20160121

ஃப்ரெடி மெர்குரி - கட்டுப்பாட்டுக்கு எதிரான கலகத்தின் இசை

ஃப்ரெடி மெர்குரியின் சோக வாழ்க்கை என்ற கட்டுரையில் புகழ்பெற்ற கிறித்தவப் போதகர் டேவிட் க்ளெளட் இவ்வாறு சொல்கிறார்: “உலகம் அழியும் காலகட்டத்தின் மனநிலையானது குயீன் ராக் இசைக்குழுவின் பாடகரான ஃப்ரெடி மெர்குரியின் இறப்பைச் சார்ந்த நிகழ்ச்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஃப்ரெடி மெர்குரி ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவர் பரலோக ராஜ்ஜியத்தை இழிவுசெய்து பைபிளின் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார். அவரது பாடல்கள் சுதந்திர ஓரினச்சேர்க்கை இயக்கத்தினரின் கொள்கைப் பாடல்கள் போலிருந்தன. அப்பாடல்கள் அசிங்கமானவை, தீயவை. ஆபாசமான உடலசைவுகள் மூலம் அவர் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்களைப் பித்தெடுக்க வைத்தார். அவர்களின் இசைப்பயணங்களில் பாம்பாட்டிகள், அலிகள், நிர்வாண ஆட்டக்காரிகள், ஆபாச நடனக்காரர்கள் நிறைந்திருந்தனர். ஃப்ரெடி மெர்குரி இறைமறுப்பும் பாவமும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் பொருள் முதல்வாதமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார். அவருக்கு உலகம் முழுக்க ஓரினச் சேர்க்கைத் துணைவர்கள் இருந்தார்கள். 1991ல் ஃப்ரெடி மெர்குரி எய்ட்ஸ் நோயால் இறந்தார். அவருக்குக் கடவுளிடமிருந்து உரிய கூலி கிடைத்தது.”

பாதிரியார் கென்னத் ஜான்ஸ்டன் இதைப் பற்றிச் சொன்னார், “ஃப்ரெடி மெர்குரி இறந்தபோது நாற்பது லட்சம் பௌண்ட் மதிப்புள்ள தன் மாளிகையில் ஒன்றரைக் கோடி பவுண்ட் பெறுமானமுள்ள சொத்துக்களைத் தன் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் விட்டுச் சென்றார். தன் கல்லறைக்கு அப்பால் அவர் எதையும் கொண்டு செல்லவில்லை. அவருக்கு அழகிய குரல் இருந்தது. அந்த வரத்தை அவர் சாத்தானுக்குச் சேவை செய்யவே பயன்படுத்தினார். எவ்வளவு பரிதாபம்! இன்று ஃப்ரெடி மெர்குரி எங்கே? குடியும் ஒழுக்கக்கேடும் சாத்தானிய இசையும் நிறைந்த வாழ்க்கை இப்படித்தான் முடியும். அவரது செல்வம், புகழ் எதுவுமே கடவுளின் கோபத்திலிருந்து அவரைக் காப்பாற்றாது. ஃப்ரெடி மெர்குரி ஏசுவுக்குப் பதிலாக ஜராதுஷ்டிர மதம் என்ற பொய்யான மதத்தைப் பின்பற்றினார். அவர் தன் இறுதிச் சடங்குகளை மாதக் கணக்காக ஏற்பாடு செய்தார். ஆனால் உண்மையான கடவுளைச் சந்திக்க தன் ஆத்மாவை சித்தம் செய்வதற்கு மறந்துவிட்டார். செய்திகளின்படி வெள்ளை மஸ்லின் ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த ஜராதுஷ்டிர மத புரோகிதர்கள் அம்மதப் பாடல்களைப் பாடியபடி அவர்களின் கடவுளான அகுரா மஸ்தாவைத் துதித்து இறந்துபோன ஆத்மாவின் மீட்புக்காக வேண்டிக்கொண்டார்கள். ஆனால் ஃப்ரெடி மெர்குரி சொர்க்கத்தில் இல்லை! அவர் நகரத்திலேயே இருக்கிறார்! ஏன்? அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதனாலா? அல்ல அல்ல! உண்மையான தேவனாகிய ஏசு கிறிஸ்துவின் போதனைகளை ஃப்ரெடி மெர்குரி ஏற்றுக் கொள்ளாததால்”!

