20210315

பில்லி எனும் பேரழகியின் வாழ்க்கை

Billie Holiday


எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள சேரன்மகாதேவி ஊரின் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது. அவர்கள் அவளுக்கு வைத்த பெயர் பைரவி. அதைத் தவிர ஒருவயது வரைக்குமான அவளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாருக்கும் வெளிச்சமில்லை. ஒரு வயதானதும் அவர்கள் அவளை ஒரு நாய் வியாபாரிக்கு விற்றார்கள். அந்த வியாபாரி அவளை எனது நண்பரும் இயற்கை விவசாயியுமான பெலிக்ஸிற்கு விலைபேசி விற்றார்.

பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதும் தனது விவசாயத்தின் ஒருபகுதியாகச் செய்து வந்தார் பெலிக்ஸ். தன்னிடம் வந்து சேர்ந்த அழகான அந்த லாப்ரடார் பெண் நாய்க்கு அவர் ‘பெல்லி’ என்று பெயர் வைத்தார். பைரவியிலிருந்து பெல்லியாக மாற அவளுக்கு அதிகநாள் தேவைப்படவில்லை. தடுப்பூசி போட அவளைப் பக்கத்திலுள்ள சிறு நகரத்திற்குக் கொண்டுச் சென்றார் பெலிக்ஸ். அத்தகைய ஒரு சூழலையோ ஆள் கூட்டத்தையே அதுவரைக்கும் பார்த்திராத பெல்லி அவரது கையிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.

முதலில் ஒரு ஆட்டோ ரிட்சாவில் ஏறி அமர்ந்தாள். பின் அங்கிருந்து இறங்கியோடி ஒரு மோட்டார் பைக் பயணியின் குறுக்கே பாய்ந்து அவரை நடுரோட்டில் குப்புற விழவைத்து,  பலரைப் பயமுறுத்தி அங்குமிங்கும் ஓடினாள். அவளைத் துரத்திப்பிடித்து தடுப்பூசி எடுத்து வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் வீட்டிலோ மிகவும் நல்ல பிள்ளையாக பல நாய்கள்ஆடுகள், மாடுகள்கோழிகள், வாத்துகளுடன் கலகலப்பாக வாழ்ந்தாள்.

அவள் வழியாக லாப்ரடார் நாய்க்குட்டிகளைப் பிறப்பித்து விற்பனை செய்யலாம் என்ற ஒரே திட்டத்துடன் அவளை வாங்கிய பெலிக்ஸுக்கு விரைவில் ஏமாற்றமளிக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. குட்டிபோட முடியாத உடல் சிக்கல் கொண்டவள் பெல்லி. ஆனால் அதற்குள் அக்குடும்பத்துடன் நெருங்கிப்போன பெல்லியை அவர்கள் பாதுகாத்து வளர்த்தனர். அக்காலத்தில் ஒருநாள் அவர்களது தோட்டத்து வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற நான் பெல்லியைப் பார்த்து மிகவும் வியந்துபோனேன்.  

நான் வளர்த்துவந்த தாமோதரன் (தாமி) என்கின்ற ராஜபாளையம் ஆண் நாயின் குண இயல்புகளுக்கு நேர்மாறானவளாக பெல்லியைக் கண்டேன். தாமிக்கு ஒன்று முழுமையான அன்பு அல்லது முழுக் கோபம், இரண்டு மட்டுமே. இவளோ சாந்த சொரூபி. கோபம்சத்தமாகக் குலைத்தல்உறுமல் எதுவுமில்லை. ஆயிரம் வார்த்தைகள் பேசும் அழகான கண்கள். என்னை முதலில் பார்த்தவுடன் தனது உணவுப் பாத்திரத்தைக் கடித்து எடுத்துக்கொண்டு என்முன் வைத்துவிட்டு 'இதுல ஏதாவது சாப்பாடு போடுங்க பிரதர்'  என்று என்னைப் பார்த்தாள். பெலிக்ஸ் அவளுக்கு சரியாகச் சாப்பாடு போடுவதில்லை என்றே எண்ணினேன். அவரிடம் இதைக் கேட்டபோது ‘எத்தனைமுறை சாப்பாடு வைத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவாள். முடிந்தவுடன் மீண்டும் கேட்பாள்’ என்று சொன்னார்.

என்னிடமிருந்து சாப்பாடு எதுவுமே வரப்போவதில்லை என்று அறிந்த உடனே விளையாட்டுப் பொம்மை போன்ற ஏதோ ஒன்றைக் கடித்து எடுத்து என்னிடம் வந்து துள்ளிக்குதித்து விளையாட அழைத்தாள். அக்குடும்பத்துடன்  உணவருந்தும் நேரத்தில்கூட எனது மனதில் பெல்லி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தர இயலுமா என்று பெலிக்ஸிடம் கேட்க விரும்பினேன். ஆனால் அவர் அதை எதிர்மறையாக எடுத்தால் என்ன செய்வது? நான் கேட்கவில்லை.  

அந்த நாட்களில் நான் தொடர்ந்து பயணங்களில் இருந்தேன். வீட்டில் இருப்பது குறைவு. வயதுக்கு வந்த தாமியின் அட்டூழியங்கள் எல்லை கடந்தது. சுவரைக் குதித்து தெருவில் இறங்கி சரவேகத்தில் ஓடுவான். அந்நியர்கள், பிற நாய்கள்பூனைகள்மேலே பறக்கும் பறவைகள் எதையுமே அவனுக்குப் பிடிக்காது. காதடைக்கும் ஓலத்துடன் குலைத்துக்கொண்டு நாலா பக்கமும் ஓடுவான். அவன் பாய்ந்து வருவதைக்கண்டு பயந்தோடிய சில குழந்தைகள் சறுக்கி விழுந்து கைகால் அடிபட்டது. கட்டிப்போடும் தோல்வாரை கணநேரத்தில் கடித்து முறிப்பான். திடமான சங்கிலியில் கட்டிப்போட்டாலும்  அதையும் எப்படியாவது உடைப்பான். உடைக்க முடியவில்லை என்றால் அவிழ்த்து விடும் வரை ஓ....வ் ஓ....வ் என்று கத்திக்கொண்டே இருப்பான்.

வீட்டிலிருப்பவர்களால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருமுறை மும்பையில் வேலை விஷயமாகச் சென்ற என்னை தாமியின் அன்றைய பயங்கரச் செயல்களைச் சொல்லி பதற்றத்துக்கு ஆளாக்கி, வேலையே செய்ய விடாமல் பாதியில் திரும்பி வரவைத்தனர். இதை நான் பெலிக்ஸிடம் சொன்னபோது விசாலமான இடத்தில் ஓடியாடி விளையாடவேண்டிய ராஜபாளையம் நாயை சென்னை மாநகர வீட்டின் சிறு முற்றத்தில் அடக்கி வைக்க முடியாது என்றும் அவனைக் கடையல்லூர் பக்கத்திலுள்ள தனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் தென்னை மரத்தோப்புக்குள்ளே கொண்டுபோய் விடலாம் என்றும் ஆலோசனை சொன்னார். தாமியைப் பராமரித்து வீட்டிலேயே இருப்பதா இல்லை வேலைக்குப் போவதா என்ற நிலைமையில் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு அவனை அங்கேயே விடலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த அடங்காப் பிடாரியை ஒரு பகல் முழுவதும் காரில் அடக்கி வைத்துக்கொண்டுப்  பயணித்து மாலை நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். அங்கே சென்றபோது எனக்கு எலலாமே தலைகீழாகத் தெரிந்தது. பெரிய தென்னந்தோப்பு ஒன்றை ஒட்டி முள்வேலி கட்டிப் பிரித்த அம்பதுக்கு அம்பது அடிக் கொட்டாய் ஒன்றில் கசாப்புக்கான ஆடுகளை கூட்டமாக நிறுத்தியிருந்தனர். அவற்றை திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒடுங்கிப்போன இரண்டு நாட்டு நாய்களையும் தடித்த ஒரு ராட்வேய்லர் நாயையும் கட்டிப்போட்டிருந்தார்கள்.  

அவற்றைப் பார்த்தவுடன் தாமி ஆகாயம் நடுங்கக் குலைக்க ஆரம்பித்தான். அந்நாய்களும் விட்டபாடில்லை. எட்டுத்திக்கும் ஒரே நாய் குலைத்தல் சத்தம் மட்டுமே எதிரொலித்தது. "இதுவா ரெண்டு ஏக்கர் தென்னந்தோப்புராஜபாளையம் நாயால மற்ற நாய்களுடனே இருக்க முடியாதுன்னு தெரியாதா"என்று நான் கேட்டதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பெலிக்ஸுக்கும் மிகுந்த ஏமாற்றம். அவரிடம் சொன்னது ஒன்று நேரில் நடந்தது இன்னொன்று. இதனிடையே என்னுடைய உதவியாளர்கள் தாமியை அந்த ஆட்டு மந்தைக்குள்ளே கட்டிப்போட்டார்கள். இரண்டு நிமிடத்தில் அந்தச் சங்கிலியை அறுத்து உடல் முழுவதும் பதைபதைத்து நடுங்கிக்கொண்டு என்முன் பாய்ந்து வந்து நின்றான். அவன் என் முகத்தைப் பார்த்த பார்வை இருக்கே! "என்னை இங்கே தள்ளிவிட்டுப் போகக் கொண்டு வந்தியாடா நாயே"பேச்சிருந்தால் நிச்சயமாக அப்படித்தான் கேட்டிருப்பான். நான் அவனை ஆறத்தழுவி கைகளில் தூக்கிக்கொண்டு காரில் ஏறி திரும்பி சென்னைக்கே கிளம்பினேன். அந்தப் பயணம் ஏற்படுத்திய பதற்றத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பத் தாமிக்குப் பல வாரமாகியது. வாடகைக் காரில்தான் தாமியைக் கொண்டுபோனோம். தன்னால் நண்பனின் பல்லாயிரக் கணக்கான  பணமும் மூன்று நாட்களும் வீண்போனதே என்ற குற்றவுணர்வு பெலிக்ஸுக்கு.

விரைவில் ஒருநாள் என்னை அழைத்தார். "அடுத்து இந்தப் பக்கம் எப்ப வர்றீங்க?" அடுத்தவாரம் மதுரை வருகிறேன் என்று சொன்னதும் "காரில் தானே வர்றீங்க. நேரா வீட்டுக்கு வாங்க. பெல்லியைக் கூட்டிட்டுப் போயிடுங்க. அவளை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று தெரியும். தனிமைதான் தாமியை இவ்வளவு பிரச்சினை பண்ண வைக்குது. ஒரு பெண் நாய் வந்தால் எல்லாம் சரியாயிடும்" என்று சொன்னார். எனக்கு எல்லையற்ற சந்தோஷம். தாமியின் தனிமை தீருதோ இல்லையோ பெல்லி எனக்குக் கிடைக்கப் போகுதே! மதுரைப் பயணத்தை சற்றே முந்திவைத்துக்கொண்டு கடையத்துக்குச் சென்று பெல்லியைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

பெல்லி என்கின்ற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலத்தில் வயிறு, தொப்பை, வீக்கம் என்றெல்லாம் பொருளுடைய சொல். பெயரை மாற்றவேண்டும். பைரவியிலிருந்து பெல்லி ஆக மாறியவளை இன்னொரு பெயர் வைத்து கொடுமைப்படுத்தவும் எனக்கு மனமில்லை. ஆதலால் பெயர் மாறியதாக அவளுக்குத் தெரியாதவண்ணம் ‘பில்லி ஹாலிடே’ என்று அவளுக்குப் பெயரிட்டேன். அது எனது அபிமான அமெரிக்கப் பாடகியின் பெயர். இவளும் குறைந்தவளா என்னகனடா நாட்டைச் சேர்ந்த நீற்று நாய்கள் (Canadian Water Dogs) தானே லாப்ரடார்களின் மூதாதையர்கள். பில்லி என்கின்ற பெயர் கனக்கச்சிதமாக அவளோடு ஒட்டிக்கொண்டது. பில்லீ.... என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பாய்ந்து வருவாள். அப்போது நமது கையில் உணவு வகைகளோ விளையாட்டுப் பொருட்களோ இருந்தால் மகிழ்ந்துக் குதிப்பாள்.

