20150213

பமேலாவின் குழந்தைகள்


பார்க்காத படத்தின் கதை – 4

பெறுநர்
திரு. இயக்குநர்
ஹாலிவுட்
அமேரிக்கா.

அனுப்புநர்
பமேலா ஜுனேஜா
கல்கத்தா
இந்தியா.

ஐயா, நீங்கள் இயக்கிய சௌண்ட் ஆஃப் ம்யூசிக் படத்தைப் பார்த்து நான் மிகவும் ரசித்தேன். உங்களது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்”. இப்படியொரு கடிதத்தை எழுதி மடித்து அதை உடனடி அஞ்சல் அனுப்பும்படி ராணுவ உயர் அதிகாரியான தனது அப்பாவிற்குக் கட்டளையிட்டாள் ஏழே வயதான அந்தப் பெண் குழந்தை! திரைப்படங்களின் மீதான அவளது பித்து பின்னர் ஒருபோதும் ஓயவில்லை. அவள் நடிகையாகவில்லை. ஆனால் தரமான மூன்று திரைப்படங்களை உருவாக்கிய ஒரு சிறந்த இயக்குநராக மாறினார். அப்பெண்ணின் பெயர் பமேலா ரூக்ஸ்.

பமேலா இயக்கிய முதல் திரைப்படம் ஆங்கில மொழியில் வெளிவந்த செல்வி பியெட்டியின் குழந்தைகள்’ (Miss Beatty’s Children). அது அவரே எழுதிய ஆங்கில நாவலின் திரையாக்கம். சிறந்த புது இயக்குநருக்கும் சிறந்த ஒளிப்பதிவிற்குமான 1992ஆம் ஆண்டின் இரண்டு தேசிய விருதுகள் அப்படத்திற்கு கிடைத்தன. ஏ ஆர் ரஹ்மானின் முதல் தேசிய விருது உட்பட ரோஜா, தேவர் மகன், நீங்க நல்லா இருக்கணும் ஆகிய படங்கள் தமிழுக்குப் பல தேசிய விருதுகளை வாங்கித் தந்த ஆண்டு அது. பமேலா ரூக்ஸின் படத்திற்கும் தமிழுடன் நேரடித் தொடர்பிருந்தது. முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் நடக்கும் கதை அது. படத்தின் கணிசமான வசனங்கள் தமிழில் அமைந்தவை.

வெள்ளையர்களின் ஆட்சிக்காலம். ஜெயின் பியெட்டி எனும் இங்கிலாந்து இளம் பெண் திருப்பாவூர் எனும் தமிழ் ஊருக்கு வருகிறார். அங்கே ஏழைப் பெண் குழந்தைகளை ஏழு வயதாகும் முன்னே கோவில்களுக்கு அடிமை வைத்து, பின்னர் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தும் கமலா தேவி என்பவளிடமிருந்து அக்குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார் செல்வி பியெட்டி. கமலா தேவியிடம் விற்பனைக்கு வரும் ஒரு பெண் குழந்தையைத் தன் கையிலிருக்கும் எல்லாவற்றையும் விற்று காப்பாற்றுகிறார். அது குழந்தைக் கடத்தலாக சித்தரிக்கப்பட்டு ஊரில் பெரும் பிரச்சினை எழுகிறது.

அக்குழந்தையுடன் பெங்களூருக்குத் தப்பித்து ஓடும் பியெட்டி அங்கே அவளை தத்தெடுக்க யாருமே முன்வராத நிலையில் ஊட்டிக்கு ஓடுகிறார். கைவிடப்பட்ட குழந்தைகளுக்குத் தேவை அனாதை இல்லங்கள் அல்ல உண்மையான குடும்பங்கள் என்று நம்பும் அவர் பல குழந்தைகளைத் தத்தெடுக்கிறார். எண்ணற்ற பொருளாதார, சமூக நெருக்கடிகளுக்கு நடுவே தனது சிறிய வீட்டிலேயே அக்குழந்தைகளுடன் வாழ்கிறார். ஆங்கில வழிமுறைகளை கைவிட்டு இந்திய முறையில் வாழும் அவரை விசித்திர மனநிலை கொண்டவள் என எந்த உதவியும் வழங்காமல் ஆங்கிலச் சமூகம் தனிமைப்படுத்துகிறது.

