20160911

டி எம் கிருஷ்ணா - மக்சேசே விருதில் என்ன இருக்கிறது?தொள்ளாயிரத்தித் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் இசைப்பதிவு மேலாளராக பணியாற்றிவந்த மேக்னா சவுண்ட் நிறுவனம் கர்நாடக இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கியது. பிராமணர்கள் என்று சொல்லக்கூடிய யாருமே அப்போது எங்கள் நிறுவனத்தில் இருந்ததில்லை. அக்காலம் ஏ வி எம், சங்கீதா போன்ற இசை நிறுவனங்கள்தாம் கர்நாடக இசையை பரவலாக வெளியிட்டு வந்தனர். ஆனால் இசை விற்பனையில் உலகத்தரமான வழிமுறைகளை நாங்கள்தாம் கடைப்பிடித்துவந்தோம். உலகளாவிய இசை விற்பனை நிறுவனமான வார்னர் பிரதர்ஸின் துணை அமைப்பு எங்களது நிறுவனம். எங்களுக்கிருந்த கனக்கச்சிதமான வியாபார உத்திகளால் தமது இசை, ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் என்று எண்ணிய பல கர்நாடக இசைஞர்கள் எங்களுடன் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர் டி எம் கிருஷ்ணா.

அப்போது டி எம் கிருஷ்ணாவுக்கு 17-18 வயது இருக்கும். துடிப்பான இளைஞன். மிகவும் முதிர்ச்சியுள்ள ஆழ்ந்த குரல். அவரது முகத்தைப் பாராமல் அவ்விசையைக் கூர்ந்து கேட்டால் மிகுந்த முதிர்ச்சியும் நிதானமும் அக்குரலில் தெரியும். பாடும்முறையில் அப்படியே செம்மங்குடி பாணியின் நகலெடுப்பு இருக்கும். கிருஷ்ணா சமகால கர்நாடக இசையின் ஒரு முக்கியப் பாடகராக வலம்வருவார் என்று நாங்கள் நம்பினோம். அவரது பல தொகுதிகளை வெளியிட்டோம். அக்காலம் எங்கள் நிருவனத்துடன் ஒப்பந்தத்தில் இருந்த கர்நாடக இசைப்பாடகி சங்கீதா சிவக்குமாரை டி எம் கிருஷ்ணா பிற்பாடு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் எங்கள் நிறுவனத்தை விட்டு விலகிச் சென்றனர். எங்கள் நிறுவனமும் பெருவாரியான மக்களைச் சென்றடைந்து பெரும் பணத்தை ஈட்டித்தராத கர்நாடக இசையிலிருந்து சற்றே விலகி வெகுஜென இசையின் பக்கம் சென்று விட்டது.

இந்த இருபதாண்டுகளில் எத்தனையோ இசைத்தொகுதிகளை வெளியிட்டும் உலகம் முழுவதும் சென்று எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தியும் சமகால கர்நாடக இசையின் மிக முக்கியமான ஓர் ஆண்குரலாக டி எம் கிருஷ்ணா தன்னை நிலைநாட்டினார். அவருக்கென்றே தனித்துவமான ரசிகர்கூட்டம் உருவானது. ஆனால் வெகுமக்களுக்கு அவரது பெயர் தெரியவந்தது இப்பொழுதுதான்! அதாவது கடந்த இரண்டு மாதங்களில்! அதன் காரணம் ஆசியாவின் நொபேல் பரிசு என்று அழைக்கப்படும் மக்சேசே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதையொட்டி எழுந்த விவாதங்கள்… வாக்குவாதங்கள்… சர்ச்சைகள்.. சண்டைகள்… 

