20100312

ஜான் லென்னான் 1 - லென்னானுக்கு இந்தியா தந்த நித்தியானந்தம்

பிரேஸிலைச் சேர்ந்த, ஐம்பதுவயதுக்கு மேலான ஆனால் வசீகரத்தோற்றம் கொண்ட அந்தப்பெண்ணின் பெயர் ஆனந்தா. அவளது உண்மையான பெயர் மின்ஹா அமிகா. அவள் தன் பெயரை ஆனந்தா என்று மாற்றிக்கொண்டதற்குக் காரணம் அவளுக்கு இந்திய மரபில் உள்ள 'ஆனந்தம்' என்ற கருத்து மிகவும் பிடித்திருந்ததுதான். அவள் இந்தியாவுக்கு வந்ததே இல்லை, ஆனால் தன்னை ஒரு இந்தியனாகவே எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் நமஸ்தே என்றுதான் வணக்கம் சொல்வாள். இந்தியா மீதான அவளது இந்த பெரும் மோகத்துக்குக் காரணம் இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்றும் இது ஞானிகளின் நாடு என்றும் அவள் நினைத்தது தான்.

அவளுக்கு ஆங்கிலம் பெரும்பாலும் தெரியாது. போர்ச்சுக்கீஸ் மொழி மட்டும் தான் அவள் அறிந்தது. என்னுடைய இணையதளம் வழியாக அவள் என்னிடம் தொடர்புகொண்டாள். மொழிபெயர்ப்பு மென்பொருள் வழியாக நான் அவளுடன் கொஞ்சநாள் உரையாடிக்கொண்டிருந்தேன். அவள் என்னைத் தொடர்புகொண்டமைக்கான காரணம் வெகு வினோதமானது. என்னுடைய புகைப்படத்தில் இருந்து என்னை அவள் ஒரு இந்திய குருவாகக் கற்பனைசெய்துகொண்டிருந்தாள். நான் இசையைப் பற்றி எழுதும் கட்டுரைகளில் வரும் 'இசை உன்னை சுதந்திரமாக்க விடு' போன்ற சில வரிகளை தவறாக புரிந்துகொண்டு, அது ஏதோ இந்திய ஆன்மீகக் கோட்பாட்டை முன்வைப்பதாக அவள் நினைத்தாள்!

நான் வேடிக்கைக்காக அவளிடம் நானும் ஒருவகையான குரு தான் என்றேன். அவளும் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு என்னை 'மை லார்ட்' என்றெல்லாம் அழைக்க ஆரம்பித்தாள். அவள் என்னிடம் ஆன்மீக விழிப்பையும் ஆனந்தத்தையும் அளிக்கும்படி கெஞ்சிக்கேட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். பயந்துபோய் நான் அவளிடம் 'நான் குரு அல்ல' என்று சொன்னபோது அவள் 'எந்த குருவும் தன்னை குரு என்று சொல்லிக்கொள்வதில்லை' என்றாள். என் சொற்களில் மந்திரத்தன்மையும் ஆற்றலும் இருப்பதாக அவள் உணர்வதாகச் சொன்னாள். மென்பொருளின் மொழியாக்கத்தில் ஏதோ பெரிய தவறு இருந்திருக்க வேண்டும்! அவள் என்னிடம் இந்தியச் சடங்குகளில் உள்ள பலவிஷயங்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தாள். குறிப்பாக நிர்வாணபூஜை போன்றவை அளிக்கும் அசாதாரணமான வலிமைகளைப் பற்றி.

அவளைக் குற்றம்சாட்டமுடியாது. தன் பக்தைகளை நள்ளிரவில் நிர்வாண நடனம் ஆடச்செய்த சுவாமி அமிர்த சைதன்யா, தன் பக்தர்களுக்கு நிர்வாணமாக 'தரிசனம்' அளித்த மாதா திவ்யா ஜோஷி போன்றவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஆனால் பாவம் பக்தர்கள். சமீபத்தில் அமிர்த சைதன்யா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். திவ்யா ஜோஷி பலகோடி நிதிமோசடிக்காக பிடிக்கப்பட்டதும் தற்கொலை செய்துகொண்டாள்.