பில்லியின் வருகை ஆரம்பத்தில் தாமிக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பலமுறை அவளைக் கடித்துக் குதறினான். ஒருமுறை அவளது அழகாகத் தொங்கும் இடது காதைப் பலமாகக் கடித்துக் காயப்படுத்தினான். அதற்குப் போட்ட களிம்பு மருந்து பலன்தராமல் காது அழுகத்தொடங்கியது. இறுதியில் அக்காதின் கீழ்பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்கவேண்டியதாயிற்று. பின்னர் எப்போதோ தாமி பில்லியின் மேல் காதலில் விழுந்தான் எனப்பட்டது. ஆனால் அடிக்கடி அவனது ஆணாதிக்கமும் அக்கிரமமும் தலைதூக்கிய வண்ணமே இருந்தன. பில்லி அவனை ஒருபோதும் காதலித்ததாக எனக்குத் தோன்றவில்லை. இருந்தும் தனக்குக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள் என்றே படுகிறது. கருத்தரிக்கவே முடியாதவள் என்று சொல்லப்பட்ட பில்லி இரண்டு முறை கருத்தரித்து குட்டிபோடும் நேரம் நெருங்குவது போன்ற அறிகுறிகளைக் காட்டினாள்! மண் தோண்டி தனது குட்டிகளை பத்திரமாக வைக்க இடத்தையெல்லாம் தயார் செய்தாள். ஆனால் இருமுறையும் அவளுக்குக் கருக்கலைந்து போனது.

பில்லியின் விடா முயற்சி இறுதியில் பலனளித்தது. ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் பரிதாபமா அளவில் மிகச் சிறிய, சுண்டெலியின் எடைகொண்ட குட்டிகள் பிறந்தன. எல்லாமே செத்துப் போயின. அக்குட்டிகளை அங்கிருந்து அகற்ற பில்லி எங்களை  அனுமதிக்கவில்லை. தனது உடலால் அவற்றை மறைத்துக்கொண்டே படுத்தாள். ஒரு வழியாக நான்கை அகற்றினோம். ஐந்தாவது குட்டியை விட்டுத் தராமல் இரவு முழுவதும் அவளே கடித்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். பின்வந்த ஓரிருநாட்கள் சோகத்தில் கழித்தாளென்றாலும் விரைவில் மீண்டும் கலகலப்பானாள்.

திருப்தியான சாப்பாடுஓடியாடி விளையாட்டு. இதுதான் பில்லியின் உலகம். கறிமுட்டைபால்தயிர்தேங்காய் போன்றவை மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லாக் காய்கறிகளையும் சாப்பிடுவாள். வாழைப்பழத்தோல்சாறு பிழிந்த பாகற்காய் சக்கை போன்றவற்றைக்கூட விட்டுவைக்க மாட்டாள். ஒருமுறை அவள் மிகவும் குண்டானதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவளுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்கத்  தொடங்கினோம். பின்னர் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொண்டோம்.

பில்லிக்குக் கோபமே வராது. மற்ற விலங்குகளையும் குழந்தைகளையும் அன்போடு அரவணைப்பாள். பசும்புல் நிலங்களுக்குமேல் தாழப்பறக்கும் சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஆசையாசையாய் நடந்து செல்வாள். எல்லாவற்றிடமும் எல்லோருடனும் அவளுக்கு அன்பு அன்பு அன்பு மட்டுமே. அணுக்கத்தையும் கொண்டாட்டத்தையும் தவிர எதுவுமே அவள் கண்களில் பார்க்கக் கிடைக்காது. நெருக்கத்தின் அடையாளமாக வால் ஆட்டிக்கொண்டேயிருப்பாள். யாராவது வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கணும் அவளுக்கு. வந்தவர்கள் வெளியே போகக் கூடாது என்று அவர்களது ஒற்றைச்செருப்பை எங்காவது கொண்டுபோய் பதுக்கி வைப்பாள். நானுமே வீட்டிலிருந்து வெளியே கிளம்பப் போகிறேன் என்று உணர்ந்தால் எனது செருப்பும் காணாமல் போய்விடும். இரவில் அவளுக்குத் தூக்கம் குறைவு. எவ்வளவு தாமதமாக நான் வந்தாலும் கேட்டில் வந்து நிற்பாள். வால் ஆடிக்கொண்டேயிருக்கும். காலைச் சுற்றிச் சுற்றி வருவாள். பின் அமைதியாகச் சென்று படுப்பாள்.

கடந்த ஆண்டு அவளுக்கு ஏழு வயதானது. லாப்ரடாருக்கு அது நடுத்தர வயது. ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஐந்தாண்டுகாலம் எங்கள் வீட்டின் ஞானத்தோழியாகஎனது மகளின் சகோதரியாகஎனது அன்புக் குழந்தையாக வாழ்ந்தாள் எங்கள் பில்லி. சிலமாதம் முன்பு ஒருநாள் அவளது இடது காதுக்குள்ளே புண்வந்து சீழ் வழியத்தொடங்கியது. மிகுந்த வலியில் துடித்தாலும் சத்தமே போடாமல் என் மடியில் தலைவைத்து "ரொம்ப வலிக்குது. என்னைக் காப்பாற்ற முடியுமா?" போன்று ஒரு பார்வையைப் பார்த்தாள். கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்ற சிறந்த சிகிச்சையால் ஒரு வாரத்தில் குணமானாள். மீண்டும் உணவுஉற்சாகம் என்று பழைய வழக்கத்திற்குள் வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் திடீரென்று எழுந்து நிற்க முடியாமல் பில்லி திணறித் திணறி விழுவதைக் கண்டேன். ஓடிச்சென்று பார்த்தேன். அவளது உடம்பின் பின்பகுதி தளர்ந்து போனது போலவும் முன்பகுதி நடுங்கிக்கொண்டிருப்பது போலவும் உணர்ந்தேன். கால்நடை மருத்துவ நண்பர்களின் ஆலோசனையில் சில மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கொடுத்தேன். பயனளிக்கவில்லை. உணவு உணவு என்று எப்போதுமே குதூகலித்துக் கொண்டிருந்தவள் உணவையும் தண்ணீரையும் வெறுத்தாள்.

அடுத்த நாள் அதிகாலையில் பில்லியை மருத்துவக் கல்லூரிக்கே கொண்டுச் சென்றேன். நண்பர்களின் உதவியினால் உடனுக்குடன் அவசரச் சிகிச்சையும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட ஆறுமணிநேரம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. பல மருத்துவர்கள் கலந்தாலோசித்து இறுதியில் பில்லியின் இதயம் பெரிதாகவும் பலவீனமாகவும் இருப்பதாகக் கண்டடைந்தனர். அவளது இதயம் சரியாகச் செயல்படாததால் மூச்சுப்பையும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். இவற்றின் அறிகுறி எதுவுமே முன்பு எப்போதும் வெளிப்படாமல் இப்போது ஒரே அடியில் தீவிரமாக வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார்கள். மிகவும் விலை உயர்ந்த உயிர் காப்பாற்றும் மருந்துகள் பலவற்றை வாங்கிவரச் செய்தார்கள்.

சிகிச்சை பலனளிப்பதாகவே தோன்றியது. மூன்றாவது நாளிலிருந்து ஓரளவு சாப்பிடத் தொடங்கினாள். சுற்றிவரவும் வாலாட்டவும் தொடங்கினாள். அப்போதும் தண்ணீர் குடிக்க மறுத்தாள். க்ளூகோஸ் தண்ணீரைப் பீச்சாங்குழலில் வைத்து வாயில் பீச்சினோம். மருந்துகளைப் பலவந்தமாக ஊட்டினோம். பத்து நாட்கள் கடந்து விட்டன. பில்லி தேறி வருவதைக்கண்டு நிம்மதியுடன் வேலை விஷயமாக ஒரு பயணத்துக்குக் கிளம்பினேன். ஆனால் நான் ஊரில் இல்லாதபோது அவள் மருந்துகளை உட்கொண்டு கொஞ்சநேரத்திலே வாந்தியெடுப்பதாகச் சொன்னார்கள். இருந்தும் குறைந்த அளவிலாவது சாப்பாடும் தண்ணீரும் எடுக்கிறாள், கவலைப்படவேண்டாம் என்றும் வீட்டில் சொன்னார்கள்.

மூன்று நாட்கள் கழித்து நான் திரும்பி வரும்போது பில்லி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அன்றிரவு பாதித் தூக்கத்தில் ‘பில்லி இறந்துபோவாள்அவள் இனிமேல் நமக்குக் கிடைக்க மாட்டாள்’ என்று நான் உளறியதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் காலையில் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் கற்றாழைச் செடிகளுக்குப் பின்னால் மூக்கிலிருந்து ஊதா வண்ண நுரை வடிந்தபடி பில்லி இறந்து கிடந்தாள். அவளை ஒரே கணம் பார்த்து இதயம் வெடிக்கும் வலியோடு அழுதேன். பில்லீ.. பில்லீ.. என்று எனது மகள் கதறி அழுதாள். எனது உதவியாளர்கள் அவளைத் தூக்கிச் சென்றார்கள். ஏரிக்கரைக் காட்டின் ஆழ்மண்ணில் எங்கோ புதைந்து இயற்கை திரும்பினாள் எனது பில்லி.

நான் உன்னைக் காண்பேன்

அழகான கோடைப் பகல்களில்

எளிதாய் ஒளிரும் அனைத்திலும் உன்னைக் காண்பேன்

காலை வெயிலொளியில் உன்னைக் கண்டடைவேன்

புத்தம்புது இரவின் நிலவைப் பார்க்கும்போது   

உன்னை மட்டுமே காண்பேன்.....

(பில்லியின் பெயருக்குக் காரணியான அமெரிக்கப் பாடகி பில்லி ஹாலிடேயின் பாடல்)


20190113

ரித்விக் கட்டக்கின் காதலி”திதாஷ்... கல்கத்தாவில் தானே இருக்கிறாய். அடிக்கடி சென்று ஷுரமாதி*யைப் பார்த்துக்கொள். தேவையான உதவிகளைச் செய். 93 வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரது வீட்டுத் தொலைபேசியை யாருமே எடுப்பதில்லை. போனவாரம்கூட அழைத்திருந்தேன்” என்று அலைபேசியில் சொன்னேன். “ஐயோ சார்… உங்களுக்குத் தெரியாதா? ஷுரமாதி இறந்துபோய் இரண்டு மாதம் ஆகிறதே” என்றாள் திதாஷ். தலையில் யாரோ ஓங்கி அறைந்ததுபோல் இருந்தது எனக்கு. அவள் சொன்னது ரித்விக் கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்கின் மரணம் குறித்து. பலநாட்களாக உடல்நலமற்று இருந்தார். வயதும் அதிகமாகியிருந்தது. ஆனால் ஒரு மகனைப்போல் என்னை நேசித்த ஷுரமாதியை இறுதியாக ஒருமுறை சென்று பார்க்க முடியவில்லையே!

