20111211

தமிழும் நானும்


தமிழை நான் இன்னொரு மொழியாக எப்போதுமே உணர்ந்ததில்லை. எனது நினைவுகள் தொடங்கும் காலத்திலிருந்தே ஏதோ ஒரு வகையில் தமிழ் எனது வாழ்க்கையில் இருந்துகொண்டேயிருக்கிறது. மூணார், பூப்பாறை, நெடும்கண்டம், குமளி, ஏலப்பாறா போன்ற ஆண்டில் ஏழுமாதமும் மழைவிழுந்துகொண்டிருந்த எங்களது குளிர்ந் ஊர்களிலெல்லாம் இரண்டாவது மொழியாக தமிழ் எப்போதுமே இருந்திருக்கிறது. அங்குள்ள ஏலக்காய் காடுகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் மலையாளத்தை விட அதிகமாக தமிழ்தான் எப்போதுமே கேட்கமுடிந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஏலத்தோட்டங்களின் பெரும் முதலாளிகளிலிருந்து ஏழ்மை மிகுந்த விவசாய தினக்கூலிகள் வரை தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட எண்ணற்றவர்களால் அந்த ஊர்கள் எப்போதுமே நிரம்பியிருந்தன. அங்குள்ள சராசரி மலையாளிகள் தமிழர்களை கொஞ்சம் ஏளனமாக, ஆனால் அவர்கள் காதில் விழாதபடி பாண்டிகள் என்றோ பாண்டிக்காரன்மார் என்றோ குறிப்பிட்டு வந்தனர். ஆனால் மலையாளிகளைப்பற்றி தமிழர்கள் அதைவிட ஏளனமாக மலையாளத்தான்மார் என்று குறிப்பிட்டு வந்தது அவர்களுக்குத் தெரியவில்லை!

அப்போது அங்குள்ள தமிழர்கள் பெரும்பாலும் மலையாளம் பேசக் கற்றுக்கொள்வதில் நாட்டம் இல்லாதவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் தமிழிலேயே பேசுவார்கள். ஏன் என்றால் அங்கு அனைவருக்குமே தமிழ் புரியும். பழையகாலத்து மலையாளிகள் தூய மலையாளத்திலும், தமிழர்கள் தூயத் தமிழிலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் புரிந்துகொள்வதில் இருவருக்கும் எந்த சிரமும் இருக்காது. அடிப்படையில் இவ்விரண்டுமொழிகளும் ஒன்று தானே! செந்தமிழ்ச் சொற்களுடன் சமஸ்கிருதமும் கலந்து உருவான மலையாளம் அதன் இன்றைய வடிவத்துக்கு வந்து ஐநூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை!

சிறுவயதில் ஒரளவுக்காவது தமிழ் பேசத் தெரியாமல் இருப்பது ஒருவகையான அவமானமாகத்தான் நான் எண்ணினேன். ஒருவர் மலையாளத்திலும் அடுத்தவர் தமிழிலுமாக ஒருவருக்கொருவர் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கும் காட்சி எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. இன்னுமொரு வேடிக்கையாக தமிழ் என நினைத்துக்கொண்டு பல மலையாளிகள் ஒருவகையான மாற்றுத் தொனியில் மலையாளமே தமிழர்களிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு நானும் நண்பர்களும் சிரித்து விழுந்தோம். இக்காரணங்களினால் எனது தலைமுறையினர்களில் பெரும்பாலானவர்கள் கொஞ்சம் மலையாளவாடை இருந்தபோதிலும் நன்றாகத் தமிழ்பேசப் பழகினார்கள். எங்கேயாவது ஒரு தமிழன் கிடைத்தால்போதும் “எனிக்கு தமிள் நல்லா தெரியும். உங்ஙளுக்கு தெரியுமா? உங்ஙள் பேற் என்ன?என்று நாங்கள் ஆரம்பித்து விடுவோம்.

தமிழ் பாடல்கள், தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தொடர்ந்து கேட்டு, தமிழ் திரைப்படங்களை பார்த்து எனது தமிழ் பேச்சு வளர்ந்து வந்தது. ஆனால் தமிழ்த் திரைப்பட சுவரொட்டிகள், கடைகளின் பெயர் பலகைகள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் எழுதிவைக்கப்பட்டிருக்கும் திருக்குறள் வாசகங்கள் போன்றவற்றை படிக்கமுடியாமல்போவது எனக்கு வருத்தமளித்தது. எப்படியாவது அவற்றைப் படித்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தினால் சிரமப்பட்டு ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். ராணி, தேவி, முத்தம், முத்தாரம், கற்கண்டு, குங்குமச் சிமிழ், பொம்மை, பேசும் படம் போன்ற தமிழ் இதழ்கள் மட்டும்தான் அவ்வூர்களில் அப்போது கிடைத்து வந்தன. அவற்றை வாங்கி கண்பார்வை மங்கிப்போன ஒரு கிழவன் படிப்பதுபோல் ஒவ்வொரு எழுத்தாக படிக்க ஆரம்பித்தேன். ஒரளவுக்கு தமிழ் படிக்க முடிந்ததும் எனக்கு தமிழ் படிக்கத்தெரியும் என பிற மலையாளத்தான்களுக்கு எடுத்துரைக்க தமிழ் இதழ்களை கையில் தூக்கிப்பிடித்து திரிய ஆரம்பித்தேன். அதை பார்த்து யாராவது ஒரு தமிழன் என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்தவுடன் பூரித்துப்போய் விடுவேன்!

தமிழ் படிக்கத்தெரிந்ததன் வழியாக பதின்பருவத்தில் இன்னொரு நன்மையும் எனக்கு ஏற்பட்டது. நான் படித்த கிருத்தவ உயர்நிலைப் பள்ளி தமிழ் பகுதிகளிலிருந்து தொலைவில் இருந்தது. அங்கு தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாருமே இருந்ததாக நினைவில்லை. கிடைக்க அரிதான புதுசக்தி எனும் மலையாள காமக்கதை இதழை நண்பர்கள் எப்படியாவது ஏற்பாடு செய்வார்கள். ஆனால் அதை படித்து இன்புறுவதற்காக நாங்கள் திருடர்களைப்போல் பள்ளத்தாக்குகளில் பதுங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. ஒருமுறை மதிய உணவுக்கு பின் வகுப்பறையில் கூட்டமாக அமர்ந்து அதை படித்துக் ரசித்துக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரான பாதிரியார் மின்னல் வேகத்தில் உள்ளே வந்து அனைவரையும் பெரம்பால் அடித்துத் துவைத்து அந்த விஞ்ஞான இதழையும் எங்களிடமிருந்து பறித்துக் கொண்டுபோனார். அவரது திடீர் சோதனையில் பல வகுப்பறைகளிலிருந்தும் அத்தகைய புத்தகங்கள் பிடிபட்டன என்று செய்தி வந்தது. அதையெல்லாம் பாதிரியார் என்ன செய்வார் என்று நான் கேட்டதற்கு நன்பன் ஒருவன் “அவர் கவனமாகப் படித்து அதன் தீமைகளை உணர்ந்தபின் மடாலயத்தில் இருக்கும் கன்னிகா ஸ்திரீகளும் அத்தீமைகளை உணரும்படி அவர்களிடம் கொடுப்பார்என்று விவகாரமாக சொன்னான்!

ஆனால் எனது தமிழ் புலமையினால் எனக்கு மட்டும் விரைவில் அந்த வாசிப்பின் இன்பத்துக்கான வழி திறந்தது. மிக அழகான, ஆனால் களங்கமற்ற தோற்றம்கொண்ட பெண்களின் வரைபடங்களை முகஅட்டைகளாகக் கொண்ட, சாதாரண புத்தகங்களின் தோற்றமுடைய தமிழ் பாலியல் கதை புத்தகங்கள் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஏராளமாகக் கிடைத்தன. நான் அதை வாங்கி வீட்டுக்கே கொண்டுபோகலாம். எங்கேயும் திறந்து வைத்துப் படிக்கலாம். பையன் தமிழில் ஏதோ கவனமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். இன்னுமொரு மொழி தெரிந்து வைத்திருப்பதனால் அவனுக்கு எதாவது நன்மை ஏற்படுமானால் ஏற்பட்டுத் தொலையட்டும். யாருமே இடையூறு செய்யவில்லை. Sex என்கிற ஆங்கில வார்த்தையை தமிழில் ‘செக்ஸ்என்று படிப்பதே உற்சாகமளித்தது. மலையாளத்தில் அது ‘ஸெக்ஸ்என்று பலமற்றுத்தான் இருக்கும்! மலையாளத்தில் ‘ச்சந்திஎன்கிற அசிங்கமான ஒலிகொண்ட வார்த்தையில் அழைக்கப்படும் உறுப்பின் பெயரை தமிழில் புட்டங்கள்என்று படிப்பதே பேரானந்தமாகயிருந்தது! அவ்வயதில் ஒரளவுக்கு வேகமாக தமிழைப் படிக்க எனக்கு உதவியது அந்த மலிவுவிலை பாலியல் கதைப் புத்தகங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல.

