20190113

பிரபஞ்சனும் நானும்



“நமது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரபஞ்சனையும் அழைப்போமே. உங்களது கட்டுரைகளை எல்லாம் படித்துப் பாராட்டி அடிக்கடி என்னிடம் பேசுவார்” என்று சொன்னார் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மானுடம் வெல்லும், வானம் வசப்படும், சில சிறுகதைகள் என ஓரளவுக்குப் பிரபஞ்சனை படித்திருக்கிறேன். அவரது எளிமையான மொழிநடையும் பாத்திரப் படைப்புகளும் எனக்குப் பிடித்தமானவை. ஆனால் அதுவரை நான் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அவர் ஒரு திரையிசைப் பிரியர், முற்போக்கு எண்ணங்கள்கொண்ட கறாரான நாத்திகர் என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எனது ‘சொல்லில் அடங்காத இசை’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றேன்.

ஓர் உணவுவிடுதியில் நிகழ்ந்தது அச்சந்திப்பு. வடிவான நீல வண்ண ஜிப்பா அணிந்து நறுமணங்களைப் பூசி குளிர் கண்ணாடியை வைத்து மெலிந்து உயர்ந்த மனிதராக பிரபஞ்சன் காட்சியளித்தார். எண்ணற்ற வெண்சுருட்டுகளைப் புகைத்துத் தள்ளிக்கொண்டு, பலகுவளை ஃபில்டர் காப்பிகளை குடித்து முடித்தவாறு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் என்னிடம் பேசினார். பலகாலமாகத் தெரிந்த இரண்டு நண்பர்கள் பேசுவதுபோல் இலக்கியம், இசை, வரலாறு, இதழியல் எனப் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருந்தோம்.

எம் எஸ் விஸ்வநாதன், பி பி ஸ்ரீநிவாஸ், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன் போன்றவர்களுடன் பிரபஞ்சனும் புத்தக வெளியீட்டுவிழா மேடையை அலங்கரித்தார். புத்தகத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். இத்தகைய எழுத்து தமிழுக்கே புதுசு என்று பேசினார். புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் பேசிய நாத்திகச் சாயலுள்ள ஒரு கருத்தை, தனது உரையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார் நாஞ்சில்நாடன். அப்போது பிரபஞ்சன் என் காதில்இவருக்கு திடீர்னு என்னாச்சு?” என்று சிறு புன்னகையுடன் கேட்டார். அதன்பின் பிரபஞ்சனுடன் எத்தனையோ சந்திப்புகள். உரையாடல்கள். எனது புத்தகத்திற்கு அவர் விரிவான மதிப்புரை ஒன்றை எழுதினார். அவரது பீட்டர்ஸ் சாலை இல்லத்திலும் வேறு வேறு உணவு விடுதிகளிலும் நாங்கள் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம்.

பழைய ஹிந்திப் பாடல்களின்மேல் பிரபஞ்சனுக்கு நாட்டம் இருந்தது. ஒருமுறை ரோஷன், மதன்மோகன் போன்றவர்கள் இசையமைத்த, என்னிடம் இல்லாத சில தொகுப்புகள் அவரிடம் இருப்பதைக் கண்டேன். “உங்கள் கட்டுரைகளைப் படித்த ஆர்வத்தில் பம்பாயிலிருந்து ஒரு நண்பர் வழியாக வரவைத்தேன்என்றார். அவற்றைப் பதிவெடுக்க நான் இரவல் வாங்கினேன். ஆனால் சொன்ன நேரத்திற்குத் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. அதற்காக என்மேல் சற்று கோபமானார். பிரபஞ்சனுக்குள்ளே ஒரு கோபக்காரரும் இருப்பதை  உணர்ந்தேன். இருந்தும் எங்கள் நட்பு ஒவ்வொருநாளும் மேம்பட்டுக்கொண்டேபோனது.

அக்காலத்தில் பிரபஞ்சனையும் என்னையும் சிங்கப்பூர் நண்பர் பரணி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார். முதலில் எஸ் ராமகிருஷ்ணனும் நானும் செல்வதாக இருந்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ராமகிருஷ்ணனால் வரமுடியாமல்போனபோது தான் வருவதாகப் பிரபஞ்சன் ஒப்புக்கொண்டார். விமான நிலையத்தில் நாங்கள் இருவரும் சந்தித்தபோது பிரபஞ்சன் ஊக்கமிழந்து காணப்பட்டார். “எனக்கு ஏனோ இந்தப் பயணம் சுவாரசியமாக இல்லைஎன்றார். டைகர் ஏர்வேய்ஸ் எனும் சிக்கன விமானத்தில்தான் பயணம். அதில் குடிக்கும் தண்ணீரைக் கூடப் பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் நான் குடிக்கும் தண்ணியை வாங்கினேன். ஒரு புட்டி ஷிவாஸ் ரீகல் விஸ்கி!

