20130130

ஏ ஆர் ரஹ்மான் 20 ( ஆனந்த விகடன் கட்டுரையின் அசல் வடிவம்)



“யாருடா இந்த ஏ ஆர் ரகுமான்? மணிரத்னம் படம்னா இளையராஜா தானே ம்யூசிக் போடுவாரு? தெரியாம வாங்கிட்டே. நீ வேணா கேளுஎன்று சொல்லி ரோஜா திரைப்படத்தின்  ஒலிநாடாவை என்னிடம் வீசிவிட்டுப் போனார் தமிழ் படிக்கத் தெரியாத எனது நண்பர் பத்மகுமார். காலம் 1992 கடைசி. இடம் ஹைதராபாத். எனக்குமே அப்படத்தின் இசை இளையராஜா அமைக்கவில்லை என்பது ஏமாற்றமாகத்தான் இருந்தது. பல்லவி அனுபல்லவி என்ற தனது முதல் படம் தொடங்கி கடைசியாக வந்த தளபதி வரைக்குமான மணிரத்னத்தின் எல்லாப் படங்களிலும் இளையராஜாவின் அற்புதமான இசையைத்தானே கேட்டுவந்தோம். அதனாலேயே ரோஜாவின் ஒலிநாடாவை ஓரிரு நாட்கள் கழித்துதான்  நான் எகையில் எடுத்தேன். அலட்சியமாகக் கேட்க தொடங்கினேன். ஆனால் சில நொடிகளிலேயே சின்னச் சின்ன ஆசை என்னை சாய்த்து விட்டது.

பாப் மார்லி, டெஸ்மண்ட் டெக்கர், யூ பி 40 போன்றவர்களின் ரேகே இசைப்பாணியில் இதோ தமிழில் உலகத்தரமான ஒரு பாடல்! எளிமையான இசைதான். ஆனால் இங்கு நாம் கேட்டு வந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இசையமைப்பு. ஒன்றுக்கொன்று இடைஞ்சல் இல்லாமல் பல அடுக்குகளிலாக அமைக்கப்பட்ட அந்த இசையின் ஒலி, எனது அப்போதைய தரமில்லாத ஒலிக்கருவியிலிருந்து கூட தரத்துடன் ஒலித்தது! தமிழா தமிழா பாடலும் முதல் கேட்டலிலேயே என்னை மிகவும் கவர்ந்தது. மற்ற பாடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளேறி மனதில் இடம்பிடித்தது. ரோஜா பாடல்கள் விரைவில் ஹிந்தியிலும் வெளிவந்த்து. அது முழு இந்தியாவின் கவனமும் கவர்ந்தது. தமிழிலிருந்து ஒரு அகில இந்திய இசையமைப்பாளர் உருவானார்.

ரோஜாவின் ஹிந்தி இசைத்தொகுப்பை வெளியிட்டு விற்பனையில் சாதனை படைத்த மேக்னா சவுண்ட் நிறுவனத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான, கலைஞர்கள் மற்றும் இசைப்பதிவு (Artists and Repertoire) மேலாளராக விரைவில் நான் இணைந்தேன் என்பது சுவாரசியமான ஒரு தற்செயல்! அதற்குள்ளேயே புதிய முகம், ஜெண்டில்மேன், உழவன், திருடா திருடா எனும் படங்கள் தமிழிலும் யோதா எனும் படம் மலையாளத்திலும் ஏ ஆர் ரகுமானின் பெயரில் வெளிவந்திருந்தது. அதில் புதிய முகம், திருடா திருடா படங்களின் இசைத்தொகுப்புகளும் எங்கள் நிறுவனம்தான் வெளியிட்டது.