விரைவிலேயே அப்புத்தகங்களை கைவிட்டு நான் மலையாள, ஆங்கில இலக்கிய வாசிப்புக்குத் தாவினேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் வெகுஜென இதழ்களை வாங்கி படித்துவந்தேன். தமிழ் மொழியுடனான தொடர்பு விடக்கூடாது என்பதற்காக. அன்றிலிருந்து இந்த மூன்று மொழிகளிலும் நான் வாசித்து வருகிறேன். சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்ததன் சில பகுதிகளை வார இதழ்களில் படித்து வியந்துபோனேன். அதை முழுமையாக தமிழில் நேரடியாக படிக்கவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஜே ஜே சில குறிப்புகள் தான் நான் தமிழில் வாசித்த முதல் புத்தகம். அத்துடன் ராமசாமியின் ரசிகனாக மாறிய நான் பின்னர் அவரது ஒரு புளிய மரத்தின் கதையும் தமிழிலேயே படித்தேன்.

ஏதேதோ காலங்களில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடா, உருது போன்ற மொழிகளை பயன்படுத்தவும், குஜராத்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழிகளை புரிந்துகொள்ளவும் நான் சுயமாக கற்றுக் கொண்டேன். அவற்றின் இலக்கியங்களை படிக்கவோ அவற்றில் எழுதவோ முடியவில்லையென்றாலும் அம்மொழிகள் சார்ந்த கலாச்சாரங்கள், அவ்வூர்களின் இசை போன்றவற்றைப் பற்றியெல்லாம் தொடர்ந்த தேடலுடன்தான் இன்றும் இருக்கிறேன். மொழிகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தேடல் என்றைக்குமே எனக்குள் இயல்பாகவே இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

தமிழில் பலகாலத்துக்குப்பின்தான் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் என என் தமிழ் வாசிப்பு கொஞ்சம் விரிவடைந்தது. முறையாக தமிழைப் பயிலவில்லை என்ற காரணத்தினால் தமிழில் வாசிக்க எனக்கு எப்போதுமே எந்த சிரமும் ஏற்பட்டதில்லை. சுவாரசியமாக எழுதப்பட்ட எதையுமே படிக்க என்னால் முடிகிறது. ஆனால் இன்றும் தமிழை வேகமாகப் படிக்க என்னால் முடிவதில்லை. ஒரு பக்கத்தை படிப்பதற்கு உங்களுக்குத் தேவையான நேரத்தை விட இரண்டு மடங்கு நேரம் எனக்குத் தேவை! ஆதலால் இன்றும் தமிழின் பழம்பெரும் படைப்புகள் பலவற்றை படிக்காதவனாகத்தான் நான் இருக்கிறேன். இருந்தும் எனது குறைவான தமிழ் வாசிப்பை வைத்துக்கொண்டே தமிழ் இலக்கியம் மலையாள இலக்கியத்தை விட ஐம்பதாண்டுகளாவது முன்னேதான் என்று எந்தவொரு சந்தேகமுமின்றி சொல்வேன்.

தமிழில் என்னால் எழுதமுடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை கூட செய்யவில்லை. பெரும்பாலும் ஆங்கிலத்திலும் மிகக்குறைவாக மலையாளத்திலும் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் ஜெயமோகன்தான் முன்வந்து எனது ஒரு கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து உயிர்மையில் வெளியிட்டார். வெளிவரும்முன் அதை நான் படிக்கவில்லை. பின்னர் படித்தபோது அதில் ஹிந்தி, பெங்காலி போன்ற பிறமொழி வார்த்தைகள் தவறாக எழுதப்பட்டிருந்தது. அதைச் சொன்னபோது முரசு அஞ்சலை பதிவிறக்கம் செய்து அதில் தமிழ் தட்டச்சு செய்ய பயின்றுகொள்ளுங்கள் என்று சொன்னார் ஜெயமோகன். தமிழில் வெளியிடுவதற்காகவே தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தவர் ஜெயமோகன். அத்துடன் இசையைப் பற்றி தமிழில் தொடர்ந்து நான் எழுதவேண்டும் என்கிற உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரனின் கட்டாயப்படுத்தல்தான் என்னை தமிழில் ஒரு எழுத்தாளனாக்கியது. ஜெயமோகனுக்கடுத்து எஸ் ராமகிருஷ்ணன் எனது சில கட்டுரைகளை மொழி பெயர்த்தார். பின்னர் ஜீ குப்புசாமி, முபாரக், அமிதா, ஸ்ரீபதி பத்மனாபா ஆகியோரும் எனது கட்டுரைகளை மொழியாக்கம் செய்தனர். ஆனால் தமிழில் வந்த எனது முதல் கட்டுரை மட்டும்தான் மொழிபெயர்ப்பாளர் எழுதிய அதேவடிவத்தில் வெளிவந்தது.

தமிழில் தட்டச்சு செய்யும் மென்பொருள்களை புரிந்துகொண்டபின் மொழிபெயர்த்து வரும் கட்டுரைகளை நான் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்காங்கே திருத்தியமைக்க, செம்மைப்படுத்த ஆரம்பித்தேன். சில வரிகளை, பந்திகளை அழித்து புதியவற்றை உள்சேர்க்கத் தொடங்கினேன். ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்ற தேர்ந்த மொழியாளுமைகளின் மொழியையும், பல உலக இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்த குப்புசாமியின் மொழியையும், முபாரக் போன்ற புத்தம்புதிய ஒரு எழுத்தாளனின் மொழியையுமெல்லாம் தொடர்ந்து அவதானிக்க நேர்ந்ததனும் அவற்றுக்குள் சில மாற்றியமைப்புகளை முயன்று பார்த்ததனும் வழியாகத்தான் தமிழில் நேரடியாக எழுதுவதற்கான ஓரளவு தைரியம் எனக்கு கிடைத்தது. இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் எழுதியுள்ளேன் ஆனால் இந்த அதிசய மொழியின் சூட்சுமங்கள் எதுவுமே எனக்கு இன்றும் சரியாகப் பிடிபடவில்லை.

தமிழுடன் எந்த தொடர்பும் இல்லாத இத்தாலிய மொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் பல்லாயிரம் மைல்கள் தாண்டி தமிழுக்கு வந்து இந்த மொழிக்கு மகத்தான வரலாற்றுத் தொண்டினைச் செய்த காண்ஸ்டன்டைன் பெஸ்சி என்கிற வீரமாமுனிவரையும் ஜார்ஜ் பாப்பையுமெல்லாம் நினைத்து பார்க்கும்போது, தமிழிலேயிருந்து பிறந்த மலையாளத்தை தாய்மொழியாகக்கொண்ட நான் தமிழில் எழுதுவதில் பெரிதாக சிறப்பு எதுவுமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தும் இடைவிடாமல் மழை விழுந்துகொண்டிருந்த எனது பால்யத்தின் மலைப்பாதைகளில் என்னுடன் நடந்து, இந்த அழகுமொழியில் என்னுடன் பேசிய அந்த ஒவ்வொரு எளிய மனிதர்களையும் நினைவுகூர்கிறேன். மனதால் அவர்களது பாதங்களைத் தொட்டுக்கொள்கிறேன்.

புதிய இசைமுறை

(ஏன் இந்த கொலைவெறி? என்கிற பெயரில் புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த கட்டுரை)

காடுமலைகளின் அடிவாரத்தில் அமைதியில் ஆண்டுகிடக்கும் அமராவதி ராணுவப்பள்ளியின் ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி ‘இசையும் வாழ்வும்என்ற தலைப்பில் பேசினேன். கலந்துரையாடலில் மாணவர்கள் கேட்ட கேள்விகள் ‘இப்போது உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல் எது? இசையமைப்பாளர் யார்? சினிமாவில் இசையமைப்பாளராக வருவதற்கு என்ன செய்யவேண்டும்? போன்றவை. ஆசிரியர்களோ ‘ஏன் அந்தக்காலத்தின் அருமையான பாடல்களை இந்தத் தலைமுறையினருக்கு பிடிக்கவில்லை?, ‘ஏன் இன்றைய பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்பதில்லை? இன்றைய பாடல்களில் ஏன் தமிழ் உச்சரிப்பு பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே போனார்கள்.

அடுத்தநாள் அப்பகுதியிலுள்ள தூவானம் எனும் நீர்வீழ்ச்சி பாயும் அடர்ந்த வனத்திற்குள் ஒருநாள் நீண்ட நடைப் பயணம் போனேன். உடன் வந்தவர் அப்பள்ளியின் நூலக காப்பாளரான ஸ்டீஃபன் எனும் இயற்கை ஆர்வலர். காட்டுப் பாறைகளின்மேல் மூச்சுவாங்கி ஏறிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் ‘எனக்கு எந்த இசை நாட்டமும் கிடையாது. இசையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும்விட நான் விரும்புவது யதார்த்த இசை நிகழ்ச்சிகள்தான். அதில் இசையைப்பற்றி நடுவர்கள் சொல்லும் கருத்துக்கள் பிரமாதமாகயிருக்கும்? எனக்கு ஒருகணம் மூச்சே நின்று போனது.

