20210315

பில்லி எனும் பேரழகியின் வாழ்க்கை

Billie Holiday


எங்கே பிறந்தாள் என்று தெரியவில்லை. கைக்குட்டிப் பருவத்திலேயே தாமிரபரணிக் கரையிலுள்ள சேரன்மகாதேவி ஊரின் ஒரு குடும்பம் அவளை வாங்கி வளர்த்தது. அவர்கள் அவளுக்கு வைத்த பெயர் பைரவி. அதைத் தவிர ஒருவயது வரைக்குமான அவளது வாழ்க்கை எப்படி இருந்தது என்று யாருக்கும் வெளிச்சமில்லை. ஒரு வயதானதும் அவர்கள் அவளை ஒரு நாய் வியாபாரிக்கு விற்றார்கள். அந்த வியாபாரி அவளை எனது நண்பரும் இயற்கை விவசாயியுமான பெலிக்ஸிற்கு விலைபேசி விற்றார்.

பல இனத்திலான நாய்களை வளர்த்து இனவிருத்தி செய்து விற்பதும் தனது விவசாயத்தின் ஒருபகுதியாகச் செய்து வந்தார் பெலிக்ஸ். தன்னிடம் வந்து சேர்ந்த அழகான அந்த லாப்ரடார் பெண் நாய்க்கு அவர் ‘பெல்லி’ என்று பெயர் வைத்தார். பைரவியிலிருந்து பெல்லியாக மாற அவளுக்கு அதிகநாள் தேவைப்படவில்லை. தடுப்பூசி போட அவளைப் பக்கத்திலுள்ள சிறு நகரத்திற்குக் கொண்டுச் சென்றார் பெலிக்ஸ். அத்தகைய ஒரு சூழலையோ ஆள் கூட்டத்தையே அதுவரைக்கும் பார்த்திராத பெல்லி அவரது கையிலிருந்து தப்பித்து ஓடிவிட்டாள்.

முதலில் ஒரு ஆட்டோ ரிட்சாவில் ஏறி அமர்ந்தாள். பின் அங்கிருந்து இறங்கியோடி ஒரு மோட்டார் பைக் பயணியின் குறுக்கே பாய்ந்து அவரை நடுரோட்டில் குப்புற விழவைத்து,  பலரைப் பயமுறுத்தி அங்குமிங்கும் ஓடினாள். அவளைத் துரத்திப்பிடித்து தடுப்பூசி எடுத்து வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் வீட்டிலோ மிகவும் நல்ல பிள்ளையாக பல நாய்கள்ஆடுகள், மாடுகள்கோழிகள், வாத்துகளுடன் கலகலப்பாக வாழ்ந்தாள்.

அவள் வழியாக லாப்ரடார் நாய்க்குட்டிகளைப் பிறப்பித்து விற்பனை செய்யலாம் என்ற ஒரே திட்டத்துடன் அவளை வாங்கிய பெலிக்ஸுக்கு விரைவில் ஏமாற்றமளிக்கும் அந்த உண்மை தெரிய வந்தது. குட்டிபோட முடியாத உடல் சிக்கல் கொண்டவள் பெல்லி. ஆனால் அதற்குள் அக்குடும்பத்துடன் நெருங்கிப்போன பெல்லியை அவர்கள் பாதுகாத்து வளர்த்தனர். அக்காலத்தில் ஒருநாள் அவர்களது தோட்டத்து வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்ற நான் பெல்லியைப் பார்த்து மிகவும் வியந்துபோனேன்.  

