20100209

ஜெய்தேவ், தனித்த இசைப் பயணி


சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவகத்தில் அமர்ந்திருந்தேன். நான் எழுதிய ஒரு விளம்பரப் பாடலின் ஒலிப்பதிவுக்காக. அதன் இசையமைப்பாளர் இப்போது கன்னடத்தின் ஒரு முன்னணி திரை இசையமைப்பாளர். அவருக்கு பழமையான இந்தி திரைபபாடல்களில் ஆர்வமிருப்பதாக தோன்றியது. நாங்கள் கடந்த காலத்தின் அருமையான பல பாடல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சில பாடல்களை மாறி மாறி பாடி ரசித்துக்கொண்டுமிருந்தோம். சட்டென்று எங்களுக்குள் ஒரு விவாதம், ஒரு பாடலின் இசையமைப்பாளரைப் பற்றி!

'அஃபி நா ஜாவோ சோட் கர்' என்ற அற்புதமான பாடலின் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் தான் என்பதில் அழுத்தமான உறுதியுடன் இருந்தார்அந்த கன்னட இசையமைப்பாளர். எஸ்.டி.பர்மனுக்கும் அந்தப்பாட்டுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்வதைக் கவனிக்காமல் அவர், அவர் சுவாசிப்பதே இந்தி பாடல்களைத்தான் என்று கூவினார். அவர் கொங்கண் பிராந்தியத்தில் பிறந்து பலகாலம் மும்பையில் வாழ்ந்தவர். இந்தியே இல்லாத ஒரு கேரள குக்கிராமத்தில் இருந்து வந்த ஒருவருக்கு பழைய இந்தி பாடல்களைப்பற்றி பெரிதாக என்ன தெரியும் என்று என்னிடம் அவர் நேரடியாகவே கேட்டார்.

விவாதம் வலுத்தது. ஒலிப்பதிவு கூடத்தின் கனத்த கதவுகளை கொஞ்சம் திறந்து ரஹ்மானின் உதவியாளர்கள் எட்டிபபர்த்தார்கள். விளம்பரப் படத்தின் இயக்குநர் அதுவரைக்கும் அக்காட்சியின் மௌனசாட்சி. அவர் அப்போது உள்ளே நுழைந்து, உங்களை பொறுத்தவரை அந்தப்பாடலின் இசையமைப்பாளர் யார் என்று என்னிடம் கேட்டார். என்னைப்பொறுத்தவரை மட்டுமல்ல, உண்மையிலேயே 'அஃபி நா ஜாவோ சோட் கர்' என்றபாடல் 1963ல் வெளிவந்த 'ஹம் தோனோ' (Hum Dono) என்ற படத்தில் உள்ளது. அதில் உள்ள என்றும் அழியாத இன்னிசைமெட்டுக்கள் அனைத்துமே ஜெய்தேவ் இசை அமைத்தவை. அந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் என்ற பேரையே கேள்விப்பட்டதில்லை! ''யார் அவர்?'' என்றார்.

மன்னிக்கமுடியாத அறியாமை. ஆனால் அந்த தவறான புரிதலுக்குப் பின்னால் உள்ள காரணத்தை என்னால் ஊகிக்க முடிந்தது. 'ஹம் தோனோ' ஒரு தேவ் ஆனந்த் படம். அவரது நவகேதன் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. எஸ்.டி.பர்மன்தான் அவர்களுடைய ஆஸ்தான இசையமைப்பாளர். 'ஹம் தோனோ'வுக்கு முன்னரும் பின்னரும் வந்த பல நவகேதன் படங்களுக்கு எஸ்.டி.பர்மன் தான் இசையமைப்பாளர். மேலும் 'ஹம் தோனோ'வின் பாடல்களின் பின்னணிஇசை அமைப்புமுறையில் எஸ்.டி.பர்மனின் மெல்லிய சாயலும் உண்டு. ஜெய்தேவின் பல பாடல்களை எஸ்.டி.பர்மனின் பாடல்கள் என்றும் மதன் மோகனின் பாடல்கள் என்றும் எண்ணிக்கொள்பவர்கள் பலர்.

