20120708

மெஹ்தி ஹசன் - முடிவின்மையின் இசை

இப்பொழுது நாம் பிரிகின்றோம்

கனவுகளில் நாம் மீண்டும் சந்திக்கக் கூடும்

காய்ந்துபோன ஒரு பூ

ஒரு பழைய புத்தகத்தாளில் ஒளிருவது போல்

-மெஹ்தி ஹசன் கஸல்

கடந்த ஜூன் பதிமூன்று மதியம் ஒரு நண்பருடன் அவரது தொழிற்சாலைக்குள் நடந்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த சில மெல்லிய கம்பிகளை பிடித்து வெறுமனே திடம் பார்த்துக்கொண்டிருந்தபோது பெங்களூரிலுள்ள பாபு எனும் இசை நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியில் தெரியாமல் அக்கம்பிகளை இழுத்த எனது இடதுகை விரல் அறுந்து ரத்தம் துளித்துளியாக விழுந்தது. கண்களில் நீர்த்துளிகள் பெருக்கெடுத்தது. வேகமாக அங்கிருந்து வெளியேறி கொடும் வெயிலில் இலக்கில்லாமல் நடந்தேன். எனது ஆதர்ச கஸல் பாடகர் மெஹ்தி ஹசன் காலமானார்! எங்கே போவது? என்ன செய்வது? அவரது பாடல்கள் ஒன்றொன்றாக மனதில் மிதந்துகொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் நான் எழுதிய முதல் கட்டுரைகளில் ஒன்று மெஹ்தி ஹசனைப் பற்றியது. எனது இசையின் தனிமைபுத்தகத்தை நான் சமர்ப்பணம் செய்திருப்பதும் அவருக்கே. மெஹ்தி ஹசன் என்பது எனக்கு ஒரு பாடகரின் பெயர் அல்ல. அது ஒரு உணர்வின் பெயர்.

துளிகூட செயற்கைத்தனமில்லாமல், உண்மையின் உச்சமாக, உணர்ச்சிப் பெருக்குடனும் அலாதியான சுருதி சுத்தத்துடனும் ஒரு பாடகன் எப்படிப் பாடவேண்டும், எப்படியெல்லாம் பாட முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருந்தவர். கான் சாகிப்என்று பக்தி மரியாதைகளுடன் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். 65 ஆண்டுகளாக வெறுப்பில் வாழும் இரண்டு நாடுகளுக்கிடையே இனிமைசொட்டும் தனது இசையால் பாலத்தை அமைத்தவர். எனது இசையுணர்வின் மாபெரும் நீரூற்றாக இருந்த மகா கலைஞன் வெயில் திளைத்துருகும் அந்த கோடைப்பகலில் மறைந்துபோனார். இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தரத்துடன் பல்லாயிரக்கணக்கான கஸல்களை பாடி வெளிப்படுத்திய அக்குரல் இனி ஒருபோதும் நேரலைகளில் ஒலிக்கப்போவதில்லை!

ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் தார் பாலைவனத்தின் ஓரத்தில் பகல்முழுவதும் அடித்துச்செல்லும் அனல்காற்றிலும் இரவின் கடுங்குளிரிலும் அவதிப்படும் அந்த கிராமத்தின் பெயர் லூனா. கடுமையான தண்ணிப் பஞ்சமும் முன்னேற்றமின்மையும் தான் இன்றளவும் அந்த கிராமத்தின் அடையாளங்கள். இந்தியா அவ்வப்போது அணுகுண்டுகளை வெடித்து பரிசோதனைகள் மேற்கொள்ளும் பொக்ரான் அங்கிருந்து வெகுதூரமில்லை. பாகிஸ்தான் எல்லைப்பகுதியும் தூரமில்லை. அங்கு 1927 ஜூலை 18ல் பிறந்தவர் மெஹ்தி ஹசன். பெரிய கூட்டுக்குடும்பம். இசைக்குடும்பம். அப்பாவும் மாமாக்களுமெல்லாம் செவ்வியல் பாடகர்கள். ராஜாக்களின் ஸ்தானம் என்றுதான் ராஜஸ்தான் என்ற சொல்லின் பொருள். அங்கிருந்த வெவ்வேறு குறுநில மன்னர்களின் அரசரவைகளில் ஆஸ்தான பாடகர்களாக 12 தலைமுறைகளாக பாடிவந்த ஒரு பரம்பரையில்தான் மெஹ்தி ஹசன் பிறந்தார். ஆனால் அவர்கள் பாடிவந்த துருபத் எனும் செவ்வியல் இசை வடிவம் இஸ்லாமியர்களின் இசையல்ல!

நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்துமதக் கோவில்களில் பாடப்பட்டுவந்த மரபான பக்திப்பாடல்களை சீரமைத்து உருவாக்கின இசைவடிவம்தான் துருபத். அதை பேணிக் காத்தவர்கள் இந்து மதத்தைச் சார்ந்த அரசர்கள். பாரசீகத்திலிருந்து வந்த இசைமுறைகளின் தாக்கத்தாலும் இஸ்லாமிய மன்னர்களின் ஆதரவினாலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் வளர்ந்து வந்த கயால் இசைமுறைதான் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பாடகர்கள் முன்னெடுத்து வந்தனர். ஆனால் மெஹ்தி ஹசனின் மூதாதையர்கள் கயாலுக்கு மாறவில்லை. அவர்கள் இந்துமத ராஜாக்களின் அரசரவைகளில் துருபத் பாடுபவர்களாகவே இருந்து வந்தனர்.

உஸ்தாத்என்று இஸ்லாம் மதத்தைச் சார்ந்த இசை விற்பன்னர்களை அழைப்பதும், பண்டிட்என்று இந்து மதத்தைச் சார்ந்த இசை மேதைகளை அழைப்பதும்தான் வழக்கம். ஆனால் மெஹ்தி ஹசனின் பரம்பரை அவர்களது துருபத் இசையினால் பண்டிட்என்றே அழைக்கப்பட்டனர். ஹிந்துஸ்தானி இசையின் இமையங்களாக கருதப்படும் மியான் தான்ஸேன், அப்துல் கரீம் கான் போன்றவர்களெல்லாம் ஒரு காலத்தில் இந்துமதத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்களே. தீபக் ராகம் பாடி தீபத்தை எரியவைத்தார் என்றும் மேகமல்ஹார் ராகம் பாடி மழை பொழிய வைத்தார் என்றும் நம்பப்படும் தான்ஸேனின் இயர்ப் பெயர் ராம்தனு மிஸ்ரா! ஆக்ரா கரானாவை நிருவியவரான உஸ்தாத் அப்துல் கரீம் கானின் பாட்டன் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்.

மெஹ்தி ஹசனின் தாத்தா இமாமுதீன் கான் ராஜபுத்தானா அரசரின் ஆஸ்தான பாட்கர் மட்டுமல்லாமல் நேபாள், இந்தோர், பரோடா அரசரவைகளிலும் பாடி வந்தவர். அப்போதைய நேபால் அரசர் அவரது சீடர். மெஹ்தி ஹசனின் அப்பா அஸீம் கான் மற்றும் மாமா இஸ்மாயில் கான் சிறு சமஸ்தானங்களான மானக்பூர், சத்தர்பூர், பிஜாவல் போனறவற்றின் ஆஸ்தான பாடகர்களாக இருந்தனர். மெஹ்தி ஹசனுக்கு இசை கற்பித்தவர்கள் அவர்களே. துருபத் மட்டுமல்லாமல் கயால் முறையிலும் அவருக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

எட்டு வயதாகும் முன் ஒரு தேர்ந்த செவ்வியல் பாடகனைப்போல் பாட ஆரம்பித்த மெஹ்தி ஹசனுக்கு பள்ளிப்படிப்பு வாய்க்கவில்லை. எட்டாவது வயதில் பரோடா பேரரசரின் முன் பஸந்த் ராகத்தை 40 நிமிடம் விரிவாகப் பாடியதுதான் மெஹ்தி ஹசனின் முதல் கச்சேரி. அரசர்களின் புண்ணியத்தில் பல குறுநிலங்களுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தி அல்லல் இல்லாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வந்தார் மெஹ்தி ஹசன். இறைச்சி, பால், கொட்டைவகைகள் போன்றவற்றை திருப்தியாக சாப்பிட்டு இசைப்பயிற்சியுடன் உடற் பயிற்சியும் செய்து வந்தார். திடமான உடலும் வலுவான மூச்சுப்பையும் ஒரு சிறந்த பாடகனுக்கு மிகத்தேவையானவை என்று அவர் நம்பினார்.

