20100815

ஷாஜியின் இசையெழுத்துக்கள் by ஜெயந்தி சங்கர்

சிங்கப்பூரின் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் மதிப்புரை

கலைஞனுக்கும் சுவைஞனுக்கும் இடையே நிலவும் இடைவெளி, எழுத்தாளன் வாசகனுக்கிடையேயான இடைவெளிகள் எல்லாம் தற்காலத்தில் குறைந்து கொண்டே வருகிறது. இசை நிகழ்ச்சிகளில் மேடை மீது இருப்பவரும் பார்வையாளராய் இருப்பவரும் ஒரு கட்டத்தில் இணைந்து இசையில் சேரும் தருணங்கள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். உலகம் சுருங்கச் சுருங்க எல்லாத் துறையிலும் எல்லா விஷயங்களிலும் நிகழும் பல எல்லைக் கோடுகளின் மறைவுகள் போலத் தான் இதுவும் என்றெண்ணுகிறேன்.

நம் மனதுக்குப் பிடித்ததொரு இசை நாம் எப்போதேனும் மனச்சோர்வுடன் இருந்தால் நமது மனநிலையை உற்சாகப் படுத்தும் வேலையைச் செய்ய வல்லது. இது போல இசை செய்யும் ஜாலங்கள் எத்தனையோ. இசையைச் சுவைப்பது ஒரு வகை சுகம் என்றால் அதுகுறித்துப் வாசிப்பதும் பேசுவதும் இன்னொரு சுகம்.

மேலைநாட்டுப் பாப் இசை, மேற்கத்திய செவ்விசை, ஹிந்துஸ்தானி இசைஞர்கள், கஸல், வட இந்தியத் திரையிசையுலகம், தென்னிந்தியத் திரையிசை உலகம், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், பழைய மற்றும் புதிய திரையிசை, இசையை மையமாகக் கொண்ட
திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் விரியும் ஷாஜியின் கட்டுரைகள் அடங்கிய இரண்டு நூல்களையும் முதல் முறை புரட்டிய போது ஏற்கனவே உதிரியாக வாசித்திருந்த 'நாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா?', 'ஆர்.கே.சேகர் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை' உள்ளிட்ட சில கட்டுரைகளும் அவற்றில் இருக்கக் கண்டேன்.

திட்டமிட்டோ இயல்பாகவோ ஷாஜியின் பல கட்டுரைகளில் அவர் இசையைத் தனது வாழ்க்கை பற்றிய பதிவுகளுடன் பிணைத்தே வரைகிறார். வாசகனைத் தன் கட்டுரையில் ஒன்ற வைக்கும் அவரது இந்த உத்தியானது கட்டுரைகளுக்கு முற்றிலும் வேறானதோர் புதுமையையும் நிறத்தையும் தந்துவிடுகிறது. முதல் நூலான 'சொல்லில் அடங்காத இசை'யின் 'யதார்த்த இசை நிகழ்ச்சிகளும் இசையின் யதார்த்தமும்' என்ற இறுதிக் கட்டுரையில் ஷாஜி தன் மகளுக்கு வைக்கும் பெயரில் மறைந்த இசை மேதை சலில் சௌத்ரியின் இசை மேல் அவருக்கு இருக்கும் பற்றும் பிடிப்பும் நமக்குப் புரிகிறது.

இரண்டாவது நூலான 'இசையின் தனிமை'யின் முதல் கட்டுரையான 'என் அப்பாவின் ரேடியோ' ஷாஜியின் அப்பாவைத் தான் எனக்கு
அதிகமாக உணர்த்தியது. இறுதி வரை ஷாஜியுடன் முரண்பட்டபடியே இருந்த அவரது அப்பா தன்னையறியாமலேயே அவருக்குள் இசையை விதைத்துச் சென்றிருக்கும் விநோதத்தை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. அப்பாவின் முரட்டுத் தனத்திலிருந்து அவரை ஆற்றுப் படுத்தத் தான் அந்தப் பழைய ரேடியோ ஷாஜியின் வாழ்வில் வந்தது போல எனக்குப் பட்டது. அந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் பாப் இசைப் பாடல் வரிகள் மிகப் பொருத்தமாக ஷாஜியே எழுதியது போல, அல்லது அவருக்காகவே எழுதப் பட்டது போலிருந்தது.

