20170720

கம்யூனிஸ சினிமாவும் கம்யூனிஸமும் கேரளத்தில்


திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் புன்னப்ரா, வயலார் பகுதிகளில்  தென்னை நாரிலிருந்து கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தினக்கூலி ஒருவேளை உணவிற்கு கூட பற்றாமலிருந்தது. எதிர்த்து நின்று போராடுவதற்கோ  தட்டிக் கேட்பதற்கோ எந்த சக்தியும் இல்லாமலிருந்த அம்மக்களைத் தமது உணவிற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவோம் என்ற மனநிலைக்கு எழுப்பி ஒரு போராட்டத்தைத் துவங்கிவைத்தது அப்போது அங்கு துளிர்விட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அமைப்பு. வெகுவிரைவில் ஒரு பெரும் அலையாக அப்போராட்டம் மாறியது. கேரளத்தில் மக்களிடம் வரவேற்பு பெற்று இன்று வரைக்கும் ஆட்சியில் இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கப் புள்ளி இதுதான்.  1946ல் நிகழ்ந்த புன்னப்ரா - வயலார் மக்கள் எழுச்சி.

பிரட்டீஷாரின் உதவியுடன் இயங்கிக் கொண்டிருந்த திருவிதாம்கூர் அரசரின் திவான் சி பி ராமசாமி ஐயர் போலீசாரையும் ராணுவத்தையும் பயன்படுத்தி அம்மக்களுக்கு எதிராக போர் தொடுத்தார்.  உயர்ரக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ராணுவம் அம்மக்களை ஒடுக்கப் புறப்பட்டபோது அது ஓர் ஆயுதப் போராட்டமாக உருமாறியது. காய்ந்த தென்னை மட்டைகளை சீவி கூர்மை செய்து வேல்கம்புகளையும் ஈட்டிகளையும் உருவாக்கி அவற்றை ஆயுதமாகக்கொண்டு தொழிலாளிகள் ராணுவத்தை எதிர்த்தனர்.  ஆயிரக்கணக்கான  தொழிலாளிகள் கொல்லப்பட்டார்கள்.   போரில் திருவிதாங்கூர்  அரசு வென்றுவிட்டது. மக்களைப் பொறுத்தவரையில் அது தோற்றுப்போன ஒரு போராட்டம். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கேரளத்தில் கால் ஊன்றுவதற்கான வலுவான அடித்தளத்தை அது அமைத்துக் கொடுத்தது. ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க ஆரம்பித்தனர்.
  
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 9 ஆண்டுகள் கழித்துதான் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கேரள மாநிலம் உருவானது. ஆனால் 1950களின் ஆரம்பத்திலேயே அங்கு முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கொள்கைகளை வலியுறுத்துகிற நாடகங்களை நடத்தி கட்சியை பிரபலப்படுத்துவதற்காக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  ’நிங்ஙள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கி’ (நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள்) போன்ற நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இந்நாடகங்களும் அவற்றின் மிகவும் பிரபலமடைந்த பாடல்களும் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கை கேரள மக்களிடம் பரவியது. உழைக்கும் வர்க்கத்தினர், சாதி மத அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள், முதலாளிகளால் பெருவாரியாக சுரண்டப்பட்டவர்கள் என எல்லோருடைய ஆதரவும் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்து அக்கட்சி பெரிய அளவில் வளரத்துவங்கியது.

உயர்சாதி நாயர்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள், நம்பூதிரிகள் போன்றவர்களின் கையில்தாம் கேரளத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலப்பரப்பும் அப்போது இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த வறுமையான குடும்பங்கள் அந்நிலங்களின் ஓரத்தில் குடிசை போட்டு அந்த நிலக்கிழார்களுக்காக விவசாய வேலைகளைச் செய்துவந்தனர். இது கிட்டத்தட்ட அடிமை சமூகம் போல் வழிவழியாகத் தொடர்ந்த்து.  அக்குடும்பங்களின் வாரிசுகளுமே நிலக்கிழார்களுக்கு அடிமை வேலை செய்யும் சூழல் நிலவியது.   அக்குடும்பங்களின் பெண்கள் அடிமைப்பெண்களாக பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்கள். அந்த ஏழைகளுக்கு கல்வியும் முற்றிலுமாக மறுக்கப்பட்டது. நமது ஆட்சி வரும்போது இந்த அவலச் சூழலிலிருந்தெல்லாம் விடுதலை கிடைக்கும் என கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்தது.

