20130207

ஒலியா இசையா?



அசிங்கமான படத்தை (Dirty Picture) பார்த்திருப்பீர்கள். எல்லா வகையிலும் அப்பெயருக்கு மிகப் பொருத்தமான ஒரு திரைப்படம் அது! இவ்வுலகம் தனக்களித்த எண்ணற்ற துயரங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைக் கேலிக்கூத்தாக்கியது அப்படம். பெரும் வணிகவெற்றி பெற்ற அந்த மசாலாப் படத்தில் முக்காலும் நிர்வாணமாக நடித்த வித்யா பாலனுக்குத் தேசிய விருதை வழங்கிப் பெருமைப்படுத்தினார்கள்! அப்படத்தில் வந்த ஊலாலா ஊலாலா எனும் பாடல் மாபெரும் வணிகவெற்றி பெற்றது. இசை, விஷால் சேகர். பாடியவர்கள் எண்பதுகளின் பிரபல ஹிந்தி இசையமைப்பாளர் பப்பி லஹிரி மற்றும் ஷ்ரேயா கோஷால்.  அப்பாடல் பலவகைகளில் என்னைக் குழப்பிவிட்டது.

ஷ்ரேயா கோஷாலின் பாடும்முறையில் தென்பட்ட, அவரது இயல்புக்கு மாறான செயற்கைத்தனம் முதல் குழப்பம். இன்னொன்று 1983ல் மவாலி எனும் படத்திற்காக பப்பி லஹிரியே இசையமைத்த உய் அம்மா உய் அம்மா எனும் பாடலின் அப்பட்டமான தழுவல்தான் அப்பாடல் என்பது! அது தனது இசை என்பதை எங்கேயுமே தெரிவு செய்யாமல் ஊ லாலா பாடினார் பப்பி லஹிரி! இதையெல்லாம் விட என்னைக் குழப்பிய விஷயம், இருபதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த உய் அம்மாவின் ஒலித் தரத்தை ‘ஊ லாலாவால் நெருங்கவே முடியவில்லை என்பது! சந்தேகமிருந்தால் மவாலிபடத்தின் இசைத்தட்டைக் (Vinyl Record) கேட்டுப்பாருங்கள்.

சமீபத்தில் வெளிவந்த ஏ ஆர் ரஹ்மானின் கடல் திரைப்படத்தின் பாடல்களும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி. இருபதாண்டுகள் தொடர்ந்து இயங்கிய பின்னரும் ஏ ஆர் ரஹ்மானால் படைப்பூக்கம் கொண்ட இசையைத் தர முடிகிறது என்பது மகிழ்ச்சி தந்தாலும் கடந்த இருபதாண்டுகளில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு அவரது ஒலித்தரம் வீழ்ந்திருப்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நள்ளிரவில் பண்பலை வானொலி ஒன்றில் கடலின் அன்பின் வாசலேஎன்ற பாடலைக் கேட்டேன். அற்புதமான இசைக் கோர்வை. ஆனால் ஒன்றுக்கு ஒன்று கலந்து,  துலக்கமற்று முழங்கிய அதன் ஒலியமைப்பு அது ஒரு ஏ ஆர் ரஹ்மான் பாடலா என்று சந்தேகப்படவைக்கும் அளவில் இருந்தது. அப்பாடல் முடிந்தவுடன் டூயட் (1994) படத்தில் வந்த அவரது ‘அஞ்சலீ அஞ்சலீபாடல் ஒலிக்க ஆரம்பித்தது. அதன் துவக்கத்தில் உள்ள சாக்ஸோஃபோன் கருவியிசை தெள்ளத் தெளிவாக, எனதருகில் நின்றுகொண்டு யாரோ இசைப்பதுபோல் ஒலித்தது. அபாரமான ஒலித்தரம் அப்பாடலின் ஒவ்வொரு துளியிலும் துடித்துக் கொண்டிருந்தது.

என்ன நடக்கிறது என்றே புரியவேயில்லை. ஒலித்தொழில்நுட்பம் உச்சங்களை எட்டிநிற்கும் இந்த காலகட்டத்திலா இது நடக்கிறது?! பாடல்களின் பதிவிலோ பிரதிகளை எடுக்கும்பொழுதோ தெரியாமல் நிகழ்ந்த ஒரு பிழையா இது? அல்லது உலகளாவிய தனது வெற்றிக்குப் பின், இனிமேல் இசைக்கு ஒலி முக்கியமில்லை என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரா? இசைக்கு உண்மையில் ஒலி முக்கியமில்லையா?