‘கலையைப் பற்றி’ என்ற நூலில் தல்ஸ்தோய் எழுதினார் “மிக வலுவான உணர்வுகள் முதல் மிக மென்மையான உணர்வுகள் வரை, மிக முக்கியமான உணர்வுகள் முதல் மிக எளிய உணர்வுகள் வரை, பேரழகு கொண்ட உணர்வுகள் முதல் அசிங்கமான உணர்வுகள் வரை கலை உணர்வுகளின் முழுமையைக் கையாள்கிறது. கலைஞன் கொண்ட அதே உணர்வை ரசிகர்களும் அடைகையில் அதை நாம் கலை என்கிறோம். கலைஞனின் பணி என்பது முதலில் ஓர் உணர்வை அடைவதும் பின்னர் அதைக் கோடுகள், வண்ணங்கள், ஒலிகள், அசைவுகள், வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவதும் அதன் மூலம் நாமும் அவன் கொண்ட அதே மன எழுச்சியை அடையச் செய்வதும் ஆகும்.” ஃப்ரெடி மெர்க்குரியை அடையாளப்படுத்துவதற்கு இச்சொற்கள் முற்றிலும் பொருத்தமானவை.

அவர் தன் இசையின் மாயத்தாலும் தன் கலையாளுமையாலும் பெருங்கூட்டங்களின் நெஞ்சத்துடன் உரையாடும் திறன் கொண்டிருந்தவர். ஜெர்மனியில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தைப் பாடித் தன்முன் கூடியிருந்த 70,000 ஜெர்மானியர்களை அதைப் பாட வைத்துத் தாளமிடச் செய்தவர் அவர்! ‘லைவ் எய்ட்’ இசை நிகழ்ச்சிக்காக அவர் இருபது நிமிடம் பாடியபோது அது இருபது லட்சம் பேரைத் தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்டது!. ஃப்ரெடி மெர்குரி தன் கலைத்திறனை முழுக்க மேடையில் காட்டுபவர். உண்மையான கலை அதை உருவாக்கியவனையே கடந்துசென்று வளரக்கூடிய ஒன்று என்பதை 1985ல் ரியோ டி ஜெனிரோவில் மூன்றேகால் லட்சம்பேர் திரண்டு ‘நான் விடுபட்டு எழ விரும்புகிறேன்!’ (ஐ வாண்ட் டு பிரேக் ஃப்ரீ!) என்ற அவரது பாடலை மீண்டும் மீண்டும் பாடச்சொல்லிக் கேட்டபோது அவரே உணர்ந்திருப்பார். அவர்களுக்கு அது ஒரு சுதந்திரப் பிரகடன கீதம் போலிருந்து! ஃப்ரெடி மெர்குரி உருவாக்கிய வேகம் மிக்க பாடல்களான ‘வீ வில் வீ வில் ராக் யூ’, ‘வீ ஆர் த சாம்பியன்ஸ்’, ‘அனதர் ஒன் பைட்ஸ் த டஸ்ட்’ போன்றவை அழியாத ராக் இசைப் பாடல்களாக உலகமெங்கும் விளங்குகின்றன.

ஃப்ரெடி மெர்குரி வழிநடத்திய ஆர்ப்பாட்டமான ‘குயீன்’ இசைக்குழு பதினெட்டு இசைத் தொகுப்புகளை வெளியிட்டது. அவை உலகமெங்கும் எட்டு கோடி பிரதிகள் விற்றன. எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து குயீன் குழு ஜன ரசனையைக் கிளறும் ஏராளமான பாடல்களை இறக்கி சூழலை ஆட்கொண்டது. வெகுஜன இசை வரலாற்றின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவர் ஃப்ரெடி மெர்குரி. அற்புதமான சாத்தியங்கள் கொண்ட அபூர்வமான குரல் அவருடையது. மிகச் சிரமமான பாடல்களை மிக ஆற்றலுடன் பாடியிருக்கிறார். ஆனால்  தனக்கு முறையான எவ்வித குரல்ப் பயிற்சியும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்! நாடகீயத்திறனுடன் மேடையில் உக்கிரமாக வெளிப்படும் ஆற்றல் கொண்ட ஃப்ரெடி மெர்குரி ராக் இசையில் எப்போதும் உடனடியாக அடையாளம் காணப்படும் பல முக்கியமான பாடல்களை எழுதி இசையமைத்தவர். பொஹீமியன் ராப்சடி, டூ மச் லவ் வில் கில் யூ, நோ ஒன் பட் யூ, லவ் மை லைஃப் போன்ற அவருடைய பெரும்பாலான பாடல்கள் உலகளாவிய பெரும் வெற்றிகள்.