அந்த பாடல்களின் இசையமைப்புமுறைகளுக்கு சில பொதுத்தன்மைகள் இருக்கிறது. அந்த பொதுத்தன்மைகள் வந்தது இயல்பே. ஏன் என்றால் ஏராளமான எஸ்.டி.பர்மன் பாடல்களுக்கும் பல மதன் மோகன் பாடல்களுக்கும் இசை ஒழுங்கை அமைத்து இசை நடத்துனராக இருந்தவர் ஜெய்தேவ். எஸ்.டி.பர்மனுக்கும் மதன் மோகனுக்கும் மட்டுமல்லாமல் கேம்சந்து பிரகாஷ், உஸ்தாத் அலி அக்பர் கான், சங்கர் ஜெய்கிஷன் போன்ற பல இசையமைப்பாளர்களுக்கு உதவியாளராக இருந்து அவர்களது பல முக்கியமான பாடல்களுக்கு இசை ஒழுங்கமைத்து நடத்தியிருக்கிறவர் ஜெய்தேவ்.

இந்தி திரைப்பாடல்களின் பொற்காலம் என்று பேசும்போது பெரும்பாலானவர்கள் பெரும் வணிகவெற்றியை அடைந்த நௌஷாத், சங்கர் ஜெய்கிஷன், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லட்சுமிகாந்த் பியாரேலால் போன்றவர்களையே சொல்கிறார்கள். ஆனால் தங்கள் தனித்துவம் கொண்ட இசையின் மூலமே தங்கள் அடையாளத்தை நிறுவிய முக்கியமான பல இசையமைப்பாளர்கள் அங்கு உண்டு. அவர்கள் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்க மாட்டார்கள். அவரது பல படங்கள் பெரும்பாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்காது.

இசையமைத்த படங்கள் இருபத்தியஞ்சிலும் குறைவு. பாடல்களின் எண்ணிக்கை இருநூறுக்குமேல் இருக்காது. ஆனால் பழைய இந்தி திரைப்பாடல்களை நேசிப்பவர்களின் மனதில் 'கஃபீ குத் பே கஃபீ ஹாலாத் பே', 'அல்லாஹ் தேரோ நாம்', 'அஃபீ நா ஜாவோ சோட் கர்' போன்ற அழியாப் பாடல்களுடன் இணைந்து வரும் பெயர் தான் ஜெய்தேவ். 'கஃபீ குத் பே கஃபீ ஹாலாத் பே' முகம்மது ரஃபி பாடிய மிகச்சிறந்த கஸல் பாடல்களில் ஒன்று. காரா ராகத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ஜெயதேவின் 'அல்லாஹ் தேரோ நாம்' தான் இந்திய திரைப்படங்களில் வந்த ஆகச்சிறந்த பிரார்த்தனைப்படல் என்று சொல்பவர்கள் பலர். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்தித்திரையின் இன்றைய நட்சத்திரங்களான சங்கர் மகாதேவனும் ஃபர்ஹான் அக்தரும் ஜெய்தேவின் 'அஃபீ நா ஜாவோ சோட் கர்' தான் அவர்களுக்கு மிகப்பிடித்த, ஆகச்சிறந்த இந்தி திரைப்படப்பாடல் என்று சொன்னார்கள்.

ஜெய்தேவை ஒரு பொது ரசிகன் இந்தி திரை இசையிலிருந்து மூன்று முறை தேசியவிருது பெற்ற ஒரே இசையமைப்பாளராக அடையாளம் காணக்கூடும். இந்தியாவின் முதல் மாபெரும் தொலைக்காட்சித் தொடரான ராமானந்த சாகரின் ராமாயணத்துக்கு ஜெய்தேவ்தான் இசையமைத்தார் என்பதும் அவர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் இணையற்ற பல பாடல்கள், பல மாநில விருதுகள், வாழ்நாள் இசை சாதனைக்கான 'சுர் சிங்கார் சம்சத்' விருது போன்ற பல சாதனைகள் இருந்தும் "ஜெய்தேவா? யார் அவர்?" என்று கேடக்கப்படும் நிலமையில் தான் அவரது வெகுஜெனப் புகழ் இன்றைக்கும் இருக்கிறது!

கஸல் பாடகர் ஹரிஹரனை 'கமன்' (Gaman-1979) என்ற படத்தின் 'அஜீப் ஸானெஹே' என்ற பாடல் வழியாக திரை இசைக்கு அறிமுகம் செய்தவர் ஜெய்தேவ் தான். ஹரிஹரனின் மிகச்சிறந்த பாடல் மட்டுமல்லாமல் இந்தி திரையிசையின் மிகச்சிறந்த கஸ்ல்களில் ஒன்றாகவும் இது அமைந்திருக்கிறது. ஹரிஹரனுக்கு உத்தர பிரதேச அரசின் விருதையும் தேசிய விருதுக்கான பரிந்துரையும் இந்த பாடல் பெற்றுத்தந்தது. 'கினாரே கினாரே' என்ற படத்துக்கு முகம்மது ரஃபி, தலத் மெஹ்மூத், மன்னா டே, முகேஷ் என்ற நான்கு முக்கியமான பாடகர்களையும் தேவ் ஆனந்த் நடித்த ஒரே பாத்திரத்துக்காக பாடவைத்தார் ஜெய்தேவ். இது அன்றுவரைக்கும் யாருமே முயலாத ஒன்று.