அதிலிருந்து இரண்டு மூன்று லார்ஜ்களை மடமடவெனக் குடித்தோம். சற்றுநேரத்தில்இப்போ நல்லாருக்குஎன்றார் பிரபஞ்சன். “பயணம் சுவாரசியமாச்சா?” என்று கேட்டபோது. “சுவாரசியமோ சுவாரசியம்..” என்றார் வெள்ளந்தியான சிரிப்புடன். “னோ றிய்யேன் தோ றிய்யேன் நோன் ழே நே ரிக்ரெற்றொ றிய்யேன்…” நான் பாடத் தொடங்கினேன். “அட! உங்களுக்கு ஃபிரென்சும் தெரியுமா?” என்று வியந்தார் பிரபஞ்சன்.இல்ல சார்.. நீங்க ஒரு ஃபிரெஞ்சுகாரர் தானே. அதனால எனக்குத் தெரிஞ்ச ஒரேயொரு ஃபிரென்சு பாட்டை எடுத்துவிட்டேன்என்றுச் சொன்னேன். பிரபஞ்சன் மகிழ்ச்சியுடன் தாளம் தட்டி ரசித்தார். பிறகெப்போதோ குறட்டைவிட்டுத் தூங்கத் தொடங்கினார்.

ஆவணங்களின் அடிப்படையில் பிரபஞ்சன் தமிழ்நாட்டுக்காரரோ இந்தியரோ அல்லர். அவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்! அவரே விரிவாக எழுதிய, அவர் பிறந்து வளர்ந்த நிலப்பகுதியின் வரலாற்றுப் பின்புலம்தான் அதன் காரணம். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலம் ஃபிரான்ஸ், ஹாலந்து, இங்கிலாந்து என மாறி மாறி மூன்று வெள்ளை வெளிநாட்டவர்களின் குடியேற்ற நிலப்பகுதியாக இருந்து, இறுதியில் 140 ஆண்டுகாலம் ஃபிரான்ஸ் நாட்டின் பகுதியாகவே இருந்த பாண்டிச்சேரியில் 1945 ஏப்ரல் 26ஆம் தேதி பிறந்தவர் பிரபஞ்சன். இயர்பெயர் சாரங்கபாணி வீரபத்திரன் வைத்திலிங்கம்.

1954ல் பாண்டிச்சேரி இந்தியாவின் பகுதியாக மாறுகிறது. அப்போதுமே அது இந்தியாவை விட ஃபிரான்ஸாகத்தான் இருந்தது. 1963இல் பாண்டிச்சேரி மக்களுக்கு ஃபிரான்ஸ் நாடு ஓர் அறிக்கை விட்டது. அவர்கள் ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு ஃபிரான்ஸ் நாட்டிற்குக் குடியேறலாம். அல்லது ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் எனும் அந்தஸ்துடன் பாண்டிச்சேரியிலேயே வாழலாம். நுழைவனுமதிச் சீட்டு இல்லாமலேயே எந்தநேரமும் ஃபிரான்ஸ் செல்லலாம். ஃபிராங்கோ–பாண்டிச்சேரியர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அந்த அந்தஸ்தை அடைவதற்குச் சிலபல சட்டதிட்டங்கள் முனவைக்கப்பட்டன.

அதில் ஒன்று தமது பெயரின் எழுத்துகளை ஃபிரெஞ்சு மொழிக்கு இணங்குவதுபோல் மாற்றவேண்டும் என்பது. அதாவது கிருஷ்ணமூர்த்தி Kichenamourty ஆகவேண்டும். குமார் Coumer ஆகவும் வீரபத்திரன் Virapattirane ஆகவும் மாறவேண்டும். இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்வதாக அவர்கள் எழுதித்தரவேண்டும். ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்களாக மாற ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்தது பிரபஞ்சனின் குடும்பம். பிரபஞ்சனின் இயற்பெயரின் ஆங்கில எழுத்துகள் Sarangabany Dit Virapattirane Vaithilingam. பிற்காலத்தில் அவரது இரண்டு மகன்கள் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்குவதற்கான சூழல் உருவானதுமே பிரபஞ்சனுக்குப் பரம்பரையாகக் கிடைத்த இந்த ஃபிரான்ஸ் நாட்டுக் குடியுரிமையினால்தான்.
     
