20120602

வழக்கு எண் 18/9 : யாருடைய கண்ணீர்?

சார். ஜெயா டி வி யில் லைவ் போயிட்டிருக்கு. ஃபோன்ல வந்து படத்தைப்பற்றி உங்க கமென்ட கொஞ்சம் சொல்ரீங்களா?” என்று வழக்கு எண் 18/9 படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் என்னிடம் கேட்டார். ஒரு நண்பருடன் மதிய உணவுக்காக உணவு விடுதியில் அமர்ந்திருந்த நேரம். ’வழக்கு எண் படத்தை பார்த்தீர்களா?’ என்று கேட்டார் நண்பர். முதல் காட்சியையே பார்த்து இயக்குநரின் எண் தேடிப்பிடித்து அவருக்கு எனது கருத்தையும் தெரிவித்து விட்டிருந்தேன். அப்போது நண்பர் கேட்டமையால் மீண்டும் ஒரு முறை இயக்குநரை அழைத்து படம் எப்படி வரவேற்கப்படுகிறது என்று கேட்கலாமென நினைத்தேன். அப்போது தான் அந்த டி வி லைவ்! ”கட்டாயம் பேசுகிறேன்என்றேன். சில நிமிடங்கள் கடந்தபின் தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு வந்தது. ஒரு குரல் சார். உங்கள லைவ்ல கணெக்ட் பண்ணப்போறேன். பேசுங்கஎன்றதும் இன்னொரு தங்கிலீஷ் குரல் பீரிட்டது. “ஒரு காலர் லைனில இருக்காரு. ஹாய். வெல்கம் டு வழக்கு எண் 18/9 லைவ் ஷோ. உங்க பேரச் சொல்லுங்க”….!

ஒரு கணம் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ’நீங்க தானே என்னைக் கூப்பிட்டீங்க! என் பேர் கூடத்தெரியாமலா கூப்பிட்டீங்க?’ என்று கேட்டு அழைப்பை துண்டித்திருக்கலாம். நேரலை ஒளிபரப்பு என்பதனால் அது அப்படியே மக்களிடம் சென்றிருக்கும். ஆனால் பாலாஜி சக்திவேலும் அவரது படமும் என்னை அப்படி செய்ய விடாமல் தடுத்தது. என்னை அறிமுகப்படுத்தியவண்ணம் படத்தைப்பற்றியான சில கருத்துக்களை சொல்லி முடித்தேன். உடன் வழக்கமாக நாம் ஒரு நேயருக்கு பேச தர்டி செக்கென்டு தான் கொடுப்போம். இவரு டூ மினிட்ஸ் பேசினாரு” என்று அறிவிப்பாளன் சொல்ல, “ஆமாங்க. படம் ரிலீசானதிலிருந்து இந்தமாதிரி காளுக தாங்க ராப்பகலா வருது. கேட்டு கேட்டு காது வலிக்கிற மாதிரி ஆயிடுச்சுஎன்று ஒரு குரல். படத்தின் தயாரிப்பாளரின் குரல் எனப்பட்டது. நான் அழைப்பை துண்டித்து உணவுக்கு திரும்பினேன்.

மே நான்கு வெள்ளிக்கிழமை அன்று தான் வழக்கு எண் 18/9 வெளியானது. அன்று காலை பத்து மணிக்கு கொச்சியிலிருந்து சென்னை வந்திறங்கிய நான் விமான நிலையத்திலிருந்து நேரடியாகப் போனது உதயம் தியேட்டருக்கு தான். பாலாஜி சக்திவேலின் இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புகள் மட்டுமல்ல அதன் காரணம். ஓரிருமுறை சிலநிகழ்ச்சிகளில் நான் அவரை சந்தித்திருக்கிறேன் என்பதுமல்ல. அவரது கல்லூரி திரைப்படம் எனக்கு ஏமாற்றத்தைத் தான் தந்திருந்தது. ஆனால் காதல் என்கிற உண்மை மிகுந்த அவரது படத்தை விடவும் சிறந்த ஒரு படத்தை எடுக்க அவரால் முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதுமே அவர்மேல் இருந்தது. அரங்கில் கூட்டம் நிரம்பிக்கொண்டிருந்தது. ஆங்காங்கு கூச்சல் குழப்பங்களும் சத்தங்களும்! ஆனால் படம் ஆரம்பித்து ஓரிரு நிமிடங்களில் ஒரு வகையான பெரும் நிசப்தம் பார்வையாளர்களுக்கிடையே பரவியது.