மனிதன் இயற்கையின் ஒலிகளைத் தொகுத்து ஒழுங்குபடுத்தியபோதுதான் இசை உருவானது. முதலில் அது இசைக் கருவிகளிலிருந்தோ பாடகர்களின் குரல்வழியோ ஒலித்து ரசிகனின் காதுகளில் நேரடியாக விழுந்து அவனை மகிழ்வித்தது. அதுதான் இயற்கையான இசையொலி என்பது. பல நூற்றாண்டுகள் அவ்வண்ணமே அது தொடர்ந்தது. ஒலியை பதிவு செய்யவேண்டும் என்றும் அதை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்றும் அப்போதும் பலர் ஆசைப்பட்டிருப்பார்கள்தாம். ஆனால் அதற்கான எந்தவொரு வழியுமே அவர்களுக்கு அப்போது இருக்கவில்லை.

தெரியவரும் வரலாற்றில் முதன்முதலாக அதற்கான வழியை தேடியவர் 155 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு புத்தகப் பதிப்பாளர். எட்வேர்ட் ஸ்காட் என்ற அவர் ஓர் அச்சகத்தை நடத்தி வந்தார். ஒரு புத்தகத்தாள் அச்சிடப்படுவதுபோல் காகிதத்தில் ஒலியை பதிவுசெய்யும் ஃபொனாடோகிராஃப் (Phonautograph) எனும் இயந்திரத்தை அவர் கண்டுபிடித்தார். ஒரு காகிதத்தின்மேல் எண்ணை விளக்கின் புகைக்கரியை அடர்த்தியாகப் பரவ விட்டு அதன்மேல் ‘நிலவொளியின் ஓரத்தில்எனும் பழமையான பிரெஞ்ச் நாட்டுப்புறப் பாடலை, ஒரு பாடகியின் குரலில் பதிவு செய்தார். இவ்வாறு உலகில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட ஒலி, இசையாகவே அமைந்தது! காகிதத்தின்மேல் ஒரு சின்னக்குழந்தையின் கிறுக்கல்கள்போல் அப்பாடல் பதிவானது. ஆனால் அதைத் திரும்பக் கேட்பதற்கான வழி அந்த இயந்திரத்தில் இருந்ததில்லை! காகிதத்தில் காணப்பட்ட கிறுக்கல் கோடுகளை,  பதிவு செய்யப்பட்ட இசை என்று யாருமே நம்பவில்லை. 150 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் 2008ல் கணினியின் உதவியினால் முதன்முதலில் அந்த ஒலியை கேட்டபோது தான் உலகம் அதை நம்பியது.

எமில் பெர்லினெர், தோமஸ் எடிசன் போன்ற விஞ்ஞானிகளின் விடா முயற்சிகளினால் 1890 காலகட்டத்தில் ஒலியைப் பதிவுசெய்து அதை மீண்டும் கேட்கும் கருவிகள் உருவாயின. அன்று உருவாக்கப்பட்ட ஒலித்தட்டு அல்லது ரெக்கார்ட் தான் இதுநாள் வரை மனிதன் கண்டுபிடித்த மிகச் சிறந்த ஒலிப்பதிவு வடிவூட்டம். முதலில் ஒரு நீளுருளி (Cylinder) வடிவத்திலும் பின்னர் வைர ஒலித்தட்டு (Diamond Record) எனும் கனமான வட்டின் வடிவத்திலும் உருவான ஒலித்தட்டுகள், பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கண்டு ஒரு நூற்றாண்டு காலம் மனிதனுக்கு மிகப் பிடித்தமான ஒலி மீட்டெழுப்பு வடிவமாக நிலைகொண்டது.

1970களின் துவக்கத்தில் கையடக்கமான ஒலிநாடாவின் (Compact Cassette) வரவுடன் ஒலித்தட்டுகளின் காலம் மறையத் தொடங்கியது. ஆனால் ஒலித்தட்டுகளுடன் ஒப்பிடும்போது ஒலிநாடாக்கள் தரும் ஒலித்தரம் மிக மோசமானது! ஒலிநாடா வழங்கிய கையாளுதல் எளிமைக்கு முன்னால், உருவத்தில் பெரிய, மிகக் கவனமாகப் பராமரிக்கப்படவேண்டிய ஒலித்தட்டுகள் தோற்று பின்வாங்கின.