ஷுரமாதி இறந்த செய்தியை காலதாமதமாக எனக்கு வழங்கிய திதாஷ் 23 வயது மட்டுமேயான இளம்பெண். ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளை வழியாக எனக்கு அறிமுகமானவள். அவளது வித்தியாசமான பெயர் ரித்விக் கட்டக்கின் திரைப்படமான ‘திதாஷ் எக்தி நதிர் நாம்’ என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. திதாஷின் தாய் ரித்விக் கட்டக்கின் தீவிர ரசிகை. மகளுக்கு திதாஷ் என்றும் மகனுக்கு ரித்விக் என்றும் பெயர் வைத்து ரித்விக் கட்டக்கின் மீதான தனது காதலை வெளிப்படுத்தியவர். வெறிகொண்ட இத்தகைய எத்தனையோ ரசிகர்களை தனக்கென்று உருவாக்கியிருக்கிறார் ரித்விக் கட்டக். பதினான்காவது வயதில் ரித்விக் கட்டக்கின் சுவர்ண ரேகா படத்தைப் பார்த்த நாள்முதல் நான் அவரது தீவிர ரசிகன். பல பதிற்றாண்டுகள் கடந்தபோது கட்டக்கின் மனைவி ஷுரமா கட்டக்குடனும் அவரது மகள் சம்ஹிதா கட்டக்குடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சத்யஜித் ரே, பிரபல பெங்காலிக் கவிஞரும் விமர்சகருமான சங்கா கோஷ் போன்றவர்களுடன் சேர்ந்து ஷுரமா கட்டக் உருவாக்கிய ரித்விக் கட்டக் நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பொறுப்பாளராக நான் வரவேண்டுமென்று ஷுரமாதி என்னிடம் சொன்னார். அதற்கு நான் தகுதியானவன் அல்லன் என்று சொன்னபோதிலும் ஷுரமாதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ரித்விக் கட்டக்கின் தொண்ணூறாவது பிறந்தநாளான 2015 நவம்பர் 4 அன்றைக்கு கல்கத்தாவின் சத்யஜித் ரே அரங்கில் நடந்த விழாவில் ‘ரித்விக் கட்டக், இந்திய மாற்றுச் சினிமாவின் வானுயரம்’ எனும் தலைப்பில் ஓர் உரையை நிகழ்த்தினேன். சென்னையில் ரித்விக் கட்டக் திரைப்பட விழா ஒன்றை நடத்தி அதில் கட்டக் அறக்கட்டளையின் முக்கியப் பொறுப்பாளரும் கட்டக்கின் மூத்த மகளுமான சம்ஹிதா கட்டக்கைப் பங்கேற்க வைக்கலாம் என்று தமிழ் ஸ்டுடியோ அருணிடம் பேசிக்கொண்டிருந்த நாட்களில் சம்ஹிதா கட்டக் அகாலத்தில் இறந்துபோனார். இப்போது ஷுரமாதியும் இறந்துவிட்டார். இனிமேல் கட்டக்கின் பெயரால் நாம் எதைச் செய்தாலும் அதை நினைத்து சந்தோஷப்பட ஷுரமாதி இல்லையே…

துணிவு, எளிமை, கருணை போன்ற குணங்களால் நிரம்பியிருந்தவர் ஷுரமாதி. ரித்விக் கட்டக் எனும் மாமேதையுடன் தான் வாழ்ந்த காலங்களைப் பற்றி விரிவாக அவர் என்னிடம் பேசியிருக்கிறார். சொல்லப்போனால் ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்டாகயிருந்த ரித்விக் கட்டக்கை விடவும் பெரிய அரசியல் போராளி ஷுரமா கட்டக். 1940களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அஸ்திவாரமிடுவதற்காக அரும்பாடுபட்டவர். அதற்காகச் சிறைக்குச் சென்றவர். ஆச்சரியமான முறையில் ஒரே நாளில் பிறந்தவர்கள் கட்டக்கும் ஷுரமாதியும். 1925 நவம்பர் 4 அன்று. வங்கப் பிரிவினையின் இருண்ட நாட்களை, அவை உருவாக்கிய லட்சக்கணக்கான மரணங்களை, வன்முறையை, பசியை, உணவுப் பஞ்சத்தைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவர்கள் இருவருமே. ரித்விக் கட்டக்கின் ஆன்மாவில் என்றுமே நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது வங்கப் பிரிவினை உருவாக்கிய ஆற்றொணாத் துயரம். அது தன்னையே துடைத்தழிக்குமளவில் ஒரு வாதையாக அவரைப் பின்தொடர்ந்து தாக்கியது. தனது வாழ்வின் பெரும்பகுதியை அதே மனநிலையில் வாழநேர்ந்த கட்டக்கைப் பத்திரமாகப் பாதுகாத்து, கலையும் திரைப்படமும் சார்ந்து அவருக்கிருந்த பேராவல்களை நனவாக்கும் வகையில் போராட முயன்றார் ஷுரமாதி. ஆனால் அது அவருக்கு கொடும் துயரங்களை அளித்தது.

1971 ஜூலையில் ஷுரமாதிக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலப் பொறுப்பாளராகயிருந்த, மதிப்பிற்குரிய தலைவர் பி சி ஜோஷி எழுதிய கடிதம் அது. “நேற்று நான் ரித்விக்கை அவன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று பார்த்தேன். அவனது நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 45 வயது மட்டுமே இருக்கும் அவன் ஒடுங்கிப்போன ஒரு கிழவனைப்போல் காணப்படுகிறான். உடல்நலம் மிகவும் மோசமாக இருக்கிறது. நாள்முழுவதும் குடிபோதையிலேயே இருக்கிறான். மதுப்பழக்கத்தை விட்டுவிலக அவனுக்குப் பல அறிவுரைகளை சொன்னேன். ஆனால் எதுவுமே அவன் காதில் விழவில்லை. இவ்வுலகில் அவனுக்கென்று இருப்பது நீ மட்டும்தானே! இப்படி விலகி நிற்காமல் கல்கத்தாவிற்குத் திரும்பிவந்து எதாவது வழியில் அவனைத் தேற்ற நீ முயற்சி செய்யக் கூடாதா?”.

அக்காலத்தில் ஷுரமாதி கட்டக்கை விட்டுவிலகி கல்கத்தாவிலிருந்து 150 மைல் தொலவிலுள்ள சைந்தியா எனும் ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். 5, 7, 9 வயதான மூன்று குழந்தைகளும் அவருடன் இருந்தனர். கட்டக்கும் ஷுரமாதியும் என்றைக்குமாகப் பிரிந்து விட்டனர் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் ஓரளவிற்குப் போதுமான எதாவது ஒரு வேலை கல்கத்தாவில் கிடைத்தால் அங்கேயே திரும்பிப் போகலாம் என்றே ஷுரமாதி யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அங்கு வேலை எதுவும் கிடைக்காததால் சைந்தியாவிலேயே தொடர நேர்ந்தார். அப்போது ரித்விக் கட்டக் கிட்டத்தட்ட ஓர் அகதியைப்போல் கல்கத்தாத் தெருக்களில் அலைந்துகொண்டிருந்தார்.

இன்றைய பெங்க்ளாதேஷ் நாட்டின் தலைநகரமான தாக்காவுக்கு அருகேயுள்ள ராஜ்ஷாஹி எனும் ஊரில் ஒரு பணக்கார நிலக்கிழார் குடுமபத்தில் பிறந்தவர் ரித்விக் குமார் கட்டக். ஒரு பெண்குழந்தையுடன் இரட்டைக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் அவர். ஒன்பது குழந்தைகளில் கடைக்குட்டி. ஏழாம் மாதத்திலேயே பிறந்தமையால் குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்தது. அது உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்றே அனைவரும் எண்ணினர். தனது நிரந்தரப் பிரார்த்தனைகள் ரித்விக்கை உயிர்தப்ப வைத்தது என்று அவரது தாய் நம்பினார். மாவட்ட நீதிபதியாகயிருந்த அவரது அப்பா தான் பெரும் பணத்தைச் செலவுசெய்து வைத்தியம் பார்த்தமையால் குழந்தை உயிர் பிழைத்தது என்று சொன்னார். ஆனால் வளர வளர ரித்விக் தனது அப்பாவின் ஜமீன்தார் மனோபாவத்தையும் அவரது குடிப்பழக்கத்தையும் வெறுக்கத் தொடங்கினார். தனது வாழ்நாளில் ஒருபோதும் மதுவைத் தொடப்போவதில்லை என்று பால்யத்திலேயே அவர் உறுதிபூண்டார்.

இளமைக்காலத்தில் கண்கூடாகப் பார்க்கநேர்ந்த அரசியல் சந்தடிகள் அவரைப் பெருங்குழப்பத்திற்கு ஆளாக்கின. ஒரு மனிதனாகத் தனது இருத்தல், தனது தேசியம், அரசின் அதிகார அடக்குமுறைகள் போன்றவற்றைப் பற்றி உள்ளே எழுந்த பெரும் கேள்விகள் அவரை நிம்மதியிழக்கச் செய்தன. எனது இந்தியா என்பதிலிருந்து எனது பெங்க்ளாதேஷ்** என்று தனது தேசிய அடையாளம் மாறிப்போனதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. அப்பிரிவு கொண்டுவந்த அடக்குமுறைகளையும் குடும்பப் பிரிவினைகளையும் அவரால் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. வேர் பிடுங்கப்பட்டுச் செத்துக்கொண்டிருக்கும் ஒரு மரத்தைப்போலவே தன்னை உணர்ந்தார். தங்களது உடைமைகள் அனைத்தையும் அங்கேயே கைவிட்டு அவரது குடும்பத்தினர் அகதிகளாகக் கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தனர். கல்கத்தாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. எங்கே பாரத்தாலும் பசியால் மெலிந்து ஒடுங்கிப்போன மனிதர்கள். தாய்மார்களின் அழுகிநாறும் சடலங்களுக்கு அருகே படுத்துக்கொண்டு கதறி அழும் பிஞ்சிளம் குழந்தைகள். கட்டக்கை நிலைகொள்ளாமல் தவிக்கவிட்ட அக்காட்சிகள்தாம் பின்னர் அவரது திரைப்படங்களின் நிரந்தரப் பிம்பங்களாக உருமாறின.

மேகாலயா மாநிலத்தின் தலைநகரமாகப் பிற்காலத்தில் மாறிய ஷில்லோங் நகரில்தான் பிறந்தார் ஷுரமாதி. வசதியான பெங்காலிக் குடும்பம். பன்னிரெண்டாம் வயதில், அவர் வயதுக்கு வந்த அதே நாளில் அவரது தாய் இறந்துபோனார். ஒரு வங்கியை நடத்துமளவிற்குச் செல்வந்தராக இருந்த அவரது தந்தை ஷில்லோங் இலக்கியச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். ஓர் ஆண்குழந்தையை வளர்ப்பதுபோலவே எல்லாச் சுதந்திரங்களுடனும் ஷுரமாதியை வளர்த்தார். சுதந்திரமான எண்ணங்களும் புத்தக வாசிப்பும் சமூக அக்கறையும் ஷுரமாதியை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணித் தலைவியாக ஆக்கின. இளவயதில் பேரழகியாக இருந்த ஷுரமாதி இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனுடன் காதலில் விழுந்தார்.

1949ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது தலைவர்கள் அனைவரும் தலைமறைவானார்கள். தலைமறைவாக மறுத்த ஷுரமாதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது அரசு. இளமை துடிக்கும் வயதில் கொடுங் குற்றவாளிகளும் விலைமாதர்களும் சூழ இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார். விடுதலையான உடன் அவரது தந்தை அவரைக் கல்கத்தாவிற்கு அனுப்ப விரும்பினார். வேற்று மதத்தினருடனான ஷுரமாதியின் காதலைப்பற்றிப் பரவிய மதவெறிச் சாயல்கொண்ட பேச்சுகள் அவரை அஞ்சச்செய்திருந்தன. ஆனால் ஷுரமாதி அதையெல்லாம் அஞ்சவில்லை. ’சிறையில் இருந்தபோது பாலியல் ரீதியாக உனக்கு என்னென்ன நடந்தது?’ என்று கேள்விகேட்ட கேடுகெட்ட அந்தக் காதலனுடனான உறவை முறிக்கவே அவர் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.

ரித்விக் கட்டக் தனது ஆங்கிலப் பட்டப்படிப்பை முடித்து இந்திய மக்கள் நாடக அமைப்பில் (இப்டா) இணைந்து நாடகங்களையும் பாடல்களையும் எழுதிவந்தார். விரைவில் மாற்றுத் திரைப்படங்களின்பால் ஈர்க்கப்பட்டு திரைக்கலையைக் கற்றுக்கொண்டார். 1950ல் நெமய் கோஷ் இயக்கிய ’ச்சின்னமூல்’ எனும் படத்தில் துணை இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றினார். பின்னர் தனது முதல் படமான நாகரிக் ஐ எடுத்து முடித்தார். அக்காலத்தில் ஷுரமாதி கல்கத்தாவில் தனது அத்தையின் வீட்டில் தங்கிக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இப்டாவுடன் இணைந்து இயங்கத் தொடங்கினார். கட்டக்கும் ஷுரமாதியும் இப்டாவில்தான் முதலில் சந்தித்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டனர். அடிக்கடிச் சந்திக்கத் தொடங்கினர். கல்லூரிச் சாலையிலுள்ள உணவுவிடுதிகளில் அமர்ந்து மீன் கபிராஜியும் காப்பியும் சாப்பிட்டுக்கொண்டு பலமணிநேரம் அரசியல், கலை, இலக்கியம், தத்துவம், சினிமா எனப் பேசிக்கொண்டனர்.

