20141125

கார்காலம்

புறவழிச்சாலைகளில் நெருக்கியடிக்கும் போக்குவரத்தினூடாக சென்னை மாநகரிலிருந்து வெளியேறுவதும் திரும்பி வருவதும் இன்று மிகவும் சிரமமாகி விட்டிருக்கிறது. திருச்சி நெடுஞ்சாலையில் அசுரவேகத்தில் பாய்ந்துவரும் கார்கள் கூடுவாஞ்சேரி தாண்டும்முன் உலோக நத்தைகளாக மாறி வண்டலூரில் வந்து உறைந்து கிடக்கின்றன. பெங்களூர் நெடும்பாதையில் ஸ்ரீபெரும்புதூரைத் தாண்டுவதற்கே போதுமென்றாகி விடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் அப்பாதையில் நெரிசலான போக்குவரத்தையும் கரடுமுரடான சாலையையும் குறைசொல்லி காரை நகர்த்திக்கொண்டிருந்தார் எனது ஓட்டுர்.

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் மாமிசத் துண்டுகளாக சிதறிக்கிடந்த ராஜீவ் காந்தியின் புகைப்படம் பார்த்த நினைவு தரும் அமைதியின்மை காரணமாக எப்போதுமே இந்த ஓரிடத்தை மட்டும் வேகமாகக் கடந்து செல்ல முயல்வேன். ஆனால் இன்று இங்கு நகரமுடியாமல் தத்தளிக்கின்ற நூற்றுக்கணக்கான கார்களுக்கிடையே சிக்கிக் கிடக்கிறேன்! விதவிதமான பெயர்களில், வண்ணங்களில், வர்த்தக அடையாளங்களில் மொய்க்கும் இந்த கார்களை ராஜீவ் காந்தி நினைவிடத்திலேயே பார்ப்பது ஒரு அதீதக் கற்பிதக் காட்சிபோல் எனக்குத் தோன்றியது. இந்தியச் சாலைகளில் இவ்விதத்தில் எண்ணற்ற கார்களை நிரப்பி விட்டவர் ராஜீவ் காந்தி! அவருக்கு முன்பிருந்த நமது கார் வரலாற்றின் மிகவும் மங்கலான சித்திரங்களுக்குள்ளே எனது மனம் வெறுமெனே ஓடத்துவங்கியது.

உலகில் தானியங்கி வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே இந்தியாவிலும் ஒன்றிரண்டாக வரத் துவங்கியிருந்த கார்களின் பெயர் அப்போது கார் என்று அல்ல. மொபைல்என்று!  ஓல்ட்ஸ் மொபைல் (Olds Mobile) என்று தான் அமேரிக்காவில் சந்தைக்கு வந்த முதல் காரின் பெயரே. நீராவியில் ஓடிய அக்கார்களில் ஒன்றை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் கப்பல் மூழ்கிப் போனதால் அது இந்தியா வந்து சேரவில்லை!

வெள்ளையர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் சீரான சாலைகளை அமைத்தனர். அச்சாலைகளில் பயணிக்க கார்கள் தேவைப்பட்டன. உலகின் முதன்முதல் பிரபல கார் என்றழைக்கப்பட்ட டி ஃபோர்ட் ஐ தயாரித்த அமேரிக்காவின் ஃபோர்ட் நிறுவனம், அதன் உற்பத்தியை நிறுத்தியபோது மீதமிருந்தவற்றை பகுதிகளாக இந்தியாவில் கொண்டுவந்து பொருத்தி விற்க மும்பையில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தது. செவ்ரொலே கார் நிறுவனமும் அதே காலத்தில் மும்பையில் ஆலையைத் தொடங்கியது. ஆனால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்த அந்த ஆலைகள் ஓரிரு ஆண்டுகளிலேயே மூடப்பட்டன.

மோரிஸ் எனும் இங்கிலாந்து காரின் தொழில்நுட்பத்தைக் கடன்வாங்கி அம்பாசடர் காரை இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கினார்கள் பிர்லா குடும்பத்தினர். நாற்பதாண்டுகாலம் இங்கு மிக அதிகமாக விற்கப்பட்ட கார் அம்பாசடர். ஆரம்பத்தில் செல்வத்தின், செல்வாக்கின் அடையாளமாக விளங்கிய அம்பாசடர் பின்னர் அரசு நிர்வாக அதிகாரத்தின் அடையாளமாக மாறியது. காலப்போக்கில் வெறுமொரு வாடகைக் கார் எனும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட அம்பாசடர் கடைசி இருபத்தைந்தாண்டுகளில் மிகவும் சிரமப்பட்டு ஓடி கடந்த மே மாதத்தில் என்றைக்குமாக நின்றுபோனது.

இத்தாலியின் ஃபியட் வழங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வெளிவந்த பிரீமியர் பத்மினி கால்நூற்றாண்டுகாலம் இந்தியாவில் பிரபலமான காராகத் திகழ்ந்தது. பிரீமியர் பத்மினி நிறுத்தப்பட்டு இப்போது பதினைந்து ஆண்டுகள் தாண்டிவிட்டிருக்கிறது. ஆனால் இன்றும் பல்லாயிரக்கணக்கான பத்மினிகள் வாடகை வாகனங்களாக ஓடிக் கொண்டிருக்கின்றன! அவற்றில் பெரும்பாலானவை இருபதாண்டுகளுக்குமேல் பழையவை!

