ஒரு தொலைக்காட்சி நிலையம் வழங்கும் திரைப்பட விருது விழா. தமிழ் சினிமாப் பிரபலங்கள் நிறைந்து வழியும் அரங்கு. மூச்செடுக்காமல் பேசிக்கொண்டிருக்கும் தொகுப்பாளர்கள். குறுவட்டு போட்டுவிட்டு வெறுமனே வாயசைக்கும் பாடகர்கள். திரைநடிகைகளின் கவர்ச்சி நடனங்கள். விருது வாங்கியபின் சிலர் தங்களது திரை சாதனைகளை விரிவாக பிரசங்கிக்கிறார்கள். சிலர் அதீதமான பவ்யத்துடன் விருதை ஆண்டவன் தொடங்கி ஆண்டி வரைக்கும் அத்தனை பேருக்கும் சமர்ப்பணம் செய்கிறார்கள். இன்னபிற நகைச்சுவை நிகழ்ச்சிகள்! திரைக்கதைக்கான விருது ஆரண்ய காண்டம் படத்தின் திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான தியாகராஜன் குமாரராஜாவுக்கு அறிவிக்கப்படுகிறது! அவர் மேடைக்கு வருகிறார்.
இந்த மதிப்பிற்குரிய விருதைப் பெறும்போது நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று கேட்கிறார் அறிவிப்பாளர். ’என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?’ என்ற தொனியுடன் தியாகராஜன் குமாரராஜா சிரிக்கிறார். ’ என்னத்தச் சொல்ல!’ போன்று ஏதோ ஒன்றை முனகுகிறார்! ” எப்பவும் போலத்தான். சந்தோஷமாயிருக்கேன். அவ்வளவு தான்” என்று சொல்லி கிளம்ப பார்க்கிறார். ‘இங்கே இருக்கும் பல முக்கியமான திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் உங்களை பாராட்டியிருக்காங்க! அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’ என்று இன்னுமொரு கேள்வி. ”என்ன சொல்லணும்! நன்றி சொல்லணும்” என்று சிரித்தபடியே சொல்லி மேடையிலிருந்து வெளியேறுகிறார். இதுதான் தியாகராஜன் குமாரராஜா! தமிழ் திரைத்துறையில் நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து மாறுபட்ட மனிதர். வித்தியாசமான படைப்பாளி.
தன்னைப்பற்றி எடுத்துரைக்க அவரிடம் எதுவுமே கிடையாது. ”நான் ஒரு அறிவு ஜீவியோ மேதையோ அசாமான்னியனோ கிடையாது! ஆழ்ந்த வாசிப்பு, அடிக்கடி பயணங்கள், தொடர்ந்து திரைப் படங்களை பார்ப்பது, உலகப்படங்களின் மேலும் கலைப்படங்களின் மேலும் தீராத காதல் போன்ற எந்த நற்குணமும் எனக்குக் கிடையாது! சென்னையின் போரூர் பகுதியில் பிறந்து வளர்ந்து பெரும்பாலும் சென்னையிலே திரிந்த ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்து பையன்தான் நான். ஆரண்ய காண்டம் எழுதும்போதும் எடுக்கும்போதும் என் வீட்டில் தொலைக்காட்சியோ இணைய வசதியோ இருந்ததில்லை. இரண்டிலும் எனக்கு பெரிய நாட்டமும் இருக்கவில்லை”.
தன் பெயரில் இணையத்தில் இயங்கும் ஃபேஸ் புக், ட்விட்டர் போன்ற எந்த கணக்குகளுடனும் தனக்கு சம்பந்தமில்லை என்றும் அவர் சொன்னார்! தொலைக் காட்சியே பார்ப்பதில்லை. தமிழ் திரைப்படங்களையும் அதிகமாக பார்ப்பதில்லை. சமீபத்தில் வந்த எந்த திரைப்படமுமே பார்த்ததில்லை! தமிழ் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய இயக்குநர் என்று பாராட்டப்படும் தியாகராஜன் குமாரராஜா தன்னை அறிமுகப்படுத்தும் விதம் இதுதான்!