நம் சமூகத்தின் அடியாழத்தில் ஊடுருவி அதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டேயிருக்கும் முக்கியமான சில பிரச்சினைகளை செயற்கையான வண்ணங்கள் எதுவும் இல்லாமல் படம்பிடித்து காட்டியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். நமது கிராமத்து விவசாய நிலங்கள் பலரியல் எஸ்டேட்களாக, வணிக நிலங்களாக மாறிக்கொண்டேயிருக்கிறது. அந்த நில உரிமையாளர்களுக்கு அதிலிருந்து கொஞ்சம் பணமாவது கிடைக்கிறது. ஆனால் அங்கு காலங்களாக விவசாயம் சார்ந்த கூலிவேலைகள் செய்து பிழைத்து வந்த ஏழைகள் என்ன செய்வார்கள்? சொந்தமாக விவசாய நிலங்கள் இல்லாதபோதிலும் விவசாயம்தான் தலைமுறைகளாக அவர்களுக்கும் உயிர்மூச்சாக இருந்து வந்தது. ஒருவேளை சோற்றுக்காக கடுமையான வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்காரர்களின் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் அவர்கள். பின்னர் எல்லாவற்றையும் இழந்து பாய் படுக்கையோடு நகரங்களுக்கு புறப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் சென்னை போன்ற பெருநகரங்களில் வந்திறங்கும் ஒடுங்கிப்போன கிராமத்து மக்களின் எண்ணிக்கை பயமுறுத்தும் அளவில்தான் இருக்கிறது!

வழக்கு எண் 18/9 படத்தின் ஆரம்பத்தில் இத்தகைய சூழ்நிலையில் தத்தளிக்கும் தனது குடும்பத்தை எதாவது ஒரு வேலை செய்து காப்பாற்றும் பொருட்டு நகரத்திற்கு புறப்படும் வேலு என்கிற பள்ளிச்சிறுவனின் கண்ணீரினூடாக கிராமத்து காட்சிகள் மறைந்து இல்லாமலாகிறது. அவனது காதுகளிலிருந்து பள்ளிக்குழந்தைகளின் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கி மறைகிறது. படித்து பெரிய ஆளாகவேண்டியவன் வடநாட்டில் எங்கேயோ உள்ள ஒரு உணவு தொழிற்சாலையில் கடுமையான அடக்குமுறைகளின் கீழ் அடிவாங்கி வேலைசெய்து அவஸ்தைப்படுகிறான். பதின்பருவத்தையும் தாண்டி இளமைக்காலம் எட்டிய பின்னரும் அவனது வேதனைகள் குறைந்தபாடில்லை. விவசாய நிலங்களை வெகுவேகமாக வணிகநிலங்களாக்கிக் கொண்டிருக்கும் மண்தோண்டும் பெரும் இயந்திரங்கள் அவனது தாய் தந்தையினரை உயிருடன் மண்மூடிப் புதைத்து விடுகின்றன. அச்செய்தியை காலங்கடந்து தெரிந்துகொண்ட வேலு ஊர் திரும்ப விரும்புகிறான் ஆனால் சென்னையில் ஒரு தள்ளுவண்டி உணவுக்கடையில் வேலைக்காரனாக பாதிவழியில் முடிகிறது அவனது பயணம்.

