20150808

எம் எஸ் விஸ்வநாதன் - நெஞ்சம் மறப்பதில்லை


உதித்தால் அஸ்தமிக்கும்
பிறந்தால் மறைந்துபோகும்
பூமி அழிவற்று நிற்கும்
அது எத்தனையோ வசந்தங்களை,
கோடைக் காலங்களைக் கண்டது
வானம் அழிவற்று நிற்கும்
அது எத்தனையோ விடியல்களை,
அஸ்தமனங்களைக் கண்டது
-- (எம் எஸ் வி இசையமைத்துப் பாடிய ஒரு மலையாளத் திரைப்பாடல்)

ஸாந்தோம் ஒலிப்பதிவுக் கூடத்தின் நுழைவாயில் கடந்து அந்த கறுப்பு அம்பாசடர் கார் உள்ளே வந்துகொண்டிருக்கிறது. எனக்குள்ளே இனம்புரியாத ஒரு பதற்றம்! நினைவில் பாடல்கள் தங்கத் தொடங்கிய காலத்திலிருந்தே என்னை முற்றிலுமாகக் கவர்ந்த எண்ணற்ற பாடல்களை உருவாக்கிய இசை மாமேதைதான் அந்த வாகனத்திற்குள்ளே. நாற்பதாண்டுகாலமாக இந்திய இசையில் நிறைந்து நிற்கும் அதிசயம் அவர். முதன்முதலில் அவரை முகத்தோடுமுகம் சந்திக்கப் போகிறேன். என்ன பேசுவது? எப்படி மரியாதை செலுத்துவது? அவர் என்னை கவனிப்பாரா? என்னிடம் எதாவது பேசுவாரா? வணக்கத்திற்குறிய இசைஞர்களை கடவுளர்களாகவே மனதில் நினைத்துவந்த காலம் அது. எம் எஸ் விஸ்வநாதன் வாகனத்திலிருந்து வெளியே இறங்கினார்.

வெள்ளை வேட்டியும் முழுக்கை சட்டையும். நெற்றி முழுவதும் படர்ந்த மூன்று கோட்டு பட்டை விபூதி. அதற்கு நடுவே காவி வண்ணத்தில் பெரிய வட்டப் பொட்டு உண்டு. பெரும்பாலான விரல்களில் பலவகை மோதிரங்கள். தடிமனான உலோக வண்ணக் கைகடிகாரம் சட்டைக்கையின் மேலேயே கட்டியிருக்கிறார். ஒரு அதீத பக்திமானைப் போலவோ, ஒரு கோவில்ப் பூசாரியைப் போலவோ இருந்தது அவரது தோற்றம்! முன்பு சில புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவரது நேரடித் தோற்றம் எனக்கு அன்னியமாகவே பட்டது. பணிவான முகபாவனைகளும் ஒரு குழந்தை போன்ற புன்சிரிப்புமாக  அங்கே நின்றிருந்தவர்களின் வணக்கங்களை ஏற்றுக்கொண்டு ஒளிப்பதிவு கூடத்திற்குள்ளே நுழைந்தார் எம் எஸ் வி.

அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த இசைத் தயாரிப்பு நிறுவனத்தின் மலையாள ஐயப்ப பக்திப்பாடல் ஒலிநாடா ஒன்றின் ஒலிப்பதிவுதான் அங்கு நடந்துகொண்டிருந்தது. 1993ல். ”பூமரம் இல்லாத்த பூங்காவனம்” எனும் வரிகள் பாடகனுக்கு பாடிக்கொடுக்கிறார் எம் எஸ் வி. ’இந்தப் பாடலை இதற்குமுன் பலமுறை நான் கேட்டிருக்கிறேனே!’ என்று எனக்குள் தோன்றியது. உடனே ஒரு பாடல் எனக்கு நினைவு வந்தது. “பூ மூடிப்பாள் இந்தப் பூங்குழலி!”. நெஞ்சிடுக்கும் வரை (1967) எனும் படத்தில் வந்த தனது அந்த தமிழ் திரைப் பாடலை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஒரு மலையாள பக்திப்பாடலாக மீண்டும் பிறப்பிக்கிறார் எம் எஸ் வி! ”பூ மூடிப்பாள் இந்தப் பூங்குழலி… புதுச் சீர் பெருவாள் வண்ணத் தேனருவி…. பார்வையிலே மன்னன் பேரெழுதி…” என்னால் முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை! திடீரென்று தலை திருப்பி பின்னால் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார் எம் எஸ் வி. “யாருடா இவன்?! பயங்கரமான ஆளுதான் போல! அதே தான்டா.. பூ முடிப்பாள் பாடலேதான் இது…” என்று ஒரு நிறைவான புன்னகையுடன் சொன்னார்.

’புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் இசைப்பதிவு மேலாளர்’ என்று என்னை அவருக்கு அறிமுகம் செய்தனர். எம் எஸ் வி எனது கையை அழுத்தமாக குலுக்கினார். நான் அவரது பாதங்களைத் தொட்டுக் கொண்டேன். உடன் ”காட் ப்ளெஸ்” என்று சொன்னார். கண்ணுக்குத் தெரியாத ஏதோ இடத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படும் கடவுளின் ஆசியை விட ரத்தமும் சதையுமாக என் கண்முன் நின்ற அந்த இசை வல்லமையின் ஆசிதான் அப்போது என்னைத் தொட்டது. ’மனிதன் என்பவன் தைவமாகலாம்…’ என்பது எம் எஸ் வியின் எத்தனையோ பாடல்கள் வழியாக நான் உணர்ந்த உண்மை.

தனது எத்தனையோ பாடல்கள் வழியாக அவர் என்போன்ற இசைப்பித்தர்களின் நெஞ்சை உருகவைத்திருக்கிறார்! பால்லிய காலம் முதலே எம் எஸ் வியின் மெட்டுக்கள் எனது ரசனையை ஆட்கொண்டவை. எத்தனை எத்தனை பாடல்கள்! அந்த திரைப்படக் காட்சிகள் எல்லாம் காலத்தால் பழைமைகொண்டு மறைந்துவிட்டன. ஆனால் அவர் உருவாக்கிய இசை மட்டும் என்றும் குன்றாத இளமையுடன் இன்றும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

’ச ரி க ம ப த நி தான் என் மொழி’ என்று சொல்லியிருக்கிறார் எம் எஸ் வி. ஆனால் தமிழ் மொழியிலிருந்தும் தமிழ் கலாச்சாரத்திலிருந்தும் அவரை பிரித்து பார்க்கவே நம்மால் முடியாது. தனது பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வழியாக அரை நூற்றாண்டுகாலம் எம் எஸ் விஸ்வநாதன் இந்த கலாச்சாரத்திற்கு வழங்கிய கொடுப்பினைகள் சாஸ்வதமானவை. தமிழ் தாய் வாழ்த்தில் தொடங்கி தமிழ் மொழியினூடாக உலவிப் பரவும் அவரது இன்னிசை இன்றும் ஒவ்வொரு நாளும் நமது மனங்களை நிறைத்துக் கொண்டுதான் அல்லவா இருக்கிறது!

ஐயத்திற்கிடமில்லாமல் எம் எஸ் விஸ்வநாதன்தான் தமிழ் திரையிசையின் முதன்மையான இசையமைப்பாளர். அரை நூற்றாண்டுகாலம் தமிழ் இசைவாழ்க்கையை தீர்மானித்த இசை அவருடையது. ஐம்பதுகளின் ஆரம்பம் முதல் எண்பதுகளின் பிற்பகுதி வரை தன் படைப்பூக்கத்தின் உச்சத்திலேயே இருந்தார் எம் எஸ் வி. இத்தனை நீண்ட காலம் உச்சத்திலேயே இருந்த இன்னொரு திரைப்பட இசையமைபபளார் இந்தியாவில் இல்லை. அவரது காலகட்டம் முடிந்தபின்னரும் தன் படைப்புக்கள் வழியாக உயிர்த்துடிப்புடன் அவர் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்.

எம் எஸ் விஸ்வநாதன் தனக்குப் பரிச்சயமான இசைச் சூழலின் தொடர்ச்சியாக இருந்தவரல்ல. தன் பிறப்பும் வாழ்க்கைச் சூழலும் தனக்களித்த எல்லா கட்டுப்பாடுகளையும் அவர் தனது இசையில் வெகு சாதாரணமாக மீறினார். இது எப்படி உருவானது என்ற திகைப்பைத்தான் பெரும்பாலான அவரது படைப்புக்கள் ஏற்படுத்தின. இன்னிசையின் உருவாக்கத்தில் பல புத்தம்புதிய பாணிகளை கடைப்பிடித்து தென்னிந்தியத் திரையிசைக்கு உயிர் கொடுத்தவர் எம் எஸ் வி. அவர் வழங்கியது ஒரு புதுவகை இசை என்றே சொல்லலாம்!

மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நூற்றுக்கணக்கான பாடல்களை உருவாக்கியவர் எம் எஸ் வி. அம்மொழிகளின் கலாச்சாரச் சொத்துக்களாக இன்று கருதப்படும் எத்தனையோ பாடல்களை உருவாக்கியவர் அவர். தென்னிந்தியாவின் திரையிசை ரசனையையே வடிவமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன் என்று சொன்னால் அது மிகையல்ல. அவரது பாடல்களின் சற்றே மாறுபட்ட வடிவங்களில்தான் மீண்டும் மீண்டும் இங்கு திரைப்பாடல்கள் உருவாக்கப்பட்டன. அறுபதாண்டுகளுக்கு முன்பே, வரும்கால திரைப்பாடலுக்கான முன்மாதிரிகளை உருவாக்கியவர் அவர். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், ஷ்யாம், ஷங்கர் கணேஷ், கே ஜே ஜாய், ராஜன் நாகேந்திரா, விஜயபாஸ்கர், ஹம்ஸலேகா, சக்ரவர்த்தி, சத்யம், கீரவாணி என பெரும்பாலான தென்னிந்திய இசையமைபாளர்களில் எம் எஸ் விஸ்வநாதனின் ஆழமான தாக்கத்தை நாம் கேட்கலாம்.

அசாத்தியப் பாடகரும் நடிகருமாகயிருந்த சந்திரபாபுவுடன் இணைந்து அவருக்காக எம் எஸ் வி உருவாக்கிய பாடல்களை தமிழ் திரையிசையின் ஒரு தனி வகைமை என்றே சொல்வேன். துள்ளலான மேற்கத்தியப் பாணி இசையில் சுருதிமாற்றம் (Pitch Shift) போன்ற பல சுவாரசியமான பரீட்சைகளை அப்பாடல்களில் நிகழ்த்தியிருக்கிறார். அத்துடன் நாட்டுப்புற இசை, பைலா இசை என பல இசைப்பாணிகளின் கலவை அப்பாடல்களில் கேட்கலாம். உனக்காக எல்லாம் உனக்காக, சிரிப்பு வருது, எப்போ வச்சுக்கலாம், கண்மணி பப்பா, ஹலோ மை டியர் ராமி, கவலை இல்லாத மனிதன், பிறக்கும்போதும் அழுகின்றாய்… எத்தனையோ அற்புதமான பாடல்கள்!
 
எம் எஸ் விஸ்வநாதன் அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த பாடகர். ஆர்மோனியத்துடன் அமர்ந்தபோதெல்லாம் ஒரு இசையமைப்பாளர் என்பதை விட ஒரு பாடகராகவே இருந்தவர் அவர். ஒரே மெட்டை அவர் மீண்டும் மீண்டும் பாடியபோது ஒவ்வொருமுறையும் அது வேறுபாடுகளுடன் புதிதாக வந்தபடியே இருந்தன. அவர் கொடுத்தபடியே இருந்த மாற்றங்களை பின்தொடர்வதற்கு பாடகர்கள் திணறினார்கள். எம் எஸ் வி பாடும்போது வந்த நுண்ணிய அந்த மாற்றங்கள் எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாதவை.

அவர் பாடியதுபோல் பாடுவது முடியாத காரியம் என்றும் எந்தவொரு பாடகருமே அவர் பாடிக்காட்டிய அளவுக்கு உயிரோட்டத்துடன் பாடியதில்லை என்றும் அவர் பாடியதில் பத்து சதவீதத்தைக் கொண்டுவந்த பாடல்களே சிறந்த பாடல்களாக அமைந்திருக்கின்றன என்றும் நமது பின்னணிப் பாடகர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அவரது இசையில் பிற பாடகர்கள் பாடிய பாடல்களை மேடைகலளில் எம் எஸ் வி பாடியபோதெல்லாம் அவை மேலும் பலமடங்கு வீரியத்துடன் அமைந்ததை கவனித்திருக்கிறேன். பிற பாடகர்களும் பாடகிகளும் பாடிய அவரது புகழ்பெற்ற பல பாடல்களில் விஸ்வநாதனின் பாடும்முறையின் பலவீனமான நகலெடுப்புதான் இருக்கிறது என்பதே உண்மை.

பார் மகளே பார், எதற்கும் ஒரு காலம் உண்டு, ஆண்டவன் தொடங்கி, எனக்கொரு காதலி இருக்கின்றாள், சொல்லத்தான் நினைக்கிறேன், நீயிருந்தால் இந்நேரத்திலே, சிவ சம்போ போன்று அவர் குரலிலேயே வெளிவந்த பல தமிழ் பாடல்களும், உதிச்சால் அஸ்தமிக்கும், ஹ்ருதய வாஹினீ போன்ற மலையாளப் பாடல்களும் வல்லமைகொண்ட அந்த பாடும்முறையின் உதாரணங்கள். அளவற்ற மனோதர்மம் வெளிப்படுத்தும் ஒரு மரபிசைப் பாடகனின் கற்பனை வளத்தையும் ஒரு நாட்டுப்புற, சூஃபி, கவாலிப் பாடகனின் கட்டுக்கடங்காத குரல் பித்தையும் அவரது பாட்டில் உணரலாம்.