சான்ஸிபார் என்ற ஆப்ரிக்கத் தீவு இந்தியப் பெருங்கடலில் தான்ஸானிய எல்லையிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. அழகிய மணற்பரப்பு கொண்ட கடற்கரைகளுக்கும் பவளப் பாறைகளுக்கும் புகழ்பெற்றது அது. கிழக்கு ஆப்ரிக்காவில் இன்றும் இருக்கும் மிகத் தொன்மையான ஒரே நகரம் ‘ஸ்டோன் டவுன்’ அங்குதான் உள்ளது. அங்கே 1946 செப்டம்பர் ஆறாம் தேதி இந்தியப் பார்ஸி பெற்றோரின் மகனாக ஃபாரூக் பல்ஸாரா பிறந்தார். அப்போது சான்ஸிபார் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. முன்பு இந்தியாவில் ஒரு கீழ்நிலைக் கணக்கராக இருந்த தந்தை அலுவலகக் கட்டாயங்கள் நிமித்தம் அந்தத் தீவில் குடியேறினார். பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும்கூட அக்குடும்பம் இசையைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது. ஃபாரூக் சிறுவயதில் கேட்டு வளர்ந்ததெல்லாம் லதா மங்கேஷ்கர் போன்றவர்களின் இந்தித் திரையிசைதான்.

பொருளாதார பலம் கொண்டிருந்த சில குடும்ப நண்பர்களின் உதவியுடன் ஃபாரூக் இந்தியாவில் பம்பாய்க்கு பள்ளிக் கல்விக்காக அனுப்பப்பட்டார். தனது எட்டாவது வயதில் தன்னந்தனியாகக் கப்பலில் இரண்டு மாதம் பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்த அவர் பூனா அருகே பஞ்சகனியில் இருந்த பிரிட்டிஷ் கல்வி நிறுவனமான செயின்ட் பீட்டர்ஸ் தங்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உந்தின பல்வரிசையும் இருண்ட தோல்வண்ணமும் கொண்டு ’அழகற்ற’ சிறுவனான அவருக்கு தாழ்வுணர்ச்சியும் தனிமைப்பாங்கும் அதிகமாக இருந்தது. ஆகவே அவரது கல்விநாட்கள் துயரம் மிக்கவை. இருந்தும் இசை, ஓவியம் ஆகியவற்றில் அவர் அசாதாரணமான ஆர்வம் காட்டிவந்தார். தலைமையாசிரியரின் சிபாரிசுக்கு ஏற்ப பள்ளியில் அவருக்கு பியானோ இசை சொல்லிக்கொடுக்கப்பட்டது. பன்னிரண்டு வயதில் அவர் பள்ளியின் இசைக்குழுவான ‘ஹெக்டிக்ஸி’ன் பியானோ கலைஞனாக ஆனார்.

இந்தக் காலகட்டத்தில்தான் அவர் தன் பெயரான ஃபாரூக்கை ஃப்ரெடி என்று மாற்றிக்கொண்டார். விரைவில் அவரின் பெற்றோரும் சொந்தக்காரர்களும்த கூட அப்பெயராலேயே அவரை அழைக்க ஆரம்பித்தனர். 1962ல் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த போது படிப்பை நிறுத்திய ஃப்ரெடி மீண்டும் சான்ஸிபாருக்குப் பயணமானார். 1964ல் தான்ஸானிய விடுதலைக்குப் பின் நிகழ்ந்த ராணுவப் புரட்சியினாலும் அரசியல் கொந்தளிப்பினாலும் சான்ஸிபாரைவிட்டு அக்குடும்பம் இங்கிலாந்துக்குக் குடியேறியது. சில வருடங்கள் அறியாத அந்த நிலப்பகுதியில் அவர்கள் அகதிகளைப்போல் இடம் பெயர்ந்தபடியே இருந்தனர். உறவினர் வீடுகளில் அடைக்கலமாகத் தங்கியிருந்த அவர்கள் இறுதியில் மிடில்செக்ஸ் பகுதியிலுள்ள ஒரு சிறு வீட்டில் தங்கினர்.

பூனாவிலும் பம்பாயிலுமாக தன்னுடைய இளமைப்பருவத்தை முழுக்க இந்தியாவில் கழித்திருந்தபோதிலும் ஃப்ரெடி தன்னுடைய இந்தியத் தொடர்பை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார். தன்னுடைய பாரம்பரியத்தைப் பற்றிப் பேட்டிகளிலும் உரையாடல்களிலும் அவர் சொல்வதில்லை. தன் பார்ஸி மதப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தன்னை ஒரு ‘பாரசீகன்’ என்று அவர் சொல்வதுண்டு. அவரின் பல நண்பர்கள் அவர் தன்னுடைய இந்திய வம்சாவளி அடையாளத்தை ஒரு வெட்கமாக நினைத்து வந்தார் என்றும், இந்தியக் குடியேறிகளுக்கு எதிரான நீண்டகால இன ஒதுக்கலும் அடக்குமுறைகள் ஓங்கிநின்ற ஆங்கில மண்ணில், தனது இன அடையாளம் காரணமாகத் தான் ஒதுக்கப்படக்கூடும் என்ற ஐயம் அவருக்கு எப்போதுமிருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஃப்ரெடி மெர்குரியின் நண்பரும் சக இசைக் கலைஞருமான ரோஜர் டெய்லர், ஃப்ரெடி மெர்குரி தன் இந்திய அடையாளத்தை மறைத்தமைக்குக் காரணம் அந்த அடையாளம் அதிநவீன ராக் இசைக்கலைஞர் என்ற படிமத்துடன் பொருந்துவதாக இல்லை என்பதே என்று சொல்லியிருக்கிறார்.