அத்தெருவிலுள்ள மேல் மத்தியதர மக்களின் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒன்றில் வீட்டுவேலை செய்து பிழைக்கும் ஒரு இளம் பெண்ணிடம் காதல்வயப்படுகிறான். பல தடங்கல்களுக்கு பின்னர் அக்காதல் மெல்ல மலர ஆரம்பிக்கும்பொழுது அப்பெண்ணின் வாழ்க்கையில் கொடூரமான ஒரு சம்பவம் நிகழ்கிறது. அக்குடியிருப்பில் வாழும் இரண்டு பணக்காரக் குடும்பங்களின் வாழ்க்கையில் நடக்கும் சில சிக்கல்களின் காரணமாக நிகழும் அச்சம்பவம் அவளது உருவத்தையும் வாழ்க்கையையும் சிதைத்து விடுகிறது. அதன் பழி வேலுவின்மேல் போடப்படுகிறது! யார் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் அவன் பலியாளாக மாறுகிறான். அடிவாங்கி, ரத்தவெள்ளத்தில் படுக்கிறான். தன்னைப்போன்ற ஒரு ஏழையை உயிரினும் மேலாக காதலித்தான் என்கிற எந்த தவறுமில்லாத ஒரு செயலுக்காக அவன் பெரிய விலை கட்ட நேர்கிறது. ஆனால் தங்களுக்கு நேரும் எந்த ஒரு அனியாயத்தையும் பொருத்துக்கொண்டே வாழும் பெரும்பாலான பெண்களில் ஒருத்தி அல்ல அப்பெண். அவள் என்ன செய்யப்போகிறாள்? ஒரு ஏழையின் வாழ்வுக்கு இவ்வுலகில் எந்தவொரு மதிப்பும் இல்லையா? காதல் என்பது வெறும் உருவத்தையும் உடலையும் மட்டுமே சார்ந்ததா? இது தான் வழக்கு எண் 18/9ன் ரத்தினச் சுருக்கம்.

இக்கதையை விதவிதமான பாத்திரங்களும் சம்பவங்களும் உத்திகளும் வழியாக பாலாஜி சக்திவேல் படமாக்கியிருக்கும் விதம் இந்திய சினிமாவின் ஒரு சமகால உச்சம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் வலுவான திரைக்கதையில் பல பல சமகால சம்பவங்கள், நாளிதழ் செய்திகள் போன்றவற்றை இணைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கையின் சத்து நிறைந்த வசனங்கள், அறிமுக நடிகர்களையெல்லாம் அசாத்தியமான விதத்தில் நடிக்க வைத்திருப்பது, இயல்பான காட்சியமைப்புகள் மற்றும் படப்பிடிப்பு தலங்கள், மிகப் பொருத்தமான உடை அலங்காரம், உயிருள்ள கலை இயக்கம் என பல தளங்களின் ஒரு சிறந்த திரைப்படமாக திகழ்கிறது வழக்கு எண் 18/9. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் மிகப்பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்வதில் பாலாஜி சக்திவேல் அடைந்த வெற்றி நிகரில்லாதது என்றே சொல்வேன். கேனோன் 5டி, 7டி போன்ற நிழற்படமெடுக்கும் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்தி குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்பு இயல்பாகவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

வேலுவாக வந்து அசாத்தியமான முறையில் நடித்து நம்மை ஆச்சரியப்படுத்தும் ஸ்ரீ என்கிற இளைஞனைத் தவிர இப்படத்தின் மையப்பாத்திரங்களாக நடித்திருப்பவர்களில் பலர் தமிழர்கள் அல்ல. கதாநாயகி ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா ஒரு அஸ்ஸாமியப்பெண். வீட்டுவேலை செய்து வாழும் ஏழை தமிழ்ப்பெண்ணாக அவர் வாழ்ந்திருக்கிறார். இன்னுமொரு முக்கிய பெண் பாத்திரமான ஆர்தியாக நடிக்கும் மனிஷா யாதவ் பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒரு வடநாட்டுப்பெண். அவரின் நுண்ணிய நடிப்பும் முகபாவனைகளும் இணையில்லாதது என்றே சொல்லலாம். எதிர் நாயகன் தினேஷாக வரும் மிதுன் முரளி ஒரு மலையாளி. ஆனால் அவர் சென்னையின் பணக்காரப் பையனாக மாறி நம்மை வியக்க வைக்கிறார். காவல்துறை அதிகாரி முத்துராமனாக வரும் குமரவேல் நடிக்கிறார் என்று ஒரு கணம் கூட நம்மால் சொல்லமுடியாது. அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கிறது அவரது நடிப்பு.