வெகுஜன இசையைப்பற்றி வெகுஜனமத்தியில் இன்று நிலவும் பார்வைகளின் சாமானிய நிலவரம்தான் இது. ஒரு பக்கம் இன்றைய பாடல்களிலும்கூட கவித்துவமான வரிகளையும் இக்காலத்தின் பாடகர்களிலும் வெங்கலக் குரலோன்களையும், கொஞ்சும் கிளியான பெண்களையும் எதிர்பார்க்கும் பழைய தலைமுறை. மறுபக்கம் நிற்கும் புதிய தலைமுறையினருக்கோ இசையில் ‘கொலைவெறிதான் பிடிக்கும்!. 3 என்கிற வரப்போகும் ஒரு திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடி, அவரும் அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், கமலஹாஸனின் மகள் ஸ்ருதியும் சேர்ந்து தோன்றும் ஒய் திஸ் கொலவெறி டீஎன்கிற பாடலின் காணொளி வடிவம்த்தை வெறும் பத்தே நாட்களில் 42 லட்சம் பேர் பார்த்தனர்! இப்போதும் இடைவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!

காணொளி இணைய தளமான யூ டியூப் வழியாக இன்று இணையத்தில் தேடும் தமிழ் இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியிருக்கும் கொலைவெறியில் இடம்பெறும் ஒரேயொரு தமிழ் வார்த்தை கொலவெறி மட்டும் தான். பிற அனைத்து வார்த்தைகளுமே வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்பட்ட ஒருவகையான உள்ளூர் கொச்சை வழக்கு ஆங்கிலம்! அதுதான் இப்பாடலின் இவ்வளவு பெரிய வெற்றிக்கான காரணமுமே. எந்தவொரு இசைத் தேர்ச்சியுமில்லாத, மிகச்சாதாரணமான தனது குரலில் அப்பாட்டுக்குத் தேவையான உணர்ச்சிகளை பாடி வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். போதும். நமது இளம்தலைமுறையினருக்கு சிலநாட்கள் கொண்டாட ஒரு சூப்பர் பாடல் கிடைத்து விட்டது.

யாராலையும் எளிதாக முணுமுணுக்க முடியும் ஒரு மெட்டு... தங்களே பாடுவதுபோல் ஒலிக்கும் ஒரு மிகச்சாதாரணமான குரல்... திருப்பித் திருப்பிப் பாடக்கூடிய ஒரு கொக்கி வரி(Hook Line)... அதுவும் தமிழாகவெல்லாம் இருக்கவேண்டியதில்லை... ஜும்பலக்கா, மூக்கு நக்கா, படவலங்ஙா என எதாவது ஒரு வெற்றுரை... உற்சாகமான ஒரு தாளக்கட்டு... இவ்வளவுபோதும். சிலநாட்களுக்குLZள் மை தீர்ந்துபோன இந்தக்காலப் பேனாவை தூக்கிப் போடுவதுபோல் அதை வீசிவிட்டுப் போவார்கள். அதனால் என்ன? இக்காலத்துக்குத் தேவையான இத்தகைய யூஸ் அண்டு த்ரோ இசையை உருவாக்க தேர்ந்த பாடலாசிரியர்களோ, இசையமைப்பாளர்களோ பாடகர்களோ தேவையே இல்லை. ஒரு கணினியும் ஒரு ஒலிவாங்கியும் இருந்தால் யார்வேண்டுமானாலும் இன்றைக்கு ஒரு பாடலை எளிதாக உருவாக்கி விடலாம்.

சரி, அதை பிரபலப்படுத்துவது எப்படி? யூ டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்கள் இருக்கும் வரைக்கும் கவலையே இல்லை. அங்கு பார்க்கக் கிடைக்கும் விசித்திரமான எந்த ஒரு விஷயத்தையும் பகிர்ந்துகொள்ளத் துடித்துக் கொண்டேயிருக்கும் இளைஞர்களின் பெரும் பட்டாளம் 24 மணிநேரமும் கணினியின் முன் தூங்காமல் விழித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எந்தவொரு கேவலமான சமாச்சரத்தையும் உலகப்புகழுக்கு கொண்டுசெல்ல முடியும். பாடலின் புகழுக்குத் தகுந்த பணமும் விளம்பரங்கள் வழியாக கிடைக்கக்கூடும்.

2009ல் வந்த வில்பர் சர்க்குணராஜ் என்பவரின் இத்தகைய சில பாடல் காணொளிகளை இணையத்தில் 20 லட்சம்பேர் வரைக்கும் பார்த்தார்கள். உலகில் இப்போது மிகப்பிரபலமாகயிருக்கும் தமிழ் பாடல் என்ற பரிந்துரையோடு அதன் சுட்டிகள் எனக்குக்கூட அனுப்பப்பட்டன. தனது பெயரை அவர் வில்.....ல்ல்ல்ல்பர் சர்க்குணராஜ்.....என்று பாடும் அந்த ஆலாபனை ஒன்றேபோதும் அவரது இசைத்தரத்துக்கு சான்றாக! அதைவிட மிகமோசமான பாடல்களுடன் மலையாளத்தில் சந்தோஷ் பண்டிட் என்கிற ஒருவர் சமீபத்தில் அவதரித்தார். அவரது காணொளிக்காட்சிகளை இணையத்தில் 25 லட்சம் பேருக்குமேல் பார்த்தார்கள். அதைத்தொடர்ந்து அப்படல்களை வைத்து அவர் ஒரு திரைப்படத்தையும் எடுத்து இயக்கி நடித்து இசையமைத்து பாடி ஆடியபோது அப்படமும் பெரும் வெற்றிபெற்றது. இன்றைய மலையாள இணைய இளைஞர்களின் ஆதர்சமாக அவர் திகழ்கிறார்!

எதனால் இதெல்லாம் புகழடைகிறது? முதலில் சிறந்தது என்று நாம் நினைக்கக் கூடிய பெரும்பாலான விஷயங்கள் இந்த இணைய தலைமுறையினருக்கு அலுப்பையும், சலிப்பையும் அசுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. சில்லென்று பூத்த சிறுநெரிஞ்சி காட்டினிலேஎன்றெல்லாம் மெதுவாக நகரும் ஆலாபனைகள் அவர்களை அலுப்பின் அடியாழத்துக்கே கொண்டுபோகிறது. விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் விஷயங்கள் மட்டும்தான் அவர்களைக் கவரக்கூடியவை, அவர்களுக்கு சுவாரசியமளிக்கக் கூடியவை. இந்த விசித்தரமும் வித்தியாசமும் பாடல்களில் எப்படி கொண்டுவரமுடியும்?

வரிகளும் இசையும் முன்சொன்ன மாதிரி கொலைவெறியாக இருந்தால் பாதிவேலை முடிந்தது. பாடகனின் குரல் ஆண்குரலாக அல்லாமல் என்னமோ ஏதோ மாதிரி இருக்கவேண்டும். ஆணின் குரல் பெண்மை மிக்கதாக இருப்பதுபோல் பாடகியின் குரல் ஆண்மை மிக்கதாகவும் ஒருவகையான போக்கிரித்தனத்துடனும் இருக்கவேண்டும். பெண்ணுக்கு போக்கிரித்தனம்தான் அழகு என்பது இன்றைய ஒரு சூத்திர வாக்கியமாகவே மாறிவிட்டது எனப்படுகிறது.

ஒருநாள் எஃப் எம் என்று அழைக்கப்படும் குற்றலை வானொலியொன்றில் ஒரு அறிவிப்பாளினி பேசுவதை கேட்க நேர்ந்தது. ஒரு அப்பாவி ஆண் தொலைபேசியில் தூயத் தமிழில் நான் குமரிக் கண்டத்திலிருந்து பேசுகிறேன்என்று சொன்னதற்கு அந்த அம்மா குமரிக்கு எதுக்கு காண்டம் (Condom)? இப்போது தான் ஐ பில் (I pill) இருக்கே என்று ஆணவம் மிக்க தொனியில் பதில் சொன்னார். Condom என்பது உடலுறவுக்கு முன் கருத்தடைக்கு பயன்படுத்தும் பொருள் என்றால் I pill உடலுறவுக்குப்பின் கருத்தடைக்கு உதவும் நவீன மாத்திரை! பாடல்கள் பாடும்போது பாடகிகளின் மனப்பாண்மையும் (Attitude) அந்த அறிவிப்பாளினியினுடையதுபோல் இருந்தால் நலம் போலும்!

பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு தமிழாக இருக்கக் கூடாது. வானத்தை வ்ஹானம் என்றும் மேகத்தை மேய்கம்என்றும் உச்சரிக்கவேண்டும். வாழ்கிறேன் வ்ஹால்கிறேன் என்று தான் ஒலிக்கவேண்டும். மேக் இட் மோர் ஆங்கிலிசைஸ்ட் என்று பாடகர்களிடம் இசையமைப்பாளர்கள் சொல்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தமிழ் அறவே தெரியாத பாடகர்களை அழைத்து அவர்களை கண்டபடியான தமிழ் உச்சரிப்புடன் பாடவைத்தால் பாடலின் விசித்திரத் தன்மையை இன்னும் அதிகமாக்கலாம். குரல் பதிவுக்குப்பின் அதை வேவ்ஸ் அல்லது மெலோடைன் ஸ்டுடியோ போன்ற அதிநவீன மென்பொருள்களுக்குள் ஏற்றி அக்குரலையே முற்றிலுமாக மாற்றியும் விடலாம். மனிதக் குரலை மிருகக் குரலாக்கலாம், இயந்திர மனிதனின் குரலாக்கலாம், எப்படிவேண்டுமானாலும் விசித்திரமாக்கலாம்!

பதின்பருவத்தில் கேட்ட ஒரு பாடலை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையெல்லாம் இந்த தலைமுறையினருக்கு இல்லை. அவர்களது காதல்போன்ற விஷயங்களுக்கும் இசையின் தேவையேயில்லை. மெதுவாக நகரும் அந்த காலத்தின் மெல்லிசைப் பாடல்கள் அந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த தலைமுறையினருக்கு அவை ஒலித்தரமேயில்லாமல் எரிச்சலூட்டும்படியாக ஒலிக்கும் வெறும் அழுவாச்சிப் பாடல்களே. உலகமே விரல்நுனியில் இருக்கும், வேகத்தை மட்டும் நம்பியிருக்கும் இந்த காலத்துக்கு அவை ஒருபோதும் பொருந்திப்போகாது என்ற அவர்களது கருத்தை தவறு என்று சொல்ல யாருக்கு என்ன உரிமை இருக்கு?

சென்னையின் சபாக்களில் அரங்கேறும் மார்கழி சங்கீத கச்சேரிகளுக்குள் ஒருமுறை எட்டிப்பாருங்கள். அங்கு மூத்து வெளுத்த தலைகள் மட்டும்தான் பெரும்பாலாகக் காணக்கிடைக்கும். அம்மா அப்பாக்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் சிறு வயதிலிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுவரும் சில இளைஞர்களைத் தவிர புதிய தலைமுறையினர் யாரையும் பெரும்பாலும் அங்கு காணக்கிடைக்காது.

காடுமலைகளும் வனங்களும் நீர்வீழ்ச்சிகளுமெல்லாம் கணினியிலும் இணையத்திலும் காணும் நிழற்படங்களாக மட்டுமே மாறிவிட்ட ஒரு காலகட்டத்தில் இசையெனும் நுண்கலையை அதன் இயல்புகளுடனும் இனிமையுடனும் தக்கவைப்பது என்பது எப்படி சாத்தியப்படும்? மிகச்சிறந்த விஷயங்களுக்கான தேடலும் அவற்றைப் புரிந்துகொண்டு உள்வாங்கும் திறனும் கொண்டவர்கள் எந்தக் காலத்திலுமே குறைவாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்கிறபோதிலும், ஃப்ரெடி மெர்குரி தனது ‘ரேடியோ கா காபாடலில் பாடியதுபோல் காலங்கள் வழியாக எப்படியெல்லாம் மாறிவிட்டது இசைஎன்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

20111118

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன் -(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)

திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்

(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)

தமிழில் : ஷாஜி

கேள்வி : சினிமாவுக்கு ம்யூசிக் தேவையா? சினிமாவில் ம்யூசிக் டைரக்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது?

எம் பி எஸ் : ம்யூசிக் டைரக்டர் என்கிற சொல்லாடலே தவறு. இந்திய சினிமாவில் அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும். ம்யூசிக் கம்போஸர் என்றுதான் சொல்லவேண்டும். இசையமைப்பாளரை இசை இயக்குநர் என்று சொல்லல் ஆகாது. சினிமாவில் வேறு வேறு முறைகளில் ஓரளவு இசை தேவை என்றே சொல்லுவேன். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வி. திரைப்படத்தின் கதை, அதன் பண்பாட்டுப் பின்புலம் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் அதன் இசை அமைய வேண்டும். நான் இசையமைத்த மலையாளப் படங்களான யவனிகா, உள்க்கடல் போன்றவற்றுக்கு இசை இன்றியமையாதது.

ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் போன்ற படத்திற்கு இசையே தேவையில்லை. இந்தியாவின் ஏழை எளிய மக்கள் திரைப்படங்களை நாடுவது பாடல்கள், நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளுக்காகத் தான் என்று சத்யஜித் ரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அது ஒரளவுக்கு உண்மையும் தானே? ஆனால் திரைப்படத்துக்கு இசை தேவையா என்று கேட்டால் அது அந்த படத்தை பொறுத்தது என்றே சொல்வேன்.

கேள்வி : அறுபது எழுபதுகளின் திரை இசைக்கும் இன்றைய திரை இசைக்கும் இருக்கிற வேற்றுமைகளைப்பற்றி சொல்லுங்கள்.

எம் பி எஸ் : மலையாளத் திரையிசையில் பாபுராஜ், ராகவன், தட்சிணாமூர்த்தி, தேவராஜன் போன்றவர்களின் இசையும் யேசுதாஸின் குரலும் வயலார், பி பாஸ்கரன், ஓ என் வி குருப் போன்றவர்களின் பாடல் வரிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பொற்காலம் இருந்தது. அவர்களின் அசாத்தியமான திறமைகள் ஒன்றிணைந்தபோது அப்பாடல்கள் தரத்திலும் வெகுஜெனப் புகழிலும் பரவலாக வெற்றியடைந்தது.

நான் அதிகமாக இன்றைய படங்களைப் பார்ப்பதுமில்லை பாடல்களை கேட்பதுமில்லை. இன்று பெரும்பாலும் இயக்குநர்கள் சொல்வதற்கேற்ப எதாவது ஒன்றை உருவாக்கி வழங்குவாத மாறிவிட்டது இசையமைப்பாளர்களின் வேலை. இருந்தும் திறமைவாய்ந்த இசையமைப்பாளர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கேள்வி : படத்தின் இசை உருவாக்கத்தில் இயக்குநரின் பங்கு தேவயற்றது என்கிறீர்களா?

எம் பி எஸ் : நான் அப்படி சொல்ல வரவில்லை. இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது தான். தனது படத்தில் பாடல்கள் வேண்டுமா வேண்டாமா, அப்படத்தின் இசை எந்த மனநிலையில், உள உணர்வில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் இயக்குநர் தான். ஆனால் அவரது தேவையை, கருத்தை புரிந்துக்கொண்டு இசை அமைப்பது என்பது இசையமைப்பாளரின் வேலை. அதிலும் இயக்குநர் பங்காற்ற வேண்டும் என்றால் அப்படத்தின் இசையை அவரே அமைக்கலாமே! அதற்கு ஒரு இசையமைப்பாளன் தேவை இல்லையே. என்னிடம் இசை கேட்டு வந்த அனைத்து இயக்குநர்களுடனும் எனக்கு சுமுகமான உறவுதான் இருந்திருக்கிறது. அவர்கள் அனைவருமே எனது இசையையும் எனது அலைவரிசையயும் புரிந்துகொண்டவர்கள்.

கேள்வி : இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிரீர்களா?

எம் பி எஸ் : மலையாளத்தில் எனது தொடக்கமே பி பாஸ்கரனின் வரிகளுக்கு இசையமைத்து தான். ஸ்வர்க ராஜ்ஜியம் என்கிற படம் வழியாக. தொடர்ந்து வயலார் மற்றும் ஓ என் வீயின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தேன். அவர்களுடன் எனக்கு எப்போதுமே நேரடித்தொடர்பு இருந்தது. பாடல்வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது தான் மலையாளத்தின் சிறப்பு. வரிகளின் பொருளை புரிந்துகொண்டுதான் இசையமைக்க வேண்டும்.

சிறந்த கவிதைகளாக வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியரும் அதைப் புரிந்துகொண்டு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளரும் இணையும்போது சிறந்த பாடல்கள் பிறக்கின்றன. தமிழிலும் தெலுங்கிலும் இதே முறைதான் நான் கடைப்பிடித்தேன். சிறந்த பாடல்களை உருவாக்க சிறந்த கவிதை வரிகள் வேண்டும். ஒருமுறை வயாலார் என் விருப்பத்திற்கேற்ப எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கட்டும் என்கிற எண்ணத்துடன் ஒரு பாடலின் முதல் வரியை இரண்டு விதமாக எழுதி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் அவ்விரண்டுமே ஒன்றுக்கடுத்து ஒன்று என்று தவறாக புரிந்துகொண்டு இசையமைத்து விட்டேன். பாடல் வெகுசிறப்பாக வந்தது! அது தான் சிறந்த வரிகளின் வல்லமை.

