20130809

ஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்


ஒரு கறுப்புப் பறவையை பார்ப்பதன் பதிமூன்று விதங்கள்
(Thirteen Ways of Looking at a Blackbird)
கவிஞர் : வாலஸ் ஸ்டீவென்ஸ் (Wallace Stevens). 
(1879ல் பிறந்து 1955ல் மறைந்த கற்பனை வளம் மிக்க நவீனக் கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ்)
மொழி : ஆங்கிலம்
நாடு : அமேரிக்க
ஆண்டு : 1917
தமிழில் : ஷாஜி


1
உறைந்த இருபது பனிமலைகளுக்கிடையே
அசையும் ஒரே ஒரு பொருள்
ஒரு கறுப்புப் பறவையின் கண்

2
மூன்று கறுப்புப் பறவைகள்
அமர்ந்திருக்கும் ஒரு மரத்தைப் போல்
எனக்கு மூன்று மனங்கள் இருந்தது

3
இலையுதிர் காலக் காற்றில்
அந்த கறுப்புப் பறவை சுழன்றடித்தது
அது ஒரு ஊமைநாடகத்தின் சிறு பகுதி

4
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
ஒன்று தான்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கறுப்புப் பறவையும்
ஒன்று தான்

5
எதை முதன்மைப்படுத்த வேண்டும்
என்று எனக்கு தெரியவில்லை
பார்வைக் கோணங்களின் அழகையா?
மறைமுகக் குறியீடுகளின் அழகையா?
கறுப்புப் பறவையின் சீழ்க்கை ஒலியையா?
இல்லை
எல்லாமே முடிந்துவிட்ட அந்த தருணத்தையா?

6
முரட்டுக் கண்ணாடிகளாலான நீண்ட ஜன்னலை
பனித் துகள்கள் நிரப்பியிருந்தது
கறுப்புப் பறவையின் நிழல் அதை குறுக்கிட்டு
முன்னும் பின்னும் கடந்து போனது
நிழலின் பதிவடையாளம் அந்த மனநிலை
அதன் காரணம் ஏதோ ரகசிய பாஷையில் எழுதப்பட்டது

7
மெலிந்துபோன நகரவாசிகளே,
எதற்காக தங்கப் பறவைகளை கனவு காண்கிறீர்கள்?
உங்களது பெண்களின் கால்களைச் சுற்றிவரும்
ஒரு கறுப்புப் பறவையை
உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

8
உயர்குடி உச்சரிப்புகள் எனக்கு தெரியும்
வழவழப்பான தாளங்களும் எனக்கு தெரியும்
எனக்குத் தெரிந்தவை அனைத்திலும்
அந்த கறுப்புப் பறவை கலர்ந்திருப்பதையும் எனக்குத் தெரியும்

9
கண்காணா தூரத்திற்கு பறந்துபோனபோது அந்த கறுப்புப் பறவை
பல வட்டங்களுக்கிடையே ஒரு வட்டத்தின்
விளிம்பை வரைந்து சென்றது

10
பச்சை வெளிச்சத்திற்கு நடுவே பறக்கும்
கறுப்புப் பறவையை பார்க்கும்போது
செவிக்கினிய ஓசைகள் மட்டுமே எழுப்புவதில் பேர்பெற்ற
வேசித் தரகிகள் கூட கீரிச்சிட்டு கத்துவார்கள்

11
தனது கண்ணாடி வாகனத்தில்
மாநிலத்தின் மேலே பயணித்தார் தலைவர்
ஏதோ ஒரு பீதி அவரை துளைத்தது
அந்த பீதியில் தனது வாகனத்தின் நிழலைக் கூட
கறுப்புப் பறவை என அவர் எண்ணத் துவங்கினார்

12
ஒரு நதி நகர்கிறது
கறுப்புப் பறவை பறந்து கொண்டிருக்கலாம்

13
அந்தி கறுக்கிறது
பிற்பகல் முழுவதும் பனி விழுந்துகொண்டிருந்தது
மேலும் பனி விழப்போகிறது
தேவதாரு மரத்தின் காணாக் கிளையொன்றில்
அமர்ந்திருக்கிறது அந்த கறுப்புப் பறவை