ஏ ஆர் ரகுமான் என்றுதான் முதல் பல ஆண்டுகள் அவரது பெயர் தமிழில் எழுதப்பட்டு வந்தது. பின்புதான் அது ஏ ஆர் ரஹ்மான் என்று மாறியது. ஏ எஸ் திலீப் குமார் என்ற பெயரில் ரோஜாவிற்கு முன்பு அவர் எங்கள் நிறுவனம் வழியாக டிஸ்கோ டிஸ்கோ, செட் மீ ஃப்ரீ எனும் இரண்டு தனியார் பாடல் தொகுதிகளை வெளியிட்டிருந்தார். மால்குடி சுபா பாடிய செட் மீ ஃப்ரீ தான் ஏ ஆர் ரஹ்மானின் முதல் ஆங்கிலப்பாடல் தொகுப்பு.
இசை வினியோகம் சார்ந்து ஏ ஆர் ரஹ்மானுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் இடையே சில கருத்து வேற்பாடுகளும் கசப்புகளும் ஏர்ப்பட்டிருந்தது. எங்கள் நிறுவனத்துடனான உறவை முற்றிலுமாக அவர் முறித்துக்கொண்டார். இந்திய வெகுஜென இசையை வரும் காலத்தில் ஆளப்போகிறவர் ரஹ்மான்தான் என்று நன்கு அறிந்திருந்த நான் அவ்வுறவை மீண்டும் துளிர்விட வைக்க என்ன செய்ய முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது மேலும் ஒரு அசம்பாவிதம் நடந்தது.

ஏ ஆர் ரஹ்மானின் முதன்முதல் சர்வதேச இசைத் தொகுதிஎன்று விளம்பரப்படுத்தி செட் மீ ஃப்ரீ தொகுப்பை மீண்டும் வெளியிட எங்கள் நிறுவனம் முடிவெடுத்தது! அதன் பொறுப்பை என்னிடம்தான் ஒப்படைத்தனர்! இசையையும் ஒலியமைப்பையும் பற்றியான தனது பார்வைகளும் புரிதல்களும் செம்மைப்படாத ஒரு காலகட்டத்தில் ரஹ்மான் உருவாக்கிய பாடல்கள்தாம் செட் மீ ஃப்ரீ. நிகழ்காலத்தில் அவர் வெளிப்படுத்திக்கொண்டிருந்த உலகத்தரமான இசை, ஒலி அமைப்புகளுடன் அதற்கு எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. தன் இசை வாழ்க்கையின் மிக முக்கியமானதோர் காலகட்டத்தில் தனது பெயரில் அப்படியொரு தொகுப்பு வெளிவருவதை ரஹ்மான் விரும்ப மாட்டார் என்பதை நான் நிர்வாகத்திற்கு எடுத்துச் சொன்னேன்.

அது மட்டுமல்லாமல் ஏ எஸ் திலீப் குமாராக அவர் வெளியிட்ட ஒரு தொகுப்பை ஏ ஆர் ரஹ்மான் என்ற பேரில் வெளியிடுவதற்கு அவரிடமிருந்து அனுமதி வாங்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். ஆனால் டூயட், காதலன், பாம்பே, ரங்கீலா, முத்து என இசை வியாபாரத்தின் அதிஉச்சத்தில் அப்போது இருந்த ஏ ஆர் ரஹ்மான் என்கின்ற வணிகப் பெயரை எப்படியாவது உடனடி வியாபாரமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட நிர்வாகத்திற்கு எனது அறிவுரைகள் எதுவுமே தேவைப்படவில்லை! ஏ ஆர் ரஹ்மானின் முதன்முதல் சர்வதேச இசைத்தொகுப்புஎன்கின்ற பெயரில் செட் மீ ஃப்ரீ வெளிவந்தது. ஆனால் ஏ ஆர் ரஹ்மான் பெயரில் எதை வைத்தாலும் விற்றுபோகக் கூடிய அந்த காலகட்டத்திலும் கூட அத்தொகுப்பு எந்த ஒரு பாதிப்பையும் ஏர்படுத்தவில்லை. இசைரசிகர்களை எளிதில் முட்டாள்களாக்க முடியாது.

ஏ ஆர் ரஹ்மானின் இசையையும் தனித்துவம் வாய்ந்த அவரது ஒலியையும் தொடர்ந்து அவதானித்தும் ரசித்தும் வந்திருக்கிறேன். பஞ்சத்தன் என்று பேரிடப்பட்ட ரஹ்மானின் முதல் ஒலிப்பதிவகத்தை வடிவமைத்து அவரது முதல் பாடலான சின்னச் சின்ன ஆசையின் ஒலியமைப்பில் அவரை வழிநடத்தியவர் ஒலிப்பதிவு மேதை எம்மி. 1982-88 காலகட்டத்தில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் நாம் கேட்ட சிறந்த ஒலிநேர்த்தியை உருவாக்கியவர் அவரே.

