20120314

அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழும் இசை

நீ நாற்பது வயதில் நுழையும்போது உன் வாழ்வின் கிளைகளில் அஸ்தமனங்கள் நிரம்புகின்றனஎன்று கவிஞர் நண்பர் தேவதச்சன் எழுதியிருக்கிறார். அறம் பாடப்பட்டதுபோல் அந்த வார்த்தைகள் பலிக்கின்றதை இன்று நான் தொடர்ந்து காண்கிறேன். கடந்துபோன பல மாதங்களில் என் இசை ரசனைக்கு விருந்து படைத்த, எனது ஆதர்சங்களாக நான் நினைத்த, எப்போதும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என நான் விரும்பிய நிறைய இசைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் தங்களது வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து, அஸ்தமனத்துக்கு அப்பால் சென்று விட்டனர். அவரில் சிலர் உலகம் முழுவதும் பெருமளவில் கொண்டாடப்பட்டவர்கள். பலர் நமது காதுகளுக்குத் தெரிந்து கண்களுக்கு தெரியாமல் போனவர்கள். பலர் புகழின் உச்சத்தையும் புறக்கணிப்பின் அடியாழத்தையும் ஒரேபோல் தொட்டுப் போனவர்கள்.


இறந்துபோன அந்த இசைவித்தகர்களின் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுமெல்லாம் தொடர்ந்து இடம்பெற்றுகொண்டே இருக்கிறார்கள். உயிருடனிருந்தபோது அவர்கள் சுவாசித்தது நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எதுவுமே தடையில்லாத இசையெனும் மூச்சுக்காற்றைத்தான். உயிருடனிருந்த நாட்களிலேயே இவரைப்பற்றி எழுதியிருக்க வேண்டுமே என்ற குற்றவுணர்வை எனக்கு ஏற்படுத்தியவண்ணம் ஒவ்வொருவராக சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு அஞ்சலி குறிப்பையாவது எழுதவேண்டிய நிலைமை! இசையைப்பற்றி புதிதாக எதை எழுத நினைத்தாலும் எழுதப்படாமல்போன அந்த அஞ்சலிக்குறிப்புகள் என்னை நிலைகொள்ளாமல் தவிக்க வைக்கின்றன. மிகமுக்கியமான அந்த இசை ஆளுமைகள் யாரைப்பற்றியும் நமது மொழியில் ஒரு சிறிய பதிவுகூட இல்லையே என்பது என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் மறைந்த என் விருப்பத்திற்குரிய சில இசையாளுமைகளைப்பற்றி சுருக்கமாக சில வார்த்தைகள் இங்கு எழுத விழைகிறேன்.


இந்தியத் திரையிசையில் இதுநாள்வரை சாக்ஸஃபோன் எனும் இசைக்கருவியை வாசித்தவர்களில் அசாத்திய வல்லமைகொண்ட ஒரு இசைக்கலைஞன் மனோகரி சிங். நேப்பாளத்திலிருந்து வங்காளத்துக்கு குடியேறிய ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். சாக்ஸஃபோன், கீ ஃப்ளூட், க்ளாரினெட், பிக்கோலோ, டிரம்பெட், மான்டலின் போன்ற இசைக்கருவிகள் அனைத்திலுமே வித்தகர். கல்கத்தாவின் தெருக்களில் சாவுச் சடங்குகளுக்கு பேன்ட் கச்சேரிகளில் வாசித்துத் திரிந்துகொண்டிருந்த அவரை கண்டடைந்து மும்பைக்கு அழைத்துச் சென்றவர் சலில் சௌதுரி. அக்காலத்தின் எல்லா முக்கியமான இசையமைப்பாளர்களுக்கும் அவரை அறிமுகம் செய்தார். ஹிந்தித் திரையிசையின் பொற்காலத்திலிருந்து நாம் கேட்கும் எண்ணற்ற அழியாப்பாடல்களில் இடம்பெற்ற முக்கியமான கருவியிசைப் பகுதிகள் பலவற்றை இசைத்தவர் மனோகரி சிங் தான். தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில் செயலிழந்த சிறுநீரகங்களுடன் போராடிக்கொண்டே இந்தியா முழுவதும் மேடைகளில் தோன்றி, இசைப்பதற்கு வலுவான உடலும் மூச்சுக்கட்டுப்பாடும் தேவைப்படுகிற சாக்ஸஃபோனை, ஒரு சுரம் கூட பிசகாமல் அசாத்தியமாக இசைத்துவந்தார்! 2010 ஜூலையில் இறந்துபோனார். நேரடியாக கேட்க எனக்கும் பாக்கியம் கிடைத்த மனோகரிதாவின் அரிதான அந்த இசையும், குழந்தைகள் போன்ற முழுநிறைவான அவரது முகமும் என் மனதில் என்றும் நீடித்திருக்கும்.