ஒருவாரம் நீண்ட எங்களது சிங்கப்பூர் பயணத்தில் சிங்கப்பூர் தேசிய நூலகம், அங் மோ கியோ நூலகம் எனப் பல இடங்களில் நடந்த கூட்டங்களில் நாங்கள் பேசினோம். சிங்கப்பூரின் பசுமைச் சாலைகளில் பலமணிநேரம் நடந்து திரிந்தோம். இசை, இலக்கியம், வரலாறு, கிசு கிசு எனப் பரந்து விரிந்த உரையாடல்கள். நடுவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள். அதிலும் முக்கியமாக டி எம் எஸ் பாடல்கள். ’இந்தப் பாடல் தெரியுமா? அந்தப் பாடல் தெரியுமா?’ என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்பார். தெரிந்ததும் தெரியாததுமான எத்தனையோ பாடல்களை அவருக்காக நான் பாடினேன்!

நான் சந்திக்கும் காலத்தில் பிரபஞ்சன் எழுத்தை மட்டுமே நம்பித்தான் வாழ்ந்துவந்தார். முன்பு ஓர் இதழாளராகவும் சில தொலைக்காட்சிகளின் ஆலோசகராகவும் வேலை செய்திருக்கிறார் எனபது தெரியும். குமுதத்திலிருந்து பிரிந்த பின்னர் சொல்லும்படியாக எங்கேயும் அவர் வேலை செய்யவில்லை என்றே நினைக்கிறேன். எழுத்தின் வழியாக அவ்வப்போது கிடைக்கும் சிறு ஊதியத்தையும் மேடைப்பேச்சுக்களுக்காக வழங்கப்படும் சன்மானத்தையும் வைத்துக்கொண்டு ஒருவர் வாழ்க்கையை நடத்த முடியாது. அதுவும் பிரபஞ்சன் போன்ற ரசனையான ஒரு மனிதர். அவரை ஆதரிக்கும் வாசக நண்பர்களின் உதவிகள் அவருக்கு முக்கியமானவையாக இருந்தன. அத்தகைய ஒருவர்தான் எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற பரணீதரன். பிரபஞ்சனுக்குப் பலவகையான உதவிகளைச் செய்தவர் அவர்

பரணியின் வீட்டில் ஒருநாள் இரவு இரண்டுமணிக்குப் பிரபஞ்சனுக்கும் பரணிக்குமிடையே எதிர்பாராமல் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. எரியும் தீயில் விஸ்கியையும் ஊற்றிக்கொண்டிருந்ததால் அந்த வாக்குவாதம் கை மீறிப் போனது. “ஒரு கடைக்கோடி வாசகனாக நான் உங்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள்?” என்று ஏதோ ஒரு வேகத்தில் பரணி கேட்டு விட்டார். பிரபஞ்சன் மௌனமானார். ஆனால் எனக்குக் கோபம் தலைக்கேறியது. “ஓர் எழுத்தாளனால் வாசகனுக்குத் தர முடிந்தது அவனுடைய எழுத்துக்கள் மட்டுமே. வேறு எதைத் தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்? பிரபஞ்சன் சார்.. இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு நீங்கள் ஒரு கணம்கூட இவரது வீட்டில் தங்கக் கூடாது. நாம் இப்போதே இங்கிருந்து கிளம்புவோம்என்று நான் பெட்டி படுக்கையை எடுத்தேன். ஆனால் பிரபஞ்சன் அமர்ந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. எனது குரல் மேலும் உரத்தபோது பரணி பிரபஞ்சனின் கால்தொட்டு மன்னிப்புக் கேட்டார். அத்துடன் எல்லாம் சமாதானமாயின.