வேலுவின் நண்பனாக வரும் இளம் கூத்துக்கலைஞன் சின்னசாமியின் நடிப்பும் வசனங்களும் மிக அற்புதமாகயிருக்கிறது. ஜோதியின் தாயாக வரும் சென்னை சேரிவாழ் பாத்திரத்தின் நடிப்பும் சென்னைத்தமிழும் அதிசயம். தன் மகளை ஒரு வீட்டில் வேலைக்கு சேர்த்து அவளின் சிறப்புகளைப்பற்றி எடுத்துரைத்து பரிதாபமாக சம்பளம் பேரம் பேசும் காட்சியில் அந்த அம்மா நடித்திருக்கும் விதம் அலாதியானது. பசியால் மயக்கம்போட்டு விழுந்து கிடக்கும் வேலுவை தண்ணீர் தெளித்து எழுப்பி அவனுக்கு தள்ளுவண்டிக்கடையில் வேலை வாங்கிக்கொடுத்து, பின்னர் அவனாலேயே சீர்திருத்தப்படும் விலைமாது ரோஸியின் பாத்திரத்தின் உருவாக்கமும் நடிப்பும் அருமை. படிப்பும் பணிவும் தன் மகள்மீது பேரன்பும் கொண்ட ஆர்த்தியின் தாய் பாத்திரம், நியாயமான தார்மீக கோபமும் ரோஷமும் தனது அடையாளங்களாகக் கொண்ட ஆர்த்தியின் அப்பா, வேலுவின் ஏழ்மை மிகுந்த தாய் தந்தையினர்கள், ஆர்தியின் தோழியாக வரும் வடநாட்டுப்பெண், உயர்க்குடி விபச்சாரத்தில் ஈடுபட்டு பெரும் பணமும் அரசியல் பக்கபலமும் வைத்திருக்கும் தினேஷின் தாய், நாசூக்காக லஞ்சம் கேட்கும் அரசு மருத்துவ மனை ஊழியராக ஒரே ஒரு காட்சியில் வரும் பாத்திரம் என இப்படத்தில் நடித்திருக்கும் பல நடிகர்களின் நடிப்பு துளிகூட மிகையில்லாமல் உலகத்தரமானதாக இருக்கிறது. நமது பல நட்சத்திர நடிகர்கள் இவர்களிடமிருந்து கொஞ்சமாவது நடிப்பை கற்றுக்கொண்டால் நலம்.

கடனாளியாக வட்டிக்காரனுக்கு பயந்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் வேலுவின் அப்பா பாத்திரம் தன் மனைவியைப்பற்றி ஆபாசமாக வட்டிக்காரன் பேசுவதை தாங்கமுடியாமல் ஒரு அரிவாளுடன் அவனை வெட்ட வருவதும் மனதிலோ உடலிலோ எந்தவொரு தெம்புமில்லாத அவரை ஒரே கணத்தில் வட்டிக்காரன் அடித்து துவைப்பதும் உண்மையின் உச்சமான காட்சிகள். வேலுவின் கல்யாணக்கனவில் தனது அக்காவின் ஸ்தானத்தில் விலைமாது ரோஸி நிற்பது, வயதான பாட்டியை தவிர யாருமற்ற மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை ஜோதி தாய்பாசத்துடன் பராமரிப்பது, பின்னர் அவளின் பெருந்துயரத்தில் அக்குழந்தை கண்கலங்கி நிற்பது, உயர்க்குடி குடியிருப்பிலிருக்கும் வாட்ச்மேன் ஒருவன் வேலை விஷயமாகவே அங்குவரும் ஏழைகளை துரத்துவதும் தவரான காரியங்களுக்கு வரும் பணக்காரப் பயல்களை அஞ்சோ பத்தோ வாங்கி சல்யூட் அடித்து உள்ளே அனுப்புவதுமெல்லாம் இயக்குநரின் மிக நுண்ணிய அவதானிப்புகள்.

