” பி பி ஸ்ரீநிவாஸின் பாடும்முறையில் சில சமயம்
ஒரு இயந்திரத் தன்மை இருந்தது என்று ’பி பி ஸ்ரீநிவாஸ் - கடந்த காலங்களின் இசை வசந்தம்’ என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியிருந்தீங்களே! உங்களது அந்தக் கட்டுரையே
இயந்திரத் தனமானதாச்சே!” என்று என்னை கடுமையாக விமரிசித்தார்
இந்தியாவின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர் ஒருவர். அவரது விமரிசனம்
நியாயமானது தான். ஏன் என்றால் அவர் ஒரு அதி தீவிர பி பி எஸ் ரசிகர்.
பி.பி.ஸ்ரீனிவாஸ்
பாடிய பல பாடல்கள் அழியாத உணர்வாக என்றென்றும் நமது நினைவில் நிற்கக் கூடியவை.
அவரது குரலும் பாடும் பாணியும் நமது இசையனுபவத்தின் நீங்காத பகுதிகள். அரிதான
குரலுக்கு சொந்தக்காரராகயிருந்தும் ஓங்கும் குரல் வெளிப்பாட்டை விட சின்னஞ்சிறிய
இசை நுணுக்கங்களுக்கும் விவரணைகளுக்கும்
முக்கியத்துவம் அளித்து பாடியவர். 1950களில் இருந்து 1970கள் வரை தென்னிந்திய திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக
இருந்த பி.பி.எஸ் நமது திரையிசைப் பொற்காலத்தின் தவிர்க்க முடியாத பாடகர்.
கர்நாடக இசை
வியாபித்திருந்த குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தாலும் இந்தித் திரைப் பாடல்களில்
ஈடுபாடு கொண்டவராக இருந்தவர் பி பி எஸ். அவற்றிலிருந்து பெற்ற தாக்கமே அவரது பாடும்முறை.
பெரிதான இசைப் பயிற்சி எதுவுமே அவருக்கு இருந்ததில்லை என்றபோதிலும் "ஸ்வரங்களைப் பற்றி அவருக்கிருந்த ஞானமே பி பி
எஸ்ஸின் பலம்" என்று எம்.எஸ்.விஸ்வநாதன் குறிப்பிட்டிருக்கிறார். மெட்டையும்
பாடல் வரிகளையும் கேட்ட உடனே அவரால் திரும்பப் பாடமுடியும் என்றும் தனித்துவமான அவரது
தொனியும் சிறப்பான குரலும் பாடலுடன் எளிதில் கலந்து விட்டன என்றும் எம் எஸ் வி
கூறியிருக்கிறார்.
இந்தியில்தான் பி பி எஸின் ஆரம்பகாலப்
பாடல்கள் பல வெளிவந்தன. இந்தி மொழியுடன் பிணைப்பில்லாத ஆந்திரப் பிரதேசத்தின்
பகுதியிலிருந்து வந்திருந்தாலும் பி பி எஸின் இந்தி உச்சரிப்பு சிறப்பானது. மொழிகள்
அவருக்கு கைவந்த கலை! எட்டு மொழிகளில் புலமையிருந்தது அவருக்கு. தனது திரையிசை
வாழ்க்கையின் முதல் ஆண்டிலேயே தமிழிலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் வெளியான ஒரு படத்தில்
இரண்டு தனிப் பாடல்களை பாடி அதன் மூலம் இந்த மூன்று மொழிகளிலும் பின்னணிப் பாடகரின்
முக்கிய இடத்தைப் பெற்றவர் பி பி எஸ். மலையாளத்திலும் விரைவிலேயே தனக்கான இடத்தை
உருவாக்கினார். யேசுதாஸின் வருகை வரைக்கும் அங்கு ஒரு நட்சத்திரப் பாடகராகவே
விளங்கினார் பி பி எஸ்.
தனது தாய்மொழியான
தெலுங்கில் பி பி எஸுக்கு குறைவான பாடல்களே கிடைத்தன. ஆனால் கன்னட சினிமாவின்
எக்காலத்திற்குமுரிய உச்ச நட்சத்திரம் ராஜ்குமாரின் பாடும் குரலாக
தேர்ந்தெடுக்கப்பட்ட பி பி எஸ் கன்னட சினிமாவின் மிக முக்கியமான பாடகராக மாறினார்.
