20090714

மைக்கேல் ஜாக்ஸன் - ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்

ஆந்திராவின் ஒரு குக்கிராமத்தில் ஒரு தையல்க் கடையில் தொப்பி அணிந்த ஒரு முகத்தின் கோட்டுச்சித்திரம் இருந்தது. அது யார் என்று தெரியுமா என்று அங்கே நின்ற சட்டைபோடாத சின்னப்பையனிடம் கேட்டேன். 'வாரு மைக்கேல் ஜாக்ஸன்' என்றான். சோமாலியாவிலோ பிலிப்பைன்ஸிலோ ஒரு குக்கிராமத்து சவரக்கடையில் அதே படம் இருக்கலாம். அங்கே உள்ள பத்துவயதுப்பையனிடம் கேட்டால் அவனும் சரியான பதிலைச் சொல்வான்.

உலகம் முழுக்க தெரிந்த அந்த முகம் மைக்கேல் ஜாக்ஸன் உருவாக்கிக் கொண்ட ஒரு குறியீடு. இப்போது அந்த முகத்தையும் தன் குரலையும் மட்டும் விட்டுவிட்டு அவர் விலகிச்சென்றுவிட்டிருக்கிறார். உலகில் அனேகமாக எல்லா குழந்தைகளுக்கும் தெரிந்த மைக்கேல் ஜாக்ஸன் குழந்தைப்பிராயமே இல்லாமல் வாழ நேரிட்டவர். ஒரு குழந்தையாக குழந்தைகள் நடுவே வாழ விரும்பியவர்.

முழு உலகமே பாப் இசையின் முதல்பெரும் நட்சத்திரமாக மதித்துப்போற்றிய மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அறுபது பாட்டும் தான் பாடியிருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்முடைய பல பாடகர்கள் பத்தாயிரத்துக்கும் மேல் பாடல்களை பாடியிருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க வேறெந்த மனிதரைவிடவும் அதிகமான புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்ஸனை ஏராளமான இசைரசிகர்கள் வெறுக்கவும் செய்தனர். எண்பதுகளின் கடைசியில் ஐதராபாதில் ஒரு ஆங்கில பாப் இசைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த நானும் அவர்களில் ஒருவன். 'பாட்டைவிட பகட்டு ஜாஸ்தி' என்பதுதான் அப்பொழுது அவர்மேல் எங்கள் குற்றச்சாட்டாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான நடனக்காரர் என்பதில் எங்களுக்குச் சந்தேகமிருந்ததில்லை. ஆனால் ஒரு பாட்டைக் 'கேட்காமல்' அதை 'பார்ப்பது' எங்களுக்கு உடன்பாடானதாக இருக்கவில்லை.

அவரது வேகமான நடனப் பாடல்களில் அவர் அள்ளி இறைக்கும் 'ஊ' 'ஆ' போன்ற சத்தங்களை நாங்கள் எப்படியெல்லாம் பகடிசெய்வோம் என நினைத்துக்கொள்கிறேன். 'ஒரு நல்ல நடனக்காரர் எப்படி ஒரு நல்ல பாடகராகவும் இருக்கமுடியும்? என்பதுதான் நாங்கள் அவரை நிராகரிப்பதற்கான காரணமாக இருந்தது. ஆனால் மேடை நிகழ்ச்சிகளில் அவரது 'பில்லீ ஜீன்' போன்ற பாடல்களை நாங்கள் பாடியே ஆகவேண்டும். ரசிகர்கள் அவற்றை திரும்பத் திரும்ப கேட்பார்கள்.

அப்போதுதான் அவரது மிகப்பிரபலமான இசைத்தொகுதி 'டேஞ்சரஸ்' வெளிவந்தது. அதை போகிற போக்கிலேயே கேட்டேன். ஆனால் அது சட்டென்று என் கண்ணைத்திறந்தது. அந்த ஒலிநாடாவின் முதல் பக்க இறுதியிலும் இரண்டாம் பக்க தொடக்கத்திலும் முக்கியத்துவம் குறைத்து போடப்பட்டிருந்த பல பாடல்கள் மிக அற்புதமாக இருந்தன. அதைத்தொடர்ந்து அவரது பழைய இசைத்தொகுதிகளை தேடி எடுத்து கேட்க ஆரம்பித்தேன்.