1947. மெஹ்தி ஹசனுக்கு 20 வயது. இந்தியக்கண்டம் சுதந்திரமடையும் சூழல். குறுநில மன்னர்களும் சமஸ்தானங்களும் இல்லாமலாகப்போகிறது! அவர்களின் ஆதரவை மட்டும் நம்பி, இசையை மட்டுமே வைத்து வாழ்ந்து வந்த அக்குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தது. சுதந்திரத்துடன் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாகத் துண்டிக்கப்பட்டபோது இரண்டு பகுதிகளிலுமிருந்த இந்துக்களும் முஸ்லிம்களும் மறுபகுதிகளுக்குத் துரத்தப்படவோ ஓடிப்போகவோ செய்தனர். இந்தியா இந்துக்களின் நாடு என்றும் பாகிஸ்தான் இஸ்லாமியர்களின் நாடு என்றுமான கோஷங்கள் முழங்கியபோது இங்கிருந்த உடமைகள் எல்லாவற்றையும் விட்டு மெஹ்தி ஹசனின் குடும்பம் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியான சிச்சாவத்னி எனும் ஊருக்கு குடியேறியது.

அங்கு கடுமையான வறுமையில் உழன்றார்கள். தனது குடும்பத்தை காப்பாற்ற சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் உதவியாளாக வேலை பார்த்தார் மெஹ்தி ஹசன். இசைமேதையான தனது அப்பா வேறு வழியில்லாமல் விறகு விற்கும் கடை ஒன்றை ஆரம்பிக்க இறங்கியபோது அதில் வேதனை அடைந்த மெஹ்தி ஹசன் ஒரு சைக்கிள் பழுது பார்க்கும் கடையை சொந்தமாக ஆரம்பித்தார். அது வெற்றிபெறவில்லை. பின்னர் கார்கள் மற்றும் டிராக்டர்கள் பழுதுபார்க்கும் கடையில் உதவியாளனாக சேர்ந்தார். ஒருவழியாக அன்றாட செலவுக்கான பணத்தைச் சம்பாதித்தார். ஆனால் இக்காலங்களிலெல்லாம் ஒருநாள் கூட விடாமல் அவர் இசைப்பயிற்சி செய்து வந்தார்.

கொஞ்சம் பணம் கையில் வந்தபோது அக்கால பாகிஸ்தான் வானொலி நிலையமிருந்த லாகூருக்கு வாய்ப்புத் தேடிப் புறப்பட்டார். அங்கு பலரும் அவரது பாட்டை கேட்டுப் பாராட்டினார்கள். வானொலியில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பும் கிட்டியது. அவரது பாடும்முறையின் வித்தியாசம் பேசப்பட்டது ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த அவர் அங்கு பரிச்சயமான ஒருவரின் விவசாய நிலத்தில் வேலை செய்தார். பாலைவனம்போல் வெறித்துக் கிடந்த இரண்டு ஏக்கர் நிலத்தை, இரவு பகலாக வேலைசெய்து எட்டு மாதங்களில் பச்சைப்பசேல் என மாற்றினார்.

அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு மீண்டுமொரு முறை வாய்ப்புகள் தேடி பாகிஸ்தானின் உருது சினிமாவின் மைய நகரமாகயிருந்த கராச்சிக்குப் புறப்பட்டார். அது 1956ல் தனது 29 ஆவது வயதில். இம்முறை உடனடியாக சில பாடும் வாய்ப்புகள் அவருக்கு கிட்டியது. முதல் பாடல் ஷிக்கார் எனும் படத்தில் வந்த கண்கள் சந்தித்தவுடன் இதயத்தின் வார்த்தைகள் வெளிவரக்கூடாதுஎனும் கஸல். அதே ஆண்டு வேறு ஆறு திரைப்பாடல்களை பாடி பதிவு செய்யும் வாய்ப்புகளும் வந்தது.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் கராச்சியில் தங்கினார். ஆனால் தொடர்ந்து வந்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு கிடைத்தது வெறும் இரண்டு பாடல்கள்! முனீர் உசேன், சலீம் ராசா, இனாயத் உசேன் பட்டி போன்ற அக்காலத்தைய சிறந்த திரைப்பாடகர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறுவது கடினமாக இருந்தது. வலிந்து முன்னிறுத்தப்படும் மிகயான பாவங்களேதுமில்லாமல் தனக்குள் பாடுவதுபோன்ற மெஹ்தி ஹசனின் பாடும் பாணி அப்போதைய சினிமாவில் யாருக்குமே பெரிதாக பிடிக்கவில்லை என்பது தான் உண்மை. இக்காலத்தில் அவ்வப்போது வானொலியில் அவர் பாடிய பாடல்கள் பாகிஸ்தான முழுவதும் ஒலிபரப்பாகி பலரால் கவனிக்கப்பட்டது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இங்கிருந்து சென்று அங்கு ஒரு பாடகியும் நடிகையுமாக உச்சத்திலிருந்த நூர்ஜஹான் ஒரு பின்னிரவில் வானொலியிலிருந்து மெஹ்தி ஹசன் பாடிய புகைபோல் ஒன்று எங்கிருந்தோ புறப்படுகிறது, எனது இதயத்திலிருந்தா அல்லது உயிரிலிருந்தா?’ என்கிற கஸலைக் கேட்டுத் திகைத்துப் போனார். உடனடியாக அப்பாடகனை சந்திக்க விரும்பினார். மலர்களில் வண்ணங்களை நிரப்பும் வசந்தகாலத்தின் முதல் குளிர்காற்று என்னை தொட்டுச் சென்றதுஎன்கிற பாடல் 1962ல் வெளிவந்த பின்னர் மெஹ்தி ஹசன் பாகிஸ்தானின் மிக முக்கியமான பாடகராக மாறினார். தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறந்த கஸல் பாணியிலான அனைத்து பாகிஸ்தானி திரைப்பாடல்களையும் அவர்தான் பாடினார்.

முதலில் திரைப்பாடலாக வெளிவந்தாலும், பின்னர் பலவடிவங்களில் அப்பாடலை விரிவாகப்பாடி மேடை கஸல்களாக பிரபலமடையச் செய்தார் மெஹ்தி ஹசன். அத்துடன் தனது சொந்த இசையில் பல தனி கஸல்களையும் உருவாக்கினார். இவற்றின் வழியாகத்தான் மெஹ்தி ஹசன் பாகிஸ்தானுக்கு வெளியே புகழடைந்தார். இந்தியாவிலும் நேப்பாளிலும் வளைகுடா நாடுகளிலும் பாகிஸ்தானிலிருப்பதைவிட அதிகமான ரசிகர்களை ஈர்த்தது அவரது கஸல் இசை. உருது, பஞ்சாபி, ஹிந்தி, ராஜஸ்தானி, மார்வாடி, சிந்தி, பத்தான்களின் மொழியான பாஷ்தோ, பெங்காலி, பார்சி, அரபு மொழிகளிலாக பல்லாயிரம் பாடல்களை பாடினார். ஆனால் இரண்டாயிரத்துக்கும் மேலான அவரது கஸல்கள்தான் மெஹ்தி ஹசனின் உண்மையான இசை உலகம்.

மெஹ்தி ஹசன் போன்ற இன்னொரு பாடகன் மானுட வரலாற்றில் பிறந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். தனது கஸல்களின் வரிகளுக்கும் வார்த்தைகளுக்குமிடையே அவர் அளிக்கும் இசை மௌனம் காதுகளால் கேட்க முடியாதது. அதை உணரத்தான் முடியும். அந்த கஸல்களில் நாம் தொலைந்துபோகும்போது அலைகள் நிரம்பும் கடல்போல் துயரமும் வலியும் நம்மைச் சூழ்கிறது. ஆனால் அவற்றிலிருந்து வெளிவர நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. அவளை இனிமேல் பார்ப்பதென்றால் அது தூரத்திலிருந்து, ஒரு அந்நியனைப்போல்என்று அவர் பாடும்பொழுது நமது வாழ்க்கையிலிருந்து என்றைக்குமாக மறைந்துபோன காதல் காலங்களின் நினைவில் நமது கண்கள் ஈரமாகின்றன. உண்மைக் காதல் தொலைந்துபோனதன் வேதனையைச் சுமந்துகொண்டே வாழும் அனைத்து மனிதர்களின் துயரங்களையும் அது நம்மை உணரவைக்கிறது.