உலகமெங்கும் பெரும்வெற்றிபெற்ற பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில், அந்த வீரசாகச நாயகன் நம்மை பார்த்து சுடுவதை ஒரு துப்பாக்கிக் குழல் வழியாக நாம் பார்ப்பதுபோல் சித்தரிக்கப்படும் தலைப்புக் காட்சியில் ஒலிக்கும் உத்வேகமூட்டும் இசையை அமைத்தவர் யார்? டான்ஸஸ் வித் த வுள்வ்ஸ், அவுட் ஆஃப் ஆஃப்ரிக்கா, சம்வேர் இன் த டைம், கிங் காங், பாடி ஹீட், மிட்னைட் கௌபாய், சாப்ளின், இன்டீசன்ட் ப்ரொப்போசல், எனிக்மா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலமான ஆங்கிலப்படங்களில் நம்மை காதல் ஏக்கத்தில் வாடவைத்து, கலாபத்தில் திளைக்கவைத்து, சாகசக்காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மர்மக்காட்சிகளிலுமெல்லாம் அதிரவைத்த மந்திரஜாலம் கொண்ட அந்த இசை யாருடையது? உலகின் எக்காலத்திற்குமுரிய மிகச்சிறந்த திரையிசையமைப்பாளர்களின் முன்னனியில் வீற்றிருக்கும் ஜான் பேரி (John Barry) தான் அவர். ஜாஸ் இசை, செவ்வியல் இசை என பல இசை வடிவங்களை, ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களுக்கு அனாயாசமாக பொருத்தியவர். 5 ஆஸ்கர் விருதுகளை பெற்றவர். இங்கிலாந்தின் யோர்க் நகரில் பிறந்து, ஒரு எளிய டிரம்பெட் கருவியிசைக் கலைஞனாக வாழ்க்கையை துவங்கி பின்னர் 50 ஆண்டுகளுக்குமேல் ஹாலிவுடில் கோலோச்சிய ஜான் பேரி, 2011 ஜனவரி 30ல் காலமானார். எண்ணற்ற திரைக்காட்சிகளை தனது இசையால் அவர் வலிமைப்படுத்திய விதத்தையும் மிகநேர்த்தியாக அமைக்கப்பட்ட அவரது பின்னணி இசையின் உணர்ச்சிப் பெருக்கெடுப்பையும் ஆற்றலையும் திரையிசை ரசிகர்களால் ஒருபோதும் மறக்கமுடியாது. சம்வேர் இன் த டைம் படத்தின் மைய இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.


இன்றைக்கு வெளிநாடுகளில் இந்தியாவின் வெகுஜன நடன இசை என்றால் அது பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற இசையான பாங்க்ரா மட்டுமே தான்! ஹிந்தித் திரைப்படங்கள் வழியாகவும் வெளிநாடுகளில் குடிபுகுந்த, ஆடலுடன் பாடலை விரும்பும் பஞ்சாப் மக்களினாலும் இவ்விசை வடிவம் உலகப்புகழடைந்தது. குர்தாஸ் மான், ஜாஸி பி, அமான் ஹாயெர், குபி ஸாந்து, மால்கிட் சிங், ஹர்பஜன் மான், தலேர் மெஹ்ந்தி போன்றவர்கள் உலகப்புகழ்பெற்ற பாங்க்ரா பாடகர்கள் தான். ஆனால் இவர்கள் யாருமே பஞ்சாபின் தூய நட்டுப்புற இசையை முன்னெடுத்தவர்கள் அல்ல. பாங்க்ராவின் தூய வடிவமான கலியான் எனும் இசையை தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியவர் குல்தீப் மானக். ஒரு தந்தி மட்டுமே கொண்ட தும்பி எனும் பஞ்சாபி இசைக்கருவியை சிறப்பாக இசைத்தவண்ணம் இசையின், வரிகளின் ஆத்மாவை உணர்ந்து அசாதாரணமான உணர்ச்சி வெளிப்பாட்டுடன் பாடியவர் குல்தீப் மானக். தனது நிலப்பகுதியின் இசையை உலக வணிகத்துக்கேற்ப மாற்றியமைத்து மாசுப்படுத்தாமல் கட்டிக்காத்தவர். பாரம்பரிய பஞ்சாபி நாட்டுப்புற இசையை அதன் எல்லைகளுக்கே கொண்டுசென்றவர். இளம்வயதிலிருந்தே இசைக்கும் மதுவுக்குமாக வாழ்வை அர்ப்பணித்தவன் நான் என்று சொல்லி இசையையும் குடியையும் கொண்டாடியவர். நன்றாக குடித்தபின்னரும்கூட வெகு சிறப்பாகப் பாடக்கூடியவர். லத்தீப் முகம்மதாக பிறந்து குல்தீப் மானக் என்ற பெயரில் புகழடைந்த அவர் கடந்த நவம்பர் 30ல் இறந்துபோனபோது பஞ்சாபி நாட்டுப்புற இசை இழந்தது அதன் எக்காலத்துக்குமுரிய மகாக்கலைஞனை.