1957ல் நடந்த கேரள அரசின் முதல் பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தோடு 60 தொகுதிகளில் வெற்றிபெற்று கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக முறையில் ஆட்சிக்குவந்த உலகின் முதன்முதல் அரசுகளில் ஒன்று அது.  உயர்குடிகள்,  பெரும் பணக்காரர்கள், உயர் சாதியினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் இதனை மிகவும் அஞ்சினர். அது நிலக்கிழார்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் பதட்டத்தை உண்டாக்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய தினக்கூலிகளுக்கு அவர்கள் உழைத்துவந்த நிலத்தின் ஒரு பகுதியை பதிவுசெய்து கொடுக்கும் தீர்மானத்தை கம்யூனிஸ்ட் அரசு நிறவேற்றியது.

அன்றுவரை கல்வி என்கின்ற ஒன்றை நினைத்தும் பார்க்காமல் தனக்குப் பின் தனது கூலிவேலைகளை செய்ய குழந்தைகளைத் தயார்படுத்தி வந்த சமூகங்களுக்கும் எளிதில்  ல்வி கிடைக்கும் வகையில் புது கல்விச் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு விஷயங்களும் நிலக்கிழார்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் கல்வி வியாபாரிகளுக்கும் பீதியை உண்டாக்கியது. நம் நிலம் அனைத்தையும் விரைவில் குடியானவர்களுக்கு எழுதி வைக்க நேரும் என்று அவர்கள் கூடிக்கூடி பேசிக்கொண்டனர். கத்தோலிக் தேவலாயத்தின் கட்டுப்பாட்டில்தான் பெரும்பாலான கல்வி அமைப்புகள் இருந்தன. கல்வி இனிமேல் நமது அதிகாரத்தின் கீழ் இருக்காது என்று அவர்கள் கலங்கினார்கள். அனைவரும் சேர்ந்துகொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இந்த போராட்டம் ‘விமோச்சன சமரம்’ என்று அழைக்கப்பட்டது.

பொது இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அரசு சார்பில் அவற்றைக் கலைக்க முனைகையில் துப்பாக்கிச் சூடு நடத்துகிற அளவிற்குப் போனது. ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஏழை கர்ப்பிணிப் பெண் ஒருத்தி கொல்லப்பட அது பெரிய தலைப்பாகப் பேசப்பட்டது. நடப்பு விஷயங்களை அறிந்துகொள்ள இருந்த ஒரே ஊடகமான செய்தித்தாள்கள் உயர்குடியினரின் உடமையில்தான் இருந்தன. அவர்கள் இந்தச் செய்தியை ஊதிப் பெரிதாக்கி அரசுக்கு எதிராகப் பயன்படுத்தினர். கர்ப்பிணி பெண் கொல்லப்பட்ட சம்பவத்தால் குழந்தைகள் முதல் பெண்கள்பெரியவர்கள் வரை கொதித்தெழுந்தனர். அந்தப் பெண்ணைக் கொன்றது கம்யூனிஸ்ட்காரர்கள் தாம் என்ற பேச்சு பொதுமக்களிடையே பரவலானது.

அங்கமாலி எனும் ஊரில் இருந்த காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழுபேர் இறந்து போனார்கள். இந்த இரு சம்பவங்களும் கம்யூனிஸ்ட்காரர்கள் கொலைகாரர்கள் என்ற பேச்சை பரவலாக்கியது. பொருளாதார சக்தி, ஊடக சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி இறுதியில் கம்யூனிஸ்ட் அரசை வீழவைத்தனர். மத்திய அரசின் உதவியோடு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் அமைப்பு  கேரளத்தில் மிகவும் வலுவான அரசியல் கட்சியாக மாறுவதற்கு  இச்சம்பவங்களும் உதவின.

கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் க்ளப் (KPAC) ஆரம்பித்த நாடகப் புரட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது என்று முன் சொன்னேன். அவர்களின் நாடகங்கள், பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமானது. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் கூட அப்பாடல்களை பாடித்திரிந்தனர்.  1950களின் மத்தியில் முதன்மையான வெகுஜன ஊடகமாக சினிமா பரவலாகியபோது அதில் பங்குபெற்ற பெரும்பாலான கலைஞர்கள் இந்நாடகங்களிருந்து புறப்பட்ட கம்யூனிஸ்டுகளாகவே இருந்தனர். KPACயின் நாடக ஆசிரியராகயிருந்த தோப்பில் பாஸி சினிமாத் திரைக்கதையாசிரியர் ஆனார். பாடலாசிரியரான பி.பாஸ்கரன் இயக்குநரானார். கவிஞரும் பிரபல பாடலாசிரியருமான வயலார் ராம வர்மா உயர்சாதியில் பிறந்தாலும் கொள்கைகளின் ஈர்ப்பால் கம்யூனிஸ்டானவர். ராம வர்மா என்ற தனது பெயரையே துறந்து புன்னப்ரா- வயலார் போராட்டத்தினால் பிரபலமடைந்த வயலார் எனும் தனது ஊரின் பெயரையே தன் பெயராக வைத்துக்கொண்டார். 

மலையாள சினிமாவில் கம்யூனிஸ்ட் அறிகுறிகளை முதலில் வெளிப்படுத்தின படம் 1954ல் வந்த  நீலக்குயில். பி.பாஸ்கரனும் பின்னர் செம்மீன் படத்தை இயக்கிய ராமு காரியாத்தும் சேர்ந்து இயக்கிய படம் அது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை ஒரு  உயர்சாதி நாயர் காதலித்து கர்ப்பமாக்கி, சாதிக்கும் சமூகத்திற்கும் பயந்து அப்பெண்ணை கைவிடுகிறான். அந்தப் பெண்ணோ குழந்தையை பெற்றதோடு கிட்டத்தட்ட தற்கொலை என்று சொல்லக்கூடிய நிலையில்  இறந்துபோகிறாள். உயர்சாதி நாயர் சொந்தசாதிப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து வாழத்துவங்குகிறான். ஆனால் இறுதியில் அவர்கள் அந்த குழந்தையை சொந்தக் குழந்தையாக ஏற்றுக்கொள்கிறார்கள். காலதாமதம் ஆனாலும் சாதி வேறுபாட்டை அவர்கள் மறுக்கிறார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. இத்தகைய புரட்சிகரமான சமூகக் கருத்துக்களை யோசிக்கக் கூட முடியாத அந்த காலகட்டத்தில் வெளிவந்து பெரும் வெற்றியடைந்தது நீலக்குயில். கேரளத்தின் கம்யூனிஸ்ட் சிந்தனைத் துவக்கத்தில் நீலக்குயில் ஒரு முக்கியமான திரைப்படம்.

ஆட்சி கலைக்கப்பட்டாலும் கட்சி வளர்கிறது. கேரளத்தில் நக்சலைட் இயக்கங்கள் வந்திறங்குகின்றன. கொள்கைக்காக கொலை செய்தாலும் தவறில்லை எனும் நக்சலைட் நோக்கில் பெரும்பணக்காரர்கள் சிலர் கொல்லப்படுகிறார்கள். இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி  சி.பி.ஐ, சி.பி.எம் என இரண்டாகப் பிரிகிறது. இவையெல்லாமே கேரளத்தின் மிகமுக்கியமான அரசியல் நிகழ்வுகளாக மாறுகின்றன. இதே காலகட்டத்தில் பெரும்பாலான மலையாளிகள் விரும்புகிற ஊடகமாக சினிமா மாறுகிறது. மக்கள் அதிகமாக விரும்புகிற ஊடகம் என்பதால்  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சினிமாவை ஒரு கொள்கை பரப்புச் சாதனமாக பயன்படுத்த ஆரம்பிக்கிறது.

முதன்முறையாக ஒரு கம்யூனிஸ்ட் கதாநாயகனை முன்னிறுத்திய படம் கே வின்சென்ட் இயக்கிய ‘துலாபாரம்’. முதலில் KPACக்காக தோப்பில் பாஸி எழுதிய நாடகம் அது. துலாபாரம் மலையாளத்தில் பெரும்வெற்றி பெறுகிறது. ஒரு கம்யூனிஸ்டாக கதாநாயகன் எடுக்கிற முடிவுகளால் அவரது மனைவியின் வாழ்க்கை மீளமுடியாத துயரத்திற்கு போய்விடுகிறதுதான் கதை. கட்சிக்கான போராட்டத்தில்தான் அவர் கொல்லப்படுகிறார். தன் குடும்பத்திற்காக அல்ல இந்த சமூகத்திற்காக வாழவேண்டும் என்பதுதான் முன்வைக்கப்படும் கருத்து. பெரும் வெற்றியையும் பல விருதுகளையும் அடைந்த படமாக இன்றுவரைக்கும் துலாபாரம் நினைவுகூரப்படுகிறது.