இங்கிலாந்தில் ஃப்ரெடி மெர்குரி ஓவியம் மற்றும் கிராஃபிக் வரைபடவியலில் பயிற்சி பெற்று முதல் தரத்தில் வெற்றி பெற்றார். அத்திறனை அவர் பின்னர் குயீன் குழுவினரின் உடை அமைப்பு மற்றும் அரங்க வடிவமைப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக் கொண்டார். பல சிறு உடலுழைப்பு வேலைகள் செய்து தன் செலவினங்களைச் சமாளித்தார். “கையில் காசில்லாமல் இருக்கும்போதுகூட அவர் ஒரு இசை நட்சத்திரம் போலத்தான் தோற்றமளிப்பார்” என்று ரோஜர் டெய்லர் நினைவுகூர்ந்தார். இக்காலகட்டத்தில்தான் ஃப்ரெடி மெர்குரி இசையில் ஆழமான ஈடுபாடு கொண்டவரானார். ஜிம்மி ஹென்டிரிக்ஸ், பீட்டில்ஸ், அரீத்தா ஃபிரங்க்ளின், லெட் ஸெப்பெல்லின் ஆகியோரின் தீவிரமான ரசிகராக அவர் இருந்தார்.

1969ல் ஃப்ரெடி மெர்குரி ஒரு சிறிய துணிக்கடையைத் தொடங்கினார். 1969ல் ஒரு இசைக்குழு வெளியிட்ட விளம்பரத்தைக் கண்டு அதில் பாடகராக விண்ணப்பித்தார். அனால் அவர்கள் அவரை நிராகரித்துவிட்டனர். 1970ல் தன் நண்பர்களுடன் இணைந்து குயீன் இசைக்குழுவை ஆரம்பித்தார். தன் பெயரை ஃப்ரெடி மெர்குரி என்று மாற்றிக் கொண்டார். அவர்களின் முதல் ஆல்பம் ‘குயீன்’ என்ற பேரிலேயே 1973ல் வெளிவந்தது. ‘கீப் யுவர்செல்ஃப் அலைவ்‘ என்ற பாடல் ஓரளவுக்கு வானொலியிலும் புகழ்பெற்றிருந்தது. ஆனால் விமரிசகர்களின் கருத்து ஆர்வமில்லாததாக இருந்தது. விமரிசக ரீதியாக இந்த மந்தநிலை ஃப்ரெடி மெர்குரியின் இறுதிக்காலம் வரை நீடித்தது!

குயீன்-2 என்ற இரண்டாவது வெளியீடு இன்னும் சற்று கவனிக்கப்பட்டது. அதில் உள்ள தனிக்குரல் பாடலான ‘ஸெவன் சீஸ் ஆஃப் ரைம்‘ தரவரிசையில் முதல் பத்துக்குள் இடம் பெற்றது. ஆயினும் 1975ல் வெளிவந்த அவரது மூன்றாவது தொகுப்பு ‘ஷீர் ஹார்ட் அட்டாக்‘தான் அவரது முதல் பெரும் வெற்றி. அதிலுள்ள ‘கில்லெர் குயீன்‘ என்னம் பாடல் பிரிட்டிஷ் விற்பனையின் இரண்டாமிடத்தில் இருந்ததோடு அமெரிக்காவிலும் ரசிகர்களைப் பெற்றது. அந்த ஆண்டிலேயே அவருடைய பெரும் புகழ் பாடலான ‘பொஹீமியன் ராப்சடி‘ வெளிவந்தது. குயீன் மிகப்பெரிய இசை நிகழ்ச்சியாளர்களாக புகழ்பெற்றார். அவர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். தொடர் பயணங்கள், இசை நிகழ்ச்சிகள், இசைப்பதிவுகள் என ஓய்வில்லாத பாய்ச்சல் ஆரம்பமாகிவிட்டது.