ஆறேழு குழந்தைகளுடன் சிரமப்பட்டும் பியெட்டிக்கு கடைசியில் அலன் சேன்ட்லெர் எனும் அமேரிக்க மருத்துவர் உதவுகிறார். ஒரே குண இயல்புகள்கொண்ட இருவரும் காதல் வயப்படுகிறார்கள். திருமணம் செய்யவும் மேலும் பல குழந்தைகளைத் தத்தெடுக்கவும் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனால் வேலை விஷயமாகப் வெளிநாட்டிற்குச் செல்லும் அலன் சேன்ட்லெர் திரும்பி வரவில்லை. அங்கே ஒரு விபத்தில் அவர் இறந்துவிடுகிறார். கடும் துயரத்திலும் உடைந்துவிடாமல் தனது குழந்தைகளுக்காக வாழ்கிறார் செல்வி பியெட்டி.

செல்வி பியெட்டியாக நடித்தவர் புகழ் பெற்ற இங்கிலாந்து நடிகை ஜென்னி சீக்ரோவ் (Jenny Seagrove). இப்படத்தில் நடித்த Faith Brooks, D W Moffet போன்றவர்களும் புகழ்பெற்ற ஆங்கில நடிகர்களே. குணா போன்ற படங்கள் வழியாக தமிழில் புகழ்பெற்ற கேரள ஒளிப்பதிவாளர் வேணு படமாக்கிய செல்வி பியெட்டியின் குழந்தைகளுக்கு இசையமைத்தவர் தபலா மேதை ஜாகீர் உசேன். படத்தை பலவீனப் படுத்தும் இசை, காலகட்டத்தையும் உள்ளூர்க் கலாச்சாரத்தையும் சித்தரிப்பதில் நிகழ்ந்த குழப்பங்கள் என சில குறைபாடுகள் இருந்தும் வலுவான கதையினாலும் சிறந்த காட்சியமைப்பினாலும் நம் மனதில் நிற்கும் படம் செல்வி பியெட்டியின் குழந்தைகள்’. பேரார்வம் கொண்ட ஓர் இயக்குநரை படம் முழுவதும் நாம் காணலாம். இப்படம் வழியாக இந்திய மாற்றுச் சினிமாவின் பொருட்படுத்தக் கூடிய ஓர் இயக்குநராக தன்னை வெளிப்படுத்தினார் பமேலா ரூக்ஸ்.

அழகும் அறிவும் துணிவும் கலகலப்பும் ஒருசேரப் பெற்றிருந்தவர் என்று அனைவராலும் சொல்லப்பட்ட பமேலா இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக ஓடிவந்த பஞ்சாபி தாய் தந்தையரின் ஒரே மகள். 1958ல் கல்கத்தாவில் பிறந்தார். காட்சிப்படுத்தல் கலையில் பட்டப்படிப்பு முடித்த பமேலா தில்லியின் TAG நாடகப் பயிற்சி அமைப்பில் நாடகக் கலை பயின்றார். தேசியத் தொலைக்காட்சியில் சமகால விவகாரங்களைப் பற்றிய நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் நிருபருமாக மாறினார். குற்றம் மலிந்த தெருக்களிலும் போருக்கு நிகரான சூழல் நிலவிய இடங்களிலும் தைரியமாகச் சென்று படப்பிடிப்பு நடத்திய இந்தியாவின் முதல் பெண் ஊடகவியலாளர் பமேலா. காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டைகளுக்கு நடுவேயும் பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் மறைவிடங்களிலும் சென்று அவர் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்!

இக்காலத்தில் அவர் கோண்றாட் ரூக்ஸ் (Conrad Rooks) ஐச் சந்தித்தார். ஹெர்மன் ஹெஸ்ஸே (Hermann Hesse) யின் சித்தார்த்தா நாவலை அதே பெயரில் இந்தியாவில் வைத்துத் திரைப்படமாக எடுத்து உலகப்புகழ் பெற்ற அமேரிக்க இயக்குநர் அவர். தனது தொலைக்காட்சி நேர்காணலுக்காக அவரைச் சந்தித்த பமேலாவிற்கு அவர்மேல் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பமேலா ஜுனேஜா பமேலா ரூக்ஸ் ஆக மாறினார். அமேரிக்காவின் ஒரு பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து உலகம் முழுவதும் பயணம் செய்து, ஆழ்ந்த வாசிப்பும் திரைப்படக் கலையைப் பற்றி மாறுபட்ட பார்வைகளும் கொண்டிருந்த கோண்றாட் ரூக்ஸிடமிருந்து எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக்கொண்டார் பமேலா.