துலாபாரம் போன்ற படங்களுக்குக் கிடைத்த பெரும் வெற்றி சினிமாவை வணிகமாக மட்டும் பார்க்கக்கூடிய முதலாளிகள் கவனிக்கத்துவங்கினர்.  கம்யூனிஸ்ட் கருத்துகள் உள்ள படங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்து பெரும் வசூலை ஈட்டுவதை கண்டுகொண்ட வணிக சினிமா நிறுவனங்கள் ’கம்யூனிஸ்ட் வணிகப் படங்களை’ எடுக்க ஆரம்பித்தன. கட்சித் தொண்டர்கள் பத்து சதவீதம்  பேர் பார்த்தால் கூட போட்ட பணம் கிடைத்துவிடுமே என்ற எண்ணத்தில் பல கம்யூனிஸ்ட் படங்கள் எடுக்கப்பட்டன. புன்ன்பரா-வயலார் மக்கள் எழுச்சியை மையமாக வைத்தே புன்ன்பரா-வயலார் என்ற படம் எடுக்கப்படுகிறது! செக்ஸ் போன்ற வணிக சமாச்சாரங்கள் எல்லாம் கலந்து எடுக்கப்பட்ட மசாலாப் படமாகத்தான் அது இருந்தது. 1952ல் வெளிவந்த KPACயின் நாடகம்  ’நிங்ஙள் என்னை என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ ஐ 1970ல் சினிமாவாக எடுத்தது  கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிரான சினிமா முதலாளி ஒருவர்தான்! 

மூலதனம் என்ற படம் வந்தது. நீலக்குயில் படத்தை எடுத்த பி பாஸ்கரந்தான் இந்தப் படத்தையும் எடுத்தார். இது முற்றிலும் கம்யூனிஸ்ட் சிந்தனைகளைக் கதைக்களமாக கொண்ட படம். சேதுமாதவனின் இயக்கத்தில் 1971ல் வெளியான ’அனுபவங்கள் பாளிச்சகள்’ திரைப்படம் கம்யூனிஸ்ட் கதைக்கருவுடன்  கலை ரீதியாகவும் மிக முக்கியமான படம்.  இப்படம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கொள்கைக்கும் இடையே நடக்கும் மானுடப் போராட்டத்தை மிகத் தீர்க்கமாகப் பேசியது. அதன் பிறகு ’விமோச்சன சமரம்’, ’நீலக்கண்ணுகள்’ போன்ற படங்கள் வந்தன. ஆனால் ’அனுபவங்கள் பாளிச்சகள்’ படத்தோடு ஒப்பிடுகையில் இப்படங்கள் தரக்குறைவானவையாகவே அமைந்தன.

பி.ஏ.பக்கர் இயக்கிய கபனி நதி சுவந்நப்போள்’ முழுக்க முழுக்க நக்சலைட் கொள்கைகள் சம்பந்தமான படம். கபனி நதி என்பது கேரளாவின் வயநாடு பகுதியில் ஓடக்கூடிய நதி. அப்பகுதியில் சில நிலக்கிழார்களை நக்சலைட்டுகள் கொலை செய்தனர். அந்நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அன்றுதான் இந்தியாவில் ஊரடக்கு சட்டத்தை இந்திரா காந்தி அமல்படுத்தினார். அரசியல் கருத்துக்களுள்ளவர்களால் அசையவே முடியாத அந்த சூழ்நிலையில் அங்கும் இங்கும் மறைந்து மறைந்து மறைமுகமாகத்தான் இந்தப் படத்தை எடுத்து முடித்தார்கள். அதில் கதாநாயகனாக நடித்தவர் பிற்பாடு பல கலைப்படங்களை இயக்கிய, மலையாளத்தின் இடதுசாரி இயக்குனர்களில் முக்கியமானவரான டி.வி.சந்திரன். வணிக நோக்கங்கள் எதுவும் இல்லாமல் எடுக்கப்பட்ட ’கபனி நதி சுவந்நப்போள்’ பரவலாக பேசப்பட்டது.

