ஒரு தனிமனிதனால் என்னதான்
செய்ய முடியும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்!
தனிமனிதனால் எதையுமே செய்ய
முடியும், அவன் தனது கடமைக்கு தன்னை
முற்றிலுமாக அர்ப்பணித்தால்.
- டாக்டர் வர்கீஸ்
குரியன்
மீண்டும் ஒரு ஆண்டு முடிவடைகிறது. மரணத்திற்கு நாம் இன்னும்
கொஞ்சம் நெருக்கமாகி விட்டோம். நம்மை விடாமல் தொடர்கிறது மரண பயம். ஆனால் அருகிலோ
தொலைவிலோ நிச்சயமாக ஒருநாள் வரப்போகும் ஒன்றை பயந்து என்ன பலன்? நம்மைவிட இவ்வுலகிற்கு
மிக முக்கியமானவர்களாக இருந்த எத்தனையோ பேர் போய் விட்டனர்! மறையப் போகும் இந்த
ஆண்டிலும் எத்தனையோ மரணங்கள். இசையில், பல உலகப்புகழ் பாடகர்களுக்காக பேஸ்
கித்தார் இசைத்த, அக்கருவியின் அதிசயக்கலைஞன் என்று பாராட்டப்பட்ட பாப் பிர்ச் (Bob Birch) 56 வயதில் தன்னை
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும் உலகப்புகழை அடைந்த பீஜீஸ் (Beegees) இசைக்குழுவின்
முக்கியப்பாடகர்களில் ஒருவரான ராபின் கிப் (Robin Gibb) 62 வயதில்
புற்றுநோயினால் இறந்துபோனார். எழுபதுகளில் தனது டிஸ்கோ இசை வழியாக உலகம் முழுவதும்
ரசிகர்களை சம்பாதித்த கறுப்பழகி டோணா சம்மர் (Donna Summer) 63 ஆவது வயதில்
நுரையீறல் புற்றுநோயினால் இறந்தார். அமெரிக்க ராக் இசைக்குழு ஃப்ளீட்வுட் மேக் (Fleetwood Mac) இன் முக்கிய
கலைஞர்களில் ஒருவராகயிருந்த பாப் வெல்ஷ் (Bob Welch) தனது 66 ஆவது
வயதில் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார். இசைக்கு வெளியே, எனது ஹைதராபாத்
நாட்களின் வறட்சி வாழ்க்கையில் ஃப்ளோப் ஷோ (Flop Show) எனும் தனது
தூரதர்ஷன் நகைச்சுவை நிகழ்ச்சியால் என்னை சந்தோஷப்படுத்திய நகைச்சுவை நடிகர்
ஜஸ்பால் பட்டி (Jaspal Bhatti) சென்ற மாதம் பஞ்சாபில் நடந்த கோரமான ஒரு கார் விபத்தில்
பரிதாபமாக இறந்துபோனார். 57 வயது. ஆனால் இம்மரணங்களையெல்லாம் விட என்னை மிகவும்
பாதித்த மரணம் 90 வயதான டாக்டர் வர்கீஸ் குரியனுடையது. அவருக்கோ இசையுடனும் கலையுடனும்
எந்த சம்பந்தமுமே இருந்ததில்லை.
குஜராத் மாநிலத்தில் நான் நிறைய பயணம் செய்திருக்கிறேன்.
பரோடாவிலிருந்து தலைநகரமான அஹ்மதாபாத் போகும் மாநில நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கிறது
ஆனந்த் எனும் ஊர். மும்பாய் அஹ்மதாபாத் ரயில் பாதையில் தூங்கி வழியும் ஒரு ரயில்
நிலையம் அது. குஜரத்தியில் ’ஆணந்த்’ என்று சொல்வார்கள். அவ்வழியாக
செல்லும்போதெல்லாம் அங்கு வானுயர்ந்து நிற்கும் அமுல் (AMUL) எனும் பெயர்ப்பலகை
கொண்ட தொழிற்சாலைகளை பார்க்க முடியும். அப்போது எனக்கு டாக்டர் வர்கீஸ் குரியனின்
ஞாபகம்தான் வரும். எனது ஆதர்சங்களில் ஒருவராக எப்போதுமே நான் நினைத்தவர் அவர். வியப்புடனல்லாமல்
அவரைப்பற்றி ஒருபோதும் என்னால் யோசிக்க முடிந்ததில்லை. உள்ளே சென்று அவரை ஒருமுறை
சந்திக்க முடியுமா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரை சந்திக்க என்ன
தகுதியிருந்தது எனக்கு?