நான் வளர்த்துவந்த தாமோதரன் (தாமி) என்கின்ற ராஜபாளையம் ஆண் நாயின் குண இயல்புகளுக்கு நேர்மாறானவளாக பெல்லியைக் கண்டேன். தாமிக்கு ஒன்று முழுமையான அன்பு அல்லது முழுக் கோபம், இரண்டு மட்டுமே. இவளோ சாந்த சொரூபி. கோபம்சத்தமாகக் குலைத்தல்உறுமல் எதுவுமில்லை. ஆயிரம் வார்த்தைகள் பேசும் அழகான கண்கள். என்னை முதலில் பார்த்தவுடன் தனது உணவுப் பாத்திரத்தைக் கடித்து எடுத்துக்கொண்டு என்முன் வைத்துவிட்டு 'இதுல ஏதாவது சாப்பாடு போடுங்க பிரதர்'  என்று என்னைப் பார்த்தாள். பெலிக்ஸ் அவளுக்கு சரியாகச் சாப்பாடு போடுவதில்லை என்றே எண்ணினேன். அவரிடம் இதைக் கேட்டபோது ‘எத்தனைமுறை சாப்பாடு வைத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவாள். முடிந்தவுடன் மீண்டும் கேட்பாள்’ என்று சொன்னார்.

என்னிடமிருந்து சாப்பாடு எதுவுமே வரப்போவதில்லை என்று அறிந்த உடனே விளையாட்டுப் பொம்மை போன்ற ஏதோ ஒன்றைக் கடித்து எடுத்து என்னிடம் வந்து துள்ளிக்குதித்து விளையாட அழைத்தாள். அக்குடும்பத்துடன்  உணவருந்தும் நேரத்தில்கூட எனது மனதில் பெல்லி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குத் தர இயலுமா என்று பெலிக்ஸிடம் கேட்க விரும்பினேன். ஆனால் அவர் அதை எதிர்மறையாக எடுத்தால் என்ன செய்வது? நான் கேட்கவில்லை.  

அந்த நாட்களில் நான் தொடர்ந்து பயணங்களில் இருந்தேன். வீட்டில் இருப்பது குறைவு. வயதுக்கு வந்த தாமியின் அட்டூழியங்கள் எல்லை கடந்தது. சுவரைக் குதித்து தெருவில் இறங்கி சரவேகத்தில் ஓடுவான். அந்நியர்கள், பிற நாய்கள்பூனைகள்மேலே பறக்கும் பறவைகள் எதையுமே அவனுக்குப் பிடிக்காது. காதடைக்கும் ஓலத்துடன் குலைத்துக்கொண்டு நாலா பக்கமும் ஓடுவான். அவன் பாய்ந்து வருவதைக்கண்டு பயந்தோடிய சில குழந்தைகள் சறுக்கி விழுந்து கைகால் அடிபட்டது. கட்டிப்போடும் தோல்வாரை கணநேரத்தில் கடித்து முறிப்பான். திடமான சங்கிலியில் கட்டிப்போட்டாலும்  அதையும் எப்படியாவது உடைப்பான். உடைக்க முடியவில்லை என்றால் அவிழ்த்து விடும் வரை ஓ....வ் ஓ....வ் என்று கத்திக்கொண்டே இருப்பான்.

வீட்டிலிருப்பவர்களால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருமுறை மும்பையில் வேலை விஷயமாகச் சென்ற என்னை தாமியின் அன்றைய பயங்கரச் செயல்களைச் சொல்லி பதற்றத்துக்கு ஆளாக்கி, வேலையே செய்ய விடாமல் பாதியில் திரும்பி வரவைத்தனர். இதை நான் பெலிக்ஸிடம் சொன்னபோது விசாலமான இடத்தில் ஓடியாடி விளையாடவேண்டிய ராஜபாளையம் நாயை சென்னை மாநகர வீட்டின் சிறு முற்றத்தில் அடக்கி வைக்க முடியாது என்றும் அவனைக் கடையல்லூர் பக்கத்திலுள்ள தனக்குத் தெரிந்த ஒருவரின் நண்பருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் தென்னை மரத்தோப்புக்குள்ளே கொண்டுபோய் விடலாம் என்றும் ஆலோசனை சொன்னார். தாமியைப் பராமரித்து வீட்டிலேயே இருப்பதா இல்லை வேலைக்குப் போவதா என்ற நிலைமையில் நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு அவனை அங்கேயே விடலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த அடங்காப் பிடாரியை ஒரு பகல் முழுவதும் காரில் அடக்கி வைத்துக்கொண்டுப்  பயணித்து மாலை நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். அங்கே சென்றபோது எனக்கு எலலாமே தலைகீழாகத் தெரிந்தது. பெரிய தென்னந்தோப்பு ஒன்றை ஒட்டி முள்வேலி கட்டிப் பிரித்த அம்பதுக்கு அம்பது அடிக் கொட்டாய் ஒன்றில் கசாப்புக்கான ஆடுகளை கூட்டமாக நிறுத்தியிருந்தனர். அவற்றை திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஒடுங்கிப்போன இரண்டு நாட்டு நாய்களையும் தடித்த ஒரு ராட்வேய்லர் நாயையும் கட்டிப்போட்டிருந்தார்கள்.  