பின்னர் வந்த குறுவட்டுகளின் ஒலித்தரம் ஒலிநாடாக்களை விடப் பன்மடங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் சரியாகப் பராமரிக்கப்பட்டு, சிறந்த ஒலிமீட்டெழுப்புக் கருவிகள் வழியாக இயக்கப்படும் ஒரு ஒலித்தட்டிலிருந்து வெளிப்படும் ஒலித்தரத்தை, ஒரு குறுவட்டால் ஒருபோதும் நெருங்கவே முடியாது. சில ஆண்டுகளாகப் பெரும்பாலும் ஒலித்தட்டுகளின் வாயிலாக இசை கேட்டுவரும் என்னால், வேறு எந்த ஒரு நவீன ஒலி வடிவூட்டமுமே ஒலித்தட்டுக்கு நிகரானதல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ன்று நாம் ஆயிரக்கணக்கான பாடல்களை எம் பி3 களாக அமுக்கி, கணினி, ஐ போட், ஐ பாட், அலைபேசிகள் போன்றவற்றில் புகுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவற்றின் ஒலித்தரம் என்பது ஒலிநாடாக்களை விட மோசமானது என்று பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஒலிநாடாக்களிலிருந்து ஒரளவுக்கு நாம் உணரமுடியும் ஒலியின் இயல்பு எம் பி3 போன்ற எண்ணியல் (Digital) வடிவங்களில் இருப்பதேயில்லை.

1890களில் உலகில் ஒலிப்பதிவுக் கூடங்கள் துவக்கப்பட்டன. தொடர்ந்துவந்த 35 ஆண்டுகாலம் அக்கோஸ்டிக்கல் (Acoustical) ஒலிப்பதிவு எனும் பதிவுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. காரணம் அப்போது ஒலிவாங்கிகளோ (Microphones) ஒலிபெருக்கிகளோ (Amplifiers) கண்டுபிடிக்கப்படவில்லை. வெளியிலிருக்கும் ஓசைகள் உள்ளே வராமல் தடுப்பான்கள் அமைக்கப்பட்ட ஒரு அறையோ அல்லது வெளிச் சப்தங்களின் தொல்லை அதிகம் இல்லாத எதாவது ஒரு இடமோ ஒலிப்பதிவுகூடமாக மாற்றப்பட்டது.

கிராமஃபோன் இசைத்தட்டுக் கருவியில் காணப்படும் கூம்புவடிவக் குழல் போன்ற ஒன்றின் முன் இசைக்கலைஞர்கள் அமர்ந்து இசையெழுப்புவார்கள். அது நேரடியாக ஒரு இசைத்தட்டின்மேல் வரிசைத் தடங்களாகப் (Grooves) பொறிக்கப்படும். இப்படிப் பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டை உடனுக்குடன் திரும்ப கேட்கமுடியும் என்பதனால் இந்த ஒலிப்பதிவுமுறை பலகாலம் நீடித்தது. வெளியே எடுத்துச் செல்லக்கூடிய ஒலிப்பதிவு கருவிகளும் உருவாயின. ஜெர்மனியிலிருந்து கொண்டுவரப்பட்ட இத்தகைய ஒரு கருவியில், 1907ல் சென்னை ரயில் நிலையம் அருகில் ஒருவர், ஒரு ஜட்கா வண்டிக்காரனிடம் தமிழில் பேசுவதை மூன்று நிமிடம் பதிவு செய்த ஓர் ஒலித்தட்டைக் கேட்டிருக்கிறேன்!

1925 காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றினால் மின்னணு ஒலிப்பதிவு சாத்தியமானது. ஆனால் இயற்கையான ஒலிகளை இடையூறுகள் எவையுமில்லாமல் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்து சிறந்த ஒலிநேர்த்தியை உருவாக்குவதற்கான முயற்சிகள் அக்காலகட்டத்தில் யாராலும் மேற்கொள்ளப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட ஒலியும் இசையும் மீண்டும் கேட்கமுடியும் என்பதே மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்ட காலகட்டம் தானே அது!

