20130610

உலக இசைப் பாடல் 2 - காற்றில் சுழலும் பதில்கள் - பாப் டிலன்

காற்றில் சுழலும் பதில்கள்
பாப் டிலன்

ஐந்து பதிற்றாண்டுகள் அமேரிக்க வெகுஜென இசையின் உச்சங்களில் ஒன்றாக திகழ்ந்தவர் பாப் டிலன். அமேரிக்க நாட்டுப்புற இசையைத் தான் தனது இசை ஊடகமாக அவர் முன்னெடுத்தார் என்றபோதிலும் மின் இசைக் கருவிகளை தாராளமாக தனது பாடல்களில் பயன்படுத்தியவர் அவர். இசை நுணுக்கங்களை விட பாடல் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தவர். சிறந்த கவிஞர். அவரது பெரும்பாலான பாடல்கள் மனித உரிமைக்கான முழக்கங்கள். அவற்றில் மிக முக்கியமானதோர் பாடல் இந்த ‘காற்றில் சுழலும் பதில்கள்அமைதி, போர், சுதந்திரம் போன்றவையெல்லாம் உண்மையில் ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்டவை என்று திட்டவட்டமாக கூறும் பாடல் இது. கொலைகளுக்கும் போர்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக, இவ்வளவு சக்திவாய்ந்த வரிகள் வேறு எதாவது ஒரு பாடலில் இடம்பெற்றிருக்கிறதா என்று சந்தேகம்.

பாடல் : காற்றில் சுழலும் பதில்கள் (Blowin’ in the Wind)
எழுதி இசையமைத்து பாடியவர் : பாப் டிலன் (Bob Dylan)
பாடல் வகைமை : நாட்டுப்புற இசை (Folk)
மொழி : ஆங்கிலம்
நாடு : அமேரிக்க
ஆண்டு : 1962

எத்தனை பாதைகள் ஒரு மனிதன் நடந்து தீர்க்கவேண்டும்
அவனை நீ மனிதன் என்று அழைக்கும் வரை?
எத்தனை சமுத்திரங்கள் ஒரு வெண்புறா பறந்து தாண்டவேண்டும்
ஒரு கடற்கரையின் வெளிர் மணலில் அவள் நித்தியமாகத் தூங்கும் வரை?
எத்தனை முறை பீரங்கி குண்டுகள் பறக்கவேண்டும்
என்றைக்குமாக அவை தடை செய்யப்படும் வரை?
பதில்கள் அனைத்தும், என் நன்பனே
ஊதும் காற்றில் சுழல்கின்றன  

எத்தனைக் காலம் ஒரு மாமலை நீடித்திருக்கும்
அது கடலில் கரைந்துபோகும் வரை?
எத்தனை ஆண்டுகள் சில மனிதர்கள் உயிர்வாழும்
சுதந்திரம் என்னவென்று அவர்கள் அறியும் வரை?
எத்தனை முறை ஒருவனால் தலைதிருப்பி நடக்க முடியும்
தான் எதுவுமே பார்க்கவில்லை என்ற பாசாங்குடன்?
பதில்கள் அனைத்தும், என் நன்பனே
ஊதும் காற்றில் சுழல்கின்றன 

எத்தனை முறை ஒரு மனிதன் மேல் நோக்கி பார்க்கவேண்டும்
வானம் அவன் கண்ணுக்குத் தெரியும் வரை?
எத்தனை காதுகள் ஒருவனுக்குத் தேவைப்படும்
மக்களின் கண்ணீர் கதறல்கள் அவன் கேட்கத் துவங்கும் வரை?
எத்தனை மரணங்கள் இன்னும் நிகழ வேண்டும்
எண்ணற்றவர்கள் இறந்து விட்டனர் என்பதை அவன் உணரும் வரை?
பதில்கள் அனைத்தும், என் நன்பனே
ஊதும் காற்றில் சுழல்கின்றன
  
தமிழில் : ஷாஜி