அவற்றைப் பார்த்தவுடன் தாமி ஆகாயம் நடுங்கக் குலைக்க ஆரம்பித்தான். அந்நாய்களும் விட்டபாடில்லை. எட்டுத்திக்கும் ஒரே நாய் குலைத்தல் சத்தம் மட்டுமே எதிரொலித்தது. "இதுவா ரெண்டு ஏக்கர் தென்னந்தோப்புராஜபாளையம் நாயால மற்ற நாய்களுடனே இருக்க முடியாதுன்னு தெரியாதா"என்று நான் கேட்டதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பெலிக்ஸுக்கும் மிகுந்த ஏமாற்றம். அவரிடம் சொன்னது ஒன்று நேரில் நடந்தது இன்னொன்று. இதனிடையே என்னுடைய உதவியாளர்கள் தாமியை அந்த ஆட்டு மந்தைக்குள்ளே கட்டிப்போட்டார்கள். இரண்டு நிமிடத்தில் அந்தச் சங்கிலியை அறுத்து உடல் முழுவதும் பதைபதைத்து நடுங்கிக்கொண்டு என்முன் பாய்ந்து வந்து நின்றான். அவன் என் முகத்தைப் பார்த்த பார்வை இருக்கே! "என்னை இங்கே தள்ளிவிட்டுப் போகக் கொண்டு வந்தியாடா நாயே"பேச்சிருந்தால் நிச்சயமாக அப்படித்தான் கேட்டிருப்பான். நான் அவனை ஆறத்தழுவி கைகளில் தூக்கிக்கொண்டு காரில் ஏறி திரும்பி சென்னைக்கே கிளம்பினேன். அந்தப் பயணம் ஏற்படுத்திய பதற்றத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பத் தாமிக்குப் பல வாரமாகியது. வாடகைக் காரில்தான் தாமியைக் கொண்டுபோனோம். தன்னால் நண்பனின் பல்லாயிரக் கணக்கான  பணமும் மூன்று நாட்களும் வீண்போனதே என்ற குற்றவுணர்வு பெலிக்ஸுக்கு.

விரைவில் ஒருநாள் என்னை அழைத்தார். "அடுத்து இந்தப் பக்கம் எப்ப வர்றீங்க?" அடுத்தவாரம் மதுரை வருகிறேன் என்று சொன்னதும் "காரில் தானே வர்றீங்க. நேரா வீட்டுக்கு வாங்க. பெல்லியைக் கூட்டிட்டுப் போயிடுங்க. அவளை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று தெரியும். தனிமைதான் தாமியை இவ்வளவு பிரச்சினை பண்ண வைக்குது. ஒரு பெண் நாய் வந்தால் எல்லாம் சரியாயிடும்" என்று சொன்னார். எனக்கு எல்லையற்ற சந்தோஷம். தாமியின் தனிமை தீருதோ இல்லையோ பெல்லி எனக்குக் கிடைக்கப் போகுதே! மதுரைப் பயணத்தை சற்றே முந்திவைத்துக்கொண்டு கடையத்துக்குச் சென்று பெல்லியைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