நடிக்கத்தெரியாத ஒரு நடிகனை வைத்துள்ள சினிமா படப்பிடிப்பு காட்சி, தற்செயலாக தன் காதலியின் நிழற்படம் வேலுவுக்கு கிடைக்கும் காட்சி, கண்தெரியாத பிச்சைக்காரனின் பாடல், சின்னசாமியின் கூத்து, சின்னசாமி தள்ளுவண்டிக்கடைக்காரனை திட்டிவிட்டு வேலையை உதறும் காட்சி, மொபைல் ஃபோன் மேல் பெரும் மோகம் கொள்ளும் பதின்பருவப்பெண்களின் சபலம், மொபைல் ஃபோன் எனும் கருவி உருவாக்கக் கூடிய பேர்வினைகள், மிகத்தந்திரமாக வேலு எனும் அப்பாவியை ஒரே கணத்தில் தற்கொலைக்கு நிகரான ஒரு விஷயத்தை செய்ய சம்மதிக்க வைக்கும் போலீஸ்காரன் என பலப்பல இடங்களில் பாலாஜி சக்திவேலின் எழுத்தும் இயக்கமும் உச்சங்களை எட்டுகிறது.

இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் இதன் இசையும் ஒலித்தரமற்ற ஒலித்தடமும் தான். படத்தின் வலுவான உணர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல இடங்களில் விழுகிறது இசை. தனது கிட்டாரில் கர்னாடக இசையையும் மேற்கத்திய இசையையும் ஒரே வீச்சுடன் இசைக்கும் ஆர். பிரசன்னாவின் கிட்டார் இசை சிறப்பானது தான். ஆனால் அதிலும் மேற்கத்திய இசையையும் கர்னாடக இசையையும் ஒன்றிணைத்து அவர் நடத்தும் ஃப்யூஷன் (Fusion) முயற்சிகள் பலசமயம் ஒன்றிப்போகாமல் இருப்பதை பலரும் கவனித்திருக்கக்கூடும். இப்படத்தின் காதல் காட்சிகளின் மைய இசையாக கிட்டாரின் திரிபு ஒலிகளை (Distortion Guitar) பயன்படுத்தியது போன்ற அவரது பரிசோதனைகள் வீண்முயற்சிகளாக முடிகிறது. கண்தெரியாத பிச்சைக்காரனின் இசைத்தரமில்லாத பாடல்வானத்தையே எட்டிப்புடிப்பேன்மட்டும் தான் படத்தோடு ஒன்றிப்போகிறது.

கதை நடக்கும் காலம் எதுவென்றே தெரியாமல் மங்கலாகத்தான் இருக்கிறது. அதிநவீன மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் டைப் ரைட்டர்களும் பயன்படுத்துகிறார்களா? இன்று காவல் நிலையங்களிலோ நீதிமன்றங்களிலோ அரசு அலுவலகங்களிலோ பழைய தட்டச்சுக் கருவிகளை யாருமே பயன்படுத்துவதில்லை என்பதை இயக்குநர் கவனிக்கவில்லையா? பால் வடியும் முகத்துடன் 16 வயதுக்குமேல் இருக்காத பள்ளி மாணவன், ஒரு பெரும் வில்லனைப்போல் மிகத்தந்திரமாக சூட்சி செய்து, திட்டம்போட்டு சக மாணவியின் ஆபாசப்படங்கள் எடுப்பது, அவளை வசியம் செய்ய ஒரு பெரிய திரைக்கதையே உருவாக்குவது என்பதெல்லாம் மிகை.

அதுவரை மிக நல்லவனாக காட்டப்படும் போலீஸ்காரன் ஒரு திடீர் திருப்பம் வழியாக கெட்டவனாக மாறுவது, விலைமாது ரோஸியை தன் அக்காவாக பாவித்து வேலு பணம் கொடுக்கும்போது அது உடலுறவுக்காக கொடுக்கப்படும் பணம் என்று ஜோதியும் அவளது அம்மாவும் நம்புவது, காணாமல்போன ரோஸியை வேலுவும் சின்னசாமியும் தேடிச்செல்லும்போது அங்கிருக்கும் ஒரு பாட்டிஇங்கு வேறமாதிரி தொழில் செய்திருந்த ஒருத்தி தங்கியிருந்தாஎன்று அவர்களிடம் சொல்வது, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையை ஜோதி பராமரிப்பதை பார்த்து அவளை தன் தாய் போலவே வேலு உணர்வது, கடைசி காட்சிகளில் தீடீரென்று கதாநாயகியின் புரட்சிப்பின்புலம் மேலோங்குவது போன்ற தவறுகள் வழக்கு எண் 18/9ன் திரைக்கதையில் இருக்கத்தான் செய்கிறது.