ஜேசுதாஸுக்கு அவரது துயரமான பாடுமுறைக்குப் பொருத்தமான சிறந்த இந்திப் பாடல்களை அளித்தவர் ஜெய்தேவ். அமிதாப் பச்சனுக்காகக் கூட அவரை பாடவைத்தார். 1977ல் வெளிவந்த 'ஆலாப்' என்ற படத்தில் தான். மரபிசைச் சாயல் கொண்ட 'சாந்த் அகேலா' மற்றும் துயரமான தாலாட்டான 'கோயீ காத்தா மே ஸோ ஜாத்தா' ஜேசுதாஸின் முக்கியமான இந்திப் பாடல்கள். இன்னொரு கஸல் பாடகரான பூபேந்தரை 'கரோந்தா' என்ற படம் வழியாக இந்தித்திரைக்கு அறிமுகம் செய்தார் ஜெய்தேவ். 'எக் அகேலா இஸ் ஷஹர் மே' என்ற அந்த ஆழமான பாடலை யார் மறக்க முடியும்? 'கமன்' படத்தில் மரபிசைச் அடிப்படை கொண்ட 'ஸீனே மே ஜலன்' பாடல் வழியாக மற்றுமொரு முக்கியமான பாடகர் சுரேஷ் வாட்கரை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் ஜெய்தேவ் தான்.

கவிதைகளின் மேல் பெரும் மோகம் வைத்த்¢ருந்தவர் ஜெய்தேவ். அமிதாப் பச்சனின் தந்தையும் ஞானபீட பரிசுபெற்ற இந்திக் கவிஞருமான ஹரிவன்ஷ் ராய் பச்சனின் 'மதுசாலா' என்ற கவிதைநூலை ஜெய்தேவ் மிகச்சிறப்பாக இசையமைத்து பிரபலப்படுத்தினார். அதிலுள்ள எல்லா பாடல்களும் மன்னா டே யால் பாடப்பட்டவை. இப்போதும் அந்த இசைத்தொகை மிகப்பிரபலமாக உள்ளது. மைதிலிசரண் குப்தா, நிராலா, மகாதேவி வர்மா போன்ற பல கவிஞர்களின் கவிதைகளுக்கு ஜெய்தேவ் இசையமைத்திருக்கிறார்.

ஒரு குழந்தை நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கி, பாடகராக ஆகி, மிகச்சிறந்த சரோத் கருவியிசைக் கலைஞராக மலர்ந்து பின் இசையமைப்பாளராக ஆன ஜெய்தேவ் வர்மாவின் வாழ்க்கை, அதிகம்பேர் செல்லாத பாதைகள் வழியாக நீண்டுசென்ற ஒரு தனிமைப் பயணம்.

பஞ்சாப் காரரான ஜெய்தேவ் கென்யாவின் நைரோபியில் 1918 ல் பிறந்தவர். அவரது அப்பா அங்கே ரயில்வேயில் எளிய ஊழியராக இருந்தார். சிறுவயதிலேயே ஜெய்தேவ் இசையார்வம் கொண்டிருந்தார். மௌத் ஆர்கனை மிகச்சிறப்பாக வாசிபபர். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு முறையான கல்வி கற்பிப்பதில் தான் ஆர்வம் காட்டினார்கள். அப்போது கென்யாவில் கல்விக்கான வசதிகள் அனேகமாக இல்லை. ஆகவே ஜெய்தேவ் கல்விக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். கப்பலில் தன் மௌத் ஆர்கனை வாசித்தபடி பல மாதங்கள் தனியாகப் பயணம் செய்தார் எட்டு வயதான அந்த சிறுவன். ஒரு தனித்த இசைப்பயணமாகவே அவரது வாழ்க்கையும் அமைந்தது.