1980களில் கம்யூனிஸ படங்கள் என்ற போர்வைக்குள் பல மோசமான வணிகப்படங்கள்  வெளிவந்தன. கதாநாயகன் கம்யூனிஸ்டாக இருப்பான். படம் படுமோசமாக இருக்கும். சண்டை, உடை குறைப்பு, ஆடல் பாடல் என மசாலா படத்திற்குண்டான அனைத்தும் விஷயங்களும் இருக்கும். மசாலா இயக்குனர்கள் பலர் இத்தகைய ’கம்யூனிஸ்ட்’ சினிமாக்களை எடுத்தனர். ஸ்போடனம், கொடுமுடிகள், ரக்த ஸாக்‌ஷி போன்றவை உதாரணங்கள். அச்சமயத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த ’முகாமுகம்’ திரைப்படம் மட்டுமேதான் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட் படமாக இருந்தது. ஆனால் அப்படம் அவரது மற்ற படங்களைப் போல பேசப்படவோ விருதுகளை வெல்லவோ இல்லை. இருந்தும் கம்யூனிஸ சினிமாவில் முக்கியமான படம் ’முகாமுகம்’.

மலையாள சினிமாவில் அஞ்சரைக்குள்ள வண்டி, சத்ரத்தில் ஒரு ராத்ரி என்பவை போன்ற செக்ஸ் படங்கள் எடுக்கிற இயக்குநர்கள்கூட ’கம்யூனிஸ்ட்’ கொள்கைப் படங்களை எடுத்தார்கள் என்பதுதான் வேடிக்கை. 1986ல் வந்த சகாவு போன்ற படங்கள் உதாரணம்.  கிட்டத்தட்ட செக்ஸ் படமேதான் ஆனால் பெயர் மட்டும் சகாவு (தோழர்)! மலையாளத்தின் கம்யூனிஸ்ட் சினிமா இப்படியெல்லாம் பயணப்பட்டது. மாற்றுவின் சட்டங்ஙளே என்று ஒரு படம். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மலையாள வடிவம். வணிக வெற்றியை மட்டுமே குறியாக வைத்து கம்யூனிஸ்ட் கொள்கை போன்ற பாவனைகள் வைத்து பல படங்கள் வெளிவந்தன.

லெனின் ராஜேந்திரன் என்ற இயக்குனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர். கம்யூனிஸ்ட் கொள்கைகளை முன்னிறுத்திய மீனமாசத்திலெ சூர்யன் என்ற படத்தை அவர் எடுத்தார். வணிக வெற்றியும் பெற்று கலைப்படமாகவும் இன்று வரை அறியப்படும் பஞ்சாக்னி’ எனும் படம் வந்தது. எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி ஹரிஹரன் இயக்கிய படம். ஒரு பெண் நக்சலைட்டின் வாழ்க்கையை மையமாகக்கொண்ட கதை. மோகன்லால் கதாநாயகனாவும் கீதா கதாநாயகியாகவும் நடித்தனர். அதுவரை வந்த கம்யூனிஸ்ட் படங்களிலெல்லாம் கதாநாயகன்தான் கம்யூனிஸ்ட். அவன்தான் புரட்சியாளன். ஆனால் அஜிதா என்ற கேரளத்து நக்சலைட் போராளிப் பெண்ணின் சாயலில் அமைக்கப்பட்டிருந்த கதாநாயகிதான் இந்தப்படத்தில் புரட்சியாளர்.

மம்முட்டி, மோகன்லாலின் ஆரம்ப காலத்திலும் பல கம்யூனிஸ்ட் படங்கள் வெளிவந்தன. இருவரும் ஒன்றாக நடித்து, ஐ.வி. சசியின் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த அடிமகள் உடமகள் என்ற படம் உதாரணம். வணிகப்படம் என்றாலும்  ஒரு தொழிற்சாலையில் நடைபெறுகிற வேலைநிறுத்தப் போராட்டத்தை கதைக்களமாக வைத்து பெரிய வணிக சமரசங்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். வெற்றிபெற்ற திரைப்படம் கூட. மம்முட்டியும் மோகன்லாலும் சூப்பர் ஸ்டார்களாக மாறிய பின்னரும் அவர்கள் கம்யூனிஸ்ட் சினிமாக்களில் நடித்தனர். 1990ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து ’லால் சலாம்’ என்ற படம் வெளியானது. இரண்டு இளவயது நண்பர்கள், இருவருமே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் பணம் சம்பாதிப்பதற்காக வேறு வழியில் செல்கிறார். அதனால் உண்டாகிற பிரச்சினைகள். அந்தப்படமும் வெற்றி பெற்றது.