பெல்லி என்கின்ற பெயர் எனக்குப் பிடிக்கவில்லை. ஆங்கிலத்தில் வயிறு, தொப்பை, வீக்கம் என்றெல்லாம் பொருளுடைய சொல். பெயரை மாற்றவேண்டும். பைரவியிலிருந்து பெல்லி ஆக மாறியவளை இன்னொரு பெயர் வைத்து கொடுமைப்படுத்தவும் எனக்கு மனமில்லை. ஆதலால் பெயர் மாறியதாக அவளுக்குத் தெரியாதவண்ணம் ‘பில்லி ஹாலிடே’ என்று அவளுக்குப் பெயரிட்டேன். அது எனது அபிமான அமெரிக்கப் பாடகியின் பெயர். இவளும் குறைந்தவளா என்னகனடா நாட்டைச் சேர்ந்த நீற்று நாய்கள் (Canadian Water Dogs) தானே லாப்ரடார்களின் மூதாதையர்கள். பில்லி என்கின்ற பெயர் கனக்கச்சிதமாக அவளோடு ஒட்டிக்கொண்டது. பில்லீ.... என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பாய்ந்து வருவாள். அப்போது நமது கையில் உணவு வகைகளோ விளையாட்டுப் பொருட்களோ இருந்தால் மகிழ்ந்துக் குதிப்பாள்.

பில்லியின் வருகை ஆரம்பத்தில் தாமிக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பலமுறை அவளைக் கடித்துக் குதறினான். ஒருமுறை அவளது அழகாகத் தொங்கும் இடது காதைப் பலமாகக் கடித்துக் காயப்படுத்தினான். அதற்குப் போட்ட களிம்பு மருந்து பலன்தராமல் காது அழுகத்தொடங்கியது. இறுதியில் அக்காதின் கீழ்பகுதியை அறுவை சிகிச்சை செய்து நீக்கவேண்டியதாயிற்று. பின்னர் எப்போதோ தாமி பில்லியின் மேல் காதலில் விழுந்தான் எனப்பட்டது. ஆனால் அடிக்கடி அவனது ஆணாதிக்கமும் அக்கிரமமும் தலைதூக்கிய வண்ணமே இருந்தன. பில்லி அவனை ஒருபோதும் காதலித்ததாக எனக்குத் தோன்றவில்லை. இருந்தும் தனக்குக் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று அவள் மிகவும் ஆசைப்பட்டாள் என்றே படுகிறது. கருத்தரிக்கவே முடியாதவள் என்று சொல்லப்பட்ட பில்லி இரண்டு முறை கருத்தரித்து குட்டிபோடும் நேரம் நெருங்குவது போன்ற அறிகுறிகளைக் காட்டினாள்! மண் தோண்டி தனது குட்டிகளை பத்திரமாக வைக்க இடத்தையெல்லாம் தயார் செய்தாள். ஆனால் இருமுறையும் அவளுக்குக் கருக்கலைந்து போனது.

பில்லியின் விடா முயற்சி இறுதியில் பலனளித்தது. ஐந்து குட்டிகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் பரிதாபமா அளவில் மிகச் சிறிய, சுண்டெலியின் எடைகொண்ட குட்டிகள் பிறந்தன. எல்லாமே செத்துப் போயின. அக்குட்டிகளை அங்கிருந்து அகற்ற பில்லி எங்களை  அனுமதிக்கவில்லை. தனது உடலால் அவற்றை மறைத்துக்கொண்டே படுத்தாள். ஒரு வழியாக நான்கை அகற்றினோம். ஐந்தாவது குட்டியை விட்டுத் தராமல் இரவு முழுவதும் அவளே கடித்துப் பிடித்துக்கொண்டிருந்தாள். பின்வந்த ஓரிருநாட்கள் சோகத்தில் கழித்தாளென்றாலும் விரைவில் மீண்டும் கலகலப்பானாள்.