கேள்வி : மின் இசைக்கருவிகள் இசைக்கு நல்லதா கெட்டதா?

எம் பி எஸ் : மின் இசைக்கருவிகள் வர ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது. யூணிவோக்ஸ், க்ளாவயலின் போன்றவை இருபதாண்டுகளாக இருக்கிறது. அவற்றின் தாக்கத்தால் ஷெஹ்னாய், க்ளாரினெட், ஃப்ளூட் போன்ற மரபான இசைக்கருவிகளுக்கு நம் திரையிசையில் வேலை கொஞ்சம் காலம் இல்லாமலாகிவிட்டது. தொடர்ந்து காம்போ ஆர்கன், ஸிந்தஸைசர்கள், அவற்றின் பற்பல இணைப்புகள் போன்றவை வந்தது. ஸ்ட்ரிங்ஸ் என்கிற ஸிந்தஸைசர் வந்தபோது இனிமேல் வயலின், ஸிதார் போன்ற கருவிகளுக்கு வேலையே இருக்காது என்று சொன்னார்கள். ஏன் என்றால் அதில் ஒரே சமையம் நூற்றுக்கணக்கானW வயலின்களின் ஒலியையோ ஸிதார்களின் ஒலியையோ கொண்டுவர முடியும். ஆனால் நம் திரையிசையில் இன்றைக்கும் வயலின், சிதார் போன்ற கருவிகள் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரிங்ஸ் ஸிந்தஸைசரோ இன்று காணக்கிடைப்பதேயில்லை!

மின் இசைக்கருவிகளை செம்மையாக இசைக்கத் தெரிந்தவர்கள் இங்கு மிகக்குறைவே. சில சத்தங்கள் எழுப்புவதற்காகத்தான் இங்கு அவை பயன்படுகிறது. ஆனால் அவற்றை சிறப்பாக வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர்கள் இடம்பொருள் பார்த்து அவற்றை பயன்படுத்துமானால் அது நன்றாக அமையலாம். செலவும் குறைக்கலாம்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதைத்தருணத்திற்கு வெகுநேரம் யோசித்து இரண்டு தன்புரா ஒரு கடம் என சில மரபான கருவிகளை பயன்படுத்தி ஒரு இசையை உருவாக்கினேன். அந்தபடம் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அவ்விசை எந்த மின் இசைக்கருவியில் உருவானது என்று அடூரிடம் கேட்டாராம்!

கேள்வி : நமது பழைய நாடக இசையின் கூறுகள் நமது சினிமா இசையில் இன்றளவும் காணக்கிடைக்கிறதா?

எம் பி எஸ் : உலகத் திரை இசையின் அடிப்படை கூறுகளில் ஒன்று தான் ஓபெரா இசை என்பது. எல்லாவற்றையும் விட இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடக வடிவம் தானே ஓபெரா. அதேபோல் நமது நாடக இசையும் நம் சினிமா இசையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

கேள்வி : வெளிநாடுகளில் இசையை மட்டும் மையமாகக் கொண்ட மை ஃபெயர் லேடி, சௌண்ட் ஆஃப் ம்யூசிக் போன்ற ‘ம்யூசிக்கல் என்கிற திரைப்பட வகை மிகப் பிரபலமாக இருக்கிறது அல்லவா? அவ்வைகையறா படங்களுக்கு நம் நாட்டில் ஏன் இடமில்லை?

எம் பி எஸ் : தெரியவில்லை. அவ்வகை திரைப்படங்கள் இந்தியாவில் இனிமேல் பிரவியெடுக்கலாம். வராமலும் போகலாம்!

கேள்வி : பிறமொழிக்காரர்கள் மலையாளத்தில் இசையமைப்பது சரியா? ஒரு மொழியில் இசையமைப்பதற்கு அந்த மண்ணின் பண்பாட்டுப் பின்புலம் தேவையே இல்லையா?

எம் பி எஸ் : நான் ஒரு தமிழன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவன். ஆனால் இசைக்கும் கலைக்கும் மொழி ஏது? அதே நேரத்தில் பண்பாட்டுப் பின்புலம் தெரிந்து கொண்டுதான் ஒரு உண்மையான கலைஞன் பணியாற்றவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எந்த ஒரு விஷயத்தை கையாளும்பொழுதும் அதன் ஆழத்துக்குப்போய் அதை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பவன் நான். ஆரம்பத்தில் மலையாளத்தில் கால்ப்பாடுகள்* படத்திற்கு இசையமைப்பதற்காக பல மாதங்கள் நான் கேரள கிராமங்களில் அலைந்து திரிந்திருக்கிறேன். அங்குள்ள நாட்டுப்புற இசையை நன்றாகப் புரிந்து கொண்டேன். மலையாள மொழி கற்றுக்கொண்டேன்.

மலையாள இலக்கியங்களில் எனக்கு புலமை இல்லையென்றாலும் ஆழ்ந்த பரிச்சயம் உண்டு. அங்குள்ள இலக்கியவாதிகள், கேரளப் பண்பாட்டில் ஆழ்ந்த புரிதல்கொண்ட இயக்குநர்கள் போன்றவர்களுடன் எனக்கு எப்போதுமே தொடர்பிருந்திருக்கிறது. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் இசையமைக்கும்பொழுது அந்த மொழியையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்துமே. அதற்கு பாடுபடத்தயங்காத ஒரு இசையமைப்பாளர் எந்த மொழியிலும் சென்று இசை அமைக்கலாம்.

கேள்வி : உங்கள் இசையில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?

எம் பி எஸ் : நான் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும் பத்து தமிழ்ப் படங்களுக்கும் எட்டு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். ஸ்வர்க்க ராஜ்ஜியம், இனி ஒரு ஜன்மம் தரூ, கடல், அள்த்தாரா, புத்ரி, புதிய ஆகாசம் புதிய பூமி, வேனல், சில்லு, உள்க்கடல், யவனிகா, வளர்த்து மிருகங்கள், பரஸ்பரம் போன்ற படங்களின் பாடல்கள் எனது விருப்பத்துக்குறியவை. ஸ்வயம்வரம், யவனிகா, எலிப்பத்தாயம், முகாமுகம் போன்ற படங்களின் பின்னணி இசையும் திருப்தி அளித்தவை. முகாமுகத்தின் பின்னணி இசையில் கம்யூனிஸ்ட் இண்டெர்நாஷணல் இசையின் சுரபேதங்கள் மட்டும் தான் பயன்படுத்தினேன். பாதை தெரியுது பார் என்கிற எனது முதல் தமிழ் படத்தின் பாடல்களும் நிமஜ்ஜனம் என்கிற தெலுங்கு படத்தின் இசையும் எனக்கு பிடித்தமானவை.

* யேசுதாஸுக்கு அவரது முதல் திரைப்பாடல் வாய்ப்பை எம் பி எஸ் வழங்கியது இப்படத்தில் தான்.

(நன்றி. திரு. பி கெ ஸ்ரீநிவாஸன், ஃபிலிம் மாகசின்)

20111110

ஸ்டீவ் ஜோப்ஸ் – அது ஒரு கணினிக் காலம்

எதிர்காலத்தில் வரப்போகிறது என்று நினைக்கும்

சந்தோஷங்களைப்பற்றி கனவு காணும்பொழுது மட்டும்தான்

மனிதன் உண்மையில் சந்தோஷமாகயிருக்கிறான்.

- ழாக் லகான்

விளம்பர இயக்குநர் நண்பர் சரத் ஸந்தித்துக்கு பணத்துக்கு புல்லுவிலைதான். பென்ஸ் தொடங்கி பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். ஒரு நாள் அவர் வோக்ஸ்வாகன் டொராக் என்கிற தனது விலையுயர்ந்த சொகுசு விளையாட்டுக் காரில் பெங்களூரின் க்ராஃபோர்டு அங்காடிப் பகுதியில் வந்திறங்கியபோது தெருவெங்கும் ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. ’என்னடா ஆச்சு’ என்று யோசித்துக் கொண்டு காரை விட்டு வெளியில் இறங்கி, அது யாருடைய பணம் என்று நாலாபக்கமும் பார்த்தார். அந்தநேரத்தில் இன்னும் மூடப்படாமல் இருந்த அந்த காரின் பின்கதவுவழியாக அவரது செங்கல் நிறமான தோல் பையை எடுத்துக்கொண்டு ஒரு திருடன் ஓடிவிட்டான்.