லிஸ் ஆன்டர்சனின் (Liz Anderson) வலி ததும்பும் குரலுடன் அவரது புன்னகை ஒருபோதும் ஒத்துப்போகாதது. கண்மூடி அவரது பல பாடல்களை கேட்டால் கண்ணீரை அடக்குவது கடினம். ஆனால் ஒரு பாடகி என்பதை விட ஒரு பாடலாசிரியரும் இசையமைப் பாளருமாகத்தான் அமெரிக்க கண்ட்ரி இசையில் லிஸ் ஆன்டர்சன் புகழடைந்தார். மெர்லெ ஹகார்ட் போன்ற பெரும்புகழ்பெற்ற பல கண்ட்ரி பாடகர்களின் முக்கியமான வெற்றிப் பாடல்களை எழுதி இசையமைத்தவர் லிஸ் ஆன்டர்சன் தான். அமெரிகாவில் பெண் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எந்தவொரு இடமும் அளிக்கப்படாத காலகட்டத்தில் இசைத்துறையில் நுழைந்து தனது கவித்துவத்தாலும் இசைத்திறனாலும் திடமான முத்திரையை பதித்தவர் லிஸ். காதல் தோல்வியையும் காதலில் தொடர்ந்து நிகழும் ஏமாற்றங்களையும் தனது பாடுபொருளாக்கினார். காதல் முடிகிறது (Love is Ending), மிகச்சிறிய கண்ணீர் துளிகள் (Tiny Tears), மீண்டும் மீண்டும் அழுதிடு (Cry, Cry Again), ஒரு ராட்டினம் போல் (Like a Merry Go Round) போன்ற லிஸ் ஆன்டர்சனின் பாடல்கள் மறக்கமுடியாதவை. கடந்த அக்டோபர் 31ல் லிஸ் இறந்துபோனார். அவரது அழகான சிரிப்பும் அழவைக்கும் பாடல்களும் கண்ட்ரி இசை ரசிகர்களின் மனதைவிட்டு எளிதில் நீங்கப்போவதில்லை.


மலையாளத்தில் ஜான்ஸன் என்று ஒரு இசையமைப்பாளர் இருந்தார். உலக சினிமா இசையை அறிந்தவர்கள் அவரை மலையாளத்தின் ஜான் வில்லியம்ஸ் (பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர்) என்றழைத்தனர். தென்னிந்திய சினிமா இசையை மட்டும் கவனிப்பவர்கள் அவரை மலையாளத்தின் இளையராஜா என்றழைத்தார்கள். ஆனால் சினிமா பின்னணி இசையமைப்பில் அவர் இவ்விருவருக்குமே நிகரானவர் என்றே சொல்வேன். சந்தேகமிருந்தால் தூவானத்தும்பிகள், ஸதயம், அமரம், தகரா, மணிச்சித்ரத்தாழு, நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள் போன்ற அவரது படங்களின் உலகத்தரமான பின்னணியிசையை கேட்டு பாருங்கள். கூடெவிடே, கிரீடம், செங்கோல், சல்லாபம் போன்ற படங்களின் பாடல்களை கேட்டு பாருங்கள். உறிய வாய்ப்புகள் கிடைத்திருந்தால் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்குமளவுக்கு வல்லமை படைத்திருந்தவர். மலையாளத்தில் மிக அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர்களில் ஒருவர். இனிய மெல்லிசை மெட்டுக்களாக நூற்றுக்கணக்கான பாடல்களைத் தந்தவர். இரண்டுமுறை தேசிய விருதை பெற்றவர். வேறு யாருடைய பாதிப்பும் இல்லாமல், தூண்டுதல் என்ற பெயரில் அங்கிருந்தும் இங்கிருந்தும் திருடாமல் மிக நேர்த்தியாக தனது இசையை வழங்கியவர். சீறிப்பாயும் ரயிலிலிருந்து தெறித்து வெளியே விழுந்தும் கூட ஒருமுறை உயிர் தப்பியவர். கடந்த ஆகஸ்ட் 18ல் மாறடைப்பினால் இறந்துபோனபோது அவருக்கு 57 வயது. இதயத்தால் இசையை அறிய விரும்புபவர்கள் இருக்கும்வரைக்கும் ஜான்ஸனின் இசையும் உயிருடனிருக்கும்.