இவ்விவாதங்களில் சிலர் முன்வைத்த ஒரு கருத்து டி எம் கிருஷ்ணா இந்த விருதிற்கு தகுதியானமுறையில் ஒரு சிறந்த பாடகர் அல்ல என்பதுதான். நண்பர் ஜெயமோகன் ஒருபடி மேலே சென்று சமகாலப் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம் அமரும் இருக்கையில் அமரும் தகுதிகூட டி எம் கிருஷ்ணாவிற்கு இல்லை என்று ஏதோ ஒரு வேகத்தில் எழுதினார்! நான் கர்நாடக இசையின் பெரும் ஆர்வலன் அல்ல. ஆனால் எந்த இசையை முன்நிறுத்தவேண்டும், எந்த இசையைப் பதிவு செய்யவேண்டும், யார் அதற்கு தகுதியான இசைஞன் என்றெல்லாம் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பில், இசைத் தொழிலுக்குள்ளே இருபதாண்டுகள் பணியாற்றியவன் நான். அனைத்திற்கும் மேலாக கேட்கும் இசையை மிகுந்த அவதானிப்புடன் கேட்பவன். எண்ணற்ற கர்நாடக இசைத்தட்டுகளை சேகரித்துவைத்து இன்றுவரைக்கும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருப்பவன். எனது இசை அனுபவத்தின், ரசனையின் அடிப்படையில் ஒரு தரமான பாடகர் என்றே டி எம் கிருஷ்ணாவை சொல்வேன்.

சஞ்சய் சுப்ரமணியமும் சிறந்த பாடகர். இவ்விரண்டுபேருமே கர்நாடக இசைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். சமகாலத்தில் கர்நாடக இசையை நிலைநிறுத்துவதற்கு பெரும் பங்கினை ஆற்றுபவர்கள். ஆனால் மறைந்த செம்மங்குடி, மதுரை மணி, கே வி நாராயண சுவாமி, அரியக்குடி போன்ற கர்நாடக இசையின் எக்காலத்திற்குமுரிய மாமேதைகளுடன் இவ்விரண்டு பேரையும் எந்தவகையிலுமே ஒப்பிட முடியாது என்றே நினைக்கிறேன். அதேநேரத்தில் குரல் வளம், பாடும்போது இசையின் செவ்வியல் தன்மையை முற்றிலுமாக கடைப்பிடித்தல், முன்னோடிகளின் பாணியை பின்பற்றுதல் போன்றவை டி எம் கிருஷ்ணாவின் தனிச்சிறப்புகள் என்றே சொல்லலாம். இவையனைத்தும் ஒருபக்கம் இருக்கட்டும். வேடிக்கை என்னவென்றால் டி எம் கிருஷ்ணாவிற்கு மக்சேசே விருது வழங்கப்பட்டது அவரது இசைச் சாதனைக்காகவோ இசைத் திறனுக்காகவோ அல்ல என்பது தான்.

’மேலெழுந்துவரும் தலைமை’ (Emergent Leadership) என்கின்ற பிரிவில்தான் கிருஷ்ணாவிற்கு மக்சேசே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன்முதலாக இவ்விருதினைப் பெற்ற இசைக்கலைஞர் என்று எம் எஸ் சுப்புலட்சுமியை சொல்வார்கள். 1976இல். ஆனால் அவருக்குமே சமூக சேவைப் பிரிவில்தான் இவ்விருது வழங்கப்பட்டது! இசைக்காக இந்தியாவிலிருந்து இவ்விருதினைப் பெற்றவர் சிதார் மேதை பண்டிட் ரவி ஷங்கர் மட்டுமே. எம் எஸ் சுப்புலட்சுமிக்கு அடுத்து இவ்விருதை இதுவரைக்கும் பெற்றுக்கொண்ட தமிழர்கள், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட எம் எஸ் சுவாமிநாதன் (1971 - சமூகத் தலைமை), டி என் சேஷன் (1996 - அரசுப் பணி), ஜோக்கின் அற்புதம் (2000 - அமைதி மற்றும் சர்வதேச ஒற்றுமை), சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவி மருத்துவர் வி சாந்தா (2005 – சமூக சேவை), குழந்தை ஃபிரான்சிஸ் (2012 – எந்த பிரிவு என்று கூறப்படவில்லை!) என்பவர்கள்தாம். இதில் ஜோக்கின் அற்புதம், குழந்தை ஃபிரான்சிஸ் ஆகியவர்கள் யார் என்றே இங்கே பலருக்கும் தெரியாது!
   
