20100629

நிசப்தத்தின் திரை ஒலி

ஒலிக்கலவைக்காக ரசூல் பூக்குட்டிக்கு கிடைத்த ஆஸ்கர் விருது உண்மையிலேயே நாம் பெருமை கொள்ளத்தக்க ஒரு விஷயம். ஏனென்றால் இது பல பதின்வருடங்களாக இந்தியா மிகப் பின்தங்கி இருக்கும் துறைகளில் ஒன்று. உதாரணமாக 1950களில் வெளிவந்த நாட் கிங் கால் (Nat King Cole) இன் பாடல்களிலோ ஜூடி கார்லன்ட் (Judy Garland) இன் பாடல்களிலோ இருக்கும் ஒலிப்பதிவின் தரம் 1980களில் வெளிவந்த இந்தியப் பாடல்களில் கூட கேட்க முடியவில்லை. அதாவது இந்தத் துறையில் 30 வருடங்களாவது நாம் பின்தங்கி இருந்திருக்கிறோம். இசை ஒலிப்பதிவில் நமதேயான தொனி ஒன்று உருவானது நிச்சயமாக ஏ.ஆர். ரஹ்மானின் வருகைக்குப் பிறகுதான்.

ஒலிகளுக்கு எல்லையில்லை என்பது நமக்குத் தெரிந்த விஷயம். நம்மைச் சுற்றி எந்த திசையிலிருந்து வரும் ஒலியையும் நம்மால் கேட்க முடியும். நமக்குப் பின்புறம் என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்க்காமலேயே ஒலிகளின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் காட்சிகளுக்கு நம் பார்வையின் எல்லையே அளவு. காட்சிகளால் அளிக்க முடியாத பல அனுபவத்தளங்களை ஒலிகளின் மூலம் நாம் சென்றடைகிறோம். அதனாலேயே திரைப்படம் போன்ற ஊடகங்களில் ஒலிக்கலவை மூலமான சாத்தியப்பாடுகள் எல்லையற்றவை. காட்சிகளைத் தூக்கி நிறுத்துவது மட்டுமன்றி அவற்றுக்கு அழகூட்டவும் ஒலிகளால் முடியும்.

சிலவேளை ஒலிகள் நம்மை யதார்த்தத்துடன் நெருங்க வைக்கின்றன. சில வேளை அதிலிருந்து முற்றிலும் விலகவும் வைக்கின்றன. ஏறக்குறைய அபோதமான கேட்டல் என்னும் செய்கையின் வழியாகத்தான் நமது காட்சி அனுபவம் முழுமையடைகிறது. இவ்வாறு காட்சிகளின் உணர்ச்சி மாற்றங்களுக்கு ஏற்ப ஒலிகளை இயக்குவதைத்தான் ஒரு திரைப்படத்தின் ஒலி உருவாக்கம் (Sound Design) என்று அழைக்கிறோம். திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் துவங்குவதற்கு முன்னமே அதன் ஒலி இயக்கத்தின் மாதிரியை உருவாக்க வேண்டும்.

உரையாடல், இசை, மற்ற ஒலிகள், தேவைப்பட்டால் பாடல்கள், மௌனம் போன்றவற்றை சேரும் விதத்தில் சேர்த்து ஒரு திரைப்படத்தின் ஒலித்தடம் உருவாக்கப்படுகிறது. உரையாடல் (Dialogue) என்பது நபர்களுக்கிடையிலான பல்வேறு ஸ்தாயிகள் கொண்ட பேச்சு, உள்ளுரையாடல், விவரிப்பு ஆகியவையெல்லாம் உட்பட்டது. அழுகை, சிரிப்பு, முனகல்கள் முதலான மனித ஒலிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

