20131008

அனைவருடன் தனியே - சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி

உலகக் கவிதை
அனைவருடன் தனியே (Alone With Everybody)
சார்லெஸ் ப்யுகோவ்ஸ்கி (Charles Bukowski 1920-1994)
தமிழில் ஷாஜி


எலும்புகளுக்குமேல் தசை மூடியிருக்கிறது
நடுவில் எங்கோ ஒரு மனதை வைத்தார்கள்
அவ்வப்போது ஒரு ஆன்மாவையும்

பெண்கள் பூப்படிகங்களை எறிந்து உடைக்கிறார்கள்
ஆண்கள் மிதமிஞ்சி குடிக்கிறார்கள்
தனக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை
யாருமே ஒருபோதும் கண்டடைவதில்லை

தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்
கட்டில்களில் மாறிமாறிப் புரண்டபடியே
எலும்புகளுக்குமேல் தசை மூடியிருக்கிறது
அத்தசை அதீதமான தசையொன்றைத் தேடுகிறது

வேறு வழிகள் எதுவுமில்லை
அனைவரும் விலக்கமுடியாத ஒரே விதிக்குள்
என்றைக்குமாக அகப்பட்டவர்கள்
தனக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை
யாருமே ஒருபோதும் கண்டடைவதில்லை

நகரின் அழுக்குக் கிடங்குகள் நிரம்புகின்றன
யாருக்குமே வேண்டாத பழங்காலப் பொருட்கள்
குப்பை மலைகளாக குவிந்து நிரம்புகின்றன
பைத்திய இல்லங்கள் நிரம்புகின்றன
மருத்துவமனைகள் நிரம்புகின்றன
மயானங்கள் நிரம்புகின்றன
இவ்வாழ்க்கையில்....
வேறு எதுவுமே ஒருபோதும் நிரம்புவதில்லை