20120415

நான் அறிந்த கிருஷ்ணா டாவின்ஸி

மைக்கேல் ஜாக்ஸனின் இறுதிச் சடங்குகள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன்”. 2009 ஜூலையில் ட்விட்டரில் கிருஷ்ணா டாவின்ஸி எழுதினார். அதன்பின் அதிகமாக கிருஷ்ணா டாவின்ஸியின் எழுத்துக்களை நான் பார்த்ததில்லை. அவரது பெயர் கைபேசியின் திரையில் ஒளிரும்போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். உலக இசையைப் பற்றி புரிதலோடு பேசக்கூடிய மிகக்குறைவான இலக்கிய நண்பர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார். 2008ல் தொடங்கி மூன்று நான்கு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். சிலமுறை மணிக்கணக்காக! அவ்வப்போது இசை சார்ந்த குறுஞ்செய்திகள் அனுப்புவார். சென்ற வாரம் மும்பையில் ஒரு இசைப்பதிவில் இருக்கும்போது கிருஷ்ணா டாவின்ஸியின் கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி நேற்று மாலையில் காலமானார்’. அதிர்ந்துபோனேன். தொடர்ந்து பலமணிநேரம் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

ஏ ஆர் ரஹ்மான் இசைக்கான உலக விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருந்த காலத்தில், முன்பு நான் அவரைப்பற்றி எழுதிய ஆர் கே சேகரிலிருந்து ஆஸ்கார் வரைஎன்கிற கட்டுரையை வாசித்து முதலில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கிருஷ்ணா டாவின்ஸி. ‘நான் உங்கள் வாசகன்என்று ஆரம்பித்த அந்த உரையாடலே கிட்டத்தட்ட ஒருமணிநேரம் நீண்டது. பின்னர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்தார். அந்த சந்திப்பு ஆறு மணிநேரத்துக்குமேல் நீண்டு நள்ளிரவையும் தாண்டிச்சென்றது! இசை, இலக்கியம், இதழியல், வரலாறு, அரசியல், சினிமா, தத்துவம், பகுத்தறிவு என எண்ணற்ற விஷயங்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுமளவுக்கு விஷயமுள்ளவராக அவரை நான் கண்டறிந்தேன். எங்களது உரையாடல்கள் எப்போதுமே நிறைவுபெறாமல் முடிந்தது. பலமணிநேரம் பேசிய பின்னரும் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்ற உணர்வு தான் அவரிடம் பேசும்போது எப்போதுமே இருந்தது.

விகடனில் ஒரு கனவின் இசை என்கிற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மானைப்பற்றி பலவாரங்கள் விரிவாக எழுதினார் கிருஷ்ணா டாவின்ஸி. அக்கட்டுரைகளில் எனது பெயரையும் வரிகளையும் மேற்கோளாக அவ்வப்போது குறிப்பிட்டார். ஆனால் என்னிடம் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேறு யாரெல்லாமோ படித்து சொன்னபோதுதான் நான் அதை அறிந்துகொண்டேன். ஆனால் அவரது வேறுசில கட்டுரைகள் பிரசுரமானபொழுது அதைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இணையத்தில் பிரசுரமாகியிருந்தால் அதன் சுட்டியை அனுப்பிவைப்பார். அவரது எழுத்துமுறை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

அகிலன் சித்தார்த் என்கிற புனைபெயரில் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டதா?என்கிற அவரது இசைக் கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். வலுவான பல அவதானிப்புகள் இருந்த அந்த கட்டுரையின் தொடக்கமே அற்புதமாக அமைந்திருந்தது. சில நாட்களுக்கு முன்னால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தங்க நேர்ந்தது. மஞ்சப்பரப்பு என்கிற மலைக்கிராமத்தில் முழுவதும் தேக்கு மரத்திலேயான ஒரு காட்டுப் பங்களா. மின்சாரம் அவ்வப்போது வரும். இரவு நேரத்தில் நிச்சயம் வராது. முதல் ஒரு சில நாட்கள் அந்தக் குளிரும் இரவும் பயமாக இருந்தது. ஒரு இரவில் கும்மிருட்டிலும் குளிரிலும் தூக்கம் வராமல் புரண்ட போது எங்கிருந்தோ அந்த இசை கேட்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு மலைகிராமத்தில் நடக்கும் திருவிழாவில் போடப்படும் பாடல்களாக இருக்க வேண்டும். ஆழமான பல விஷயங்களை சொல்லப்போகும் ஒரு கட்டுரைக்கு எவ்வளவு சுவாரசியமான துவக்கம்!

எனது இசை சார்ந்த கட்டுரைகள் விகடனிலும் குமுதத்திலுமெல்லாம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். முதலில் அவரது தூண்டுதலினாலும் பின்னர் அவரது நண்பர் நா கதிர்வேலனின் கோரிக்கையினாலும்தான் நான் விகடனில் சில கட்டுரைகளை எழுதினேன். குமுதத்திற்காகவும் கட்டுரைகளை கேட்டிருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பல காரணங்களினால் எழுதமுடியவில்லை.

கிருஷ்ணா டாவின்ஸியிடம் ஒருபோதும் அவரது தனிமனித வாழ்க்கையைப்பற்றியோ அவரது குடும்பத்தைப்பற்றியோ நான் பேசியதில்லை. இசை, இலக்கியம், சினிமா என நில்லாமல் தொடரும் பேச்சுக்களுக்கிடையில் அதைக்கேட்க சந்தர்பமே கிடைக்கவில்லை. ஆனால் எனது சில கட்டுரைகளின் வழியாக என் குடும்பத்தைப்பற்றியும் மகளைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்த கிருஷ்ணா ஒவ்வொரு மின்னஞ்சலிலும் என் குடும்பத்தின் நலனைப்பற்றி விசாரிப்பார். கிருஷ்ணா டாவின்ஸி மறைந்து இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவியை தொலைபேசியில் அழைத்தேன். என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினேன்.

முடிவற்ற காலம் நம்முன் பரந்து கிடக்கிறது என்றுதான் நமது அசையாத நம்பிக்கை. அன்பு செலுத்த, அக்கறை காட்ட, நலன் விசாரிக்க, கருணையுடன் செயல்பட...எல்லாவற்றுக்கும் இன்னும் காலம் நிறைய இருக்கிறது என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொருநாளும் செய்துமுடிக்க வேறு ஆயிரம் இருக்கு என்று இதையெல்லாம் முக்கியத்துவமற்றவையாக நாம் தள்ளிவைத்துக் கொண்டேயிருக்கிறோம்! எல்லாவற்றுக்கும் காலமிருக்கிறது என்பது ஒரு விருப்பக்கனவு மட்டுமே என்று சொல்லியவண்ணம் தனது 46ஆவது வயதிலேயே கிருஷ்ணா டாவின்ஸி சென்று விட்டார். ‘மீண்டும் சந்திப்போம்என்கிற சொல்லாடல் எவ்வளவு அர்த்தமற்றது!

நன்றி : புத்தகம் பேசுது மாத இதழ் (ஏப்ரல் ’12)