நியூ யோர்கில் நடந்த அகில உலக் திரைப்பட விழாவில்தான் ஆரண்ய காண்டம் முதன்முதலாகத் திரையிடப்பட்டது. ஆனால் அப்போது படம் முழுமை பெற்றிருக்கவில்லை. வண்ணங்களும் வெளிச்சமும் சரிசெய்யப்பட்டு வழமையாக்கப்படாத, பின்னணி இசை இல்லாத, மங்கலான ஒரு பிரதியைத்தான் அங்கு திரையிட முடிந்தது! ஆனால் அந்த விழாவின் சிறந்த படத்திற்கான நடுவர் பெரும்குழு விருதை வென்றது ஆரண்ய காண்டம்!
”எனது படம் ஒரு கலைப்படமோ யதார்த்தப் படமோ பரீட்சார்த்த படமோ நடுநிலைப் படமோ கிடையாது! அதை ஒரு Noir Film, Neo Noir ஃபிலிம் என்றெல்லாம் வகைமைப்படுவது அவரவர் விருப்பம். என்னைப் பொருத்தவரையில் அது நிறைய குறைபாடுகளுள்ள ஒரு வணிகப்படம். இன்னும் சொல்லப் போனால் ஒரு மசாலாப் படம். அதில் சண்டை, வெட்டுக் குத்து, படுக்கையறைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் என அனைத்தும் இருக்கின்றன” என்று அவர் எளிதாகச் சொல்லுகிறார். இருக்கலாம்! ஆனால் இவ்விஷயங்கள் இப்படி எழுதப்பட்டு, இப்படி படமாக்கப்பட்டிருப்பதை இதன்முன் இங்கு நாம் பார்த்ததில்லையே! ஆரண்ய காண்டம் தமிழ் வணிக சினிமாவின் அனைத்து மரபுகளையும் ’எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி’ போன்ற போலியான புதுமை நாட்டியங்களையும் கிடுகிடுக்க வைத்தது என்பது நிதர்சனமான உண்மை.
ஹிந்தித் திரையில் ஆண்மையின் அடையாளமாக கருதப்பட்ட ஜாகி ஷ்ரோஃபை ஆண்மையற்றவராகவும் அதேசமயம் கொடூரமான வில்லனாகவும் காட்டுகிறார். ஜாகி ஷ்ரோஃபுக்கென்று வலிந்து உருவாக்கிய முக்கியத்துவம் எதுவுமேயில்லாமல் பல நடிகர்களில் ஒருவராக அவரையும் நடிக்க வைக்கிறார்! ஜாகி ஷ்ரோஃபின் முகம் ‘தமிழ் முகம்’ அல்ல. கொஞ்சம் நேபாளச் சாயலுள்ள ஒரு குஜரத்தி முகம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். ஆனால் சென்னை நகரின் குற்றம் மலிந்த நிழல் உலகச் சந்துகளின் அரசராக வரும் அவரை ஒரு தமிழனாக பார்ப்பதில் நமக்கு எந்த சிரமும் இல்லை! கதாபாத்திரங்களின் யதார்த்தத் தன்மைக்கு இன அடையாளங்கள் தென்படும் முகங்கள் தேவைப்படுகின்றன என்ற தமிழ் யதார்த்த சினிமாவின் ஒரு பெரும் தேய்வழக்கை இதனூடாக தகர்க்கிறார் குமாரராஜா.
சென்னையின் திரைப்பட தணிக்கைக் குழு 52 இடங்களை துண்டிக்காமல் இப்படத்தை வெளியிட முடியாது என்று ஆணையிட்டது! ஆனால் தில்லி மேல் தணிக்கை எந்தவொரு துண்டிப்புமில்லாமல் படம் வெளியிட அனுமதி வழங்கியது. இருந்தும் எண்ணற்ற இடங்களில் வசனங்களை ஊமைப்படுத்த வேண்டியிருந்தது! அதன் ’’ப்ளீப்’’ ஒலிகள் பலசமயம் கதையுடன் தடையில்லாமல் பயணிப்பதிலிருந்து பார்வையாளனை தடுத்தது! மனதை உறைந்துபோகச் செய்யும் வன்முறைக் காட்சிகள் தொலைக்காட்சியினூடாகவும், உலகில் மனித சாத்தியமான அத்தனை காமக் கூத்துகளும் இணையம் வழியாக, கைபேசி வழியாக ஒவ்வொரு வீட்டிலும் வந்து குவியும் இந்த காலகட்டத்தில், முதிர்ந்த பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தின்மேல் இப்படித் தணிக்கை அதிகாரத்தை செயல்படுத்துவது யாருடைய நலத்திற்காக என்று தெரியவில்லை!
