20120211

ஹரிஹரன் - காணாமல்போன இசைஞன்

வழிகள் வான்வெளிகளில் அல்ல

அது நம் இதயத்திலேயே இருக்கிறது

– புத்தர்


ஹரி தானே..! எங்கேயாவது ஷராப்அருந்தி படுத்திருப்பார்என்று எனக்கு பின்னால் இருந்த ஒரு மதிய வயது பெண் சத்தமாகச் சொன்னபோது அங்கு சிரிப்பொலிகள் உயர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு சென்னை ம்யூசிக் அகாதமியில் ஹரிஹரனின் கஸல் கச்சேரி துவங்கவிருந்த நேரமது. அரங்கம் நிரம்பிய கூட்டம். மேடையில் பக்க வாத்தியங்களான சாரங்கி, தபலா, ஹார்மோனியம், புல்லாங்குழல், கிதார் அனைத்துமே தயார். ஆனால் அறிவிக்கப்பட்ட நேரம் தாண்டி அரைமணி கடந்த பின்னரும் ஹரிஹரன் வந்து சேரவில்லை. கூட்டம் அல்லோகலப்பட ஆரம்பித்தது. கண்டனச் சத்தங்களும் கூச்சல் குழப்பங்களும் பொங்கத் தொடங்கியது.


கூட்டத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு இசைக் கலைஞர்கள் வந்து அமர்ந்து ஏற்கெனவே சுருதி சேர்த்து வைத்திருந்த கருவிகளை மறுபடியும் சுருதி சேர்க்க ஆரம்பித்தனர்! ஏறத்தாழ ஒரு மணிநேரம் கடந்தபின் ஹரிஹரன் வேகமாக நடந்து வந்து மேடையில் அமர்ந்தார். பார்வையாளர்கள் மத்தியில் சிறு ஆசுவாசம் உண்டாகியதேயொழிய பெரிய கரகோஷங்கள் எதுவும் உயரவில்லை. ஹரிஹரனும் தாமதத்திற்கு மன்னிப்பு எதுவுமே கோராமல் அமர்ந்து ஹார்மோணியத்தை தன்பக்கம் நகர்த்தி சுருதி மீட்டி பாட ஆரம்பித்தார். “இந்த இரவின் தனிமை எனது இதயம்போல் துடிதுடிக்கிறது...அது எனது நினைவுகளின் ஜன்னல் திரைச்சீலைகள் போல் வழுக்கி மாறுகிறது”.... ஜப் ராத் கீ தன்ஹாயீ தில் பன் கே தடக்தீ ஹே.....


அரங்கமே ஒரு கணம் நிலைகுலைந்து போனது. அனைவம் நொடிநேரத்தில் தங்களை மறந்து, இதயம் தொடும் இசையால் மட்டுமே ஒருவர் சென்றடையக் கூடிய ஏதேதோ உலகங்களுக்கு போய்விட்டனர். கஸலின் நீர்வீழ்ச்சிகள் அல்லது ஆப்ஷார் ஏ கஸல் என்ற தனது முதல் தொகுப்பில் ஹரிஹரனே இசையமைத்து, உருதுவின் மக்கள் கஸல் கவிஞன் என்று அழைக்கப்படும் பஷீர் பத்ர் எழுதி ஆஷா போன்ஸ்லே பாடிய அப்பாடலை அவர் பாடிமுடிக்கையில் இனம்புரியாத ஒரு வலியால் என் இதயமும் துடிதுடித்து போக எனது கண்கள் ஈரமாயின. அப்பாடலை ஹரிஹரன் பாடி நான் அதற்கு முன் கேட்டிருக்கவேயில்லை. தொடர்ந்து இரண்டரை மணிநேரம் நடந்தது எனது வாழ்நாளில் நான்கேட்ட மிக அற்புதமான கஸல் கச்சேரிகளில் ஒன்று. இந்தியாவில் தோன்றிய மிக அரிதான கஸல் பாடகன்தான் ஹரிஹரன் என்பதை என் மனதிற்குள் அந்நிகழ்ச்சி மீண்டும் உறுதி செய்தது.


