20120506

ராக் அண்ட் ரோல் அல்லது சக் பெர்ரி 2

பாகம் - 2

வேகமாகத் தொடங்கி சீக்கிரம் முடியும் தனது பாடல்களுக்கிணங்க வாத்து நடை (Duck Walk) என்கின்ற பெயரில் அவர் உருவாக்கிய மேடை நடன அசைவுக்கு நிகராக இவ்வுலகில் இருப்பது மைக்கேல் ஜாக்ஸன் உருவாக்கிய நிலா நடை (Moon Walk) மட்டுமே! மிகக்கடினமான இசைப்பகுதிகளை கிட்டாரில் இசைத்துக்கொண்டே ஒரு வாத்தின் அல்லது நெருப்புக் கோழியின் உருவத்தைப்போல் கால்களை மடித்து கழுத்தை முன்னும் பின்னும் ஆட்டி தாளத்தில் நடனமாடுவதுதான் சக் பெர்ரியின் வாத்து நடை. அதை இன்றளவுக்கும் வேறு யாராலும் நகலெடுக்க முடியவில்லை! சக் பெர்ரியின் பாட்டும் ஆட்டமும் அவர் கிட்டார் இசைத்த முறையும் மேடையில் அவருக்கு ஒரு அமானுடத் தன்மையை அளித்தது. அவை அவரது அழகின்மையை பேரழகாகக் காட்டியது. குளிர்காலங்களிலும் குளிர்ந்த அரங்குகளிலும் கூட வேர்வை சிந்திக்கொண்டே அவர் ஆடிப்பாடினார்.

ஜானி பி குட், ரோல் ஓவர் பீத்தோவன், மெம்ஃபிஸ் டென்னஸி, யூ கேன்ட் கேச் மீ, லிட்டில் க்வீனி, மேபெலீன், நோ பர்டிகுலர் ப்ளேஸ் டு கோ, லெட் இட் ராக், பிராமிஸ்ட் லேன்ட், யூ நெவெர் கேன்ட் டெல், நேய்டீன், ஸ்வீட் லிட்டில் ஸிக்ஸ்டீன், ரீலின் அன்ட் ராக்கின், கேரோல், தேர்டி டேய்ஸ், டூ மச் மங்கி பிசினஸ், பிரவுண் ஐட் ஹேன்ட்சம் மான் என அடுக்கிக்கொண்டே போகக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கினார். எப்படி ராக் இசை அவரது பாடல்களிலிருந்து உருவானதோ அப்படியே தான் இன்றைய ராப் அல்லது ஹிப் ஹோப் என்றழைக்கப்படும் இசையும் உருவானது என்று சொல்லலாம். டூ மச் மங்கி பிசினஸ் என்கிற அவரது பாடல்தான் இந்த ராப் இசையின் முன்னோடி.

உலகம் இதுவரைக்கும் கண்ட மிகச்சிறந்த வெகுஜென இசைக் கலைஞர்களின் பட்டியல்களிலும் உலகின் எக்காலத்திற்குமான மிகச்சிறந்த கிட்டார் கலைஞர்களின் பட்டியல்களிலும் எப்போதுமே முதல் பத்து இடங்களுக்குள்ளே தான் சக் பெர்ரி இருக்கிறார். கறுப்பு வெளுப்பு பேதமில்லாமல் எல்விஸ் ப்ரெஸ்லி, ஜான் லென்னான், பீட்டில்ஸ், பாப் டிலன், ரோலிங் ஸ்டோண்ஸ், பீச் பாய்ஸ், ஜெர்ரி லீ லூயீஸ், எல்டன் ஜான், கான்வே ட்விட்டி, யுறையா ஹீப், ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன், சைமன் கார்ஃபங்கல், எறிக் க்ளேப்டன், ஜிமி ஹென்ட்ரிக்ஸ், லெட் ஜெப்பெல்லின், வான் ஹெலன், ஏசி டீசி, பால் அன்கா, டேவிட் போவி என சக் பெர்ரியின் பாடல்களை நகலெடுத்தோ மறு ஆக்கம் செய்தோ பாடாத உலக இசை நட்சத்திரங்கள் மிகக்குறைவே! அவரது கிட்டார் உத்திகளினால் பாதிக்கப்படாத ராக் கிட்டார் கலைஞர்கள் யாராவது இருப்பார்களா என்பதும் சந்தேகமே.நானும் எல்விஸும் சிறந்தவர்கள் தான். ஆனால் நாங்கள் யாருமே சக் பெர்ரி இல்லை என்றுதான் ஜெர்ரி லீ லூயீஸ் ஒரு முறை சொன்னார். ராக் அன்ட் ரோலுக்கு ஒரு மறுபெயர் இருந்தால் அது சக் பெர்ரி என்றுதான் இருக்கும் என்று சொன்னவர் ஜான் லென்னான்!