சிலவருடங்களை லாகூரில் அவர் அப்பாவின் வீட்டில் கழித்தபின் ஜெய்தேவ் பஞ்சாபில் லுதியானாவில் அவரது தாய்வழி மாமாவின் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். குழந்தைகள் இல்லாத மாமா ஜெய்தேவ்வை மிகச்சிறப்பாகவே கவனித்துக்கொண்டார். பையனின் இசையார்வத்தை உணர்ந்து அவர் அவனை முறையான மரபிசைக் கல்விக்கு அனுப்பி வைத்தார். லூதியானாவின் ஹர்வல்லப் மேளாவில் ஜெய்தேவ் ஏராளமான மரபிசை மேதைகளையும் நாட்டாரியலிசை மேதைகளையும் நேரில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

தன் 14 வயதில் ஜெய்தேவ் முதன்முதலாக ஒரு திரைப் படத்தைப் பார்த்தார். 'அலிபாபா ஔர் சாலிஸ் சோர்' என்ற படம். அந்த அனுபவம் அவரை வலுவாக ஆட்கொண்டது. அவர் ஏராளமான சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை அவருக்குள் உருவாகியது. சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு மும்பைக்கு ஓடிப்போனார். ஆனால் சிறுவயதுப் பையனுக்கு வாய்ப்புதேடுவது எளிதானதாக இருக்கவில்லை. அப்போது பல பையன்கள் அப்படி சினிமாவில் நடிப்பதற்காக மும்பைக்கு ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

சினிமாத்தொழில் முளைவிட ஆரம்பித்திருந்த காலம் அது. வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அவரிடம் பணம் இருக்கவில்லை. ஆகவே மும்பைத்தெருக்களில் ஒரு தெருப்பையனாக வாழ ஆரம்பித்தார். அதிருஷடவசமாக அப்போது இந்தியாவுக்கு வந்திருந்த அவரது அப்பா அவரை தேடிவந்து மும்பையில் கண்டுபிடித்தார். நல்ல வேளையாக அப்பா அவரை பிடித்துக்கொண்டு சென்று மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.

இசை ஆர்வம் அவரை உந்தியது. உள்ளூர் வானொலியில் சிலமுறை பாடும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வாறு சில வாய்ப்புகள் கிடைத்துவந்த காலகட்டத்தில் அவருக்கு கடுமையான ஆஸ்துமா நோய் வந்தது. பாடகராகும் கனவு அதோடு கலைந்தது. கவனம் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியது. அவர் மீண்டும் மும்பைக்கு ஓடிப்போனார்.

வாடியா மூவிடோன் நிறுவனத்தில் ஒரு சண்டை நடிகராக அவர் சேர்ந்தார். ஆஸ்துமாக்காரனான மெலிந்த பதின்பருவப்பையனை சண்டைநடிகனாக கற்பனைசெய்து பாருங்கள்! 1934ல் வந்த 'வாமன் அவ்தார்' என்ற படத்தில் அவர் நாரதராக நடித்தார். வாழ்க்கைக்காக ஓரிரு காட்சிகளில் நடித்தபடி அவர் மும்பையில் சில வருடங்களைக் கழித்தார். வறுமையும் ஆஸ்துமாவும் துரத்த அவர் முமபையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே திரும்பிச்சென்றார்.

19 வயதில் ஜெய்தேவ் மீண்டும் மும்பைக்கே திரும்பி வந்தார், இம்முறை இசையில் வாய்ப்புதேடி. ஆனால் தனக்கு இசையில் தொழில்நுட்ப ஞானம் ஏதும் இல்லை என உணர்ந்துகொண்ட அவர் அங்கு கிரானா கரானாவைச் சேர்ந்த ஜாவார்க்கர் சகோதரர்களிடம் சேர்ந்துகொ¡ண்டு இந்துஸ்தானி இசையின் நுட்பங்களைக் மிக சீக்கிரமாகவே கற்றார்.

பின்னர் நடனமேதை பண்டிட் உதயசங்கர், சரோத் மேதை உஸ்தாத் அலி அக்பர் கான் ஆகியோரின் முன்னிலையில் உத்தரபிரதேசம் அல்மோராவில் நடந்துவந்த சங்கீத கேந்திரா என்ற நிறுவனத்துக்குச் சென்றார் ஜெய்தேவ். ஆனால் ஜெய்தேவ் அதிர்ஷ்டக்காரர்! அவர் அங்கே சென்று சில நாட்களில் சங்கீத கேந்திரா மூடபப்ட்டது. அலி அக்பர் கானுடன் சேர்ந்து லக்னோ சென்ற ஜெய்தேவ் அவரிடம் சரோத் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அந்த கடினமான வாத்தியத்தை ஜெய்தேவ் ஒரேவருடத்தில் கற்றுத்தேர்ந்தார் என்பதை அலி அக்பர் கான் கண்டுகொண்டார்.