கவனம் திருப்ப ரூபாய் நோட்டுகளை கீழே போட்டிருந்தவனேதான்! என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் பல பல வங்கிகளின் பணஅட்டைகள், காசோலைப் புத்தகங்கள், விலை உயர்ந்த ப்ளாக்பெர்ரி அலைபேசி போன்றவை மாயமாகிவிட்ட. ஆனால் அது எதுவுமே அவரை அதிகமாக பதற்றமடையச் செய்யவில்லை. அந்த பையில் இருந்த, தனது உயிரினும் மேலாக அவர் பாதுகாத்துவந்த ஆப்பிள் மாக் புக் ஏர் எனும் மடிக்கணினி திருட்டுபோனதுதான் அவரை வேதனைக்குள்ளாக்கியது. அது மிக விலை உயர்ந்த கணினி. ஆனால் அவருக்கு அது ஒரு விலை தீராப்பொருள்! தனது இரண்டாம் இதயத்தைப் போலவும் இரண்டாம் மூளையைப் போலவும்தான் அது அவருக்கு இருந்தது.

நான் பயன்படுத்தும் வின்டோஸ் கணினிகளின் வேகமற்ற தன்மை, அவசர வேலைகளுக்கு நடுவில் திடீரென்று உறைந்து நிற்கும் அவற்றின் இயலாமை, பலமணிநேரம் கஷ்டப்பட்டு செய்த வேலைகளோ எழுதிமுடித்த பக்கங்களோ காணாமலாகி விடும் மாயம் போன்றவையைப் பற்றியெல்லாம் நான் சொல்லும்போது ’நீ ஏன் ஒரு ஆப்பிள் மாக் வாங்கக்கூடாது? ஒருமுறை அதைப் பயன்படுத்திப் பார்த்தால் அப்புறம் நீ வின்டோஸை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டாய்’ என்று சொல்லுவார். ஆனால் நான் ஒருபோதும் ஆப்பிளின் எந்த ஒரு தயாரிப்பையும் வாங்கிதோ பயன்படுத்தியதோ இல்லை. நண்பர் ஜெயமோகன் ஒருமுறை அமெரிக்கப் பயம் முடித்து வந்தபோது எனக்கு ஒரு ஐ போட் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தார். ஆனால் எம் பி3 வடிவமான பாடல்களை கேட்பதிலோ காதுக்குள் வைக்கும் குட்டி இயர்ஃபோன்கள் வழியாக இசை கேட்பதிலோ விருப்பமில்லாததனால் நான் அதை ஒரு ஆப்பிள் விரும்பியான நண்பர் சிங்கப்பூர் பரணிக்கு கொடுத்து விட்டேன்.

என் பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாளராகயிருந்த நண்பர் சௌதி அராபிய முபாரக் ஒரு ஆப்பிள் அடிமை. பலவகையான ஆப்பிள் படைப்புகளை வைத்திருந்த அவர் ஒருமுறை தனது ஆப்பிளின் வல்லமைகளை பலமணிநேரம் எனக்கு செயல்முறை விளக்கம் கொடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்கு சிநாட்கள் முன்புதான் நான் அஸ்யூஸ் எனும் கொஞ்சம் விலை அதிகமான வின்டோஸ் மடிக்கணினி ஒன்றை வாங்கியிருந்தேன். அதைப்பார்த்து இன்னும் கொஞ்சம் பணத்தைப்போட்டு ஒரு ஆப்பிளை வாங்கியிருக்கலாமே என்று முபாரக் வருத்தத்தோடு சொன்னார்.

எனது நெருங்கிய நண்பர்கள் பலரும் ஐ போட், ஐ ஃபோன், ஐ பாட், மாக் புக் ப்ரோ போன்ற பலவகையான ஆப்பிள்களுக்கு மாறியபோதிலும் நான் ஆப்பிள்கள் எதுவும் இல்லாமல்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறேன். ஆனால் வின்டோஸ், லினக்ஸ் போன்ற மற்ற கணினி வகைமைகளும் உருவாவதற்கு மூலகாரணியாகயிருந்த, தனிநபர்க் கணினி என்கிற பேரதிசயத்தை உருவாக்கி உலகுக்கு வழங்கிய ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி எப்போதுமே நான் மிகுந்த ஆர்வத்துடன் யோசிப்பதுண்டு. ஒரு ஆப்பிளின் சிறப்புகளை நியூட்டனைவிட அதிகமாக உலகுக்கு விளக்கியவர் ஸ்டீவ் ஜோப்ஸ்!

ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன்புதான். அப்போது எனக்கு கணினிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. அக்காலத்தில் நான் படித்த இந்திய சாமியார்களைப் பற்றியான ஒரு கட்டுரையில், உத்தரப்பிரதேசத்தின் விருந்தாவனப் பகுதியில் வாழ்ந்துவந்த ’வேப்பிலை பாகற்காய் பாபா’ (நீம் கரேலி பாபா) என்கிற சாமியார் 1970களில் அமெரிக்காவில் சில முக்கியச் சீடர்களைக் கொண்டிருந்ததாகவும், ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவிய கணினி விஞ்ஞானி ஸ்டீவ் ஜோப்ஸ்கூட சிலகாலம் அவரது சீடனாக இருந்ததாகவும் படித்தேன்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு விஞ்ஞானமுமில்லாத நானே பதினைந்து வயதிலிருந்து மனிதக் கடவுளர்களுக்கும் போலிச் சாமியார்களுக்கும் எதிராக பேசியும் செயல்பட்டும் வந்திருக்கிறேன்! ஒரு உண்மையான விஞ்ஞானியால் எப்படித்தான் ஒரு சாமியாரின் அடிவருடியாக இருக்க முடியும்? அந்த கேள்வி என்னை ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி தேடவும் படிக்கவும் வைத்தது. உண்மையில் ஸ்டீவ் ஜோப்ஸ் எந்த ஒரு சாமியாருக்குமே சீடனாகவெல்லாம் இருந்ததேயில்லை.

1973ல் வெறும் 18 வயது மட்டுமே இருந்த ஸ்டீவ் இந்தியா வந்திருக்கிறார். அப்போது வேப்பிலை பாகற்காய் பாபாவுக்கு அமெரிக்காவிலிருந்த புகழை மனதில் வைத்துக்கொண்டு அவரை சந்திக்க விரும்பி விருந்தாவனம் சென்றிருக்கிறார். ஆனால் வருங்கால உலகின் மிக முக்கியமான விஞ்ஞானி தன்னைத்தேடி வருவதை தீர்க்கதரிசனம் செய்யமுடியாமல்போன வேப்பிலை பாபா, ஸ்டீவ் வருவதன் முன்னரே இறந்துபோனார்! கொஞ்சகாலம் இந்தியாவில் அலைந்து திரிந்த ஸ்டீவ் இந்திய சாமியார்களின்மேல் மிகுந்த வெறுப்புடனும் ஆனால் புத்தரின் தத்துவங்களின்மேல் ஆழ்ந்த ஈர்ப்புடனும்தான் அமெரிக்கா திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் விஞ்ஞானியானதும் ஆப்பிளை நிறுவியதுமெல்லாம் அதற்கும் பல ஆண்டுகளுக்கு பின்புதான்.

ஸ்டீவைப்போல் தான் வாழ்ந்த உலகத்தை என்றென்றைக்குமாக மாற்றியமைத்தவர்கள் மிகக்குறைவே. புவிமண்டலத்தின் காந்த ஈர்ப்புத்தன்மையை கண்டுபிடித்த ஐசச் நியூட்டனுக்கும், மின்சாரம், மின்விளக்கு, ஒலிப்பதிவு போன்றவற்றை கண்டுபிடித்த தோமஸ் ஆல்வா எடிசனுக்கும், தானியங்கி வாகனங்களை கண்டுபிடித்த ஹென்றி ஃபோர்டுக்கும் நிகரானவராக இன்றைய உலகம் போற்றும் ஸ்டீவ் ஜோப்ஸ் ஞானமும் விஞ்ஞானமும் அசாத்தியமான அறிவும் ஆற்றலும் படைத்திருந்த ஒரு மனித அதிசயம். அவரது வாழ்க்கையையும் செயல்களையும்விட ஆச்சரியகரமான ஒன்று நம் காலகட்டத்தில் நிகழ்ந்ததில்லை என்றே நினைக்கிறேன்.

முதலில் ஒரு பெரிய கட்டடத்தின் பரப்பளவுடனும் பின்னர் ஒரு பெரிய அறையின் பரப்பளவுடனும் ருந்த கணினி என்கிற ராட்சஸ இயந்திரத்தை உலகில் ஒவ்வொருத்தராலும் மடியில்வைத்து பயன்படுத்தக்கூடிய ஒன்றாக்கி மாற்றியது மட்டுமல்ல ஸ்டீவின் சாதனை. சாமர்த்தியமான அலைபேசிகள், இசை கேட்கும் கைக் கருவிகள், திரையில் தொட்டு இயக்கும் மின்கருவிகள் போன்றவற்றையெல்லாம் இன்று நாம் பயன்படுத்தும் வடிவத்தில் உலகுக்கு வழங்கியவர் அவர் தான். ஆயிரக்கணக்கான பக்கங்களில்கூட எழுதி முடிக்கமுடியாத அவரது ஆளுமையையும் சாதனைகளையும் மிகவித்தியாசமான அவரது வாழ்க்கையையும் சுருக்கமாக எட்டிப்பார்ப்போம்.

