20130513

உலகக் கவிதை - 1

சிறு வயதிலிருந்தே சிறந்த கவிதைகளும் அவற்றை உருவாக்கும் கவிஞர்களின் உள்ளங்களும் எனக்கு மிகுந்த ஆச்சரியங்களாகத்தான் இருந்திருக்கின்றன. ஒரு கவிதை படிக்கும்போது அக்கவிதைக்கு பின்னால் செயல்பட்ட கவிமனம் என்னவென்றும் எப்படிப்பட்டதென்றும் ஆழ்ந்து யோசிப்பது எனது இயல்பு. (இசையிலுமே அவ்வண்ணம் தான்). கடந்த பல ஆண்டுகளாக கவிதைகளிலுருந்து தொலைந்து போயிருந்தேன். இப்போது மீண்டும் கவிதைகளின் உலகில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் படித்த உலக்க கவிதைகளில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய சில கவிதைகளை ஒரு வாசகனின் சுதந்திரத்துடனும் ஒரு எழுத்தாளனின் பார்வையுடனும் தமிழில் தனிமுறை மொழிபெயர்ப்பு செய்வதற்கான எனது முயற்சி தான் இது.

கவிதை (Poetry)
எழுதியவர் : பாப்ளோ நெரூதா (Pablo Neruda)
பெயர் : கவிதை (Poetry)
மொழி : ஸ்பானியம்
நாடு : சிலே
ஆண்டு : 1964
தமிழாக்கம் : ஷாஜி

உலகக் கவிஞர்களின் கவிஞன் என்று அழைக்கப்படும் பாப்ளோ நெரூதா (1904-1973) தனது 60 ஆவது வயதில் எழுதியது கவிதை என்ற இக்கவிதை. ஸ்பானிய மொழியில் போயெசியா (Poesia) என்று அவர் பெயரிட்ட இக்கவிதைக்கு போயெட்ரீ (Poetry) என்ற பெயரில் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒரு கவிஞனாக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் நெரூதா, கவிதை என்பது எப்படி உயிருள்ள ஒன்றாக தன்னை தேடி வந்தது என்றும் அது தன்னை எப்படி முற்றிலுமாக ஆட்கொண்டது என்றும் இக்கவிதையில் விளக்குகிறார்.   
 
கவிதை
பாப்ளோ நெரூதா

அந்த வயதில் ஒருநாள் கவிதை வந்து சேர்ந்தது
என்னைத் தேடி
எங்கிருந்து என்று தெரியவில்லை
குளிர்காலத்திலிருந்தா? ஒரு நதியிலிருந்தா?
எப்படி? எப்போது?
ஒன்றுமே பிடிபடவில்லை

அது சொற்களாக வரவில்லை
சத்தங்களாகவோ மௌனமாகவோ வரவில்லை
அது என்னை வரவழைத்தது
ஒரு தெருமுனையிலிருந்து
இரவின் கிளைகளிலிருந்து
வன்மத்துடன் எரியும் நெருப்பிலிருந்து

அது பிறரிலிருந்து என்னை பிரித்தெடுத்தது
முகமற்றவனாக நான் தனிமையில் திரும்பும்போது
என்னை தொட்டது
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
எனது வாய் திறக்கவில்லை
எனது கண்கள் குருடாயின

ஆன்மாவில் ஏதோ ஒன்று இயங்கத் துவங்கியது
காய்ச்சலா? நான் எங்கேயோ மறந்து வைத்த எனது சிறகுகளா?
நெருப்பின் ரகசிய பாஷையை நானே மொழிபெயர்க்கத்துவங்கினேன்
வலுவற்ற எனது முதல் வரியை எழுதினேன்
தளர்ந்து மங்கலானது, பொருள் சொல்லவியலாதது
தூய்மையான மடத்தனம்
ஒன்றுமே தெரியாதவனின் பரிசுத்த ஞானம்

திடீரென்று ஆகாயம் கட்டவிழ்வதைக் கண்டேன்
கோள் கிரகங்கள் திறக்கப்பட்டன
தோப்புகள் துடித்தெழுந்தன
ஓட்டைகள் விழுந்த நிழல்களின்மேல்
இனம்புரியாத அம்புகள் பாய்ந்தன
பற்றியெரியும் தீ, பூக்கள்
சுழன்றடிக்கும் இரவு, பிரபஞ்சம்
எனது முடிவற்ற இருப்பு

விண்மீன்களின் வெறுமையை குடித்த போதையில்
சரிசமமாய், மறைபொருளின் உருவமாய்
அடியாழத்தின் தூய்மையான துண்டாய்
சக்கரங்களேறி நான் பயணிக்கத்துவங்கினேன்
நட்சத்திரங்களுடன்
என் இதயம் உடைந்து சிதறி காற்றில் தூசியாய் பறந்துபோனது