படைப்பூக்கத்துக்கு வாய்ப்பில்லாமை, பணமில்லாமை, ஆஸ்துமா தொந்தரவு எல்லாம் சேர்ந்து இசையையும் விட்டுவிடும் முடிவை நோக்கி ஜெய்தேவ்வை தள்ளின. ''ஏன் எனக்கு மட்டும் எல்லா துயரங்களும் நிகழ்கின்றன?" என்ற எண்ணம் அவரை வேட்டையாடியது. ஆகவே அவர் மத நம்பிக்கையில் மூழ்கி 'எல்லாவற்றுக்கும் பரிகாரம்' அளித்துவரும் சாமியார்களின் ஆசிரமங்கள்தோறும் செல்ல ஆரம்பித்தார்.

அதிலும் மனம் நிலைக்கவில்லை. அவர்களெல்லாமே போலிகள் என்ற உணமை தெரிந்தபின் அவர் லூதியானாவுக்கே திரும்பிச்சென்று யாரிடமும் பேசாமல் மௌனத்தில் நாட்களைக் கழிக்க ஆரம்பித்தார். தன் அண்ணாவுக்கு திருமணம் நிகழ்ந்தபோது ஜெய்தேவ் உஸ்தாத் அலி அக்பர் கானுக்கு சாதாரணமாக ஒரு அழைப்பிழதை அனுப்பிவைத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அலி அக்பர் கான் லூதியானாவுக்கு திருமணத்துக்கு வந்தார். அங்கே ஜெய்தேவின் விரக்தி கொண்ட வாழ்க்கையைக் கண்ட அவர் உடனே ஜெய்தேவை பெட்டியை கட்டச்செய்து தன்னுடனேயே லக்னோவுக்கு அழைத்துச் சென்றார்.

அவ்வாறாக ஜெய்தேவ் உஸ்தாத் அலி அக்பர் கானுடன் அவரது கச்சேரிகளில் துணை சரோத் கலைஞராகச் செல்ல ஆரம்பித்தார். அவருடன் முதலில் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கும் பின்னர் மும்பைக்கும் குடிபெயர்ந்தார். மும்பை அகில இந்திய வானொலியின் அதிகாரபூர்வ இசைக்கலைஞராக ஆனார். வானொலிக்காக சரோத் வாசிக்கவும் பாடவும் ஆரம்பித்தார். பின்னர் அவர் இசையமைப்பாளர் கேம்சந்த் பிரகாஷின் உதவியாளர் ஆனார். 'தான்சென்', 'மஹல்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்த கேம்சந்த் பிரகாஷ் அப்போது பெரும் புகழுடன் இருந்தார். லதா மங்கேஷகரின் முதல் வெற்றிப் பாடல் 'ஆயேகா ஆனேவாலா'வுக்கு இசை அமைத்தவர் அவரே.

அப்போதுதான் ஜெய்தேவ் அன்றைய இளம் இசையமைப்பாளர்களான ரோஷன் (இன்றைய நடிகர் ரித்திக் ரொஷனின் தாத்தா), மதன் மோகன் போன்றவர்களைக் கண்டு அறிமுகமானார். மேதைகளை மேதைகள் அடையாளம் காண்பார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் அது. ரோஷன் அவரது முதல் படத்தில் பாட ஜெய்தேவை அழைத்தார். ஒருமுறை ரோஷனும் ஜெய்தேவும் ஒரு சினிமாநிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தபோது தெருவில் மதன் மோகனைப் பார்த்தார்களாம். ரோஷன் ஜெய்தேவிடம் ''நான் உனக்கு ஒரு அற்புதமான இளம் இசையமைப்பாளனை அறிமுகம் செய்கிரேன்'' என்றாராம். அறிமுகமான உடனே மதன் மோகனும் ஜெய்தேவ்வும் சிறந்த நண்பர்களாக ஆனார்கள்.

ரோஷன், மதன் மோகன், ஜெய்தேவ் மூவருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருந்தது. அபூர்வமான இசைமேதைகள். மிகச்சிறந்த மனிதர்கள். மொழிகள், இலக்கியம், மது அனைத்திலும் தணியாத ஆர்வம் கொண்டவர்கள்! போதுமான அளவு முக்கியத்துவம் மூவருக்குமே கிடைக்கவில்லை. ஆனால் வாழ்நாள் முழுக்க அவர்கள் நட்புடனும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் இருந்தார்கள். மனிதனை மனிதன் தின்னும் சினிமா உலகில் அந்த நட்பு அபூர்வமான ஒன்றே.