திருப்தியான சாப்பாடுஓடியாடி விளையாட்டு. இதுதான் பில்லியின் உலகம். கறிமுட்டைபால்தயிர்தேங்காய் போன்றவை மிகவும் பிடிக்கும் என்றாலும் எல்லாக் காய்கறிகளையும் சாப்பிடுவாள். வாழைப்பழத்தோல்சாறு பிழிந்த பாகற்காய் சக்கை போன்றவற்றைக்கூட விட்டுவைக்க மாட்டாள். ஒருமுறை அவள் மிகவும் குண்டானதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவளுக்குக் கொடுக்கும் உணவின் அளவைக் குறைக்கத்  தொடங்கினோம். பின்னர் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொண்டோம்.

பில்லிக்குக் கோபமே வராது. மற்ற விலங்குகளையும் குழந்தைகளையும் அன்போடு அரவணைப்பாள். பசும்புல் நிலங்களுக்குமேல் தாழப்பறக்கும் சின்னஞ்சிறிய வண்ணத்துப் பூச்சிகளின் பின்னால் ஆசையாசையாய் நடந்து செல்வாள். எல்லாவற்றிடமும் எல்லோருடனும் அவளுக்கு அன்பு அன்பு அன்பு மட்டுமே. அணுக்கத்தையும் கொண்டாட்டத்தையும் தவிர எதுவுமே அவள் கண்களில் பார்க்கக் கிடைக்காது. நெருக்கத்தின் அடையாளமாக வால் ஆட்டிக்கொண்டேயிருப்பாள். யாராவது வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கணும் அவளுக்கு. வந்தவர்கள் வெளியே போகக் கூடாது என்று அவர்களது ஒற்றைச்செருப்பை எங்காவது கொண்டுபோய் பதுக்கி வைப்பாள். நானுமே வீட்டிலிருந்து வெளியே கிளம்பப் போகிறேன் என்று உணர்ந்தால் எனது செருப்பும் காணாமல் போய்விடும். இரவில் அவளுக்குத் தூக்கம் குறைவு. எவ்வளவு தாமதமாக நான் வந்தாலும் கேட்டில் வந்து நிற்பாள். வால் ஆடிக்கொண்டேயிருக்கும். காலைச் சுற்றிச் சுற்றி வருவாள். பின் அமைதியாகச் சென்று படுப்பாள்.

கடந்த ஆண்டு அவளுக்கு ஏழு வயதானது. லாப்ரடாருக்கு அது நடுத்தர வயது. ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஐந்தாண்டுகாலம் எங்கள் வீட்டின் ஞானத்தோழியாகஎனது மகளின் சகோதரியாகஎனது அன்புக் குழந்தையாக வாழ்ந்தாள் எங்கள் பில்லி. சிலமாதம் முன்பு ஒருநாள் அவளது இடது காதுக்குள்ளே புண்வந்து சீழ் வழியத்தொடங்கியது. மிகுந்த வலியில் துடித்தாலும் சத்தமே போடாமல் என் மடியில் தலைவைத்து "ரொம்ப வலிக்குது. என்னைக் காப்பாற்ற முடியுமா?" போன்று ஒரு பார்வையைப் பார்த்தாள். கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்ற சிறந்த சிகிச்சையால் ஒரு வாரத்தில் குணமானாள். மீண்டும் உணவுஉற்சாகம் என்று பழைய வழக்கத்திற்குள் வந்தாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் திடீரென்று எழுந்து நிற்க முடியாமல் பில்லி திணறித் திணறி விழுவதைக் கண்டேன். ஓடிச்சென்று பார்த்தேன். அவளது உடம்பின் பின்பகுதி தளர்ந்து போனது போலவும் முன்பகுதி நடுங்கிக்கொண்டிருப்பது போலவும் உணர்ந்தேன். கால்நடை மருத்துவ நண்பர்களின் ஆலோசனையில் சில மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ளக் கொடுத்தேன். பயனளிக்கவில்லை. உணவு உணவு என்று எப்போதுமே குதூகலித்துக் கொண்டிருந்தவள் உணவையும் தண்ணீரையும் வெறுத்தாள்.