அக்காலக் கல்கத்தாவில் அறிவுஜீவிகளாகத் திகழ்ந்த பல முக்கிய நபர்களின் நட்பு இருவருக்கும் கிடைத்தது. அவர்களில் முக்கியமானவர் இசை மாமேதை சலில் சௌதரி. சலில் அப்போது பம்பாயில் ஹிந்தித் திரைப்படங்களின் இசையமைப்பாளராக பணிபுரிந்துகொண்டிருந்தார். 1955 மே மாதம் 8ஆம் தேதி கட்டக்கும் ஷுரமாதியும் திருமணம் செய்துகொண்டனர். மகிழ்வான ஓர் எதிர்காலத்தை ஷுரமாதி கனவுகண்டார். விரைவில் ஹிந்தித் திரைப்பட உலகிற்கு வருமாறு சலில் சௌதரியிடமிருந்து கட்டக்கிற்கு அழைப்பு வந்தது. கணவனும் மனைவியும் பம்பாய் பறந்தனர்.

பம்பாயின் புகழ்பெற்ற ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவில் கதை, திரைக்கதை எழுத்தாளராக கட்டக் சேர்ந்தார். ஆனால் அந்த வேலையும் அதன் வணிகச் சூழலும் அவருக்குப் பிடிக்கவில்லை. கேளிக்கைத் திரைப்படம் என்கின்ற சொல்லாடலையே கட்டக் வெறுத்தார். சமூக யதார்த்தங்களைப் பிரதிபலித்து சமூக மாற்றத்திற்கு உதவும் மாற்றுத் திரைப்படம்தான் தனது ஊடகம் என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். அதற்காக ஃபில்மிஸ்தான் ஸ்டுடியோவுக்குள்ளேயே பரீட்சார்த்த சினிமாப் பிரிவு ஒன்றை அமைக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற முகர்ஜி குடும்பத்தின் தலைவரும் தயாரிப்பாளருமாகயிருந்த சஷாதர் முகர்ஜிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் கட்டக் இப்படி எழுதினார். “உங்கள் கேளிக்கைச் சினிமாக்காரர்களுக்கு முன்னால் எல்லாவகையான தடைகளையும் வைத்துப் பாருங்கள். மிகக் குறைந்த பணம், பழைய தொழில்நுட்பம், நட்சத்திர நடிகர்கள் இல்லை, பெரும் இசையமைப்பாளர்களோ தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லை, பிரம்மாண்ட படப்பிடிப்புத் தளங்கள் இல்லை.. அப்படியொரு சூழலில் நின்றுகொண்டு அவர்கள் எடுக்கும் படங்களைப் பாருங்கள். அவைதாம் அவர்களது உண்மையான கலைத் திறனையும் கலைத் தரத்தையும் வெளிப்படுத்தும்”.

பிமல் ராய் இயக்கிய மதுமதி, ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய முசாஃபிர் போன்ற வணிக வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பின்னர் ஹிந்தித் திரைத்துறையில் கட்டக்கிற்கு வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் பம்பாயின் வணிகச் சினிமா வழங்கிய அந்த பொருளாதார மயக்கத்தில் தொடர அவர் விரும்பவில்லை. கல்கத்தாவுக்கே திரும்பினார். கல்கத்தாவில் சத்யஜித் ரே, ம்ருணால் சென், உத்பல் தத் போன்றவர்களை அடிக்கடிச் சந்தித்தார். அவர்களது ஒற்றுமையுள்ள அரசியல் சிந்தனை, சமூகத்தின்மேலும் மனிதத்தின்மேலுமுள்ள ஆழ்ந்த அக்கறை போன்றவற்றை அச்சந்திப்புகள் வலுவாக்கின. 1952லேயே தான் எடுத்து முடித்த நாகரிக் திரைப்படம் வெளியிடமுடியாமல் தவித்துகொண்டிருந்தபோதிலும் 1958ஆம் ஆண்டில் அஜாந்த்ரிக், பாரி தேக்கே பாலியே எனும் இரண்டு படங்களை எடுத்து வெளியிட்டார். அப்படங்களுமே பரவலாக வெளியிடப்படவோ பேசப்படவோ இல்லை. கலைசார்ந்த தனது கனவுகள் நனவாகாமல் போவதை நினைத்து மிகவும் வருத்தமடைந்தார் கட்டக். தனது கவலைகளுக்கு மருந்தாக அவர் மதுவை நாடத் தொடங்கினார்.

1955ல் வெளியான பதேர் பாஞ்சாலி வழியாக பெரும்புகழடைந்திருந்த சத்ய்ஜித் ரேயும் கட்டக்கும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் படைப்புருவாக்கம் சார்ந்து ஒருவருக்கு அடுத்தவர்மேல் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அந்த விமர்சன வாக்குவாதங்களுக்கு மௌன சாட்சியாக இருப்பார் ம்ருணால் சென். கட்டக் – ரே வாக்குவாதங்கள் பலமுறை எல்லைமீறி, குடிபோதையில் ரேயை உடல்ரீதியாகத் தாக்குமளவிற்குச் சென்றிருக்கிறார் கட்டக். ரே விலகிக்கொள்வார். 1960ல் கட்டக் எடுத்த மேகே டாக்கா தாரா வெளியாகிக் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அது கட்டக் – ஷுரமா தம்பதியினரை மிகவும் மகிழ்வித்தது.

தொடர்ந்து எடுத்த கோமள் காந்தார் பெரும் தோல்வியைத் தழுவியது. கலைரீதியாகவும் அது புரிந்துகொள்ளப்படவில்லை. ரித்விக் மனமுடைந்துபோனார். ஷுரமாதி அப்போது ஜாதவ்பூர் பல்கலையில் முதுகலை பயின்றுகொண்டிருந்தார். கட்டக்கின் மனச் சோர்வுகள் ஷுரமாதியைப் படிப்பை விட்டு விலகும்படிச் செய்தன. மீட்கமுடியாத அளவில் கட்டக் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை அக்காலத்தில்தான் ஷுரமாதி அறிந்துகொண்டார். ஒரு மாமேதைதான் தனது கணவர் என்பதையும் அவருக்குத் தன்னுடைய உதவி தேவை என்பதையும் ஒருபோதும் மறுக்கவில்லை என்றாலும் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்களும் அன்றாடம் அரங்கேறும் குடும்பப் பூசல்களும் ஷுரமாதியை நிலைகுலையச் செய்தன.

சமாளிக்க முடியாத சூழ்நிலையில் தாற்காலிகமாகக் கட்டக்கை விட்டு விலகி கல்கத்தாவிலேயே தனியாக வாழ ஆரம்பித்தார் ஷுரமாதி. அப்படிச் செய்வதனால் கட்டக் மனம் திருந்துவார் என நம்பினார். தனக்கு ஒரு வேலை கிடைத்தால் பணப் பிரச்சினைகள் ஓய்ந்துவிடும், குடும்பத்தின் எல்லாச் செலவுகளையும் தன்னால் சமாளிக்க முடிந்தால் கட்டக் தனது படைப்புகளைச் சார்ந்து மட்டும் இயங்க முடியும். அத்துடன் சிக்கல்கள் இல்லாமலாகும் என்று ஷுரமாதி எண்ணினார். விரைவில் அவருக்கு வேலை கிடைத்து விட்டது. வேலையில் சேரப்போகிறேன், சம்பளம் வரத்தொடங்கியதும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கட்டக்கிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு கட்டக் சொன்ன பதில் ஷுரமாதியின் இதயத்தைச் சுக்குநூறாக்கியது.

”மீரா ஜென்னா என்ற பெண்ணுடன் நான் காதலில் இருக்கிறேன். ஒன்றாக வாழ முடிவெடுத்துவிட்டோம். இதைப்பற்றி உனது கருத்து என்ன? உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மூவரும் ஒன்றாக வாழ்வோமே” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான ஷில்லோங்கிற்கே திரும்பினார் ஷுரமாதி. அந்த அதிரடியைக் கட்டக் எதிர்பார்க்கவில்லை. பல விஷயங்களில் தாராள மனப்பான்மைகொண்டவரான ஷுரமாதி இதையும் ஏற்றுக்கொள்வார் என்றே கட்டக் எண்ணியிருந்தார். எல்லாமே கைவிட்டுப் போயின என்று உணர்ந்த கட்டக் ஏற்கனவே திருமணமாகியிருந்த மீரா ஜென்னாவுடனான உறவை விட்டு விலகினார்.

இக்காலத்தில் குடிப்பழக்கத்தை விடுவதற்கான தீவிர சிகிச்சையை எடுத்துக்கொண்டார். உடல்நலம் தேறியது. மன அழுத்தங்களும் குறைந்து விட்டன. கட்டக் படங்களின் ரசிகையாக இருந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையால் பூனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக கட்டக் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கினார். இயக்கம், நடிப்பு ஆகிய பிரிவுகளின் பாடத்திட்டங்களை மாற்றியமைத்தார். கருத்தியல் கோட்பாடுகளைக் குறைத்து செய்முறைப் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். மணி கௌள், குமார் சாஹ்னி, ஜான் அபிரஹாம் போன்ற பல முக்கியச் சீடர்களின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் பாத்திரமானார். ஆனால் விரைவில் அவ்வேலையிலுமே அவர் சலித்துப் போனார். எண்ணற்ற அலுவலகக் காகிதங்களைச் சரிபார்க்கும் ஓர் அரசாங்க ஊழியராக இருப்பதை அவர் விரும்பவில்லை.

திடீரென்று ஒருநாள் கட்டக் ஷில்லோங்கில் ஷுரமாதியிடம் வந்தார். தன்னையும் குழந்தைகளையும் பூனேவுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்தார் என்றே ஷுரமாதி எண்ணினார். ஆனால் அந்த வேலையை என்றைக்குமாக விட்டுவிட்டதாக அறிவித்தார் கட்டக். சில நாட்கள் ஷில்லோங்கிலேயே தங்கினார். பெரும்பாலும் மௌனமாகயிருந்தார். பின்னர் உட்புறமாகத் தாழிடப்பட்ட அறைக்குள் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு வெளியே வராமல் கழித்தார். அவ்வறையில் இரவும் பகலும் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. உரத்த குரலில் கதாபாத்திரங்களைப்போல் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தார். சிலநேரம் அலறினார். ஷுரமாதி வேலையிலிருந்து திரும்பி வரும்போது குடிபோதையில் மயக்கமாகிக் கிடக்கும் கட்டக்கைத்தான் பலநாள் பார்த்தார். குடியை விடுவதற்கான சிகிச்சைகளை மறுபடியும் எடுத்துக்கொண்டார். ஓரளவிற்குக் குணமான பின்னர் இருவரும் கல்கத்தா திரும்பினார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் தன்னைத்தானே அகற்றிக்கொண்டு எழுத்திற்கு இறங்கினார் கட்டக். திரைப்படக்கலையின் அனைத்து அம்சங்களையும் தொட்டுச் செல்லும் ஏராளமான கட்டுரைகளை அந்நாட்களில் எழுதினார். பல கதைகளையும் எழுதினார். எடுக்கப்போகும் படங்களுக்கான திட்டங்களை ஷுரமாதியிடம் பகிர்ந்தார். சில திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தார். ஆனால் அத்திரைக்கதைகள் முடியும் தருவாயில் அவரது மனப்பிறழ்வுகள் மீண்டும் தலைநீட்டத் தொடங்கின. அது கட்டுப்படுத்த முடியாமலானபோது கட்டக்கை மனநலக் காப்பகத்தில் சேர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஷுரமாதி தள்ளப்பட்டார்.

ஷுரமாதியிடம் அன்றாடச் செலவுகளுக்கான பணம்கூட அப்போது இருக்கவில்லை. எங்கேயாவது ஒரு வேலை கிடைக்குமா என்று அவர் அலைந்துகொண்டிருந்தார். எதுவுமே அமையவில்லை. இறுதியில் கட்டக் படங்களின் ஒளிப்பதிவாளரான மகேந்திர குமார்தான் அவருக்கு உதவினார். சிகிச்சை பலனளிக்கவில்லை. இறுதியில் மூளையில் மின்சாரம் பாய்ச்சும் அதிர்வுச் சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதை அனுமதிப்பதைத் தவிர ஷுரமாதியிடமும் வேறுவழி இருக்கவில்லை. அச்சிகிச்சை மேலும் பல சிக்கல்களைத்தாம் வரவழைத்தன. பலசமயம் தான் யாரென்றே கட்டக்கிற்குத் தெரியாமலாகியது.