ஆரண்ய காண்டம் வணிக வெற்றி பெறவில்லை! சரியான முறையில் விளம்பரப்படுத்தி, பரவலாகத் திரையிடப்படாததுதான் காரணம் என்றே நினைக்கிறேன். பெரும் பொருளாதார வெற்றிக்கான அனைத்து சாத்தியங்களும் நிறைந்த படம்தான் ஆரண்ய காண்டம் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. சிறந்த புதுமுக இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு என இரண்டு தேசிய விருதுகளை ஆரண்ய காண்டம் வென்றது. அப்போதும் தமிழ்நாட்டில் சொல்லும்படியாக யாருமே இந்த படத்தை பார்த்திருக்கவில்லை. பத்திரமாக கட்டிக்காக்கப்படும் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் கூட, வெளியாகி அடுத்த நாளே திருட்டு டி வி டியாக கிடைக்கும் நம் நாட்டில் இந்த படத்தின் அசல் டி வி டியோ திருட்டு டி வி டியோ கூட எங்குமே கிடைக்கவில்லை, கிடைப்பதில்லை என்பது அதிசயமாகவே இருக்கிறது! இணையத்தில் கிடைத்த மங்கலான ஒரு பிரதியைப் பதிவிறக்கம் செய்துதான் உலகம் முழுவதும் பலர் இப்படத்தைப் பார்த்தனர்.
ஆரண்யம் என்றால் வனம் என்று பொருள். ராமனும் சீதையும் வனவாசம் மேற்கொண்டதை சித்தரிக்கும் ராமாயணத்தின் பகுதி தான் ஆரண்ய காண்டம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை நகரம் எனும் கொடும் வனத்திற்குள் தங்கு தடையில்லாமல் மேய்ந்து விளையாடும் மனித விலங்குகளின் கதைதான் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம். வாழ்க்கை எனும் மகாவனத்திற்குள் மனிதர்கள் பலசமயம் கொடூரமான விலங்குகள் என்பது தான் இப்படத்தின் மையக்கரு. சிங்கப்பெருமாள்,காளையன், பசுபதி, கஜேந்திரன், கஜபதி என விலங்குகளை குறிக்கும் பெயர்களுடன் அவர்கள் வாழ்கிறார்கள்.
சிங்கப்பெருமாள் காட்டு அரசரான சிங்கம். கஜேந்திரனும் கஜபதியும் காட்டு யானைகள். பசுபதி ஒரு பசு. அவன் ஒரு பலிக் கடா. சேவல் சண்டைக்காரரான காளையன் ஒரு அடிமாடு! இப்படத்தின் காதல் கதையின் மையப்பாத்திரங்களான’சப்பை’யும் ’சுப்பு’வும் மட்டும் விலங்குகள் அல்லர். அவர்கள் மனிதர்களாகக்கூட இருக்கலாம்! நாடகத்தனமான காதல் காட்சிகள், தொப்புள் குழிகள், மார்பகத்தின் மேற்பிளவுகள், செயற்கையான உண்ர்ச்சிக் கொந்தளிப்புகள் என எதுவுமே இப்படத்தில் நாம் பார்க்க முடியாது.