சமகால சமூகத்தில் நாணயமும் நேர்மையுமுள்ள ஆட்சிமுறை, எதற்குமே அஞ்சாமல் மக்களுக்கு சேவை செய்தல், மக்களாட்சிக்குள்ளே கடைப்பிடிக்கும் இலட்சியவாத நடைமுறைகள்… இவற்றுக்காகத்தான் மக்சேசே விருது வழங்கப்படுகிறது என்று அவ்விருதின் கொள்கைக் கோட்பாட்டில் எழுதியிருக்கிறது. ”ஜாதி மத பாகுபாடுகளால் பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தில், கர்நாடக இசையானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த இசையை அம்மக்களிடம் கொண்டு சென்று புரட்சிகரமான ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக டி எம் கிருஷ்ணாவிற்கு இந்த விருது வழங்கப்படுகிறது” என்று விருதின் தகுதியுரையில் நாம் வாசிக்கலாம்.

இதன் அடிப்படையில் டி எம் கிருஷ்ணாவின் செயல்பாடுகள் என்னென்ன என்று பார்க்கும்பொழுது கீழ்காணும் விடயங்கள் நமது கவனத்திற்கு வருகின்றன. கர்நாடக இசையில் காலம்காலமாக மேலோங்கும் பார்ப்பணிய ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் டிசம்பர் மாதத்தில் சென்னை சங்கீத சபாக்களில் நடக்கும் மார்கழி இசை உற்சவத்தை அவர் புறக்கணித்தார். அவற்றில் பாட மறுத்தார். சென்னையின் கடலோரப் பகுதியிலுள்ள உரூர் ஆல்கோட் குப்பம் எனும் மீனவச் சேரியில் இசை மற்றும் நடன விழாக்களை ஏற்பாடு செய்தார். அவ்விழாக்களில் கர்நாடக இசையுடன் பறை இசையும் பிற இசைகளும் இசைக்கப்பட்டன. பரத நாட்டியத்துடன் பலவகை நாட்டியங்களும் அரங்கேற்றப்பட்டன. கானா இசையின் தாளத்தில் டி எம் கிருஷ்ணாவும் அவரது மனைவியும் நண்பர்களும் இசைகேட்க வந்த மக்களுடன் இணைந்து கொண்டாட்ட நடனம் ஆடினர். 

இவையனைத்துமே முற்றிலும் தவறானவை என்றும் இத்தகைய செயல்பாடுகளால் எந்தவொரு புரட்சியோ சமூக மாற்றமோ நிகழப்போவதில்லை என்றும், இந்த செயல்கள் கவனத்தை ஈர்த்து விருதுகளை அடையும் ஒருவகை சூட்சி என்றும் ஒரு தரப்பினர் வாதாடுகிறார்கள். மற்றொரு தரப்பினரோ கர்நாடக இசை வரலாற்றில் முதன்முறையாக ஜாதிமத, உயர்வு தாழ்வு வேலிகளுக்கு வெளியே அவ்விசையை கொண்டுசெல்லவேண்டும் என்று வலியுறுத்தி, அதை செயல்படுத்திக் காட்டின முதல் இசைக் கலைஞன் கிருஷ்ணாதான் என்கிறார்கள். அவ்வகையில் இவ்விருதிற்கு அவர் முற்றிலும் தகுதியானவர் என்றே அவர்கள் வாதிடுகிறார்கள்.