சில ஆண்டுகள் கழித்து சென்னையின் ஐந்துநட்சத்திரத் தங்கும் விடுதியான லே மெரீடியனில் நான் ஹரிஹரனை சந்திக்கப்போனேன். தொண்ணூறுகளில் அவரது பல இசைத் தொகுப்புகளின் விநியோக உரிமை எங்கள் நிறுவனத்திடம் தான் இருந்தது என்பதால் அவற்றில் சிலதை பிரபலப்படுத்தி விற்பனை செய்வதில் நானும் எனது சிறு பங்கை ஆற்றியிருக்கிறேன் என்றாலும் நெருக்கமாக அவரை சந்திக்கப்போனது அதுதான் முதன்முறை.


குவைத்தில் நடக்கப்போகும் அவரது ஓர் இசைநிகழ்ச்சி விஷயமாகத்தான் அச்சந்திப்பு. வரச்சொல்லி எனக்கு அளித்திருந்த நேரத்தையெல்லாம் கடந்து தாமதமாகத்தான் அவர் வந்தார். ஆனால் எனது ஆதர்ச கஸல் பாடகனுடனான நேரடிச் சந்திப்பு என்பதால் எனக்கு உற்சாகம் சற்றுமே குறையவில்லை. அவரை பார்த்தவுடன் ஹரிஜீ என்றழைத்து நான் அவரது பாதங்களைத் தொட்டேன். சிரித்தார், மகிழ்ந்தார். ‘பவர் ஆஃப் விமன்எனும் தமிழ் படத்தில் குஷ்புவின் கதாநாயகனாக அவர் அப்போது நடித்துக் கொண்டிருந்தார். அதைப்பற்றியான ஆதங்கங்களிலும் தொலைப் பேச்சுக்களிலும் தொலைந்து போனவராக காணப்பட்டார்.


அத்தங்கும் விடுதியின் வரவேற்புக் கூடத்திலிருந்து நாங்கள் அவரது அறைக்கு மின்தூக்கியில் செல்லும்போது அதில் நவநாகரிக ஆடைகளில் வசீகரத் தோற்றத்துடனிருந்த ஒரு பெண்ணிடம் அவர் “நீங்கள் காலையில் நான் மும்பையிலிருந்து வந்த விமானத்தில் இருந்தீர்கள் அல்லவா? என்று கேட்டார். அப்பெண்ணோ அவர் யார் என்றே தெரியாததுபோல் ‘இல்லையேஎன்று சாதாரணமாக சொல்லிவிட்டு அடுத்த தளத்தில் இறங்கிப்போனாள். அவர் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டது. எனக்கும் சங்கடமாகயிருந்தது. இசை உணர்வு அற்ற ஜென்மம் என்று அப்பெண்ணை நான் மனதில் எண்ணிக்கொண்டேன்.


‘பவர் ஆஃப் விமன்படத்தின் சிக்கல்களும் அந்த மின்தூக்கி அழகியும் சேர்ந்து எங்களது சந்திப்பை ஒரு நாராசமான அனுபவமாக மாற்றியது. குவைத்து இசை நிகழ்ச்சியில் அவரது சில முக்கியமான கஸல்களையும் சேர்க்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு “அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், எனது மேடை நிகழ்ச்சிப் பாடல்களின் பட்டியலை நான் யாரிடமும் கலந்தாலோசிப்பதில்லைஎன்றார். கருவியிசைக் கலைஞர்களுக்கு பாடல்களின் பட்டியலை முதலிலேயே நான் கொடுக்க வேண்டுமே என்று சொன்னதற்கு அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்என்று விரக்தியுடன் சொன்னார். மேலும் நேரவிரையத்திற்கு விருப்பப்படாததால் நான் அங்கிருந்து வெளியேறினேன்.