ரத்தத்தில் குளித்த பெண்களும் குழந்தைகளும் தன் கண்முன்னால் அங்குமிங்கும் ஓடுகிறார்கள் என்று ஷுரமாதியிடம் சொன்னார் கட்டக். அவர்களை ’பெங்க்ளாதேஷின் ஆவிகள்’ என்று குறிப்பிட்டார். தினமும் எண்ணற்ற மருந்து ஊசிகளை அவரது உடம்பில் செலுத்தினார்கள். ஒவ்வொரு ஊசிக்குப்பின்னும் மயக்கமானார். தன்னால் எதையுமே சரியாகச் சிந்திக்கவோ நினைவுகூறவோ முடியவில்லை என்று சொல்லித் தன்னை வீட்டுக்குக் கொண்டுபோகுமாறு ஷுரமாதியிடம் கெஞ்சினார். ஆனால் அவர் முழுக் குணமடையும்வரை மனநலக் காப்பகத்தில் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். கட்டக்கை காப்பகத்தில் விட்டுவிட்டு ஷுரமாதி மீண்டும் ஷில்லோங் கிளம்பினார்.

இதற்கிடையே இந்திய மாற்றுச் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனை மனநலக் காப்பகம் மனிதாபிமானமற்று நடத்துவதாக செய்தி பரவியது. திரைப்படத் துறையினரும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் கட்டக்கிற்காகக் குரல் கொடுத்தனர். இறுதியில் மாநில அரசின் ஆணையின்படி கட்டக் விடுதலையாகி வீடு திரும்பினார். முற்றிலும் குணமடைந்து மனம் திருந்திய கட்டக்கைப் பார்க்கக் கல்கத்தாவிற்கு வந்த ஷுரமாதியின் முன்னால் கடும் சினத்துடன் நின்றார் கட்டக். ”திரைப்படம் சார்ந்து பெருங்கனவுகளைக் கொண்டிருக்கும் என்னை நீ ஒருபோதும் மதிக்கவோ எனக்கு துணையாக நிற்கவோ இல்லை” என்று அவர் ஷுரமாதியைக் குற்றம் சாட்டினார். ஷுரமாதியாலும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தச் சச்சரவுகள் ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டே போயின.

ஒருநாள் ஷுரமாதி வீட்டுக்கு வரும்போது உச்சபட்சக் குடிபோதையில் கட்டக் தரையில் படுத்திருந்தார். அவருடன் காளிகட்டம் மயானத்தில் பிணங்களை எரிக்கும் வேலை செய்யும் சிலரும் அமர்ந்திருந்தார்கள். தனது இறுதிச் சடங்குகளை எப்படி நடத்தவேண்டும், தனது பிணத்தை வித்தியாசமான முறையில் எப்படி எரிக்கவேண்டும் என்றெல்லாம் கட்டக் அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். இந்த விபரீத நடத்தைக்கு விளக்கம் கேட்ட ஷுரமாதியிடம் தான் செய்துகொண்டிருப்பது கலைரீதியான சில பரிசோதனை முயற்சிகள் என்று சொன்னார். வருத்தமும் கோபமும் உந்திவிட்ட ஷுரமாதி குழந்தைகளை இழுத்துக்கொண்டு சைந்தியா ஊருக்குக் கிளம்பினார்.  

சதாநேரமும் குடிபோதையில் அலைந்துகொண்டிருந்த கட்டக்கிற்கு பிரபல ஹிந்தி, பெங்காலி நாயக நடிகரும் பெங்காலிப் பாடகருமான பிஸ்வஜித் ஆதரவளித்தார். தனது வீட்டிலேயே அவர் கட்டக்கைத் தங்கவைத்தார். அத்துடன் கட்டக்கிற்கு ஆலோசனைகளையும் வழங்கினார். சில மாதங்கள் கழித்து ஷுரமாதியையும் குழந்தைகளையும் பார்க்க கட்டக் சைந்தியாவுக்கு வந்தபோது அவரது தோற்றமே மாறியிருந்தது. ஆரோக்கியமாகக் காட்சியளித்தார். சிலநாட்கள் அங்கேயே தங்கி முன்பு எழுதிப் பாதியில் விட்டுவிட்ட திதாஷ் எக்தி நதிர் நாம், ஜுக்தி தக்கொ ஆர் கப்போ எனும் படங்களின் திரைக்கதைகளை எழுதி முடித்தார். பின்னர் பிஸ்வஜித் போன்ற அபிமானிகளின் உதவியினால் பெங்க்ளாதேஷ் சென்று திதாஷ் படத்தை எடுத்தார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் கட்டக் ரத்தம் கக்கி மயக்கம்போட்டு விழுந்தார்.

அவருக்குக் கடுமையான காசநோய் முற்றிப் போயிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். தனது மேகே டாக்கா தாராவின் கதாநாயகியைப் பீடித்து ஒடுக்கிய அதே கொடும் நோய் அறம் பாடப்பட்டதுபோல் கட்டக்கின்மேல் விழுந்திருந்தது. அப்போது கல்கத்தாவிற்கு வந்திருந்த பிரதமர் இந்திராகாந்தி தனது தனிப்பட்ட ஹெலிகாப்டரை உடனடியாக தாக்காவிற்கு அனுப்பி கட்டக்கை அங்கிருந்து கல்கத்தாவிற்குக் கொண்டுவந்து மருத்துவக் கல்லூரியின் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார். பிரபல பெங்காலி நடிகர் உத்தம்குமார் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்தார். கட்டக் மாதக்கணக்காக மருத்துவமனையில் இருந்தார். சைந்தியாவில் வேலை செய்துகொண்டே ஷுரமாதி அடிக்கடி கல்கத்தாவிற்கு வந்து கட்டக்கைக் கவனித்தார்.

நோய் ஓரளவிற்குக் குணமாகி வெளியே வந்த கட்டக்கை மீண்டும் நடிகர் பிஸ்வஜித் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து அவர் திரட்டிய பணத்தினால் கட்டக்கின் கனவுத் திரைப்படமான ஜுக்தி தக்கொ ஆர் கப்போ வும் எடுத்துமுடிக்கப்பட்டது. படம் ஓடவில்லை என்றாலும் தனது பொருளாதார நிலைமை மேம்பட்டதாகவும் தான் கல்கத்தாவில் புதுவீடு வாங்கி அங்கே ஒரு புதுவாழ்வை அமைக்கப் போவதாகவும் ஷுரமாதிக்கு கடிதம் எழுதினார் கட்டக். பின்னர் திடீரென்று ஒருநாள் சைந்தியாவிற்கு வந்தார். பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார். ஆனால் குழந்தைகளிடம் அன்பாகப் பழகி அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டார். மகன் ரிதபென் பாடிய பாடல்களை ஆர்வத்துடன் கேட்டுரசித்து அவனை ஆரத்தழுவினார். ஆனால் அன்றைய இரவு அவர் அவ்வீட்டில் தங்கவில்லை.

அடுத்தநாள் காலையில் திரும்பி வந்து ஷுரமாதியிடம் கொஞ்சம் பணத்தை கடன் கேட்டார். இவ்வுலகையே மறந்தவரைப்போல் காட்சியளித்தார். பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து கிளம்பினார். ஓரிரு நாட்களில் மீண்டும் கல்கத்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வந்தது. இதற்கிடையே கட்டக்கின் கலைப் பங்களிப்பைக் கருத்தில்கொண்டு அரசுக் கல்வித்துறையில் ஷுரமாதிக்கு வேலை வழங்கி பெங்கால் முதலமைச்சர் உத்தரவிட்டார். அந்த உத்தரவு ஷுரமாதியின் கைக்கு வந்த அதே நாளில், அதாவது 1976 பிப்ரவரி ஆறாம் தேதி ரித்விக் கட்டக் இறந்துபோனார்.

50 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ரித்விக் கட்டக்கின் கலை அவர் வாழ்ந்த காலத்தில் மிகக் குறைவாகவே புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் இறப்புக்குப் பிறகு இந்திய மாற்றுச் சினிமாவின் மிகமுக்கியமான ஆளுமைகளில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். உலகம் முழுவதும் மாற்றுச் சினிமாவைக் கவனித்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கு மத்தியில் அவர் ஓர் இதிகாச நாயகனாக மாறினார். அவர் எடுத்த பெரும்பாலான படங்களை மாற்றுச் சினிமாவின் பாடப் புத்தகங்களாக உலகம் முழுவழுதுமுள்ள திரைப்படக் கல்லூரிகள் ஏற்றெடுத்தன. முன்னோடிகள் என்று யாருமே இல்லாமல் யதார்த்தம், உணர்ச்சிநாடகம், தொன்மம் போன்றவற்றைக் கலந்து தனக்கெனத் தனித்துவமான ஒரு திரைப் பாணியை உருவாக்கியவர் என்று கொண்டாடப்பட்டார்.

“கட்டக் யாராலேயுமே முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மாமேதை. நானோ மிகவும் சாதாரணமானவள். ஒரு மாமேதையுடன் ஒரு சாதாரணப்பெண் வாழும்போது நிகழும் புரிதலின்மைகள்தாம் என்னை அப்போது அலக்கழிக்க வைத்தன. மேலும் சற்று புரிதலுடனும் தெளிவுடனும் நான் இருந்திருக்காலாம். இப்போது வருத்தப்பட்டு பயனில்லையே” என்று கட்டக்கின் மரணத்திற்குபின் ஷுரமாதி சொன்னார். ஆனால் அப்போதும் அவரது வாழ்க்கை துயரங்களிலிருந்து துயரங்களுக்குத்தான் பயணித்துக்கொண்டிருந்தது.

அதீதமான அறிவுக் கூர்மையை வெளிப்படுத்திய அவரது மகன் ரிதபென் நல்ல ஓவியராகவும் நன்றாகப் பாடக்கூடியவராகவும் இருந்தார். அவர் ஒரு திரைப்பட இயக்குநராக வருவார் என்று பலரும் எண்ணினார்கள். ஆனால் கடுமையான மனநோயினால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் ஓர் அறைக்குள்ளே ரிதபென் கட்டக் அடைபட்டுப் போனார். ஷுரமாதியின் இளைய மகள் ஸுசிஸ்மிதா கட்டக் ஓவியராகவும் சிற்பக்கலைஞராகவும் தன்னை முன்வைத்தவர். ஆனால் எதிலுமே சோபிக்கமுடியாமல் இளவயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப் பலவகையான நோய்களால் பீடித்து தனது 49ஆவது வயதிலேயே அவர் இறந்துபோனார்.

ஷுரமாதியின் மூத்த மகளான சம்ஹிதா கட்டக் தனது தந்தையின் மரபுரிமைச் செல்வங்களை மீட்டெடுக்கப் பாடுபட்டவர். சம்ஹிதாவின் ஒரே மகள் அதிதி கட்டக் 2012 நவம்பர் 30 அன்று ஷுரமாதியின் வீட்டிலிருந்து நண்பர்களைச் சந்திக்கப்போனாள். பத்தொன்பதே வயதான அவள் அன்று இரவில் கல்கத்தா நகரின் ஒரு கால்வாய்க்குள்ளே இறந்து கிடந்தாள். விபத்து என்று காவல்துறை அதை எழுதித்தள்ளியது. தன் மகளை யாரோ திட்டம்போட்டுக் கொலை செய்தார்கள் என்று நம்பிய சம்ஹிதா கட்டக் அத்துயரத்திலிருந்து மீளமுடியாமல் அறுபது வயதாகும் முன்னே இறந்துபோனார்.