கர்நாடக இசை அடிப்படையில் ஒரு பக்தி இசை. எண்ணற்ற கடவுளர்களைப்பற்றியான பக்திப்பாடல்களின் தொகுப்பு அது. பக்திதான் அந்த இசையில் மேலோங்கும் பாவம் அல்லது உணர்வு. ’சிருங்கார பாவம் அதாவது காமம் கலர்ந்த காதல் உணர்வை முதன்மையாகக் கொண்ட பல பாடல்கள், தான வருணங்கள், ஜாவளிகள் போன்றவை இருக்கிறதே’ என்று கர்நாடக இசை தெரிந்தவர்கள் சொல்லக் கூடும். ஆனால் அந்த சிருங்காரமுமே ஆண் பெண் கடவுளர்களுக்கிடையே நடப்பதே ஒழிய மனித சிருங்காரம் அல்ல. உதாரணமாக அன்னமாச்சார்யா இயற்றிய ’பலுகு தேனெலா தல்லி பவளிஞ்செனு’ எனும் ஆபேரி ராகப் பாடலில் சொல்லப்படுவது ஸ்ரீ வெங்கடேசனுக்கும் அவரது காதலியான அலர்மேல் மங்காவிற்கும் இடையேயான சிருங்கார லீலைகள் தாம். கிருஷ்ண பகவான் அவரது காதலிகளுடன் செய்யும் லீலைகளைப் பற்றியெல்லாம் எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன. அடிப்படையில் இவையனைத்துமே பக்தியின் விதவிதமான வெளிப்பாட்டுக்களே. இந்த பக்தியை வெளியே எடுத்தால் பின்னர் கர்நாடக இசையே இல்லை. ஒரு நாத்திகர் என்று தன்னை முன்நிறுத்தும் டி எம் கிருஷ்ணா பாடுவதும் இதே பக்திப் பாடல்களைத்தாம்!  

கர்நாடக இசைப்பாடல்களின் பெரும்பகுதி தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னட மொழிகளில் இருப்பதனால் அவற்றைப் பாடுவது தவிர்த்து கர்நாடக இசை தமிழ் மொழியில் பாடப்படவேண்டும் என்ற கொள்கையுடன் 1930 காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழிசை இயக்கத்தின் மீது கடுமையான வெறுப்பை வைத்திருந்தவர் சென்னை மியூசிக் அகாடமியை உருவாக்கியவர்களில் பிரதானியான டி டி கிருஷ்ணமாச்சாரி எனும் டி டி கே. அவரது நெருங்கிய மருமகன் முறை உறவினர் டி எம் கிருஷ்ணா. இளவயதில் கிருஷ்ணாவையே பலர் கிருஷ்ணமாச்சாரி என்றுதான் அழைத்து வந்தனர்! கிருஷ்ணாவின் குருவான செம்மங்குடியும் அவரை அவ்வண்ணமே அழைத்தார். செம்மங்குடியுமே தமிழிசையை நிராகரித்தவர்.

“இது தான் நல்ல இசை.. நீ இதைப் பாடு என்று பாமரர்கள் எங்களுக்குக் கட்டளையிட முடியாது. இசையில் ஜனநாயகம் என்பது ஒரு பெரும் தீமை. நாங்கள் எங்களது இசைஞானத்திற்கு எந்தச் செவ்வியல் கிருதிகளுக்கு கடமைப்பட்டிருக்கிறோமோ.. அவற்றைப் பாடாமல் இருப்பது பாவச் செயல்” என்று ஒரு காலகட்டத்தில் தெள்ளத்தெளிவாக கூறிய செம்மங்குடியிடமிருந்து கர்நாடக இசையின் நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்த டி எம் கிருஷ்ணா இன்று கர்நாடக இசையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்காக மக்சேசே விருதைப் பெற்றிருக்கிறார்! இதை ஓர் ஆச்சரியமாகத்தான் நான் கருதுகிறேன். ஆனால் ஒரு செவ்வியல் இசை வடிவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதன் தேவை என்ன என்பதில் எனக்கு பல சந்தேகங்கள் இருக்கின்றன.