ஒருமுறை ஜெயமோகனும் நானும் சத்யம் திரையரங்கிலிருந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோதுபடமோ சகிக்கமுடியவில்லை, பக்கத்திலிருக்கும் பிரபஞ்சனை சந்திக்கப் போகலாமா?” என்று கேட்டேன். அக்காலத்தில் சிலபல மனஸ்தாபங்களால் பிரபஞ்சனும் ஜெயமோகனும் மனதளவில் மிகவும் விலகி இருந்தனர். அதனாலேயே நான் அப்படிக் கேட்டேன். முதலில் மறுத்தார் என்றாலும் சிலநிமிட யோசனைக்குப்பின் என்னுடன் வரவே செய்தார் ஜெயமோகன். நாங்கள் பிரபஞ்சனின் கதவைத் தட்டினோம். ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கப் போகும் நேரத்தில் எரிச்சலோடு கதவைத் திறந்து பார்த்த பிரபஞ்சன் எங்களை, குறிப்பாக ஜெயமோகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மகிழ்ந்தார்.

அவர் குளிக்கப்போன நேரத்தில் ஜெயமோகனும் நானும் அந்த அறையின் நாலாபக்கமும் குவிந்துகிடந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களிலிருந்து சிலவற்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தோம். அழகான வெள்ளை வண்ண ஜிப்பாவைப் போட்டு நறுமணங்கள் பூசிக்கொண்டு புது மலர்ச்சியுடன் வந்தமர்ந்தார் பிரபஞ்சன். அவரும் ஜெயமோகனும் பலமணிநேரம் பேசினார்கள். கீழடி, கீழ்வளை, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்டசோழபுரம் என அவர்களது பேச்சு எனக்குப் பெரியளவில் பிடிப்பில்லாத தொல்பொருளியல் குறித்துத்தானிருந்தது. நான் மௌனமாகக் கேட்டுகொண்டிருந்தேன். நடுவே அந்த உரையாடல் ஓவியங்களுக்குத் திரும்பியபோதுஒரு மிகச்சிறந்த ஓவியனாக வரவேண்டியவன் எனது இரண்டாவது மகன். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட அவனால் இன்று ஒரு புள்ளியைக் கூட வைக்க முடியவில்லை’ என்று கண்கலங்கினார் பிரபஞ்சன்.

மனிதமனம் மிகவும் சிக்கலானது. அதன் பாதைகளை யார் கண்டார்! உங்களுக்குக் கட்டற்ற இலக்கியப் படைப்பு மனத்தை அளிக்கும் அதே மரபணுதான் அவனுக்குள் ஒரு நோயாக வெளிப்படுகிறது! என்ன செய்வதுஎன்று சொன்னார் ஜெயமோகன். பின்னர் பிரபஞ்சனின் மகனின் சிகிச்சைக்காகப் பல யோசனைகளை நான் அவருக்கு வழங்கினேன். பெங்களூருவின் நிம்ஹான்ஸ் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் எனக்குப் பரிச்சயமானவர்கள். அங்கு கொண்டுசென்று சிகிச்சை பெற்றால் அவன் குணப்பட சாத்தியங்கள் இருப்பதைச் சொன்னேன். அதற்காகச் சில ஏற்பாடுகளையும் முன்னெடுத்தேன். ஆனால் அதுநாள் வரை அவன் எடுத்த பரிசோதனைகளின், சிகிச்சைகளின் மருத்துவக் குறிப்புகளை அங்கே வழங்கவேண்டும். கூடுமானவற்றை உடனடியாகத் திரட்டுங்கள், நாம் மூவரும் என் வாகனத்திலேயே பெங்களூரு செல்லலாம் என்று பிரபஞ்சனிம் சொன்னேன். ஆனால் அவரால் அவற்றைத் திரட்ட முடியவில்லை. பின்னர் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.

மலேசியா வாசுதேவன், மணிரத்னம், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் பங்கேற்ற எனது இரண்டாவது புத்தக வெளியீட்டு விழாவில் அக்காலத்தில் எனக்கு எதிராக உயர்ந்துகொண்டிருந்த குரல்களைக் கண்டித்துப் பேசினார் பிரபஞ்சன். இத்தகைய காலாச்சார பாசிசத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று பேசினார். தமிழில் ஓர் எழுத்தாளனாக நான் வருவதற்கு அடிப்படைக் காரணமாகயிருந்த ஜெயமோகன் கூட எனக்கெதிராகப் பேசிய மேடை அது. ஆனால்இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் மட்டுமல்ல இசைக்கும் ஷாஜி எழுதுவதுபோன்ற விமர்சனப்பார்வைகள் மிக அவசியம்என்று தீர்மானமாகப் பேசினார் பிரபஞ்சன்.