எண்பதுகளின் மத்தியில் முதன்முதலில் ஹரிஹரனின் கஸல்கள் கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்தே எனக்கு அவரது அசாத்தியமான பாடும்முறையின் மேலும் அரிதான குரலின்மேலும் அப்படியொரு மோகம். அப்போது ஜெக்ஜித் சிங் கஸல்களின் ரசிகனாக இருந்தபோதிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மெஹ்தி ஹஸன் எனக்கு அறிமுகமாகும் வரைக்கும் ஹரிஹரன்தான் இவ்வுலகில் எனக்கு மிகவும் நெருக்கமான கஸல் பாடகராக இருந்தார். ஹரிஹரன் ஒரு தென்னிந்தியர் என்பதும், இங்கிருந்து புறப்பட்ட ஒரு பாடகன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் வட இந்தியர்களும் மட்டுமே இருந்துவந்த ஒரு இசைமுறையை இவ்வளவு அற்புதமாகவும் அனாயாசமாகவும் கையாளுவதும் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தந்தது.


அவரது ஆரம்பகால தொகுப்புகளாக 1983ல் வந்த கஸல் கா மௌசத்தின் தாயம் படா ஹுவா, முன் சொன்ன ஆப்ஷார் ஏ கஸல்இல் இருந்த குச் தூர் ஹமாரே ஸாத் சலோ, ஹொரைசன் (Horizon) இல் வந்த பன் நஹீ பாயா, ஸாகியா ஜாயெ கஹான், ஆவாரா, ஹம் னே காட்டீ, ரிஃப்ளெக்ஷன்ஸ் (Reflections) தொகுப்பில் இடம்பெற்ற கப் தக் யூ ஹீ, ஸுகூன்இல் வந்த ஹாத் மே லே கர் போன்றவை தொடங்கி 2000ஆம் ஆண்டில் வெளிவந்த காஷ் தொகுப்பின் காஷ் ஐஸா, யே ஆயினே ஸே, ஜூம் லே, மைகதே பந்த் கரேவரைக்கும் அவரது பலபல கஸல்களின் அதி தீவிர ரசிகனாகத்தான் நான் இருந்திருக்கிறேன்.


பைகாம், தில் கி பாத், குல்ஃபாம், கரார், ஜஷ்ன், ஹாஸிர் என அவரது பல கஸல் தொகுப்புகள் நான் அடிக்கடி கேட்டுவந்தவை. ஆ சாந்த்னீ ஃபீ, அஹ்தே வஃபா ஆஹிஸ்தா, ஜப் வோ மேரே கரீப், முஜே ஃபிர் வஹீ யாத், கோயீ பத்தா ஹிலே, ஜியா ஜியா ன ஜியா, கோயீ ஸாயா, ஃபூல் ஹே சாந்த் ஹே, ஷஹர் தர் ஷஹர்என எனக்கு மிகவும் பிடித்தமான ஹரிஹரன் கஸல்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போவேன்.


அவரது முதன்முதல் திரைப்பாடலுமே மந்திரஜாலம் போல் ஒலிக்கும் ஒரு கஸல். என் ஆதர்ச இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜெய்தேவ் இசையமைத்தது. அஜீப் ஸானேஹா முஜ் பர் குஸர் கயா யாரோ என்கிற அப்பாடல் 1978ல் வந்த கமன் என்கிற ஹிந்திப்படத்தில் இருந்தது. அப்பாடலுக்காக ஹரிஹரனுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிறந்த பாடகனுக்கான விருதும் கிடைத்தது.