காதல் என்கின்ற வலியின், தியாகத்தின், அர்ப்பணிப்பின், மீட்பின் மறு உருவம்தான் மெஹ்தி ஹசனின் குரலும் பாடும்முறையும். காதலற்ற வாழ்வை விட மரணம்தான் சிறந்தது என்று அது அறைகூவுகிறது. உனக்குள்ளே எதுவெல்லாம் உடைந்து சிதறுகிறது? ல்லாவற்றிலிருந்தும் நீ ஏன் முகம் திருப்புகிறாய்? யார் நினைவில் துடித்துபோய் தனிமையில் அமர்ந்து நீ அழுகிறாய்?’ போன்ற அவரது கஸல்கள் மனித மனங்களை உருக்கும் வல்லமை கொண்டவை.

கஸலுக்காகவே பிறந்த முழுமையான கஸல் பாடகர் மெஹ்தி ஹசன். இசையின், வரிகளின் ஆன்மா தான் அவரது பாட்டு. தனக்காக மட்டுமே பாடுவது போன்றது அவரது பாடும்முறை. அங்கு மிகையான உணர்ச்சிகளுக்கோ, பொய் நாட்டியங்களுக்கோ இதோ என் இசைத் திறமையை அனைவரும் பாருங்கள்என்கின்ற இசை ஆணவத்திற்கோ இடமில்லை. வலிந்து பாடப்படும் சங்கதிகளோ பாவங்களோ அங்கில்லை. ஆனால் அந்த கஸலினூடாக வெளிப்பட வேண்டிய அனைத்து உணர்வுகளும் நமது இதயத்தின் ஆழத்தில் சென்று தைக்கும்படியாகவே அவர் பாடுகிறார். இது மாயாஜாலமல்லாமல் வேறென்ன? கச்சிதமான உச்சரிப்பும், பொருளும் தொனியுமறிந்த வார்த்தை பிரயோகங்களும் எளிமையான ராகங்களின் தீராத அழகுகளும்தான் மெஹ்தி ஹசனின் கஸல்களில் இழையோடுவது. உயர்குடி விலைமகள்களால் பாடப்பட்டது என்ற காரணத்தால் ஒரு காலகட்டத்தில் கேவலமாக நினைக்கப்பட்ட கஸலை, கயால், துருபத் போன்றவைக்கு நிகரான, அவற்றைவிட மக்கள் நன்மதிப்பு கொண்ட ஒரு இசைமுறையாக மாற்றியமைத்தவர் மெஹ்தி ஹசன்.

எவ்வளவு சிக்கலான ராகமாகயிருந்தாலும் அதை அதன் அனைத்து வலிமைகளுடனும் பாடிவெளிப்படுத்தும் வல்லமைகொண்ட செவ்வியல் இசைப் பாடகராகயிருந்தபோதிலும் செவ்விசையின் மென்வடிவமான கஸலைத்தான் அவர் தனது இசையாக அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்தார். செவ்வியல் இசையின் பல கூறுகளை அனாயாசமாக கஸலில் வெளிப்படுத்தவும் அவரால் முடிந்தது. துருபதின், கயாலின் பலப்பல கூற்றுகளுடன் ராஜஸ்தான் நாட்டாரிசையின் தெறிப்புகளையும் தனது கஸலில் கொண்டுவந்தார். கஸலின் மென்மையும், நுட்பங்களும், கவித்துவமும், உணர்ச்சிக் கொந்தளிப்பும், மௌனமும் இத்தகைய வலிமையுடன் பாடி வெளிப்படுத்திய ஒரு பாடகர் இவ்வுலகில் வேறு யாருமில்லை. பத்து நூற்றாண்டுகளின் தொன்மம் கொண்ட கஸல் எனும் இசை வடிவம் மெஹ்தி ஹசன் வழியாக புதுப்பிக்கப்பட்டது. அவர் வழியாக ஒரு புது இசை வடிவமாக அது உயிர்கொண்டது.