1951-52 ல் உஸ்தாத் அலி அக்பர் கான் நவ்கேதன் நிறுவனத்தின் 'ஆந்தியான்', 'ஹம்ஸபர்' படங்கள் வழியாக சினிமா இசையமைப்பாளர் ஆனார். அவர் ஜெய்தேவை தன் இசை உதவியாளராக வைத்துக்கொண்டார். ஆனால் இசை வணிக வெற்றி பெறவில்லை, படங்களும் படுதோல்வி. உஸ்தாத் அலி அக்பர் கான் திரையிசையைவிட்டு நிரந்தரமாக விலகிக் கொண்டார்.

நவ்கேதன் நிறுவனம் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனை அவர்களின் அடுத்த படமாகிய 'டாக்ஸி டிரைவர்'க்காக அழைத்தார்கள். ஜெய்தேவின் இசை ஒழுங்கு திறமையை மட்டுமல்லாமல் இந்தியிலும் உருதுவிலும் அவருக்கிருந்த அபாரமான திறமையையும் கண்டுகொண்டார் எஸ்.டி.பர்மன். ஒரு அடிப்படை வங்காளியான அவர் அந்த மொழிக¨ளைக் கையாளமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தபப்டம் முதல் ஜெய்தேவ் எஸ்.டி.பர்மனின் பெரும்பாலான படங்களில் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினார்.

1955ல் ஜெய்தேவ் அவரது முதல் படத்துக்கு இசையமைத்தார். தேவ் ஆனந்தின் சகோதரர் விஜய் ஆனந்த் நடித்த 'ஜோரு கா பாயி' என்ற சிறிய படம். அதிலுள்ள 'சுபஹ் கா இந்தெசார் கோன் கரே' என்ற பாடல் ஒரு கிளாசிக் ஆக இன்று நினைக்கப்படுகிறது. படம் படுதோல்வி. பிறகு வந்த 'சமுந்தரி டாக்கு', 'அஞ்சலி' போன்ற சிறிய படங்களில் சிறந்த பாடல்கள் இருந்தாலும் அவையும் ஓடவில்லை. லதா மங்கேஷ்கர் பாடிய 'கிஸ் கிஸ் கோ தீபக் பியார் கரே' என்ற மிகச்சிறந்த பாடலுக்காக 'அஞ்சலி' இன்றும் நினைக்கப்படுகிறது.

உடனடியான கைதட்டலுக்காக பாடலின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத இசையமைபபளர் என்ற பெயரை ஜெய்தேவ் ஈட்டினார். அவரது பாடல்களின் தரம் எப்போதுமே மிகச்சிறப்பாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சிக்கலான நுட்பமான மெட்டுகளை அமைப்பதில் அவர் காட்டிய கவனமே அவரை வெகுஜெனப் புகழ்பெற்ற இசையமைபபளராக ஆக முடியாமல் செய்தது என்றும் சொல்லலாம். பல தயாரிப்பாளார்கள் ஜெய்தேவை மிகச்சிறந்த இசையமைபபளர் என்றே எண்ணினார்கள், ஆனால் குறைந்த செலவில் எடுக்கபப்டும் படங்களுக்கே அவர் பொருந்த்தமானவர் என நினைத்தார்கள்!

ஆனால் 1961ல் நவ்கேதன் ஜெய்தேவுக்கு அன்றைய உச்ச நட்சத்திரம் தேவ் ஆனந்த் நடித்த 'ஹம் தோனோ' என்ற பெரிய படத்தை அளித்தது. அப்படத்தின் ஆறு பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றன. படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் உள்ள கொண்டாட்டமான பாட்டாகிய 'மே ஜிந்தகீ கா ஸாத் நிபாத்தா சலா கயா' கூட மிகச்சிறந்த இசைத்தரத்துடன் அமைந்தது. புராதன வாத்தியமான ஜலதரங்கத்தை அந்த அளவுக்குச் சிறப்பாக கையாண்ட இன்னொரு திரைப் பாடலை நான் இன்றுவரைக்கும் கேட்டதில்லை. 'ஹம் தோனோ' தான் ஜெய்தேவின் திரைவாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி. ஆனால் அது மட்டும் தான் அவரது திரையிசை வாழ்க்கையின் உச்சம் கூட என்பதுதான் சோகமானது.