’ஓர்மகள் உண்டயிரக்கணம்’ எனும் படத்தில் கதாநாயகனாக மம்முட்டி நடித்திருந்தார். கட்சிக்காக எந்தளவு தியாகம் வேண்டுமானாலும் செய்யக்கூடிய பாத்திரம்.  1959ல் நடந்த ’விமோச்சன சமர’த்தை கதைக்களமாக வைத்து 1995ல் டி வி சந்திரன் இந்த படத்தை இயக்கினார்.  விமோச்சன சமரம் எப்படிப்பட சூட்சிகளால் வெற்றி பெற்றது, கொள்கைக்காக வாழ்ந்தவர்கள் எப்படி தோற்றுப் போனார்கள் என்பதுதான் கதை. நல்ல படமாக இருந்தாலும் அது பரவலாகக் கவனிக்கப்பட்டு பேசப்படவில்லை. மலையாள கம்யூனிஸ்ட் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இந்தப்படத்தைத் தயக்கமின்றிச் சொல்வேன். லால் சலாம் எடுத்த வேணு நாகவள்ளி மீண்டும் மோகன்லாலை வைத்து ’ரக்த காக்‌ஷிகள் சிந்தாபாத்’ என்ற படத்தை எடுத்தார். கம்யூனிஸத்தை எவ்வளவு வணிகமாக காட்டமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இப்படத்தைச் சொல்லமுடியும். 

கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசின் முதலமைச்சராக இருந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட். அவருக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த ஒரு ஏழை நெசவாளி. கட்சி ஊழியன். நினைவுகளற்ற முதுமையில் தள்ளாடும் அவருக்கு நம்பூதிரிப்பாட் இறந்துபோனார் என்று தொலைக்காட்சி செய்தி கேட்டவுடன் தனது பழைய காலகட்ட கட்சி வாழ்க்கையின் நினைவுகள் வருகின்றன. 2001ல் பிரியநந்தன் இயக்கத்தில் வெளியான நெய்த்துக்காரன் படம் அது. முரளி கதாநாயகனாக நடித்திருப்பார். சிறந்த நடிகனுக்கான தேசிய விருதையும் அப்படம்வழியாக அவர் வென்றார். கேரளாவின் அப்பழுக்கற்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்று சொல்லப்படும் ஏ.கே.கோபாலனின் வாழ்க்கை வரலாற்றை வைத்துக்கொண்டு 2007ல் ஏ கே ஜி எனும் படத்தை எடுத்தார் ஷாஜி என் கருண். எடுத்தார். அவ்வளவுதான்!

மதுபால் என்ற இயக்குனரின் முதல் படமான ’தலப்பாவு’வில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்தார். 2008–ல் வெளியான இப்படத்தின் மையப் பாத்திரம் ஒரு நக்சலைட். பல பதிற்றாண்டுகளுக்கு முன்பு வயநாடு பகுதியில் வர்கீஸ் என்ற நக்சலைட்டை ஒரு போலீஸ்காரர் ஏமாற்றி சுட்டுக்கொன்றார். ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவரவில்லை. வர்கீஸை காணவில்லை என்று மட்டும் சொல்லப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் ”நான்தான் வர்கீஸை ஏமாற்றி சுட்டுக் கொன்றேன், இந்த இடத்தில் தான் சுட்டேன்” என்று பொதுவெளியில் பகிரங்கமாகச் சொன்னார்.  அந்தக் காலத்தில் கேரளத்தில் பரவலாகப் பேசப்பட்ட நிகழ்வு இது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ’தலப்பாவு’. 2013ல் வெளியான லெஃப்ட் ரைட் லெஃப்ட் எனும் படம் மறைந்த மகா நடிகர் கோபியின் மகனான முரளி கோபி எழுதி அருண்குமார் அரவிந்த் இயக்கினார். கலைரீதியாக தரமான இப்படம் கேரளத்தில் கட்சி கம்யூனிஸம் சந்த்தித்த மாபெரும் வீழ்ச்சிகளை சுட்டிக்காட்டியது. தீவிர கட்சி கம்யூனிஸ்டுகள் இப்படத்தை முற்றிலுமாக புறக்கணித்தார்கள் என்பதையும் சொல்லியாகவேண்டும்.
  