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்
கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும் அதன் வணிக சாம்ராஜ்ஜியத்தையும் 63 ஆண்டுகளுக்கு
முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன். அமுல்
என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிட்டெட் என்று பொருள் (Anand Milk Union
Limited). உருவாகி சில மணிநேரத்திற்குள்ளேயே கெட்டு போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக் கொண்டு பலகோடி மக்களின்
ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படி தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே
உதாரணம் டாக்டர் வர்கீஸ் குரியன் தான்! ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின்
தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று
திட்டவட்டமாகச் சொல்வேன்.
டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ முதலீட்டாளரோ
ஆக ஒருபோதும் இருந்தவரல்ல. ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில்
முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம் தான் அமுல்! அமுல் ஒரு மாபெரும்
கூட்டுறவு சங்கம்! 16200 கிராமிய கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32
லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!
ஆண்டில் 12000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும் பால் பொருட்களையும்
பதப்படுத்தி விற்கும் உலகின் தலை சிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய்,
குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ்,
பால் குளிர் பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா,
பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாயிகள் போன்றவற்றின் உற்பத்தியிலும்
விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே. அமுலில் டாக்டர்
வர்கீஸ் குரியன் ஆரம்பித்த ’செயல்ப் பெருவெள்ளம்’ (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும்
பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது. அதனூடாக உலகில் மிக அதிகமாக பாலை உற்பத்தி
செய்யும் நாடாக இந்தியா மாறியது! உலக அரங்கில் இந்தியாவுக்கு தலை நிமிர்ந்து
நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று! எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.
மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே
இதையெல்லாம் செய்து முடித்தவர் அவர்!
இந்தியாவின் வெள்ளைப் புரட்சியின் தந்தை, இந்தியாவின் நிரந்தர
பால்காரன் என்றெல்லாம் அறியப்பட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் தாய்மொழி மலையாளம். இந்திய
சுதந்திரத்திற்கு முன்பு, சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்த கோழிக்கோடு நகரில் 1921
ஆம் ஆண்டு பிறந்தவர். பணக்காரக்குடும்பம். சென்னையின் லொயோலா கல்லூரியில்
பௌதிகவியலில் தனது பட்டப்படிப்பை முடித்த வர்கீஸ் குரியன் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயந்திரவியலில் மேற்படிப்பை முடித்தார்.
ஜம்ஷெட்பூரிலுள்ள டாடா ஸ்டீல் தொழில்நுட்ப கல்லூரியிலிருந்து மிக அதிகமான
மதிப்பெண்களுடன் உலோகவியலிலும் பட்டம்பெற்ற அவரை உயர்ந்த கல்வி உதவிநிதி வழங்கி மேற்படிப்புக்காக
அமெரிக்காவுக்கு அனுப்பியது இந்திய அரசாங்கம். 1946ல் அமெரிக்காவின் மிஷிகன் மாநில
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் நாடு சுதந்திரமடைந்த பின் ஒரு இயந்திரவியல்
விஞ்ஞானியாக இந்தியா திரும்பினார். ஆனால் இந்த உயர் பட்டப்படிப்புகள் எதுவுமே தனது
பிந்தைய கால வாழ்க்கைக்கு உதவவில்லை என்று அவர் பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்!
அவருக்கு கல்வி உதவிநிதி வழங்கும்போது அரசாங்கம் முன்வைத்த
நிபந்தனை, படிப்பு முடித்து வந்தவுடன் இந்தியாவின் எந்த பகுதிக்கு அனுப்பினாலும்
அங்கு சில ஆண்டுகள் அரசு வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அவ்வாறாக 1949ல் அவர்
ஆனந்த் வந்து சேர்ந்தார். கடுமையான வறுமை, தண்ணீர்பஞ்சம், சுட்டெரிக்கும் கோடை,
எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்மை போன்றவைக்கு பேர்பெற்ற ஆனந்திலுள்ள அரசு பால்
பண்ணையில் புது இயந்திரங்களை பொருத்துவது தான் வேலை. பணக்கார குடும்பத்தில்
பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து தாயகம் திரும்பிய வர்கீஸுக்கு
ஆனந்தில் கிடைத்த தங்குமிடம் ஒரு சிதிலமான வண்டிக் கொட்டகை! பசுமாடுகளின் ஓலங்களும்
எருமைகளின் நாற்றமும் அவரால் தாங்க முடியவில்லை. சிறு வயதிலிருந்தே பால் அவருக்கு அறவே
பிடிக்காது! வேறு வழியில்லாமல் அரசுடனான ஒப்பந்த காலம் முடிவதற்காக
காத்திருந்தார். பலமுறை ராஜினாமா கடிதம் அனுப்பிப் பார்த்தார். ஒப்பந்த காலம்
முடிவதன் முன்னரே அவரது ராஜினாமாவை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது! திரும்புவதற்காக
பயணப்பொதிகளை கட்டிக்கொண்டிருந்த அவரை திரிபுவன் தாஸ் பட்டேல் என்கிற குஜ்ராத்தின்
விவசாயித் தலைவர் வந்து சந்த்தித்தார்.