இந்தக் கட்டுரையில் அப்பா அவரைத் துரத்தி அடிக்கும் காட்சி எனக்குள் நான் அதுவரை வாசித்திருந்த புதினங்களின் பல்வேறு காட்சிகளைக் கிளறியது. புனைவுகளின் காட்சிகளும் உண்மைச் சம்பவக் காட்சியும் இணையும் புள்ளி என்னை மிகவும் வியப்புற வைத்தது. உள்ளுக்குள் இறங்கி தண்ணென்று அமரும் இத்தனை கனத்த துயரத்தை நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை, இசையை மட்டும் எதிர்பார்த்து உள்ளே போயிருந்ததாலோ என்னவோ எனக்குள் ஏற்பட்ட இந்தத் தாக்கம் சற்றே கூடுதலாகிப் போனது. இது மற்ற
வாசகர்களில் பலருக்கும் கூட ஏற்பட்டிருக்கலாம். ஷாஜியின் பல கட்டுரைகள் துயரத்தையும் வாழ்க்கை கலத்துப் போட்டு ஆடும் கோர
விளையாட்டையும் குறித்த சிந்தனையையும் எனக்குள் விட்டிருக்கின்றன. அக்கட்டுரைகள் மனித உறவுகள் குறித்த ஆழ்ந்ததொரு
சிந்தனைச் சங்கிலியை விட்டுச் செல்கின்றது.

'இசையின் தனிமை' தொகுப்பிலிருக்கும் 'நாம் சரியாகத் தான் இசை கேட்கிறோமா?' என்ற கட்டுரையை சிறந்த ஒலியுடன் இசை கேட்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதை மீள்வாசித்த போது ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. சிங்கப்பூர் ஆலய மண்டலாபிஷேகத்துக்கென்று சில ஆண்டுங்களுக்கு முன்பு, வழக்கம் போல உள்ளூர் கலைஞர்களுடன் இந்தியாவிலிருந்து பிரபல பாடகர்கள் சிலரையும் வர வழைத்திருந்தார்கள். அன்றைக்குப் பாடிய பாடகர் பாவம் மிகவும் ஆத்மார்த்தமாகத் தான் பாடினார். ஆனால், அங்கே பொருத்தியிருந்த ஒலிபெருக்கிகள் செய்த வன்முறையில் அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை.

துல்லியமான உயர்ரக ஒலிபெருக்கிகள் இருக்க வேண்டுமென்று இதுபோன்ற பொது மேடைகளில் நாம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது தான். இருப்பினும், குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாத அந்த ஏற்பாடு தான் மிகுந்த அசௌகரியத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்திவிட்டது. வெறும் மின்னியல் அனுபவம் மட்டும் வய்த்துக்கொண்டு, ஒலிக் கருவிகளை மின்சாதனங்களாக மட்டும் பாற்ப்பவர்களால் தரமான இசை ஒலியை உருவாக்க இயலாது என்பதை சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.

புரியாத மொழியில் கேட்கும் இசை வகைகளில் நானும் பலமுறை மயங்கியதுண்டு. இசைக்கு மொழி தேவையில்லை என்ற கூற்றைக் குறித்து நிறைய யோசித்திருக்கிறேன். எழுபதுகளில், இளையராஜா திரையிசை உலகிற்குள் வருவதற்கு முன்னர் ஓர் இடைவெளியில் தமிழர்கள் ஹிந்தி தெரியாமலே ஹிந்திப் பாடல்களை முணுமுணுத்தது அதைத் தானே நிரூபிக்கிறது வாதிடுவோர் பலரும் உளர். வயலின் இசையின் அதிர்வுகளைத் தன் கைகளால் தொட்டுணர்ந்தே படைப்பாளி யாரென்று கண்டுபிடித்த ஹெலன் கெல்லர் கூட இதற்கு மிகச் சிறந்ததொரு உதாரணம் என்று சொல்பவர்களுண்டு. அவருக்கு மொழி மட்டுமின்றி ஒலியே மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு ஒலி அதிர்வுகளின் கோர்வைகளில் பிறப்பது தான் இசை என்பதை நிரூபித்ததாக இருக்கக் கூடியது அவ்விஷயம்.