கதையின் ஒரு தருணத்தையோ கதாபாத்திரத்தின் உணர்ச்சி மாற்றங்களையோ மேலெழுப்பிக் காட்டிப் பதிய வைப்பதற்குத்தான் பின்னணி இசை பயன்படுத்தப்படுகிறது. திரைப் பாடல்கள் சினிமாவைத் தாண்டிய ஒரு தனி கலைவடிவமாகத் தான் இயங்குகிறது என்றாலும் வணிக சினிமாவுக்குள் அவை சினிமாவின் ஒட்டுமொத்த காட்சியனுபவத்தின் ஜனரஞ்சகத்தன்மையை நிலைநாட்டுவதற்க்கும் அதன் வழியாக வியாபாரத்தை உறுதி செய்வதற்கும் தான் பயன்படுத்தப்படுகின்றன.
மற்ற ஒலிகளெல்லாம் சினிமாவில் ஒட்டுமொத்த சூழலை உணர்த்துவதற்காகக் கையாளப்படுகின்றன. சுற்றுப்புறத்தின் இந்த ஒலிப்பிரவாகத்தில் ஜனத்திரளின் சத்தம், பறவைகள் மற்றும் மிருகங்களின் ஒலிகள், வாகனங்களின் இரைச்சல், கதவு ஜன்னல் திறந்து மூடுவது போன்ற உள்ளறை ஒலிகள், மழை காற்று இடி மின்னல் நதி ஓடும் ஓசை போன்ற இயற்கை ஒலிகள் ஆகியவையெல்லாம், மாறி மாறி வருகிற காட்சிகளோடு ஒன்றிணையும்போதுதான் இடம், காலம் ஆகியவற்றைப் பற்றிய உணர்வு பார்வையாளனுக்குக் கிடைக்கிறது.

ஒரு ஒலிக்கலவையாளனின் (Sound Mixer) முக்கியமான பணி திரைப்படத்தின் மையஇழைக்கும் பின்னணிக்கும் ஏற்ப எந்தெந்த ஒலிகள் தேவை என்பதை முதலிலேயே தேர்ந்துகொள்வதுதான். தொடர்ந்து ஒலிப்பதிவு, ஒலித்தொகுப்பு, ஒலிக்கலவை ஆகியவை நடைபெறுகின்றன. இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் ஒலிக்கலவையாளனின் பணி இரட்டிப்பாகிறது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே உரையாடலையும் மற்ற ஒலிகளையும் பதிவு செய்யும் பணி சிங்க் சவுண்ட் (Sync Sound) என்று அழைக்கப்படுகிறது. உரையாடலின் இயல்பை முழுமையாக நிலைநிறுத்தவும் ஒலியை காட்சியுடன் ஒருங்கிணைக்கவும் இது அவசியமாகிறது. சிங்க் சவுண்ட் பதிவு செய்யப்படும்போது யூனிட் முழு அமைதியாக இருக்க வேண்டும். பேசுவதோ மற்ற ஒலிகள் எழுப்புவதோ கூடாது. அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய கருவிகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்தவும் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகள் இருந்தாலும்கூட படப்பிடிப்பில் சிங்க் சவுண்ட் உபயோகிப்பது என்பது இப்போது வழக்கமாக மாறிவருகிறது.

மானஸ் சவுதரி, இந்திரஜித் நியோகி, ரசூல் பூக்குட்டி போன்றவர்கள் இந்தத் துறையில் தங்கள் நிபுணத்துவத்தை நிரூபித்திருப்பவர்கள்.
ஒலிக்கலவைக்கான ஆஸ்கார் விருதை ரசூல் பூக்குட்டியுடன் பகிர்ந்து கொண்ட இயான் டாப் (Iyan Tapp), ரிச்சார்ட் பிரைக் (Richard Pryke) ஆகியவர்கள் தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு ஒலிக்கலவை செய்தவர்கள். படப்பிடிப்புத் தளங்களில் உரையாடலையும் மற்ற ஒலிகளையும் பதிவு செய்யும் பணியைச் செய்தவர் ரசூல் பூக்குட்டி. இந்த ஒலிகளோடு ஸ்டுடியோவில் உருவாக்கப்படும் மற்ற ஒலிகளையும் சேர்த்து ஒலித்தொகுப்பு செய்வது என்பது முழு சவால் நிறைந்த பணி. நூற்றுக்கணக்கான ட்ராக்குகளில் பதிவு செய்யப்பட்ட ஒலிகளை ஒன்றோடொன்று கலந்து விடாமல் இணைத்து, அவற்றை காட்சியோடு ஒன்றிணைய வைப்பது என்பது மேலான தொழில்நுட்ப அறிவையும் முழுமையான படைப்பாளுமையையும் கோருகின்ற ஒன்று.