'ஹம் தோனோ' படத்துக்குப் பின்னர் தேவ் ஆனந்த் நடித்த 'கைட்'(Guide) என்ற படத்துக்காக நவ்கேதன் நிறுவனத்தார் ஜெய்தேவையே முடிவுசெய்திருந்தார்கள் என்றும் இரண்டு பாடல்களுக்கு ஜெய்தேவ் அற்புதமாக இசை அமைத்தார் என்றும் நவ்கேதன் நிறுவனத்தில் அனைவருமே அப்பாடல்களை விரும்பினார்கள் என்றும் சொல்லபப்டுகிறது. தன் உதவியாளர் 'இப்படியே போனால்' மேற்கொண்டு தனக்கு நவ்கேதனில் வாய்ப்பே கிடைக்காது என்ற அச்சத்துக்கு எஸ்.டி.பர்மன் உள்ளானார். உடனே தேவ் ஆனந்தின் பங்களாவுக்கு ஓடிய எஸ்.டி.பர்மன் பலமணி நேரம் பேசி மெல்லமெல்ல தேவ் ஆனந்தை தன் வசம் இழுத்தார். 'கைட்' இல் இருந்து ஜெயதேவ் வெளியே தள்ள்பப்ட்டார்.

அந்தப்படத்திலும் ஜெய்தேவ் பர்மனுக்கு உதவியாளராக பணியாற்ற நேர்ந்தது. தேவ் ஆனந்தின் மறுக்கமுடியாத கட்டாயத்தால்தான் ஜெய்தேவ் எஸ்.டி.பர்மனுக்கு உதவியாளராக பணியாற்ற நேர்ந்தது என்று சொல்லபப்டுகிறது. பலம் மிக்கவர்களின் ஆதிக்கத்தால் மென்மையான உணர்ச்சிகள் கொண்ட ஜெய்தேவ் என்ற மாபெரும் படைப்பாளி ஒடுக்கப்பட்டது மிகவும் துயரமான ஒரு நிகழ்வு. நவ்கேதன் நிறுவனத்துக்காக மீண்டும் இசையமைப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவேயில்லை.

ஜெய்தேவ் ஏர்கனவே இசையமைத்த அந்த இரு பாடல்களையும் படத்தில் தேவ் ஆனந்த் பயன்படுத்திக்கொண்டார். அவற்றில் ரஃபிபாடிய 'தின் டல் ஜாயே' ஜெய்தேவின் பிரியத்திற்குரிய பிலாவல் ராகத்தில் அமைந்த பாடல். 'தேரே மேரே சப்னே' இன்னொரு பாடல். அதுவும் ஜெய்தேவுக்குப் பிரியமான காரா ராகத்தில் அமைந்தது. இந்த இரு பாடல்கள் இன்று எஸ்.டி.பர்மனின் மகத்தானசாதனைகளாக கொண்டாடபப்டுகின்றன!

'கைட்'இல் இருந்து விலக்கபப்ட்டது ஜெய்தேவின் திரையிசை வாழ்க்கையின் மாபெரும் பின்னடைவாக அமைந்தது. அதிலிருந்து அவரால் ஒருபோதும் மீள முடியவில்லை. முன்னர் அவரது 'காலாபானி' என்ற படத்திலும் ஜெய்தேவ் இசைய்மைத்த 'ஹம் பேகுதி மே' என்ற அசாத்தியமான கஸல் பாடலை எஸ்.டி.பர்மன் பயன்படுத்திக்கொண்டார். இந்த விஷயங்களை ஜெய்தேவ் தன் நெருங்கிய நண்பர்களிடம் பலமுறை வேதனையுடன் சொல்லியிருக்கிறார்.

திரையுலகம் அதற்கே உரிய விதிகள் கொண்டது. அதற்கு மேதைகளைக் காட்டிலும் வெகுஜன மத்தியில் விரைவில் பிரபலமடையக் கூடியவர்கள் தான் தேவை. சலில் சௌதுரி, மதன் மோகன், ரோஷன், வசந்த் தேசாய், ஜெய்தேவ் போன்றவர்கள் அந்த பந்தயத்தில் தோற்றவர்கள். காரணம் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்கவில்லை. அத்துடன் குழு அரசியல் என்பது எப்போதுமே திறமையானவர்கள் உள்ளே நுழைவதற்கு தடையாகிறது. ஆள்விழுங்கி சினிமாத்துறையில் இதையெல்லாம் உடைத்து தங்கள் வழியை உருவாக்கிக்கொண்ட உண்மையான மேதைகள் சிலரே.