மூன்றுவயதில் தன் தந்தையை இழந்த விஸ்வநாதனின் இளமைக்காலம் துயரமும் புறக்கணிப்பும் மட்டுமே நிரம்பியது. முறையான கல்வி அவருக்கு வாய்க்கவில்லை.  தட்சிணை கொடுக்கப் பணமில்லாததால் குருவின் வீட்டில் ஏவல் வேலைகள் செய்து இசை பயின்றவர் அவர். வறுமை தாங்கமுடியாமல் இளவயதில் தனது தாயுடன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த நிலையிலிருந்து தன் இசை மேதமை ஒன்றையே உதவியாகக் கொண்டு உயர்ந்து நமது இன்னிசை மன்னராக ஆனவர் எம் எஸ் விஸ்வநாதன்.
  
தேசிய அளவிலான எந்தவொரு விருதும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு வழங்கப்படவில்லை. ஒரு பத்மஸ்ரீயோ, ஏன் ஒரு தமிழ்நாடு மாநில அரசு விருதோ கூட அவருக்கு கிடைக்கவில்லை. மிகவும் தாமதமாக 2012ல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரையிசை சக்கரவர்த்தி’ பட்டத்தையும் அத்துடன் கிடைத்த தங்கக் காசுகளையும் வாகனத்தையும் தவிர குறிப்பிடும்படியான எந்த அரசு அங்கீகாரமும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க மனோன்மணியம் சுந்தரனார் மற்றும் சத்தியபாமா பல்கலைக் கழகங்கள் வழங்கிய இரண்டு ’டாக்டர்’ பட்டங்கள் அவருக்கிருந்தும் தன்னை ’டாக்டர் எம் எஸ் விஸ்வநாதன்’ என்று அவர் எங்கேயுமே குறிப்பிட்டதில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டும்!

ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எம் எஸ் வியின் வாழ்க்கை ஒரு பாடப் புத்தகம். தெளிந்த புன்னகை, பிரகாசமான தோற்றம், பணிவு, எளிமை, கொண்டாட்டம், முதுமையிலும் குறையாத உற்சாகத் துடிப்பு, என்றுமே குன்றாத தன்னம்பிக்கை போன்றவற்றின் மொத்த உருவமாக வாழ்ந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். தான் எட்டிய உயரங்களைப் பற்றியான தற்பெருமைகளோ தனது வீழ்ச்சிகளைப் பற்றியான மன அழுத்தங்களோ அவரை ஒருபோதும் பாதித்ததில்லை. தனக்குக் கிடைக்காத விருதுகளுக்காக அவர் வருத்தப்படவுமில்லை. எதற்கு வருத்தப்படணும்? எம் எஸ் வி எனும் மாமேதையின் இசைக்குப் பரிசளிக்கும் தகுதி பெரும்பாலும் தொடர்புகள் வழியாகவே அடையப்படும் நம் நாட்டின் விருதுகளுக்கு இருக்கிறதா?

சொல்லில் அடங்காத இசை எனும் எனது முதல் புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம் எஸ் வி இவ்வாறு சொன்னார் ”தவிர்க முடியாத சில காரணங்களால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாத நிலைமையில்தான் நான் இருந்தேன். ஆனால் ஷாஜி என் வீட்டுக்கு வந்து ’கடவுளுக்கு நிகராக நான் மதிப்பவர் நீங்கள். நீங்கள் எனது புத்தகம் வெளியிடவில்லை என்றால் அந்த நிகழ்ச்சி நடத்துவதில் பொருளே இல்லை’ என்று சொன்னான். அது சொல்லும்போது அவன் கண்கள் ஈரமாயின. அவனைப் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்கள் மட்டும்தான் எனது சம்பாத்தியம். அவர்களே எனக்கு கிடைத்த பெரும் விருது”.

உண்மைதான். எம் எஸ் விஸ்வநாதனை நேரில் பார்தத பல தருணங்களில் நான் கண்கலங்கியிருக்கிறேன். துயரங்களில் கைவிடப்பட்டவனாக, தற்கொலையின் விளிம்பிலேயே நான் வாழ்ந்த காலங்களில் எம் எஸ் விஸ்வநாதனின் இசை என்னை எப்படியெல்லாம் உயிர் வாழவைத்திருக்கிறது என்பது எனக்கு மட்டும்தானே தெரியும். எதுவும் நெஞ்சம் மறப்பதில்லை… அது நினைவுகளை இழக்கும் வரை..