மிஷ்கின் இயக்கியயுத்தம் செய்’ திரைப்படம் தயாராகிக்கொண்டிருந்தகாலத்தில் பிரபஞ்சனும் மிஷ்கினும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்படத்தின் தொடக்கத்தில்நன்றி : எழுத்தாளர் பிரபஞ்சன்என்று காட்டப்படும். படத்தின் இறுதிக் காட்சியில் பிரபஞ்சனின் குரலை ஒரு நீதிபதியின் குரலாகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் மிஷ்கின். பிரபஞ்சனும் மிஷ்கினும் நானும் சேர்ந்துதான் அப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தோம். படம் முடித்து பிரபஞ்சனும் நானும் திரும்பிக்கொண்டிருந்தோம். “ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் எனது மகனுக்கு அங்கே பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கு. ஒவ்வொரு மாதமும் அவனுக்கு 35000 ரூபாய் அனுப்ப வேண்டியிருக்கு. நீங்கள் மிஷ்கினிடம் இதை எடுத்துச் சொல்லி எனக்கு உதவக் கேட்க முடியுமா? நேரடியாக இதை அவரிடம் கேட்க எனக்கு சங்கோஜமா இருக்குஎன்று என்னிடம் சொன்னார். அதை நான் மிஷ்கினிடம் சொன்னேன். சில மாதங்கள் மிஷ்கின் அவருக்கு அத்தொகையைக் கொடுக்கவும் செய்தார்.

இதே காலத்தில் மிஷ்கினும் பிரபஞ்சனும் சேர்ந்து பல ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகளை மொழிபெயர்த்தனர். அத்தொகுப்பைநத்தை போகும் பாதையில்என்ற தலைப்பில் வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் மிஷ்கினும் நட்பில் இருந்தனர். ’நந்தலாலா’ திரைப்படத்தை வெகுவாகக் கொண்டாடியவாறு சாரு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ’யுத்தம் செய்’ படத்தில் வரும்கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா?’ எனும் பாடலில் ஹார்மோணியம் இசைக்கும் தெருப்பாடகனாக நடிக்கவும் செய்திருந்தார். மிஷ்கினுக்கும் பிரபஞ்சனுக்குமான நட்பு வலுவாகிக்கொண்டிருந்த காலத்தில் சாரு என்னிடம்மிஷ்கின் நமது அலைவரிசையில் உள்ள ஒரு பின்நவீனத்துவக் கலைஞன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஏன் பல பதிற்றாண்டுகள் பழமையான பிரபஞ்சனைப் போன்ற ஓர் எழுத்தாளரைத் தூக்கிப்பிடிக்கிறார்?” என்று கேட்டார்.

இதைவிடவெல்லாம் பலமடங்கு கடுமையான விமர்சனங்கள் நிகழுமிடம்தான் தமிழ் இலக்கியச் சூழல். சாரு நிவேதிதா தனது இலக்கியப் பார்வையின் அடிப்படையில் அதைச் சொன்னார். அதில் வருத்தமடைவதற்கு ஒன்றுமில்லை என்றபோதிலும் எனக்கு அது நெருடலாகவே இருந்தது. ஏனென்றால் கலையிலும் இலக்கியத்திலும் எதையுமே பொத்தாம்பொதுவாகப்பழசு புதுசு’ என்று வகைமைப்படுத்த முடியாது என்பது என்னுடைய கருத்து. சில நாட்கள் கழித்து யுத்தம் செய் படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக மிஷ்கினின் அலுவலகத்தில் நிகழ்ந்த ஒரு மது விருந்தில் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த பேச்சு எழுந்தபோது நான்கலையில் எது காலாவதியானது, எது சமகாலத்தில் உள்ளது என்று எப்படிக் கணிக்க முடியும்? டோள்ஸ்தோயும் தோஸ்தோவ்ஸ்கியும் காலாவதியானவர்களா? 330 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாக்ஹெல்பெல்லின் இசையை நந்தலாலாவின் மைய இசையாக மிஷ்கின் பயன்படுத்தினாரே! அது அற்புதமாகவும் அமைந்ததே. பிரபஞ்சன் காலாவதியானவர் என்று சொல்கிறீர்கள்! அப்படியானால் அதைக் காரணத்தோடு விளக்குங்கள் பார்க்கலாம்என்று பேச ஆரம்பித்தேன். ஆனால் அத்தகைய ஒரு விவாதத்தைத் தெளிவுடன் மேற்கொள்வதற்கான இடம் மதுபோதை பொங்கிவந்துகொண்டிருந்த அச்சூழலில் இருக்கவில்லை.