அவற்றிலும் இரண்டாம் பகுதியில் உள்ள பாடல்கள் ஆத்மா கசியக்கூடியவையாகவும் அபூர்வமான படைப்பூக்கம் கொண்டவையாகவும் இருப்பதைக் கவனித்தேன். மிக மென்மையான உள்ளம் உருக்கக்கூடிய இன்னிசைப்பாடல்கள். உலகம் முழுக்க உள்ள பல்வேறு செவ்வியல் மற்றும் ஜனரஞ்சக இசைவடிவங்களை மிகநுட்பமாகக் கலந்து அவை உருவாக்கப்பட்டிருந்தன. அவர் தன்னுடைய நடனப்பாடல்களை உரக்கமாகவும் ஆவேசமாகவும் அமைத்துவிட்டு இன்னிசைப்பாடல்களை மென்மையாகாவும் ஆத்மார்த்தமாகவும் வடித்து வந்தார் என்பதுதான் உண்மை.

உண்மையில் மைக்கேல் ஜாக்ஸன் பாப் இசையின் பொற்காலத்திலேயே இசைக்குள் வந்துவிட்டவர். ஏழு வயதிலேயே அவர் தன் குடும்ப இசைக்குழுவான 'ஜாக்ஸன்ஸ்5' இல் பாட ஆரம்பித்துவிட்டிருந்தார். தோற்றுப்போன இசைக்கலைஞராக கடும் வறுமையில் உழன்ற ஓர் ஆலைத்தொழிலாளியின் ஒன்பது பிள்ளைகளில் ஒருவர் அவர். இளமையில் அப்பாவிடமிருந்து கடுமையாக அடிவாங்கி கூடவே கொஞ்சம் சங்கீதமும் படித்து வளர்ந்தார். குழந்தைப்பிராயம் என்பதே இல்லாமல் எட்டுவயதிலேயே தொழில்முறை பாடகராகவும் நடனக்காரராகவும் ஆகிவிட்டார். அங்கு அவரே ஆடி ஆடி உருவாக்கிக்கொண்ட அவருக்கே உரிய தனிவகை நடனம் மூலம் பிற்பாடு உலக நட்சத்திரமாக ஆனார்.

பதிநாலு வயதில் அவர் தன் முதல் தனிப்பாடல் வெளியிட்டார். 21 வயதுக்குள் தனியாகவே பாடல்களை எழுதி இசையமைத்து இசைத்தட்டுகள் வெளியிடும் முக்கியமான பாடகராக ஆகிவிட்டார். அவரது முதல் இசைத்தொகுப்பு இரண்டுகோடி பிரதிகள் விற்றிருக்கிறது. அவரது திரில்லர் தான் இன்றுவரை உலகில் மிக அதிகமாக விற்ற இசைத்தொகுப்பு. மிச்சமெல்லாம் வரலாறு என்று சொல்வதுபோல பின்னர் ஹிஸ்டரி என்ற ஆல்பத்தையும் அவர் வெளியிட்டார்.

உலகம் கண்ட மிகச்சிறந்த பாடக-நடனக்காரர் மைக்கேல் ஜாக்ஸன் தான். அவரது பிரம்மாண்ட வெற்றியில் அவரது நடனத்திற்க்கு பெரும் பங்கு இருக்கிறது. பாட்டுக்கு ஆடுவதை அவர் மொத்தமாக மாற்றியமைத்தார். நடனத்தை ஒரு பெரிய கலைநிகழ்ச்சியாக ஆக்கினார். கழைக்கூத்தாட்டம் முதல் உணர்ச்சிகரமான நாடகம் வரை கலந்தவை அவரது நடனங்கள்.

அவரை நினைத்தாலே ஞாபகம் வரக்கூடிய நிலவு நடை [moon walk] என்ற நடன அசைவை அவர் முதலில் மேடையில் நடத்தியபோது அது மனித சாத்தியம்தானா என்று ரசிகர்கள் வாய் பிளந்திருக்கிறார்கள். இன்றுவரை உலகெங்கும் உள்ள சினிமா நடனங்கள், மேடை நடனங்களில் எல்லாம் மிக அதிகமாக நகல்செய்யபப்டும் நடனக்காரர் அவர்தான்.