வார்னர் ம்யூசிக்கின் இந்திய கிளையான மேக்னாசவுண்ட் இசைநிறுவனத்திலிருந்து வேலை விட்டு பிரிந்தபோது அங்கிருந்து எனக்கு மீதமாக வரவேண்டியிருந்த முழுவன் பணத்துக்கு ஒலிநாடாக்களையும் இசைத்தகடுகளையும் வாங்கிக்கொண்டுவந்தவன் நான். அடுத்த மாதச் செலவுகளுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதெல்லாம் அப்போது நான் யோசிக்கவேயில்லை. பின்வந்த வேலையும் கூலியுமில்லாத பல மாதங்களில் அவ்விசை கேட்பது மட்டும் தான் என் வேலையாகயிருந்தது. அப்போது நான் கேட்ட ஒரு முக்கியமான அமெரிக்க கறுப்பின பாடகர் லீ ஷாட் வில்லியம்ஸ். ப்ளூஸ் எனும் இசை வடிவத்தில் பல மாற்றங்களை செய்து பார்த்தவர். ப்ளூஸ் இசைக்கு புதிதான ஒரு ஒலியை உருவாக்க முயன்றவர். பதினைந்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டார். 40 ஆண்டுகள் நீடித்த தனது இசை வாழ்க்கையில் You’re Welcome to the Club, I’m Tore Up, I Like Your Style, Hello Baby போன்ற துடிப்பான வெற்றிப் பாடல்களையும் அதீதமான காமச்சுவை கொண்ட Meat Man, Everything I Like to Eat Starts with a P போன்ற பாடல்களையும் எழுதி இசையமைத்து பாடியவர் லீ ஷாட் வில்லியம்ஸ். ஆர் அண்ட் பி, டிஸ்கோ போன்ற இசை வடிவங்களுடன் ப்ளூஸ் இசையை இணைத்தவர்களில் முன்னோடியான லீ ஷாட் வில்லியம்ஸ் கடந்த நவம்பர் 25ல் மரணமடைந்தார்.


மனிதன் மனிதனுக்கு உதவவில்லையென்றால் யார் அவனுக்கு உதவுவார்?என்று பாடியவர் பூபேன் ஹசாரிகா. வெறும் பத்தே வயதில் தனது முதல் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர். அஸ்ஸாம் மாநிலத்தையும் அதன் நாடுப்புற இசைச் செல்வத்தையும் உலகுக்கு அடையாளம் காட்டியவர். அஸ்ஸாமி, வங்காளி, ஹிந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி பாடியவர். பதினைந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பல தேசிய மாநில விருதுகளையும் தாதா சாஹேப் ஃபால்கே விருதையும் பெற்றவர். கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும், தேசிய ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் தனது பாடல்களின் பொருளாக்கியவர் பூபேன் ஹசாரிகா. மானுஷ் மானுஷேர் ஜொன்னே என்கிற அவரது வங்கமொழிப்பாடல் வங்காள தேசத்தில் (Bangladesh) அதன் தேசிய கீதத்திற்கு இணையாக கருதப்படுவது. ருதாலி ஹிந்திப்படத்தில் அவர் இசையமைத்து பாடிய தில் ஹூம் ஹூம் கரே பாடலை கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கும். இளம் வயதில் திருமணமான பின்னர் அமெரிக்காவில் எல்லா சொகுசுகளுடனும் நிரந்தரமாக வாழும் வாய்ப்பிருந்தும், திரும்பி வந்து தனது அஸ்ஸாமிய மக்களுக்காக தனது வாழ்வையும் இசையையும் அர்ப்பணித்தவர் பூபேன் ஹசாரிகா. இதற்காக அமெரிகாவில் நிரந்தரமாக வாழ விரும்பிய அவரது மனைவியிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரிய நேர்ந்தது அவருக்கு! பலகாலம் தனியனாக வாழ்ந்த பின்னர் தன்னைவிட முப்பது வயது குறைந்த திரைப்பட இயக்குநர் கல்பனா லாஜ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த ஆண்டு ஜூன் 30இல் மிக மோசமாக நோயுற்று மும்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 4 மாதக்காலம் உயிருக்கு போராடிய பின்னர் நவம்பர் 5இல் இறந்தார். இறப்புக்கு பின்னர் அவருக்கென்று பத்மவிபூஷணை வழங்கியது இந்திய அரசு! பூபேன் தாவின் இசையையும் வாழ்க்கையையும் பற்றி ஒரு புத்தகமே எழுதவேண்டியிருக்கிறது!