அதன்பின் சூழலியல், பெண்ணுரிமை, இந்திய சினிமாவின் புதிய மாற்றங்கள் போன்ற பல விஷயங்களைப் பற்றியான ஆவணப்படங்களை எடுத்தார் பமேலா. கோண்றாட்-பமேலா தம்பதியினருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் விரைவில் இருவரும் மணவிலக்கு வாங்கி வழிபிரிந்தனர். நாவல், கவிதை, திரைக்கதை என எழுத்துலகில் பயணிக்க ஆரம்பித்தார் பமேலா. இக்காலத்தில் அவர் எழுதிய நாவல்தான் Miss Beatty’s Children. பியெட்டியைப் போன்ற ஒருவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட ஒரு பெண் பமேலாவின் பள்ளித்தோழியாக இருந்தாள். அதுதான் நாவலின் தூண்டுதல். அதுவே பமேலாவின் முதல் திரைப்படமானது. பமேலாவின் அடுத்த படம் டிரெய்ன் டு பாகிஸ்தான் (Train to Pakistan).
  
பாகிஸ்தான் பிரிவினை நவீன இந்திய வரலாற்றின் மிகக் கொடூரமான ஒரு பகுதி. அதை மையமாக வைத்து குஷ்வந்த் சிங் எழுதிய ஆங்கில நாவல் டிரெய்ன் டு பாகிஸ்தான். பல மறை புதிர்களை உள்ளடக்கிய அசாத்தியமான ஒரு இலக்கியப் பிரதி அது. அதை ஒரு திரைப்படமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் பல பதிற்றாண்டுகள் வாழ்ந்தார் குஷ்வந்த் சிங். உலக இயக்குநர்களின் இயக்குநரான அகிரா குரொசாவா அதைப் படமாக்க விரும்பினார். பின்னர் சத்யஜித் ரே அதற்கு முயன்றார். மர்ச்சன்ட் ஐவரி நிறுவனம் பெரும் பணம் கொடுத்து அதன் திரைப்பட உரிமையை வாங்கியது. ஆனால் பல பதிற்றாண்டுகள் தாண்டிய பின்னரும் எதுவுமே நடக்கவில்லை! மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிய இடையூறுகளும் தடைகளும் பாகிஸ்தான் போகும் ரயிலைத் தடுத்து நிறுத்தியது!

தனது வாழ்நாளில் அது  திரைப்படமாகப் போவதில்லை என்று சோர்வுற்றுப் போனார் குஷ்வந்த் சிங். ஆனால் தொண்ணூறுகளின் மத்தியில் ஒருநாள் டிரெய்ன் டு பாகிஸ்தான்  படமாக்கும் உரிமை கேட்டு அவர் முன் வந்து நின்றார் பமேலா ரூக்ஸ். “எனது பதினேழாவது வயதில் உங்கள் புத்தகத்தைப் படித்தேன். அது எனது தாய் தந்தையினரின் கதை. எனது கதை. அதை நான் படமாக்கியே தீருவேன்என்றார். பெரும் கைகள் தோற்றுப் போன இடத்தில் பமேலா ரூக்ஸ் வெற்றி கண்டார். பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் வலுவான வசனங்களை உள்ளடக்கித் தானே திரைக்கதையை எழுதி அதைப் படமாக்கினார் பமேலா.

NFDC போன்ற பல அமைப்புகளிலிருந்து பணத்தைத் திரட்டி ஒரு கோடி ரூபாயில் படத்தை முடித்தார். ஆனால் பிராந்திய, மத்திய தணிக்கைக் குழுக்கள் உருவாக்கிய எண்ணற்ற இடையூறுகளினால் சரியான நேரத்தில் படத்தை வெளியிட அவரால் முடியவில்லை. கணக்கற்ற சிக்கல்களுக்கு உள்ளானார். படத்தை வெளியிடாமல் தடுக்க பல அதிகார, அரசியல் மையங்கள் வேலை செய்தன! ஆனால் எளிதில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத பெண்மணி பமேலா. படம் தயாராகி ஓராண்டுகாலம் கடந்த பின்னரும்கூட மும்பாயின் ஓரிரு திரை அரங்குகளில் அதை வெளியிடுவதில் வெற்றி கண்டார்.