1955ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாப் பகுதியில் ஒரு கல்லூரி மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட உடலிச்சையின் பக்கவிளைவாக பிறந்தவர் அவர். அவர்களுக்கு முற்றிலுமாகத் தேவையற்ற ஒரு பொருளாகக் கிடந்த அக்குழந்தையை பால் ஜோப்ஸ் மற்றும் க்ளாரா ஜோப்ஸ் தம்பதியினர் தங்கள் குழந்தையாக ஏற்றெடுத்தனர். ஸ்டீவன் பால் ஜோப்ஸ் என்று பெயர் வைத்தனர். அவர்கள் அக்குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர். முழுசுதந்திரத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கி அளித்தனர்.

ஸ்டீவ் ஒருபோதும் பள்ளிப்படிப்பில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறவேயில்லை. உயர்ந்த மதிப்பெண்கள் எடுக்காத ஒருவனை மாணவனாகவே எற்றுக்கொள்ளாத உலகம் நம்முடையது! அதுமட்டுமல்லாமல் ஸ்டீவுக்கு எழுத்துக்களை தப்பாகப் புரிந்துகொள்ளும் டிஸ்லெக்ஸியா (Dyslexia) என்கிற மூளைச்சிக்கலும் இருந்தது. ஐன்ஸ்டீன், கிரகாம் பெல், ஹென்றி ஃபோர்ட் போன்ற உச்சபட்ச விஞ்ஞானிகளுக்கும் இருந்திருக்கிறது அச்சிக்கல்! ஆனால் அறிவியல் விஷயங்களில் மிகுந்த நாட்டமிருந்த ஸ்டீவுக்காக தங்களது வீட்டின் அடித்தளத்தில் ஒரு அறிவியல் சோதனைக் கூடத்தையே அமைத்து கொடுத்தனர் அவரது தாய் தந்தையர்கள். தங்களது மகன் ஒரு மகா அறிவாளி என்பதை அவனது சின்ன வயதிலேயே அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர்.

தனது 12 வயதில் முதன்முதலில் ஒரு பெரிய கணினியையும் அதன் செயல்திறனையும் பார்த்து வியந்துபோன ஸ்டீவ் அத்தகைய ஒன்றை வாங்கி பிரித்து பார்த்து ஆராய ஆசைப்பட்டார். பள்ளிப்படிப்பை ஒருவழியாக முடித்த அவர் தொலைதூர நகரமான ஒரீகனுக்குச் சென்று அங்குள்ள ரீட்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பாடவேளைகளை அலட்சியப்படுத்தி பெரும்பாலான வகுப்பறைகளுக்குள்ளேயே ஏறாமல் திரிந்த ஸ்டீவை விரைவில் அக்கல்லூரியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால் அவரோ அங்கிருந்துபோகாமல் தனக்கு பிடித்த வகுப்புகளில் மட்டும் சென்று அமர்ந்து பாடங்களை கவனித்துவந்தார்.

முறைப்படியான கல்வியை உதறியதில் கோபமடைந்த அவரது தாய் தந்தையினர் வழங்கும் பண உதவிகளை இனிமேல் வாங்கவேண்டாம் என்று முடிவெடுத்த ஸ்டீவ் பழைய பீர் மற்றும் கொக்க கோலா புட்டிகளை சேகரித்து அதை விற்றுக் கிடைக்கும் சொற்பமான பணத்தில்தான் க்காலகட்டத்தில் வாழ்ந்தார். ஒரீகன் அமெரிக்காவிலுள்ள இந்திய ஆன்மீகத்தின் தலைநகரமாகத்தான் அப்போது இருந்தது. ஓஷோ எனும் ரஜ்னீஷ், ஹரே கிருஷ்ணா அமைப்பு போன்றவற்றுக்கு அங்கு பெரும் ஆசிரமங்களும் கோவில்களும் இருந்தன. அங்குள்ள ஹரே கிரூஷ்ணா கோவிலில் தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் இருந்தது. ஒருமுறை அதைச் சாப்பிட நேர்ந்த ஸ்டீவ் அந்த இந்திய சைவ உணவை தனக்குப் பழக்கமான அமெரிக்க அசைவ உணவை விட சுவையானதாகவும் தூய்மையானதாகவும் உணர்ந்தார். பின்னர் தினமும் வெகுதூரம் நடந்து அக்கோவிலுக்குப்போய் அதைசாப்பிட ஆரம்பித்தார். அத்துடன் மாமிசத்தை முற்றிலுமாகத் தவிர்த்தும் மிகக்குறைவாக மீன், முட்டை, பால் போன்றவை சாப்பிட்டும் கிட்டத்தட்ட சைவமாகவே மாறினார் ஸ்டீவ். இந்தியா மேலான அவரது மோகத்தை ஊக்குவித்தது இந்நிகழ்சிகள்தான்.

குழந்தைகளுக்காக மின்னணு விளையாட்டுச் சாதனங்களை தயாரிக்கும் அட்டாரி எனும் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அதிலிருந்து சேமித்த சொற்ப பணத்தை வைத்துதான் தன் கல்லூரி நண்பருடன் ஒரு ஹிப்பியாக அவர் இந்தியா வந்தார். பலவகை போதைப்பொருட்களை அவர் பழகிய காலமும் அதுவே. அந்தகாலத்தைய தன் வாழ்க்கையில் தான் உருப்படியாகச் செய்த ஒரே விஷயம் எல்.எஸ்.டி எனும் போதைப்பொருளை உட்கொண்டதுதான் என்று ஒருமுறை ஸ்டீவ் சொல்லியிருக்கிறார்.

மனித மூளையில் புகுந்து மாற்று சிந்தனைத்திறன், கண்மூடினாலும் காணும் காட்சிகள், மதிமயக்கம், காலத்தையும் நேரத்தையும் பற்றியான மாற்று எண்ணங்கள் போன்றவை அளிக்கக்கூடிய அந்த லைசேர்ஜிக் ஆசிட் தான் அக்காலத்தின் பல இந்தியச் சாமியார்களுக்கும் ’ஞான திருஷ்டி’யை உருவாக்கிது! பௌத்த மதத்தின் சிந்தனைகளை உள்வாங்கி, தலை மழித்து இந்திய உடையில்தான் ஸ்டீவ் இங்கிருந்து மெரிக்கா திரும்பினார். ஆனால் விரைவில் ஸ்டீவ் மீண்டும் தனது அறிவியல் சோதனை கூடத்திற்குள் வாழ ஆரம்பித்தார்.

மின் இயந்திரங்களை பிரித்தெடுத்து மீண்டும் பொருத்தி அவற்றை வினோதமான வேலைகளுக்குப் பயன்படுத்துவதில் திறமைவாய்ந்தவராக இருந்த வோஸ்னிக் எனும் நண்பருடன் இணைந்து 1976ல் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார் ஸ்டீவ். முதலில் ஸ்டீவின் அப்பாவின் பழைய வாகனக் கொட்டகைதான் அவர்களது பட்டறையாக இருந்தது. அங்குதான் உலகத் தனிநபர் கணினிகளின் மூலமாதிரிகள் உருவானது. ஆப்பிள்1 உலகின் கவனத்தைக் கவர்ந்தது. ஆப்பிள் 2 வணிகவெற்றியும் பெற்றது. பின்னர் நிகழ்ந்தது உலகின் தலையெழுத்தையே மாற்றியமைத்த கணினி உலக வரலாறு.

பெரும் வெற்றிகளை அடையப்போகும் தனது நிறுவனத்தை உலக அளவுக்கு எடுத்துச்செல்ல பெரும் பணமும் வணிகநுட்பங்கள் தெரிந்த பெரும் கைகளும் தேவை என்று உணர்ந்த ஸ்டீவ் பெப்ஸி கோலா நிறுவனத்தின் அப்போதைய தலைவராகயிருந்த ஜான் ஸ்கல்லியை சந்தித்தார். வெறும் சக்கரைத் தண்ணியை விற்று உலகை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு தன்னுடன் இணைந்து வரும்கால உலகை வடிவமைக்க வாருங்கள் என்று சொல்லி ஜான் ஸ்கல்லியை ஆப்பிளின் வணிகத்துறை மேல் அதிகாரியாக கொண்டுவந்தார் ஸ்டீவ். ஸ்டீவ் உருவாக்கி ஆப்பிள் லிஸா போன்ற பல புதிய தயாரிப்புகளுடன் ஆப்பிள் ஒரு வெற்றிபெற்ற நிறுவனமாக மாறியது.