பாரசீக, உருது மொழிக்கவிதையின் சிகரங்களான பலப்பல கவிஞர்கள் எழுதிய கஸல் கவிதைகளைத்தான் மெஹ்தி ஹசன் பாடினார் என்ற போதிலும் வார்த்தைகள் வெளிவராமல் இதுபோல் ஒருபோதும் நான் தவித்ததில்லை”, ”எரிந்து அணைந்துபோன ஒரு தீ சுவாலையான என்மேல் மீண்டும் நீரூற்றுவது எதற்கு?”, ”உயிருடன் இருக்கும்போது அனைவரும் காதலிக்கிறார்கள், நானோ இறந்த பின்னும் உன்னைக் காதலிப்பேன்,பகையுடன் எனது இதயத்தை அறுப்பதற்காவது வருக, கடைசியில் ஒரு பிணமாக என்னை தூக்கி வீசிவிட்டு போவதற்காவது வருக”, “வாழ்க்கைப் பாதைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுகொண்டே இருப்பவன் நான்என்றெல்லாம் அவர் பாடும்பொழுது அது அவருடையது மட்டுமான வரிகளாக, இசையாக, அந்த குரலின் விளக்கமுடியாத துயரமும் ஆழமுமாக மாறுகிறது.

பாகிஸ்தானில் ஒரு கலைஞனுக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விருதுகளையும் பெற்றவர் மெஹ்தி ஹசன். நேபாள அரசின் உன்னத விருதும் இந்தியாவின் சைகாள் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. திலீப் குமார், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், ஜெக்ஜித் சிங், அடல் பிஹாரி வாஜ்பேய், மன்மோகன் சிங், ஹரிஹரன், ஷ்ரேயா கோஷால் என பலநூறு இசை, திரை, அரசியல் பிரபலங்களை தீவிர ரசிகர்களாகக் கொண்டவரும், என்னைப்போன்ற பல லட்சம் சாதாரண இசை ரசிகர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டவருமான மெஹ்தி ஹசன் எளிமையின், நேர்மையின், மனிதாபிமனத்தின் உருவமாக விளங்கியவர். ஏழை எளிய மக்களிடம் பெருங்கருணை கொண்டவர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த இரண்டு கோரமான போர்களுக்கு பின் 1978ல் இந்தியாவில் தனது பிறந்த ஊரான லூனாவுக்கு திரும்பிவந்து அங்கு சிலநாட்கள் தங்கிய மெஹ்தி ஹசன், தான் பிறந்த மண்ணில் அப்போதும் சீரான சாலைகளோ மின்சாரமோ நீர் வசதியோ இல்லாததில் மனம் நொந்து போனார். அதற்கு தீர்வுகாணாமல் ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தார். மூன்று நாட்களுக்குள் லூனா கிராமத்துக்கு மின்சார வசதி வழங்கப்பட்டது! சாலைகளுக்கும் நீர்வசதிக்குமான நிதி ஒதுக்கீடு இல்லையென்று அரசாங்கம் சொன்னபோது, லூனாவின் அருகாமையில் உள்ள சிறு பட்டணமான ஜுன்ஜுனுவில் தனது கஸல் கச்சேரி நடத்தி நிதி திரட்ட முன்வந்தார். அரசு உதவியுடன் நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதிலிருந்து கிடைத்த பணம் முழுவதையும் லூனா கிராமத்தின் முன்னேற்றப் பணிகளுக்காக வழங்கினார்! அங்குள்ள அரசு ஆரம்ப நிலைப்பள்ளியில் அறைகளின் போதாமையினால் ஏழைக்குழந்தைகள் மரத்தடி நிழலில், தரையில் அமர்ந்து பாடங்கள் படிப்பதைப் பார்த்து கண்கலங்கிய மெஹ்தி ஹசன் தனது சொந்தப்பணத்தில் அப்பள்ளிக்கு இரண்டு புது அறைகளைக் கட்டித்தந்தார்!