குற்றங்களும் குழப்பங்களும் எதிர்பாராத எண்ணற்ற திருப்பங்களும் நிறைந்த சக் பெர்ரியின் வாழ்க்கை ஒரு அதிசயப் புனைகதைக்கு நிகரானது. மிசோரி மாநிலத்தின் செயின்ட் லூயீஸ் நகரில் ஒரு பகுதிநேர தேவாலய ஊழியரின் ஆறு குழந்தைகளில் ஒருவனாக 1926ல் பிறந்த சார்லெஸ் எட்வார்ட் ஆன்டர்சன் பெர்ரி தான் பின்னர் சக் பெர்ரியாக புகழடைந்தார். அமேரிக்காவின் பல பகுதிகளில் அப்போது கறுப்பர்களுக்கு சொந்தமாக இடமோ வீடோ வாங்க உரிமையில்லாமலிருந்தது. சக் பெர்ரியின் குடும்பம் வாழ்ந்த பகுதியில் அவ்வுரிமை இருந்தும் பணம் பற்றாக்குறையினால் அவர்களுக்கு சொந்தமாக வீடோ சொல்லும்படியான உடமைகளோ எதுவும் இருக்கவில்லை.

அவரது அப்பா ஒரு ஆசாரியாகவும் வேலை பார்த்து வந்தார். அம்மா ஒரு பகுதிநேர ஆசிரியை. நன்றாகப்பாடுவார். ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டிருந்த அவ்வீட்டில் அடிக்கடி தேவாலய குழு இசைப் பயிற்சிகள் நடக்கும். இவைதான் சக் பெர்ரியின் முதல் இசை அனுபவங்கள். ஆறுவயதிலிருந்து அவ்விசையில் பங்கேற்க ஆரம்பித்தார். பதின்பருவத்தின் தொடக்கத்தில் முன்பின் தெரியாமலே ஒரு கிட்டாரை கையிலெடுத்து இசைத்து பள்ளி நிகழ்ச்சியில் பாடினார். அது அனைவருக்கும் பிடித்துப்போனது. அதைத்தொடர்ந்து மிகக்குறைந்த காலம் கிட்டாரின் அடிப்படைகளை கற்றுக்கொண்டான். பள்ளிப் படிப்பினிடையே பணம் சம்பாதிப்பதற்காக ஒரு முடிதிருத்தும் கடையில் உதவியாளனாக வேலை செய்தார்.

ஆழ்ந்த மதநம்பிக்கையில் வளர்த்ததினால் மட்டும் குழந்தைகள் நல்லவர்களாக வளர்ந்து வருவார்களா என்ன? தனது 17ஆவது வயதில் சில நண்பர்களுடன் வழிப்பறித் திருட்டுக்கு இறங்கினார் சக் பெர்ரி! வேலை செய்யாத ஒரு பழைய கைத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு கன்ஸாஸ் நகரிலுள்ள மூன்று கடைகளை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த துப்பாக்கி முனையில் ஒரு காரை திருடி அதில் தப்பிக்க முயலும்போது காவல்துறையின் கையில் சிக்கினார்கள். மூன்றாண்டுகள் சிறைவாசம் விதிக்கப்பட்டது. வயது குறைவானவர்களுக்கான அந்த சிறையில் ஒரு நால்வர் இசைக்குழுவை உருவாக்கி அதில் பாடினார்!