சுனில் தத் ஜெய்தேவின் ரசிகர். அவர் தன் கனவுப்படமான 'ரேஷ்மா ஔர் ஷேரா' வை 1971 ல் எடுத்தபோது ஜெய்தேவையே இசையமைப்பாளராக தேர்வுசெய்தார். ஆனால் ராஜஸ்தானிய நாட்டார் இசையின் இனிமையை உள்வாங்கிக்கொண்டு வெளிவந்த ஜெய்தேவின் அழகான பாடல்கள் அனைத்துமே அந்தப் படத்துடன் சேர்ந்து மூழ்கின! ஜெய்தேவ் இந்துஸ்தானி மரபிசையையும் நாட்டாரிசையையும் அழகாக பிணைக்கும் மந்திர வல்லமை கொண்டிருந்தவர்! 'ரேஷ்மா ஔர் ஷேரா', 'கமன்', 'அன்கஹீ' படங்களுக்காக அவர் தேசிய விருது பெற்றார். ஆனால் எதுவுமே அவருக்கு போதுமான வணிக வெற்றியை அளிக்கவில்லை!

பெரும்பாலான படங்கள் வணிகரீதியாக தோல்வியை தழுவினாலும்கூட 'ஆலாப்', 'கினாரே கினாரே', 'கமன்', 'கரோந்தா' போன்ற பல படங்கள் அவற்றின் நுண்ணிய இசைக்கோர்ப்புடைய பாடல்களுக்காக இன்றும் நினைக்கப்படுகின்றன. முன் சொன்ன அதிகம் அறிமுகமில்லாத பாடகர்களுடன் இணைந்து இப்படங்களில் ஜெய்தேவ் மிகச்சிறந்த பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

பெரிய தயாரிப்பாளார்களும் பொதுமக்களும் தன்னை கவனிப்பதற்காக கிட்டத்தட்ட முப்பது வருடம் ஜெய்தேவ் காத்திருந்தார். ஆனால் அவர் இறக்கமில்லாமல் புறக்கணிக்கப்பட்டார். அந்த துயரத்தை தன் நண்பர் மதன் மோகனைப்போலவே அவரும் மதுவில் கரைக்க முயண்றாலும் தொடர்ந்த உடல்நலக்குறைவால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போயிற்று!

மதன்மோகன் இறந்தபோது ஜெய்தேவ் எழுதினார் ''மதன் மோகன் தற்கொலை செய்ய விரும்பினார் என்றும் அதற்காகவே கடுமையாகக் குடித்தார் என்றும் எனக்கு நினைக்கத்தோன்றுகிறது. நம்முடைய சினிமாத்துறை செயல்படும் விதமும், ஓரிரு இசையமைப்பாளர்களே எல்லா வாய்ப்புகளையும் பிடுங்கிக்கொள்வதும் அவரை வதைத்தது. இந்த இசையமைப்பாளர்களுக்கே தங்களைவிட மிக மேலானவர் மதன் மோகன் என்று தெரியும்...'' இந்தச் சொற்கள் ஜெய்தேவ்வுக்கும் மிகப் பொருத்தமானது.

1986 டிசம்பரில் சுர் சிங்கர் சம்சத்தின் வாழ்நாள் சாதனைக்கான தேசிய விருதைப் பெற்றுக்கொள்ள ஜெய்தேவ் மேடைக்கு வந்தபோது அவர் மிகவும் தளர்ந்து, வாழ்க்கை மேலையே விரக்தியடைந்தவரை போல் காணப்பட்டார். சில நாட்கள் கழித்து தன் 68 ஆவது வயதில் ஜெய்தேவ் மரணமடைந்தார். வாழ்ந்தபோது புறக்கணிக்கப்பட்ட ஜெய்தேவ் மரணத்துக்குப்பின் முற்றிலுமாக மறக்கப்பட்டார். ஆனால் அவரது பாடல்கள் இல்லாமல் நாம் இந்தி திரையிசையைப்பற்றி ஒரு உயர்ந்த தளத்தில் பேசவே முடியாது.

ஜெய்தேவ் மணம் செய்துகொள்ளவில்லை. ஆதலால் அவரது பாரம்பரியமும் நீடிக்கவில்லை. அவர் இடுங்கலான ஓர் ஒற்றை அறை வாடகை வசிப்பிடத்தில் வாழ்ந்தார். மண்பானையில் தண்ணீர் குடித்து தறையில் உறங்கினார். இறந்தபோது அவரது உடைமையாக இருந்தது ஒரு ஆர்மோனியப்பெட்டி மட்டுமே.

தமிழில் ஜெயமோகன்