லாரன்ஸ் டாரோ, லெனார்ட் விக்டர், லெனார்ட் ஐன்ஸ்வர்த், லாரி குர்டிஸ், லாரி டென்னிஸ்..... இதெல்லாம் பலரின் பெயர்கள் அல்ல. ஒருவரின் பெயர்தான். அமெரிக்க ஸோள், கண்ட்ரி, பாப் இசைத்துறைகளில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய டோபி க்ரே (Dobie Grey) என்ற கறுப்பினப் பாடகன் ஆரம்ப்காலத்தில் தனது ஒவ்வொரு தோல்விக்கு பின்னரும் மாற்றி மாற்றிப் போட்டு பார்த்த பெயர்கள் இவை! பல ஆண்டுகள் நெருங்காமலிருந்த வெற்றி கடைசியில் தூரத்துக்கு நகர்ந்திடு’ (ட்ரிஃப்ட் எவே) பாடலின் மூலமாக 1973ல் அவருக்குக் கிடைத்தது. நிலத்தை பாட்டத்திற்கு எடுத்து விவசாயம் செய்துவந்த ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். கறுப்பர்களுக்கான கிருத்துவ பாப்டிஸ்ட் சபையில் போதகராகயிருந்த தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்ட கிருத்தவப் பாடல்கள் மட்டும்தான் டோபி க்ரேயின் ஒரேயொரு இசைப்பயிற்சி. வித்தியாசமான குரல், இயல்பான பாடும்முறை, சிறந்த வரிகளை எழுதி இசையமைக்கும் திறன் போன்றவை டோபியிடமிருந்தது. பியானோ, கிதார், டிரம்ஸ் போன்ற கருவிகளை சிறப்பாக வாசித்தார். கூட்டத்துக்கு நடுவே, அன்பின் கரங்கள், என்னைப்பார் என பல சிறந்த பாடல்களை தந்தார். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளிவந்த தனது வெற்றிப்பாடல்களின் புகழொளியினால் இசைத்துறையில் 40 ஆண்டுகள் நீடித்தவர் டோபி க்ரே. கடந்த டிசம்பர் 6ல் நெடுநாள் தன்னை துரத்திய புற்றுநோய்க்கு கீழடங்கி இறந்துபோனார். டோபி க்ரே பாடினார் “என் பாடல்கள் நினைவுகள் தான். மீண்டும் மீண்டும் திரும்பிவரும் நினைவுகள்.


நேப்பாளத்தின் நாட்டுப்புற இசை கேட்பதற்கு நாம் நேப்பாளத்துக்கு போகவேண்டியதில்லை. மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங், ஸிலிகுரி பகுதிகளுக்குப் போனால்போதும். அங்குள்ள ஒவ்வொரு நேப்பாளிக்கும் பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரி ஹீரா தேவி வைபா. ஹீரா வைபாவின் நாட்டுப்புறப்பாடலை உணர நேப்பாள மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. அந்த அளவுக்கு உணர்வு பூர்வமானது அவரது பாடும்முறை. ஃபரியா லாய்தியாச்சன் என்கிற அவரது பாடலை மட்டும் கேட்டுப்பாருங்கள். லதா மங்கேஷ்கருக்கு நிகரான குரல்வளம் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன்! நேப்பாளி பாரம்பரிய நாட்டுப்புறப்பாடல்களை இந்தியாவில் முன்னெடுத்த ஒரே பாடகி ஹீரா வைபா தான். அதனால்தான் இந்தியாவின் ஸிக்கிம், ஹிமாசல் பிரதேசம், உத்தர கண்டம், மேற்கு வங்காளம் மாநிலங்களில் வாழும் அரைக்கோடிக்கும் மேற்பட்ட நேப்பாள மொழியினரின் ஒரே ஒரு பாரம்பரியப் பாடகியாக அவர் கருதப்படுகிறார். நேப்பாளத்திலும் மிகப்பிரபலமாக இருந்தார். 40 ஆண்டுகளில் 300 பாடல்களை பாடி பதிவு செய்தார். எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஃபரியா லாய்தியாச்சன், வாரா தௌரீ ஜாதா, மாயலு பிண்டி சாஹே என அவரது மிகச்சிறந்த பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம். சிக்கிம் மாநில விருது, நேப்பாள அரசின் உன்னத விருதான சாத்னா சம்மான் என பல அங்கீகாரங்கள் அவருக்கு கிடைத்தது. 60 வயதான அவர் கடம்தலா எனும் ஊரில் தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரியில் தனது வீட்டில் குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது நெருப்போடிலிருந்து நெருப்பு அவரது ஆடைகளில் பற்றி ஆளிப்படர்ந்து அதில் கருகி பரிதாபகரமாக இறந்து போனார்.