தனது 21ஆவது பிறந்தநாளில் சிறையிலிருந்து வெளிவந்த சக் பெர்ரியை அவரது குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். முதல் குழந்தை அடுத்த ஆண்டு பிறந்தது. ஒரு வாகனத்தொழிற்சாலையில் தினக்கூலியாகவும், தான் வாழ்ந்து வந்த குடியிருப்பில் துப்புறவாளனாகவும் ஒரு இரவுக் காவலனாகவும் இக்காலகட்டத்தில் பணியாற்றினார் சக் பெர்ரி. பணம் வரும் பட்சத்தில் எந்த வேலையைச் செய்யவும் அவர் தயாராக இருந்தார். இப்படி சேர்த்த பணத்தை வைத்து 1950ல் கறுப்பர்கள் மட்டுமே வாழும் ஏழ்மைப்பகுதி ஒன்றில் 40 ஆண்டுகள் பழமையான ஒரு சிறிய வீட்டை வாங்கினார். அதிலிருந்துகொண்டுதான் ஜானி பி குட், ரோல் ஓவர் பீத்தோவன், ஸ்வீட் லிட்டில் ஸிக்ஸ்டீன் போன்ற அழியாப்புகழ் பாடல்களை அவர் உருவாக்கினார். 1958 வரை அவர் வாழ்ந்த அந்த வீடு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடமாக அமெரிக்க அரசால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சிறைக்குள்ளே கைதியாக இருந்தாலும் வெளியே காவலனாக இருந்தாலும் தனது இசையை அவர் கைவிடவில்லை. கிட்டார் பயின்றும் பாடியும் தான் அவர் அங்கெல்லாம் நேரத்தை கழித்தார். விரைவில் அங்குள்ள சில இசைக்குழுக்களில் பணியாற்ற ஆரம்பித்தார். அங்கிருந்த ஜானி ஜான்சன் எனும் பியானோ மேதையின் இசைக் குழுவின் முக்கியப் பாடகர் திடீரென்று நோயுற்றபோது 1952ன் புத்தாண்டு இரவு நிகழ்ச்சிக்கு, கிட்டாரில் அப்போதும் தேர்ச்சி பெற்றிருக்காத சக் பெர்ரியை வேறு வழியில்லாமல் பாட அழைத்தார்கள். ஆனால் அதிசயமாக தனது பாடும்முறையாலும் கேளிக்கைத்திறனாலும் அந்நிகழ்ச்சியை ஒரு பெரும் கொண்டாட்டமாக மாற்றினார் சக் பெர்ரி. ஜானி ஜான்சனின் இசைக்குழு விரைவில் சக் பெர்ரியின் இசைக்குழுவாக மாறியது!

ப்ளூஸ் இசையைத்தான் சக் பெர்ரி அப்போது முன்னெடுத்து வந்தார். புகழ்பெற்ற சில ப்ளூஸ் பாடல்களை உருவாக்கிப்பாடிய டி போன் வாக்கரின் (T Bone Walker) மேடை கேளிக்கை உத்திகளை கடன்வாங்கி மேடைகளில் பாடினார். ஹூச்சிக் கூச்சி மேன், மை ஹோம் இன் டெல்டா துவங்கிய எக்காலத்திற்குமுரிய பெரும்புகழ் ப்ளூஸ் பாடல்களை உருவாக்கியவரும் அழுக்குத் தண்ணி (Muddy Waters) என்ற வினோதமான பெயரைக் கொண்டவருமான இசை ஆளுமையின் தீவிர ரசிகராக இருந்தார் சக் பெர்ரி. ஜாஸ், ஸ்விங் இசைமுறைகளின் இதிகாசமான நாட் கிங் கோலின் (Nat King Cole) பாடும்முறையையும் தனது ஆதர்சமாக நினைத்தார்.

இம்மூவரும் கறுப்பர்களாவார். அவர்களது இசையுமே அப்போது கறுப்பினத்தவர்களை மட்டும்தான் சென்றடைந்தது. இவர்களில் தனித்துவமான இசையையும் மேடைப் பாணிகளையும் கலந்து, அத்துடன் வெள்ளையர்களின் கண்ட்ரி இசையையும் இணைத்தால் அவ்விசை முயற்சி வெள்ளையர்களையும் கறுப்பினத்தவர்களையும் ஒரேபோல் சென்றடையும் என்று எண்ணினார் சக் பெர்ரி. பாடல் வரிகளின் மொழியிலும் உச்சரிப்பிலும் கறுப்பின அடையாளங்கள் எதுவுமே இருக்கக்கூடாது என்றும் முடிவெடுத்தார். பின்னர் கறுப்பர்களும் வெளுப்பர்களும் ஒரேபோல் கொண்டாடிய இந்த இசைக் கலவைதான் சக் பெர்ரியை வெற்றியின் அதிஉச்சங்களுக்கு கொண்டுசென்றது.