எப்போதுமே உலகம் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. சிலசமயம் நல்லதாகவும் பல சமயம் கெட்டதாகவும். பல்வேறு மனிதாபிமானச்செயல்பாடுகள் மேல் அவருக்கிருந்த ஈடுபாடும் அவற்றுக்குக்காக அவர் அள்ளி வீசிய கோடிக்கணக்கான பணமும் உலகம் முழுக்க அவருக்கு நல்லபெயர் வாங்கித்தந்தது. மைக்கேல் ஜாக்ஸன் அளவுக்கு சம்பாதித்த இசை நட்சத்திரமே உலகில் இல்லை, ஆனால் எண்ணற்ற அறநிறுவனங்களுக்கு அவர் தன் மாபெரும் செல்வத்தைக் அள்ளிக் கொடுத்துக்கொண்டேயிருந்தார்.

பல்வேறு இசைநட்சத்திரங்களை பங்கெடுக்கச்செய்து அவர் உருவாக்கிய 'நாமே உலகம்' [We Are the World] என்ற பாடல் ஆப்ரிக்க பஞ்சத்துக்காக சம்பாதித்துக்கொடுத்த தொகை கிட்டத்தட்ட 25000 கோடி ரூபாய்! அவரது 'உலகை குணப்படுத்துங்கள்' [Heal the world], 'மண்ணின் பாடல்' [The Earth Song] போன்ற அருமையான பாடல்களில் அவரது மனிதாபிமான லட்சியக்கனவை நாம் கேட்க முடிகிறது.

மறுபக்கம் சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார் என்று அவர் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டார். 2600 ஏக்கர் விரிவுள்ள தன் நெவர்லேண்ட் பண்ணையில் மாதக்கணக்காக அவர் சிறுவர்களுடன் தங்கி விளையாடிக்கொண்டிருந்தார். பாலியல் துன்புறுத்தல்களுக்காக சிறுவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தபோது விழிபிதுங்கவைக்கும் தொகை கொடுக்கப்பட்டு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வெளியே பைசல் செய்யப்பட்டன. அவருக்கு தெரிந்த குழந்தைகளில் பாதிபேர் தொடர்ந்தும் பணம்கேட்டு நீதிமன்றம் போனார்கள். கடைசியில் எந்த வழக்கிலும் ஆதாரமில்லை என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால் அவர்மேல் அந்த கறை அழுத்தமாகவே படிந்துவிட்டது.

அவருக்கும் தன் கறுப்புநிறம், ஆப்ரிக்க முகச்சாயல் ஆகியவற்றின் மேல் கடுமையான தாழ்வுணர்ச்சி இருந்தது என்று சொல்லப்படுகிறது. அவர் தன் மூக்கையும் உதடுகளையும் மாற்றியமைத்து வெள்ளைகார முகமாக ஆக்கிக்கொண்டார். அறுவைசிகிழ்ச்சைகள் மூலமும் அவர் தன் நிறத்தையும் முக அமைப்பையும் மாற்றிக்கொண்டே இருந்த்தை வைத்து இதைச்சொல்கிறார்கள். அவரது தோலின் நிறமாற்றம் என்பது விடில்கோ [Vitilgo] என்ற தோல்நோய் மூல்ம்தானே ஒழிய அவரே அதை வெளுக்கவைக்கவில்லை என்று பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.

அவரது இசைப்படங்களினாலேயே உலகளாவிய அமைப்பாக வளர்ந்த MTV அவர் கறுப்பர் என்பதனால் ஆரம்பத்தில் அவரது இசைப்படங்களை ஒளிபரப்ப மறுத்தது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

அவரது பாடல்களில் எழும் உணர்ச்சிகள் மிக நேர்மையானவை, தீவிரமானவை. உலக வறுமை, அவரது சொந்த மனப்பிரச்சினைகள், மனித குணங்களின் இருண்ட பக்கங்கள் என விதவிதமான கருக்களைக் கொண்டவை. உதாரணமாக Why You Wanna Trip on Me பாட்டில் உலகம் முழுக்க பரவி வரும் உணவுப்பஞ்சம், எயிட்ஸ் நோய் ஆகிய்வற்றுக்கு எதிரான அவரின் மனக் கொந்தளிப்பதை நாம் கேட்கலாம்.

உலகம் முழுவதுமுள்ள அவரது பலகோடி ரசிகர்களால் மைக்கேல் ஜாக்ஸன் இல்லாத ஒரு உலகத்தை கற்பனையே பண்ண முடியாது என்ற நிலமையில், தன் 50 வயதிலேயே, அவரே ஒரு பாடலில் சொல்லிக்கொள்கிறதுபோல 'மாலைவானத்தில் எரிந்துசெல்லும் தாரகை போல விரைவாக மின்னி மறைந்தார்' மைக்கேல் ஜாக்ஸன்.

தமிழாக்கம் ஜெ