இது ஒருபுறமிருக்க, இசையானது கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்ததாகவும் அமைகிறது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இசை ரசிகனின் ரசனைகளைத் தீர்மானிக்க வல்ல காரணியாகவும் இந்தப் பாண்பாடு-கலாசாரம் அமைகிறது. ஒரு காலகட்டத்தில், தமிழனுக்கு ஹிந்திப்பாடல் பிடித்தது ஒன்றும் பெரிய அதிசயமில்லை. ஏனெனில், தூரதேச நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருப்பதை ஒப்பிட்டால் தமிழகத்துக்கும் வட இந்தியாவுக்கும் தூரமும் குறைவு; பண்பாட்டு, கலாசார வேறுபாடுகளும் மிகக் குறைவு. ஆப்ரிக்க அல்லது ஸ்பானிய இசை தமிழனுக்கு அதே காலகட்டத்தில் பிடித்திருக்க அதிக வாய்ப்பில்லை.

வெளியிலிருந்து நுழையும் ஒரு விஷயம் ஏற்கப்படும் போது நல்ல மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்று
ஷாஜி சலில் சௌத்ரியைக் குறித்து எழுதும் கட்டுரையில் நிறுவுகிறார். சலில் தாவின் இசையானது தேக்கமடைந்து கிடந்த மலையாளத்
திரையிசையுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதை ஆதாரங்களோடு வலியுறுத்தும் போது கொடுக்கல் வாங்கல்களால் நன்மையுண்டு என்றே தோன்றும். அதே வேளையில், வெகுஜன இசையில் புகும் மற்ற இசைவகைகள் கொள்ளும் மாற்றங்கள் அக்கறைக்குரியது என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணத்துக்கு, திரையிசைக்கு வரும் நாட்டுப்புற இசை வகைகள் கால ஓட்டத்தில் 'இது தான் நாட்டுப்புற இசை' என்று புரிந்து கொள்ளப்படும் அபாயமுண்டு. ஆனால், நாடு தாண்டியும் கண்டம் தாண்டியும் பண்பாடும் கலாசாரமும் பரவலாகப் பகிரப்படும் சுருங்கிய இன்றைய உலகில் இசையும் அவற்றுடன் கடத்தவே படுகிறது. தொழில்நுட்பமும் ஊடகமும் சமீப காலங்களில் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி இசையை மெதுமெதுவாக ஒரு பொதுத் தளத்துக் கொண்டு போகிறதை நாம் பார்க்க முடிகிறது. ஃப்யூஷன் என்ற பெயரில் நிகழும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் தேவையா, பண்பாடு-கலாசாரத்தின் மீது அதன் தாக்கங்கள் என்னென்ன என்பதெல்லாம் முற்றிலும் வேறானதொரு தனிப்பட்ட சர்ச்சைக்குரியவை. ஆனால், அவையெல்லாம் இக்காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை என்பதே நிதர்சனம்.

சாண்டியாகோவில் இருக்கும் ஒரு நரம்பியல் விஞ்ஞானியான டாக்டர் அனிருத் D. படேல் ஸ்வரம் சொல் இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தால் மிகச் சிறந்த ஒரு தொடர்புச் சாதனமாகிறது என்கிறார். ஆனாலும், அவ்விரண்டும் அவற்றிற்கான தனித்தனி விதிமுறைகளுடன் கூடியதே என்றும் முன்பகுதி மூளையில் தான் மொழியும் இசையும் சேர்ந்து செயல் படுகிறது என்றும் சொல்லும் இவர் மற்ற மூளைப்பகுதிகள் அதன் நீட்சியாக மட்டும் இசை தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்கிறார். அவ்வகையில் இசையானது நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் வேறு சில காரணிகளாலும் அமையக்கூடும். அதில் மிக முக்கியமானது நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் வளர்ந்திருக்கக் கூடியதொரு இசைக் கலாச்சாரம். இதைப்பற்றி சிங்கப்பூரில் ஒரு மேடையில் ஷாஜி 'உணவுக்கு நாக்கைப் பழக்கப் படுத்துவது போல' நம் காதுகளை இசைக்குப் பழக்கப் படுத்த வேண்டும் என்று சொன்னார்.

எந்தவொரு கட்டத்திலும் இசைக்குள் நுழையும் யாருமே பல்வேறு இசை வகைமைக்குப் பரிச்சயப்பட்டு தன் விருப்பத்தையோ தனது தேர்வையோ கண்டு கொள்ளலாம். இலக்கிய வெளியில் வாசகராக ஒருவர் எப்படித் தொடர்ந்து வளர வேண்டியிருக்கிறதோ அதே போலத் தான் ஓர் இசை ரசிகரும் தொடர்ந்து வளர வேண்டியுள்ளது. ஏனெனில், படைப்புலகமும் தொடர்ந்து வளர்ந்தபடியே இருக்கிறது. அவ்வாறு ரசனையை வளர்த்துக் கொள்ளக் கூடிய அத்தனை வாய்ப்புக்களும் ஏராளமாகவே இருக்கின்றன என்பதைத் தான் ஷாஜியின் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.

தனது கருத்துக்களில் நல்ல தெளிவும் உறுதியும் இருக்கும் அதே நேரம் சில உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டிய இடங்கள் வரும். அவை விமரிசகனின் முக்கிய சவாலாக அமைகின்றன. விமரிசகன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்றவற்றைக் கடந்தும் நடு நிலையானதொரு பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அது ஷாஜிக்கு வாய்த்திருக்கிறது. ஒரு பொது நிகழ்ச்சியில் பார்வையாளரிடமிருந்து சொற்பிரயோகம் குறித்து வந்த ஒரு விமரிசனத்தை மிகுந்த நிதானத்துடன் புரிந்து கொண்டு ஏற்றதை பார்த்திருக்கிறேன். முன்னால் உட்கார்ந்து கொண்டு தன் கூற்றிலிருந்து விலாகமல் பிடிவாதம் செய்யும் ஆளிடம் கூட அவரது கருத்து அவருக்கான உரிமை என்பது போல அவர் சூழலைக் கையாண்ட விதம் ஒரு விமரிசகருக்கு வேண்டியதாக இருப்பதால், ஷாஜியில் நாம் ஒரு நல்ல இசை விமரிசகரை அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

முதன் முறையாக நாம் ஒரு படைப்பை அணுகும் போது இருக்கும் நமது மனநிலை நாம் அப்படைப்பை உள்வாங்கும் முறையையும்
நமக்குள் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் கூட தீர்மானிக்கக் கூடியது. அதே படைப்பை நாம் இன்னொரு சமயத்தில் நல்லதொரு மனநிலையில் இருக்கும் போது மீண்டும் அணுகினால் நாமே ஆச்சரியப்படும் அளவில் நமக்குள் வெகுநேரத்துக்குப் பிறகும் மறையாத அதிர்வுகளையும் சந்தோஷங்களையும் சிந்தனைகளையும் விட்டுச் செல்லும். அவ்வகையில் எந்த இசையையும் திறந்த மனத்துடன் அணுகவும் ஒருமுறை புறக்கணித்திருப்பினும் மீண்டும் முயலவும் இவ்வாறான கட்டுரைகள் கண்டிப்பாக உதவும் என்றே நினைக்கிறேன்.

சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஷாஜியுடன் கலைந்துரையாடலில், திரையிசைக்கு விமரிசனம் தேவையா? இசை என்பதே ஓர் அனுபவமில்லையா? அதைக் குறித்து பக்கம் பக்கமாக எழுதுதல் வேண்டுமா? என்பதையே வெவ்வேறு தொனிகளிலும் சொற்களிலும் ஒரு
சிலர் பேசினர். 'சொல்லில் அடங்காத இசை' என்ற தனது முதல் நூலின் தலைப்பிலேயே ஷாஜி disclaimer கொடுத்து விடுகிறார் என்பது
நமது கவனத்துக்குரியது. சொல்லில் அடங்காத இசையை ஏன் சொல்லில் அடக்கப் பார்க்கிறார் என்ற விதண்டாவாதக் கேள்வியையும்
யாரேனும் எழுப்பக்கூடும். உண்மையென்னவென்றால், இசை ஓர் அனுபவம் என்பதை ஷாஜியும் ஏற்கிறார். அதே சமயம், இசைக்கும் தனக்குமான உறவைச் சொல்லி, தான் சுவைத்த இசையை அவர் எவ்வாறு வந்தடைந்தார் என்று சொல்லி அதன் மூலம் ஒருவர் இசையை எவ்வாறெல்லாம் அணுகலாம் என்றும் எழுதுகிறார். இசையை ரசிப்பதுடன் அவ்விசையைப் பற்றியான விவரங்களையும் தொடர்ந்து தனக்குள் சேகரித்து வந்திருக்கிறார் ஷாஜி. இந்தக் கலவை மிக அரியதும் அழகானதும் கூட. அது தான் அவரை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

பெரியவர்களாகும் போது இசையைச் சிறப்பாக ரசிக்கவேனும் இருக்கட்டும் என்று பெற்றோர் சிறார்கள் இசை கற்பிப்பதுண்டு. ஒருவர் மேற்கொள்ளும் இசைப் பயிற்சி அவருடைய மூளையில் 'இசை' கேட்கும் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்கிறது ஆய்வுகள். அதனால் தான் வருடக்கணிக்கில் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் இசைப்பயிற்சி செய்த இசைஞர் இசையை மிகமிகத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கேட்க, ரசிக்க, திருத்த முடிகிறது. இவ்விசைக் கலைஞர்களின் மூளையில் மற்ற பகுதிகளின் செயல்பாடுகளிலும் கூட முன்னேற்றம் காண்பிக்கின்றனர். அதாவது, வேறு ஒரு துறையில் பேச்சோ, ஓவியமோ, புகைப்படக் கலையிலோ ஈடுபாடும் நாட்டமும் முன்னேற்றமும் தெரிகிறது. இசை குறித்த அறிவு கண்டிப்பாக இசையை மேலும் சிறப்பாக ரசிக்க உதவும் என்பதே நாம் இதிலிருந்து அறியக் கூடியது. இசை ரசனையை மேம்படுத்திக் கொள்ள விழையும் ஒருவரது முயற்சிகளுக்கு ஷாஜியின் கட்டுரைகளில் கண்டிப்பாக
பாதைகள் பல புலப்படும்.

நவீன கவிதை போலவும் நவீன ஓவியம் போலவும் அருபமானதொரு விஷயம் இசை. அதை விளக்குவதா? அவ்வாறு செய்வது சுவைஞனை ஒரு சட்டத்திற்குள் இருத்தி விடும் அபாயமுண்டல்லவா? என்பது போன்ற சில கேள்விகள் நம்முள் எழுகின்றன. அதே சமயம், கவிதையையும் ஓவியத்தையும் குறித்து விமரிசகர்கள் எழுதத் தானே செய்கிறார்கள். ஆகவே, விரிந்த தேடல்களுக்கும் மேம்பட்ட புரிதலுக்கான திறப்பாகவும் கண்டிப்பாக இசை விமரிசனமும் உதவும். இலக்கியத்துக்கும் திரைப்படத்துக்கும் விமரிசனம் தேவை என்றால், இசைக்கும் தேவை தான் என்று குறிப்பிடுகிறார் ஷாஜி.

வெகுஜென இசை என்றால் ஏதோ தீண்டத் தகாததென்றும் செவ்விசை என்றால் அது ஏதோ மேட்டிமையின் சின்னம் என்றும் கருதிய பழமையில் ஊறிய எண்ணங்கள் மறையத் தொடங்கியிருக்கிறது. வெகுஜன இசைக் கலைஞர்கள் மேன்மேலும் சிறப்பாகப் படைக்க, ரசிகர்களின் ரசனை உருவாகவும் வளரவும் வேண்டியிருக்கிறது. இதற்கு வெகுஜன இசையின் நுட்பங்களை அறிந்த ஓர் இசை விமர்சகர் தேவைப் படுகிறார். செவ்வியல், நாட்டுப்புற, திரை இசை, மேலை இசை வகைகள் போன்ற பலவற்றையும் தொடர்ந்து கேட்டும் அவதானித்தும் வரும் ஷாஜி போன்ற ஒருவர் தானே அந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்?

இரு கட்டுரைத் தொகுப்புகள்
சொல்லில் அடங்காத இசை
இசையின் தனிமை
ஆசிரியர்: ஷாஜி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், சென்னை.