அடுத்த நாள் அதிகாலையில் பில்லியை மருத்துவக் கல்லூரிக்கே கொண்டுச் சென்றேன். நண்பர்களின் உதவியினால் உடனுக்குடன் அவசரச் சிகிச்சையும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட ஆறுமணிநேரம் பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. பல மருத்துவர்கள் கலந்தாலோசித்து இறுதியில் பில்லியின் இதயம் பெரிதாகவும் பலவீனமாகவும் இருப்பதாகக் கண்டடைந்தனர். அவளது இதயம் சரியாகச் செயல்படாததால் மூச்சுப்பையும் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள். இவற்றின் அறிகுறி எதுவுமே முன்பு எப்போதும் வெளிப்படாமல் இப்போது ஒரே அடியில் தீவிரமாக வெளிப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார்கள். மிகவும் விலை உயர்ந்த உயிர் காப்பாற்றும் மருந்துகள் பலவற்றை வாங்கிவரச் செய்தார்கள்.

சிகிச்சை பலனளிப்பதாகவே தோன்றியது. மூன்றாவது நாளிலிருந்து ஓரளவு சாப்பிடத் தொடங்கினாள். சுற்றிவரவும் வாலாட்டவும் தொடங்கினாள். அப்போதும் தண்ணீர் குடிக்க மறுத்தாள். க்ளூகோஸ் தண்ணீரைப் பீச்சாங்குழலில் வைத்து வாயில் பீச்சினோம். மருந்துகளைப் பலவந்தமாக ஊட்டினோம். பத்து நாட்கள் கடந்து விட்டன. பில்லி தேறி வருவதைக்கண்டு நிம்மதியுடன் வேலை விஷயமாக ஒரு பயணத்துக்குக் கிளம்பினேன். ஆனால் நான் ஊரில் இல்லாதபோது அவள் மருந்துகளை உட்கொண்டு கொஞ்சநேரத்திலே வாந்தியெடுப்பதாகச் சொன்னார்கள். இருந்தும் குறைந்த அளவிலாவது சாப்பாடும் தண்ணீரும் எடுக்கிறாள், கவலைப்படவேண்டாம் என்றும் வீட்டில் சொன்னார்கள்.

மூன்று நாட்கள் கழித்து நான் திரும்பி வரும்போது பில்லி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். அன்றிரவு பாதித் தூக்கத்தில் ‘பில்லி இறந்துபோவாள்அவள் இனிமேல் நமக்குக் கிடைக்க மாட்டாள்’ என்று நான் உளறியதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் காலையில் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் கற்றாழைச் செடிகளுக்குப் பின்னால் மூக்கிலிருந்து ஊதா வண்ண நுரை வடிந்தபடி பில்லி இறந்து கிடந்தாள். அவளை ஒரே கணம் பார்த்து இதயம் வெடிக்கும் வலியோடு அழுதேன். பில்லீ.. பில்லீ.. என்று எனது மகள் கதறி அழுதாள். எனது உதவியாளர்கள் அவளைத் தூக்கிச் சென்றார்கள். ஏரிக்கரைக் காட்டின் ஆழ்மண்ணில் எங்கோ புதைந்து இயற்கை திரும்பினாள் எனது பில்லி.

நான் உன்னைக் காண்பேன்

அழகான கோடைப் பகல்களில்

எளிதாய் ஒளிரும் அனைத்திலும் உன்னைக் காண்பேன்

காலை வெயிலொளியில் உன்னைக் கண்டடைவேன்

புத்தம்புது இரவின் நிலவைப் பார்க்கும்போது   

உன்னை மட்டுமே காண்பேன்.....

(பில்லியின் பெயருக்குக் காரணியான அமெரிக்கப் பாடகி பில்லி ஹாலிடேயின் பாடல்)