ஸந்தூர் மாமேதை சிவ்குமார் சர்மாவும் புல்லாங்குழல் இதிகாசம் ஹரி பிரசாத் சௌரஸ்யாவும் இணைந்து சிவ்-ஹரி என்கிற பெயரில் இசையமைத்த லம்ஹே படத்தின் கஃபீ மே கஹூம்’, ’யே லம்ஹே போன்ற பாடல்களைப்பாட தேர்வு செய்யப்பட்டார் ஹரிஹரன். பின்னர் ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, பெங்காலி, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற திரைப் பாடல்களை பாடினார். இரண்டுமுறை இந்தியாவின் சிறந்த திரைப்பாடகனுக்கான தேசிய விருதையும் பெற்றார்.


தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஹரிஹரன் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ல் கேரளாவில், திருவனந்தபுரத்தில் பிறந்தவர். அது அவரது அப்பா எச் ஏ எஸ் மணியின் சொந்த ஊர். திருவாங்கூர் இசைக் கல்லூரியிலிருந்து அதன் முதல் ஆண்டு பட்டதாரிகளில் ஒருவராக வெளிவந்த அவர் பம்பாய்க்கு இடம்பெயர்ந்து அங்கு தென்னிந்திய இசைப்பள்ளியை நடத்தி வந்தார். ஒரு இசை ஆசிரியராக அங்கு பம்பாய் சகோதரிகள்(Bombay Sisters) போன்ற புகழ்பெற்ற பல கர்நாடக செவ்வியல் இசைப் பாடகர்களை உருவாக்கியவர் அவர்.


பத்தே வயதான அலமேலு எனும் பெண் அவரது மாணவியாக வந்தார். 9 ஆண்டுகள் நீண்ட இசைப்பயிற்சிக்கு பின்னர் 31 வயதான மணி 19 வயதான அந்த மாணவியை காதலித்து மனைவியாக்கிக்கொண்டார். அடுத்த ஆண்டு ஹரிஹரன் பிறந்தார். அலமேலுவும் அசாத்தியமான இசைத்திறனை பெற்றிருந்தவர். இசை மட்டுமே நிரம்பி வழிந்த சூழலில் வளர்ந்தார் ஹரிஹரன். ஆனால் துரதிருஷ்ட வசமாக ஹரிஹரனுக்கு எட்டு வயது மட்டுமே இருந்தபோது அவரது அப்பா இறந்துபோனார்.


28 வயதில் கணவனை இழந்த அலமேலு மணி பின்னர் தன் மகனுக்காகவே வாழ்ந்தார். செம்மங்குடியிடமிருந்தும் டி.பிருந்தாவிடமிருந்தும் மேலும் மேலும் கர்நாடக இசை கற்றுத்தேர்ந்த அவர் பம்பாயின் பெரும்புகழ்பெற்ற ஷண்முகானந்த சபாவின் இசைப்பள்ளியின் முதல் தலமை ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அவர் கர்நாடக இசை கற்பித்தார். அவர்தான் ஹரிஹரனின் முதல் குருவாக அவருக்கு கர்நாடக இசைப்பாடங்களை கற்பித்தவர்.


ஆனால் ஹரிஹரனுக்கோ சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானியின்மேல் தான் ஈர்ப்பும் மோகமும் இருந்தது. அதிலும் மெஹ்தி ஹஸனின் கஸல்களின்மேல் அவருக்கு தனிப்பட்ட பிரியம். ஜெக்ஜித் சிங்கின் கஸல்களையும் விரும்பினார். ஹிந்துஸ்தானிதான் தனது இசைவழி என்று முடிவெடுத்த அவர் தனது பதின்பருவத்திலேயே புகழ்பெற்ற பாடகரும் இசை ஆசிரியருமான உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் மாணவனாக மாறினார்.


