1993ல் நான் ஒரு இசை விற்பனையாளராக இருந்தேன்.
ஒரு முன்னணி இசைவெளியீட்டு நிறுவனத்துக்கு விற்பனை மேலாளர். பலவகை கடவுள்களைப்பற்றியான பக்திப்பாடல்கள், பலமொழி திரையிசைப்பாடல்கள் என்று சுடச்சுட விற்ற காலம் அது. வார்னர் சகோதரர்கள் வெளியீடுகளாக இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப்பாடல்கள், இந்திய மரபிசை, இன்டிபாப், கருவியிசை, கஸல் என இசையை குவித்துப்போட்டு விற்றோம். அது இசைச்சந்தையின் பொற்காலம். எதை வைத்தாலும் விற்றுபோகும். இணையத்திலிருந்து இலவச இறக்குதல் அன்றில்லை. எம்பி3 என்ற வார்த்தையே இல்லை. ஒரே குறுவட்டில் ஆயிரம் பாட்டுகளை 'எரித்து' (burn) இசைத்தொழிலையே சாம்பலாக்கும் தொழில்நுட்பங்கள் வந்துசேரவில்லை. குறுவட்டு நுட்பமே அப்போதுதான் ஈ£ரிலைத் தளிர்விட்டு எழுந்துகொண்டிருந்தது. ஒலிநாடாக்கள்தான் பிரபலம். எங்கள் களஞ்சியங்களில் எப்போதும் புதிய அறுவடையின் வாசனை.
என்னுடைய நிறுவனம் சில பாகிஸ்தானி இசைத்தொகுப்புகளுக்கு விற்பனை உரிமை பெற்றிருந்தது. பெரும்பாலானவை கஸல்கள்.
சில கஸல் பாடகர்களை நான் கேட்டிருந்தேன். எப்போதாவது கஸல் கேட்பவன் என்றநிலையில் குலாம் அலி, ஜக்ஜித் சிங், ஹரிஹரன்...
ஆனால் கஸல் ஒருபோதும் என்னுடைய விருப்பப் பட்டியலில் இருக்கவில்லை. என்னுடைய நண்பரும் திரைப்பாடகருமான ஸ்ரீனிவாஸ் கஸல் போதை தலைக்கேறி ஏற்கனவே ஹரிஹரனுக்கு உயிர்பிரதி ஆக மாறும் நிலையிலிருந்தார். அவர்தான் எனக்கு முதல்முதலாக மெஹ்தி ஹசனை அறிமுகம் செய்துவைத்தவர். ஹரிஹரனே மெஹ்தி ஹசனின் பாதிப்பினால் உருவானவர்தான் என்றான் ஸ்ரீனிவாஸ்.
மெஹ்தி ஹசன் பெயரும் சரக்குப்பட்டியலில் இருந்தது. அடுக்குகளில் இருந்த ஒலிநாடாக்களின் அட்டைகளில் அந்த புன்னகைக்கும்
வயோதிக முகத்தையும் பெயரையும் பார்த்தேன். பாகிஸ்தானி திரைப்படங்களில் மெஹ்தி ஹசன் பாடிய கஸல்கள் அடங்கிய ஒரு
இசைத்தொகுப்பை உடனடியாக எடுத்தேன். நான் இசைகேட்கும் கோணத்தையே அந்த ஒலிநாடா மாற்றியமைத்தது என்று சொன்னால்
மிகையாகச் சொல்கிறேன் என்று எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன். வழக்கமாக நான் கேட்கும் பழைய மேலையிசை, பழைய இந்தி
திரைப்பாடல்கள், சலில் சௌதுரி ஆகியவற்றின் வரிசையில் எப்போதைக்குமாக மெஹ்தி ஹசன் ஏறியமர்ந்துகொண்டார். ஸ்ரீனியைப்போல, இன்னும் பலலட்சம் மெஹ்தி ஹசன் அடிமைகளைப்போல, நானும் மெஹ்திப்போதையில் மீளமுடியாதபடி சிக்கிக்கொண்டேன்.
ஒருமுறை கூட்டமாக்ப்பேசிக் கொண்டிருக்கையில் ஒரு தோழி,
அவளும் மெஹ்தி ஹசன் 'கேட்டி'ருப்பதாகச் சொன்னாள்.
எனக்கென்னவோ மெஹ்தி ஹசன்னை வெறுமே 'கேட்க' முடியாதென்றே படுகிறது. 'கவனித்தால்'கூட போதாது.