பல அடுக்குகளில் பயணிக்கும் நாங்கு கதைகள், ஒரேபோல் முக்கியத்துவம் கொண்ட ஆறு மையப் பாத்திரங்கள், மூன்று வகையான இறுதிக்காட்சிகள் என தமிழ் வணிக சினிமாவின் தேய்வழக்குகள் அனைத்தையும் ஆரண்ய காண்டம் தவிர்த்திருக்கிறது. படத்தின் கடைசியில் முக்கிய பாத்திரமாக ஒரு பெண்தான் முன்னிறுத்தப்படுகிறாள். அங்கு இது ஒரு பெண்களின் பட்சம் நிற்கும் சினிமாவாக உருமாறுகிறது. ”முற்றிலுமாக கற்பனை உலகம் தான். எந்தவொரு நிழல் உலகத்தினரையோ குற்றவாளிகளையோ சொல்லப்போனால் ஒரு சிறு திருடனையோ கூட என் வாழ்க்கையில் நான் பார்த்தது கிடையாது. ஆனால் நான் சொல்ல நினைத்த உலகத்தை ஒரளவுக்கு நம்பகத்தன்மையோடு உருவாக்க என்னால் முடிந்தது என்றே நினைக்கிறேன்” என்கிறார் குமாரராஜா.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வசனங்களின் மொழி என்பது இன்றைய சென்னையின், முக்கியமாக வடசென்னையின் வட்டார வழக்குதான். கொச்சையான ஆங்கில வார்த்தைகள், கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அலைபேசிகள் சார்ந்து உருவாகியிருக்கும் புது வார்த்தைகள் என்பவையெல்லாம் மிக சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிமொழியிலும் கேமராக் கோணங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட இலக்கண மீறல்கள் இப்படத்தை முற்றிலும் வேறான ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. பதினாறாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி காலகட்டத்து ஓவியங்களை நினைவுபடுத்தும் வெளிச்ச அமைப்பு இப்படத்தின் காட்சிகளுக்கு ஒரு காவியத்தன்மை வழங்குகிறது. அத்துடன் ஒரு அறையில் அல்லது இடுங்கலான தெருவில் உள்ளபடியாக இருக்கும் வெளிச்சத்தில் காட்சிகளை யதார்த்தமாக பார்ப்பதன் உணர்வையும் அது நமக்குத் தருகிறது.
க்வென்டென் டெரண்டீனோ, ப்ரயன் டி பாமா, ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா, மார்டின் ஸ்கோர்செஸி, கை ரிட்ச்சி போன்ற இயக்குநர்களின் தாக்கமும் காட் ஃபாதர் தொடங்கி பல்ப் ஃபிக்ஷன் வரையிலான பல படங்களின் பாதிப்பும் இப்படத்தின் உருவாக்கத்தில் குமாரராஜவுக்கு உதவியிருக்கக்கூடும். பல அடுக்குகளிலாக பல கதைகளை ஒரேநேரத்தில் சொல்லும் அலெஹாந்த்ரோ கோன்சாலெஸ் இன்யாரீதுவின் சினிமா உத்தி இப்படத்தின் திரைக்கதையை வடிவமைப்பதிலும் அவருக்கு பயன்பட்டிருக்கலாம். ஆனால் ஆரண்ய காண்டம் வேறு எதாவது ஒரு படத்தின் தழுவல் என்றோ, எதிரொலி என்றோ யாராலையும் சொல்ல முடியாது.
ஆரண்ய காண்டத்தின் பின்னணி இசை அசாத்தியமாகவே அமைந்திருக்கிறது. நாடகத்தன்மை கொண்ட இசை இப்படத்தில் நாம் கேட்க முடியாது. இப்படத்தின் இசைவழியாக யுவன் ஷங்கர் ராஜா பல விருதுகளை வென்றார். பாடல்களேயில்லாத ஆரண்ய காண்டத்தில் பல பழைய பாடல்கள் சூழலில் ஒலிப்பதாக பின்னணி இசையில் பின்னியிருப்பார். பிடித்த இசை கேட்கும்போது அது எண்ணற்ற காட்சிகளாக தனக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் என்று தியாகராஜன் குமாரராஜா சொல்கிறார்.
ஜாகி ஷ்ரோஃப், யாஸ்மின் பொன்னப்பா, ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் என இப்படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றபோதிலும் குரு சோமசுந்தரம் நடித்த காளையன் பாத்திரம் போல் ஒன்று எனது வாழ்நாளில் எந்த ஒரு சினிமாவிலும் நான் பார்த்ததில்லை. அப்பாத்திரத்தின் எழுத்து, இயக்கம், வசனங்கள் அனைத்துமே அற்புதம்! சோமுவின் அந்த உலகத்தரமான நடிப்பைப் போன்ற ஒன்று நான் பார்த்த எந்தச் சினிமாவிலும் வநத்தாக ஞாபகமில்லை. புதுமைக்காகப் புதுமை, வித்தியாசத்துக்காக வித்தியாசம் போன்ற தந்திரங்கள் எதையுமே கடைப்பிடிக்காமல் அனைவரையும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடிக்கவைக்க தியாகராஜன் குமாரராஜாவால் முடிந்திருக்கிறது.
