனென்றால் நம்மில் பலருக்கும் இசை பிடித்துள்ளது. ஆனால் சிலருக்கே இசை பீடித்துள்ளது. ஷாஜி இசை பீடித்த ஒரு எழுத்தாளன் என்றே கருதுகிறேன்.
சிறில் அலெக்ஸ்