அதற்கும் மேலான ஒன்று அவரை உள்வாங்க தேவைப்படுகிறது. அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் 'இசைமௌனம்' அப்படிப்பட்டது.
அதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் தியாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்..மெஹ்தி ஹசன் ஒரு முழுமையான கஸல் பாடகர், அவ்வகையில் அவர் நிகரற்றவர். அவரது ஆழ்ந்த குரல் இசை ரசிகர்களுக்குள்
உருகவைக்கும் ஒரு அனுபவமாக எப்போதும் நிறைவது. கஸலின் பாடும் முறையிலும் உணர்விலும் தன்னுடைய தனி முத்திரையை அவர் பதித்தார். அவருக்கே உரித்தான ஒரு தனித்தன்மையுடன் மிகச்சிக்கலான இன்னிசை நுட்பங்களையும் அவரால் பாடமுடியும். எந்த ராகத்தையும் அதன் உள்ளுறைந்த மௌனத்தையும் அழகையும் தொட்டு
அவரால் மீட்டிக்காட்ட இயலும். ஆனால் அவருடைய சிறப்பு என்பது கஸல் பாடல்களை அழுத்தமான நிதானத்துடன் அவற்றின் கவித்துவமும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் மௌனமும் வெளிப்படும்படி பாடுவதிலேயே உள்ளது.
எட்டுவயதில் அவர் பொதுமேடையில் பாடினார். அதன் பின் கிட்டத்தட்ட 25,000 பாடல்கள்! பாகிஸ்தானிய எல்லையை விட்டு எழுந்து உலகளாவிய ரசிகர்கூட்டத்தை பெற்றார். கஸல் அவருக்குப்பின் அவருக்கே உரிய தனித்தன்மையை தன் வடிவச்சிறப்பாக ஏற்றுக் கொண்டது. அவரை எண்ணாது கஸல் குறித்து எண்ண முடியாதென ஆயிற்று.
இசையும் இலக்கியமும் இரண்டறக்கலந்த ஓர் இசைவடிவம் கஸல் போல பிறிதொன்றில்லை. உருது இலக்கியத்தின் உச்சகட்ட
கலைவடிவான கஸல் காதையும் கருத்தையும் ஒருங்கே நிறைக்கும் ஓர் அனுபவம். அடிப்படையில் பாரசீகத்தை பிறப்பிடமாகக் கொண்ட கஸல் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானிய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நுழைந்தது. அப்படிப்பார்த்தால் உருதுவும் கஸலும் சேர்ந்தே பிறந்து வளர்ந்தன என்று சொல்லலாம். அலாவுதீன் கில்ஜியின் கீழ் அமைச்சாராகவும் அரசவைக்கவிஞ்ஞராகவும் வரலாற்றாசிரியராகவும் இருந்த இசைப்பேரறிஞர் ஹஸ்ரத் அமிர் குஸ்ரு (1253-1324) கஸலின் உருவாக்கத்தில் முதன்மையான பங்குவகித்தார். பாரசீகத்தில் பல முக்கிய ஆக்கங்களை உருவாக்கிய அவர் அங்கிருந்து கஸலின் மூலவடிவை எடுத்து தனிப் பெருங்கலையாக வளர்த்தார். பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் உருதுமொழியே கவிதைக்குரிய சிறந்தமொழி என்று இந்திய அறிவுலகால் கருதப்பட்டது. கவிஞர்களான சௌதா, மீர் தாகி மீர், ஸௌக், மிர்ஸா காலிப் போன்றவர்கள் எழுதிய கஸல்கள் உருது இலக்கியத்தின் செல்வங்களாக கருதப்படுகின்றன.
இசை நிகழ்ச்சிகளும் கஸலும் ஒன்றானது இக்காலத்திலேயே. உஸ்தாத் மௌஸுதீன் கான், கௌஹார் ஜான் ஆகியோர் கஸல் பாடல்மரபின் தொடக்க கால மேதைகள். இன்றைய பாடுமுறை இவர்களால் உருவாக்கப்பட்டது. உஸ்தாத் பர்க்கத் அலி கான், முக்தார் பேகம், பேகம் அக்தர் ஆகியோரை கஸல் மரபின் சிகரங்களாகக் கூறுகிறார்கள்.
மெஹ்தி ஹசன் நம் காலகட்டத்து கஸல் அற்புதம்.
மெஹ்தி ஹசன் 1927ல் ராஜஸ்தானில் லூனா என்ற குக்கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் இசை மரபு கொண்டது.