அந்த நிகழ்வுக்குப்பின் பிரபஞ்சன் என்னுடனிருந்த தொடர்பைத் துண்டிக்கத் தொடங்கினார். என்னை எங்கு பார்த்தாலும் முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தார். பலமுறை நான் அவரது பின்னால் சென்று அவர் அப்படிச் செய்வதற்கான காரணத்தைக் கேட்டேன். அவர் என்னிடம் பேசவே முன்வரவில்லை. மாறாகப் பொது இடங்களில் என்னை அவமதிக்கவும் தொடங்கினார். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நண்பர் எஸ் கே பி கருணாவும் நானும் உள்ளே செல்லும்போது அங்கு நின்றுகொண்டிருந்த பிரபஞ்சனைப் பார்த்து அருகே சென்றோம். என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அவர் கருணாவிடம்  பேசிக்கொண்டிருந்தார். கருணாவுக்கு ஒரே வியப்பு. “சார் உங்களுக்கு ஷாஜியைத் தெரியலையா?’ என்று கேட்டார். அப்போதுஷாஜி யார் என்றும் அவன் எப்படிப்பட்டவன் என்றும் எனக்குத் தெரியும்என்று கடுமையாகச் சொன்னார் பிரபஞ்சன்எதனால் இவர் இப்படிச் செய்கிறார் என்று எனக்குப் புரியவேயில்லை. இன்றைக்கு இதன் உண்மையைத் தெரிந்தே ஆகவேண்டும்! நான் பிரபஞ்சனின் பின்னால் சென்றேன். வம்சி பதிப்பகத்தின் கடைக்கு முன்னால் அமர்ந்து கே வி ஷைலஜாவுடன் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனிடம்எதற்காக நீங்கள் என்னை இப்படி நடத்துகிறீர்கள்? என்னால் முடிந்த எல்லாவற்றையும்  உங்களுக்குச் செய்தேனே ஒழிய உங்களுக்கெதிராக எதுவுமே நான் யோசித்தது கூட கிடையாதேஎன்று சொன்னேன்.

அப்போது அவர்அந்த விருந்தில் நீங்கள் என்னிடம்நீ பேசாம சும்மா கெடடாஎன்று சொன்னீர்கள்” என்றார்! எனக்கு மண்டை வெடிப்பதுபோல் இருந்தது. யாரிடமுமே அப்படியொரு தொனியில் ஒருபோதும் பேசாத நான் பெருமதிப்பிற்குரிய பிரபஞ்சனிடம் அப்படிச் சொல்வேனா? இது உண்மைக் காரணமில்லை, இவர் எதையோ மறைக்கிறார் என்றே எண்ணினேன். “யாரிடமுமே அப்படிப்பட்ட மொழியில் பேசமாட்டேன். மிகவும் உயர்வான இடத்தில் நான் வைத்திருக்கும் மனிதர் நீங்கள். இருந்தும் குடிபோதையில் நான் எதையோ உளறி அது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்என்று சொல்லி அவரது கால்தொட்டு மன்னிப்புக் கேட்டேன். “சரி.. இருக்கட்டும்.. இப்ப நிம்மதியாப் போங்கஎன்று என்னை அனுப்பி விட்டார்.

மீண்டும் சில இடங்களில் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் என்னை முற்றிலுமாகப் புறக்கணித்தே நடந்து சென்றார். ஓர் இலக்கிய மேடையில் அவர் பேசும்போது அரங்கின் முன்வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, பேசிவந்த உரையுடன் சம்பந்தமில்லாமல்விஸ்கி ஒரு அற்புதமான விஷயம். ஆனால் அதை பொறுக்கிகள் குடித்தால் என்னவாகும்! எனது தலையெழுத்தைப் பாருங்கள், எவன் எவன் கூடவெல்லாம் நான் கைகுலுக்க வேண்டியிருக்குஎன்று பேசினார். அன்றிரவு நான் எங்கள் பொது நண்பரான பவா செல்லதுரையை அழைத்துஇவர் இப்படியே பண்ணிக்கொண்டிருப்பது எனக்குப் பிராண சங்கடமாகயிருக்கிறது. ஏன் இவர் இதைத் தொடர்ந்து செய்கிறார் என்று அவரிடமே கேட்டு நீங்கள் எனக்குச் சொல்லியே ஆகவேண்டும்என்று சொன்னேன். மறுநாள் பவா என்னை அலைபேசியில் அழைத்துபிரபஞ்சன்காலாவதியாகிப்போன ஓர் எழுத்தாளர்’ என்று நீங்கள் சொன்னதாக அவர் சொல்கிறார்என்றார்.