சட்டென்று அறிந்துகொள்ள முடியாத ஒலிகளை மற்றவற்றிலிருந்து பிரித்து துல்லியமாகக் கொடுப்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஒலிக்கும் அவற்றுக்கேயான இயல்பை நிலைநிறுத்தியபடி வெவ்வேறு ஒலித்தளங்களை ஒன்றிணைக்கும் பணி நிறைவு பெற்றபின்னர்தான் ஃபைனல் மிக்ஸ் டவுண் துவங்குகிறது. ஏகப்பட்ட ட்ராக்குகளை ஒன்றோடொன்று கலந்து இறுதியாக ஒன்றிரண்டு அல்லது ஐந்து ஆறு ட்ராக்குகளாக வகுத்தெடுக்கப்படுகிறது. மோனோ, ஸ்டீரியோ, டால்பி டிஜிட்டல், டி.டி.எஸ் (DTS) ஆகிய வடிவங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் சினிமா ஒலியின் இறுதி வடிவம். இந்த வடிவங்களின் சிறப்புகள் என்னென்ன? ஸ்டுடியோவிலிருந்து தியேட்டர்களின் புரொஜக்ஷன் அறையை அடைகிற இந்த ஒலிகள் வெள்ளித்திரையின் பின்னாலிருக்கும் ஸ்பீக்கர்களிலிருந்து துல்லியமாக ஒலிப்பது எவ்வாறு?

வெள்ளித்திரையின் பின்னால் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஸ்பீக்கரிலிருந்து மட்டும் ஒலி வெளிவருவதை மோனோஃபோனிக் என்கிறோம். திரைப்பட ஒலிக்கட்டமைப்பின் மிகப்பழைய தொழில்நுட்பம் இது. இட வலமாக வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஸ்பீக்கர்களிலிருந்த ஒலி வெளி வருவது ஸ்டீரியோஃபோனிக் எனப்படுகிறது. 1967ல் வெளிவந்த 'அரவுண்ட் த வேர்ல்ட்' என்ற ராஜ் கபூரின் இந்தித் திரைப்படம்தான் இந்தியாவின் முதல் ஸ்டீரியேஃபோனிக் ஒலி திரைப்படம்.

1975ல் வெளிவந்த ஷோலே, இந்தியாவின் முதல் நான்கு டிராக் ஸ்டீரியோஃபோனிக் திரைப்படம். தியேட்டர்களில் நான்கு ஸ்பீக்கர்களின் வழியே பலவித ஒலிகள் பிரிந்து முழங்கிய ஷோலே இந்தியாவின் பெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. ஒலிக்கலவை திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது என்று இயக்குநர் ரமேஷ் சிப்பி பிறகு ஒரு முறை கூறியிருந்தார். அமிதாப் பச்சன் நாணயம் வீசும்போது எழும் ஓசையும் சஞ்சீவ்குமாரின் வீட்டில் பழைய ஊஞ்சல் எழுப்பும் கரகர ஒலியும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்களின் மனதில் இன்றைக்கும் முழக்கமிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முதலாக நவீன ஒலித் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியிய படம் மலையாளத்தில் 1982ல் வெளிவந்த படையோட்டம். ஆறு டிராக் ஸ்டீரியோஃபோனிக் ஒலியை படையோட்டத்தில் கேட்டோம். டிராக்குகளின் எண்ணிக்கை ஏறும்போது காட்சிகளுக்கு ஏர்ப ஒலிகள் தனித்தனியாக பிரிந்து தெளிவுடன் பார்வையாளனின் காதுகளில் விழுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒலிக்கலவை செய்த முதல் இந்திய சினிமாவும் படையோட்டம் தான். 1965ல் ரே டால்பி (Ray Dolby) பிரிட்டனில் நிறுவிய டால்பி லேபரட்டரி, ஒலித் தொழில்நுட்பத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியது. ஒலியின் தெளிவையும் துல்லியத்தையும் கூட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாக டால்பி ஏ,பி,சி, டால்பி எஸ் ஆர் போன்ற பல வழிமுறைகளை அவர்கள் உருவாக்கினார்கள். 1994ல் வெளிவந்த 1942 எ லவ் ஸ்டோரி என்ற இந்தித் திரைப்படம் இந்தியாவில் முதன்முதலாக டால்பி எஸ் ஆர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.

90களின் துவக்கத்தில் உருவான டால்பி டிஜிட்டல் தொழில்நுட்பம்தான் டால்பியின் மிகவும் புகழ்பெற்ற உருவாக்கம். உலகம் முழுவதும் 50,000 தியேட்டர்களில் இந்த 5.1 டிராக் தொழில்நுட்பம் நிறுவப்பட்டது. 5 ஸ்பீக்கர்கள் வழியாகவும் 1 சப் வூஃபர் வழியாகவும் இதில் ஒலி வெளிப்பட்டது. இது எதார்த்தத்தோடு மிக நெருங்கிய மேன்மையான ஒலி அனுபவத்தை பார்வையாளனுக்கு வழங்கியது.