மெஹ்தி ஹசன் அவர் பிறந்த 'கலாவந்த்' குலத்தின் பதினாறாவது தலைமுறைப் பாடகர். தன் தந்தை உஸ்தாத் அஸீம் கான்,
மாமா உஸ்தாத் இஸ்மாயில் கான் அகியோரிடம் ஆரம்ப இசைக்கல்வியைப் பெற்றார். அவர்கள் இருவருமே மரபான துருபத் பாடகர்கள். மெஹ்தி ஹசன் முறையான ஆரம்பக் கல்வி கூட பெறவில்லை. அவர் கற்றது இசை மட்டுமே. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது மெஹ்தி ஹசன் குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. அங்கே வறுமையை தீவிரமாகவே அவர் அறிய நேரிட்டது. முதலில் ஒரு சைக்கிள் கடையில் வேலைபார்த்த மெஹ்தி ஹசன் பிறகு கார், டீஸல் டிராக்டர் போன்றவை பழுதுபார்ப்பவராகவும் உழைத்தார். விடாது இசைப்பயிற்சியும் செய்துவந்தார். 1952ல் ஒரு வானொலி நிகழ்ச்சியில் அவருக்கு தும்ரி என்னும் இந்துஸ்தானி இசை பாட வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அவரது வாழ்க்கை மாறியது. அவருக்கு இசையுலகில் கவனிப்பு கிடைத்தது. மெஹ்தி ஹசனுக்கு உருது கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கவிதைகளை இசையுடன் பாட ஆரம்பித்தார். கஸலின் கவித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து பாடும் ஒரு முறையை அவர் வடித்தெடுத்தார். அது அவரை அடையாளம் காட்டியது.
மெஹ்தி ஹசனின் பாடும்முறை இந்துஸ்தானி இசையில் உள்ள துருபத் மற்றும் கயால் பாணிகளின் பல நுண்ணிய கூறுகளை தன்னுள் அடக்கியதாகும். பேஹ்லாவா, முர்க்கி, தான், ஜம்ஜமா முதலிய மரபிசை முறைகளின் பாடல் உத்திகளையும் ராஜஸ்தானி நாட்டாரியல் இசையின் கூறுகளையும் கஸலுடன் இணைத்து அதை வளப்படுத்திக் கொண்டார் மெஹ்தி ஹசன். அவருடைய இன்னொரு சிறப்புக்கூறு துல்லியமான உச்சரிப்பு. இசைக்கோர்ப்பின் தேவைகளும் கட்டாயங்களும் எப்படி இருப்பினும்சரி சொல்வெளிப்பாடு என்பது அவருக்கு மிக மிக முக்கியமானது. சொல்லின் ஒலியும் உணர்வும் சரியானபடி வெளிப்படவேண்டுமென்பதில் அவர் சமரசமே செய்வதில்லை.
சொல்லின் பொருளும் ஒலியின் அழகும் இணைந்து உருவாகும் முழுமையான அநுபவமே அவரது இசை. மெஹ்தி ஹசன்னுக்கு முன்னர் மரபிசைப்பாடகர்களால் கஸல் இரண்டாம்பட்சமானதாகக் கருதப்பட்டது. மெஹ்தி ஹசன் அதை தும்ரி, தாத்ரா போன்றவையை போல மரபிசையின் முக்கிய வடிவங்களுக்கு நிகராக நிறுத்தினார். அவரது பாதிப்பினால்
பிறகுவந்த முதன்மையான
மரபிசைப்பாடகர்கள் கூட கஸல் பாடல்களை பாட ஆரம்பித்தார்கள்.