கன்னடத்தில் மட்டுமேதான் ஒரு உச்சநட்சத்திரப் பாடகராக பி பி எஸ்
அங்கீகரிக்கப்பட்டார். தனது படத்தின் பாடல்களை ராஜ்குமார் சொந்தமாகப்
பாடத்தொடங்கிய காலம் வரைக்கும் அது நீடித்தது. ராஜ்குமாருக்காக மட்டுமே ஏறத்தாழ
இருநூறு படங்களில் பாடியிருக்கிறார் பி பி எஸ்! தமிழில் பெரும் வெற்றிபெற்ற
நூற்றுக்கணக்கான பாடல்களை அவர் பாடியிருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இசைத்தரம்
வாய்ந்த, அழகான பாடல்கள் அவருக்கு அதிகமாகக் வழங்கப்பட்டது தமிழில்தான்.
உணர்ச்சிகளின்
உச்சங்களை அடைவதை விட சங்கதிகளை கச்சிதமாகவும் மென்மையாகவும் பாடுவதில் கவனம்
செலுத்தியவர் பி பி எஸ். ஆனால் தனக்கு இயல்பாக வராத உணர்ச்சிகளைப் பாட ஒருபோதும் அவர்
ஒருபோதும் போலியாக எத்தனித்ததில்லை. பி பி எஸின் பாடல்கள் நம்மை பரவச உணர்வின்
உச்சிக்குக் கொண்டு செல்லாமல் போகலாம் என்றாலும் மனித வாழ்வின் அமைதியான, மென்மையான பல தருணங்களை தொட்டுச் செல்பவை அப்பாடல்கள்.
1970 களின் இறுதியிலேயே பி பி எஸ்ஸின் திரையிசை
வாழ்வு முடிந்து போனது. பாடும் வாய்ப்புக்கள் குறைந்துபோன பின் தன்னை ஒரு பன்மொழிக்
கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் முன்வைத்து வந்தார் பி பி எஸ். ஆனால் அதில் சொல்லும்படியான
வாய்ப்புகள் எதுவும் அவருக்கு கிடைத்ததாக தெரியவில்லை. தனக்காக மட்டுமே அவர்
விடாமல் எழுதி வந்தார் என்றே படுகிறது.
அவருடைய கலைச்சேவையைப் பாராட்டி கர்நாடக அரசு
அவருக்கு பெங்களூரில் இரண்டாயிரத்தி ஐநூறு சதுர அடி நிலத்தைப் பரிசளித்தது. பி பி
எஸ்ஸின் ஆயுட்காலத்திலேயே அவருக்கு கிடைத்த தலைசிறந்த அங்கீகாரம் அதுவாகத் தான்
இருக்கக் கூடும்! அதை வழங்கும்போது "இது மிக மிக தாமதமாக வழங்கப்படுகிறது, எனினும் ஒருபோதும் வழங்கப்படாமலே இருப்பதற்கு
தாமதாயினும் சிறந்தது" என்று கர்நாடக முதலமைச்சர் வருத்தத்துடன்
குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசோ அவருக்கு கலைமாமணி விருதையும் ஒரு முறை இயல் இசை
நாடக மன்ற தலைவர் பதவியையும் மட்டுமே வழங்கியது.
பி பி எஸுக்கு அவரது தகுதிக்கோ சாதனைகளுக்கோ
ஏற்ற எந்தவொரு விருதுமே கிடைத்ததில்லை என்றே சொல்வேன். மாநில அரசுகளோ மத்திய அரசோ பிரதானமான
எந்த விருதையும் அவருக்கு வழங்கவில்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்றவை போகட்டும் பிரபலமான எந்தவொரு தனியார் விருதுக்கும் கூட அவர்
பரிந்துரைக்கப்படவில்லை! யாரென்றே தெரியாதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கும்
பல்வேறு பல்கலைக் கழகங்களும் பி பி எஸ்ஸை பொருட்படுத்தவில்லை.
ஒரு பாடல் தனக்கு மிகவும் பிடித்திருந்தால்
அப்பாடகரின் வீட்டுக்கே சென்று அவரை பாராட்டும் குணம் படைத்திருந்த பி பி எஸ், எவ்வித
அழைப்பும் இல்லாமலேயே சென்னையில் நிகழ்ந்துவந்த பல மேடை இசை நிகழ்ச்சிகளுக்கு சாதாரண
பார்வையாளனாகச் சென்று கலைஞர்களைப் பாராட்டிக்கொண்டேயிருந்தவர்! தமிழ் திரை
இசையில் மட்டுமே இதுவரைக்கும் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடகர்கள்
தோன்றியிருக்கிறார்கள் என்று அறியும்போதாவது பி பி ஸ்ரீநிவாஸின் முக்கியத்துவம் என்னவென்று
நமக்கு விளங்குமா? விளங்கினாலும் இனிமேல் என்ன பயன்? ஒரு பாடலில் அவர் பாடியதுபோல்
இனிமேல் ஒரு
பிறப்பு உண்டோ?
இனிமேல் ஒரு
இறப்பு உண்டோ?