ராக் இசை உச்சநட்சத்திரம் டேவிட் போவி சொன்னார், “ராக் மேடைப் பாடகர்களில் ஃப்ரெடி மெர்குரி பிறரைவிடப் பல மடங்கு முன்னே சென்றவர். ராக் நிகழ்ச்சிகளை அதன் எல்லைக்கே இட்டுச்சென்றார். அவரது நிகர்ச்சி ஒன்றைக் காண்கையில் எண்ணிக்கொண்டேன், அவர் பெருங்கூட்டத்தை அப்படியே தன் உள்ளங்கையில் வைத்திருப்பதாக. ஒரு சாதாரண மேடை வழக்கத்தைக்கூடத் தனக்குச் சாதகமானதாக அவரால் மாற்றிக்கொள்ள முடிகிறது! அவர் அதீத எல்லைகளைச் சென்று தொடுகிறார். ஆணின் முரட்டுத்தோல் ஆடைகள் அணிந்து வரும்போதும் சரி, பெண்ணின் அரைகுறை ஆடைகள் அணிந்து வரும்போதும் சரி. சுயமோகம் மிகுந்த தீவிர ராக் இசை ரசிகர்களை இரண்டுமே ஒரேபோல் உற்சாகமூட்டி மகிழவைத்தன”.

குயீன் குழுவின் ஆல்பமான ‘ஜாஸ்‘வெளியிடப்பட்டதை ஒட்டி நியூ ஆர்லியன்ஸில் ஒரு மாபெரும் ராக் விருந்தை ஏற்பாடு செய்தனர். அதன் எல்லா அம்சங்களையும் ஃப்ரெடி மெர்குரி தன் மேற்பார்வையில் ஏற்பாடு செய்தார். அது ஒதுக்கப்பட்டவர்களக்கும் தடை செய்யப்பட்டவற்றுக்குமாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சி. சரியான ஒரு ‘பாவக் களியாட்ட‘விருந்தாக அது அமைந்தது. அதற்காக சித்திரக் குள்ளர்கள், ஒரு பாலினர், பாம்பாட்டிகள், நிர்வாண நடனக்காரர்கள் ஆகியோர் திரட்டப்பட்டனர். ஷாம்பேனும் பிற போதைப் பொருட்களும் ஆறுபோல் ஓடியது.

‘பைசைக்கிள் ரேஸ் (Bicycle race)  மற்றும் ‘ஃபாட் பாட்டம்ட் கேர்ள்ஸ்’ (Fat bottomed girls) என்ற இரு இசைத்தொகுப்புகளை மிக மிக அதிர்ச்சியூட்டும் முறையில் வெளியிட்டார். விம்பிள்டன் விளையாட்டரங்களில் அறுபத்தி ஐந்து  நிர்வாணப் பெண்ணகளைப் பங்கெடுக்க வைத்து ஒரு சைக்கிள் போட்டியை நடத்தினார். அதன் காட்சிப் பதிவுகள் அப்பாடலின் காட்சிப் படிமங்களாகவும் அட்டைப் படமாகவும் பயன்படுத்தப்பட்டன. பல இசைக்கடைகள் அந்த அட்டையைக் காட்சிக்கு வைக்க மறுத்தபோது நிர்வாணப் பெண் சைக்கிள் ஓட்டும் அந்த அட்டை பலமறை மாற்றப்பட்டது. அந்த சைக்கிள் போட்டிக்காக 65 சைக்கிள்களை வாடகைக்கு எடுத்திருந்தனர். அவற்றைத் திருப்பி வாங்கிக்கொள்ள அந்த நிறுவனம் மறுத்தது. 1978ல் நடைபெற்ற ஓர் மேடைநிகழ்ச்சியில் குறைவாக உடையணிந்த பெண்களை மேடையில் சைக்கிள் விடச்செய்து அதை மீண்டும் அரங்கேற்றியது!

அர்ஜெண்டினாவிலும் ப்ரேஸிலிலும் திறந்தவெளி இசை நிகழ்ச்சிகள் நடத்தியது குயீன் குழு. அங்கு பொதுமேடை நிகழ்ச்சி நடத்திய உலகப்புகழ் பெற்ற முதல் ராக் இசைக்குழு குயீன் தான். ஆப்ரிக்க பஞ்ச நிவாரணத்துக்காக 1986ல் நடத்தப்பட்ட ‘லைவ் எய்ட்‘ மாபெரும் கூட்டு இசைநிகழ்ச்சி இக்காலகட்டத்தில் ஃப்ரெடி செய்த மாபெரும் சாதனை. பாப் டிலன், பால் மக்கார்ட்னி, மடோன்னா, லெட் ஸெப்பெலின் ஆகியோர் பங்குபெற்ற அந்நிகழ்ச்சியின் மிகச்சிறந்த இசைத்தருணங்கள் ஃப்ரெடி மெர்குரி வழியாகவே வெளிப்பட்டன. அங்குக் கூடியிருந்தவர்கள் குயீன் குழுவின் ரசிகர்கள் மட்டும் அல்ல. ஆனால் ஃப்ரெடி அனைவரையும் ஈர்த்துக்கொண்டார். ஆனால் அங்கே சில ரசிகர்கள் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று கோஷமிட்டு மேடை நோக்கி சவரத்தகடுகளை விட்டெறிந்தனர்.