’வசந்தத்தின்டெ கனல் வழிகள்’ என்ற படம் சமுத்திரகனி நாயகனாக நடித்து வெளியானது. பி.கிருஷ்ணப்பிள்ளா என்ற கம்யூனிஸ்ட் தலைவர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து, கொள்கைக்காக வாழ்ந்தவர். இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவராக மதிக்கப்படுகிறவர். மிகவும் ஏழ்மையிலேயே வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாறு என்றுதான் இப்படம் வெளியானது. ஆனால் இதுவும் மோசமான கம்யூனிஸ்ட் சினிமாக்களின் வரிசையில் சேரக்கூடியதே. பி.கிருஷ்ணப்பிள்ளா போன்ற ஒரு தலைவரின் வாழ்க்கையை இவ்வளவு மோசமாக எடுத்திருக்கக்கூடாதே என்ற எண்ணம்தான் படம் பார்க்கும்பொழுது தோன்றியது. கம்யூனிஸம் சம்பந்தமான படங்கள் கடந்த பத்தாண்டுகளில் மலையாளத்தில் மிகக் குறைவாகவே வந்தன. ஆனால் இந்த ஆண்டில் இதுவரைக்கும் மூன்று படங்கள் வந்திருக்கின்றன. ஒரு மெக்சிக்கன் அபாரத, சகாவு, காம்ரேட் இன் அமேரிக்க (சி.ஐ.ஏ). இவற்றைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.

இதுவரை மலையாள சினிமா உலகில் கம்யூனிஸம் சம்பந்தமாக வெளிவந்த திரைப்படங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இதுதான். இதில் ஒருசில படங்களைத் தவிர உண்மையிலேயே கம்யூனிஸ சிந்தனைகளின்மேல் பற்றுக்கொண்டடு எடுக்கப்பட்ட படங்கள் குறைவு. பெரும்பாலான படங்கள் கம்யூனிஸத்தை கடவுச் சீட்டுகளாக மாற்றும் வணிக நோக்கில் எடுக்கப்பட்டவை.

எந்தவொரு கொள்கையாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அதன் நடைமுறை செயல்திறனும் நடைமுறை வெற்றியும்தான் முக்கியமானவை. பதினேழு வயதிலிருந்தே ஆழமான கம்யூனிஸ்ட் ஆதரவாளனாகயிருந்தவன் நான். ஆனால் அந்த நம்பிக்கை இன்று எனக்கு இல்லை. ஏனெனில் கேரளாவிலும் பெங்காலிலும் திரிபுராவிலும் இதுவரைக்கும் இயங்கிய கம்யூனிஸ்ட் ஆட்சிகளை நான் உற்றுப் பார்த்திருக்கிறேன். தமக்கு கிடைத்த அதிகாரத்தை இந்திய கம்யூனிஸ்டுகள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.

’இடதுசாரிகள் வரும், அனைத்தும் சரியாகும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சொல்லும்படியாக எதையுமே சரிசெய்யவில்லை என்றே நினைக்கிறேன். இடதும் வலதும் மாற்றி மாற்றி ஒவ்வொரு ஐந்தாடுகளிலும் கேரள மாநிலத்தை பங்கு போடுகிறார்கள். இடதின் திட்டங்களை வலது இல்லாமல் செய்கிறது. வலதின் திட்டங்களை இடது ஒத்திப்போடுகிறது. இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மட்டுமே செயல்படுகின்றன.

ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் தாழ்த்தப்பட்டுகிறவர்களுக்கும் சமநீதி கிடைக்க வேண்டும் என்ற அலாதியான மானுடக் கனவில் உருவாக்கப்பட்ட மகத்தான சிந்தனை கம்யூனிஸம். குடியானவன் அடிமையல்ல, அவனுக்கும் சொந்தமாகக் காணி நிலமாவது கிடைக்க வேண்டும், அவனது குழந்தைகளும் சீரான கல்வி பெறவேண்டும் என மிகத் தீர்க்கமாக  மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு அது. ஆனால் அறுபதாண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளைப்போல் எல்லாம் பகல் கனவுகளாகவே நீடிக்கின்றன.

நன்றி : படச்சுருள் சினிமா மாத இதழ்
ஓவியம்: ரவி பேலெட்

shaajichennai@gmail.com