பின்னர் எச். ஸ்ரீதரின் ஒலியமைப்பு வல்லமை ரஹ்மானின் இசைக்கு பல வண்ணங்களை கொடுத்தது. ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம் டாக் மில்லினேர் வரைக்கும் ஸ்ரீதரின் ஒலியமைப்புத்திறன் ரஹ்மானுக்கு உதவியது. ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால் ஒலியமைப்பாளர்கள் வேறு வேறாக இருந்தபோதிலும் ரஹ்மானின் இசையொலி எப்போதுமே அவருக்கேயுரிய தனித்துவத்துடன் இருந்தது என்பதுதான். இசைத்தரம் குறைவான அவரது பாடல்களிலும்கூட உலகத்தரமான ஒலிநேர்த்தியைத்தான் நாம் கேட்க முடிந்தது.

ரஹ்மானின் இசைக்கு ரசிகர்களின் ஆதரவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்தியன், காதல் தேசம், மின்சாரக் கனவு, இருவர், ஜீன்ஸ், படையப்பா, காதலர் தினம், முதல்வன், அலைபாயுதே, தெனாலி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என தமிழிலும் தில் ஸே, தாள், லகான், ரங் தே பசந்தி என ஹிந்தியிலும் வாரியேர்ஸ் ஆஃப் ஹெவென் அண்ட் எர்த், எலிசபெத், ஸ்லம் டாக், கப்பில்ஸ் ரிட்ரீட், 127 அவேர்ஸ், பீப்பில் லைக் அஸ் என உலக சினிமாவிலும் தனது இசைத் தடத்தை பதித்தார் ரஹ்மான்.

திரையிசைக்கு வெளியே தமிழிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் செம்மொழியான தமிழ்மொழியாம், வந்தேமாதரம், ப்ரே ஃபார் மீ பிரதர் போன்ற பல தனியார் இசைப் பாடல்களையும் வெளியிட்டு வெற்றிபெற்றார். இருபதாண்டுகள் தாண்டிய அவரது இசைப்பயணத்தில் ரசிகர்களின் ஆதரவிலும் வணிக வெற்றியிலும் அவர் முதல் இடத்தில்தான் இருந்திருக்கிறார் என்றபோதிலும் அது அவருக்கு எளிதானதாக இருந்ததில்லை என்ரே சொல்வேன்.

அவரது ஒவ்வொரு இசைத்தொகுபும் வெளிவரும்போது அவற்றின்மேல எந்த நியாயமுமில்லாத விமரிசனங்களை முன்வைத்துக்கொண்டேயிருந்தனர் சிலர். ரசிகர்களைவிட இசைத்துறையைச் சார்ந்தவர்களே இதை அதிகமாக செய்து வந்தனர். 1996ல் ரஹ்மானின் லவ் பேர்ட்ஸ் படத்தின் பாடல்கள் வெளிவந்த சமயம். அதிலுள்ள மலர்களே மலர்களே இது என்ன கனவா?, நாளைய உலகம் இல்லையென்றானால், சாம்ப சாம்பா, கமான் கமான் ஓ காமட்சி போன்ற பாடல்களின் புதுமையிலும் இசைத்தரத்திலும் ஒலி நேர்த்தியிலும் வியந்துபோயிருந்த என்னிடம் “இசை என்ற பேரில் இவர் என்னத்தான் செய்கிறார்? லவ் பேர்ட்ஸ் பாடல்களை கேட்டேன். சகிக்கல!என்று ஒரு இசையமைப்பாளர் சொன்னது இன்றும் ஞாபகமிருக்கிறது!