எண்ணற்ற வெட்டுக்களுடனும் விளம்பர இடைவெளிகளுடனும் ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டபோதுதான் என்னைப் போன்ற பலர் அப்படத்தைப் பார்த்தனர். ஆனால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது தனது படமல்ல அதன் எலும்புக் கூடு என்று பமேலா சொன்னார். படம் தனக்கு மிகவும் பிடித்துபோனது என்று குஷ்வந்த் சிங் சொல்ல ’நாவலின் ஆசிரியர் என் படத்தைக் குறை சொல்லவில்லை, எனக்கு அது போதும்என்றே சொன்னார் பமேலா! பின்னர் அமேரிக்காவிலும் இலங்கை, ஆஃப்ரிக்க நாடுகளிலும் திரையரங்குகளில் பரவலாகப் படம் வெளியிடப்பட்டது. இங்கிலாந்தின் முக்கியமான சேனல்-4 தொலைக்காட்சி முதன்மைப்படுத்தி அப்படத்தை வெளியிட்டது. உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் படம் பார்வையாளர்களைக் கவர்ந்தது.

பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் மனோ மாஜ்ரா எனும் கற்பனை ஊரில் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததையொட்டி நிகழும் சம்பவங்களைச் சித்தரிக்கும் டிரெய்ன் டு பாகிஸ்தான் படத்தின் கதைச் சுருக்கத்தை நான் இங்கு சொல்லப் போவதில்லை. NFDC வெளியிட்ட தரமான டிவிடி, மொழிபெயர்ந்த வரிகளுடன் இப்போது கிடைக்கிறது. அதை அவசியம் பாருங்கள். அந்த நாவலைபாகிஸ்தான் போகும் ரயில்என்கின்ற தலைப்பில் ராமன் ராஜா தமிழில் மொழிபெயர்த்து கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதை வாங்கிப் படியுங்கள். அந்த நாவலும் திரைப்படமும் ஒவ்வொரு இந்தியனுக்கும் கருத்தளவிலான ஓர் எச்சரிக்கை. நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம்.

டிரெய்ன் டு பாகிஸ்தான் பமேலா ரூக்ஸின் ஆகச் சிறந்த திரைப்படம். தனது முதல் திரைப்படத்தில் இடம்பெற்ற குறைகள் அனைத்தையும் இப்படத்தில் சரிசெய்திருந்தார் அவர். நிர்மல் பாண்டே, மோகன் அகாஷே, ரஜித் கபூர், ஸ்ம்ரிதி மிஷ்ரா, திவ்யா தத்தா போன்றவர்களின் வியப்பூட்டும் நடிப்பு, பல விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர் ஸண்ணி ஜோசஃப் படமாக்கிய நேர்த்தியான காட்சிகள், பஞ்சாபி நாட்டுப்புற இசையுடன் கஸல் இசையும் கலந்து குல்தீப் சிங் உருவாக்கிய மிதமான இசை என அத்தனை சிறப்புகளும் இப்படத்தில் ஒன்றுசேர்ந்தன. ஆனால் சொல்லும்படியான எந்தவொரு விருதுமே இப்படத்திற்குக் கிடைக்கவில்லை!

பஞ்சாபிஹிந்தியில் அல்லாமல் ஆங்கிலத்தில் எடுத்திருந்தால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு படமாக டிரெய்ன் டு பாகிஸ்தான் மாறியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. சில அரசியல் முகாம்களின் சுயநல நோக்கங்கள் தனக்கெதிராக சதி செய்தன என்று பமேலா சொன்னார். டிரெய்ன் டு பாகிஸ்தான் படத்தை இருட்டடிப்பு செய்ததில் இன்றும் முழுமையாக வெளிப்படாத பல அரசியல்கள் இருந்தன என்றே நினைக்கிறேன். ஒருமுறை இதைப்பற்றிச் சொல்லும்போதுஎனக்கிருந்த ஒரே குழந்தையை அவனது அப்பா கொண்டுபோனார். அதன் பின் எனது திரைப்படங்கள்தான் எனது குழந்தைகள். அவற்றை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. கடைசிவரைக்கும் போராடுவேன்என்று சொன்னார் பமேலா.  
 