பாடுபட்டு ஒலிநேர்த்தியை உருவாக்க முதன்முதலில் முயன்றவர்களில் முக்கியமானவர் அமேரிக்க பாடகரும் நடிகருமான பிங் கிராஸ்பி (Bing Crosby). 1930 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அவரது பல இசைத்தட்டுகள் என்னிடம் இருக்கின்றன. அக்காலகட்டத்தைக் கணக்கில் கொள்ளும்போது அவற்றின் ஒலித்தரம் அதிசயமாகவே இருக்கிறது. 1940களின் இறுதியில் மேற்கத்திய இசைப்பதிவுகளின் ஒலித்தரம் பல உச்சங்களை தொட்டது. அவ்விசைத் தட்டுகளை இப்போது கேட்கும்போதும் அந்த ஒலித்தரம் நம்மை வியக்கவைக்கும்.

மோனோ எனும் ஒற்றைவழி ஒலிவடிவம்தான் பல பத்தாண்டுகள் நீடித்தது. மோனோவில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் தரமான ஒலியமைப்புகொண்ட பல இசைத்தட்டுகள் வந்தன. பின்னர் ஸ்டீரியோ எனும் இரட்டை வழி ஒலி அறிமுகப்படுத்தப்பட்டது. இடம், வலம், நடு என்று மூன்று திசைகளிலிருந்து ஒலி வருவதுபோல் அமைந்த வடிவூட்டம் ஸ்டீரியோ. பதிவு செய்யப்பட்ட ஒலிக்கு இயல்புத்தன்மை இதனால் அதிகரித்தது. இசைப்பதிவிலும் இசை கேட்டலிலும் புதியதோர் யுகம் பிறந்தது.

ஆனால் இந்தியத் திரைப்படப் பாடல்களில் ஸ்டீரியோ ஒலி வருவதற்கு மீண்டும் சில பத்தாண்டுகள் ஆயின. 1971ல் லக்ஷ்மிகாந்த் ப்யாரேலாலின் இசையில் வெளியான ஜல் பின் மச்சலி நிர்த்ய் பின் பிஜ்லிஎனும் ஹிந்திப்படத்தின் பாடல்கள் தான் இந்தியாவின் முதன்முதல் ஸ்டீரியோப் பாடல்கள். தமிழில் 1978ல் வெளியான இளையராஜாவின் ப்ரியா திரைப்படப் பாடல்கள்தான் முதலில் ஸ்டீரியோ ஒலியில் வெளியானவை. 1980 காலகட்டத்தில்தான் இந்தியாவில் வெளியான அனைத்து பாடல்களும் ஸ்டீரியோவாக மாறி.

உலகத்தரமான ஒலிப்பதிவுத் தொழில்நுட்பங்கள் வந்த பின்னரும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒலிநேர்த்தியென்பது பல பத்தாண்டுகள் பின்தங்கி நின்றது. உலகத்தரமான ஒலிநேர்த்தியைத் தனது பாடல்களில் உருவாக்க இங்கு முதன்முதலில் எத்தனித்தவர் ஹிந்தி இசையமைப்பாளர் ஆர் டி பர்மன். இன்று அவரது பாடல்களின் இசைத்தட்டுகள் பலவற்றைக் கேட்கும்போது தனது பாடல்களில் இடம்பெற்ற ஒவ்வொரு சின்னச் சின்ன ஒலியின் நேர்த்திக்காகவும் அவர் எடுத்த அளப்பரிய முயற்சியும் அர்ப்பணிப்பும் நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியவை. உயர்தரமான இசை ஒலியை இந்தியத் திரைப் பாடல்களில் முதன்முதலில் உருவாக்கியவர் ஆர் டி பர்மன். இயற்கை ஒலிகளைப்பற்றியான மிகநுட்பமான புரிதல், இசை மேதமை, மின்னணுத் தொழில்நுட்பத்தில் நுண்ணிய அறிவு போன்றவை ஒருசேரப் பெற்றிருந்தவர் அவர். வேகமாக மாறக்கூடிய காலகட்டங்களின் ரசனைக்கேற்ப அவர் இசையமைத்த, இசைத்தரம் குறைவான பாடல்களைக்கூட, அவற்றின் நுண்ணிய ஒலியமைப்புக்காக எவ்வளவுமுறை வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஆனால் இதுபோல் ஒலிநேர்த்திக்காகப் பாடுபட்ட இசையமைப்பாளர்கள் தென்னிந்தியாவில் மிகக் குறைவே. இங்கு அவ்வப்போது தோன்றிய சிறந்த சில ஒலிப்பதிவாளர்கள் தங்களது புரிதலினாலும் ரசனையினாலும் உருவாக்கிய ஒலிநேர்த்தியைத்தான் பல பாடல்களில் நாம் கேட்க முடிந்தது. மோனோ ஒலியின் காலகட்டத்தில் சென்னையின் ஜெமினி, பரணி ஒலிப்பதிவுக் கூடங்களில் பணியாற்றிய கோட்டேஸ்வர் ராவ் தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஒலிப்பதிவாளர். 1950-60 காலகட்டத்தில் சிறந்த ஒலியுடன் இங்கு வந்த பெரும்பாலான திரைப் பாடல்களின் ஒலிப்பதிவையும் ஒலிக்கலவையையும் மேற்கொண்டவர் அவரே.