மியான் தான்ஸேனால் நிறுவப்பட்ட ஸானியா இசைப்பரம்பரையின் கிளையான ராம்பூர்-ஸாஹஸ்வான் கரானாவின் வாரிசான உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் கீழிலான இசைப்படிப்பின் வழியாக முற்றிலுமாக ஹிந்துஸ்தானி இசைக்குள் மூழ்கிப்போனார் ஹரிஹரன். தினமும் 10-13 மணிநேரம் இசைப்பயிற்சி செய்தார் அவர்! ஒரு கஸல் பாடகனாக மட்டுமே வாழ விரும்பிய ஹரிஹரன் கஸல்களின் மொழியான உருதுவை முற்றிலுமாக கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலுடன் அம்மொழியிலும் அதன் நுட்பங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டினார். பின்னர் இந்தியாவில் உருதுவின் தலைநகரமான லக்னௌவில் கூட அவரது உருது மொழிப்புலமை பாராட்டப்பட்டது.


இதற்கிடையில் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்த ஹரிஹரன் சிறு கச்சேரிகள் நடத்த ஆரம்பித்தார். கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளின் காலத்திலேயே தொலைக்காட்சியில் பாடினார். 1977ல் ஒரு அனைத்திந்திய இசைப்போட்டியில் அவர் வெற்றிபெற்றபோது அங்கு நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் ஜெய்தேவ் ஹரிஹரனை கவனித்தார். அவ்வாறாகத்தான் அவருக்கு கமன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகள் திரைப்படங்களில் அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை.


ஹிந்தியில் அவ்வப்போது ஒரு சில திரைப்பாடல்களை பாடி வந்தார்.

இக்காலகட்டம் தான் ஹரிஹரன் கஸல்களின் பொற்காலம். முன்சொன்ன பல தொகுப்புகள் அப்போதுதான் வெளியாயின. தனது பெரும்பாலான கஸல்களுக்கு அவரே இசையமைத்தார். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஏற்கனவே பிரபலமான பல கஸல்களை எடுத்து அவற்றின் இசையை முற்றிலுமாக வேறு வேறு ராகங்களில் மாற்றியமைத்தார். அதில் வெற்றியும் பெற்றார். அது சாமானியமான ஒரு விஷயமல்ல. தொடர்ந்த தொகுப்புகளும் மேடை நிகழ்ச்சிகளும் வழியாக இந்தியா முழுவதும் பாகிஸ்தானிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாயினர்.


ஹரிஹரனின் தனிச்சிறப்புகளாக சொல்லக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. அதில் மிக முக்கியமானது அவரது குரல். ஒரு விசேஷமான காதற்காவியத்தன்மை கொண்டது (Romantic) அது. அக்குரலின் வழியாக அவர் பிறப்பிக்கும் சங்கதிகள் அசாத்தியமானவை. அச்சங்கதிகளை அபாரமாக உருவாக்க உதவும் கற்பனை வளமும் இசை ஞானமும் பலபல ஆண்டுகளின் அசுரத்தன்மைகொண்ட கடும் இசைப்பயிற்சியும் அவருக்கு இருக்கிறது. ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஆழ்ந்த நுட்பங்களைக்கூட தெரிந்து வைத்திருக்கும் அவருக்கு கர்நாடக இசையிலும் காத்திரமான அஸ்திவாரம் இருப்பதனால் மனதில் நினைக்கும் எந்தவொரு இசைக்கற்பனையையும் எளிதாக பாடி வெளிப்படுத்த அவரால் முடிகிறது.


கஸல் விரும்பிகளால் பெருவாரியாக ரசிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள் வெளிவந்த பின்னர்தான் 1992ல் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் ரோஜா படத்தில் தமிழா தமிழா என்கிற பாடலை அவர் பாடினார். அப்படத்தின் ஹிந்தி வடிவத்தில் அதே பாடலை பாரத் ஹம் கோ என்றும், காதல் ரோஜாவே பாடலை ரோஜா ஜானே மன் என்றும் பாடினார். அன்றிலிருந்துதான் ஒரு முழுநேர சினிமாப்பாடகராக அறியப்பட ஆரம்பித்தார் ஹரிஹரன். ஹிந்தி சினிமாவில் அவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியதாக சொல்லப்படுகிறது என்றாலும் அவற்றில் வெற்றி பெற்ற பாடல்களின் எண்ணிக்கை குறைவே. அவற்றிலும் பல ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த தமிழ் பாடல்களின் ஹிந்தி வடிவங்கள் தான்.