1955ல் ஒரு இசைத் தட்டு வெளியிடவேண்டும் என்கிற ஆசையுடன் சிக்காகோ சென்று தனது ஆதர்சமான அழுக்குத் தண்ணி மட்டி வாட்டேர்ஸை சந்தித்தார் சக் பெர்ரி. வெகு வினோதமான அந்த மூன்றே நிமிட உரையாடல்தான் சக் பெர்ரியை உலக நட்சத்திரமாக்கியது என்று சொல்லலாம்.

வணக்கம் சார்

என்ன வேணும்?”

நான் உங்கள் தீவிர ரசிகன்

விஷயத்தைச் சொல்லு

நான் ஒரு பாடகன், கவிஞன், இசையமைப்பாளன்

நானும் தான். அதற்கு?”

ஒரு இசைத் தட்டு வெளியிடணும்

வெளியிடு

எந்த நிறுவனத்தை அணுகலாமென்று.....”

செஸ் ரெக்கார்ட்ஸுக்குப் போ. லெனார்ட் செஸ் என்ற ஆளைப் பாரு

மிக்க நன்றி சார். எனது ஒரு பாடலை பாடிக்காட்டட்டுமா? கிட்டார் இருக்கு

இங்கே பியானோவே இருக்கு. ஒண்ணும் தேவையில்லை. கிளம்பு

அடுத்தநாள் செஸ் ரெக்கார்ட்ஸுக்குப் போனார் சக் பெர்ரி. மட்டி வாட்டேர்ஸின் பெயரைவைத்து உள்ளே புகுந்தார். தான் உருவாக்கிய ப்ளூஸ் இசைப் பாணியிலான சில பாடல்களை கிட்டார் இசைத்து லெனார்ட் செஸ்ஸுக்கு பாடிக்காட்டினார். ஆனால் அப்பாடல்கள் எதுவுமே அவருக்கு பிடிக்கவில்லை. மனமுடைந்த சக் புறப்படும் முன் கடைசியாக கண்ட்ரி இசைப்பாணியிலான ஐடா ரெட் எனும் ஒரு பழைய பாடலை எடுத்து தான் மறுஆக்கம் செய்து வைத்திருந்த்தை பாடிக்காட்டினார். அந்த பாடல் லெனார்ட் செஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போனது. உடனடியாக இசைப்பதிவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சில நாட்களுக்குள் மேபெலீன் என்கிற தலைப்பில் பல மாற்றங்களுடன் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. முற்றிலும் ப்ளூஸ் பாணியிலான வீ வீ ஹவேர்ஸ் என்கிற பாடல் அவ்விசைத் தட்டின் மறுபுறத்தில் இடம்பெற்றது. அவ்விசைத் தட்டு பத்து லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது! பின்னர் நிகழ்ந்தது ராக் அன்ட் ரோல் இசையின் குதூகலமான வரலாறு.

சக் பெர்ரியின் பெரும்பாலான பாடல்கள் பெரும்புகழ் பெற்றது. பணமும் புகழும் வந்து குவிந்தது. தோட்டங்கள், வீடுகள், விவசாய நிலங்கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், இரவு நடனத் தலங்கள் என அவரது முதலீடுகள் பெருகியது. கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் அத்துடன் உலகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் ஒரேபோல், பின்பற்றவேண்டிய ஆதர்சமாக மாறினார் சக் பெர்ரி. அனால் அவரது இசை மட்டுமேதான் பின்பற்றக்கூடியதாக இருந்தது!