ஒருவேளை உணவுக்காக இரவுபகல் பாடுபட்டு புழுதியில் மடியும்
ஏழைகளுக்காக எதாவது நல்லதைச் செய்ய அவரால் முடியுமென்றும், குஜ்ராத்திற்கு அவரது
சேவை மிக அவசியம் என்றும் சொல்லி வர்கீஸை அங்கு தொடருமாறு வேண்டிக்கொண்டார்
திரிபுவன் தாஸ். அவரது வார்த்தைகளிலிருந்த கனத்தையும் அழுத்தத்தையும் மறுக்க வர்கீஸால்
முடியவில்லை. இனிமேல் தனது வாழ்க்கை இங்கு தான் என்று அவர் அன்று முடிவெடுத்தார். பின்னர்
நடந்தது இந்தியாவின் வெள்ளைப் புரட்சியின் வரலாறு.
” பாலைப்பற்றியோ விவசாயத்தைப்பற்றியோ
அதுவரைக்கும் எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. தனக்கு எது தெரியும் என்பதை விட
எது தெரியாது என்று உணர்ந்தவர்களால் தான் எதையும் சிறப்பாக செய்ய முடியும்” என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார் டாக்டர் வர்கீஸ் குரியன்! அமெரிக்காவில்
தனக்கு அறிமுகமான நண்பர் ஹரிச்சந்திர யாதவை சில நாட்கள் ஆனந்த் வருமாறு
கேட்டுக்கொண்டார். அவர் பால் விவசாயிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மூன்று
நாட்களுக்கு மட்டும் விருந்தாளியாக வந்த அவர் அமுலில் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்று
35 ஆண்டுகள் அங்கு வேலை செய்தார்! இதுபோல் அமுலின் ஒவ்வொரு துறையிலும் மிகுந்த
திறமைசாலிகளை பொறுப்பில் வைத்துக்கொண்டு தெளிவான முறையில் அவர்களை வழிநடத்தினார் டாக்டர்
வர்கீஸ் குரியன்.
குஜராத்தி மொழி ஒருபோதும் அவருக்கு
வசமாகவில்லை. ஹிந்தியுமே அரைகுறை தான்! ஆங்கிலத்தில் தான் அனைத்து கருத்து
பரிமாற்றங்களுமே. ஆனால் மொழி அவருக்கு ஒருபோதும் ஒரு தடையாக இருக்கவேயில்லை!
மிகவும் கவனிக்கப்பட்ட அமுலின் விளம்பரங்கள் படைப்பூக்கம் கொண்டவையும்
காலத்திற்கேற்றவையுமாக அமைந்ததில் டாகடர் வர்கீஸ் குரியனுக்கு நேரடி பங்கிருந்தது.
சாதனைகளுக்குமேல் சாதனைகளும்
விருதுகளுக்குமேல் விருதுகளும் வந்து குவிந்தது அவருக்கு. பாரத ரத்னா தவிர
இந்தியாவின் அனைத்து உயர் அரசு வெகுமதிகளும் அவருக்கு கிடைத்தது. 1993 இன் உலகின்
சிறந்த ஆளுமை விருது, பால் உற்பத்தி தொழிலின் உலக உயர் விருது, வால்டர் அமைதி
விருது, உலக உணவு விருது, மாக்ஸேஸே விருது என உலகின் மிக முக்கியமான பல விருதகள்
அவருக்கு கிடைத்தது. இவற்றில் பலதையும் வென்ற ஒரே ஒரு இந்தியரும் அவராகும்.