மேரே துஷ்மன் மேரே பாயீ என்கிற அனு மல்லிக் இசையமைத்து பார்டர் படத்தில் வந்த பாடலுக்குதான் அவருக்கு 1998ல் முதல் தேசிய விருது கிடைத்தது. தேசிய ஒற்றுமையையும், போர் முக்கியமில்லை வாழ்க்கைதான் முக்கியம் என்கிற கருத்தையும் முன்வைத்த வரிகள் கொண்டிருந்ததேயொழிய அப்பாடலின் இசைக்கும் பாடும்முறைக்கும் எந்தவொரு சிறப்புமே இருந்ததில்லை என்று சொல்லித்தான் ஆகவேண்டும். 2009ல் ஜோக்வா எனும் மராத்திப் படத்தின் ஜிவ் தங்கலா குங்க்லா பாடலுக்காக கிடைத்ததுதான் அவரது இரண்டாவது தேசிய விருது. இரண்டு முறை தமிழக அரசு விருதையும் ஆந்திர, கேரள மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருது போன்ற எண்ணற்ற தனியார் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஹரிஹரன்.


தமிழில் அவருக்கு தரமானதும் வெற்றி பெற்றதுமான பல பாடல்கள் கிடைத்தது. உண்மையில் ஒரு முழுநேர திரைப்பாடகனாக ஹரிஹன் அங்கீகரிக்கப்பட்டது அவரது தாய்மொழியான தமிழில் மட்டும் தான். நிலா காய்கிறது, கொஞ்ச நாள் பொறு தலைவா, விடுகதையா இந்த வாழ்க்கை, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலீ காதலீ காதலால், குச்சிக் குச்சி ராக்கம்மா, உயிரே உயிரே, டெலஃபோன் மணிபோல், கல்லூரிச் சாலை, மலர்களே மலர்களே, கண்ணைக் கட்டிக் கொள்ளாதே, ஒரு மணி அடித்தால், மின்னல் ஒரு கோடி, அன்பே அன்பே கொல்லாதே, என்னை தாலாட்ட வருவாளோ, ஏதோ ஒரு பாட்டு, மழை துளி மழை துளி, நீ காற்று நான் மரம், இருபது கோடி மலர்கள், பச்சை நிறமே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சுற்றும் விழிச் சுடர் தான், நிலவு பாட்டு, யார் சொல்வதோ, ஒரு பொண்ணு ஒண்ணு நான், ஒரு பொய்யாவது சொல், என் மன வானில், வெண்ணிலவே வெண்ணிலவே, மஞ்சள் வெயில் மாலையிலே, முதல் மழை, வாஜி வாஜி, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை போன்றவையெல்லாம் ஹரிஹரனின் பெரும் வெற்றிபெற்ற தமிழ்ப் பாடல்கள்.


தமிழில் அவரது திரைப்பாடல்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியும் அதேநேரம் இந்திய அளவில் ஒரு பாடக உச்சநட்சத்திரமாக மாறமுடியாமல் போனதன் ஏமாற்றமும் அவரை முற்றிலுமாக மாற்றியமைத்தது என்றே நினைக்கிறேன். கஸலின் உண்மைகளை அவர் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டர். பெருவாரியான மக்கள் கூட்டத்தை ஈர்க்காத கஸலை ஒரு உபதொழிலாக மட்டுமே வைத்துக்கொண்டு பெரும்புகழடைந்த ஒரு திரைப்பாடகனாக மாறவும் அத்துடன் இந்தியாவின் பெரும் வெற்றிபெற்ற பாப் இசைப் பாடகனாக வலம்வரவும்தான் தொண்ணூறுகளுக்குப் பின்னர் அவர் முயற்சித்தார் என்றே படுகிறது. ஆரம்பத்தில் அதில் ஒரளவுக்கு வெற்றியும் பெற்றார்.