மோனோ காலத்திலிருந்து ஸ்டீரியோ காலத்திற்கு வந்த முக்கியமான மற்றுமொரு திரையிசை ஒலிப் பொறியியலாளர் எஸ் பி ராமநாதன். எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜா இசையமைத்த ஜானி, தனிக்காட்டு ராஜா, மூன்றாம் பிறை, மை டியர் குட்டிச்சாத்தான் போன்ற பல படங்களின் ஒலிப்பதிவை மேற்கொண்டவர் அவர். ஓங்கி ஒலிக்காமல் மென்மையாகப் பரவும் ஒலிதான் அவரது சிறப்பு.

1984-88 காலகட்டத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிய ஒலிப் பொறியியலாளர் எம்மி உருவாக்கிய ஒலிநேர்த்தி அபாரமானது என்றே சொல்வேன். என்னிடம் இருக்கும் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட இளையராஜாவின் இசைத்தட்டுகளை மீண்டும் மீண்டும் கேட்கும்போது, இளையராஜாவின் சிறந்த இசையொலியின் காலகட்டம் என்பது, அவருக்காக எம்மி ஒலிப்பதிவு செய்த காலகட்டம்தான் எனப்படுகிறது. இளையராஜாவின் தனித்துவமான பேஸ் கித்தார் இசையின் அழகுகளை இக்காலகட்டத்தின் பாடல்கள் வெகுசிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

காக்கிச் சட்டை படத்தில் வந்த வானிலே தேனிலா ஆடுதே பாடுதேபாடலின் ஒலித்தரம் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் என்னை வியக்க வைக்கிறது. ஒன்றுக்கொன்று கலந்துபோகாமல் ஒவ்வொரு இசைக்கருவிகளின் ஒலியும் உயிர்துடிப்புடன் அதில் ஒலிக்கிறது. எனக்குள் ஒருவன், வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதை, சிந்து பைரவி, இதய கோவில், உதய கீதம், பிள்ளை நிலா, உயர்ந்த உள்ளம், பூவே பூ சூடவா, மௌன ராகம், கடலோர கவிதைகள், விக்ரம், புன்னகை மன்னன், ஹௌ டு நேம் இட்? போன்ற பல இளையராஜா இசைத்தொகுப்புகளின் ஒலியமைப்பும் ஒலிக்கலவையும் எம்மியின் கைவண்ணத்தில் உருவானவை.

ஏ ஆர் ரஹ்மானின் முதல் ஒலிப்பதிவுகூடமான பஞ்சத்தன் ஸ்டுடியோவை வடிவமைத்தவர் எம்மி தான். ரஹ்மானின் முதல் பாடலான சின்னச் சின்ன ஆசையின் ஒலிப்பதிவிலும் அவர்  பங்கேற்றிருக்கிறார். பின்னர் ஒலிப் பொறியியலாளர் எச் ஸ்ரீதர் ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தார். எண்ணியல் ஒலிப்பதிவு கருவிகளிலும் கணினி வழி ஒலிப்பதிவிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் 2008 இறுதியில் மறையும் வரை ரஹ்மானுடன் சேர்ந்து இயங்கினார். ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனேர் வரைக்கும் ஸ்ரீதரின் ஒலியமைப்பு மேதமை ரஹ்மானுக்கு உதவியது.

தென்னிந்தியாவில் முதன்முதலாக ஒலிநேர்த்திக்காக அரும்பாடுபட்ட இசையமைப்பாளர் என்று ஏ ஆர் ரஹ்மானை சந்தேகமின்றி சொல்லலாம். ரோஜாவிற்கும் சிலகாலம் முன்பு ஒருமுறை, தான் பதிவுசெய்த தனது இசையின் ஒலிநாடா ஒன்றை அவர் தனது வாகனத்தின் ஒலிக்கருவியில் போட்டு கேட்டாராம். சற்று முன்பு அதில் கேட்ட மேற்கத்திய இசையின் ஒலித்தரத்திற்கு முன்னால் தனது ஒலி மிகக் கீழ்த்தரமானது என்று உணர்ந்த ரஹ்மான் எரிச்சலுடன் அந்த ஒலிநாடாவை வாகனத்திற்கு வெளியே வீசினாராம்! உலகத்தரமான ஒலிநேர்த்தியை உருவாக்குவதற்கான அவரது தேடலும் விடா முயற்சியும் அங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.

தனது பாடல்களில் இடம்பெறும் ஒவ்வொரு சின்னச் சின்ன ஒலியையும் செதுக்குவதற்காகப் பல வாரங்களும் தேவைப்பட்டால் மாதங்களும் உழைப்பவர் ரஹ்மான். அதனால்தான் ரோஜாவில் தொடங்கி கடந்த இருபதாண்டுகாலமாக மிகச்சிறந்த ஒலியையே அவரால் கொடுக்க முடிந்தது. ரோஜாவின் ஒலியமைப்புத் தரத்தை முற்றிலுமாக உள்வாங்க என்னால் இதுவரைக்கும் முடிந்ததில்லை! ஏன் என்றால் ரோஜாவின் ஒலித்தட்டுகள் வெளிவரவில்லை! ஒரு முறையாவது சின்ன சின்னை ஆசையை ஒரு ஒலித்தட்டிலிருந்து கேட்கவேண்டும் என்பது எனது பெரிய ஆசை! ஜென்டில்மேன் மற்றும் கிழக்குச் சீமையிலே படங்களின் ஒலித்தட்டுகள் என்னிடமிருக்கின்றன. அவற்றின் ஒலித்தரம் மிகச் சிறப்பானது. கிழக்குச் சீமையிலேதான் தமிழில் வெளிவந்த கடைசி ஒலித்தட்டு!

ரஹ்மானின் ஜோதா அக்பர், வந்தே மாதரம், குரு, ரங்க் தே பசந்தி, லகான் போன்ற ஹிந்தி ஒலித்தட்டுகள் சமீப ஆண்டுகளில் வெளியாகியிருக்கின்றன. கிட்டத்தட்ட 1000 ரூபாய் விலையுள்ள அந்த ஒலித்தட்டுகளின் ஒலித்தரம் ஒன்றும் சிறப்பானதல்ல! குறுவட்டுகளின் ஒலி போலவே அமைந்திருக்கிறது அது! இந்தகாலத்தின் டிஜிடல் (Digital) முறையில் உருவாக்கப்பட்ட அப்பாடல்களை ஒலித்தட்டிற்கு தேவையான அனலாக் மாஸ்டர் (Analogue Master) வடிவத்திற்கு மாற்றியபோது (Conversion) ஏற்பட்ட கோளாறுகளினால் இது நடந்திருக்கலாம்.   ஆனால் கடல் படத்தின் பாடல்களின் ஒலியில் என்ன நடந்திருக்கக் கூடும் என்று யூகிக்கவே முடியவில்லை. இந்த ஒலித்தரம் ஏ ஆர் ரஹ்மானுக்கு உடன்பாடானதாக இருக்க எந்தவொரு வாய்ப்புமில்லை!
 