பத்தாண்டுகள் தாண்டிய கார்களைத் தெருக்களில் ஓட்டுவதில் பல சட்ட நிபந்தனைகள் இருந்தாலும் அதையெல்லாம் இங்கு யாருமே கண்டுகொள்வதில்லை என்றே படுகிறது! இருபதாண்டுகளுக்கும் மேல் பழகிய பல்லாயிரக்கணக்கான மஹிந்திரா வேன்கள் சின்னக் குழந்தைகளின் பள்ளி வாகனங்களாக இன்றும் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன நமது நாட்டில்!

அம்பாசடருக்கும் பிரீமியருக்கும் பின்னால் கடைசியில் மாருதி வந்து ஒட்டிக்கொண்டது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கார் என்ற கனவுடனும் சாதாரண மக்களுக்கும் கட்டுப்படியாகும் ஒரு காரைத் தயாரிக்கும் நோக்கத்துடனும் ராஜீவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியின் தலைமையில் தான் மாருதி நிறுவனம் துவங்கப்பட்டது!  ஆனால் பத்தாண்டுகள் கடந்த பின்னரும் மாருதி நகரவேயில்லை!

ஜப்பானியக் கார் நிறுவனமான சுசுக்கியுடன் இணைந்து அவர்களது தொழில்நுட்பத்தில் மாருதி 800 எனும் இந்தியாவின் முதன்முதல் சிறு நகரச் சீருந்து 1983ல் வெளிவந்து பெரும் வெற்றியை அடைந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் உற்பத்தி நிறுத்தப்படும் வரை கிட்டத்தட்ட 30 லட்சம் மாருதி 800கள் விற்கப்பட்டன! முதலில் இந்திய அரசு நிறுவனமாகயிருந்த மாருதி இன்று முற்றிலுமாக சுசுக்கியின் உடமை! மாருதி என்ற பெயருக்கு இருக்கும் வணிகரீதியான சாத்தியத்தினால் அந்தப் பெயரை மட்டும் இன்றும் பயன்படுத்துகிறார்கள்.

1986ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஆரம்பித்து வைத்த தில்லி வாகனக் கண்காட்சி தான் இந்தியாவில் இன்று நாம் காணும் அனைத்து நவீனக் கார் ரகங்களும் வந்திறங்கிய வழி! அந்தக் கண்காட்சிக்கு உலகின் பல முக்கிய கார் உற்பத்தி நிறுவனங்களை அழைத்து வந்து, அவர்களது தொழிற்சாலகளை அமைப்பதற்கான சூழ்நிலையை இங்கு உருவாக்கிக் கொடுத்தது ராஜீவ் காந்தியின் தலைமையிலான அரசு. இந்தியவின் கார்காலம் முற்றிலுமாக மாறிவிட்டது அந்த நிகழ்வுடன் தான்.

மூன்று ரகக் கார்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த இந்தியத் தெருக்களில் இன்று ஓடுவது 300க்கும் மேலான கார் ரகங்கள்! ஒவ்வொரு நாளும் 5500க்கும் மேலான கார்கள் நமது தெருக்களில் இறங்கிக்கொண்டிருக்கின்றன!  தொண்ணூறாண்டுகளாக இங்கிலாந்தில் இயங்கிக்கொண்டிருநத, விலை உயர்ந்த கார்களை மட்டுமே தயாரிக்கும் ஜாக்குவார் நிறுவனத்தை சமீபத்தில் மொத்தவிலைக்கு வாங்கியது இந்தியாவின் டாடா நிறுவனம்!

வாகனங்களை உற்பத்தி செய்து விற்கும் வேகத்தில் நமது சாலைகளைப் பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. வந்திறங்கிக்கொண்டேயிருக்கும் லட்சக்கணக்கான வாகனங்களைத் தாங்கும் வலிமை நமது சாலைகளுக்கு இருக்கிறதா? நூறாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் அமைத்த அதே சாலைகள்தான் பலயிடங்களில் இன்றும் இருக்கின்றன!

75 லடசத்திற்குமேல் விலையாகும் தனது ஜாக்குவாரில் பெங்களுரிலிருந்து இப்போது சென்னை வந்துகொண்டிருக்கும் எனது நண்பர் சரத் கூட இந்த நெரிசலில் எங்கேயோ சிக்கியிருப்பாரே! அனைத்துச் சாலைகளிலும் அனுதினம் நெரிசல் அதிகரித்துக்கொண்டே போகிறதே! இது எங்கேபோய் முடியும்? என்றெல்லாம் யோசித்தவண்ணம் நான் வெளியே பார்த்தேன்.

கார் இப்போது வேகமாக ஓடுகிறது! நின்று பாரக்கத் தூண்டும் அழகான கிராமங்கள் பச்சைப் பசேலென இருபுறமும் மின்னி மறைகிறது. வாழ்க்கையும் இப்படித்தானே! மெதுவாகச் செல்லவேண்டும் என்று ஆசைப்படும் இடத்தில் அது வேகமாக ஓடுகிறது. வேகமாகப் போகவேண்டும் என்று நினைக்கும்போது அது நகர்வதேயில்லை. எதுவுமே நினைவில் வைத்துக்கொள்ளாமல் காலம் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது.