20110610

டாக்டர் தம்பையா (1924-2011)
தோல்நோய் மருத்துவ விஞ்ஞானி

கடந்த வருடம் அக்டோபரில் செந்தில், பாபு, சிவா, அறுமுகம் போன்ற சில வாசக நண்பர்களின் தூண்டுதலால் அவர்களுடன் கோடைக்கானல் மலைகளில் உள்ள கூக்கல் என்ற ஊரிலிருந்து பழனி பக்கத்திலுள்ள குதிரையார் என்ற ஊர் வரைக்கும் யாருமே பயணிக்காத மலைக்காடுகள் வழியாக ஒரு நடைபயணம் மேர்கொண்டேன். இரவில் கொடுங்காட்டுக்குள் வழிதவறி, வனவிலங்குகளின் அச்சமளிக்கும் ஓசைகள் சூழ, பாறைமேல் படுத்து தூங்கி, ஒருவழியாக உயிர்தப்பி வெளிவந்த அந்த பயணத்தின்போது எனது இரண்டு கால்களிலும் ஏறாளமான அட்டைகள் கடித்திருந்தன. ரத்தம் உறிஞ்சிக்கொண்டிருந்த அட்டைகளை நான் பிடுங்கி எறிந்தேன். ஆனால் அப்படி பண்ணக்கூடாது போலும்.

சில நாட்களுக்குள் அட்டை கடித்த இடங்களெல்லாம் கறுப்பு நிறமாக மாறி தடித்து பொங்கியது. தாங்கமுடியாத அரிப்பு. அது ஒவ்வொருநாளும் மேலேறி கால்கள், கைகள், கழுத்து எல்லாம் அரிக்க ஆரம்பித்தது. ஒரு முறை சந்தித்து ஆலோசனை வழங்குவதற்கு 750 ரூபாய் வாங்கும் ஒரு ’உயர்தர’ தோல்நோய் மருத்துவரை முதலில் அணுகினேன். அவரது சிகிட்சை உடன் பலனளித்தது. அரிப்பு உடம்பெல்லாம் பரவியது! என்ன செய்வேன் என்று தெரியாமல் அலைந்துகொண்டிருந்தபோது ஒருநாள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்காள நண்பர் சொன்ன மருத்துவரின் பெயர் நினைவுக்கு வந்தது. அவர் தான் தோல் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ஏ.எஸ். தம்பையா.

டாக்டர் தம்பையாவைப்பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவில் வைத்து. என் இரண்டு மணிக்கட்டிலும் ஒருவகையான தோல் நோய் வந்து அங்கே ஒரு பெரிய கறுப்பு மச்சம் மாதிரி ஆகிவிட்டிருந்தது. ஒருமுறை அதைப்பார்த்த நண்பரும் மருத்துவருமான சுஜித் குஹா என்னிடம் ‘இதை நீங்கள் உங்கள் சென்னையிலேயே உள்ள டாக்டர் தம்பையாவிடம் காண்பிக்கவில்லையா? அவர் தான் இந்தியாவின் முதன்மையான தோல் நோய் மருத்துவர்’ என்று சொன்னார். ஆனால் டாக்டர் தம்பையாவைப் பற்றியான மற்ற தகவல்கள் எதுவுமே அவரிடம் இருக்கவில்லை.

இணையத்தில் பலமணிநேரம் தேடியபின் ஒரு தொலைபேசி எண் கிடைத்தது. அதுவுமே டாக்டர் தம்பையாவுடையது அல்ல. பக்கத்தில் உள்ள ஒரு மருந்து கடையின் எண் அது. ஆனால் பல தகவல்கள் அங்கிருந்து கிடைத்தது. டாக்டர் தம்பையா காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நோயாளிகளை பார்ப்பார். சந்திப்பு நேரம் முன்பதிவு செய்ய இயலாது. டோக்கன் வசதியும் இல்லை. யாராக இருந்தாலும் வரிசையில் நின்று மட்டும்தான் அவரை பார்க்க முடியும். முதலில் வந்து இடம் பிடிப்பவர்கள் முதலில் அனுமதிக்கப்படுவார்கள். பூனமல்லி நெடுஞ்சாலையில், சங்கம் திரை அரஙகத்துக்கு பக்கத்தில் உள்ள பூக்கள் சாலையில்தான் அவரது இல்லம். ஆலோசனை சந்திப்பும் அங்குதான்.

அடுத்தநாள் காலையில் ஆறரை மணியளவில் அங்கே சென்ற நான் இடம் கண்டுபிடிக்கும்போது ஏழரை. ஒரு பேர் பலகையோ சுவரொட்டியோ எதுவுமே அங்கு இல்லை. பெரும்பழமையான இரும்பு நுழைவாசல் திறந்து கிடந்தது. உள் செல்லும் அகலமான பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரு ஆள்கூட எங்கேயும் என் கண்ணுக்குப் படவில்லை. நல்ல வேளை! யாருமே வரவில்லை, முதல் ஆள் நான் தான்! அப்பாதையின் கடைசியில் ஒரு சுவர். அங்கிருந்து இட்து பக்கம் திரும்பி உள்ளே சென்றால் ஒரு அகலமான முற்றம். வானுயர்ந்து நிற்கும் நாலைந்து நாகலிங்க மரங்களின் நிழலில் நூற்றுக்கணக்கு ஆண்டுகள் தாண்டிய பழமையான ஒரு கட்ட்டம். அங்கே குறைந்தது 50 பேர் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்! யாருமே இல்லை என்ற ஆசுவாசத்துடன் வந்த நான் வேகமாக ஓடி அந்த வரிசையின் கடைசி எங்கே என்று தேடினேன். அப்போது தான் தெரிந்தது! அந்த வரிசை மிக நீளமானது. வளைந்து நெளிந்து அது அந்த கட்டடத்தின் பின்புறம் வரைக்கும் நீண்டுசென்றது! மொத்தம் நூறு பேராவது இருக்கும்!

கடையனாக அங்கே நின்றால் அன்றைக்கு இரவானாலும்கூட டாக்டர் தம்பையாவை பார்க்க முடியாது என்று தெரிந்தது. வீட்டுக்கு திரும்பும் முன் நான் அங்கிருந்தவர்களை எல்லாம் உற்றுப்பார்த்தேன். பிச்சைக்காரற்கள், தெருவின் விலைமாதர்கள் தொடங்கி பென்ஸ், பி எம் டபிள்யூ கார்களில் வந்த பெரும் பணக்கார்ர்கள் வரை அவர்களில் இருந்தனர். முதலில் நின்ற பெண்ணிடம் எத்தனை மணிக்கெல்லாம் அவர் உள்ளே வந்தார் என்று கேட்டேன். அதிகாலை நாலு மணிக்கு என்றார்!

இரண்டு நாட்கள் கழித்து இரவு 2.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து 3.30 மணிக்கெல்லாம் நான் அங்கு சென்றேன். நுழைவாசல் மூடப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு இருசக்கர வாகனத்தின் இருக்கையின்மேல் படுத்து குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தான். இரண்டுபேர் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர். அங்கு ஒரு சைக்கிளில் தேனீரும் சிற்றுண்டிகளும் விற்றுக்கொண்டிருந்தவர் அவர்களிடம் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். 5.30 மணிக்கு நுழைவாயில் திறந்தவுடன் அதற்குள் அங்கே திரண்டிருந்த 50க்கும் மேர்பட்டோர் ஒருத்தருக்கு ஒருத்தரை தள்ளி அகற்றிக்கொண்டு உள்ளே ஓடினர். எனக்கு கிடைத்தது எட்டாவது இடம்!

இரண்டரை மணிநேரம் காத்திருப்பு. முதல் 15 பேருக்கு மட்டும் மர இருக்கை உண்டு. மற்றவர்கள் முழுநேரமும் நின்றே ஆகவேண்டும். பூக்களும் காய்களும் நிறைந்த நாகலிங்க மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து கொண்டேயிருந்தன. அம்மரங்களின்மேல் அணில்கள் ஓடி விளையாடியபோது பூக்கள் நறுமணம் பரப்பி உதிர்ந்துகொண்டிருந்தது. எட்டுமணிக்கு டாக்டர் தம்பையா 86 வயதின் தடுமாற்றத்துடன் மேலேயிருந்து மெதுவாக இறங்கி வருவதற்குள் மரநிழலில் கூட்டம் 150 தாண்டியிருந்தது.

உதவிக்கு வேறு இரண்டு மருத்துவர்களும் இருந்தனர். என்னை பார்த்தது இரண்டு நிமிடம் மட்டுமே. இது ஒருவகையான தோல் ஒவ்வாமை. அட்டையின் கடித்தல் அதை தூண்டி விட்டது. அவ்வளவுதான். பாதியாகவும் முழுவதாகவும் ஒருமாதம் உட்க்கொள்ள வேண்டிய பல மாத்திறைகள் எழுதித்தந்தார். சாதாரணமாக ஆயுர்வேதத்தில் மட்டும் சொல்லப்படும் பலவகையான உணவுக் கட்டுப்பாடுகளை சொன்னார்! தக்காளி, எலுமிச்சை, கமலாப்பழம், சாத்துக்குடி, குளிர் பானங்கள் எதுவுமே சாப்பிடக்கூடாது. குழந்தைகள் சோப்பில் மட்டும்தான் சிலகாலம் குளிக்கவேண்டும்.

இரண்டு நாளிலேயே அரிப்பு குறைந்தது. ஒரு வாரத்தில் நோய் குணமாகிவிட்டது! அதற்காக அவர் என்னிடமிருந்து வாங்கியது வெறும் 30 ரூபாய். பத்து வருடம் முன்பு வரைக்கும் நோயாளிகளிடமிருந்து அவர் வாங்கிவந்தது இரண்டே ரூபாய்! அதுதான் தோல் மருத்துவ விஞ்ஞானி ஏ.எஸ். தம்பையா!

இலங்கை தமிழ் வம்சாவளியினரான அப்பாவுக்கும் கேரளத்தைச்சார்ந்த அம்மாவுக்கும் 1924ல் பிறந்தவர் ஆர்தர் சரவணமுத்து தம்பையா. சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து மருத்துவர் பட்டம் பெற்று லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத்தில் மேல்படிப்பு படித்தார். தோல் மருத்துவத்தில் எம்.ஆர்.சி.பி. படிப்பை வெற்றிகரமாக முடித்த தென்னிந்தியாவின் முதல் மருத்துவர் அவரே. வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் வாய்புகள் ஆயிரம் இருந்தும் அவர் இந்தியா திரும்பினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் தோல் மருத்துவத் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அவரது முயற்சியால் தான் அங்கு தோல் சம்பந்தமான மேல் படிப்புகள் தொடங்கப்பட்டது.

ஒரு உலகத்தர மருத்துவ விஞ்ஞானியின் அசாத்தியமான அறிவுத்திறனும் ஆராய்ச்சித்திறனும் நினைவாற்றலும் அவருக்கு இருந்தும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக மட்டுமே அரசு பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் பணியாற்றினார். ஞாயிறுகூட விடுமுறை இல்லாமல் காலை 6 மணிமுதல் மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை, தோல் மருத்துவ ஆய்வுப்பணி என ராப்பகலாக சேவை செய்தவர் அவர்.

மிகச் சிறந்த தோல் மருத்துவ விஞ்ஞானியும் ஆசிரியருமாக விளங்கியவர் தான் டாக்டர் தம்பையா. 150க்கும் மேர்பட்ட சர்வதேச தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தவர் அவர். அவர் கண்டுபிடித்த பல பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. FRCP, FIAM, இங்கிலாந்து தோல் மருத்துவர்களின் அவையில் சிறப்பு உறுப்பினர் போன்ற உலகத்தின் மதிப்புமிக்க பல கௌரவங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. அகில இந்திய மருத்துவ மையத்தின் பி.சி.ராய் விருதும் சென்னை பல்கலை மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைகளின் டாக்டர் ஆப் ஸயன்ஸ் விருதுகளும் அவருக்கு கிடைத்தது. அணு உலைகளுக்கு எதிரான அமைதிப்போராளியாகவும் இருந்தார் அவர். உலக அமைதிக்கான மருத்துவர்களின் சங்கத்தில் உயர்ந்த பெறுப்புகளையும் வகித்தவர்.

அரசுப் பணியிலிருந்து 1982ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள தனது இல்லத்தின் கீழ்ப் பகுதியை மருத்துவமனையாக மாற்றி தோல் மருத்துவ சேவையைத் தொடர்ந்தார். இரண்டு மாதத்திற்கு முன்பு வரைக்கும் நோயாளிகளை பார்த்துவந்தார். கடந்த மே 10 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அடுத்தநாள் காலை 8 மணிக்கு இறந்தார். ஏறாளமான பொதுமக்கள், மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தோல் மருத்துவத்தின் அந்த பிதாமகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நேர்மை, எதற்கும் பயப்படாத குணம், யாரிடமிருந்தும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாத யாரிடமும் பரிந்துரைக்குச் செல்லாத தன்மை ஆகியவையெல்லாம் டாக்டர் தம்பையாவின் சிறப்புகளாக இருந்தன. மருத்துவ சேவையே தனது வாழ்க்கை என்று ஒரு திருமணம் கூட செய்யாமல் 70 ஆண்டுகள் சேவை செய்தவர் அவர். பணத்தாசையில்லாமல் இரக்கத்துடனும் எளிமையுடனும் வாழ்ந்து மறைந்த டாக்டர் தம்பையா ஒரு மருத்துவன், ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஒரு ஒப்பிலா உதாரணம்.