அமெரிக்காவின் நாட்டுப்புறங்களின், சிறுபட்டணங்களின் இசை வடிவமான கண்ட்ரி இசையின் ஒரு சிறந்த பாடகி பில்லி ஜோ ஸ்பியேர்ஸ். மெல்லிய துயரம் கலந்த, மனவெழுச்சி மிக்க குரலில் அவர் பாடிய பாடல்கள் 1969-79 காலகட்டத்தில் ஐந்து முறை அகில அமெரிக்க கண்ட்ரி இசையின் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தவை. 13 வயதில் பாடத்தொடங்கிய பில்லி ஜோ, ’நிலாவுக்கு கீழே வெறும் தரையில் ஒரு போர்வைக்குமேல் படுத்தவண்ணம் நமது காதலை பரிமாறியது மறந்து விட்டாயா?’ போன்ற வரிகள் வரும் ’ப்ளாங்கெட் ஆன் த கிரவுண்ட்’ பாடலினால் உலகப்புகழடைந்தார்.’ Too Old For Toys, Too Young For Boys’ என்பது அவரது இன்னுமொரு மிக சுவாரசியமான பெரும்புகழ் பாடல். வெற்றியின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது குரல் நாணின்மேல் ஏற்பட்ட கோளாறுகள் அவரது குரலை முற்றிலுமாக இல்லாமலாக்கியது. ஆனால் இரண்டுமுறை மேற்கொண்ட அறுவை சிகிட்சையால் குணமடைந்து மீண்டும் இசைக்கு திரும்பி வந்தார். Mr. Walker It's All Over, Misty Blue’.’What I've Got in Mind என அருமையான பல பாடல்களைத்தந்த பில்லி ஜோ புற்றுநோயினால் அவதிப்பட்டுவந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தார். இயல்பான பாடும்முறையும், மெல்லிய உடல் அசைவுகளும், ஆத்மார்த்தமான புன்னகையும் பில்லி ஜோ ஸ்பியேர்ஸின் இசைத்தோற்றத்தின் அடையாளங்களாக இருந்தது.


2000ல் வெளிவந்து புகழடைந்த பியா பசந்தீ ரே காஹே சதாயே ஆஜாஎன்ற ஹிந்திப் பாடல் ஒரு திரைப்பாடல் அல்ல. அந்த ஆண்டின் மிக அதிகமாக விற்பனையான அந்த தனியார் பாடலின் பெண்குரல் நமது சித்ரா (அவர் சிறப்பாக பாடிய குறைவான பாடல்களில் ஒன்று அது). ஒரு நாட்டுப்புறப் பாடகனின் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் தேர்ந்த ஒரு செவ்வியல் இசை மேதையின் குரல் கட்டுப்பாட்டுடனும் அப்பாடலை இணைந்து பாடிய ஆண்குரல் அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. பின்னர் ஸ்னேஹிதனே பாடலின் (அலைபாயுதே) ஹிந்தி வடிவத்தின் தலைப்பு வரிகளில் அக்குரல் ஒலித்தது. தொடர்ந்து பலமொழி திரைப்பாடல்களில் இத்தகைய ஆரம்ப ஆலாபனைகளாகவும் பின்குரல்களாகவும் பயன்படுத்தப்பட்டது அந்த குரல். இந்தியக்கண்டத்தில் இதுநாள் வரைக்கும் தோன்றிய மிக முக்கியமான சாரங்கி இசைக்கருவி கலைஞரான உஸ்தாத் சுல்தான் கானின் குரல் தான் அது. மனிதக்குரலுக்கு மிக நெருக்கமான ஒலிகொண்ட இசைக்கருவி என்பதனால் சாரங்கியை வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியமாகத்தான் நூற்றாண்டுகளாக பயன்படுத்தினார்கள். ஆனால் உஸ்தாத் சுல்தான் கானின் முயற்சியினால் இன்று அது ஒரு தனிச்சிறப்பான இசைக்கருவியாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் அவர் எண்ணற்ற சாரங்கி கச்சேரிகளை நடத்தினார். பீட்டில்ஸ் குழுவின் ஜார்ஜ் ஹாரிஸனுடன் இணைந்து மேற்கத்திய இசையிலும் சாரங்கியை பயன்படுத்தினார்! காந்தி போன்ற எண்ணற்ற திரைப்படங்களின் பின்னணி இசையிலும் பல இந்தியமொழிப்பாடல்களிலும் சாரங்கியை அதிசயகரமாக இசைத்தவர் சுல்தான் கான். ரவி ஷங்கர், அல்லா ரக்கா, சக்கீர் ஹுசைன், லதா மங்கேஷ்கர், உலகப்புகழ் பேஸ் கிதார் கலைஞன் பில் லாஸ்வெல் போன்றவர்களுடனெல்லாம் சேர்ந்தியங்கி அவர்களால் போற்றிப்புகழப்பட்ட உஸ்தாத் சுல்தான் கான் இந்திய அரசின் பத்மபூஷண் விருதையும் இரண்டுமுறை சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றவர். இசைக்கு மதமோ ஜாதியோ நாடோ கலாச்சாரத் தடைகளோ இல்லை என்று தனது இசையாலும் வாழ்க்கையாலும் நிரூபித்த உஸ்தாத் சுல்தான் கான் கடந்த நவம்பர் மாதத்தில் சிறுநீரக நோயினால் மும்பாயில் இறந்து போனார். அவர் பிறந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் அவரது நல்லடக்கம் நடந்தபோது பல்லாயிரக் கணக்கானோர் தங்களது உஸ்தாதுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்கள்.


கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஜாஸ், ப்ளூஸ், ஸோள் பாடகிகளின் பட்டியல்களில் பிரதான இடங்களிலேயே இருப்பவர் எட்டா ஜேம்ஸ் (Etta James). க்ரிஸ்டினா அக்விலேரா போன்ற பல பிற்காலப் பாடகிகளுக்கு ஆதர்சமாக இருந்தவர். டைட்டானிக் படத்தில் செலின் டியோன் பாடிய Every Night in My Dreams ஐ எப்படி நமது காலகட்டத்தில் உலகம் கொண்டாடியதோ அதைவிட பெரிதாக 1950களில் கொண்டாடப்பட்ட பாடல் எட்டா ஜேம்ஸின் அட் லாஸ்ட்’. பல கிராமி விருதுகளை வென்றவர். I Would Rather Go Blind, Tell Mama, Dance with Me Henry போன்றவை எட்டாவின் உலகப்புகழ் பாடல்கள். ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம், கிராமி ஹால் ஆஃப் ஃபேம் போன்ற பெருமதிப்பு மிக்க இடங்களை அடைந்தவர். டோரத்தி என்கிற ஏழை கறுப்பினப் பெண்ணுக்கு அவளது பதினாங்காவது வயதில் பிறந்த குழந்தை எட்டா. பல ஆண்களுடன் உடலுறவு வைத்திருந்த டோரத்தியால் எட்டாவின் தந்தை யாரென்று தீர்மானிக்க முடியவில்லை! தெருக்களிலும் அனாதை விடுதிகளிலுமாக வளர்ந்து வந்த எட்டா மிகச்சிறிய வயதிலேயே போதைப்பொருள்களுக்கு அடிமையானாள். பலமுறை சிறைக்கு சென்றாள். ஆனால் அதையெல்லாம் தனது இசையால் கடந்துசெல்ல எட்டாவால் முடிந்தது. இசை மட்டும் இல்லையென்றால் இளம் வயதிலேயே கலிஃபோர்னியா ஏதோ ஒரு தெருவில் அனாதைப் பிணமாகக் நான் கிடந்திருப்பேன் என்று சொன்ன எட்டா, தனது வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் ஒரு நல்ல தாயாக, நல்ல மனைவியாக வாழ்ந்தவர். போனமாதம் (ஜனவரி) 20ல் எட்டா ஜேம்ஸ் இறந்தார். வலிமையும் வலியும் ஒரேபோல் ஒலிக்கும் தனது பாடல்கள் வழியாக எட்டா ஜேம்ஸ் உயிருடனிருப்பார்.


படத்தின் பெயர் அமர் அக்பர் ஆன்டணி. ஆண்டு 1977. நாயகன் அமிதாப் பச்சன். இசை லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால். அந்த படம் இன்றைக்கும் நினைவுகூறப்படுவது கிஷோர் குமார் பாடிய ஒரு பாடலுக்காகத்தான். ‘மை நேம் இஸ் ஆன்டணி கோண்ஸால்வஸ், மே துனியா மே அகேலா ஹூம் (நான் இந்த உலகில் ஒரு தனியன்). அப்பாடலில் வரும் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற பெயர், மேதமை மிகுந்த ஒரு இசைக்கலைஞனுடையது. மேற்கத்திய வயலின் இசையிலும் ஜாஸ் இசையிலும் ஆர் டி பர்மன், லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால் போன்றவர்களின் குருவாக இருந்தவர் ஆன்டணி கோண்ஸால்வஸ். 1940 தொடங்கி 25 ஆண்டுகள் ஹிந்தித்திரையில் வந்த ஜாஸ், இரவு விடுதி நடனம், மேற்கத்திய செவ்வியல் பாணிகளிலான பாடல்களையும், அக்கால படங்களில் வந்த அவ்வகை பின்னணி இசையையும் ஒழுங்கு செய்தவர் அவர். பல படங்களுக்கும் பாடல்களுக்கும் உணர்ச்சிப்பெருக்குடன் வயலினை இசைத்தவர். 1927ல் கோவாவின் மஜோர்தா கிராமத்தில் பிறந்த ஆன்டணி ஒரு சிறந்த கருவியிசை கலைஞனாக கோவா முழுவதும் அறியப்பட்ட பின்னர்தான் திரைப்பட இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசையுடன் ஹிந்தி சினிமாவில் புகுந்தார். ஆனால் 25 ஆண்டுகள் தாண்டிய பின்னரும் ஒரு இசைக் கோர்வையாளர் என்கிற இடத்திலிருந்து அவருக்கு எந்தவொரு பதவி உயர்வும் கிடைக்கவில்லை. மனம்நொந்த ஆன்டணி 1965ல் திரைத்துறையை முற்றிலுமாக உதறிவிட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கு அமெரிக்க இசைஞர்கள் கழகம் அவரை வரவேற்றது. பல சிம்ஃபொனி இசைக்குழுக்களில் பணியாற்றினார். வேலைக்கு தகுந்த ஊதியமும் மனநிறைவும் அவருக்கு அங்கு கிடைத்தது. பிறந்த மண்ணை மிகவும் நேசித்த ஆன்டணி 1983ல் கோவாவில் தனது கிராமத்துக்கு திரும்பினார். அங்கே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண கிராமவாசியைப்போல் 30 ஆண்டுகாலம் வாழ்ந்த அவர் போனமாதம் 19ல் இறந்துபோனார். ஆயேகா ஆனேவாலா, ஹம் ஆப் கி ஆங்கோம் மே போன்ற அழியாப்பாடல்களை கேட்கும்பொழுது ஒரு கணம் ஆன்டணி கோண்ஸால்வஸ் என்கிற இசை மேதையையும் நாம் நினைவு கூர்வோம்.