முதுமை வந்த பின்னரும் கூட அவருக்கு வேலை
ஓய்வு வழங்கப்படவில்லை. அவரும் அதை விரும்பவில்லை. ஆனால் கடைசியில் தனது 85 ஆவது
வயதில் தான் உருவாக்கி வளர்த்தெடுத்த அமுலிலிருந்து வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார் டாக்டர் வர்கீஸ் குரியன்! அமுலை தங்களது சர்வாதிகாரத்தின் கீழ்
கொண்டுவர முயன்ற ஆளும்கட்சி அரசியலின் தந்திரங்களினால் அது நடந்தது. ஆனால் அதன்
பின்னரும் அவர் ஆனந்தையோ அங்கு தான் உருவாக்கின உலகப்புகழ்பெற்ற தேசிய கிராமவியல் பட்டப்படிப்பு கல்லூரி
போன்ற பல தாபனங்களையோ விட்டு விலகவில்லை.
சுயநலம் என்கிற வார்த்தையே டாக்டர் வர்கீஸ் குரியனின் அகராதியில் இருந்ததில்லை. ஆனால் தன்
முடிவுகளின்மேல், தீர்மானங்களின்மேல், உழைப்பின்மேல் அசையாத தன்னம்பிக்கை
அவருக்கிருந்தது. இதனால் கர்வம் கொண்டவர் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டார்! அமுலின்
எல்லாத் துறைகளையுமே தனது நேரடி கட்டுப்பாட்டில் எப்போதுமே வைத்திருந்தார் அவர். இதனால்
ஒரு சர்வாதிகாரி என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்! ஆனால் பாரபட்சம், தனக்கு
வேண்டியவர்களுக்காக சலுகைகள் வழங்குதல், சிபாரிசு செய்தல் என எந்தவொரு விஷயமும்
அவர் தன் வாழ்க்கையில் செய்ததில்லை. காலந்தவறாத செயல்பாடுகள், காலத்திற்கு முன்பே
பறக்கும் கண்ணோட்டம், பட்சம் சாராத மனப்பாண்மை, யார் முன்னும் வளையாத முதுகெலும்பு
போன்றவைதான் டாக்டர் வர்கீஸ் குரியனின் ஆளுமையின் அடிநாதமாக இருந்தது. இந்திய ஜனாதிபதிகளும்
பிரதமர்களும் அவரை அவர் இருக்குமிடத்தில் சென்றுதான் சந்தித்தனர்.
முழுமை பெறாத கனவு என்ற தனது சுய
சரிதையில் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
” தனது ரத்தத்தை வேர்வையாக சிந்தி நமக்காக உணவை தயாரிப்பவன் விவசாயி. தனது உணவை அவன்
நிம்மதியாக உண்ணும்போது, மற்ற தொழில் துறைகளுக்கு நிகரான மரியாதையும் வருமானமும்
அவனுக்கும் கிடைக்கும்போது மட்டும்தான் எனது கனவுகள் நனவாகும். அறுபதாண்டு முன்பு
ஆனந்தில் நான் ஆரம்பித்த பயணம் முடியப்போவதில்லை, நம் நாட்டின் ஒவ்வொரு ஏழை
விவசாயியும் வெற்றிபெரும் வரை”.
பூரண நாத்திகரும் பகுத்தறிவாளருமாக வாழ்ந்த டாக்டர் வர்கீஸ் குரியன் தனது உடலை மின்சார மயானத்தில் எரித்து சாம்பலை அமுலின்
மண்ணில் தூவ வேண்டும் என்று விரும்பினார். சம்பிரதாயமான சடங்குகளோ நினைவிடமோ
தனக்கு இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். கடந்த செப்தம்பர் 9 அன்று அவர்
இறந்தபோது அவ்வண்ணமே நடந்தது. தன் மரணத்தைப் பற்றி சொல்லும்போதெல்லாம் இந்த கவிதை
வரிகளை தான் எடுத்து கூறினார் டாக்டர் வர்கீஸ் குரியன்.
அஸ்தமனமும் அந்திவான தாரகையும்
என்னை அழைக்கிறது
திரும்பிவராத கடல் பயணத்திற்கு நான் புறப்படுகிறேன்
கடற்கரையில் அலைகள் ஓசை எழுப்பாமலிருக்கட்டும்
அமைதியில் நான் கடந்து போகட்டும்*
* ஆல்ஃப்ரெட் லார்ட் டென்னிஸனின் கவிதை வரிகள்