இந்த எதிர்ப்பு 1984ல் உச்சமடைந்தது. காரணம், ஃப்ரெடி மெர்குரி பெரிய மார்பகங்கள் கொண்ட இல்லத்தரசி போல உடையணிந்து மீசையுடன் ‘நான் விடுபட்டு எழ விரும்புகிறேன்!’ என்ற அவரது வீடியோவில் நடித்தார். எதிர்ப்புகளுக்கு ஃப்ரெடி “ஆமாம் நான் அதை வேண்டுமென்றேதான் செய்து பார்த்தேன். ஆனால் விரவில் ஜனங்கள் கொட்டாவி விடுவார்கள். அடக்கடவுளே, ஃப்ரெடி மெர்குரி இப்போது தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.  இதுதான் இப்போது மோஸ்தர்போல!” என்று பதில் சொன்னார். அந்தப் பாடல்க் காட்சி இங்கிலாந்தில் வேடிக்கையாக பார்க்கப்பட்டது ஆனால் அமெரிக்காவில் அதை ஓர் அவமதிப்பாகவே எடுத்துக் கொண்டார்கள்.

ஃப்ரெடி மெர்குரி தன்னை ஓர் ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டபோதும் கூடப் பலர் அவர் வேடிக்கைக்காகச் சொல்கிறார் என்று எண்ணினார்கள். காரணம் அவர் மிகவும் ஆண்மையான தோற்றம் கொண்டவர். ஃப்ரெடி மெர்குரி எப்போதும் அழகான பெண்கள் சூழ வாழ்ந்தார் என்பதும் உண்மை. சந்தேகங்கள் இருந்தன, ஆனாலும் அவர் சொன்னதை விளையாட்டாகவே எடுத்துக்கொண்டார்கள். காரணம் எழுபதுகளில் ஒருவர் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாகச் சொல்வது ஒரு சாதாரண நிகழ்வல்ல.

பெரும்பாலான ஆய்வாளர்கள் காமத்தின் இயல்பு அத்தனிமனிதர்களின் தேர்வில் இல்லை என்று கருதுகிறார்கள். ஓரினக்காமம் என்பது ஒரு நோயாகக் கருதப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்ட காலம் இருந்தது. இன்று பெரும்பாலான மனநல, உடல்நல மருத்துவர்கள் ஒரினக் காமத்தை மாற்ற முயல்வதில்லை. அது நோய் அல்ல. காமத்தின் ஓர் இயல்பு மட்டுமே. அதை போதைப்பழக்கம் போன்ற ஒன்று என்று எண்ணுவது தவறு. காமத்தின் இயல்பு என்பது சூழல், உணர்ச்சிகளின் இயல்பு ஆகியவற்றுடன் சுரப்பிகள் மற்றும் பிற உயிரியல் இயல்புகளினால் தீர்மானிக்கப்படும் ஒன்று.

ஃப்ரெடி மெர்குரியின் பிடித்தமான இசைக்கருவி பியோனோ. அவருக்குச் செவ்வியல் இசைவடிவங்களான ஓபெரா, பாலே போன்றவவை மிகவும் பிடிக்கும். அவரது ‘பார்ஸிலோனா’ (Barcelona) என்ற தொகுப்பில் பாப் இசையும் ஓபெரா இசையும் திறம்பட கலக்கப்பட்டிருந்தன. ஃப்ரெடி மெர்குரி ஆராதித்த ஸ்பானிய ஒபெரா பாடகியான மோண்ட்செராட் கபேல் (Montserrat Caballe) அதில் பாடினார். கபேலைப் பொறுத்தவரை அது அவருடைய இசை வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. ஃப்ரெடி மெர்குரி மைக்கேல் ஜாக்ஸனுடன் இணைந்து சில பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அவை முறைப்படி வெளியிடப்படவில்லை.