இசை ரசிகன் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். மேலும் மேலும் தேடி கண்டடைந்து பரவசத்துடன் இசையை அறிந்தபடியே இருக்கிறான்.அதுதான் அவன் வாழ்வின் நிறைவு என்பது. ஆனால் கஸல் கேட்பதென்பது இசையனுபவம் மட்டுமல்ல. மொழியின் மேலிருந்து எழுகிற இசை வடிவங்கள் தன் எழுச்சியின் போக்கில் விரைவிலேயே மொழியை உதறி தனக்குரிய தூய ஒலிவெளியை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் கஸல் ஒருபோதும் மொழியை விட்டு விலகுவதில்லை. மொழியின் உச்சமாகிய கவிதையும் இசையின் உச்சமாகிய மௌனமும் ஒரு புள்ளியில் ஒன்றாவதை
நோக்கி தன்னை எழுப்பிக் கொள்கிறது கஸல். இசைநாடகம் பற்றிய தன் கட்டுரையில் டி.எஸ்.எலியட் இசையின் உச்சமும் கவித்துவ உச்சமும் சந்திக்கும் கலைவடிவே மானுடக்கலையின் உச்சமாக இருக்க இயலும் என்று கூறுகிறார். இசைநாடகம் அத்தகைய ஒரு வடிவத்தை நோக்கி நகரவேண்டுமென சொல்கிறார். கஸல் அத்தகைய வடிவம். அது பெரும்பாலும் காதலின் ஒரு நாடகத்தருணத்தயே வெளிப்படுத்துகிறது. பிரிவின் ஆற்றொணாத் துயரையே பெரும்பாலும் அது பாடுகிறது.
எவ்வளவு மெஹ்தி ஹசன் கஸல் வரிகள் நினைவில் எழுகின்றன! பகதூர் ஷா சஃபர் 'பகாடி' ராகத்தில் இயற்றிய 'பாத் கர்னி முஜெ முஷ்கில்', ஜிஞ்சோட்டி ராகத்தில் ஃபய்ஸ் அகமது ஃபய்ஸ் இயற்றிய 'குலோம் மெய்ன் ரங்க் ஃபரேய்', அகமது ஃபராஸ் 'கீரவாணி'யில் இயற்றிய 'ஷோலா தா ஜல் புஜா ஹூம்'.... அவற்றை மெஹ்தி ஹசன் பாடிக்கேட்டபின் அவை அவருடைய வரிகள்...அவருடைய இசை... அவருடைய குரலின் ஆழம்..
அறுபதுகள் முதல் இருபதுவருடக்காலம் பாகிஸ்தானின் முதன்மையான திரைப்பாடகராக விளங்கினார் மெஹ்தி ஹசன்.
அவரது எத்தனையோ திரைக்கஸல்கள் இன்று பெரும் படைப்புகளாக அங்கீகாரம் பெற்றுவிட்டன. குவாதில் ஷிஃபாய்
எழுதி
நாஷாத் இசையமைத்த 'ஜிந்தகீ மே தொ சபி ப்யார் கியா கர்தே ஹை' (1971) இன்றும் நினைவில் ரீங்கரிக்கிறது.
மறக்கமுடியாத 'ரஞ்ஜிஷ் ஹி சஹி' (1971), அஹமது ஃபராஸ் எழுதி நிசார் பாஸ்மி இசையமைத்த அழியாத கஸல் பாடல்.
'முஜே தும் நசர் ஸே', 'ஜிந்தகீ கி ராஹ் மே'.....நினைவில் மெஹ்தி ஹசன் கஸல்களாக எழுந்தபடியிருக்கின்றன.
முதன்முதலாக 1962ல் 'ஷிகார்' என்ற படத்துக்காக அவர் பாடிய 'மேரா கயால்' என்ற பாடலே அவருக்கு பாகிஸ்தான்
முழுக்க பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. பாகிஸ்தானின் இசை கலாச்சார விருதுகள் பலவற்றை அவர் பெற்றிருக்கிறார்.
பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் அதன் உயரிய வாழ்நாள் சாதனை விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது. உலகமெங்கும் பயணம் செய்து எண்ணற்ற, புகழ்பெற்ற இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருக்கிறார். சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழா நடந்த போது ஐம்பது ராஜஸ்தானி இசைக்கலைஞர்கள் பங்கு கொண்ட பெரும் நிகழ்வில் அவர் பாடினார்.மெஹ்தி ஹசனின் கடைசி இசைத்தொகுப்பான 'சதா-இ-இஷ்க்', அதிலுள்ள 'ஹம்செ தன்ஹாயீ' 'பியார் கர்னே கி' போன்ற அர்புத கஸல்களுக்காக மட்டுமல்ல ஒரு மகத்தான கலைஞனின் விடைபெறும் குரல் என்ற வகையிலும் முக்கியமானது. லதா மங்கேஷ்கர் ஒருமுறை சொன்னார் ''கடவுள் மெஹ்தி ஹசன் வழியாகப் பாடுகிறார்'' என்று. ஆனால் மெஹ்தி ஹசனின் ரசிகர்களுக்கு அவரே கஸலின் கடவுள். கண்ணீரையும் கனவையும் குரலாகக் கொண்டு மண்ணுக்கு வந்த கடவுள்.