இப்போது சிலர் திரைப்படங்களின் முதல் காட்சியைப் பார்த்து இடைவேளையிலேயே படம் சரியில்லைஎன்று குறுஞ்செய்திப் பிர்சாரம் செய்வதுபோல், ஏ ஆர் ரஹ்மானின் ஒவ்வொரு இசைத்தொகுப்பும் வெளிவரும்போது, சரியில்லை, போன தொகுப்பு போல் இல்லை, இரைச்சலாக இருக்கிறதுஎன்றெல்லாமான பிரச்சாரங்களும் கோஷங்களும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பின்னர் அதே பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பெரும் வெற்றிகளாகவே மாறியிருக்கிறது! சமீபத்தில் வெளிவந்த ராவணன் படத்தின் பாடல்களுக்கு வரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. மிகவேகமாக வாழ்க்கை நகரும் இந்த காலகட்டத்தில் ஒரு பாடலை அதன் நுட்பங்களினால் மீண்டும் மீண்டும் கேட்கவைத்து, மெல்ல மெல்ல அதை ஒரு பெரும் வெற்றிப்பாடலாக்கும் அந்த மந்திரவித்தைதான் ஏ ஆர் ரஹ்மானின் இசையின் மிகப்பெரிய ஆச்சரியம்.

அவரது பல பாடல்கள் தழுவல்கள் என்ற குற்றச்சாட்டையும் சந்தித்திருக்கிறது. எந்த ஒரு இசைவகையையும் தாழ்ந்தது என்று தள்ளிவைக்காமல் இந்திய, உலக இசையின் எண்ணற்ற வடிவங்களை தொடர்ந்து கேட்டும் அவதானித்தும் வரும் ரஹ்மானின் இசையில் மொசார்ட், பீட்டர் கப்ரியேல், டக்டர் அல்பேன், நுஸ்ரத் ஃபதே அலி கான், பால் யங், டீப் ஃபாரஸ்ட் என பல பாதிப்புகள் இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் முற்றிலுமாக தன்னால் உருவாக்கப்படுவதுதான் தனது இசை என்று இதுவரைக்கும் அவர் எங்கேயும் குறிப்பிட்டதாகவும் தெரியவில்லை.

சமீபத்தில் வெளிவந்த ரஹ்மானின் ஆங்கில தனியார் பாடல் இன்ஃபினிட் லவ்மற்றும் அவரது கடல் திரைப்படப் பாடல்களின் ஒலித்தரம், அவர் எப்போதுமே கடைப்பிடித்து வநத சிறந்த இசையொலிக்கு நிகரானதல்ல என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். சிறந்த ஒலியமைப்பின்மீது தீவிரமோகம் கொண்ட என்போன்றவர்களுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.

தனது இசைவாழ்க்கையின் இருபதாவது ஆண்டில் அவர் வெளியிட்டிருக்கும் கடல் திரைப்படத்தின் பாடல்கள் உலகத்தரமான இசை கொண்டவை என்றே சொல்வேன். இந்திய, உலக இசையின் பல தெறிப்புகளை இத்தொகுப்பில் அசாத்தியமாக இணைத்திருக்கிறார். அவரே பாடிய ஏலே கீச்சான் வெந்தாச்சு என்ற பாடலில் அமேரிக இசை வடிவமான கண்ட்ரி இசையுடன் கேரளத்து நாட்டுப்புற இசையான வஞ்சிப்பாட்டும் சங்கமிக்கிறது. அடியே என்கின்ற பாடலில் அமேரிக கறுப்பின இசையான ப்ளூஸுடன் நமது ஒப்பாரிப் பாடல்களின் கூறுகளும் நாம் கேட்கலாம். நெஞ்சுக்குள்ளே பாடல்  நமது நட்டுப்புற இசையான தெம்மாங்கும் லத்தீன் அமேரிக இசை வடிவங்களும் சேரும் இனிய கலவை!

ஏ ஆர் ரஹ்மானின் அசாத்தியமான படைப்பூக்கம் கேட்கக் கிடைக்கும் இந்த பாடல்களையும் சுவாரசியமற்றவை என்றோ தழுவல்கள் என்றோ சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால் அப்படி தூக்கி வீசுகிறவர்களே பிறகொரு நாளில் அப்பாடல்களை பாடித்திரிவார்கள். அது தான் ஏ ஆர் ரஹ்மான் உருவாக்கும் மந்திரஜாலம் என்பது. ஒரு சின்னப்பூவிற்குள் ஒரு வசந்தகாலம் ஒளிந்திருப்பதுபோல், ஒரு பனித்துளிக்குள் நீலவானம் முழுவதும் தெரிவது போல் அது மெதுவாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.