ஃப்ரெடி மெர்குரி கட்டற்ற பழக்கவழக்கம் கொண்டவர். தனி வாழ்க்கையில் ஃப்ரெடி அவரது முரட்டுத்தனமான நடத்தைக்காகவும், நண்பர்களுக்கு அள்ளிவீசும் பெரும் பரிசுப்பொருட்களுக்காகவும் பேசப்பட்டவர். அவரது நாற்பத்தி ஒன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமாக எண்பது நண்பர்களுடன் இபிஸா என்ற தீவில் உள்ள உல்லாச விடுதிக்குப் பயணமானார். அங்கே அவர்களுக்கு வாணவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஃப்ளெமெங்கோ நடனமாதர்கள் ஆடினர். இருபதடி நீளக்கேக்கை வெட்டினார். “என்னுடைய நினைவில் நாங்கள் பாடல்பதிவு செய்தும் சுற்றுப்பயணம் செய்தும் கழித்த நாட்களை முடிவில்லாத நீண்ட விழாக் கொண்டாட்டங்களாகவே இருந்தன” என்றார் குயீன் குழுவின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராய் பேக்கர்.

ஃப்ரெடி மெர்குரி குயீன் குழுவின் ஆரம்பக் காலத்தில் பெரும்பாலும் தன் காதலியான மேரி ஆஸ்டினுடன் வாழ்ந்தார். ஆனால் எண்ணற்ற தொடர்புகள் தனக்குண்டு என்று அவர் சொன்னார். “எலிசபெத் டெய்லரைவிட எனக்குக் காதலர்கள் அதிகம்” என்றார். பின்னர் எய்ட்ஸ் அச்சம் படர்ந்தபோது ஃப்ரெடி மெர்குரியும் அச்சம் கொண்டார். ஒருமுறை அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டபோது அங்கே தனக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்படும் என்று எண்ணி அதை மறுத்தார்.

1991 பெப்ருவரியில் ‘இன்யுவென்டோ’ (Innuendo) இசைத் தொகுதியை வெளியிட்டதை ஒட்டி மீண்டும் ஒரு கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெற்கு கலிஃபோர்னியாக் கடலில், குயீன் மேரி என்ற மாபெரும் கப்பலில். இரண்டாயிரம் இசையுலகினர் அதில் உபசரிக்கப்பட்டனர். ஆட்டுக்குட்டித் தொடைகள், விதவித வகை நண்டுகள், எண்ணற்ற இனிப்புகள், நூற்றுக்கணக்கான மதுவகைகள் என குவிக்கப்பட்ட அந்நிகழ்ச்சியில்  மந்திரவாதிகள், கேலிக்குரல் விற்பன்னர்கள், நிர்வாண நடிகர்கள் என கேளிக்கையாளர்கள் நிறைந்திரந்தனர். ‘பொஹீமியன் ராப்சடி’ பாடல் இசைக்க வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ஆனால் அதில் முதன்மை விருந்துபசரிப்பாளரான ஃப்ரெடி மெர்குரி எங்கே என்று அனைவரும் தேடினார்கள். ஃப்ரெடி மெர்குரி பற்றிய கேள்விகளுக்கு குயீன் உறுப்பினர் ப்ரயன் மே மற்றும் ரோஜர் டெய்லர் சரியாகப் பதில் சொல்லாமல் மழுப்பினர். வாழ்க்கையைக் களிவெறியுடன் வாழ விரும்பிய அவர்களின் நண்பர், எய்ட்ஸ் நோயால் அப்போது மெல்லச் செத்துக் கொண்டிருந்தார்.

ஃப்ரெடி மெர்குரிக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பது 1987லேயே கண்டறியப்பட்டது. அவ்வருடம் வந்த பேட்டி ஒன்றில் அவர், மருத்துவர்கள் நோய் இல்லை என்ற சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார். ஆனால் இதழ்கள் அதைத் தோண்டித் துருவி செய்தி வெளியிட்டு வந்தன. ஃப்ரெடி மெர்குரி அவரது இறுதி நாட்களை நெருங்குவதாகப் பேசப்பட்டது. தன் கடைசி வருடங்களை ஃப்ரெடி மெர்குரி லண்டனில் தன் மாளிகையில் அடைபட்டுக் கழித்தார். எட்வர்ட் காலத்தைய மாளிகையான அந்த மூன்றமாடி சிவப்புக்கல் கட்டிடம் அவர் அதை வாங்கும்போது சிலமாகியிருந்தது. பெரும் பொருட்செலவில் அதைப் புதுப்பித்து அலங்கரித்து அதற்கு ‘கனவு வீடு’ என்று பெயரிட்டார். விலை மதிப்புமிக்க கலைப்பொருட்களாலும் மரவேலைப் பாடுகளாலும் அதை நிறைத்தார். அந்த மாளிகையில் இருபத்தெட்டு அறைகளிலும் ஒலிக் கருவிகளின் வழியாக ஃப்ரெடி மெர்குரியின் பிரியத்திற்குரிய பாடகியான அரீத்தா ஃப்ராங்க்ளினின் குரல் ஒலித்தது. நோய் முற்றிய நிலையில் தன்னுடைய எராளமான பாரசீக வளர்ப்புப் பூனைகளுடன் ஃப்ரெடி மெர்குரி நாட்களைக் கழித்தார். இசையைக் கடைசிக்கணம் வரை அவர் கைவிடவில்லை. படுக்கையில் இருக்கும் போதே பிற்பாடு வெளியிடப்பட்ட ‘வழியனுப்பும் இசைத் தொகுதி’யில் இடம்பெற்ற பாடல்களை உருவாக்கினார்.