சமகாலத் தமிழ்த் திரையிசையில் ஹாரிஸ் ஜெயராஜின் ஒலியமைப்பு தெள்ளத்தெளிவானது,  ரசிக்க வைப்பது. வாரணம் ஆயிரம் படத்தில் வந்த நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைபாடலின் கிதார் ஒலி ஒன்று மட்டுமே போதும் அவரது ஒலியமைப்பு மேதமைக்கு சான்றாக! கார்த்திக் ராஜாவின் பல பாடல்களின் ஒலியமைப்பு மிகச் சிறப்பானது. தொண்ணூறுகளின் மத்தியில் வெளியான அவரது அலெக்ஸாண்டர் எனும் படப்பாடல்கள் முதல் சமீபத்தில் வெளிவந்த ரெட்டைச்சுழி படப்பாடல்கள் வரை ஒலிநேர்த்திக்கான தனித்துவமான ஓர் அணுகுமுறையை அவரிடம் காணலாம். சி சத்யா எனும் இளம் இசையமைப்பாளரின் இசையில் சமீபத்தில் வந்த எங்கேயும் எப்போதும், சேவற்கொடி, பொன்மாலைப் பொழுது போன்ற படங்களின் பாடல்களில் உன்னதமான, தனித்துவமான ஒலிநேர்த்திதான் இருக்கிறது.

ஓர் இசைப்பதிவின் உண்மையான ஒலித்தரத்தை நுட்பமாக அடையாளம் காண்பதற்கு, அப்பதிவை மீட்டெழுப்ப உயர்ந்த ஒலி மெய்நிலை (Hi-Fidelity) வெளிப்படுத்தும் தரமான கருவிகளின் வரிசை தேவைப்படுகின்றன. அக்கருவிகள் ஒன்றொன்றையும் இணைக்கும் தந்திக் கம்பிகள் (Wires and Cables) கூடச் சிறந்த தரம் வாய்ந்தவையாக இருக்கவேண்டும். ஆனால் தரமான இசையொலிக்கான காதும் தேடலும் உள்ளவர்களால், ஒலியமைப்பினைத் தொடர்ந்து அவதானிப்பவர்களால், வானொலியிலிருந்தோ அலைபேசியிலிருந்தோ கூட ஒரு பாடல் ஒலிக்கும்போது, அதன் அடிப்படை ஒலித்தரத்தை அடையாளம் காண முடியும் என்பதுதான் உண்மை.

இசையின் ஒலித்தரம் என்றால் உண்மையில் என்ன? என்ற கேள்வி இப்போதும் மீதமிருக்கிறது, அல்லவா? மன்னிக்க வேண்டும்! ஒலித்தரத்தை வார்த்தைகளால் விளக்க இயலாது! அதை உணரத்தான் முடியும். சொல்லில் அடங்காத அந்த ஒலியைச் சொற்களாக்க முயன்றால் கீழ்வருமாறு தோராயமாக சிலவற்றைச் சொல்லலாம். இயற்கையில் உள்ளதுபோல் ஒலி இயல்பானதாக இருக்கவேண்டும். அதில் அதீதமான வண்ணங்கள் எதுவும் சேரக்கூடாது. அது ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கவேண்டும். இசைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் வேறு வேறாகப் பிரிந்து நமது காதுகளில் விழவேண்டும்.  ஒலியின் அலைவரிசைகள் (Frequencies) ஒன்றுக்கொன்று மோதாமல் பல அடுக்குகளில் பயணிக்கவேண்டும். துல்லியமான அவ்வொலியில் தெளிவு, துலக்கம், நுணுக்கம், ரசிக்கவைக்கும் தன்மை போன்றவை இருக்கவேண்டும்.

சிறந்த ஒலித்தரம் இருப்பதனால் பப்பி லஹிரியின் தரமற்ற இசையையும் விரும்பிக் கேட்க முடிகிறது! தரமான ஒலியமைப்பு இல்லையென்றால் பீத்தோவனின், ஷூபேர்டின், மொசார்டின் இசைகூட நாராசமாக மாறுகிறது! அற்புதமான இசையாக இருந்தாலும் அதன் ஒலி சிறப்பாக இல்லையென்றால் அதை ரசிக்க முடிவதில்லை. சிறந்த ஒலியமைப்பு என்பது உயிர்த் துடிப்பானது. இசைக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்ச்சி வெளிப்பாட்டுத்தன்மை அதற்கு நிச்சயம் உண்டு. இசை பிறப்பதே ஒழுங்கான ஒலியிலிருந்து தானே!