செவ்வியல் இசையை ஒருபோதும் வெகுஜென இசையாக மாற்ற முடியாது. அது தேவையுமில்லை. ஏனெனில் வெகுஜென இசை எனும் பரவலான இசை பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. பழங்குடி இசையில் தொடங்கி, நாட்டுப்புற இசையாகி, ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான இசையாகி, வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு நாடுகளில் பலமுறைகளில் உருவாகி, பிறகு அவை ஒவ்வொன்றும் ஒன்று கலந்து, எடுத்தும் கொடுத்தும் உருவானது வெகுஜென இசை. அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இதே வெகுஜென இசையிலிருந்தே உருவானது செவ்வியல் இசை. கர்நாடக இசை ஓம் காரத்திலிருந்து பிறந்தது என்றோ அல்லது அது சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்தது என்றோ நம்ப விரும்பினால் நீங்கள் அதையே நம்பலாம்.

வெகுஜென இசையின் பரந்துபட்ட பாணிகளில் சிலவற்றை ஒரே திசையில் பயணிக்க வைத்து அதை மேலும் மேலும் அளவைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உள்ளாக்கி கடவுள் வழிபாட்டிற்காகவும் பக்தியைப் பரப்புவதற்காகவும் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டது கர்நாடக இசை. பயிர்ச்சிபெற்ற தனிமனிதர்களின் ரசனைக்காகவே அது  உருவானது. ஈடுபாட்டுடன் பயிர்ச்சியெடுத்து அதைத் தேடி வருபவர்களால் ரசிக்கக் கூடிய இசை இது. ஆனால் வெகுஜென இசையோ செவ்வியல் இசை உருவானபின் அதிலிருந்தும்கூட பலவற்றை உள்வாங்கி மேலும் மேலும் வளர்ந்து பரந்துகொண்டேயிருந்தது. அது இப்போதும் தொடற்கிறது. யாருமே வெகுஜென இசையைத் தேடிப் போக வேண்டியதில்லை. நாதச் செவிடர்களல்லாத (Tone Deaf) அனைவரிடமும் அது தானாகவே வந்து சேர்கிறது.

1930-50 காலகட்டத்தில் நமது திரைப்பாடல்களின் வாயிலாக கர்நாடக இசையின் எளிமைபடுத்தப்பட்ட வடிவங்கள் கூடுதலான மக்களை சென்றடைந்தது. அவ்விசையில் நாட்டம் இருந்தவர்களைதாம் அது பெருவாரியாக ஈரத்தது என்றாலும் கர்நாடக இசையை வெகுமக்களுக்குக் கொண்டுசெல்வதற்காக நடந்த மிகப்பெரிய புரட்சி இது ஒன்று மட்டுமே. ஆனால் அப்புரட்சியின் விளைவுமே அரைநூற்றாண்டுகாலம் கூட நீடித்திருக்கவில்லை. இன்று திரைப்பாடல்களிலிருந்து கர்நாடக இசை முற்றிலுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் கர்நாடக இசையின் இருத்தலை மீட்டெடுக்கும் விதமாக டி எம் கிருஷ்ணாவின் மீனவக் குப்பத்து இசை நிகழ்ச்சிகள் அமைந்தால் அது நல்ல விஷயம். ஆனால் அது சாத்தியப்படுமா?

டி எம் கிருஷ்ணா மக்சேசே விருதினை கையில் வாங்கிவிட்டார். அதுபற்றியான சர்ச்சைகளும் விவாதங்களும் அடங்கி விட்டன. இசைவழியாக ஜாதி மத வேறுபாடுகளில் இங்கே எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஏன் என்றால் ’நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்பது அடக்கியாளுதலை விரும்பும் மனிதனின் அதிகார வேட்கை. அது ஓர் ஆழ்மனநிலை. சிலபல காரணங்களினால் நாம் வெளியே காட்டாமல் மறைத்துவைத்திருப்பது. அவ்வப்போது வெளியே எடுப்பது. நமக்குள்ளே மேலோங்கிக்கொண்டேயிருப்பது. இந்த அவல மனநிலை மாறாமல் இங்கே ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே மறையப்போவதில்லை. இசையின் மென்மைக்கு இதில் எங்கே இடமிருக்கிறது?