“பத்திரிகைத் துறையில் இருந்து வந்த விசாரிப்புகளுக்கு இணங்க நான் இதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் ரத்தச் சோதனையில் எய்ட்ஸ் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதை நான் இதுநாள்வரை ரகசியமாக வைத்திருந்தது என்னைச் சார்ந்தவர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதற்காகத்தான். ஆனால் உலகமெங்குமுள்ள என் நண்பர்களும் ரசிகர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். என் மருத்துவர்களுடனும் உலகமெங்கும் இந்தக் கொடிய நோய்க்கு எதிராகப் போராடுபவர்களுடனும் இணைந்து நாம் பணியாற்றுவோம். எனது அந்தரங்கம் எப்போதுமே எனக்கு முக்கியமாக இருந்துள்ளது. நான் பேட்டிகள் கொடுப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்தக் கொள்கையே இனியும் தொடரும் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கம்.” 1981 நவம்பர் 23ல் இந்த அறிவிப்பு வெளியாகி சிலமணி நேரங்களில் ஃப்ரெடி மெர்குரி இறந்தார். அப்போது அவருக்கு நாற்பத்தி ஐந்து வயது.

“மரணம் நெருங்குவதென ஃப்ரெடி அறிந்திருந்தார். அதை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார்” என்றார் மேரி ஆஸ்டின். இறுதிக்காலங்களில் ஃப்ரெடி மெர்குரியுடன் இருந்த டேவ் கிளார்க் சொன்னார் “அவர் அன்பானவர், பெருந்தன்மை மிக்கவர். மேடையில் வெளிப்பட்ட அதிரடியான இயல்புகள் எதுவுமே இல்லாத பிரியமான மனிதர். அவரது பெருந்தன்மை தனது நண்பர்கள் மற்றம் வேண்டியவர்களுக்காக மட்டும் இருக்கவில்லை. யாரென்றே தெரியாத எத்தனையோ பேர் அதனால் பயனடைந்தார்கள். சாதாரண மனிதர்களை நேசித்தவர் அவர்.”

ஃப்ரெடி மெர்குரி எய்ட்ஸால் இறந்தது அவரது பெயருக்கு ஒரு களங்கமாக இன்றுவரைத் தொடர்ந்து வருகிறது. அவருடைய மொத்த கலைப்படைப்புகளுமே இதனால் தவறாக அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒரு பாலினக் காமமோ இருபாலினக் காமமோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தால் தேர்வு செய்யப்படுவதல்ல என்ற உயிரியல் உண்மையைப் பலர் வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஃப்ரெடி மெர்குரி ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் என்ன அல்லது இருபாலுறவினராக இருந்தால்தான் என்ன? அவரளவு வீச்சும் வேகமும் உள்ள இன்னொரு ராக் பாடகர் இல்லை என்பதே உண்மை!

ஃப்ரெடி மெர்குரியின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘நமது வாழ்வின் நாட்கள்’ என்கிற அவரது இறுதி இசைப்படத்தில் கறுப்பு வெள்ளைக் காட்சியில் எந்த விதமான செயற்கை வேடமும் இல்லாமல் நோயுற்று மெலிந்துபோன தோற்றத்தில் காட்சியளிக்கும் ஃப்ரெடி மெர்குரி மரணத்துடன் கைகோர்த்தவராக வெளிப்படுகிறார். தலைநிமிர்ந்து எவ்வித வருத்தமும் இல்லாமல் சையசைத்து விடைபெற்றுச் செல்லும் அவரது உருவம் மங்கி மங்கி மறைகிறது.

உள்ளே உடைந்து நொறுங்குகிறேன்
ஒப்பனைகள் உரிந்து விழுகின்றன
இருந்தும் எனது புன்னகை அழியக் கூடாது
ஏனெனில் நிகழ்ச்சி தொடர்ந்தே ஆகவேண்டும்
நிகழ்ச்சி தொடர்ந்தே ஆகவேண்டும்
The show must go on……..
(2007)