தனது படம் இந்தியாவில் போதிய அளவில் கவனிக்கப்படவில்லை என்ற மன வருத்தத்துடன் வாழ்ந்துவந்த காலத்தில், பெரும் பணக்காரரும் தொழில் அதிபருமான ரிச்சார்ட் ஹால்கருக்கு (Richard Holkar) பமேலா அறிமுகமானார். அவர் இந்தோர் பகுதியின் குறுநில மன்னராகயிருந்த யசுவந்தராவ் ஹால்கரின் மகன். விரைவில் ரிச்சார்டும் பமேலாவும் காதலர்களாக மாறினர். திருமணம் எனும் சடங்கு சம்பிரதாயம் எதுவுமில்லாமல் சேர்ந்து வாழ அவர்கள் முடிவெடுத்தனர். அழகான ஓர் உறவாக அது மலர்ந்தது. நட்சத்திரத் தங்கும் விடுதிகள், ஆடை உற்பத்தி ஆலைகள், போக்குவரத்து போன்ற ரிச்சார்டின் பலவகையான தொழில் துறைகளைப் பமேலாவின் படைப்பூக்கம் வளமைப்படுத்தியது. கலை, இலக்கியம், திரைப்படம் போன்ற பமேலாவின் செயல்பாடுகளுக்கு ரிச்சார்ட் நிபந்தனைகளற்று உறுதுணையானார்.

ஆணைப் போல் நடனமாடு (Dance like a Man) எனும் படத்தை ஆங்கில மொழியில் இயக்கினார் பமேலா. பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் பரத நாட்டியத்தின்மேல் உயிரையே வைத்திருந்த ஒரு கலைஞனின் கதை. சிறந்த பரத நாட்டியக் கலைஞரான தனது மனைவியைவிட உயர்ந்த நடனக்காரர் ஆகவேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் குடும்பமும் சமூகமும் அவரை ஆணும் பெண்ணுமற்ற இரண்டுங்கெட்டான் எனக் கீழ்த்தரமாக முத்திரை குத்துகிறது. அதை ஓர் அவமானமாக நினைத்து அவர் நடனத்தை விட்டு விலகி குடிபோதையில் சரணடைகிறார். நடனத்தை மட்டுமே விரும்பும் அவரது மகளின் மணவாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
    
சென்னையில் படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் தென்னிந்திய நடிகை சோபனா, சிதார் மேதை ரவிஷங்கரின் மகள் அனௌஷ்கா, ஆரிஃப் ஜகாரியா, மோகன் அகாஷே போன்றவர்கள் நடித்தனர். இசையை கர்நாடக வயலின் இசை மேதைகளான கணேஷ்-குமரேஷ் அமைத்தனர். பரத நாட்டியத்தை மையமாக வைத்து இந்தியாவில் வெளிவந்த ஒரே ஆங்கிலத் திரைப்படம் இது. சிறந்த ஆங்கில மொழிப்படத்திற்கான 2005ன் தேசிய விருது இப்படத்திற்குக் கிடைத்தது. உயர்வான பல கலை அம்சங்கள் கொண்ட தன் படத்திற்கு விமர்சன ரீதியாகக் கிடைத்த பாராட்டுக்களில் மகிழ்ச்சியடைந்த பமேலா ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக தொடர்ந்து மூன்று படங்களை இயக்குவதற்கான ஆரம்ப வேலைகளில் இறங்கினார்.

நெதெர்லான்ட் நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் நகரில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் ட்ரெயின் டு பாகிஸ்தான் படம் பார்வையாளர்களின் ஆரவாரமான வரவேற்புடன் திரையிடப்பட்டது. பமேலாவும் ரிச்சார்டும் அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பினர். 2005 நவம்பர் 26 அன்று அதிகாலையில் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் காரில் வீட்டிற்குப் புறப்பட்டனர். வசந்த் விஹார் எனும் இடத்தைத் தாண்டும்போது திடீரென்று எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு கார், சக்கரம் கழன்று கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் சுழன்று பறந்து அவர்களது காரின்மேல் விழுந்தது. தலையில் பலத்த அடிவிழுந்ததில் பமேலாவின் மூளை மிக மோசமாகக் காயப்பட்டது.

எல்லா நினைவுகளுமிழந்து ஆழ்மயக்கத்தில் விழுந்துபோன பமேலா பின்னர் ஒருபோதும் மீண்டெழவில்லை. நீண்ட ஐந்தாண்டுகள் உணர்ச்சிகளற்று கிடந்த அவர் 2010 அக்டோபர் ஒன்றின் அதிகாலையில் தனது 52ஆவது வயதில் இறந்துபோனார். தன் குழந்தைகளைப் பாதிவழியில் விட்டுவிட்டு மறைந்துபோனார் பமேலா. ஆனால் அவரை, அவரது திரைப்படங்களை அறிந்தவர்களின் மனதில் ஒரு அதிசயப் பெண்மணியாக பமேலா ரூக்ஸ் என்றென்றும் நீடித்திருப்பார்.

shaajichennai@gmail.com