பாப் இசைப்பாணியில் அவர் அமைத்த ஹல்கா நஷா ஒரு வெற்றித்தொகுப்பே. கொளோனியல் கசின்ஸ் என்கிற பேரில் அவரும் லெஸ்லி லூயீஸும் சேர்ந்து வெளியிட்ட முதல் தொகுப்பும் பெரும் வெற்றிபெற்றது. ஆனால் பின்னர் வந்த அவரது அனைத்து பாப் முயற்சிகளுமே பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. இரண்டு தொகுப்புகளின் தோல்விக்கு பின் கிட்டத்தட்ட இல்லாமலாகிப்போன கொளோனியல் கசின்ஸை ஒரு சினிமா இசையமைப்பாளர் இரட்டையராக ஆக்கும் முயற்சியில் மோதிவிளையாடு, சிக்குபுக்கு எனும் இரண்டு தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பார்த்தார். அதுவும் எடுபடவில்லை.


தொண்ணூறுகளின் கடைசியிலிருந்து ஒரு கஸல் பாடகர் என்கிற இடத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இன்றைக்கு கஸலில் அவரது தரமான பங்களிப்புகள் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. ஆத்மா, தில் ஐஸா கிஸி னே மேரா தோடா, லாஹோர் கே ரங்க் ஹரீ கெ சங்க், வக்த் பர் போல்னா போன்ற அவரது பிற்காலத் தொகுப்புகள், இதை உருவாக்கினவர் அவரா என்று நம்மை அதிர வைக்கும் அளவுக்கு இருக்கிறது.


அவரது மேடை கஸல் நிகழ்ச்சிகள் என் போன்ற அவரது ஒரு காலத்து தீவிர ரசிகர்களுக்கு மிக ஏமாற்றமான ஒரு அனுபவமாக மாறி பலகாலமாகிவிட்டது. வேறு யாராலும் பாடமுடியாத சங்கதிகளை அதீத சுயமோகத்துடன் வலிந்து பாடும் ஒருவகையான களரி விளையாட்டாக அவரது மேடை நிகழ்ச்சிகள் மாறிவிட்டது. திரையிசை, பாப் இசை சார்ந்த மேடைகளிலுமே இதைத்தான் அவர் செய்து வருகிறார். அங்கு தனது சக பாடகர்களை விட தான் பலமடங்கு மேலானவர் என்று நிரூபிப்பது மட்டுமே அவருக்கு இன்று முக்கியமாகி விட்டது.


திரைப்பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் கராறானவராக இல்லா விட்டால் இத்தகைய, அழகுணர்வற்ற அதீதமான சங்கதிகளை பாடுவதிலேயே அவர் தொடர்ந்து நாட்டம் காட்டுகிறார் போலும். மேடைகளில் மேற்கத்திய ஆரவாரப் பாடகர்களைப்போல், அவருக்கு சற்றுமே பொருந்தாத விசித்திரமான உடைகளுடனும் சிகை அலங்காரத்துடனும் தோன்றி தன்னையே சிறுமைபடுத்துவதிலும் அவருக்கு அலாதியான பிரியம் உருவாகியது! அது அவருக்கு பெருமை சேர்ப்பதாக அவர் நினைத்து கொண்டிருக்கிறார்.


ஹார்மோணியத்திற்கு பின்னால் அதாவது இசையின் பின்னால், அமைதியாக அமர்ந்து இசையின் பெருக்கெடுப்பில் தன்னையே மறந்து பாடும் ஒரு கஸல் பாடகன் இது எதுவுமே செய்ய முடியாது அல்லவா? மேற்கத்திய பாப் இசையில் தனது ஆதர்சம் என்று அவர் சொன்ன லயணல் ரிச்சி ( Lionel Richie) போன்றவர்கள் கூட இத்தகைய அபத்தமான ஆடம்பர ஒப்பனைகளில் ஒருபோதும் தோன்றவில்லை என்பதுமா ஹரிஹரனுக்குத் தெரியவைல்லை?