படம் முன்வைக்கும் முக்கியமான கேள்வி என்பது ’உங்களுக்குக் கமல் பிடிக்குமா ரஜினி பிடிக்குமா’? என்பது தான். ’சப்பை’ என்கிற பாத்திரத்திற்கு கமல்தான் பிடிக்கும். ஏன் என்றால் கமல் காதல் மன்னன். பெண்களின் உதடுகளில் இச் இச் என்று முத்தம் கொடுப்பார். சப்பையின் காதலி ‘சுப்பு’வின் பார்வையில் ரஜினிதான் கமலை விட முக்கியமானவர். காரணம் ரஜினி சாதாரணமாக இருப்பார், ஆனால் அவர் பெரிய பாட்சா! விஜயகாந்தை சுப்புவிற்கு இன்னும் அதிகமாகப் பிடிக்குமாம். ஏன் என்றால் அவர் பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுபவர்!
நமது வணிக சினிமாவின் கருத்துக்களும் சித்தரிப்புகளும் எவ்வளவு அபத்தமானது என்று இங்கு சொல்லாமல் சொல்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ரஜினியிடமும் கமலிடமுமிருந்து அனுமதி வாங்கிவந்தால்தான் இந்த வசனங்களும் காட்சியும் படத்தில் இடம்பெற அனுமதிக்க முடியும் என்று தணிக்கைக்குழு அடம் பிடித்ததாக சொல்லப்படுகிறது! தனது படைப்பிற்கு உண்மையாக இருக்கும் ஒரு இயக்குநருக்கு எத்தனை சோதனைகள்!
சினிமா இயக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓரிரு மாதங்களிலேயே கல்லூரிப்படிப்பை விட்டுவிட்டவர். எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றாதவர். இன்று பெரும்பாலானோருக்கு பரிகாசமாக இருக்கும் தூரதர்ஷன் தொலைக்காட்சிதான் தன்னை உருவாக்கியது என்று திட்டவட்டமாக சொல்பவர். குறைவாகப் படித்தாலும் கவனத்துடன் படிப்பவர். குறைவாகச் சினிமா பார்த்தாலும் அவற்றை மிகுந்த கவனத்துடன் அவதானிப்பவர் தியாகராஜன் குமாரராஜா.
”நான் யாருடனும் உதவியாளனாக இருந்தவனல்ல. ஆனால் என்னுடன் உதவியாளர்களாகச் சேரவேண்டும் என்று எத்தனையோ இளைஞர்கள் வருகிறார்கள்! அது ஒரு சந்தோஷம். எனது படங்கள் வழியாக மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. மாறாக மனிதனின் இயல்புகளை சொல்லத்தான் நான் விரும்புகிறேன். குற்றம் என்பது ஒரு மாபெரும் மனித இயல்பு! எழுத்து தான் எனக்கு மிக முக்கியமானது. நன்றாக எழுதி முடித்தால் அதை ஒரு படமாக வெளிப்படுத்த எனக்கு ஓரிரு மாதங்கள் போதும். ஒரிடத்தில் உட்காரப் பிடிக்காதவன் நான். எப்போதுமே அலைந்து திரிபவன். அப்போதெல்லாம் மனிதர்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன். அதுதான் எனது திரைக் கல்வி”. ஆபத்தானது என்றே சொல்லக்கூடிய நேர்மையும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையும் வித்தியாசமான அவதானிப்புகளும் திரைப்படம் குறித்த மாறுபட்ட பார்வையும் கொண்ட தியாகராஜன் குமாரரஜா, நமது திரைத்துறையில் ஒரு தனித்த பயணி.
(2012 ஜனவரியில் எழுதியது)