ஆரம்பகாலங்களில் எல்லாம் ஒளிக்கற்றைகளாக ஃபிலிமின் ஓரங்களிலேயே ஒலி பதிவு செய்யப்பட்டது. இதற்கு ஆப்டிக்கல் டிரான்ஸ்ஃபர் என்று பெயர். பிறகு ஃபிலிமின் ஓரங்களில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேக்னட்டிக் டேப்களில் (ஒலி நாடாக்கள்) ஒலியை பதிவு செய்யத் துவங்கினார்கள். இதன்மூலமாகத்தான் சினிமா ஒலியில் இரண்டுக்கும் மேற்பட்ட டிராக்குகளை பயன்படுத்துவது சாத்தியமானது. டால்பி டிஜிட்டல் முறையிலும் ஒலி ஃபிலிமின் ஓரங்களில்தான் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் டால்பி பிரின்டிங் என்னும் பிரத்யேக தொழில்நுட்பம் இதற்குப் பயன்படுத்தப்படுகிரது என்பதே வித்தியாசம்.

இந்த முறையை முழுக்க கலைத்தெறிந்துவிட்டது 1993ல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட டி.டி.எஸ் என்னும் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம். ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்களின் மூலம் ஆறு டிராக்குகளில் பிரிந்த விதவிதமான ஒலிகள் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் நம் செவிகளை அடைந்தது. டி.ட்டி.எஸ் முறையில் படத்தின் ஒலித்தடம் ஃபிலிமோடு சேர்ந்ததல்ல. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சி.டி.யில் வரும் இது புரொஜக்ஷன் நேரத்தில் ஃபிலிமுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது. 1996ல் வெளிவந்த கறுப்பு ரோஜா, இந்தியன் ஆகிய தமிழ்ப்படங்களின் மூலம்தான் டி.ட்டி.எஸ். இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. இன்று இந்த தொழில்நுட்பம் இல்லாத தியேட்டர்கள் மிகக்குறைவு.

இப்படியாக, ஒலித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இந்திய சினிமா மேலைநாட்டினருக்கு இணையான தளத்தை எட்டியிருக்கிறது. ரசூல் பூக்குட்டி மூலமாக ஒலிப்படைப்பின் உலகத்திலும் நாம் நம் இடத்தை உறுதி செய்து விட்டோம். ஆனால், இன்றும் பெரும்பாலான இந்திய திரைப்படங்களின் பின்னணி இசை இரைச்சல் மயம்தான்! யதார்த்தமாக எடுக்கப்படும் படங்களில் கூட பின்னணி இசை நாடகத் தன்மைகொண்டதாகத் தான் ஒலிக்கிறது. ஹாலிவுட்டின் முழு வணிகப் படங்களில் கூட உணர்ச்சி நாடகத்தன்மை கொண்ட இத்தகைய இசை இன்றைக்கு கேட்கமுடியாது.

நம் திரைப்படங்களின் 90 சதவிகித காட்சிகளிலும் இயல்பான ஒலிகளைவிட மேலெழும்பி முழக்கமிடுகிற பின்னணி இசைதான் ஒலிக்கிறது. அதனாலேயே ஒலி இயக்குநர்களால் திரைப்படத்தின் ஒலியில் தங்களது உண்மையான படைப்புத்திறனை வெளிப்படுத்தவோ முக்கியமான பரிசோதனைகளுக்கு முயர்ச்சிக்கவோ முடிவதில்லை என்பதுதான் உண்மை.

ஒரு ஸ்டுடியோவின் இருளில் திரைப்படத்தின் ஒலிக்கலவை அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது... சில ஒலிகள் உயர்த்தப்படுகின்றன... சிலது தாழ்த்தப்படுகின்றன... பெரும் ஓசைகள் மென்மையான ஒலிகளாகவும் மெல்லிய ஒலிகள் பயங்கர ஓசைகளாகவும் பரிணாமம் பெறுகின்றன... தூரத்து மணி ஓசைகள்... அண்மையிலிருந்து தொலைதூரத்துக்குப் பறந்துபோகும் ஒரு பறவையின் தனிமைக் கதறல்... அருகில் ஓடி வரும் ஒரு மலையருவியின் சலசலப்பொலி... ஒலிகளினூடாகவே ஒரு புதிய உலகம் படைக்கப்படுகிறது. அந்த ஒலிகள் மனித உணர்வுகளின் எல்லாத் தளங்களையும் ஸ்பரிசித்துச் செல்கிறது. எல்லா ஒலிகளும் இறுதியில் நிசப்தத்தில் கலந்து மறையும்போது திரை அரங்கில் வெளிச்சம் பரவுகிறது...

மலையாளத்திலிருந்து தமிழில் ஸ்ரீபதி பத்மனாபா