தேகாலகட்டத்தில் ஸ்டீவின் பல கண்டுபிடிப்புகளை நகலெடுத்து, அவற்றிலிருந்து வின்டோஸை உருவாக்கி உலகம் முழுவதும் மலிவுவிலையில் பரப்பி பெரும் வணிக வெற்றியை அடைந்தார் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ். யார் வேண்டுமானாலும் நகலெடுக்கக் கூடிய முறையில் அமைத்திருந்ததனால் வின்டோஸ் வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் தரமான ஸ்டீவின் படைப்புகள் அந்த அளவில் மக்களால் ஏற்கப்படவில்லை. அத்துடன் தான் ரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கி தனது கனவு நிறுவனத்திலிருந்து ஸ்டீவை விரைவில் வெளியேற்றினார் அந்த முன்னாள் சக்கரைத் தண்ணி வியாபாரி! ஒரு தந்திரமான வியாபாரிக்குமுன் ஒரு உண்மையான படைப்பாளி, விஞ்ஞானி தாற்காலிகமாக தோற்றுப்போனார். இதையெல்லாம் பற்றி பின்னர் சொல்லும்போது “சிலநேரம் வாழ்க்கை நம்மை பின்னிருந்து ஒரு பெரிய செங்கல்லால் அடித்து கீழே விழவைக்கும். நாம் அதனால் இறந்து போகப் போவதில்லை. நம்பிக்கை இழக்கக்கூடாது. பசியுடன் இருங்கள். முட்டாள்களாக இருங்கள்”என்று கூறினார் ஸ்டீவ்!

அதன்பின் தன்னால் ஆப்பிளை போன்ற பல நிறுவனங்களையும் வெற்றிகளையும் உருவாக்க முடியும் என்று மறுபடியும் நிரூபித்தார் ஸ்டீவ். அமெரிக்காவில் புகழ்பெற்ற நெக்ஸ்ட் எனும் தனிநபர் கணினி மற்றும் மென்பொருள் நிறுவனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். பிரபல திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸின் லூக்காஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அதை பிக்சார் எனும் கணினி வரைகலைத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். அங்கு அவர் எடுத்த டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ போன்ற திரைப்படங்கள் இன்றுவரை உலகின் மிக அதிகமான வருவாயை குவித்த கணினி வரைகலைத் திரைப்படங்கள். அந்நிறுவனத்தை பின்னர் பலகோடி டாளர்களுக்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்றதன் வழியாக உலகத்தின் மிகப்பெரிய கேளிக்கை நிறுவனங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னியின் பாதி உரிமையாளராக மாறினார் ஸ்டீவ் ஜோப்ஸ்.

ஆப்பிளிலிருந்து வெளியேற்றப்பட்டு பத்தாண்டுகளுக்கு பின்னர் அந்நிறுவனத்தின் அப்போதைய தலைவர்கள் ஸ்டீவிடம் மன்றாடி மறுபடியும் அவரை ஆப்பிளுக்கு கொண்டுவந்தனர்! ஸ்டீவ் கேட்ட விலைக்கு அவரது நிறுவனமான நெக்ஸ்ட் கணினிகளை ஆப்பிள் வாங்கிதன் வழியாகத்தான் அது நடந்தது. ஆப்பிளின் துணை மேலாளராக உள்ளே வந்த ஸ்டீவ் சிலமாதங்களில் மறுபடியும் அதன் முக்கிய உரிமையாளராக மாறினார். ’ஐ’ எனும் பெயருடன் ஆரம்பிக்கும் படைப்புகளின் யுகம் அங்கிருந்து ஆரம்பித்தது. ஐ மாக், ஐ போட், ஐ ஃபோன், ஐ பாட் போன்றவற்றின் வழியாக அவர் ஒரு ஐ காட் (I God) ஆகவே மாறினார். உலகப்பொருளாதார நெருக்கடியின்போது கூட அவரது நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டியது! பின்னர் மைக்ரோஸாஃப்டின் பில் கேட்ஸையும்கூட விற்பனையில் வெகுதூரம் அவர் தாண்டிச்சென்றார். அமேரிகாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அவர் மாறினார்.

ஸ்டீவ் ஜோப்ஸ் ஒரு தீவிர இசை ரசிகர். அமெரிக்க பாப் இசையின் பொற்காலத்தில் பிறந்து வளர்ந்தவர். பாப், ராக் அண்ட் ரோல், கண்ட்ரி போன்ற இசை வடிவங்களில் அதீத நாட்டம் இருந்தவர். இசை கேட்பதன் மீதிருந்த தீவிர ஆர்வம்தான் ஐ போட், ஐ டச் போன்ற இசை கேட்கும் கைக்கணினிகளை உருவாக்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது. உண்மையில் ஐ போட் தான் ஆப்பிளின் தலையெழுத்தையே மாற்றி அதை உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மின்னணு கேளிக்கை கருவிகள் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமாக ஸ்தாபித்தது.

பீட்டில்ஸ் இசைக்குழு அவரது ஆதர்சமாகயிருந்தது. அதன் இசை மட்டுமல்லாமல் அதன் பெரும் வெற்றிபெற்ற உலகச்சந்தை அமைப்பும் ஸ்டீவுக்கு பெரும் உத்வேகமளித்திருந்தது. அவரது ஆதர்ச பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் பாடகரும் பாப் டிலன் தான். பாப் டிலனின் காதலியும் சகப்பாடகியுமாக பலகாலம் இருந்தார் என்கிற ஒரே காரணத்தினால் தன்னைவிட பதினைந்து வயது அதிகமான ஜோவான் பைஸ் (Joan Baez) என்கிற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியை காதலித்தார் ஸ்டீவ் ஜோப்ஸ்! தன்னைவிட பத்து வயது அதிகமான உலகப்புகழ்பெற்ற திரைநடிகையும் பாடகியுமான டயானே கீட்டனை (Diane Keaton) அவர் காதலித்ததும் இசைசார்ந்த காரணங்களால்தான்.

ஸ்டீவுக்கு 23 வயது இருந்தபோது க்ரிஸ் ஆன் என்கிற பெண்ணிடம் ஏற்பட்ட காதலில் அவருக்கு லிஸா என்கிற பெண்குழந்தை பிறந்தது. க்ரிஸ் ஆனை அவர் திருமணம் செய்யவில்லை என்றாலும் தன் மகள் லிஸாவை தன்னுடன் வைத்து வளர்த்து ஆளாக்கினார் ஸ்டீவ். தனது மூன்றாவது படைப்பான கணினிக்கு அவர் வைத்ததே தன் மகளின் பெயரான ‘லிஸாஎன்றுதான். இன்றைக்கு லிஸா ஒரு வெற்றிபெற்ற அமெரிக்க பத்திரிகை எழுத்தாளர்.

லாரென் பவல் என்கிற பெண்ணைத்தான் ஸ்டீவ் திருமணம் செய்தார். அத்திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஏறத்தாழ 45 வயது இருக்கும்போது ஸ்டீவுக்கு மோசமான மண்ணீரல் புற்றுநோய் பிடிபட்டது. அதிலிருந்து தப்பிக்க ஆயுர்வேதம் முதல் ஈரல் மாற்றும் அறுவை சிகிட்சை வரை எல்லாமே முயன்று பார்த்தார். அவரது வாழ்க்கையின் நாட்களைக் கொஞ்சம் அதிகரிக்க மட்டும்தான் அம்முயர்ச்சிகளால் முடிந்தது. இளமையில் ஒரு திரையுலக உச்சநட்சத்திரத்தைவிட அழகானவராகயிருந்த ஸ்டீவ், அந்த நோயின் காரணமாக முற்றிலுமாக இளைத்துப்போய் தனது ஐம்பது வயதிலேயே ஒரு முதியவரின் தோற்றத்துடன் வாழநேர்ந்தது.

எந்தகணமும் வந்துசேரப் போகும் தனது மரணத்தை கண்முன் பார்த்துக்கொண்டே பல ஆண்டுகள் வாழ்ந்தார் ஸ்டீவ். ஆனால் அவர் மரணத்தை பயப்படவில்லை. அவர் சொன்னார் “நான் கூடிய சீக்கிரம் இறந்துபோய்விடுவேன் என்று தெரிவதுதான் எனது பெரிய பலம். ஏனெனில் எல்லா எதிர்பார்ப்புகளும், எல்லா தற்பெருமைகளும், தோல்வியைப் பற்றியான எல்லா பதற்றங்களும் மரணத்தின் முன் இல்லாமலாகி விடுகிறது. இனி இழப்பதற்கு எதுவுமேயில்லை. என் இதயத்தை மட்டுமே இனி நான் பின்தொடரலாம்”.

யாருக்குமே தேவையில்லாத ஒருவராகப் பிறந்து, ஒன்றுமின்மையிலிருந்து ஒரு பேருலகத்தையே உருவாக்கி, உலகுக்கு மிகத்தேவையான மிகக்குறைந்த மனிதர்களில் ஒருவராக வாழ்ந்த ஸ்டீவ் ஜோப்ஸ் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி இறந்து போனார். எதிர்காலம் என்று மட்டுமே எப்போதும் முழங்கிக் கொண்டிருந்த ஸ்டீவ் கடைசியில் கடந்தகாலமாகிவிட்டார். ஆனால் அவர் வழியாக உலகின் பலகோடி மக்கள் வரப்போகும் தங்களது எதிர்காலத்தைப்பற்றி நினைத்து புன்னகைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.