1959ல் ஒரு உலக உச்சநட்சத்திரமாக உலா வந்துகொண்டிருந்தபோது அவர் மீண்டும் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பதினாங்கே வயதான சிவப்பு இந்தியப்பெண் ஒருத்தியை கற்பழித்தார் என்ற குற்றத்திற்காக. டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அப்பெண் இரவு நடனத் தலத்தில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தாள். பகல் நேரங்களில் தனது அறையில் அவள் ரகசியமாக விபச்சாரமும் நடத்தி வந்திருந்தாள். வயது வராத ஒரு பெண்ணை வேறு மாநிலத்திலிருந்து கொண்டுவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமைக்காக அவருக்கு ஐந்தாண்டு காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டுமுறை நடத்திய மேல்மூறையீடுகளால் தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 1962-63 காலத்தில் சக் பெர்ரி சிறையில்தான் இருந்தார். ஆனால் அப்போதுதான் அவரது பாடல்கள் உலகப்புகழ்பெற்ற பிற இசை நட்சத்திரங்களால் பாடப்பட்டு உலகின் மூலைமுடுக்கெல்லாம் பிரபலமானது.

கசப்புடன் சிறையிலிருந்து வெளிவந்த சக் பெர்ரி பிற மனிதர்களின்மேல் அவநம்பிக்கை மட்டுமே உள்ளவராக மாறினார். தனது இசைக்குழுவை கலைத்தார். செஸ் இசைத் தட்டு நிறுவனத்தை கையொழிந்து மெர்குரி எனும் நிறுவனத்திற்கு தாவினார். தனது கிட்டார் மட்டுமே வைத்துக்கொண்டு தனியாக இசைப்பயணங்கள் மேற்கொண்டார். அந்தந்த இடங்களிலிருக்கும் தரமற்ற இசைக்குழுக்களுடன் ஒத்திகையே இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தி கெட்டபெயரை சம்பாதித்தார். பழக்கப்பிழர்ச்சியும் சிடுசிடுப்புத்தனமும் அவரது அடையாளமாக மாறியது. எவ்வளவு கேட்டாலும் ஒரு மேடையில் ஒரு பாடலை ஒருமுறைக்குமேல் பாட மறுத்தார்! இக்காலகட்டத்திலும் பல பாடல்களை வெளியிட்டார். நேய்டீன் போன்ற சில பாடல்கள் வெற்றிபெற்றது. இருந்தும் அவை அவர் நினைத்த அளவுக்கு பணம் ஈட்டவில்லை!

மீண்டும் செஸ் நிறுவனத்திற்கு திரும்பினார். அங்கு 1972ல் வெளியிட்ட மை டிங்ஙா லிங்ஙா லிங் என்கின்ற பாடல்தான் அவரது இசை வாழ்க்கையில் மிக அதிகமாக விற்கப்பட்ட இசைத் தட்டு. ராக் எனும் இசை வடிவத்தையே உருவாக்கிய அவரது பல மிகச்சிறந்த பாடல்களுக்கு கிடைக்காத பெரும்வெற்றி இசைத்தரமற்ற, அபத்தமான அந்த பதிவுக்கு கிடைத்தமைக்கு காரணம், அப்பாடலில் புதைந்திருந்த பள்ளிமாணவர்களின் தரத்திற்கும் கீழான ரெட்டை அர்த்தம் தொனிக்கும் கதைத் தன்மை தான்!

ஒரு குட்டிப்பையனாக நான் இருந்தபோது

பாட்டி எனக்கொரு பொம்மை தந்தாள்

ஒரு கம்பியில் இரண்டு வெள்ளி மணிகள்

இதுதான் உனது குஞ்சு மணிக் குஞ்சு என்றாள்

என் குஞ்சு மணிக் குஞ்சு, என் குஞ்சு மணிக் குஞ்சுடன் விளையாட வா

பள்ளி இடைவேளைகளில் அதைப் பிடித்து விளையாடுவேன்

சறுக்கி விழுந்தாலும் இரண்டு கையால் அதை பிடித்துக் கொள்வேன்

இந்த பாட்டை இப்போது என்னுடன் பாடாத சோம்பேறிகளே

போய் உங்கள் குஞ்சு மணிக் குஞ்சுடன் விளையாடுங்கள்

என் குஞ்சு மணிக் குஞ்சு

என் குஞ்சு மணிக் குஞ்சுடன் விளையாட வர மாட்டியா?