ஒரு மிகச்சிறந்த பாடகிக்கு தேவையான குரல் வலிமையும் குரல் கட்டுப்பாடும் என்னவென்று தெரியவேண்டுமானால் நாம் விட்னி ஹ்யூஸ்டனைத் தான் கேட்கவேண்டும். ஒருகணம் இளம்தென்றலாகவும் மறுகணம் பெரும்புயலாகவும் உருமாறக்கூடிய வல்லமைகொண்ட குரல் அது. 80-90களில் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிகரான உலகப்புகழுடனிருந்தவர். I will Always Love you, I'm your Baby Tonight, I Get So Emotional, I have Nothing என சொந்தம் காதல் உணர்ச்சிகளையும் இயலாமைகளையும் அதிகமாக பாடிய விட்னியின் பாடல்கள் ஆங்கிலம் புரியும் உலக நாடுகள் அனைத்திலும் பெரும்புகழ் பெற்றவை. வெறும் 14 வயதிலேயே அரிதான தனது குரலாலும் எல்லைகளற்ற பாடும் திறனாலும் ஒரு உச்சநட்சத்திறமாக மாறினார் விட்னி ஹ்யூஸ்டன் என்கிற பாடகி. ஆனால் விட்னி ஹ்யூஸ்டன் என்கிற பெண் குடும்ப பிரச்சினைகளாலும் போதைப்பொருட்களாலும் தாறுமாறாக்கப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். போனவாரம் கலிஃபோர்னியாவின் ஒரு தங்கும் விடுதியின் குளியலறை தொட்டியில் இறந்து கிடந்தார். தனது 48 வயதில் விடைபெற்றுச்சென்ற விட்னி ஹ்யூஸ்டனின் உலகம் முழுவதுமுள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் இப்படி எழுதினார். அன்புள்ள என் விட்னி, உங்கள் முதல் பாடலிலிருந்தே உங்களை பின்தொடர்ந்தவள் நான். ஒருபோதும் நான் உங்களை விட்டு விலகவில்லை. உங்களை ஒழுங்கற்றவள், போதைப்பொருள் அடிமை என்றெல்லாம் உலகம் பழித்தபோதிலும் நான் உங்களுடன் தானிருந்தேன். உங்களது பாடல்கள் என் துயரின் கணங்களில் என்னை ஆறுதல் படுத்தியது. நான் விழுந்தபோதெல்லாம் அவை என்னை தாங்கியது. ஆனால் நீங்கள் விழுந்தபோது என்னால் உங்களுக்காக எதுவுமே செய்ய முடியவில்லை. இந்த உலகை விட்டு விலகிய அந்த கணத்திலாவது மனித மனங்களுக்கு விளங்காத அந்த ஆழ்ந்த அமைதியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனக்காக நீங்கள் விட்டுச்சென்ற அழகான இசைக்காக அடங்காக் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன். இனி சுதந்திரமாகப் பறந்து செல் எனது இசை தேவதையே..”.


கலைஞனின் கூர்மையான உணர்ச்சிகள் பலசமயம் அவனுக்கு ஒரு பெரும் சுமை. அபாயகரமான நேர்மையுடன் வாழ விரும்பும் ஒரு கலைஞன் ஆபத்துகளின்மேலேயே நடந்துகொண்டிருப்பவன். இவ்வுலகில் வாழ்வதைவிட இறந்துபோவது நல்லது என்று பலமுறை நினைக்காத சிறந்த கலைஞர்கள் இருப்பார்களா எனபது சந்தேகம்தான். ஆனால் ஒரு ரசிகனுக்கு தான் விரும்பும் கலைஞனின் மரணம் என்பது மிகத்துயரமானது. அது ஒரு காலகட்டத்தின் மரணம். நம்மை நாமாக்கிய சில உணர்வுகளின் மரணம். இனிய இசை என்பது இறவாமல் எல்லா அஸ்தமனங்களுக்கும் அப்பால் வாழ்ந்துகொண்டேயிருக்கும் என்கிற ஆசுவாசம் மட்டும்தான் நமக்கு மீதமிருக்கிறது.