வாழ்க்கையின் எண்ணற்ற கொடூரங்களை சந்தித்துக்கொண்டு நீண்டகாலம் வாழநேர்ந்த ஷுரமாதி தனது முதியவயது முழுவதும் தன் கணவரின் புகைப்படங்களை, புத்தகங்களை, திரைப்படங்களை, திரைக்கதைகளை, கடிதங்களைச் சேகரிப்பதில் செலவிட்டார். எந்த வசதிகளுமேயில்லாத இடுங்கலான தனது வீட்டின் பூட்டப்பட்ட அறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கும் தனது மகனின் மனநோய்க் கதறல்களுக்கு நடுவே வாழ்ந்தார். ரித்விக் கட்டக்கின் புகைப்படங்கள் சூழ்ந்த அறையில் அவரது படத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டே தூங்கினார். இன்று தனது துயரங்களிலிருந்து என்றைக்குமாக ஓய்வுபெற்று ரித்விக் கட்டக்குடன் மரணத்தில் இணைந்திருக்கிறார் ஷுரமாதி. கட்டக்கின் நிரந்தரக் காதலிக்கு இந்த எளிய ரசிகனின் பிரியாவிடை.

* ஷுரமா அக்கா என்பதன் பெங்காலி வடிவம்
** அப்போது கிழக்குப் பாகிஸ்தான்


1

(1982ல் நடந்த நிகழ்வு. விகடன் தடத்தில் எழுதும் சினிமா வெறியின் 40 ஆண்டுகள் எனும் தொடரிலிருந்து)

கட்டப்பனை சங்கீதாவில் தர்சனா திரைப்படச் சங்கத்தின் சினிமாத் திரையிடல் ஆரம்பிக்கப் போகிறது. ரித்விக் கட்டக் இயக்கிய சுவர்ண ரேகா எனும் படம். ஆனால் தர்சனாவின் உறுப்பினர்களுக்கு மட்டும்தாம் அனுமதி. எல்லா நாட்களையும்போல் சீட்டெடுத்து உள்ளே செல்ல முடியாது. அடையாள அட்டை வேண்டும். சங்கத்தின் உறுப்பினரும் எங்களது அண்டை வீட்டுக்காரருமான ஓவியர் விஜயன் வரும்போது எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி அவருடன் உள்ளே போகலாம் என்று திட்டம்போட்டு அந்த அரங்கிற்கு வெளியே திரிந்தேன். ஆனால் விஜயன் அன்றைக்கு வரவேயில்லை! திரையரங்கின் முன்னால் சதா காணப்படும் காலிப்பயல்களில் ஒருவனான என்னை காவல்காரனுக்குத் தெரியும். அவரிடம் “நானும் படம் பாக்கலாமா?” என்று கேட்டேன். “அய்யோ.. இது பசங்க பாக்கற படம் கெடயாது. தரிசனாவோட ஆள் அல்லாம யாரயும் உள்ளே விட முடியாது” என்று சொன்னார். ஆனால் சீட்டுக்கான காசை ரகசியமாக அவருக்குக் கையூட்டாகத் தந்தால் படம் தொடங்கி சற்று நேரம் கழித்து உள்ளே விடுகிறேன் என்றார். முன்வரிசையின் மூலையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் அமர்ந்துகொள்ளவேண்டும்.

பதுங்கி உள்ளே சென்று முன்வரிசையின் மூலையிலேயே அமர்ந்தேன். மிகவும் பின்னால் ஓரிரு வரிசை இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் இருந்தனர். நான் முன்பு பார்த்த ம்ரிகயா போன்ற ஒரு ஹிந்திப் படம்தான் சுவர்ண ரேகா என்றுதான் நினைத்தேன். ஆனால் இது என்னவென்றே தெரியாத ஏதோ ஒரு மொழி! படம் மிகவும் மந்தமாக ஊர்ந்து ஊர்ந்து நகர்ந்தது. அலுப்பைத் தாங்கமுடியவில்லை. வெளியே போகலாம் என்றே முடிவெடுத்தேன். ஆனால் மெல்ல மெல்ல அந்த பெங்காலி திரைப்படமும் அதன் காட்சிகளும் எனக்குப் புரியத் தொடங்கின. ’ஆஜ் தானேர் கேதே ரௌத்ர சாயாய் லூகோ சூரீ கேலா..’ அப்பாடல்களும் காட்சிகளும் என் மனதிற்குள் பதிந்தன. நீளமான படமாகயிருந்தும் மற்ற திரைப்படங்களிருந்து அதுவரைக்கும் கிடைக்காத ஓர் அனுபவத்தினால் நிறைந்த மனத்துடன்தான் திரையரங்கைவிட்டு அன்றைக்கு வெளியே வந்தேன்.

2

ரித்விக் கட்டக் மனநலக் காப்பகத்திலிருந்தபோது அவரது சிகிச்சைக்கான பண உதவிகளைச் செய்தவர் கட்டக்கின் மேகே டாக்கா தாரா, கோமள் காந்தார், சுவர்ண ரேகா போன்ற படங்களின் ஒளிப்பதிவாளரான மகேந்திர குமார். இந்திய மாற்றுச் சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் அவர். இளவயதில் வீட்டை விட்டு ஓடிவந்த மகேந்திர குமாரைக் கண்டெடுத்து வழிநடத்தி ஓர் ஒளிப்பதிவாளராக்கியவர் கட்டக். ஆனால் அவர் ஷுரமா கட்டக்கை மௌனமாக காதலித்தார். ஷுரமாவுடன் சேர்ந்துவாழ விரும்பினார். இது எதுவுமே ஷுரமாவிற்குத் தெரியவில்லை என்றாலும் கட்டக்கிற்குத் தெரிந்தது. அதைச் சொல்லி கட்டக்கும் மகேந்திர குமாரும் சண்டை போட்டனர். அது பெரும் கைகலப்பில் முடிந்தது. கட்டக்கை மகேந்திர குமார் மோசமாக அடித்துக் காயப்படுத்தினார். குடிபோதையில் நடந்த சண்டை என்று அது ஷுரமாவுக்குச் சொல்லப்பட்டது. தனது கணவரை அடித்தமைக்கு ஷுரமா மகேந்திர குமாரை வன்மையாகக் கண்டித்தார். கடுமையாகக் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றினார். கட்டக் இறந்து பல ஆண்டுகள் கழித்துதான் அந்தச் சண்டையின் உண்மைக் காரணம் ஷுரமாவுக்குத் தெரிய வந்தது. திருமணமே செய்யாமல் உறவினர்களற்று வாழ்ந்த மகேந்திர குமார் 2016 அக்டோபர் 4 அன்று தனது 81ஆவது வயதில் அனாதையாக இறந்து கிடந்தார். அரசுச் சவக்கிடங்கில் பல வாரங்கள் கிடந்த அவரது சடலத்தை ஏற்றெடுக்க யாருமே முன்வரவில்லை.

நன்றி : படச்சுருள்

பிரபஞ்சனும் நானும்“நமது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரபஞ்சனையும் அழைப்போமே. உங்களது கட்டுரைகளை எல்லாம் படித்துப் பாராட்டி அடிக்கடி என்னிடம் பேசுவார்” என்று சொன்னார் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மானுடம் வெல்லும், வானம் வசப்படும், சில சிறுகதைகள் என ஓரளவுக்குப் பிரபஞ்சனை படித்திருக்கிறேன். அவரது எளிமையான மொழிநடையும் பாத்திரப் படைப்புகளும் எனக்குப் பிடித்தமானவை. ஆனால் அதுவரை நான் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அவர் ஒரு திரையிசைப் பிரியர், முற்போக்கு எண்ணங்கள்கொண்ட கறாரான நாத்திகர் என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எனது ‘சொல்லில் அடங்காத இசை’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றேன்.

ஓர் உணவுவிடுதியில் நிகழ்ந்தது அச்சந்திப்பு. வடிவான நீல வண்ண ஜிப்பா அணிந்து நறுமணங்களைப் பூசி குளிர் கண்ணாடியை வைத்து மெலிந்து உயர்ந்த மனிதராக பிரபஞ்சன் காட்சியளித்தார். எண்ணற்ற வெண்சுருட்டுகளைப் புகைத்துத் தள்ளிக்கொண்டு, பலகுவளை ஃபில்டர் காப்பிகளை குடித்து முடித்தவாறு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் என்னிடம் பேசினார். பலகாலமாகத் தெரிந்த இரண்டு நண்பர்கள் பேசுவதுபோல் இலக்கியம், இசை, வரலாறு, இதழியல் எனப் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருந்தோம்.

எம் எஸ் விஸ்வநாதன், பி பி ஸ்ரீநிவாஸ், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன் போன்றவர்களுடன் பிரபஞ்சனும் புத்தக வெளியீட்டுவிழா மேடையை அலங்கரித்தார். புத்தகத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். இத்தகைய எழுத்து தமிழுக்கே புதுசு என்று பேசினார். புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் பேசிய நாத்திகச் சாயலுள்ள ஒரு கருத்தை, தனது உரையில் கடுமையாக விமர்சித்துப் பேசினார் நாஞ்சில்நாடன். அப்போது பிரபஞ்சன் என் காதில்இவருக்கு திடீர்னு என்னாச்சு?” என்று சிறு புன்னகையுடன் கேட்டார். அதன்பின் பிரபஞ்சனுடன் எத்தனையோ சந்திப்புகள். உரையாடல்கள். எனது புத்தகத்திற்கு அவர் விரிவான மதிப்புரை ஒன்றை எழுதினார். அவரது பீட்டர்ஸ் சாலை இல்லத்திலும் வேறு வேறு உணவு விடுதிகளிலும் நாங்கள் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினோம்.

பழைய ஹிந்திப் பாடல்களின்மேல் பிரபஞ்சனுக்கு நாட்டம் இருந்தது. ஒருமுறை ரோஷன், மதன்மோகன் போன்றவர்கள் இசையமைத்த, என்னிடம் இல்லாத சில தொகுப்புகள் அவரிடம் இருப்பதைக் கண்டேன். “உங்கள் கட்டுரைகளைப் படித்த ஆர்வத்தில் பம்பாயிலிருந்து ஒரு நண்பர் வழியாக வரவைத்தேன்என்றார். அவற்றைப் பதிவெடுக்க நான் இரவல் வாங்கினேன். ஆனால் சொன்ன நேரத்திற்குத் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. அதற்காக என்மேல் சற்று கோபமானார். பிரபஞ்சனுக்குள்ளே ஒரு கோபக்காரரும் இருப்பதை  உணர்ந்தேன். இருந்தும் எங்கள் நட்பு ஒவ்வொருநாளும் மேம்பட்டுக்கொண்டேபோனது.

அக்காலத்தில் பிரபஞ்சனையும் என்னையும் சிங்கப்பூர் நண்பர் பரணி சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றார். முதலில் எஸ் ராமகிருஷ்ணனும் நானும் செல்வதாக இருந்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ராமகிருஷ்ணனால் வரமுடியாமல்போனபோது தான் வருவதாகப் பிரபஞ்சன் ஒப்புக்கொண்டார். விமான நிலையத்தில் நாங்கள் இருவரும் சந்தித்தபோது பிரபஞ்சன் ஊக்கமிழந்து காணப்பட்டார். “எனக்கு ஏனோ இந்தப் பயணம் சுவாரசியமாக இல்லைஎன்றார். டைகர் ஏர்வேய்ஸ் எனும் சிக்கன விமானத்தில்தான் பயணம். அதில் குடிக்கும் தண்ணீரைக் கூடப் பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன் நான் குடிக்கும் தண்ணியை வாங்கினேன். ஒரு புட்டி ஷிவாஸ் ரீகல் விஸ்கி!

அதிலிருந்து இரண்டு மூன்று லார்ஜ்களை மடமடவெனக் குடித்தோம். சற்றுநேரத்தில்இப்போ நல்லாருக்குஎன்றார் பிரபஞ்சன். “பயணம் சுவாரசியமாச்சா?” என்று கேட்டபோது. “சுவாரசியமோ சுவாரசியம்..” என்றார் வெள்ளந்தியான சிரிப்புடன். “னோ றிய்யேன் தோ றிய்யேன் நோன் ழே நே ரிக்ரெற்றொ றிய்யேன்…” நான் பாடத் தொடங்கினேன். “அட! உங்களுக்கு ஃபிரென்சும் தெரியுமா?” என்று வியந்தார் பிரபஞ்சன்.இல்ல சார்.. நீங்க ஒரு ஃபிரெஞ்சுகாரர் தானே. அதனால எனக்குத் தெரிஞ்ச ஒரேயொரு ஃபிரென்சு பாட்டை எடுத்துவிட்டேன்என்றுச் சொன்னேன். பிரபஞ்சன் மகிழ்ச்சியுடன் தாளம் தட்டி ரசித்தார். பிறகெப்போதோ குறட்டைவிட்டுத் தூங்கத் தொடங்கினார்.