பணம் வந்து குவிந்ததில் சந்தோஷமடைந்தாலும் இந்த அபத்தப்பாடலுக்கு கிடைத்த ஆபாசமான வெற்றியை சக் பெர்ரியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் ஒரு பாடலைக் கூட பதிவு செய்யவில்லை. மீண்டுமொரு பாடலைப் பதிவு செய்யவே அவர் விரும்பவில்லை. ஒப்பந்தத்தின் அழுத்தம் காரணமாக 1975ல் சக் பெர்ரி என்ற பெயரிலே சில பாடல்களை வெளியிட்டார். அத்துடன் செஸ் நிறுவனத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறினார். நாலாண்டுகள் கழித்து அட்கோ எனும் இசை நிறுவனம் வழியாக வெளிவந்த ராக் இட் தான் சக் பெர்ரியின் கடைசியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.

தனியாக இசைப்பயணங்களை நடத்தியவண்ணமே இருந்தார். கையில் கிடைத்த இசைக்குழுக்களுடன்! கெட்ட பெயருடன்! இருந்தும் அவரது அதிஉச்ச உலக நட்சத்திர அந்தஸ்தினால் அவரை ஒருமுறை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சிகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிகழ்ச்சிகளுக்கான ஊதியத்தை கணக்கில் சேர்க்காத பணமாக மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தார். பணத்தை சேர்ப்பதற்கும் அதை வெளியே விடாமல் தடுப்பதற்கும் எல்லா வேலைகளும் செய்யக்கூடியவராக அவர் எப்போதுமே இருந்திருக்கிறார் என்றுதான் சொல்லப்படுகிறது!

அவரது தீவிர ரசிகராகயிருந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் வேண்டுகோளுக்கு ஏற்றவாறு 1979ல் வெள்ளை மாளிகையில் ஒரு மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்திய சில நாட்களுக்குள்ளேயே சக் பெர்ரி மீண்டும் கைது செய்யப்பட்டார். இம்முறை பல ஆண்டுகளாக வருவாய் வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றியதற்காக! நான்கு மாத காவல் தண்டனையும் 45 நாள் சமூக சேவையும் அவருக்கு விதிக்கப்பட்டது. அச்சமூக சேவைக்கிடையில் அவரது பத்துக்கும் மேலான இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நட்த்திய அரசாங்கம் அதிலிருந்து திரட்டிய முழுப் பணத்தையும் அபராதத் தொகையாக எடுத்துக்கொண்டது! தொடர்ந்தும் தனது பாடல்களின் புகழின்மேல் ஆண்டில் நூறு நிகழ்ச்சிகள் வரைக்கும் நடத்தி வந்தார் சக் பெர்ரி.

1990ல் சக் பெர்ரியின் உடமையிலான ஒரு உணவகத்திலுள்ள பெண்களின் கழிவறைகளில் ஒளிப்பதிவு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 59 பெண்கள் அவருக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். ஆனால் அதை அவர் செய்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்க அவர்களால் முடியவில்லை. இருந்தும் தன் பெயரில் விழுந்த இந்த புதுக்களங்கத்தை அழிக்கும்பொருட்டு பல லட்சம் டாலர்களை செலவு செய்து அப்பெண்களுக்கு நஷ்டத்தொகையை வழங்கினார். அவரது உருவம் இடம்பெற்றது என்று சொல்லப்பட்ட ஒரு ஆபாசக் காணொளியும் எங்கும் விற்பனைக்கு வந்தது. ஆனால் அதில் இருப்பது அவர்தான் என்று நிரூபணமாகவில்லை.

இதைத்தொடர்ந்து சக் பெர்ரியின் வீட்டில் காவல்துறை நடத்திய அதிரடிப் பரிசோதனையில் குறைந்த அளவில் கஞ்சாவும் சில போதைப்பொருட்களும் ஆயுதங்களும் அத்துடன் 17 வயதுக்கும் கீழான இளம் பெண்களின் ஆபாசக் காணொளி நாடாக்களும் பிடிபட்டன. இம்முறை ஆறுமாத வீட்டுக்காவல் தண்டனையும் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையும் 5000 டாலர் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது.