ஆனால் யாருக்குக் கவலை? நம்முடைய விபூதி வரவழைக்கும் பாபாக்கள், கட்டிப்பிடித்து முத்தமிடும் மாதாக்கள், தொட்டுக்குணப்படுத்தும் நித்தியானந்த செக்ஸ் குருக்கள், வாழும் கலை கற்றுக்கொடுக்கும் நவீன ஞானிகள் போன்ரவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். இவர்களோட எந்த ஒரு ஆசிரமத்துக்குச் சென்றாலும் இந்தியர்களை விட அதிகமான அளவில் மேலைநாட்டினரைத்தான் காணமுடியும். உலகப்புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், நடிகர்கள் போன்றவர்களை அங்கே பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அறிவுஜீவிகளும் படைப்பாளிகளும்தான் சாதாரணமனிதர்ளை விட இம்மாதிரி மனிதக்கடவுள்களினால் ஈர்க்கப்படுகிறார்கள். எந்த ஒரு சிந்திக்கும் மனிதனும் இந்த போலிகுருநாதர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனால் ரிச்சர்ட் டாக்கின்ஸ் சொல்வது போல "மதம் என்பது சிந்திக்காமலிருப்பதற்கான வழிமுறை".

புகழ்பெற்ற வெள்ளையர்கள் ஞானத்துக்கும் ஆன்மீக விடுதலைக்கும் இந்தியாவைத்தேடி வருவது புதிய விஷயமல்ல. ஆனால் வெகுசிலரை விட்டால் பெரும்பாலானவர்கள் போலிச்சாமியார்களின் ஆசிரமங்களையே சென்றடைகிறார்கள். அறுபதுகளில் மொத்த உலகையே தங்கள் இசையால் கலக்கிய பீட்டில்ஸ் (The Beatles) இசைக்குழுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இசைவரலாற்றில் மிகப்பிரபலமான சில பாடல்களை உருவாக்கிய அதன் தலைவர் ஜான் லென்னானின் தலைமையில் பீட்டில்ஸ் குழு 1968ல் ரிஷிகேஷில் மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்துக்கு வந்தது.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு ஜான் லென்னான் இவ்வாறு பாடியிருந்தார்
இந்தியா
என்னை உன் நெஞ்சிலேற்றிக்கொள்
உனது புராதனமான மர்மங்களை எனக்கு வெளிப்படுத்து
நான் ஒரு விடையைத்தேடிக்கொண்டிருக்கிறேன்
இங்கே அதை நான் கண்டுபிடிக்கவே முடியாதென்று நான் அறிவேன்
நான் என் இதயத்தையே பின்பற்றிச் செல்கிறேன்...

பணமும் புகழும் குவிந்த மேலைநாட்டினர் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் இதில் தெரிகிறது. ஜான் லென்னான் ஆழ்நிலை தியானத்தைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியிடமிருந்து தனக்கான விடைகளை கண்டுபிடித்தாரா என்ன? மூன்று மாதம் தங்கும் திட்டத்துடன் வந்த பீட்டில்ஸ் பாதியிலேயே திரும்பிப்போயிற்று. தனியாக தன்னுடன் இருந்த நடிகையும் பாடகியுமான மியா ஃபாரோவின் பின்பக்கத்தை மகேஷ் யோகி கையால் அழுத்தினாராம். குழுவில் தனியாக வந்த ஒரே பெண் அவள்தான். பிறர் ஆண் நண்பர்களுடன் வந்திருந்தார்கள். கோபம் கொண்ட ஜான் லென்னான் ஆசிரமத்திலிருந்து கிளம்பும்போது அதற்கான காரணத்தை மகரிஷி மகேஷ் யோகி கேட்டார். ஜான் லென்னான் சீறினார் ''நீங்கள் உலககுருதானே? உங்களுக்குத்தெரியாதா என்ன?''.....

தொடரும்.....