அப்படியொரு கருத்தை அவரது எழுத்துகளையெல்லாம் ஆழ்ந்து படிக்காமல் நான் எப்படிச் சொல்லமுடியும்? குறிப்பாக சமகாலத்தில் அவர் எழுதிவருவது எதையும் நான் படிக்கவில்லையே! அந்த மது விருந்தில் சாரு நிவேதிதாவிடம் நான் பேசியதிலிருந்த ஒருவரியை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு, அந்த ஒட்டுமொத்த உரையாடலையும் தவறாகப் புரிந்துகொண்டு அவர் இப்படி என்னிடம் நடக்கிறார் என்பதை உணர்ந்தேன். உண்மையில் நான் பேசியது என்னவென்றும் ஏன் அப்படி பேசினேன் என்றும் அவரிடம் விளக்கப் பலமுறை முயன்றேன். பவா, கருணா, மிஷ்கின் போன்ற பொது நண்பர்களும் என்மேலான அவரது தவறான எண்ணத்தைச் சரிசெய்ய முயன்றார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எதையுமே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபஞ்சனுக்கும் எனக்குமான நட்பு என்றைக்குமாக முறிந்துபோனது.

அவர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அங்கு சென்று அவரைப் பார்க்க நினைத்தேன். ஆனால் அது  அவருக்கு மேலும் மன அழுத்தத்தைத் தருமோ என்ற அச்சத்தினால் நான் செல்லவில்லை. மருத்துவச் செலவுகளை ஏற்று தினமும் அவரைச் சென்று பார்த்துக்கொண்டிருந்த மிஷ்கினிடம் இதைச் சொல்லிப் புலம்ப மட்டுந்தான் என்னால் முடிந்தது. நான்கு மாதங்களுக்கு முன்புநுரையீரல் புற்றுநோயினால் அவதிப்பட்டு பாண்டிச்சேரி மருத்துவமனையில் இருக்கிறார் பிரபஞ்சன், நிலைமை கவலைக்குரியது என்று பவா செல்லதுரையும் நண்பர் போப்புவும் சொன்னபோது பவாவுடனோ போப்புவுடனோ சென்று பிரபஞ்சனைச் சந்திக்கவேண்டும் என்றே எண்ணினேன். ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. எனது வருகை அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கினால்? என்னைப் பார்த்து அவர் மீண்டும் முகம் திருப்பினால்?

தமிழில் எழுதவந்த காலத்தில் ஓர் எழுத்தாளனாக என்னை ஊக்குவித்தவர் பிரபஞ்சன். அவருடன் நட்பில் கழித்த பகலிரவுகளை வாழ்வின் பொக்கிஷமாகவே நினைப்பவன் நான். ஆனால் இறுதியாக ஒருமுறை என்னால் அவரைப் பார்க்கமுடியவில்லை. பிரபஞ்சன் இவ்வுலகைவிட்டேசென்றுவிட்டார். தனது எழுத்துகள் வழியாக மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்திய பிரபஞ்சனால், பலரையும் மன்னித்து அரவணைத்த பிரபஞ்சனால் என்னை மட்டும் ஏன் மன்னிக்க முடியவில்லை? அவரது ஆழ்மனதைப் புண்படுத்துமளவில் அப்படி என்ன தவறு செய்தேன்? அந்தக் குழந்தை உள்ளத்தில் நான் எத்தகைய இடத்தைப் பிடித்திருந்தேன் என்று மட்டுமே என்னால் உணர முடிகிறது. ஷாஜி என்னை இப்படிச் சொல்லிவிட்டானே என்று நினைத்துக்கொண்டு போய்விட்டீர்களே பிரபஞ்சன் சார்! உங்களையும் என்னையும் இணைத்த தமிழ் எழுத்துகளின் வாயிலாக இதோ இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எனது காதலுக்குரியவர். எனது கண்ணீர் அஞ்சலியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்…

நன்றி : உயிர்மை