பார்வையாளனுக்கு ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்ட பல விஷயங்கள் வேறு வேறு பாத்திரங்களின் பார்வையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது லுப்பூட்டுகிறது. கெட்ட பாத்திரமாக வரும் அமைச்சரின் முகத்தை பார்வையாளனுக்கு தெரியாத விதத்தில் மங்கலாக்கியிருப்பது என்ன உத்தியோ தெரியவில்லை. ஆனால் அது படத்திற்கு ஒரு பலவீனமாகத்தான் அமைகிறது. உண்மைச்சம்பவங்களை நேரடியாக பார்க்கிறோம் என்ற உணர்ச்சியை இல்லாமலாக்கி தொலைக்காட்சி செய்தியை பார்க்கின்ற உணர்வைத்தான் அக்காட்சிகள் நமக்கு ஏற்படுத்துகிறது. யதார்த்தத்திற்கு ஒருபோதும் ஒத்துப்போகாத மனக்குரல் உத்தியை (Mind Voice) பல இடங்களில் பயன்படுத்தியிருப்பது மற்றுமொரு பலவீனம். படம் உண்மையின் உயிரோட்டத்துடன் ஏற்படுத்திய வலுவான அனுபவத்தை அதன் நிறைவுக்காட்சிகள் ஏற்படுத்துவதில்லை என்றே சொல்லுவேன். இதயத்தால் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு மூளையால் நிரம்பவும் யோசித்து உருவாக்கப்பட்ட நிறைவுக்காட்சிகள் எனப்படுகிறது.

ஆனால் இத்தகைய அனைத்து குறைகளையும் சரிசெய்யும் வல்லமைகொண்ட எண்ணற்ற நிறைகள் இருக்கிறது என்பதுதான் வழக்கு எண் 18/9ன் பெரும் பலம். நேர் பேச்சுகளிலோ மேடை பேச்சுகளிலோ தன்னை வலுவாக வெளிப்படுத்த முடியாதவரான பாலாஜி சக்திவேல் தனது படைப்புகள் வழியாக தன்னை மிக வலிமையுடன் வெளிப்படுத்துகிறார். தனக்கிருக்கும் ஆழ்ந்த சமூக அக்கறைகள், மனித வாழ்க்கையின் மேலான நுண்ணிய அவதானிப்புகள், அதை பார்வையாளனின் மனதில் திடமாக பதியவைக்கும் காட்சிப்படுத்தல் போன்றவற்றிலெல்லாம் உன்னதங்களை அடையும் ஒரு படைப்பாளியாக அவர் திகழ்கிறார். ஏழ்மையை இவ்வளவு கருணையுடனும் உண்மையுடனும் அணுகுகின்ற ஒரு படத்தை சமீபத்தில் நான் பார்த்ததேயில்லை. அதேசமயம் எழ்மை என்னவென்றே தெரியாத உயர்குடியினரின் வாழ்க்கையையும், அச்சமூகத்தில் வாழும் இந்தகால பதின்பருவத்தினரின் மனம் சார்ந்த, உடல்சார்ந்த சிக்கல்களையும் மிகுந்த உண்மையுடன் படமாக்கியிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

இக்கட்டுரையின் துவக்கத்தில் சொன்னதுபோன்ற மிகையான பிரச்சாரங்களோ, அதீதமான விளம்பரங்களோ எதுவுமே இல்லாமல் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டிய ஒரு படம் இது. உலகம் முழுவதிலுமிருந்து பலப்பல விருதுகளை வெல்லக்கூடிய வல்லமைகொண்ட ஒரு படம் வழக்கு எண் 18/9. எளிதில் இப்படத்தை நம்மால் மறக்க முடியாது. படத்தின் இடைவேளையில் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்த அந்த பார்வையாளனின் முகத்தை என்னால் மறக்கமுடியாதது போல்.