ஆவணங்களின் அடிப்படையில் பிரபஞ்சன் தமிழ்நாட்டுக்காரரோ இந்தியரோ அல்லர். அவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்! அவரே விரிவாக எழுதிய, அவர் பிறந்து வளர்ந்த நிலப்பகுதியின் வரலாற்றுப் பின்புலம்தான் அதன் காரணம். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு காலம் ஃபிரான்ஸ், ஹாலந்து, இங்கிலாந்து என மாறி மாறி மூன்று வெள்ளை வெளிநாட்டவர்களின் குடியேற்ற நிலப்பகுதியாக இருந்து, இறுதியில் 140 ஆண்டுகாலம் ஃபிரான்ஸ் நாட்டின் பகுதியாகவே இருந்த பாண்டிச்சேரியில் 1945 ஏப்ரல் 26ஆம் தேதி பிறந்தவர் பிரபஞ்சன். இயர்பெயர் சாரங்கபாணி வீரபத்திரன் வைத்திலிங்கம்.

1954ல் பாண்டிச்சேரி இந்தியாவின் பகுதியாக மாறுகிறது. அப்போதுமே அது இந்தியாவை விட ஃபிரான்ஸாகத்தான் இருந்தது. 1963இல் பாண்டிச்சேரி மக்களுக்கு ஃபிரான்ஸ் நாடு ஓர் அறிக்கை விட்டது. அவர்கள் ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு ஃபிரான்ஸ் நாட்டிற்குக் குடியேறலாம். அல்லது ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்கள் எனும் அந்தஸ்துடன் பாண்டிச்சேரியிலேயே வாழலாம். நுழைவனுமதிச் சீட்டு இல்லாமலேயே எந்தநேரமும் ஃபிரான்ஸ் செல்லலாம். ஃபிராங்கோ–பாண்டிச்சேரியர்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அந்த அந்தஸ்தை அடைவதற்குச் சிலபல சட்டதிட்டங்கள் முனவைக்கப்பட்டன.

அதில் ஒன்று தமது பெயரின் எழுத்துகளை ஃபிரெஞ்சு மொழிக்கு இணங்குவதுபோல் மாற்றவேண்டும் என்பது. அதாவது கிருஷ்ணமூர்த்தி Kichenamourty ஆகவேண்டும். குமார் Coumer ஆகவும் வீரபத்திரன் Virapattirane ஆகவும் மாறவேண்டும். இவற்றையெல்லாம் ஒப்புக்கொள்வதாக அவர்கள் எழுதித்தரவேண்டும். ஃபிரான்ஸ் நாட்டின் குடிமக்களாக மாற ஒப்புக்கொண்டு எழுதிக்கொடுத்தது பிரபஞ்சனின் குடும்பம். பிரபஞ்சனின் இயற்பெயரின் ஆங்கில எழுத்துகள் Sarangabany Dit Virapattirane Vaithilingam. பிற்காலத்தில் அவரது இரண்டு மகன்கள் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்குவதற்கான சூழல் உருவானதுமே பிரபஞ்சனுக்குப் பரம்பரையாகக் கிடைத்த இந்த ஃபிரான்ஸ் நாட்டுக் குடியுரிமையினால்தான்.
     
ஒருவாரம் நீண்ட எங்களது சிங்கப்பூர் பயணத்தில் சிங்கப்பூர் தேசிய நூலகம், அங் மோ கியோ நூலகம் எனப் பல இடங்களில் நடந்த கூட்டங்களில் நாங்கள் பேசினோம். சிங்கப்பூரின் பசுமைச் சாலைகளில் பலமணிநேரம் நடந்து திரிந்தோம். இசை, இலக்கியம், வரலாறு, கிசு கிசு எனப் பரந்து விரிந்த உரையாடல்கள். நடுவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள். அதிலும் முக்கியமாக டி எம் எஸ் பாடல்கள். ’இந்தப் பாடல் தெரியுமா? அந்தப் பாடல் தெரியுமா?’ என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்பார். தெரிந்ததும் தெரியாததுமான எத்தனையோ பாடல்களை அவருக்காக நான் பாடினேன்!

நான் சந்திக்கும் காலத்தில் பிரபஞ்சன் எழுத்தை மட்டுமே நம்பித்தான் வாழ்ந்துவந்தார். முன்பு ஓர் இதழாளராகவும் சில தொலைக்காட்சிகளின் ஆலோசகராகவும் வேலை செய்திருக்கிறார் எனபது தெரியும். குமுதத்திலிருந்து பிரிந்த பின்னர் சொல்லும்படியாக எங்கேயும் அவர் வேலை செய்யவில்லை என்றே நினைக்கிறேன். எழுத்தின் வழியாக அவ்வப்போது கிடைக்கும் சிறு ஊதியத்தையும் மேடைப்பேச்சுக்களுக்காக வழங்கப்படும் சன்மானத்தையும் வைத்துக்கொண்டு ஒருவர் வாழ்க்கையை நடத்த முடியாது. அதுவும் பிரபஞ்சன் போன்ற ரசனையான ஒரு மனிதர். அவரை ஆதரிக்கும் வாசக நண்பர்களின் உதவிகள் அவருக்கு முக்கியமானவையாக இருந்தன. அத்தகைய ஒருவர்தான் எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற பரணீதரன். பிரபஞ்சனுக்குப் பலவகையான உதவிகளைச் செய்தவர் அவர்

பரணியின் வீட்டில் ஒருநாள் இரவு இரண்டுமணிக்குப் பிரபஞ்சனுக்கும் பரணிக்குமிடையே எதிர்பாராமல் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. எரியும் தீயில் விஸ்கியையும் ஊற்றிக்கொண்டிருந்ததால் அந்த வாக்குவாதம் கை மீறிப் போனது. “ஒரு கடைக்கோடி வாசகனாக நான் உங்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள்?” என்று ஏதோ ஒரு வேகத்தில் பரணி கேட்டு விட்டார். பிரபஞ்சன் மௌனமானார். ஆனால் எனக்குக் கோபம் தலைக்கேறியது. “ஓர் எழுத்தாளனால் வாசகனுக்குத் தர முடிந்தது அவனுடைய எழுத்துக்கள் மட்டுமே. வேறு எதைத் தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்? பிரபஞ்சன் சார்.. இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டு நீங்கள் ஒரு கணம்கூட இவரது வீட்டில் தங்கக் கூடாது. நாம் இப்போதே இங்கிருந்து கிளம்புவோம்என்று நான் பெட்டி படுக்கையை எடுத்தேன். ஆனால் பிரபஞ்சன் அமர்ந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. எனது குரல் மேலும் உரத்தபோது பரணி பிரபஞ்சனின் கால்தொட்டு மன்னிப்புக் கேட்டார். அத்துடன் எல்லாம் சமாதானமாயின.

ஒருமுறை ஜெயமோகனும் நானும் சத்யம் திரையரங்கிலிருந்து படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோதுபடமோ சகிக்கமுடியவில்லை, பக்கத்திலிருக்கும் பிரபஞ்சனை சந்திக்கப் போகலாமா?” என்று கேட்டேன். அக்காலத்தில் சிலபல மனஸ்தாபங்களால் பிரபஞ்சனும் ஜெயமோகனும் மனதளவில் மிகவும் விலகி இருந்தனர். அதனாலேயே நான் அப்படிக் கேட்டேன். முதலில் மறுத்தார் என்றாலும் சிலநிமிட யோசனைக்குப்பின் என்னுடன் வரவே செய்தார் ஜெயமோகன். நாங்கள் பிரபஞ்சனின் கதவைத் தட்டினோம். ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கப் போகும் நேரத்தில் எரிச்சலோடு கதவைத் திறந்து பார்த்த பிரபஞ்சன் எங்களை, குறிப்பாக ஜெயமோகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மகிழ்ந்தார்.

அவர் குளிக்கப்போன நேரத்தில் ஜெயமோகனும் நானும் அந்த அறையின் நாலாபக்கமும் குவிந்துகிடந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களிலிருந்து சிலவற்றைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தோம். அழகான வெள்ளை வண்ண ஜிப்பாவைப் போட்டு நறுமணங்கள் பூசிக்கொண்டு புது மலர்ச்சியுடன் வந்தமர்ந்தார் பிரபஞ்சன். அவரும் ஜெயமோகனும் பலமணிநேரம் பேசினார்கள். கீழடி, கீழ்வளை, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்டசோழபுரம் என அவர்களது பேச்சு எனக்குப் பெரியளவில் பிடிப்பில்லாத தொல்பொருளியல் குறித்துத்தானிருந்தது. நான் மௌனமாகக் கேட்டுகொண்டிருந்தேன். நடுவே அந்த உரையாடல் ஓவியங்களுக்குத் திரும்பியபோதுஒரு மிகச்சிறந்த ஓவியனாக வரவேண்டியவன் எனது இரண்டாவது மகன். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட அவனால் இன்று ஒரு புள்ளியைக் கூட வைக்க முடியவில்லை’ என்று கண்கலங்கினார் பிரபஞ்சன்.

மனிதமனம் மிகவும் சிக்கலானது. அதன் பாதைகளை யார் கண்டார்! உங்களுக்குக் கட்டற்ற இலக்கியப் படைப்பு மனத்தை அளிக்கும் அதே மரபணுதான் அவனுக்குள் ஒரு நோயாக வெளிப்படுகிறது! என்ன செய்வதுஎன்று சொன்னார் ஜெயமோகன். பின்னர் பிரபஞ்சனின் மகனின் சிகிச்சைக்காகப் பல யோசனைகளை நான் அவருக்கு வழங்கினேன். பெங்களூருவின் நிம்ஹான்ஸ் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் எனக்குப் பரிச்சயமானவர்கள். அங்கு கொண்டுசென்று சிகிச்சை பெற்றால் அவன் குணப்பட சாத்தியங்கள் இருப்பதைச் சொன்னேன். அதற்காகச் சில ஏற்பாடுகளையும் முன்னெடுத்தேன். ஆனால் அதுநாள் வரை அவன் எடுத்த பரிசோதனைகளின், சிகிச்சைகளின் மருத்துவக் குறிப்புகளை அங்கே வழங்கவேண்டும். கூடுமானவற்றை உடனடியாகத் திரட்டுங்கள், நாம் மூவரும் என் வாகனத்திலேயே பெங்களூரு செல்லலாம் என்று பிரபஞ்சனிம் சொன்னேன். ஆனால் அவரால் அவற்றைத் திரட்ட முடியவில்லை. பின்னர் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.

மலேசியா வாசுதேவன், மணிரத்னம், ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் பங்கேற்ற எனது இரண்டாவது புத்தக வெளியீட்டு விழாவில் அக்காலத்தில் எனக்கு எதிராக உயர்ந்துகொண்டிருந்த குரல்களைக் கண்டித்துப் பேசினார் பிரபஞ்சன். இத்தகைய காலாச்சார பாசிசத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று பேசினார். தமிழில் ஓர் எழுத்தாளனாக நான் வருவதற்கு அடிப்படைக் காரணமாகயிருந்த ஜெயமோகன் கூட எனக்கெதிராகப் பேசிய மேடை அது. ஆனால்இலக்கியத்திற்கும் திரைப்படத்திற்கும் மட்டுமல்ல இசைக்கும் ஷாஜி எழுதுவதுபோன்ற விமர்சனப்பார்வைகள் மிக அவசியம்என்று தீர்மானமாகப் பேசினார் பிரபஞ்சன்.

மிஷ்கின் இயக்கியயுத்தம் செய்’ திரைப்படம் தயாராகிக்கொண்டிருந்தகாலத்தில் பிரபஞ்சனும் மிஷ்கினும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அப்படத்தின் தொடக்கத்தில்நன்றி : எழுத்தாளர் பிரபஞ்சன்என்று காட்டப்படும். படத்தின் இறுதிக் காட்சியில் பிரபஞ்சனின் குரலை ஒரு நீதிபதியின் குரலாகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பார் மிஷ்கின். பிரபஞ்சனும் மிஷ்கினும் நானும் சேர்ந்துதான் அப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்தோம். படம் முடித்து பிரபஞ்சனும் நானும் திரும்பிக்கொண்டிருந்தோம். “ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் எனது மகனுக்கு அங்கே பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கு. ஒவ்வொரு மாதமும் அவனுக்கு 35000 ரூபாய் அனுப்ப வேண்டியிருக்கு. நீங்கள் மிஷ்கினிடம் இதை எடுத்துச் சொல்லி எனக்கு உதவக் கேட்க முடியுமா? நேரடியாக இதை அவரிடம் கேட்க எனக்கு சங்கோஜமா இருக்குஎன்று என்னிடம் சொன்னார். அதை நான் மிஷ்கினிடம் சொன்னேன். சில மாதங்கள் மிஷ்கின் அவருக்கு அத்தொகையைக் கொடுக்கவும் செய்தார்.