1990களின் கடைசியில் அவரை தாக்கிய பக்கவாதமும் சுவாசப்பை கோளாறுகளும் காரணமாக தனது இசையிலிருந்து விலகிக்கொண்டார் மெஹ்தி ஹசன். நோய்களுக்கு நிவாரணம் தேடி 2000ல் கேரளத்தில் கோட்டக்கல் ஆயுர்வேத வைத்திய நிலையத்திற்கு வந்தார். அப்போது கோழிக்கோடு நகரத்தில் நட்த்தப்பட்டதுதான் மெஹ்தி ஹசன் மேடையேறிய கடைசி இசை நிகழ்ச்சி! தாற்காலிக நிவாரணம் உண்டானதேயொழிய அச்சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. 2008ல் மும்பாயில் அவரை கௌரவிக்கும்பொருட்டு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அப்போது நடந்த மும்பாய் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள் என்பதனால் ஒரு பாகிஸ்தானிஆன மெஹ்தி ஹசனுக்கும் இந்தியாவுக்கு வரமுடியாமல் போனது!

இதே காலத்தில் கடுமையான நோய்களுக்கிடையிலும் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஒரு பாடலை இசையமைத்து பாடினார் மெஹ்தி ஹசன்! அது லதா மங்கேஷ்கரின் நெடுநாள் ஆசை! தான் பாடவேண்டிய பகுதிகளை பாகிஸ்தானில் பதிவு செய்து லதாவுக்கு அனுப்பிவைத்தார். உங்களை சந்திப்பது எனக்கு மிகுநத மகிழ்ச்சியாக உள்ளது என்கின்ற அப்பாடல் ஸர்ஹதேம் (எல்லைகள்) எனும் தொகுப்பினூடாக போன ஆண்டுதான் வெளியானது.

தனது கடைசிக் காலத்தை மிகுந்த வேதனையில்தான் கழித்தார் மெஹ்தி ஹசன். ஐந்து வயதிலிருந்து இடைவிடாமல் பாடிவந்ததன் பக்கவிளைவாகக் கிடைத்த சுவாசப்பை கோளாறினால் மூச்சுவிடமுடியாமல் திணறினார். கடந்த சில ஆண்டுகளில் ஆட்களை அடையாளம் காணமுடியாத மூளைக் கோளாறினாலும் பீடித்தவாறு படுத்த படுக்கையாக கிடந்தார். 2009ல் கராச்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் தனது சிகிச்சைக்கான பணத்தை கட்ட வழியில்லாமல் பரிதாபமாக அவர் படுத்திருந்ததை ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியிருந்தது.

இரண்டு மனைவிகளிலாக மெஹ்தி ஹசனுக்கு 14 குழந்தைகள் இருக்கிறார்கள்! அவர்களில் பலர் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்கள்! இருந்தும் சாயம் உரிந்து, படிக்கட்டுகள் உடைந்து, சிதிலமான ஒரு வீட்டில்தான் தனது கடைசி நாட்களை அவர் கழித்தார். இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தனது இசையை பேரம் பேசி விற்கும் வித்தை அவருக்கு வசப்படவில்லை. தனது வாழ்நாளில் எண்ணற்ற இலவச நிகழ்ச்சிகளை நடத்தியவர் அவர். உண்மையிலும் உழைப்பிலும் நம்பி ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்தவர்.. கடவுளின் குரல் என்று அழைக்கப்பட்டவர்... இவ்வுலகில் தோன்றிய ஆகச்சிறந்த கஸல் பாடகர்.. நோய்கள் பீடித்த முதிய வயதில் மருந்துகள் வாங்கக்கூட அவருக்கு பணம் இருக்கவில்லை! இது கஸல் அல்ல, எனது இதயத்தில் இருந்து சொட்டும் குருதிஎன்று பாடியவர் கடைசியில் தனது துயரங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற்று இப்போது முடிவின்மையின் இசையில் லயித்திருக்கிறார்.

இறைவனே

கண்ணீர் மட்டுமே நிரம்பிய ஒரு வாழ்க்கை

யாருக்குமே நீ வழங்கக்கூடாது

இயலாமையின் அடியாழத்திற்கு

யாரையுமே நீ தள்ளக்கூடாது..

-மெஹ்தி ஹசன் கஸல்