2000ல் சக் பெர்ரியை முதன்முதலாக பாடவைத்தவரும் பின்னர் பியானோ கலைஞராக பல ஆண்டுகள் அவருடன் பணியாற்றியவருமான ஜானி ஜான்சன் சக் பெர்ரிக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். ரோல் ஓவர் பீத்தோவன் உட்பட சக் பெர்ரியின் 50க்கும் மேற்பட்ட பாடல்களின் உருவாக்கத்தில் தானும் பணியாற்றியவன் என்றும் அதற்கான பணமோ புகழோ தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் வாதாடினார். ஆனால் அவரால் அது நிரூபிக்க முடியவில்லை. 40–50 ஆண்டுகள் கடந்த பின்னர் எழுப்பப்பட்ட அந்த உரிமை கோரலுக்கு எந்த அடித்தளமும் இல்லையென்று நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளியது. ஓரிரு ஆண்டுகளில் ஜானி ஜான்சன் இறந்து போனார்.

ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ அந்தரங்கங்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். மிக அந்தரங்கமான கணங்களில் ஒருவன் யோசிப்பதும் செய்வதும் என்னவென்று அவனைத்தவிர வேறு யாரறிவார்? குற்றம் என்பது ஒரு மனித இயல்பு என்கிறது உளவியல். ஏதேதோ தடைகளினால் அதைச் செய்யாமல் தினமும் அதிலிருந்து தப்பித்துக் கொள்கிறான் மனிதன். சக் பெர்ரி தனது பொதுவாழ்க்கையில் மிகக்குறைவாக பேசியவர். தன் அந்தரங்கத்தைப்பற்றி ஒருபோதும் வெளிப்படையாக பேசாதவர். வெற்றிகளில் பெருமிதத்தையோ தோல்விகளில் ஏமாற்றத்தையோ வெளிப்படையாக காட்டாதவர். தன்மேல் வைக்கப்பட்ட குற்றங்களை மக்கள்முன் ஏற்கவோ மறுக்கவோ செய்யாதவர்!

ஒரே ஒருமுறை அவர் இவ்வாறு சொன்னார். “நான் ஒரு சிறந்த மனிதன் ஒன்றும் அல்ல. பணம் எனக்கு எப்போதுமே மிகமுக்கியமானதாக இருந்தது. நிலம், வீடு, உடமைகள் போன்றவைகள்தான் எப்போதுமே என் கனவாக இருந்தது. ஆனால் எதைச்செய்தாலும் அதை ஆத்மார்த்தமாக செய்யத்தான் நான் முயற்சித்தேன். அதில் பலசமயம் நான் தோற்றுப் போயிருக்கலாம். பிரபலமடைந்த பின்னர் நான் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் பலவற்றில் எனக்கு பங்கில்லை. கோடிக்கணக்கானவர்கள் என்னை ஆழமாக நேசித்தபோது சில ஆயிரம் பேர் என்னை கடுமையாக வெறுத்திருக்கவும் கூடும்”. பணத்தின்மேலான, உடமைகளின்மேலான சக் பெர்ரியின் வெறி என்பது, எதன்மீதும் உரிமை இல்லாமலிருந்த அவரது பால்யத்தின் பிரதிபலிப்புகளாகத்தான் இருக்கவேண்டும்.

தனது 82ஆம் வயதில் பல ஐரோப்பிய நாடுகளில் இசைப்பயணம் மேற்கொண்டார். சரியாகப் பாட அவரால் இயலாதபோதிலும் அவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அந்நிகழ்ச்சிகளில் திரண்டனர். கடந்த புத்தாண்டு இரவின் ஒரு நிகழ்ச்சியில் பாடும்பொழுது மேடையில் தளர்ந்து விழுந்தார். இப்போது 86 வயதான சக் பெர்ரி இன்றும் ஒவ்வொரு மாதமும் சில இரவுகளில் தனது பிறந்த ஊரிலுள்ள புளூ பெர்ரி மலை எனும் இரவு விடுதியில் பாட வருகிறார். அதைக் கேட்க இன்று யாருமே பணம் கட்டவேண்டியதில்லை! முதுமையின் தள்ளாடும் சுவடுகளோடு தனது கிட்டாரை இசைத்து, தாழ்ந்து அடங்கிய சுருதியில் சக் பெர்ரி மீண்டும் பாட முயற்சிக்கிறார்

புறப்படு ஜானி புறப்படு

நலமாக இரு...