ஹரிஹரனின் அசாத்தியமான இசைத்திறனும் மனித சாத்தியமில்லாது என்றே சொல்லக்கூடிய அவரது இசை பயிற்சியுமெல்லாம் மாயமாகி, லாகூரின் வண்ணம் ஹரியின் எண்ணம், ஹரியுடன் நான்என எல்லாமே அவருக்கு ஹரிமட்டுமேயாகி விட்டது. அந்த பிரம்மாண்டமான ஹரியின் வருகையுடன் ஏ ஹரிஹரன் என்கிற ஆத்மா ததும்பும் கஸல் பாடகன் எங்கோ மறைந்து விட்டார். இசை பின்வாங்கி நகர ஹரி தனது இசையை விட வெகுதூரம் முன்னேறி விட்டார்! அவர் இன்று தொலைக்காட்சிகளின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளில் அமர்ந்து தற்பெருமை பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அங்கு துவண்டு நிற்கும் இளம் பாடகர்களை, யாராலுமே பாடமுடியாத சங்கதிகளையும் தானங்களையும் பாடிக்காட்டி பயமுறுத்துகிறார்.


கடந்த வாரம் ஏஷியானெட் எனும் மலையாள தொலைக்காட்சி வழங்கிய மலையாளத் திரைப்பட விருது நிகழ்ச்சியில் ஹரிஹரனுக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்தது. ஸ்னேஹவீடு என்கிற படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய மிகச்சாதாரணமான ஒரு பாடலுக்கு. அந்த விருது அவருக்கு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஏன் என்றால் அவர்தான் தற்போது அந்த சேனலின் இசை ரியாலிடி ஷோவின் முக்கிய நடுவர்! கடந்த ஆண்டின் உலகப்புகழ் பாடல் ஒய் திஸ் கொலவெறியின் பாடலாசிரியரும் பாடகருமான தனுஷை புகழாரங்களுடன் அந்த விருது நிகழ்ச்சி மேடைக்கு அழைத்தார் ஹரிஹரன்.


மேடையில் அவருக்கு முன்னால் பேசுவதற்கே தயங்கி நின்ற தனுஷை ஒரு சிறந்த பாடகர் என்றே அழைத்தார் ஹரிஹரன்! அதை மறுத்த தனுஷ் நான் ஒரு பாடகனுமில்லை, கொலவெறி ஒரு பாடலுமில்லை. அது ஒரு தவறு. ஒரு திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெறும் முப்பதே நிமிடங்களில் நாங்கள் தயார் செய்த ஒரு பாடலை இப்படியெல்லாம் புகழ்ந்து என்னை மேலும் கூனிக்குறுக வைக்காதீர்கள்” என்று சொன்னார்.


ஆனால் ஹரிஹரன் அதை ஒரு ’கூல்’ பாடல், ட்ரென்டிபாடல் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே போனார். அது ஒரு தவறென்றால் அந்த தவறை மேலும் மேலும் செய்யுங்கள் என்றார்! எதற்கு? அது பெரும் வெற்றிபெற்றிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக! அம்மேடையில் தனுஷை கொலவெறி பாடலை பாடவைத்து அதன் சில வரிகளை அவருடன் இணைந்து பாடவும் செய்தார் ஹரி!


தனது இசையிலிருந்து, தனது வேர்களிலிருந்து முற்றிலுமாக பிரிந்து, தான் அல்லாதது எதையோ ஒன்றை தான் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இன்று ஹரிஹரன். ஹரிஜீ... ஒன்று மட்டும் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் வந்துநிற்கும் இந்த முடிவற்ற இரவின் ஆழ்ந்த இருட்டையும் அளப்பரிய தனிமையையும் என்போன்ற ஒரு எளிய இசை ரசிகன் எதிர்கொள்வது எப்படி?