இதே காலத்தில் மிஷ்கினும் பிரபஞ்சனும் சேர்ந்து பல ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகளை மொழிபெயர்த்தனர். அத்தொகுப்பைநத்தை போகும் பாதையில்என்ற தலைப்பில் வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் மிஷ்கினும் நட்பில் இருந்தனர். ’நந்தலாலா’ திரைப்படத்தை வெகுவாகக் கொண்டாடியவாறு சாரு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ’யுத்தம் செய்’ படத்தில் வரும்கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா?’ எனும் பாடலில் ஹார்மோணியம் இசைக்கும் தெருப்பாடகனாக நடிக்கவும் செய்திருந்தார். மிஷ்கினுக்கும் பிரபஞ்சனுக்குமான நட்பு வலுவாகிக்கொண்டிருந்த காலத்தில் சாரு என்னிடம்மிஷ்கின் நமது அலைவரிசையில் உள்ள ஒரு பின்நவீனத்துவக் கலைஞன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஏன் பல பதிற்றாண்டுகள் பழமையான பிரபஞ்சனைப் போன்ற ஓர் எழுத்தாளரைத் தூக்கிப்பிடிக்கிறார்?” என்று கேட்டார்.

இதைவிடவெல்லாம் பலமடங்கு கடுமையான விமர்சனங்கள் நிகழுமிடம்தான் தமிழ் இலக்கியச் சூழல். சாரு நிவேதிதா தனது இலக்கியப் பார்வையின் அடிப்படையில் அதைச் சொன்னார். அதில் வருத்தமடைவதற்கு ஒன்றுமில்லை என்றபோதிலும் எனக்கு அது நெருடலாகவே இருந்தது. ஏனென்றால் கலையிலும் இலக்கியத்திலும் எதையுமே பொத்தாம்பொதுவாகப்பழசு புதுசு’ என்று வகைமைப்படுத்த முடியாது என்பது என்னுடைய கருத்து. சில நாட்கள் கழித்து யுத்தம் செய் படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக மிஷ்கினின் அலுவலகத்தில் நிகழ்ந்த ஒரு மது விருந்தில் கலையிலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த பேச்சு எழுந்தபோது நான்கலையில் எது காலாவதியானது, எது சமகாலத்தில் உள்ளது என்று எப்படிக் கணிக்க முடியும்? டோள்ஸ்தோயும் தோஸ்தோவ்ஸ்கியும் காலாவதியானவர்களா? 330 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாக்ஹெல்பெல்லின் இசையை நந்தலாலாவின் மைய இசையாக மிஷ்கின் பயன்படுத்தினாரே! அது அற்புதமாகவும் அமைந்ததே. பிரபஞ்சன் காலாவதியானவர் என்று சொல்கிறீர்கள்! அப்படியானால் அதைக் காரணத்தோடு விளக்குங்கள் பார்க்கலாம்என்று பேச ஆரம்பித்தேன். ஆனால் அத்தகைய ஒரு விவாதத்தைத் தெளிவுடன் மேற்கொள்வதற்கான இடம் மதுபோதை பொங்கிவந்துகொண்டிருந்த அச்சூழலில் இருக்கவில்லை.

அந்த நிகழ்வுக்குப்பின் பிரபஞ்சன் என்னுடனிருந்த தொடர்பைத் துண்டிக்கத் தொடங்கினார். என்னை எங்கு பார்த்தாலும் முகம் திருப்பி நடக்க ஆரம்பித்தார். பலமுறை நான் அவரது பின்னால் சென்று அவர் அப்படிச் செய்வதற்கான காரணத்தைக் கேட்டேன். அவர் என்னிடம் பேசவே முன்வரவில்லை. மாறாகப் பொது இடங்களில் என்னை அவமதிக்கவும் தொடங்கினார். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நண்பர் எஸ் கே பி கருணாவும் நானும் உள்ளே செல்லும்போது அங்கு நின்றுகொண்டிருந்த பிரபஞ்சனைப் பார்த்து அருகே சென்றோம். என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் அவர் கருணாவிடம்  பேசிக்கொண்டிருந்தார். கருணாவுக்கு ஒரே வியப்பு. “சார் உங்களுக்கு ஷாஜியைத் தெரியலையா?’ என்று கேட்டார். அப்போதுஷாஜி யார் என்றும் அவன் எப்படிப்பட்டவன் என்றும் எனக்குத் தெரியும்என்று கடுமையாகச் சொன்னார் பிரபஞ்சன்எதனால் இவர் இப்படிச் செய்கிறார் என்று எனக்குப் புரியவேயில்லை. இன்றைக்கு இதன் உண்மையைத் தெரிந்தே ஆகவேண்டும்! நான் பிரபஞ்சனின் பின்னால் சென்றேன். வம்சி பதிப்பகத்தின் கடைக்கு முன்னால் அமர்ந்து கே வி ஷைலஜாவுடன் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்சனிடம்எதற்காக நீங்கள் என்னை இப்படி நடத்துகிறீர்கள்? என்னால் முடிந்த எல்லாவற்றையும்  உங்களுக்குச் செய்தேனே ஒழிய உங்களுக்கெதிராக எதுவுமே நான் யோசித்தது கூட கிடையாதேஎன்று சொன்னேன்.

அப்போது அவர்அந்த விருந்தில் நீங்கள் என்னிடம்நீ பேசாம சும்மா கெடடாஎன்று சொன்னீர்கள்” என்றார்! எனக்கு மண்டை வெடிப்பதுபோல் இருந்தது. யாரிடமுமே அப்படியொரு தொனியில் ஒருபோதும் பேசாத நான் பெருமதிப்பிற்குரிய பிரபஞ்சனிடம் அப்படிச் சொல்வேனா? இது உண்மைக் காரணமில்லை, இவர் எதையோ மறைக்கிறார் என்றே எண்ணினேன். “யாரிடமுமே அப்படிப்பட்ட மொழியில் பேசமாட்டேன். மிகவும் உயர்வான இடத்தில் நான் வைத்திருக்கும் மனிதர் நீங்கள். இருந்தும் குடிபோதையில் நான் எதையோ உளறி அது உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்என்று சொல்லி அவரது கால்தொட்டு மன்னிப்புக் கேட்டேன். “சரி.. இருக்கட்டும்.. இப்ப நிம்மதியாப் போங்கஎன்று என்னை அனுப்பி விட்டார்.

மீண்டும் சில இடங்களில் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் என்னை முற்றிலுமாகப் புறக்கணித்தே நடந்து சென்றார். ஓர் இலக்கிய மேடையில் அவர் பேசும்போது அரங்கின் முன்வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, பேசிவந்த உரையுடன் சம்பந்தமில்லாமல்விஸ்கி ஒரு அற்புதமான விஷயம். ஆனால் அதை பொறுக்கிகள் குடித்தால் என்னவாகும்! எனது தலையெழுத்தைப் பாருங்கள், எவன் எவன் கூடவெல்லாம் நான் கைகுலுக்க வேண்டியிருக்குஎன்று பேசினார். அன்றிரவு நான் எங்கள் பொது நண்பரான பவா செல்லதுரையை அழைத்துஇவர் இப்படியே பண்ணிக்கொண்டிருப்பது எனக்குப் பிராண சங்கடமாகயிருக்கிறது. ஏன் இவர் இதைத் தொடர்ந்து செய்கிறார் என்று அவரிடமே கேட்டு நீங்கள் எனக்குச் சொல்லியே ஆகவேண்டும்என்று சொன்னேன். மறுநாள் பவா என்னை அலைபேசியில் அழைத்துபிரபஞ்சன்காலாவதியாகிப்போன ஓர் எழுத்தாளர்’ என்று நீங்கள் சொன்னதாக அவர் சொல்கிறார்என்றார்.

அப்படியொரு கருத்தை அவரது எழுத்துகளையெல்லாம் ஆழ்ந்து படிக்காமல் நான் எப்படிச் சொல்லமுடியும்? குறிப்பாக சமகாலத்தில் அவர் எழுதிவருவது எதையும் நான் படிக்கவில்லையே! அந்த மது விருந்தில் சாரு நிவேதிதாவிடம் நான் பேசியதிலிருந்த ஒருவரியை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு, அந்த ஒட்டுமொத்த உரையாடலையும் தவறாகப் புரிந்துகொண்டு அவர் இப்படி என்னிடம் நடக்கிறார் என்பதை உணர்ந்தேன். உண்மையில் நான் பேசியது என்னவென்றும் ஏன் அப்படி பேசினேன் என்றும் அவரிடம் விளக்கப் பலமுறை முயன்றேன். பவா, கருணா, மிஷ்கின் போன்ற பொது நண்பர்களும் என்மேலான அவரது தவறான எண்ணத்தைச் சரிசெய்ய முயன்றார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் எதையுமே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபஞ்சனுக்கும் எனக்குமான நட்பு என்றைக்குமாக முறிந்துபோனது.

அவர் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அங்கு சென்று அவரைப் பார்க்க நினைத்தேன். ஆனால் அது  அவருக்கு மேலும் மன அழுத்தத்தைத் தருமோ என்ற அச்சத்தினால் நான் செல்லவில்லை. மருத்துவச் செலவுகளை ஏற்று தினமும் அவரைச் சென்று பார்த்துக்கொண்டிருந்த மிஷ்கினிடம் இதைச் சொல்லிப் புலம்ப மட்டுந்தான் என்னால் முடிந்தது. நான்கு மாதங்களுக்கு முன்புநுரையீரல் புற்றுநோயினால் அவதிப்பட்டு பாண்டிச்சேரி மருத்துவமனையில் இருக்கிறார் பிரபஞ்சன், நிலைமை கவலைக்குரியது என்று பவா செல்லதுரையும் நண்பர் போப்புவும் சொன்னபோது பவாவுடனோ போப்புவுடனோ சென்று பிரபஞ்சனைச் சந்திக்கவேண்டும் என்றே எண்ணினேன். ஆனால் ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. எனது வருகை அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கினால்? என்னைப் பார்த்து அவர் மீண்டும் முகம் திருப்பினால்?

தமிழில் எழுதவந்த காலத்தில் ஓர் எழுத்தாளனாக என்னை ஊக்குவித்தவர் பிரபஞ்சன். அவருடன் நட்பில் கழித்த பகலிரவுகளை வாழ்வின் பொக்கிஷமாகவே நினைப்பவன் நான். ஆனால் இறுதியாக ஒருமுறை என்னால் அவரைப் பார்க்கமுடியவில்லை. பிரபஞ்சன் இவ்வுலகைவிட்டேசென்றுவிட்டார். தனது எழுத்துகள் வழியாக மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்திய பிரபஞ்சனால், பலரையும் மன்னித்து அரவணைத்த பிரபஞ்சனால் என்னை மட்டும் ஏன் மன்னிக்க முடியவில்லை? அவரது ஆழ்மனதைப் புண்படுத்துமளவில் அப்படி என்ன தவறு செய்தேன்? அந்தக் குழந்தை உள்ளத்தில் நான் எத்தகைய இடத்தைப் பிடித்திருந்தேன் என்று மட்டுமே என்னால் உணர முடிகிறது. ஷாஜி என்னை இப்படிச் சொல்லிவிட்டானே என்று நினைத்துக்கொண்டு போய்விட்டீர்களே பிரபஞ்சன் சார்! உங்களையும் என்னையும் இணைத்த தமிழ் எழுத்துகளின் வாயிலாக இதோ இப்போதும் சொல்கிறேன், நீங்கள் எனது காதலுக்குரியவர். எனது கண்ணீர் அஞ்சலியையாவது ஏற்றுக்கொள்ளுங்கள்…

நன்றி : உயிர்மை